பாவத்தின் கொடூரம்!

பூலோகத்திலே மனுஷனுக்கு வருகிற பொல்லாப்புகள் அநேகம் உண்டு எனினும், பாவம் மாத்திரமே மெய்யான பொல்லாப்பு என்று சொல்லப்படும். எளிமை, வறுமை, நிந்தை, வாதை இது முதலான பொல்லாப்புகள் சரீரத்தை மாத்திரம் வாதிக்குமேயன்றி, அவைகளால் ஆத்துமத்திற்கு ஒரு வாதையும் இல்லாமல் போகிறது மட்டுமல்ல, அவைகளைப் பொறுமையோடே சகித்தால் இன்னும் நன்மை உண்டாகும். பாவம் ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் வருத்தமும் நாசமும் கேடும் உண்டாக்கும் என்கிறதினாலே, அதை விடக் கொடிய பயங்கரமான பொல்லாப்பு வேறே ஒன்றுமில்லை.

புத்தி இல்லாதவனே, மற்றதுக்கெல்லாம் பயப்படுகிறாய். பாவத்துக்கு மாத்திரம் பயப்படவில்லை. தரித்திரம், வியாதி, வாதைகளைக் கண்டாலும், நெருப்பு, பாம்பு, பூச்சி, புழுவைக் கண்டாலும் அஞ்சுகிறார்கள். ஈ, எறும்பு, கொசுக்கடிக்கு முதலாய்ப் பயப்படுகிறார்கள். பாம்பையும் நெருப்பையும் விட அதிகக் கொடூரமுள்ள பாவத்துக்கு கூசாமலும், அஞ்சாமலும், மதியீனராய் அதை மகா பிரியத்தோடே ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

அதேதென்றால், பாவத்திலுள்ள மாயச் சுகத்தைப் பசாசு அவர்கள் கண்ணுக்குப் பெரிதாகத் தோற்றுவித்து, மயக்கத்தால் இன்பம் உண்டாக்கி, அவர்கள் புத்திக் கண்ணை மறைத்துப் போடுகிறதினாலே அப்படிச் செய்கிறார்கள். அகோர விஷம் பொருந்தியிருக்கிற பாம்பை ஒரு பெட்டியிலே அடைத்து அந்தப் பெட்டியைப் பூப்பெட்டி என்று யாராவது ஒருவனுடைய கையில் கொடுத்தால், அவன் அதைத் திறந்து பார்த்துப் பாம்பு இருக்கிறதையும், அது இரைந்து கொண்டு சீறுகிறதையும் கண்டால் உடனே எறிந்து போடுவான் அல்லவா? அப்படியே பாவத்தினுடைய கொடூரத்தைக் காண்பிக்கக் கண்டு, நீயும் அதை எறிந்து போடக் கடவாய்.

பாவம் சர்வேசுரனுடைய உந்நத மகிமைக்கு உரிய வெகுமானத்துக்கு விரோதமாய் இருக்கிறதினாலே, அதின் பொல்லாப்பு மிகுந்து போகிற அந்தஸ்தைப் பார். யாராவது ஒருவன் தனக்கு நிகரான மற்றொருவனுக்குச் செய்கிற அவமானத்திலும், தன்னைவிட உயர்ந்தவனுக்குச் செய்த அவமானம் பெரிதாயிருக்குமே. மேலும் ஒரு நகர அதிகாரிக்குச் செய்த அவமானம் அதிலும் பெரிய குற்றமாயிருக்குமே. ஓர் அரசனை அவமானப்படுத்தின பொல்லாப்புக்கு ஒப்பான குற்றம் உலகத்தில் இல்லை என்பார்களே . இராஜாதி இராஜனுமாய், பரலோக பூலோகம் உண்டாக்கினவருமாய், அளவில்லாத மகிமை உள்ளவருமாயிருக்கிற ஆண்டவருக்கு விரோதமாகிய பாவக் கொடூரம் எத்தகையது என்று யாராலே அளக்கக் கூடும்?

ஐயையோ பாவீ! இப்படிப்பட்ட பொல்லாப்புக்கு எப்படித் துணிகிறாய்? ஒரு பூச்சி புழுவுக்குச் சமானமாயிருக்கிற நீயோ அப்படிப்பட்ட ஆண்டவரையே எதிர்த்து நிற்கிறாய். அவர் கட்டளையை மிதித்து எறிந்து போடுகிறாய். இந்தப் பாவக் கொடூரம் எம்மாத்திரம் என்றால், எவனாவது தன்னைப் பெற்ற தாய் தகப்பனைத் தாய் தகப்பன் அல்ல என்றும், குருவைக் குரு அல்லவென்றும், ஆண்டகையை ஆண்டகை அல்லவென்றும், அரசனை அரசன் அல்லவென்றும் சொன்னால் எப்படிப்பட்ட துரோகத்திற்கும் பொல்லாப்புக்கும் ஆளாயிருப்பான்! அப்படி ஒருவரும் செய்யத் துணியாத காரியத்தை நீயே செய்கிறாய். உன்னைப் படைத்த சர்வேசுரனே உனக்குப் பிதாவும், குருவும், ஆண்டகையுமாயிருக்க, நீ பாவம் செய்கிறபோது அவரை எந்த அந்தஸ்திலே வைத்துப் பார்த்தாய்?

பிதாவென்றோ, குரு வென்றோ, ஆண்டகையென்றோ, அரசரென்றோ, அல்லது உன்னுடைய சர்வேசுரனென்றோ, எப்படி எண்ணினாய்? பிதா என்றால் பிதாவுக்குரிய சங்கை எங்கே? குருவென்றால் குருவுக்குரிய ஆசாரம் எங்கே? ஆண்டவரும், அரசருமென்றால் அப்படி அவருக்குரிய பயமும், வணக்கமும், நமஸ்காரமும் எங்கே? சர்வேசுரன் என்றால் அவருக்குள்ள அச்சமும், நடுக்கமும், பயபக்தியும் எங்கே? ஒரு மதிப்பும் இல்லையே. பிதா, குரு, ஆண்டகை, அரசன் இவர்கள் தண்டனைக்குப் பயப்படுகிறது போல நீ பயப்படுகிறாயோ? இல்லையே. சர்வேசுரன் உன்னை நரகத்தில் தள்ளுவார் என்கிறதற்குப் பயப்படுகிறாயோ? அதுவும் இல்லையே. சர்வேசுரன் இல்லாதது போலவும், உன்னை உண்டாக்கி இரட்சித்தவர் அவர் அல்லவென்பது போலவும் புறக்கணித்து நிந்தித்த பாவக் கொடூரம் எத்தகையது என்று பார்.

எவனாவது கிணற்றிலே விழுந்து விட்டபோது தன்னை எடுத்து விட வருகிறவன் மேலே கல்லைவிட்டு எறிவானோ? பகைவர்களாலே மோசம் வராதபடிக்குத் தன்னைக் காத்தவனை அம்புகளால் எய்வானோ? தன் வியாதிக்கு மருந்து கொடுத்துக் குணமாக்கினவனுக்கு நஞ்சிடுவானோ? இப்படிப்பட்ட கொடூரம் பூலோகத்திலே காணக் கிடையாது. நீ செய்கிறது சொல்லி முடியாத கொடுமையாய் இருக்கின்றது. பாவக் கிணற்றில் விழுந்த உன்னைச் சேசுநாதர் கைதூக்க வருகிறார். பசாசு என்கிற எதிரியின் கையில் அகப்படாதபடிக்கு உன்னைத் தற்காக்கிறார். பாவ வியாதிக்குத் தாம் பாடுபட்ட பலனை மருந்தாகக் கொடுத்து குணமாக்குகிறார். அப்படியிருக்க, நீ அவரைப் புறக்கணித்து, நிந்தித்து, உன்னுடைய கல்நெஞ்சாகிய கற்களால் அவரை எறிகிறாய். வைராக்கியம் என்கிற அம்புகளால் அவரை எய்கிறாய். வஞ்சகம் என்கிற விஷங்களை அவருக்குக் குடிக்கக் கொடுக்கிறாய். ஐயையோ! உன் பாவக் கொடூரத்தை என்னவென்று சொல்லலாம்?

நீ ஒரு பாவ நினைவை நினைக்கிறபோது சேசுநாதர் உன் அருகில் வந்தது போலவும், இவ்விதம் சொல்வது போலவும் நினைத்துக் கொள் : ''மகனே, ஏன் இந்தப் பாவத்தை நினைக்கிறாய்? ஏன் தேவ கட்டளையை மீறுகிறாய்? அதனாலே ஏன் மோட்சம் இழந்து நரகத்திலே விழப் போகிறாய்? நான் படைத்த ஆத்துமத்தை இப்படிக் கெடுத்துப் போடாதே" என்று சொன்னதற்கு நீ இரண்டு கண்ணும் மூடி, காதும் அடைத்துக் கேளாமல் இருந்தாய். மறுபடி அவர் சொல்லுவார்: "பாவீ, உன்னுடைய ஆத்துமத்துக்கு வருகிற கேடுகளைப் பாராவிட்டாலும், என்னுடைய அன்பையாகிலும், தயையை என்கிலும் பார்க்க மாட்டாயோ?

உனக்காக எத்தனை நன்மை எல்லாம் செய்து படாத பாடுபட்டேன். என் சிரசிலே தைத்திருக்கிற முட்களைப் பார். மரத்திலே அறைந்திருக்கிற என் கை கால்களைப் பார். ஈட்டியால் குத்துண்ட விலாவையும், சரீரம் முழுவதும் உள்ள காயங்களையும், இரத்தக் கறைகளையும் பார். இவை எல்லாம் நான் உனக்காகப் பாடுபட்டுப் பொறுத்திருக்க, என் தயவுக்குச் சற்றாகிலும் நன்றியறிந்து, நீ என் பாடுகளைக் கண்டு மனதுருகி, உன் பொல்லாத நினைவை விட்டுவிட மாட்டாயோ?'' என்று சொன்னதற்கு, நீ பாவத்தை விடாதபடிக்கு அவரைப் பாராமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாய்.

அதைக் கண்டு உரத்த சத்தத்தோடு கூப்பிட்டு: ''அடா பாவீ , நீ இந்தப் பாவத்தைச் செய்யக் கை நீட்டுகிற போது என் மேலே அல்லவோகை ஓங்குகிறாய். உன்னுடைய பொல்லாத நினைவுகளாலே என் சிரசிலே முட்கள் அதிகமாய்ப் பதிந்து ஏற இறுத்துகிறாய். உன் மனக் குரோதம் என்கிற ஈட்டியினாலே என் விலாவை ஊடுருவக் குத்தித் திறக்கிறாய். நீ பாவத்திற்காக அசைக்கிற கால்களும், நடந்து போகிற அடிகளும், என் கை கால்களிலே ஆணிகள் இறுக அறைகிற சுத்தியல் அடிகளாயிருக்கின்றன.

நீ அநுபவிக்கிற கெட்ட சுகபோகமெல்லாம் என் சரீர முழுவதும் புதிதாய் வடிந்து சிந்தி விழு கிற இரத்தமாயிருக்கின்றன. ஐயையோ பாவீ! உனக்காக என் உயிர் விடும் வரையும் பட்ட பாடுகள் போதாதோ? இன்னும் என்னை ஏன் இந்த வாதைப் படுத்துகிறாய்? அதுமட்டும் உன் தீய ஆசை ஓடுகிறதோ? என்னிலும் அந்தச் சுகம் உனக்குப் பெரிதோ? இத்தனை பாடுகளைப் பார்த்து உன் மனது சற்றும் இளகாதோ? இரக்கம் இல்லையோ'' என்று ஆண்டவர் உன்னை வருந்துகிறதற்கு, நீ இதெல்லாம் ஒன்றும் பாராமல், நினைத்த நினைவை நிறைவேற்றுவேன் என்று இருக்கிறாய்.

முன்னே யூதர் ஆண்டவருக்குச் செய்த நிஷ்டூரங்களிலும் இதுவே அதிக கொடூரமான நி ஷ் டூரமாயிருக்கின்றது. இத்தனை கொடிய நெஞ்சுள்ளவனாயிருந்து ஆயுதங்களைச் சாணை பிடித்துக் கூர்மையாக்கிக் கொண்டு ஆண்டவரை வாதிப்பேன் என்கிறது போல், அந்தப் பாவச் செயல் முடியும் வரையும் ஆண்டவர் பேரிலே ஓங்கின கை இன்னும் மாறாமலிருக்கிறாய். ஐயையோ பாவீ , மோக பாவியே! இப்படிப்பட்ட துரோகமும் கொடுமையும் யாராகிலும் செய்ய மனம் வருமோ? இப்படிப்பட்ட நிஷ்டூரங்களைக் கண்டால் கல்லும் உருகிப்போகும். உன் மனது மாத்திரம் இளகாதோ? ஆனால் ஆண்டவர் சிந்தின இரத்தம் தானே உனக்கு விரோதமாகச் சாட்சியாயிருக்கும் என்று பார்.

செல்வந்தனாக இருந்த ஒரு பெரியவன் துஷ்டத்தனம் மிகுந்தவனாய், தன் பாவத்தை விட மாட்டாமலும், பாவ சங்கீர்த்தனம் செய்யாமலும், நல்ல விவேகிகள் சொல்லுகிற புத்தியைக் காது கொடுத்துக் கேளாமலும் இருப்பான். இப்படியிருந்து வியாதியாய் விழுந்த போது குருக்கள் வந்து பாவத்துக்காக மனஸ்தாபப்படச் சொல்லி, எத்தனை வருந்தினாலும் கேளான். அர்ச். பிரான்சிஸ்கு போர்ஜியார் என்கிறவர் வந்து எத்தனையோ நியாயங்களைச் சொல்லிக் காட்டின இடத்திலேயும், அவன் மனந்திரும்பவில்லை.

அப்போது ஆண்டவர் அவன் பாவக் கொடூரத்தையும், தம்முடைய இரக்கத்தின் மகிமையையும், கோப் நீதியையும் உலகத் துக்குக் காண்பிக்க விரும்பியதால் அவர் பாடுபட்ட சுரூபமும் திருவாய் மலர்ந்து, அவனுக்குத் தயையும் இரக்கமும் உள்ள வசனங்களைத் திருவுளம்பற்றினாலும், அதைக் கேளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதைக் கண்டு சிலுவையிலிருந்து ஆண்டவர் தமது வலது கையைக் கழற்றிக் கொண்டு, விலாக்காயத்தில் கையை இட்டு இரத்தம் எடுத்துக் காட்டி, அவனைப் பார்த்து "இந்த இரத்தப் பலனை நீ அடைய மாட்டேன் என்றதால் அதனால் நடுத்தீர்க்கப்பட்டு நரகத்துக்குப் போவாய்'' என்று திருவுளம் பற்றினார்.

பாவீ, அவன் செய்த பாதகங்களை நீ செய்கிறபோதே அந்தப் பயங்கரமான வாக்கியத்தை ஆண்டவர் உனக்கே சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக் கொள். ஆகையால் உன் பாவக் கொடூரம் எவ்வளவு பெரிதென்று அறிந்து, புத்தி மயக்கத்தை விட்டுப் பாவங்களுக்காக துயரப்பட்டு பிரார்த்தித்துக் கொள்.