பாத்திமா காட்சிகள் - அவ்ரம் நகர்ச் சிறையில்

அவ்ரம் நகர்ச் சிறை ஒரு அருவருப்பான இடம்.  பல அறை களைக் கொண்டிருந்தது.  ஒரு மாதிரி கெட்ட வாடை வீசுமிடம்.  “ம்ம்ம்” என்று இரைந்து கொண்டே பல எதிரொலிகளை உறுமிக் கொண்டிருக்கும். 

பெரிய இரும்புக் கம்பிகளால் பாதுகாப்புச் செய்யப்பட்டிருந்த அங்கு ஜேப்படித் திருடர்கள், குடிகாரர்கள், சூதாடிகள் போன்ற பலதரப்பட்ட குற்றவாளிகளை அடைத்து வைத்திருந்தார்கள். திடீரென பெரிய சிறைக்கதவு திறந்தது. கைதிகள் எல்லோரும் கதவை எட்டிப் பார்த்தார்கள். அங்கே ஒரு சேவகன் மூன்று இளஞ் சிறுவரை உள்ளே தள்ளி உடனே கதவைப் பூட்டி விட்டுச் சென்று விட்டான்.

உள்ளே நுழைந்ததும் குழந்தைகள் அவ்வறையின் ஒரு கோடியில் இரும்புக் கம்பியால் பலப்படுத்தப்பட்டிருந்த ஒரு ஜன்னல் பக்கமாகச் சென்று ஒதுங்கி நின்றார்கள். அதன் வழியாக அவ்ரம் சந்தைக் கடைத் தெருவைப் பார்க்க முடிந்தது.  ஜஸிந்தா அதன் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள். அவ்வளவுதான், ஒரே அழுகை!

லூஸியா அவளை அரவணைத்துக் கொண்டாள்.

“ஏன் அழுகிறாய், ஜஸிந்தா?” 

“எங்கம்மாவைப் பார்க்கணும்.  அம்மா அப்பாவைப் பார்க்காமல் சாகப் போகிறோம்” என்று கூறி, மேலும் அழுதாள் ஜஸிந்தா.

பிரான்சிஸ் சற்றுத் திடமாக, “அம்மாவைப் பார்க்க மாட்டோம் என்றால், சரி, பொறுமையாக இருப்போம். இதையும் பாவிகள் மனந்திரும்ப நாம் ஒப்புக்கொடுப்போம். அந்த நம் அம்மா இனி நமக்குத் தோன்ற மாட்டார்களோ? அதுதான் ரொம்பக் கஷ்டம். அதுதான் எனக்கு வேதனை. ஆனால் அதையும் பாவிகள் மனந்திரும்புவதற்காக நான் ஒப்புக்கொடுப்பேன்” என்றான்.

பிரான்சிஸ் இவ்வளவு திடமாக முதலில் பேசி விட்டான். ஆனால் நேரம் ஆக ஆக, தேவதாய் மீண்டும் வராமல் போய்விடக் கூடும் என்ற நினைவு வந்ததும் திடமிழந்து விடுவான். மற்ற இருவரும்தான் அவனைத் தேற்ற வேண்டியதிருந்தது.

அங்கிருந்த கைதிகள் இக்குழந்தைகளை ஆளுக்கொரு முறையில் நோக்கினர்.  சிலர் வெறுப்புடன் அலட்சியமாக இருந்தனர்.  சிலர் வேடிக்கையாகப் பார்த்தனர்.  இந்த வயதில் இப்படிப்பட்ட பிஞ்சுகளை இங்கே கொண்டு வந்து ஏன் அடைக்கிறார்கள் என எண்ணினர்.  இவர்கள் அப்படி என்ன குற்றத்தைச் செய்து விட்டார்கள்?  அப்படிப் பட்ட பிள்ளைகளாகத் தெரியவில்லையே என்று பலவாறாக சிந்தித்தனர்.

அங்குள்ள அசுத்த வாடை குழந்தைகளைத் தாக்கியது. அங்கு அடைபட்டிருந்தவர்களின் அழுக்குப் படிந்த ஆடைகளும், சவரம் பண்ணாத கோர முகங்களும், கலைந்து குவிந்து கிடந்த தலை ரோமங்களும் அவ்விடத்தை மேலும் மோசமாக ஆக்கின.  தாங்கள் எங்கே, யார் நடுவே அடைபட்டிருக்கிறோம் என்று நினைத்ததுமே இரு சிறுமிகளும் மீண்டும் மீண்டும் கண்ணீர் பெருக்கினார்கள்.

“அம்மாவைப் பார்க்க வேண்டும். அம்மாவிடம் போக வேண்டும்” என்ற ஜஸிந்தாவின் அழுகைக் குரல் பிரான்சிஸை உலுக்கியது.

“அப்போ இதை நீ பாவிகளுக்காக ஒப்புக்கொடுக்க விரும்பவில்லை.  அப்படியா?  பாப்பரசருக்காக, மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்க மாட்டாய் என்ன?” என்றான் பிரான்சிஸ் திடமாக.

“கட்டாயம் கொடுப்பேன்” என்றாள் ஜஸிந்தா.

உடனே பிரான்சிஸ் அந்த இடத்திலேயே முழங்காலிட்டான். லூஸியாவும், ஜஸிந்தாவும் அப்படியே செய்தனர்.

மெதுவாக குரலில் அவன் இவ்வாறு சொன்னான்:

“ஓ என் சேசுவே!  இதெல்லாம் உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்பவும், பாப்பரசருக்காகவும், மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகார மாகவும் ஒப்புக்கொடுக்கிறோம்.” 

இப்படி இக்குழந்தைகள் மிக உருக்கமாக ஜெபித்ததையும், அவர்களின் மாசற்ற வதனங்களையும், அவர்களின் களங்கமில்லாத பேச்சையும் கவனித்த கைதிகள் முழங்காலிலிருந்த அவர்களைச் சுற்றிக்  கூடி  விட்டார்கள்.   எதற்காக  நகர  அதிகாரி  அவர்களைச் சிறையில் அடைத்தார் என்று சுருக்கமாகக் கேட்டறிந்த அவர்களில் ஒருவன்,

“அதிகாரி அந்த இரகசியத்தை அறிய மிக விரும்புகிறார் தானே.  அதைச் சொல்லிவிட்டால், அதுவே நீங்கள் வெளியேறுவதற்கு மிக எளிதான வழி” என்றான்.

“நாங்கள் அதைச் சொல்வதை அந்த அம்மா விரும்ப வில்லையே” என்றாள் லூஸியா.

“அந்தம்மா விரும்பாவிட்டால் உங்களுக்கென்ன?” என்று அவன் மீண்டும் கூறினான்.

“அதைவிட நான் சாவேன்” என்றாள் ஜஸிந்தா. மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர்.  பின், 

“நாம் ஜெபமாலை சொல்வோம்” என்று கூறி, மூவரும் தங்கள் ஜெபமாலைகளை எடுத்தார்கள்.

ஜஸிந்தா கழுத்தில் ஒரு மாதா சுரூபமுள்ள செயின் கிடந்தது.  அதைக் கழற்றி பக்கத்தில் நின்ற ஒரு உயர்ந்த மனிதனிடம் கொடுத்து அதைச் சுவரிலிருந்த ஒரு ஆணியில் தொங்க விடுமாறு கேட்டுக் கொண்டாள் அவள்.  அந்த மனிதன் உடனே இன்முகத்தோடு அதைத் தொங்க விட்டான்.

இந்தக் குழந்தைகள் என்னதான் செய்யப் போகிறார்கள்  என்று எல்லார் கண்களும் ஆவலுடன் நோக்கின!  அவர்கள் சுவரில் தொங்கிய அந்த சுரூபத்தின் முன் முழங்காலிட்டபடியே, பக்தியுடன் தங்கள் ஜெபத்தை ஆரம்பித்தார்கள். “பிதா சுதன் இஸ்பிரீத்து சாந்துவின் பெயராலே... பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த... பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே... அருள் நிறைந்த மரியாயே...” 

சிறைக்கூடம் ஜெபக்கூடமாயிற்று!  போர்த்துக்கலில் இந்த ஜெபங்களைக் கேட்டிராத மக்கள் செவிகள் இருக்க முடியாது.  எவ்வளவு கடின மனமாயினும் இந்த ஒலிக்குத் திறக்காத காதுகள் அங்கில்லை.  குழந்தைகளின் மழலை போல இம்மந்திரங்கள் திரும்பத் திரும்ப ஒலித்தன.  

அங்கு இருந்த கைதிகளின் செவிகள் வழியாக இருதயங்கள் திறந்தன. வெகு விரைவில் சிலர் குழந்தைகளைச் சுற்றி முழங்காலிட்டு ஜெபிக்க ஆரம்பித்தனர்.  நின்று கொண்டிருந்தவர்களும் தங்களையும் மீறி, “அருள் நிறைந்த மரியாயே வாழ்க...” என்று மெதுவாகச் சொல்லத் தொடங்கினார்கள். அவர்கள் அவ்வார்த்தைகளைச் சொல்லி ஆண்டுகள் எத்தனை ஆயிற்றோ!

ஒரு மனிதன் தொப்பியைக் கழற்றாமலே ஜெபம் சொன்னது பிரான்சிஸின் கண்ணில் பட்டது. “ஜெபிக்கும்போது தொப்பி வைத்திருக்கக் கூடாதே” என்றான் அவன்.  உடனே அத்தொப்பி பறந்து தரையில் விழுந்தது.  பிரான்சிஸ் அதை எடுத்து பெஞ்சின் மீது வைத்து விட்டு, மீண்டும் ஜெபத்தைத் தொடர்ந்தான்.

ஜெபமாலை முடிந்தது.  சற்று நேரம் அமைதி நிலவியது.  அதற்குள் மீண்டும் விம்மலும், அழுகைச் சத்தமும்!  ஆம்,  ஜஸிந்தாதான்.

“என்ன ஜஸிந்தா, இதை நம் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க நீ விரும்பவில்லையா?” என்றாள் லூஸியா.

“விரும்புகிறேன்.  ஆனால் எங்கம்மாவை நினைத்ததும் அழுகை வருகிறது” என்றாள் ஜஸிந்தா.

இந்தக் காட்சி கைதிகளின் உள்ளத்தைத் தொட்டு விட்டது. இச்சிறுமியின் மீது அவர்களுக்கு ஒரு அன்பு கூட உண்டாயிற்று.  அவர்களுள் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த ஒரு சிறு ஊதும் ஆர்மோனியத்தை (மவுத் ஆர்கன்) எடுத்து ஒரு இராகம் வாசித்தான்.  

குழந்தைகளுக்கு உற்சாகமூட்டி விளையாட்டுக் காட்டுவதற்காக அப்படிச் செய்தான்.  சிலர் அந்த இராகத்தில் பாடத் துவக்கினார்கள்.  பாட்டும் இசையும் பொருந்தி ஒலித்தன. ஜஸிந்தாவின் கண்ணீர் நின்றது. அவள் கண்கள் ஜொலித்தன.  அவளுக்கு இந்த இசை ஒலி குதூகலமாயிருந்தது. முகத்தில் சிறு மகிழ்ச்சி தோன்றியது.  “உங்களுக்கு நடனமாடத் தெரியுமா?” என்றான் ஒருவன் குழந்தைகளைப் பார்த்து.

“எங்களுக்கு பன்டாங் (ஒரு வகை நடனம்) ஆடத் தெரியும்.  விரா (இன்னொரு வகை)வும் ஆடத் தெரியும்” என்றார்கள் குழந்தைகள். சிறைச்சாலை ஒரு சிறு நடன சாலையாக மாறியது.  களவுக் கைதி ஒருவன் (இந்தக் கைதி தேவ அன்னையின் அருளால் மனந்திரும்பியதாக லூஸியா கூறுகிறாள்.) ஜஸிந்தாவுடன் சேர்ந்து ஆடத் தொடங்கினான். அவள் மிகவும் சிறு பிள்ளையாக இருந்ததால், அவளைத் தூக்கித் தோள்மேல் வைத்துக் கொண்டு ஆடினான். பாட்டும் ஆட்டமும், ஆர்மோனிய நாதமும் சேர்ந்து எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்தின!  ஏதோ ஒரு கலா நிகழ்ச்சியே நடப்பது போலிருந்தது.

கொஞ்ச நேரம் வரை சிறையில் இருப்பதாக யாருக்கும் நினைவில்லை. இசையின் வசப்பட்டு எல்லாரும் மகிழ்ந்திருந்த போது, திடீரென்று சிறைக் கதவு திறந்தது!  ஒரு போலீஸ் நுழைந்தான்.  

மூன்று குழந்தைகளையும் பார்த்து, “வாருங்கள் இங்கே” என்று கூறினான்.  குழந்தைகளுடன் வெளியேறி கதவைப் பூட்டி விட்டுப் போய்விட்டான்!