கொலோசா என்கிற பட்டணம் பிரிஜியா நாட்டின் பிரதான பட்டணமாம்.
அர்ச். சின்னப்பர் அந்தச் சபையாருக்கு தாமே வேதத்தைப் போதியாமல், எப்பாப்புராஸ் என்பவரை அவர்களுக்கு மேற்றிராணியாராக அனுப்பி, அவர் மூலமாய்ச் சுவிசேஷத்தை அவர்களுக்குப் பிரசங்கித்ததில், அநேகர் ஞானஸ்நானம் பெற்று, பக்தி சுறுசுறுப்புள்ள சபையாராயிருந்தார்கள்.
அவர்களுக்கு இந்த நிருபத்தை எழுதும்படியான முகாந்தரமேதென்றால், அவர்களிடத்தில் இரண்டுவகைப் பதிதர்கள் பிரவேசித்திருந்தார்கள்.
அந்தப் பதிதர்களில் சிலர்: சேசுநாதரல்ல, சம்மனசுக்களே நம்முடைய இரட்சணியத்துக்குக் காரணமென்றும், வேறு சிலர்: சுவிசேஷத்தோடுகூடப் பழைய ஏற்பாட்டின் முறைமைகளையும் அநுசரிக்கவேண்டுமென்றும் போதித்தார்கள்.
அர்ச். சின்னப்பர் இந்த இரண்டுவகைப் பதிதர்களையும் மறுத்து, அந்தக் கிறீஸ்தவர்கள் அநுசரிக்கவேண்டிய பிரதான முறைமைகளை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறார்.
அவர் உரோமாபுரியில் விலங்கிலே கிடக்கிறபோது கர்த்தரவதாரம் 62-ம் வருஷத்தில் எழுதிய இந்த நிருபம் எபேசியருக்கு எழுதிய நிருபத்தைப்போல் மிகவும் உயர்ந்த கருத்துகள் நிறைந்ததாம்.