சிறு குழந்தை

பாவசங்கீர்த்தனம் செய்ய வருவது மாசற்றதும், பரிசுத்தமானதும், குற்றமற்றதும், இன்னும் மனஸ்தாபத்தின் கடும் வேதனைகளை உணராததும், சோதனையின் கடுமையான தாக்குதல்களுக்கு இன்னும் உட்படாததுமான ஒரு சிறு குழந்தையாயிருந்தால், குருவின் வேலை உண்மையில் மிகவும் மென்மையானதாக இருக்கிறது. “சர்வேசுரனின் இராச்சியம் இத்தகையவர்களுடையதே'' என்றும், இவர்கள் ஆண்டவருக்கு எவ்வளவு பிரியமானவர் களாக இருக்கிறார்கள் என்றும் அவர் உணர்கிறார். மேலும் அந்தக் குழந்தையின் காவல் சம்மனசானவரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆன்மாவுக்காக தாம் அவரிடம் எப்படிப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் அறிந்திருக்கிறார். 

ஒரு தாயைப் போல, அவர் அந்தக் குழந்தையின் அற்பப் பாவங்கள், தவறுதல்களின் கதையைக் கேட்கிறார். தட்டுத் தடுமாறும் அதன் காலடிகளை வழிநடத்தவும், அந்தக் குழந்தைத்தனமான மனதில், மேலே மோட்சத்தில் இருக்கிற பிரியமுள்ள சர்வேசுரனைப் பற்றிய நேசமுள்ள எண்ணங்களையும், அவருடைய ஊழியத்தின் அழகையும், பாவத்தின் நன்றியற்றதனம், இவ்வளவு நல்லவரான ஒரு ஆண்டவரை நோகச் செய்யும் துர்க்குணம் ஆகியவற்றின் அவலட்சணத்தையும் தெளிவுபடுத்த அவர் பாடுபடுகிறார்.

இவ்வாறு சிறிய விதை விதைக்கப்படுகிறது, செடி முளைத்து வளர்கிறது. கடவுள் தமது தோட்டத்தில் மற்றொரு மாசற்ற லீலி மலர் பூத்து விரிவதைக் காண்கிறார்.