செபமாலை - விண்ணக திறவுகோல்!

செபமாலை என்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின்மிகப் பெரிய மந்திரக்கோல். அது மத்திரக்கோல் மட்டுமல்ல நாம் விண்ணகம்செல்ல விண்ணக தந்தையால் கொடுக்கப்பட்ட விண்ணக திறவுகோல்.விண்ணக திறவுகோலை இயேசுகிறிஸ்து தன் முதன்மை சீடர் இராயப்பருக்கு கொடுத்தார். இது கிறிஸ்தவர்கள் அறிந்த உண்மை. இராயப்பருக்கு பின் அவரது திருச்சபையாகிய நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

   மரியாள் தம் மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி ஒவ்வொருவர் கையிலும் வைத்து கொள்ளுமாறு கொடுத்த விஷேசமான விண்ணக திறவுகோல் தான் செபமாலை. நாம் செபமாலை சொல்லும் போது விண்ணகத்தில் நம் அன்னை நமக்காக மனமிரங்கிஇயேசுவின் முன்னால் மண்டியிட்டு மன்றாட தயங்குவதில்லை. எனவே நாம் செபமாலை சொல்ல சொல்ல மனமார நினைக்கும் போதே விண்ணக கதவுகள் திறந்து நமக்கான இம்மை, மறுமை நலன்கள் வழிந்தோட சித்தமாகினறன நம் அன்னையின் பரிந்துரையால்.

   வாழ்க்கை அழகானது நாம் எப்போது செபமாலை சொல்கிறோமோ அப்போது சிலுவையை துவக்கமாகவும், முடிவாகவும் கொண்ட செபமாலை செபத்தைப்போல் பரிபூரணமான செபம் இவ்வுலகில் இல்லை. அதுவும் நம் தாய் அன்னை மரியாள் தந்த செபமாலை பூரணமின்றி இருக்குமா ? காரணம் நித்தியத்திற்கும் பரிபூரணமான ஒரு பெண்ணால் மட்டுமே பரிபூரணமானவைகளை தரமுடியும்.

"இறைவன் படைத்த அழகிய மலர் மரியாள் என்றால் அந்த அழகிய மலரால் தொடுத்தெடுக்கப்பட்ட மாலையே செபமாலை"செபமாலை செபத்தின் மகத்துவம் இதோ கேளீர் ! மூவொரு இறைவன் நாமத்தில் துவங்கி, உத்தம மனஸ்தாப அறிக்கை செய்து கத்தோலிக்க விசுவாச அறிக்கையை நமக்கு நாமே நினைவுறுத்தி இயேசு திருவாய் மொழிந்த செபத்தை சொல்லி மரியன்னை மகத்துவமேன்மை துலங்கும் மங்கள வார்த்தைகளை மங்கா ஒலியோடு உச்சரித்து இவற்றிக்கிடையே நம்மைப் போன்று நித்திய வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டு மரித்த ஆன்மாக்களுக்காக மன்றாடிய வண்ணம் அந்த மாலையில் வலம் வந்து இறுதியில் அதிதூதர்களையும், புனிதர்களையும் அழைத்து பரிசுத்த ஆவியின் துணையோடு குறையோடு கூடிய நமது செபத்தை அவர்கள் கரம் திணித்து அவர்களின் தாழ்மையான மன்றாட்டோடு மரியன்னை திருகரம் சேர்த்து பின்பு நம் அன்னை மாசில்லா திருஇருதய அன்பின் வழியாக நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவுக்கு அணிவிக்கும் வாசமுள்ள வாடாத மாலையே நமது அழகிய செபமாலை.

செபமாலை செபத்தின் பரிபூரணம் இதுவே.கண்ணீருடனு கூடிய செபமாலை மொட்டவிழ்ந்த ரோஜா இதழ்களின் மேல் சிரிக்கும் பனித்துளி போன்று பேரழகானது. இந்த பேரழகை தாங்கி நிற்கும் பேரழகி நம் மரியன்னையின் நமக்கானபரிந்துரையும், மன்றாட்டும். செபமாலை பரிமள வாசமாய் விண்ணகம் முழுவதும் கமழும் போது விண்ணகம் முழுவதும் சொக்கிப் போகாதோ ? .

மாங்கல்யம் அணியாத திருமணமான மங்கை விதவை என்றால் செபமாலை அணியாத கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் விதவையே, கத்தோலிக்க திருச்சபை இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி , இங்கே திருச்சபை என்பது கட்டிடங்களையும், கலச்சாரங்களையும் குறிப்பிடவில்லை. மக்களாகிய நாமே அத்திருச்சபை அப்படியெனில் இயேசுவை நித்திய மணவாளனாக ஏற்றுக் கொண்ட நாம் செபமாலை என்னும் மாங்கல்யம் இன்றி விதவைக் கோலம் காண்பது முறையோ ? .

செபமாலை அணிந்து கொண்டால் மட்டும் போதாது. அந்த செபமாலையோடு தினமும் வாழ வேண்டும். அதாவது தினம் ஒருமுறையேனும் செபமாலை சொல்ல வேண்டும். தான் இவ்வுலகில் உயிரோடு வாழ்ந்த காலத்திலும், பின் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் சென்ற பின்பும் அதிகம் திருவாய் மலர்ந்து பேசாதமரியாள் அதிகம் அதிகமாய் பேசியது இந்த உயிருள்ள செபமாலைப் பற்றிதான்.அந்த நித்திய கன்னி அன்னை மரியாள் இவ்வுலக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி, செபமாலை சொல்வோருக்கான 15 வாக்குறிதிகள் மட்டுமே.

நம் ஆண்டவர் இயேசு உயிருள்ளவர், வாக்குமாறாதவர், அழிவில்லாதவர் என்பது உண்மை. நம் ஆண்டவரின் தாயும் உயிருள்ளவர், அழிவில்லாதவள், வாக்கு மாறாதவள். அந்த அழிவில்லாத ஜீவன் அளித்த செபமாலை மட்டும் எவ்விதம் அழியக்கூடும். அதை செபிப்போருக்கானஅன்னையின் வாக்குறுதிகள் மட்டும் எவ்விதம் மாறக்கூடும்.கி.பி. 1214 ல் புனித தொமினிக் மூலம் நம் அன்னை நம் கத்தோலிக்க திருச்சபைக்கு அளித்த செபமாலை கடந்த 801 ஆண்டுகளாக நம் திருச்சபையின் போர்வாளாக திகழ்ந்தும், எதிரியை அழித்தும், நம்மை காத்தும் தொடர்ந்தும் விண்ணக வழிநடத்தலை தொடர்கிறது. மேலும் செபமாலையின் இப்பணி அழிவில்லாமல் தொடரும்.