குடும்பங்களின் ஆன்மீகம்!

ஒவ்வொரு குடும்பத்தின் ஆன்மீகமும் நான்கு தளங்களில் இயங்க வேண்டும். நான்கு தூண்கள் இணைந்து ஒரு கட்டடத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல, குடும்பங்களின் ஆன்மீகமும் இந்த நான்கு தளங்களில் இணையாக இயங்கினால்தான் குடும்பங்களின் ஆன்மீகம் நிலையானதான, சமனானதாக அமையும். நினைவில் கொள்ள வசதியாக இந்த நான்கு தளங்களும் "ந" என்னும் எழுத்தில் தொடங்குகின்றன.

1. நம்பிக்கை:

நம்பிக்கை என்பது இறைப் பற்றைக் குறிக்கிறது. விசுவாசம் என்னும் சொல்லே விவிலியத்தின் புதிய மொழிபெயர்ப்பில் நம்பிக்கை என்று வழங்கப்படுவதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். கத்தோலிக்கக் குடும்பங்களின் அடித்தளமாக, மூலைக்கல்லாக கிறித்தவ இறை நம்பிக்கை அமைய வேண்டும். அந்த இறை நம்பிக்கையைப் பின்வரும் வழிகளில் குடும்பங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

1. அன்றாட குடும்ப செபம்: 

ஆன்மீகத்தின் அடித்தளம் செபம்தானே! நாள்தோறும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து குறைந்தது 10 நிமிடங்களாவது இறைவேண்டல் செய்யாவிட்டால் அங்கே ஏது ஆன்மீகம்?

2. திருப்பலியில் பங்கேற்பு: 

நாள்தோறும் திருப்பலியில் பங்கேற்கும் குடும்பங்கள் பேறுபெற்றவர்கள். இயலாவிட்டால் ஞாயிறு திருப்பலியில் குடும்பமாக இணைந்து, முழு ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்.

3. இறைமொழி வாசிப்பு: 

நாள்தோறும் இல்லத்தில் விவிலியம் வாசிப்பது அவசியம். தனித்தனியாகவோ, அல்லது அனைவரும் இணைந்தோ வாசிக்கலாம். திருப்பாடல்கள், பவுலடியார் திருமடல்களில் ஒரு பகுதியை பிள்ளை வாசிக்க, பெற்றோர் செவிமடுப்பது குடும்ப உறவையும், ஆன்மீகத்தையும் வளர்க்கும்.

4. வாரமொரு முறை உண்ணா நோன்பு: 

வாரத்தில் ஒருநாள் குடும்பத்தினர் அனைவரும் ஏதாவது ஓர் உணவை மறுக்கலாம், அல்லது குறைக்கலாம், அல்லது விருப்ப உணவை இழக்கலாம். உண்ணா நோன்பு உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் நலம் தருகிறது.

5. வாரமொருமுறை ஊடக நோன்பு: 

வாரத்தில் ஒருநாள் (உண்ணாநோன்பிருக்கும் அதே நாளில்) தொலைக்காட்சி, செய்தித்தாள், வானொலி, அலைபேசி, இணையதளம் என்னும் ஐந்து ஊடகங்களுக்கும் ஓய்வுகொடுக்க வேண்டும். குறிப்பாக, தொலைக்காட்சிக்கு. இதுவும் தன்கட்டுப்பாட்டை வளர்க்கும் ஓர் ஆன்மீக உத்தி.

6. வாரமொருமுறை சொல் நோன்பு: 

அதே நாளில் பேசும் சொற்களைக் குறைத்தோ, அல்லது தரம் குறைந்த, புண்படுத்தும் சொற்களைத் தவிர்த்தோ, அல்லது ஊக்குவிக்கும், பாராட்டும் சொற்களை அதிகரித்தோ சொல் நோன்பிருக்கலாம். குடும்பத்தில் பிணக்குகளைக் குறைத்து, உறவை அதிகரிக்கம் இன்னொரு வழி இது.

7. ஆண்டுத் தியானம்: 

ஆண்டுக்கொருமுறை குடும்பத்தினர் அனைவரும் இணைந்து தியானம் ஒன்றில் கலந்துகொள்வது குடும்பத்தின் ஆன்மீகத்தை வளர்க்கும். வாழ்நாளில் ஒருமுறையாவது ஐந்து நாள் தியானம் ஒன்றில் பங்கேற்பது சாலச் சிறந்தது.

8. இல்லத்தில் இறையமைதி:

கத்தோலிக்க இல்லங்களில் இரைச்சல், ஓயாத திரைப்பாடல்கள், எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி அல்லது வாக்குவாதங்கள் என்பவை இருக்கக் கூடாது. உள்ளார்ந்த மற்றும் வெளியரங்க இறையமைதி இல்லத்தில் திகழ வேண்டும்.

2. நற்பணி

குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அவரவருடைய கடமைகளை, பணிகளை நிறைவாக, சீராகச் செய்வது ஆன்மீகத்தின் இரண்டாவது தளமாகும். இறைப்பற்றில் ஈடுபாடு கொண்டு, இல்லறக் கடமைகளைப் புறக்கணிப்பது ஆன்மீகத்தின் குறைபாடாக மாறிவிடும். எனவே, பின்வரும் வழிகளில் குடும்பத்தினர் தம் ஆன்மீகத்தை வெளிப்படுத்தலாம்.

9. பணியில் நேர்மை: 

வேலைசெய்யும் உறுப்பினர்கள் தங்கள் பணியில் நேர்மையாக இருப்பது ஆன்மீகத்தின் சிறந்த வெளிப்பாடு. இளைய உறுப்பினர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் அமையும்.

10. பணியில் காலம் தவறாமை: 

பணிக்கு, பள்ளிக்கு, ஆலயத்துக்கு எங்கு சென்றாலும் காலம் தவறாது இருப்பது இன்னொரு சிறப்பு.

11. பணியில் நேரம் வீணாக்காமை: 

வேலை நேரத்தில் நேரத்தை வீணடிப்பது, அரட்டை அடிப்பது போன்றவை பெரும் தவறுகள். நல்ல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இறைவழிபாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல், தங்கள் பணிகளையும் நேர்த்தியாக ஆற்றவேண்டும்.

12. துணைவருக்கான கடமையை ஆற்றல்: 

கணவனும், மனைவியும் ஒருவர் ஒருவருக்கான கடமைகளை நன்கு நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, அவர்களின் உடல், மன நலனில் அக்கறை கொள்ளவேண்டும். அவர்களின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். நிறைவான அன்பு செலுத்த வேண்டும்.

13. பெற்றோர் - பிள்ளைகளுக்கான கடமையை ஆற்றல்: 

பிள்ளைகளுக்குத் தேவையான பராமரிப்பு, கல்வி, அறிவுரை, ஆலோசனை, வழிகாட்டல், கண்டித்தல், செபித்தல், மாதிரி காட்டல் போன்ற அனைத்துக் கடமைகளையும் நன்கு நிறைவேற்ற வேண்டும். அதுபோல, பிள்ளைகளும் பெற்றோருக்குரிய மதிப்பை, பாசத்தை, கீழ்ப்படிதலை செலுத்தவேண்டும். வயதான காலத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது ஆன்மீகத்தின் பிழையாகும்.

14. பங்குக்கான கடமையை நிறைவேற்றல்: 

ஒவ்வொரு குடும்பமும் தாம் சார்ந்திருக்கும் பங்கிற்கு கடமைப்பட்டிருக்கின்றனர். எனவே, பங்கிற்குரிய வளர்ச்சி நிதி, நேரம், திறமைகள், சேவைகள் போன்றவற்றை ஒவ்வொரு குடும்பமும் வழங்கவேண்டும்.

15. அன்பியப் பங்கேற்பு: 

குடும்பங்கள் இணைந்ததுதான் அன்பியங்கள். எனவே, அன்பியங்கள் நன்கு இயங்க அனைத்துக் குடும்பங்களும் பங்களிக்க வேண்டும்.

3. நல்லுறவு

உறவு என்பது ஆன்மீகத்தின் பிரிக்கமுடியாத ஒரு தளம். குறிப்பாக, குடும்பத்திற்குள்ளும், வெளியிலும் நல்லுறவு பேணுதல் அவசியம். அதனைப் பின்வரும் வழிகளில் வெளிப்படுத்தலாம்.

16. இணைந்து உண்ணுதல்: 

இயன்றபோதெல்லாம் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து உண்ணவேண்டும். உண்ணுவது என்பது வயிற்றை நிரப்பும் ஒரு செயல் மட்டுமல்ல, உறவை வளர்க்கும் ஒரு நிகழ்வு. பிள்ளைகள் பெற்றோரோடு சேர்ந்து உண்ணும்போது பெற்றோரின் உழைப்பு, தியாகம், அன்பு இவற்றையும் சேர்த்தே உண்கின்றனர்.

17. இணைந்து உறவாடுதல்: 

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், குடும்பத்தினர் இணைந்து உரையாட வேண்டும். பாராட்ட வேண்டும். நிறை, குறைகளை அலச வேண்டும். மனம் விட்டுப் பேச வேண்டும். அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

18. மன்னிப்பின் அனுபவம்: 

குடும்பத்தில் ஒருவர் ஒருவரை மன்னிக்கும் அனுபவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். நம் இல்லத்தில் தவறுகள் செய்யலாம், அதற்கு மன்னிப்பு உண்டு என்னும் மனநிலை பிள்ளைகளுக்கு அக விடுதலையை அளிக்கும்.

19. அயலாரோடு நல்லுறவு: 

ஆன்மீகம் நிறைந்த குடும்பங்கள் தம் அயலாரோடு நட்புறவுடன் வாழ்வர். உதவுதல், பகிர்தல், பங்கேற்றல் வழியாக உறவை வளர்ப்பர்.

20. பங்குத் தந்தை, பங்குப் பணிக்குழுவினருடன் நல்லுறவு: 

அனைத்துக் குடும்பங்களும் பங்குத் தந்தையைத் தம் ஆன்மீகத் தந்தையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். இல்லத்தில் வரவேற்று ஆசிபெற வேண்டும். அதுபோல, பங்குப் பணிக்குழுவினருடனும் அனைத்துக் குடும்பங்களும் நல்லுறவுகொள்ள வேண்டும்.

4. நற்செய்தி அறிவிப்பு

கத்தோலிக்க குடும்பங்களின் இன்றியமையா இன்னொரு தளம் நற்செய்தி அறிவிப்பு. ஒவ்வொரு குடும்பமும் ஒரு நற்செய்தி அறிவிப்பு நடுவமாக இயங்க வேண்டும். இத்தகைய குடும்பங்களிலிருந்துதான் நேர்மையான இறையழைத்தல் உருவாகும். ஆயிரம் வழிகளில் நற்செய்தி அறிவிக்கலாம். இதோ சில வழிகள்:

21. பணத்தின்மீது பற்றின்மை: 

பணம் ஒன்றே குறிக்கோள் என்றில்லாமல் ஓய்வுநாளை ஆண்டவருக்கென செலவழித்தல், பங்குப் பணிகளுக்கு உதவுதல், பொருள்களைச் சேகரிக்க வேண்டும் என்றில்லாமல் எளிமையாக வாழ்தல் போன்றவை இன்றைய சூழலில் சிறந்த நற்செய்தி அறிவிப்புப் பணியாகும்.

22. திரைக்கலாசாரத்துக்கு மாற்றான இறைமொழிக் கலாசாரம்: 

இல்லத்தில் எப்போதும் திரைப்பாடல்கள் ஒலிப்பது, தொலைக்காட்சி இயங்குவது, நடை, உடை, பாவனைகளில் திரைக் கலைஞர்களைப் பின்பற்றுவது என்னும் இன்றைய பரவலான கலாசாரத்துக்கு மாற்றாக கிறித்தவப் பாடல்கள் கேட்பது, கண்ணியமான சொற்களைப் பேசுவது, இயேசுவின் திருப்பெயரை உச்சரிப்பது போன்றவை அடங்கிய இறைமொழிக் கலாசாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

23. அறப்பணிகளுக்கு 10% நிதி வழங்குதல்: 

ஒவ்வொரு குடும்பமும் தமது வருமானத்தில் பத்திலொரு பங்கை அறப்பணிகளுக்கு வழங்குவது ஆன்மீகக் கட்டாயம்.

24. வாரம் ஒருநாள் - அரை நாள் அறப்பணி செய்தல்: 

ஒரு குடும்பத்தில் ஓர் உறுப்பினராவது பங்கிற்காக, எளியோருக்காக ஏதாவது பணிசெய்தல் ஆன்மீகத்தின் இன்னொரு சிறப்பு. அந்த உறுப்பினரை குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் ஊக்குவித்து, பெருமிதம் கொள்ளவேண்டும்.

25. சாதி மறுப்பை மனதிலும் வாழ்விலும் ஏற்றுக்கொள்ளல்: 

சாதீய உணர்வுகொள்வது ஆன்மீகத்தின் பிழை, நற்செய்தி அறிவிப்புக்குத் தடை என்னும் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் அறிவுரைப்படி சாதி மறுப்பு என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இந்த சிந்தனையை ஊட்ட வேண்டும்.

மேற்கண்ட 25 செயல்பாடுகளையும் நிறைவேற்றும் குடும்பங்கள் ஆன்மீகம் நிறைந்தவையாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.