நித்தியம்

நித்தியம் என்பது பயங்கரம்! 

பூமி, சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாம் ஒருநாள் அழிந்து போகும். காலச் சக்கரங்கள் ஒன்றையொன்று பின்பற்றி உருண்டோடும். நீர்ப்பரப்பில் விழுந்து ஒரு வட்டத்தை ஏற்படுத்திவிட்டு மறையும் நீர்த்துளி போல யுகங்கள் தோன்றி மறைந்து கொண்டிருக்கும். 

ஆனால் சபிக்கப்பட்ட ஆத்துமத்தின் நிர்ப்பாக்கிய நிலையில் எந்த மாறுதலும் இராது. இனி அன்பில்லை, ஆறுதல் இல்லை, இரக்கம் இல்லை , ஓய்வு, உறக்கம், நிம்மதி எதுவுமேயில்லை! திரும்பும் பக்கமெல்லாம் பசாசுக்களும், கொடிய ஆத்துமங்களுந்தான்! 

என்றாவது ஒருநாள் இந்த வாதையெல்லாம் முடிந்து போகும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்திருந்தால், நரகவாதை சமாதானமாய் மாறிப் போகும். ஆனால் நரகத்தில் எஞ்சியிருப்பதெல்லாம் அவநம்பிக்கை மட்டுமே. கோடானுகோடி வருடங்கள் சென்ற பிறகு பசாசு பாவியின் காதருகில் வந்து: 'உன் வேதனை இப்போதுதான் தொடங்கு கிறது' என்று சொல்லி எக்களித்துச் சிரிக்கும்!

"அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பிக்கொண்டிருக்கும்” என்று காட்சியாகமம் 14:11 கூறுகிறது. 

“பரிதாபத்திற்குரிய யூதாஸ்! அவன் நரகத்திற்குச் சென்று 1700 வருடங்கள் (இப்போது, 2000 வருடங்கள்!) ஆகின்றன, ஆனால் அவனுடைய நரகம் இன்னும் தனது தொடக்கத்தில்தான் இருக்கிறது” என்று கூறி வியக்கிறார் அர்ச். அல்போன்ஸ்லிகோரியார்.

“நரகத்தில் சபிக்கப்பட்ட ஆன்மாவின் மிகப் பெரிய, மிக பலமான ஆசை, இறந்து விட வேண்டும் என்பதுதான். அந்நாட்களில் மனிதர்கள் சாவைத் தேடுவார்கள்; ஆயினும் அதைக் காணமாட்டார்கள். சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். சாவு அவர்களை விட்டோடிப் போகும்” என்று காட்சியாகமம் 9:6 கூறுகிறது. 

ஏனெனில் கடவுளின் கோபத்தை சாந்தப்படுத்த இனி ஒருபோதும் தன்னால் முடியாது என்பதை உணர்ந்து சபிக்கப்பட்ட ஆத்துமம் மரணத்தை ஏங்கித் தேடும், ஏனெனில் அது ஒன்று மட்டுமே தப்பிப்பதற்கு ஒரே வழியாக அதற்குத் தோன்றும். ஆனால் அந்த ஆசை வீணானதாகவே இருக்கும். சர்வேசுரன் ஜீவியராக இருக்கும் வரை, நரகவாசியும் உயிருள்ளவனாகத்தான் இருப்பான்! என்று அர்ச். அந்தோனி மரீக்ளாரெட் கூறுகிறார்.

“தீயவர்கள் தங்களைக் கடித்து விழுங்கும் நெருப்பின் நடுவே நித்தியத்திற்கும் தங்கியிருப்பார்கள். உலகில் பெரும் செல்வந்தனாயிருந்தவன் தன் நாவை நனைக்க ஒரு துளி நீர் முதலாய் இல்லாமல் எரிவான். ஒவ்வொரு மோக இச்சையும், ஆசாபாசமும் தனக்கேயுரிய தண்டனையைப் பெற்றுக்கொள்ளும். 

அவநம்பிக்கையும், இனி இன்னும் எண்ணற்ற கோடானகோடி ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்த பயங்கரத்திலிருந்து ஒருபோதும் வெளியே வரவே முடியாது என்ற நிதர்சன உண்மையும் நரகவாசிக்கு மகா கொடிய வேதனையாக இருக்கும். 

அவர்களுடைய பாவ சங்கீர்த்தனத்திற்கு இனி மதிப்பில்லை. ஏனெனில் கதவு சார்த்தப்பட்டு விட்டபின், தங்கள் விளக்கில் எண்ணெய் இல்லாமல் கதவைத் தட்டிக்கொண்டேயிருப்பதால் எந்தப் பயனுமில்லை. இனி அங்கிருந்து விடுதலை இல்லை...

சபிக்கப்பட்டவர்கள் இனி கடவுளை ஒருபோதும் காண மாட்டார்கள்” என்று அர்ச். கார்த்தேஜ் சிப்ரியன் கூறுகிறார்.

ஆம், நரகம் என்பது நிகழ்காலம் மட்டுமே. அல்லது அது அசையாமல் நின்றுவிட்ட காலமென்றும் சொல்லலாம். அங்கே கடந்த காலமோ, எதிர்காலமோ இனி இல்லை. இந்த நிகழ்காலம் இனி முடியப் போவதேயில்லை. அங்கே தொங்க விடப்பட்டிருக்கும் கடிகாரத்தில் முட்களே இல்லை!

அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் கூறுவதாவது: “நீ ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை ஒரு துளி கண்ணீர் சிந்துகிறாய் என்று உத்தேசித்துக் கொள். இப்படி சிந்தும் துளித் துளியான கண்ணீர் எல்லாம் ஒன்றுகூடி வெள்ளப் பெருக்காய் உலகமெல்லாம் மூழ்கடிப்பதற்கு எத்தனை வருடங்கள் செல்லும்!!! ஒருவேளை இது நிகழ்ந்தாலும் நரக ஆக்கினை முடியாது. 

ஒரு சிட்டுக்குருவி கடலின் நீரில் ஒரு துளியை வருடத்துக்கு ஒரு முறை வந்து எடுத்துக்கொண்டு போனால், கடலின் விஸ்தாரமான நீர்ப் பிரவாகம் எல்லாம் வற்றி வறண்டு போக எத்தனை இலட்சங் கோடி வருடங்கள் செல்லும்! இவையெல்லாம் சென்று கடலின் தண்ணீர் முழுவதுமே வற்றிப் போனாலும் நரக வேதனை மட்டும் அற்பமும் குறையாது, சற்றும் மாறாது, ஒருபோதும் முடியாது.”

"உலகிலுள்ள அனைத்து தாவரங்களிலும் உள்ள இலைகளின் எண்ணிக்கை, பூமியெங்குமுள்ள மணல் துகள்களின் எண்ணிக்கை, வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கை, உலகின் தொடக்கம் முதல் இறுதி வரை வாழ்ந்தவையும், வாழ்பவையும், இனி வாழ இருப்பவையுமான அனைத்து ஜீவராசிகளின் எண்ணிக்கை இவை அனைத்தையும் ஒன்றாய்க் கூட்டினாலும் நித்தியம் என்னும் பெருங்கடலில் அது ஒரு துளியாக மட்டுமே இருக்கும்” என்ற பொருள் கொண்ட ஒரு பழம்பாடல் இருக்கிறது.

அமைதியாக அமர்ந்து, நரகம் என்பது நித்தியமானது என்ற சத்தியத்தை அடிக்கடி ஆழ்ந்து தியானித்து வா! உன்னைப் பாவத்திலிருந்து விலக்கி, புண்ணிய வாழ்வுக்குக் கொண்டு வந்து சேர்க்கவும், அதில் வலமோ, இடமோ சாயாமல் மோட்சத்தை நோக்கி நேராக நடக்கச் செய்யவும் அந்த தியானமே போதுமானதாயிருக்கும்!


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...