தந்தை பியோவும் பாவசங்கீர்த்தனமும் 3

பாவசங்கீர்த்தனம் செய்பவன் நேர்மையாக இல்லை என்றால் அல்லது மனந்திரும்ப வேண்டும் என்ற உறுதியான தீர்மானமின்றி, தன் பாவங்களின் பட்டியலை வெறுமனே வாசிக்கிறான் என்றால், “ போ வெளியே “ என்ற கர்ஜனை பாத்ரே பியோவிடமிருந்து வெளிப்படும். அவர்களிடம் எந்த அளவுக்கு கடுமையாக இருப்பார் என்றால் சில சமையங்களில் அவர்களது முகத்திற்கு நேராக அவர்கள் பக்கத்திலுள்ள திறப்பின் கதவை அறைந்து சாத்திவிட்டு மறுபக்கத்தில் உள்ளவர்களிடம் பாவசங்கீர்த்தனம் கேட்க ஆரம்பித்து விடுவார்.

சில குருக்களையும், ஆயர்களையும் கூட அவர் இதே போலத் துரத்தியிருக்கிறார்.. ஒரு குருவிடம் :

“ பாவசங்கீர்த்தனத் தொட்டியாகிய நீதியாசனத்தில் அமர்வது எவ்வளவு அச்சத்திற்குரிய காரியம் என்பதை மட்டும் நீர் முழுமையாக அறிவீர் என்றால்! நாம் கிறீஸ்துவின் திரு இரத்தத்தை பகிர்ந்தளிக்கிறோம். அதில் நாம் அலட்சியமாகவோ, அசட்டைத்தனமாகவோ இருக்காதவாறு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் “ என்றார்.

ஒரு மனிதன் ஒரு முறை பாத்ரே பியோவை சோதிப்பதற்காக பாவசங்கீர்த்தனம் செய்யச் சென்றான். தான் பொய் சொல்வதை கண்டுபிடிக்கிறாரா என்று அறிய அவன் விரும்பினான். தான் பாவசங்கீர்த்தனம் செய்ய வரவில்லை என்றும் ஓர் உறவினருக்காக ஜெபிக்கும்படி அவரிடம் கேட்டுக்கொள்வதற்காகவே வந்ததாகவும் பொய் சொன்னான். பாத்ரே பியோ உடனே அங்கிருந்து போய்விடுமாறு அவனுக்குக் கட்டளையிட்டார்.

பாத்ரே பியோவைக் காண்பதற்காக வெகு தூரத்திலிருந்து வந்திருந்த பெண், பாவசங்கீர்த்தனத்தில் அவரிடம் :

“ பாத்ரே பியோ, நான்கு வருடங்களுக்கு முன் நான் என் கணவரை இழந்தேன். அது முதல் நான் கோவிலுக்கே போகவில்லை “ என்றாள். பாத்ரே பியோ பதிலுக்கு: “ நீ உன் கணவனை இழந்ததால், கடவுளையும் இழந்து விட்டாயா? போ வெளியே போய்விடு!” என்று கூறியபடி அவள் பக்கத் திறப்பைச் சார்த்தி விட்டார்.

இந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களுக்குள் அந்தப் பெண் மனம் வருந்தி தன் விசுவாசத்தை புதுப்பித்துக் கொண்டாள். தன் மனமாற்றத்திற்கு பாத்ரே பியோ தன்னிடம் நடந்துகொண்ட விதம்தான் காரணம் என்று அவள் கூறினாள்.

“ கடவுளை விட என் கணவரை நான் அதிகமாக நேசித்ததை அவர் சுட்டிக்காட்டிய விதமே என் மனமாற்றத்திற்கு காரணம் “ என்று அவள் கூறினாள்.

ஆனால் அறியாமையால் தெளிவும், துல்லியமும் இன்றிப் பாவசங்கீர்த்தனம் செய்தவர்களை அவர் திருத்தினார். தங்கள் ஆத்துமங்களை கடவுள் காண்பது போல, அவரும் காண்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள்.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !