பதுவாவைச் சேர்ந்த ஒருவர் பாத்ரே பியோவிடம் பாவசங்கீர்த்தனம் செய்த எட்டு நாட்களுக்குள் மேற்கண்ட விதியை மீறி மீண்டும் பாவசங்கீர்த்தனம் செய்ய முயன்றார். தாம் காத்திருக்க வேண்டிய காலத்தைக் குறைப்பதற்காக பாத்ரே பியோவிடம் பாவசங்கீர்த்தனம் செய்து எட்டு நாட்களுக்கும் அதிகமாகி விட்டது என்று அவர் பொய் சொன்னார். அவர் பாவசங்கீர்த்தனம் செய்யச் சென்ற போது தந்தை பியோ அவரது பொய்யைப் பற்றி அவரைக் குற்றம் சாட்டி அவரை அனுப்பி விட்டார். வெளியே வந்த மனிதன் கண்ணீரோடு,
“ என் வாழ்வில் நான் எத்தனையோ முறை பொய் சொல்லியிருக்கிறேன். பாத்ரே பியோவையும் ஏமாற்றி விடலாம் என்று நான் நினைத்தேன் “ என்றார்.
ஆத்துமங்களை உண்மையாகவே மனந்திருப்ப வல்லவையாக பாத்ரே பியோவிடம் செய்யப்படும் பாவசங்கீர்த்தனங்கள் இருக்க வேண்டும் என்பது ஆத்துமங்களின் அன்பராகிய நம் ஆண்டவரின் திருச்சித்தமாக இருந்தது. இதை பாத்ரே பியோ மிகச் சரியாக நிறைவேற்ற அவருக்கு உதவும் படியாக, மனிதர்கள் தங்கள் பாவங்களைச் சொல்ல தொடங்கும் முன்னரே அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் மிகத் தெளிவாக அறிந்திருக்கும் கொடையை ஆண்டவர் அவருக்குத் தந்திருக்கிறார்.
ஆன்மாக்களை ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்க்கும் மாபெரும் பணியை ஆண்டவரிடமிருந்து ஆவலோடும் ஏக்கத்தோடும் பெற்றிருந்த நம் அர்ச்சிஷ்ட்டவர், இந்தக் கொடையை மிகச் சிறப்பான விதத்தில் கடவுளின் அதிமிக மகிமைக்காகவும், பாவிகள் உண்மையாகவே மனந்திரும்பும்படியாகவும் அவர் பயன்படுத்தினார். உண்மையில் பாவசங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்திருக்கும் மறு கிறிஸ்துவாகவே பாத்ரே பியோ இருந்தார்.
ஒவ்வொரு பாவசங்கீர்த்தனமும் உண்மையான மனந்திரும்புதலாக இருக்க வேண்டும் என்று பாத்ரே பியோ வற்புறுத்தினார். பாவங்களைப் விளக்கிச் சொல்வதில் நேர்மையற்று இருந்தவர்களை அவர் சகித்துக் கொள்ளவில்லை. சாக்கு போக்குகள் சொன்னவர்களிடமும், உண்மையற்ற முறையில் பேசியவர்களிடமும், இனி ஒருபோதும் பாவம் செய்வதில்லை என்று உறுதியான தீர்மானமின்றி வந்தவர்களிடமும் அவர் கடுமையாக நடந்து கொண்டார். அவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்தவர்கள், தாங்கள் கடவுளின் நீதியாசனத்திற்கு முன்பாக இருப்பது போன்ற அச்சமூட்டும் உணர்வை அனுபவித்ததாகக் கூறினார்கள்.
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !