தேவமாதாவின் வணக்கமாதம் - மே 30

தேவமாதாவுக்குச் செலுத்த வேண்டிய பக்தி வணக்கத்தின் நிலைமையின் பேரில்!

இந்த நிலைமையின் அவசரம்.

கப்பலோட்டுபவன் தான் மேற்கொள்ளும் பிரயாசைக்கு பின்வாங்காமல் கரை சேர்ந்த பின்பு மாத்திரமே இளைப்பாறுகிறதைப் போலவும் போர் செய்பவன் கலங்காது தன் எதிரிகளை வென்று வெற்றி அடைவதைப்போலவும் விவசாயம் செய்பவன் சகல வேலைகளுக்கும் பின்வாங்காமல் அறுப்புக் காலத்தில் தேடின தானியத்தை அடைவது போலவும் தேவமாதாவின் பேரில் பக்தியுள்ளவன் தான் கொண்ட பக்தி வணக்கத்தில் மரணம் மட்டும் நிலைகொண்டால் மாத்திரமே அதனுடைய ஞானப்பிரயோசனம் எல்லாவற்றையும் அடைவானென்பது குன்றாத சத்தியமாம். அதைப்பற்றி புனித லிகோரியுஸ் என்பவர் எழுதி வைத்ததாவது: பரிசுத்த கன்னிகையே! உம்மை நேசித்து மன்றாடி இடைவிடாது உமக்கு ஊழியம் செய்பவனாக உமது இரட்சணியத்தை அடைவேன் என்பது நிச்சயம். ஆனால் சில வேளை உம்மை மறந்து உம்முடைய திரு ஊழியத்தை கைநெகிழ்வேனோ என அஞ்சுகிறேன்.

அதெப்படியெனில், எத்தனையோ பேர் தங்களைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுத்து சுகிர்த செபங்களை செபிக்கவும் நற்கிரிகைகளைச் செய்யவும் பரமநாயகிக்குத் தோத்திரமாக சுத்தபோசனம் ஒரு சந்தி அனுசரிக்கவும் பழகிய பின் பின்வாங்கி எல்லாவற்றையும் விட்டு விட்டு இந்தப் பரமநாயகியின் பேரில் அசட்டையுள்ளவர்களானார்கள். அவர்கள் இந்த நிர்ப்பாக்கிய அந்தஸ்திலே விழுந்த பிறகு அவர்களை தேவமாதா நேசத்தோடு காப்பாற்றி அவர்கள் கெட்டுப் போகாதவாறு கிருபை செய்வார்களென நிச்சயமாக சொல்ல முடியும். உங்களுக்கு பயங்கரமான பொல்லாப்பு வருமோ என்று பயந்து உறுதியோடு தேவமாதாவுக்குச் செய்யும் ஊழியத்தில் பிரமாணிக்கமாய் நடக்கக்கடவீர்கள்.

அதற்கு விக்கினம்.

இந்த நிலைமைக்கு முதல் விக்கினம்: உங்களுடைய உறுதியின்மையும் தைரியக் குறைவுமாகும். உங்கள் இருதயத்தில் ஞான சந்தோஷமும் தேவ சிநேகத்தின் இன்பமும் இருக்குமட்டும் மிகுந்த சுறுசுறுப்போடும் கவனத்தோடும் செய்ய வேண்டியதெல்லாம் செலுத்திக் கொண்டு வருவீர்கள். ஆனால் இந்த ஞான விருப்பமும் சுகிர்த சந்தோஷமும் குறையுமானால் அத்தோடு உங்களுடைய இருதய சுறுசுறுப்பும் மாறிப்போவதுமன்றி நீங்கள் தேவமாதாவைப் பற்றித் தொடங்கின நற்கிரிகைகளையும் விட்டுவிடுவீர்கள். இந்தப் பொல்லாப்பு உங்களுக்கு நேராவண்ணம் நீங்கள் தேவ தாய்க்குச் செய்வோமென்று வாக்களித்த செபங்களையாவது நற்கிரிகைகளையாவது என்ன விக்கினங்கள் நேரிட்டாலும் விடாமலும் குறைக்காமலும் இருக்கக் கடவீர்களாக. 

இரண்டாம் விக்கினம்: பசாசினுடைய கொடுமையாகும். அதெப்படியென்றால், தேவமாதாவின் மூலமாக எண்ணிக்கையில்லாத சனங்கள் நரகத்துக்குத் தப்பி மோட்சத்துக்குச் சேருகிறார்களென்றும், அநேகம் பாவிகள் மனந்திரும்பி பாவத்தை விடுகிறார்களென்றும், தேவ வரங்கள் இவ்வுலகிற்கு வெள்ளம் போல் வருகிறதென்றும் பசாசு அறிந்து அந்தப் பரம நாயகியின்பேரில் வைத்த பக்தி வணக்கத்தைச் சகல மனிதரிடத்தினின்றும் அழிக்கப் பிரயாசைப்படும். ஆகையால் அந்த பசாசின் சோதனைகளுக்கு இடங்கொடாமலும் அது சொல்லும் பொய்யான நியாயங்களைக் கேளாமலும் பின்வாங்காமலும் நடக்கக்கடவீர்கள்.

அதற்குச் செய்ய வேண்டியவைகள்.

தேவமாதாவைத் தோத்தரிக்க வேண்டிய பக்தி வணக்கத்தில் நிலைகொள்ளும்படியாய் அந்தப் பரம நாயகியினுடைய மகத்துவத்தையும் மேன்மையான குணங்களையும் தியானித்து அன்னையால் கொடுக்கப்படுகிற எண்ணிறந்த உபகாரங்களையும் நினைவுபடுத்தி நமக்கு மெய்யான தாயாகிய தேவதாய் நம்மீது கொண்டுள்ள அளவு கடந்த நேசத்தை ஆராய்ந்து நினைக்க வேண்டியதுமல்லாமல், தம்முடைய ஊழியத்தில் நமக்கு உறுதியையும் நிலைமையையும் கொடுக்கும்படியாக அடிக்கடி மன்றாடக் கடவோம். தினந்தோறும் நன்றியறிந்த மனதோடு வாழ்த்திப் புகழ்ந்து வேண்டிக்கொள்ளாது இருப்போமானால் மதி கெட்டுப் புத்திமயங்கி அதிக ஆபத்துக்குள்ளாவோமன்றோ! ஆகையால் ஒவ்வொரு நாளும் பின்வாங்காத சுறுசுறுப்போடு அன்னைக்கு தோஸ்திரம் சொல்லவும் அன்னையின் விசேஷ உதவியை இரந்து மன்றாடவும் நற்கிரிகைகளைக் கண்டு அதன்படி நடக்கவும் கடவோம்.

செபம்.

கிருபையுடைத்தான தாயாரே! இஷ்டப்பிரசாதத்தால் நிறைந்தவர்களே, என் நிலையற்றதனத்தையும் உறுதியின்மையையும் அறிந்திருக்கிறீரே. நீர் என்னைக் கைவிட்டு விடுவீராகில் உம்மை இழந்து போவேன். ஆகையால் நான் உம்மை இழந்து போகாதபடிக்கு என்னைக் கைதூக்கி காப்பாற்றியருளும். என்னை உமது அடைக்கலத்தில் வைத்து உமது பிரமாணிக்கமுள்ள ஊழியர்களில் என்னையும் ஒருவனா(ளா)க தற்காத்தருளும். நான் தவறி விழுவேனாகில் என்னைக் கை தூக்கியருளும். நான் தவறிப்போவேனாகில் எனக்கு உமது நல்ல வழியைக் காட்டியருளும். என் ஆத்துமத்தின் சத்துருக்களோடு போர் தொடுப்பேனாகில் அவைகளை நான் வெல்லும் பொருட்டு எனக்கு உமது உதவியை நல்கியருளும். நான் பலவீனமாய் இருப்பேனாகில் என்னை உறுதிப்படுத்தும் இவ்வுலக சமுத்திரத்தில் மோசம் போகிறதாய் இருப்பேனாகில் என்னை கரை சேரப்பண்ணும். நான் நோயுற்றிருப்பேனாகில், என்னைக் குணப்படுத்தும். கடைசியில் என் மரண வேளையில் என் ஆத்துமத்தைக் கையேற்று மோட்ச பேரின்பம் இராச்சியத்தை அடையச் செய்யும் தாயே.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

தேவமாதாவின் அடைக்கலத்தைத் தேடியவர் சுகிர்தத்தைப் பெறாமலிருப்பவர்களுண்டோ ?

முப்பதாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

இந்தமாதக் கடைசியில் தேவமாதாவைக் குறித்து ஏதாகிலும் சிறப்புக் கொண்டாட்டம் செய்கிறது.

புதுமை

பிரான்ஸ் நாட்டின் லீயே ஸென்னும் ஊரில் தேவமாதாவின் பெயரால் கட்டப்பட்ட ஓர் பிரபலியமான கோவிலுண்டு. அக்கோவிலில் வணங்கப்படுகிற பரிசுத்த கன்னிகையின் திருச்சுரூப் வரலாறு அதிக அற்புதமாய் இருந்தாலும் நிச்சயமாய் இருக்கிறதினால் பரிசுத்த கன்னிமரியாயின் வல்லபமும் மகிமையும் அதிகரிக்கும்படி அதைச் சொல்லிக் காட்டுவோம்.

உயர்ந்த குலத்தில் உதித்தவர்களுமாய் போர் செய்வதில் மகாதீரர்களுமான மூன்று போர்வீரர்கள் ஆயிரத்து நூற்று முப்பத்திரண்டாம் ஆண்டில் துலுக்கரோடு வெகுநாள் யுத்தம் செய்த பிறகு பிடிபட்டுக் கொடிய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். பின்பு துலுக்கருடைய இராயன் அவர்களை எகிப்து தேசத்துக்குக் கூட்டிக் கொண்டுபோய் அவர்களின் வேதத்தை விடுமாறு துன்புறுத்தினான் பொய்யான முகாந்தரங்களைச் சொன்னான்.

தங்களுடைய வேதத்தில் அவர்களைத் திருப்ப தன்னுடைய ஆட்களை அவர்களிடம் அனுப்பினாலும், அவர்கள் துன்பங்களுக்கு அஞ்சாமலும், போலி நியாயங்களுக்கு இடங்கொடாமலும் தங்களுடைய விசுவாசத்தில் அதிக உறுதியாய் இருந்தார்கள். அப்பொழுது இராயன் நான் உங்களுக்கு ஆஸ்தி வெகுமான வரிசைகளைக் கொடுப்பேன். நீங்கள் என் மதத்தில் மாத்திரம் சேருங்கள் என ஆசைவார்த்தைக் காட்டி அவர்களை மோசஞ் செய்ய பார்த்தான். அவனது எண்ணம் வீணானதைக் கண்டு, மீண்டும் அவர்களுக்கு வேறோர் தந்திரத்தைச் செய்யத் துணிந்தான். மிகுந்த ஒழுக்கசீலமுள்ளவளும், மதிநுட்பம் வாய்ந்தவளுமான இஸ்மேரியா என்ற பெயருடைய தன் மகளை அவர்களிடம் அனுப்பி அவர்களை தன் மதத்தில் சேர இணங்கும்படி ஏற்பாடு செய்தான். ஆனால் இந்தப் பக்தியுள்ள போர் வீரர்கள் அவளுடைய வார்த்தைகளுக்கு இடங்கொடாமல் அவளிடத்தில் நம்முடைய பரிசுத்த வேதத்தைப்பற்றியும், கன்னி மகிமை கெடாத பரிசுத்த தேவமாதாவைப்பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். அப்பொழுது அவள், இந்தப் பரிசுத்த கன்னிகையின் ஓர் படத்தை பார்க்க மிகவும் ஆசையுள்ளவளாயிருக்கிறேன் என்றாள். அதற்கு அவர்கள் இந்தச் சிறைச் சாலையில் எங்களுக்கு ஒன்றும் இல்லாததினால் நீர் கேட்டதை எங்களால் செய்ய முடியாது என்றார்கள். அவளோ தனது ஆசையைப் பொறுக்கமாட்டாமல் அவர்களிடத்தில் ஓர் மரக்கட்டையையும் சில எத்தனங்களையும் கொண்டு வந்து கொடுத்து எப்படியாகிலும் தேவமாதாவின் ஓர் ரூபத்தைச் செய்ய வேணுமென்றாள். இந்த போர்வீரர்கள் பரம ஆண்டவள்பேரில் தங்களுடைய முழு நம்பிக்கையை வைத்து தங்களுடைய இக்கட்டுகளில் உதவி செய்யுமாறு மிகுந்த பக்தியோடு மன்றாடினார்கள். மறுநாள் காலையில் விழித்தெழுந்து தங்களுடைய சிறைச்சாலையை நோக்கவே மோட்ச இராக்கினியின் நிகரில்லாத ஓர் பிரகாசம் பொருந்திய சுரூபத்தைக் கண்டார்கள். உடனே அந்த அற்புதமான சுரூபத்தின் முன்பு சாஷ்டாங்கமாய் விழுந்து சர்வேசுரனுக்கு தோத்திரம் செலுத்தினார்கள். அப்பொழுது இராயனின் மகளாகிய இஸ்மேரியா அங்கு அவர்களை சந்திக்க வந்தபோது தேவமாதாவின் திருச்சுரூபத்தின் இன்பமான பிரகாசத்தையும் கண்டு பிரமித்துத் தெண்டனிட்டு அதைப் பக்தியுடன் வணங்கினாள். அன்று இரவு வேளையில் தேவமாதா இம்மூன்று போர்வீரருக்கும் தம்மைக் காண்பித்து அவர்கள் அடிமைப்பட்டிருக்கும் நகரைவிட்டு போகுமாறு பணித்தாள். இதுபோலவே அரசனின் மகளுக்கு தம்மைக் காண்பித்து அவளும் நகரைவிட்டு இம்மூன்று கிறிஸ்தவர்களோடு செல்லுமாறு பணித்தாள். ஆதலால் நால்வரும் மோட்ச இராக்கினியின் விசேஷ உதவியினால் அந்நகரைவிட்டு ஆபத்தின்றி வெளியேறியதுடன் தாங்கள் வைத்திருந்த தேவமாதா சுரூபத்தை மிகுந்த பூச்சியமாய்க் கொண்டு போனார்கள். நகரை விட்டு வெளியேறினாலும் அவர்கள் துலுக்கரின் தேசத்திலிருந்ததன் காரணமாக எந்நேரத்திலும் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கலங்கியவர்களாய் அப்போது என்ன செய்ய வேண்டும் என்று தங்களுக்குள்ளேயே ஆலோசனை செய்து நித்திரை செய்தார்கள். பின்பு எழுந்து பார்க்கும்பொழுது தாங்கள் இந்த இரவு வேளையிலேயே எகிப்து தேசத்திலிருந்து, தங்களுடைய சொந்த பூமியான பிரான்சு தேசத்துக்குத் தேவ வல்லமையால் கூட்டிக்கொண்டு வரப்பட்டதை அறிந்தார்கள். இந்த அற்புதத்தை அவர்கள் கண்டு தங்களுக்கு நிகழ்ந்தவைகள் அனைத்தையும் மற்றவர்களுக்கு அறிவித்தபோது எல்லாரும் மகா அற்புத மென்றார்கள். முன் செல்லப்பட்ட தேவமாதாவின் அற்புதமான சுரூபம் அவர்களோடு இருந்ததினால் அவ்வூர் ஆயர் இந்த அற்புத வரலாறை அறிந்து வேண்டிய பரிசோதனை செய்து இராயன் மகளான இஸ்மேரியாளுக்கு நானஸ்நானம் கொடுத்து மரியாளென்ற பெயரை அவளுக்கிட்டு இவர்கள் நால்வரும் இருந்த இடத்திலேயே தேவமாதாவின் பெயரால் ஒரு கோவிலை, கட்டுவித்து மேற்சொல்லிய சுரூபத்தை அதில் ஸ்தாபித்தார்கள். அந்நாள் துவக்கி இந்நாள் வரையில் அநேக அற்புதங்கள் அவ்விடத்தில் நடந்து வருகின்றன. அக்கோயிலை அரசர்கள் ஆயர்கள் முதலானோர் சந்தித்து அதில் விலையேறப் பெற்ற காணிக்கைகளைச் செலுத்தி வந்தார்கள்.

கிறிஸ்தவர்களே, இப்புதுமையை, நீங்கள் வாசிக்கும் பொழுது தேவமாதாவின் மட்டில் வைத்த பக்தி விசுவாசத்தினால் எவ்வளவு ஞானப்பலன் உண்டென்று அறியக்கடவீர்கள்.