2 நாள் ஆகமம்

அதிகாரம் 01

1 தாவீதின் மகன் சாலமோன் தம் ஆட்சியை நிலைநாட்டினார். அவருடைய கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்து கொண்டு அவரை மிகவும் மேன்மைப்படுத்தினார்.

2 சாலமோன், ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களுக்கும், நீதிபதிகளுக்கும், இஸ்ராயேலரின் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் அனைவர்க்கும் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.

3 அவரும் அவரோடு அங்குக் கூடியிருந்தவர் அனைவரும் காபாவோன் மேட்டுக்குப் போனார்கள். ஆண்டவரின் அடியான் மோயீசன் பாலைவனத்தில் இருந்த போது செய்து வைத்திருந்த உடன்படிக்கைக் கூடாரம் அந்த இடத்திலேயே இருந்தது.

4 ஏற்கனெவே, தாவீது கரியாத்தியாரீமிலிருந்து யெருசலேமுக்குக் கடவுளின் திருப்பேழையைக் கொண்டு வந்திருந்தார். அங்கே அதற்கெனத் தாம் தயாரித்திருந்த இடத்தில் ஒரு கூடாரத்தை அமைத்திருந்தார்.

5 மேலும் கூரின் மகன் ஊரியின் புதல்வன் பெசலேயெலால் கட்டப்பட்டிருந்த வெண்கலப்பீடம், அங்கே ஆண்டவரின் கூடாரத்தின் முன் இருந்தது. சாலமோனும் மக்கள் கூட்டமும் அந்த இடத்திற்குச் சென்றனர்.

6 சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைக் கூடாரத்துக்கு முன்பாக அமைத்திருந்த வெண்கலப் பீடத்தின் மேல் ஏறி, அதன் மேல் ஆயிரம் தகனப் பலிகளைச் செலுத்தினார்.

7 அன்றிரவே கடவுள் அவருக்குத் தோன்றி,

8 நீ விரும்புவதைக் கேள்" என்று கேட்டார். சாலமோன் கடவுளை நோக்கி, "என் தந்தை தாவீதுக்கு நீர் பேரிரக்கம் காட்டினீர்;

9 அவருக்குப்பின் என்னை அரசனாக்கினீர். இப்போது, கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தை தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி மன்றாடுகிறேன்.

10 நீர் நிலத்தின் மணல் போன்ற எண்ணற்ற மக்களுக்கு என்னை அரசனாக்கியிருக்கிறீர். எனவே நான் இம்மக்களை நன்கு நடத்திச் செல்லவேண்டிய ஞானத்தையும் அறிவையும் அடியேனுக்குத் தாரும். ஏனெனில் ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களுக்குத் தகுந்த விதமாய் நீதி வழங்க யாரால் முடியும்?" என்றார்.

11 அப்பொழுது கடவுள் சாலமோனை நோக்கி, "நீ செல்வத்தையும் சொத்தையும் மகிமையையும் உன் பகைவரின் உயிரையும் நீடிய ஆயுளையும் கேளாமல், அரசாளும்படி உன்னிடம் நாம் ஒப்படைத்த நம் மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான ஞானத்தையும் அறிவையுமே எல்லாவற்றிற்கும் மேலாக நீ விரும்பிக் கேட்டதால்,

12 நாம் உனக்கு ஞானத்தையும் அறிவையும் அளிப்போம்; மேலும் உனக்கு முன் இருந்த அரசர்களுக்காவது, உனக்குப் பின் வரப்போகும் அரசர்களுக்காவது இல்லாத செல்வத்தையும் சொத்தையும் மகிமையும் நாம் உனக்குத் தருவோம்" என்றார்.

13 பிறகு சாலமோன் காபாவோன் மேட்டிலிருந்து யெருசலேமிலிருந்த உடன்படிக்கைக் கூடாரத்திற்குத் திரும்பி வந்து இஸ்ராயேலை ஆண்டுவந்தார்.

14 சாலமோன் தேர்களையும் குதிரை வீரர்களையும் கொண்ட குதிரைப்படை ஒன்றையும் தோற்றுவித்தார். அவருக்கு ஆயிரத்து நானூறு தேர்கள் இருந்தன, பன்னிரண்டாயிரம் குதிரை வீரரும் இருந்தனர். அவை தேர் நிறுத்தும் நகர்களிலும், யெருசலேமில் தாம் வாழ்ந்து வந்த இடத்துக்கு அருகேயும் இருந்தன.

15 அரசர் யெருசலேமில் வெள்ளியும் பொன்னும் கற்களைப் போன்றும், கேதுரு மரங்கள் சமவெளிகளில் வளரும் அத்தி மரங்களைப்போன்றும் ஏராளமாய்க் கிடைக்கும்படி செய்தார்.

16 அரசரின் வணிகர்கள் எகிப்தினின்று குதிரைகளை விலைக்கு வாங்கிக்கொண்டு வருவார்கள்.

17 அவர்கள் வாங்கி வந்த தேர் ஒன்றின் விலை அறுநூறு சீக்கல் வெள்ளியாகும்; குதிரை ஒன்றின் விலை நூற்றைம்பது சீக்கல் வெள்ளியாகும். இவர்கள் மூலமே ஏத்தைய அரசர்களும் சீரிய அரசர்களும் இவற்றைப் பெற்று வந்தனர்.

அதிகாரம் 02

1 சாலமோன் ஆண்டவரின் திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தையும் தமக்கு ஓர் அரண்மனையையும் கட்ட முடிவு செய்தார்.

2 சுமைகளைச் சுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும், மலைகளில் கருங்கற்களை வெட்டுவதற்கு எண்பதினாயிரம் பேரையும், அவர்களைக் கண்காணிக்க அறுநூறு பேரையும் நியமித்தார்.

3 தீரின் அரசன் ஈராமிடம் அவர் தூதுவரை அனுப்பி, "என் தந்தை தாவீது தாம் வாழ்வதற்கு அரண்மனையைக் கட்டும்படி தாங்கள் தயைகூர்ந்து அவருக்குக் கேதுரு மரங்களை அனுப்பி வைத்தீரே;

4 அவருக்குச் செய்தது போலவே எனக்கும் செய்யுமாறு வேண்டுகிறேன். நான் என் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டவிருக்கிறேன். அவரது திருமுன் நறுமணத்தூபம் காட்டுவதற்கும், என்றும் இருக்குமாறு காணிக்கை அப்பங்களை வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும் ஓய்வுநாட்களிலும் அமாவாசை நாட்களிலும், எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களின் போதும், இஸ்ராயேலர் தகனப்பலி செலுத்துவதற்கும், அவ்வாலயத்தை அவரது திருப்பெயருக்கு அர்ப்பணிக்க எண்ணியுள்ளேன். இவை எல்லாம் இஸ்ராயேலருக்குக் கட்டளையாகக் கொடுக்கப்பட்டவை.

5 எங்கள் கடவுள் எல்லாத் தெய்வங்களையும் விட மேலானவர். எனவே நான் கட்டப்போகிற ஆலயமும் மிகவும் பெரியதாயிருக்க வேண்டும்.

6 அவரது மகிமைக்கு இணையான கோவிலைக் கட்ட யாரால் முடியும்? விண்ணும் விண்ணகங்களும் அவரைக் கொள்ள இயலாதிருக்க அவருக்கு ஓர் ஆலயம் கட்ட எனக்கு என்ன தகுதி இருக்கிறது? அவரது திருமுன் தூபம் காட்டுவதற்கேயன்றி அவருக்கென ஓர் ஆலயம் எழுப்ப நான் யார்?

7 ஆகவே கற்றறிந்த ஒரு கலைஞனை என்னிடம் அனுப்பும். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் ஊதாநூல், சிவப்புநூல், இளநீலநூல் ஆகியவற்றிலும் வேலைசெய்யும் நிபுணனாகவும் சித்திர வேலை தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும். என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், என்னோடு யூதாவிலும் யெருசலேமிலும் இருக்கிறவர்களுமான கலைஞரோடு சேர்ந்து அவன் வேலை செய்யவேண்டும்.

8 மேலும் லீபானிலிருந்து கேதுரு மரங்களையும் தேவதாரு மரங்களையும் வாசனை மரங்களையும் தாங்கள் எனக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன். ஏனெனில் உம் ஊழியர் லீபானின் மரங்களை வெட்டிப் பழக்கப்பட்டவர்கள் என நான் அறிவேன். என் ஊழியரும் அவர்களோடு சேர்ந்து உழைப்பார்கள்.

9 அவர்கள் எனக்கு ஏராளமான மரங்களைத் தயார் செய்யவேண்டும். ஏனெனில், மிகவும் பெரிய, சிறந்த ஓர் ஆலயத்தைக் கட்ட நான் எண்ணியுள்ளேன்.

10 மரங்களை வெட்டும் உம் ஊழியருக்கு நான் இருபதினாயிரம் மரக்கால் கோதுமையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், இருபதினாயிரம் குடம் திராட்சை இரசமும், இருபதினாயிரம் படி எண்ணெயும் கொடுப்பேன்" என்று சொல்லச் சொன்னார்.

11 அதற்குத் தீரின் அரசன் ஈராம் சாலமோனுக்குப் பதில் எழுதி அனுப்பினார்: "ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு செய்கிறதினால், தங்களை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார்.

12 விண்ணையும் மண்ணையும் படைத்த இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவரே தமக்கு ஓர் ஆலயத்தையும், அரசனுக்கு ஒரு மாளிகையையும் கட்டுவதற்கு ஞானமும் அறிவும் புத்தியும் விவேகமுமுடைய ஒரு மகனைத் தாவீது அரசருக்குத் தந்தருளினார்.

13 எனவே எனக்குத் தந்தை போல் இருந்து வரும் அறிவும் திறமையும் படைத்த ஊராம்- அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்பி வைக்கிறேன்.

14 அவன் தாண் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன். அவன் தந்தை தீர் நாட்டைச் சேர்ந்தவன். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, பளிங்கு, மரம், ஊதாநூல், இளநீலநூல், மெல்லிய சணல்நூல், சிவப்புநூல் ஆகியவற்றில் வேலைசெய்யக் கைதேர்ந்தவன்; எல்லாவித சித்திர வேலைகளையும் அறிந்தவன். அவனது வேலைக்குத் தேவையானவற்றை எல்லாம் அவனே ஊகித்து அறியும் ஆற்றல் படைத்தவன். தங்கள் கலைஞரோடும், தங்களின் தந்தையும் என் தலைவருமான தாவீதின் கலைஞரோடும் இணைந்து வேலை செய்யக்கூடியவன்.

15 எனவே, என் தலைவ, தாங்கள் சொன்னபடி கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், திராட்சை இரசம் முதலியவற்றைத் தங்களின் அடியார்களுக்கு அனுப்பும்.

16 நாங்கள் தங்களுக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபானில் வெட்டி அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாய் யோப்பா வரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை யெருசலேமுக்கு கொண்டு போகிறதோ தங்களின் பொறுப்பாகும்" என்று அதில் எழுதியிருந்தது.

17 பிறகு தம் தந்தை தாவீதைப் போன்று சாலமோனும் இஸ்ராயேல் நாட்டில் வாழ்ந்து வந்த அந்நியரைக் கணக்கிட்டார். அவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூறு.

18 அவர்களுள் எழுபதினாயிரம் பேரைச் சுமை சுமக்கவும், எண்பதினாயிரம் பேரை மலையில் கல்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறு பேரை மக்களின் வேலையை மேற்பார்வையிடவும் அவர் அமர்த்தினார்.

அதிகாரம் 03

1 பின்பு சாலமோன் யெருசலேமில் தம் தந்தை தாவீதுக்கு ஆண்டவரால் காட்சியில் காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் எபுசையனான ஒர்னானின் களத்தில் ஆண்டவருக்கு ஆலயம் கட்டத் தொடங்கினார். தாவீதே அந்த இடத்தை ஆயத்தம் செய்திருந்தார்.

2 தம் ஆட்சியின் நான்காம் ஆண்டு, இரண்டாம் மாதம், இரண்டாம் நாள், சாலமோன் வேலையைத் தொடங்கி வைத்தார்.

3 கடவுளின் ஆலயத்திற்குச் சாலமோன் போட்ட அடித்தளம் அக்கால அளவையின்படி அறுபது முழ நீளமாயும், இருபது முழ அகலமாயும் இருந்தது.

4 முகப்பில் இருந்த மண்டபத்தின் நீளம் ஆலயத்தின் அகலத்தைப் போல் இருபது முழமும், அதன் உயரம் நூற்றிருபது முழமுமாய் இருந்தன. சாலமோன் அதன் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் வேய்ந்தார்.

5 ஆலயத்தின் நடுப்பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும்பொன் தகட்டால் வேய்ந்தார். அதன்மேல் பேரீந்து மடலைப் போன்றும், ஒன்றுடனொன்றும் பிணைக்கப்பட்ட சங்கலிகளைப் போன்றும் ஒருவித வேலைப்பாடுகளைச் செய்தார்.

6 தளத்தை மிகவும் விலையுர்ந்த பளிங்குக் கற்களால் பாவி அழகுபடுத்தினார். பார்வாயீமினின்று கொண்டு வரப் பெற்ற பொன்னே பயன்படுத்தப் பட்டது.

7 கோவிலின் உத்திரங்களையும் நிலைகளையும் சுவர்களையும் கதவுகளையும் அப்பொன் தகடுகளால் வேய்ந்தார். சுவர்களில் கெருபீம்களின் உருவங்களைச் செதுக்கி வைத்தார்.

8 பிறகு கோயிலின் உள் தூயகத்தைக் கட்டினார். அதன் நீளம் ஆலயத்தின் அகலத்தைப் போல் இருபது முழம்; அதன் அகலமும் இருபது முழமே. அதைச் சுமார் அறுநூறு தாலந்து பெறுமான பொன் தகடுகளால் வேய்ந்தார்.

9 ஆணிகளெல்லாம் பொன்னாலேயே செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஒவ்வொரு ஆணியும் ஐம்பது சீக்கல் பொன் நிறையுள்ளதாய் இருந்தது. மேல் அறைகளையும் சாலமோன் பொன்னால் வேய்ந்தார்.

10 உள்தூயகத்தில் இரு கெருபீம்களின் உருவங்களையும் செய்து வைத்து அவற்றைப் பொன்தகட்டாலே வேய்ந்தார்.

11 அவற்றின் இறக்கைகளின் மொத்தநீளம் இருபது முழம்: அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம்; அது ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழமே. அது மற்றக் கெருபீமின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது.

12 அவ்வாறே இரண்டாவது கெருபீமின் அளவும்: அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம். அவ்விறக்கை ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையும் ஐந்து முழமே. அது முதல் கெருபீமின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது.

13 இவ்வாறு அகன்று விரிந்திருந்த அந்தக் கெருபீம்களின் இறக்கைகளின் நீளம் மொத்தம் இருபது முழம். அவை தம் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தன. அவை ஆலயத்தின் நடுப்பகுதியை நோக்கிய வண்ணமாய் இருந்தன.

14 சாலமோன் இளநீல நூலாலும் ஊதா நூலாலும் சிவப்பு நூலாலும் மெல்லிய சணல் நூலாலும் ஒரு திரையை நெய்யச் செய்தார். அதில் கெருபீம்களின் உருவங்கள் பொறிக்கப் பெற்றிருந்தன.

15 ஆலயக் கதவுகளுக்கு முன் முப்பத்தைந்து முழ உயரமான இரண்டு தூண்களை நாட்டினார். அவற்றின் போதிகைகளின் உயரம் ஐந்து முழம்.

16 உள் தூயகத்தில் போடப்பட்டுள்ள சங்கிலிகளைப் போன்ற வேலைப்பாடுகளைச் செய்து தூண்களின் போதிகைகளின் மேல் அவற்றைப் பற்ற வைத்தார். மேலும் நூறு மாதுளம் பழங்களைச் செய்து அவற்றைச் சிறிய சங்கிலிகளில் தொங்க விட்டார்.

17 அந்தத் தூண்களை ஆலய வாயிலின் முன் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலுமாக நாட்டி வைத்தார். வலப்பக்கத்துத் தூணுக்கு யாக்கீன் என்றும், இடப்பக்கத்துத் தூணுக்குப் போவாஸ் என்றும் பெயரிட்டார்.

அதிகாரம் 04

1 மேலும் சாலமோன் இருபது முழ நீளமும் இருபது முழ அகலமும், பத்து முழ உயரமுமுள்ள ஒரு வெண்கலப் பலிபீடத்தைக் கட்டினார்.

2 கடல் என்னும் தொட்டியையும் அவர் வார்ப்பித்தார். அது வட்டவடிவமானது. அதன் அகலம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம்.

3 அதன் கீழ் சுற்றிலும் எருதுகளின் உருவங்கள் இருந்தன. அதைச் சுற்றிலும் பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. இவை தொட்டியோடு ஒன்றாகவே வார்க்கப் பட்டிருந்தன.

4 அத்தொட்டி பன்னிரு எருதுகளின் மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. எருதுகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது. தொட்டியின் களம் ஒருச்சாண்.

5 அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப் போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

6 சாலமோன் பத்துக் கொப்பரைகளையும் செய்தார்; ஐந்தை வலப்பக்கத்திலும், ஐந்தை இடப்பக்கத்திலும் வைத்தார். தகனப் பலிப் பொருளெல்லாம் அவற்றில் கழுவப்பட்டன. கடல் தொட்டியோ குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக வைக்கப் பட்டிருந்தது.

7 மேலும், பத்துப் பொன்விளக்குத் தண்டுகளையும் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு செய்தார். ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாக ஆலயத்தில் வைத்தார்.

8 பத்து மேசைகளைச் செய்து ஐந்தை வலப்புறமும், ஐந்தை இடப்புறமுமாக ஆலயத்தில் வைத்தார். நூறு பொற்கிண்ணங்களையும் செய்தார். குருக்களின் வளாகத்தையும்,

9 பெரிய வளாகத்தையும் கட்டினார். ஆலயத்தின் கதவுகளை வெண்கலத் தகட்டால் வேய்ந்தார்.

10 கடல் தொட்டியை ஆலயத்தின் வலப்பக்கம் தென்கிழக்கே வைத்தார்.

11 ஊராம் செப்புப் பாத்திரங்களையும் சாம்பலை எடுக்கத்தக்க பெரிய முட்கரண்டிகளையும் கிண்ணங்களையும் செய்தான். இவ்வாறு அரசர் செய்யச் சொல்லியிருந்த ஆலய வேலைகளை எல்லாம் அவன் செய்து முடித்தான்.

12 அவையாவன: இரு தூண்கள், அவற்றின் மேல் இரு போதிகைகள், குமிழ்கள், அக்குமிழ்களை மூட இரண்டு முனையின் மேல் வலைப்பின்னல்கள்,

13 மாதுளம் பழங்களைப் போன்ற நானூறு குமிழ்கள், இரு வலைப்பின்னல்களுமாம். அவை ஒவ்வொன்றிலும் மாதுளம் பழங்கள் இரண்டு வரிசைகளில் வைக்கப் பட்டிருந்தன. வலைப் பின்னல்களோ தூண்களின் போதிகைகளையும் குமிழ்களையும் மூடியிருந்தன.

14 கொப்பரைகள், இவற்றைத் தாங்கும் ஆதாரங்கள்,

15 ஒரு கடல் தொட்டி, அதன்கீழ் இருந்த பன்னிரு எருதுகள், செப்புப்பாத்திரங்கள்,

16 பெரிய முட்கரண்டிகள், கிண்ணங்கள் முதலியன. தந்தையைப் போன்று இருந்த ஊராம்- அபி ஆண்டவரின் ஆலயத்துக்கு வேண்டிய தட்டு முட்டுகளைக் கலப்பற்ற வெண்கலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தான்.

17 அரசர் யோர்தானின் அக்கரையில் சொக்கோத்துக்கும் சரேதத்தாவுக்கும் நடுவிலுள்ள சமவெளியில் அவற்றை வார்ப்பித்தார்.

18 அவை எண்ணிலடங்கா. அவற்றைச் செய்வதற்கு அளவிடற்கரிய வெண்கலம் செலவானது.

19 சாலமோன் ஆலயத்துக்கு வேண்டிய தட்டு முட்டுகள் எல்லாவற்றையும், பொற்பீடத்தையும் காணிக்கை அப்பங்களை வைக்கும் மேசைகளையும்,

20 உள்தூயகத்திற்கு முன்பாக முறைப்படி கொளுத்தவேண்டிய விளக்குகளையும், அவற்றின் தண்டுகளையும், பசும் பொன்னால் செய்தார்.

21 அதேபோன்று பூக்களையும், விளக்குகளையும், இடுக்கிகளையும் பசும்பொன்னால் செய்தார்.

22 நறுமண எண்ணெய்ச் சிமிழ்களையும் தூபக் கலசங்களையும் கிண்ணங்களையும் சிறிய உரல்களையும் பசும் பொன்னால் செய்தார். உள்தூயகக் கதவுகளில் வேலைப்பாடுகளை அமைத்து, ஆலய வெளிவாயில்களைத் தங்கத்தால் செய்தார். இவ்வாறு சாலமோன் செய்து வந்த ஆண்டவரின் ஆலய வேலை முடிவுற்றது.

அதிகாரம் 05

1 சாலமோன் தம் தந்தை தாவீது கடவுளுக்கு நேர்ந்து கொண்டிருந்தவற்றை எல்லாம் கொண்டு வந்தார். பொன், வெள்ளியையும் எல்லாவிதத் தட்டு முட்டுகளையும் ஆலயத்தின் கருவூலங்களிலே வைத்தார்.

2 பின்பு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சீயோன் என்ற தாவீதின் நகரிலிருந்து கொண்டு வருவதற்காக இஸ்ராயேலின் மூப்பர்களையும், குலத்தலைவர்கள் எல்லாரையும், இஸ்ராயேல் மக்களின் குடும்பத்தலைவர்களையும் யெருசலேமில் கூடிவரக் கட்டளையிட்டார்.

3 அவ்வாறே இஸ்ராயேலின் எல்லா மனிதரும் ஏழாம் மாதத்தின் திருவிழாவின் போது அரசரிடம் கூடி வந்தனர்.

4 இஸ்ராயேலின் மூப்பர் அனைவரும் வந்த பின்பு லேவியர்கள் திருப்பேழையை எடுத்து,

5 அதையும் அத்திருப் பேழையிலிருந்த தட்டு முட்டுகளையும் கொண்டு வந்தனர். திருவிடத்துத் தட்டு முட்டுகளையோ குருக்களும் லேவியர்களும் கொண்டு வந்தனர்.

6 அரசர் சாலமோனும் இஸ்ராயேல் மக்களும் திருப்பேழைக்கு முன்பாகக் கூடியிருந்த அனைவரும் எண்ணற்ற கடாக்களையும் மாடுகளையும் பலியிட்டனர்.

7 அவ்வாறே குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஆலயத்தின் உள்தூயகத்திற்குக் கொண்டு வந்து அதற்குத் குறிக்கப்பட்ட இடமாகிய கெருபீம்களின் இறக்கைகளுக்குக் கீழே வைத்தனர்.

8 அதாவது கெருபீம்கள் திருப்பேழை வைக்கப்பட்ட இடத்தின் மேல் தங்கள் இறக்கைகளை விரித்து, அதையும் அதன் தண்டுகளையும் மூடிக்கொண்டிருக்கும்படி அவற்றை வைத்தனர்.

9 திருப்பேழையைத் தூக்குவதற்கு உதவும் தண்டுகள் சற்று நீளமாய் இருந்ததால் அவற்றின் முனைகள் திருப்பேழைக்கு வெளியே சிறிது தெரிந்தன. ஆனால் கொஞ்சம் வெளியே இருந்தவர்களுக்கு அவை புலப்படா. திருப்பேழை இன்றுவரை அவ்விடத்திலேயே இருக்கிறது.

10 இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, ஆண்டவர் ஓரேபிலே அவர்களுக்குத் தமது திருச்சட்டத்தைக் கொடுத்த போது, மோயீசன் அப் பேழையில் வைத்திருந்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அத் திருப்பேழைக்குள் இல்லை.

11 குருக்கள் திருவிடத்திலிருந்து வெளியே வந்த போது அவர்கள் அத்தனை பேரும் புனிதப் படுத்தப் பட்டிருந்தனர். இறைவழிபாட்டு முறைமைகளும், பிரிவின் முறைகளும் இன்னும் குறிக்கப்படவில்லை.

12 லேவியர்களும், பாடகர்களும், அதாவது ஆசாப், கேமன், இதித்தூன் என்போரின் குழுவினரும், அவர்களின் புதல்வர்களும் சகோதரர்களும் மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டு கைத்தாளங்களையும் தம்புருகளையும் ஒலித்துப் பாட்டுப் பாடி ஆர்ப்பரித்துப் பலிபீடத்தின் கீழ்த் திசையில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களோடு நூற்றிருபது குருக்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டிருந்தனர்.

13 அவர்கள் ஒரே குரலாய் எக்காளம் ஊதி, கைத்தாளம் கொட்டி, கிண்ணாரம் முதலிய பலவித இசைக் கருவிகளை இசைத்துப் பாட்டுப்பாடி ஆர்ப்பரித்த ஓசை வெகுதூரம் கேட்டது. அப்பொழுது, "ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். அவர்தம் இரக்கம் என்றென்றும் உள்ளது" என்று பாடகர் ஆண்டவருக்குப் புகழ்பாடினர். அவ்வேளையில் மேகம் ஆண்டவரின் ஆலயத்தை நிரப்பிற்று.

14 அதன் பொருட்டு குருக்கள் அங்கு நின்று, திருப்பணி புரிய முடியவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மகிமை அவரது ஆலயத்தை நிரப்பிற்று.

அதிகாரம் 06

1 அப்பொழுது சாலமோன், "மேகத்திரைக்குள் வாழ்வோம்' என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.

2 நானோ அவர் என்றென்றும் தங்கும்படி அவரது திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தை எழுப்பியுள்ளேன்" என்று சொன்னார்.

3 பின் மக்கள் பக்கம் திரும்பி அவர்கள் அனைவர்க்கும் ஆசீர் அளித்தார். அவர்கள் அனைவரும் சாலமோன் சொல்லவிருந்ததைக் கேட்கும்படி கவனமாய் இருந்தார்கள்.

4 அவர் சொன்னதாவது, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக! ஏனெனில் அவர் என் தந்தை தாவீதுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

5 அதாவது, 'நாம் எகிப்து நாட்டிலிருந்து நம் மக்களை மீட்டுக் கொணர்ந்த நாள்முதல், எமது திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தை எழுப்புமாறு நாம் இஸ்ராயேலின் யாதொரு நகரையும் தேர்ந்து கொள்ளவில்லை. நம் மக்கள் இஸ்ராயேலரை ஆள நாம் வேறு எவரையும் தேர்ந்து கொள்ளவில்லை.

6 நமது புகழ் விளங்கும் இடமாக யெருசலேமையும், எம் மக்கள் இஸ்ராயேலை ஆளத் தாவீதையுமே தேர்ந்து கொண்டோம்' என்பதாம்.

7 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் என் தந்தை தாவீதிற்கு இருந்தது.

8 ஆண்டவர் அவரை நோக்கி, 'எம்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற உன் விருப்பம் போற்றற்குரிதே!

9 ஆனால் நீ அதைக் கட்டமாட்டாய். உனக்குப் பிறக்கும் உன் மகனே அதைக் கட்டுவான்' என்றார்.

10 இவ்வாறு தமது வாக்குறுதியை ஆண்டவர் இப்போது நிறைவேற்றியுள்ளார். முன்பே ஆண்டவர் கூறியிருந்தது போல் என் தந்தை தாவீதுக்குப் பின், நான் இஸ்ராயேலின் அரியணையில் அமர்ந்து இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டியுள்ளேன்.

11 ஆண்டவர் இஸ்ராயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைக் கொண்டுள்ள திருப்பேழையையும் இவ்வாலயத்தில் கொண்டு வந்து வைத்துள்ளேன்" என்றார்.

12 இவ்வாறு சாலமோன் ஆண்டவரின் பலி பீடத்திற்கு முன்பாக இஸ்ராயேல் மக்கள் அனைவர் முன்னிலையிலும் நின்று தம் கைகளை விரித்தார்.

13 சாலமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான வெண்கலப் பிரசங்க மேடை ஒன்று செய்து அதை ஆலயத்தின் நடுவில் வைத்திருந்தார். அதன்மேல் அவர் நின்று கொண்டிருந்தார். பிறகு இஸ்ராயேல் மக்கள் அனைவர் முன்னிலையிலும் முழந்தாளிட்டுத் தம் கைகளை விண்ணை நோக்கி உயர்த்தி,

14 மீண்டும் சொல்லத் தொடங்கினதாவது: "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, விண்ணிலும் மண்ணிலும் உமக்கு இணையான இறைவன் இல்லை. முழு இதயத்தோடும் உம்மைப் பின்பற்றும் உம் அடியார்கள் மேல் நீர் அன்பு கூர்ந்து உமது உடன்படிக்கையைக் காத்து வருகிறீர்.

15 என் தந்தையும் உம் ஊழியனுமான தாவீதுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நீர் நிறைவேற்றியுள்ளீர். உம் வாயினால் வாக்களித்ததை உம் கையினால் இன்று செய்து விட்டீர்.

16 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தையும் உம் அடியானுமான தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியருளும். 'நீ நம் முன்னிலையில் நடந்து வந்துள்ளது போல், உன் மக்களும் நமது திருச்சட்டத்தின் வழியைப் பின்பற்றி நடப்பார்களாகில், இஸ்ராயேலின் அரசு உன் சந்ததியை விட்டு என்றும் நீங்காது' என்று நீர் வாக்களித்துள்ளீர் அன்றோ?

17 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியருளும்.

18 கடவுள் உண்மையாகவே மனிதரோடு மண்ணில் வாழ்வது நம்பக்கூடியதா? விண்ணும் விண்ணகங்களும் உம்மைக் கொள்ளாதிருக்க, நான் கட்டியுள்ள இந்த ஆலயம் உம்மை எவ்வாறு கொள்ளக்கூடும்?

19 என் கடவுளாகிய ஆண்டவரே, அடியேனுடைய விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டருளும். அடியேனுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்த்தருளும்.

20 'நம் திருப்பெயர் மன்றாடப்படும்' என்று நீர் வாக்களித்திருந்த இந்த இடத்தின் மேல் இரவும் பகலும் உமது அருட் பார்வை இருக்கட்டும்.

21 உம் ஊழியனான நானும் உம் மக்களாகிய இஸ்ராயேலரும் இவ்விடத்தில் இப்போது செய்யும் விண்ணப்பத்திற்குச் செவிமடுத்தருளும். இதற்காகவே நான் இவ்வாலயத்தை கட்டினேன். இங்கு யார் வந்து மன்றாடினானலும், உமது உறைவிடமான விண்ணகத்திலிருந்து அவன் மேல் கருணை கூர்ந்து அவர்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

22 தனக்குத் தீங்கு இழைத்த தன் அயலானை ஒருவன் சபித்து, ஆலய பீடத்தின் முன் அவனை ஆணையிடச் செய்தால்,

23 விண்ணிலிருக்கிற நீர் அதைக்கேட்டு, உம் அடியாருக்கு நீதி வழங்கும்; தீயவனுடைய நடத்தைக்கேற்ப, அவனுக்குத் தண்டனையும், குற்றமற்றவனின் மாசின்மைக்கேற்ப, அவனுக்கு வெகுமதியும் அளித்தருளும்.

24 உம் மக்களாகிய இஸ்ராயேலர் உமக்கு எதிராய்ப் பாவம் செய்ததனால் தங்கள் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்டு, உம் பக்கம் மனம் திரும்பித் தவம் புரிந்து, உமது திருப்பெயரைக் கூவியழைத்து இந்த ஆலயத்திலே உம்மை மன்றாட வந்தால்,

25 நீர் விண்ணிலிருந்து உம் மக்கள் இஸ்ராயேலரின் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களது பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்களின் முன்னோருக்கும் நீர் கொடுத்த நாட்டுக்கு அவர்கள் திரும்பச் செய்யும்.

26 மக்களின் பாவங்களுக்குத் தண்டனையாக வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும் போது, அவர்கள் உம்மை வேண்ட இவ்வாலயத்துக்கு வந்து உமது திருப் பெயரை ஏற்றுக்கொண்டு தங்கள் பாவ வழிகளை விட்டு மனந்திரும்புவார்களாகில்,

27 ஆண்டவரே, விண்ணிலிருந்து அதைக் கேட்டு உம் அடியார்களின் பாவங்களையும், உம் மக்கள் இஸ்ராயேலரின் பாவங்களையும் மன்னித்து, அவர்கள் நடக்க வேண்டிய நன்னெறியை அவர்களுக்குக் கற்பித்தருளும்; உம் மக்களுக்குச் சொந்தமாக நீர் கொடுத்த நாட்டில் மழை பெய்யக் கட்டளையிட்டருளும்.

28 நாட்டில் பஞ்சம், கொள்ளைநோய், வறட்சி, சாவு, வெட்டுக்கிளி, கம்பளிப்பூச்சி முதலியன உண்டாகிற போதும், எதிரிகள் நாட்டைப் பாழாக்கி நகர்களைப் பிடிக்க முற்றுகையிடுகிற போதும், எவ்வித வாதையோ நோயோ வருகிற போதும்,

29 உம் மக்கள் இஸ்ராயேலரில் எவனாவது தன் வாதையையும் நோயையும் உணர்ந்து இவ்வாலயத்திற்கு வந்து, கைகளை விரித்து வேண்டினால்,

30 உமது உறைவிடமான விண்ணிலிருந்து அவனுக்குச் செவிமடுத்து அவனை மன்னித்தருளும். ஒவ்வொருவனுக்கும் அவனவன் நடத்தைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு செய்வீராக. ஏனெனில் நீர் ஒருவரே மனிதரின் உள்ளத்தை அறிகிறவர்!

31 நீர் இவ்வாறு செய்தால் அன்றோ அவர்கள் உமக்கு அஞ்சி, நீர் எங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் தங்கள் வாழ்நாள் முழுவதும் உம் வழிகளில் நடப்பார்கள்?

32 உம் மக்களான இஸ்ராயேலர் அல்லாத புறவினத்தாருள் ஒருவன் உமது மாண்புமிகு பெயரைக் குறித்தும் உமது பேராற்றல், பரிவிரக்கத்தைக் குறித்தும் தொலை நாட்டிலிருந்து வந்து இந்த ஆலயத்தில் உம்மைத் தொழுது மன்றாடினால்,

33 உமது நிலையான உறைவிடமான விண்ணிலிருந்து அவன் மன்றாட்டுக்குச் செவிகொடுத்து அவன் கேட்பதையெல்லாம் கொடுத்தருளும். இதனால் உலக மக்கள் அனைவரும் உம் திருப்பெயரை அறிந்து, உம் மக்கள் இஸ்ராயேலரைப் போல் அவர்களும் உமக்கு அஞ்சி நடப்பர். இவ்வாறு நான் கட்டியுள்ள இந்த ஆலயத்தில் உமது திருப்பெயரே கூவி அழைக்கப்படுகிறது என்று அவர்கள் அறியும்படி செய்தருளும்.

34 “உம் மக்கள் நீர் காட்டின வழியிலே நடந்து தங்கள் எதிரிகளோடு போரிடச் செல்லும் போது, நீர் தேர்ந்து கொண்ட இந்நகருக்கும், உமது திருப்பெயருக்கு நான் கட்டியுள்ள இவ்வாலயத்துக்கும் நேராக நின்று அவர்கள் உம்மைத் தொழுது மன்றாடினால்,

35 நீர் விண்ணிலிருந்து அவர்களது விண்ணப்பத்தையும் வேண்டுதல்களையும் ஏற்று, அவர்களுக்கு நீதி செலுத்தியருளும்.

36 ”பாவம் செய்யாத மனிதனே இல்லை. ஆதலால் ஒருவேளை அவர்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தாலும் அதன்பொருட்டு நீர் அவர்கள் மேல் சினம் கொண்டு அவர்களை எதிரிகளின் கையில் ஒப்புவிக்க எதிரிகள் அவர்களைச் சிறைபிடித்து, அண்மையிலோ சேய்மையிலோ இருக்கிற நாட்டிற்குக் கொண்டு போனால்,

37 தாங்கள் சிறையிருக்கும் நாட்டில் மனம் திரும்பித் தவம் புரிந்து அங்கேயே உம்மை நோக்கி, 'நாங்கள் பாவம் செய்தோம்; அக்கிரமம் புரிந்தோம்; அநீதியாய் நடந்ததோம்' என்று சொல்லி,

38 தங்கள் முழு இதயத்தோடும் முழு மனத்தோடும் உம்மை நோக்கி மன்றாடினாலும், நீர் அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த நாட்டின் திசையை நோக்கியாகிலும், நீர் தேர்ந்துகொண்ட இந்நகருக்கும், நான் உமது திருப்பெயருக்குக் கட்டியுள்ள இந்த ஆலயத்திற்கும் நேராகவுமாகிலும் நின்று உம்மைத் தொழுது வேண்டிக்கொண்டாலும்,

39 நீர் உமது நிலையான உறைவிடமான விண்ணிலிருந்து அவர்களது மன்றாட்டைக் கேட்டு அவர்களுக்கு நீதி வழங்கியருளும். பாவிகளான உம் மக்களை மன்னித்தருளும்.

40 நீரே என் கடவுள். எனவே இவ்வாலயத்தில் மன்றாடுவோர் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பி அவர் தம் மன்றாட்டிற்குச் செவிகொடுத்தருளும்.

41 கடவுளாகிய ஆண்டவரே, எழுந்தருளும்! உமது உறைவிடத்திற்கு வந்தருளும்! உமது பேராற்றல் விளங்கும் உம் திருப்பேழையும் எழுந்து வரட்டும்! கடவுளான ஆண்டவரே, உம் குருக்கள் மீட்பின் ஆடையை அணிந்து கொள்ளட்டும். உம் புனிதர்கள் நன்மைகள் பெற்று மகிழட்டும்.

42 கடவுளாகிய ஆண்டவேர, நீர் அபிஷுகம் செய்துள்ள என்னைப் புறக்கணியாதேயும். உம் ஊழியன் தாவீதுக்கு நீர் காட்டின கருணையை நினைவுகூர்ந்தருளும் என்று மன்றாடினார்.

அதிகாரம் 07

1 சாலமோன் மன்றாடி முடிந்ததும், நெருப்பானது விண்ணின்று இறங்கி, தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் எரித்து விட்டது. மேலும் ஆண்டவரின் மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.

2 அதனால் குருக்கள் ஆண்டவரின் ஆலயத்துள் நுழைய முடிய வில்லை.

3 நெருப்பு இறங்குகிறதையும், ஆண்டவரது மகிமை ஆலயத்தின் மேல் தங்குகிறதையும் இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் கண்ட போது தரையில் நெடுங்கிடையாய் விழுந்து பணிந்து, "ஆண்டவர் நல்லவர்; அவர் தம் இரக்கம் என்றும் உள்ளது" என்று சொல்லி ஆண்டவரைப் போற்றி புகழ்ந்தனர்.

4 அப்போது அரசரும் எல்லா மக்களும் சேர்ந்து ஆண்டவரின் திருமுன் பலிகளைச் செலுத்தினர்.

5 அதாவது சாலமோன் அரசர் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும் லட்சத்து இருபதினாயிரம் ஆட்டுக் கடாக்களையும் பலியிட்டார். இவ்வாறு அரசரும் மக்களும் கடவுளின் ஆலயத்தை அபிஷுகம் செய்தனர்.

6 குருக்கள் திருப்பணி புரிவதிலும், லேவியர்கள் ஆண்டவருக்குத் தோத்திரமாகத் தாவீது அரசர் இயற்றியிருந்த பாடல்களைக் கிண்ணாரங்களில் வாசித்துப் பாடுவதிலும் ஈடுபட்டிருந்தனர். "ஆண்டவரின் இரக்கம் என்றும் உள்ளது" என்று சொல்லி அவர்கள் தாவீது அரசர் இயற்றியிருந்த துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் குருக்கள் இஸ்ராயேல் மக்கள் முன்னிலையில் நின்று எக்காளம் ஊதிக் கொண்டிருந்தார்கள்.

7 ஆலய முக மண்டபத்தின் நடுப் பாகத்தையும் சாலமோன் அபிஷுகம் செய்து, அங்கே தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளின் கொழுப்பையும் பலி செலுத்தினார். ஏனெனில் அவர் செய்திருந்த வெண்கலப் பலிபீடம் தகனப்பலி, போசனப்பலி, சமாதானப் பலிகளின் கொழுப்பு முதலியவற்றை எல்லாம் கொள்ளவில்லை.

8 இவ்வாறு சாலமோன் ஏழு நாள் திருவிழாக் கொண்டாடினார். இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் அவரோடு சேர்ந்து விழாக் கொண்டாடினார்கள். ஏமாத்தின் எல்லை முதல் எகிப்தின் நீரோடை வரை வாழ்ந்து வந்த இஸ்ராயேல் அனைவருமே பெரும் திரளாய் அங்குக் கூடி வந்திருந்தனர்.

9 எட்டாம் நாளை அவர்கள் பெரும் திருநாளாகக் கொண்டாடினர். ஏனெனில் ஏழு நாளளவாக அவர்கள் பலிபீடத்தை அபிஷுகம் செய்து அந்த ஏழு நாளும் திருவிழாக் கொண்டாடி வந்திருந்தனர்.

10 ஏழாம் மாதத்தின் இருபத்து மூன்றாம் நாள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போகும்படி மக்களுக்குச் சாலமோன் கட்டளையிட்டார். ஆண்டவர் தாவீதுக்கும் சாலமோனுக்கும் தம் மக்களான இஸ்ராயேலருக்கும் செய்திருந்த நன்மைகளை எண்ணி களிப்புற்று மன மகிழ்ச்சியுடன் அவர்கள் வீடு ஏகினர்.

11 சாலமோன் இவ்வாறு ஆண்டவரின் ஆலயத்தையும் அரண்மனையையும் தாம் எண்ணியவாறே வெற்றிகரமாய்க் கட்டி முடித்தார்.

12 ஓர் இரவில் ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "நாம் உன் விண்ணப்பத்தை ஏற்று, இவ்விடத்தை நமக்குப் பலியிடும் ஆலயமாகத் தேர்ந்து கொண்டோம்.

13 நாம் மழை பெய்யாதவாறு வானத்தை அடைத்தாலும், நாட்டின் பயிரை அழிக்க வெட்டுக் கிளிகளுக்குக் கட்டளையிட்டாலும், எம் மக்களுக்குள் கொள்ளை நோயை அனுப்பினாலும்,

14 நமது திருப் பெயரைக் கொண்டிருக்கும் நம் மக்கள் தங்களையே தாழ்த்தி, நமது திருமுன் வந்து தங்கள் தீய வழிகளை விட்டு விலகித் தவம் புரிந்து மன்றாடினால், நாம் விண்ணிலிருந்து அவர்களது விண்ணப்பத்தைக் கேட்டருள்வோம்; அவர்களது பாவத்தை மன்னித்து, அவர்களது நாட்டை நலன்களால் நிரப்புவோம்.

15 இங்கு வந்து மன்றாடுபவன் மேல் நமது கருணைக் கண்களைத் திருப்பி, அவனது மன்றாட்டிற்குச் செவிமடுப்போம்.

16 ஏனென்றால் நமது திருப்பெயர் இவ்வாலயத்தில் என்றென்றும் விளங்கும்படி நாமே இவ்விடத்தைத் தேர்ந்து, அதைப் பரிசுத்தப்படுத்தியுள்ளோம். நாம் எந்நாளும் இதன் மேல் கண்ணும் கருத்துமாய் இருப்போம்.

17 உன் தந்தை தாவீதைப் போல் நீயும் நம் திருமுன் நடந்து, நமது சொல்லுக்குக் கீழ்ப்படிந்து எம் கட்டளைகளையும் நீதி முறைமைகளையும் பின்பற்றி வருவாயாகில்,

18 நாம் உனது அரசை நிலைநிறுத்துவோம். முன்பு நாம் உன் தந்தை தாவீதை நோக்கி, 'இஸ்ராயேலின் அரசு உன் சந்ததியை விட்டு என்றும் நீங்காது' என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

19 நீங்கள் நம்மை விட்டு விலகி நாம் உங்களுக்குக் கொடுத்த சட்டங்களையும் கட்டளைகளையும் மீறி, அந்நிய தெய்வங்களைத் தொழுது அவர்களுக்குப் பணிவிடை செய்து வருவீர்களேயானால்,

20 நாம் உங்களுக்குக் கொடுத்துள்ள நமது நாட்டிலிருந்து உங்களை அகற்றி விடுவோம்; நமது திருப்பெயர் விளங்கும்படி நாம் அபிஷுகம் செய்துள்ள இவ்வாலயத்தை நமது பார்வையினின்று அகற்றி அதை எல்லா இனத்தவர்களுக்கும் உவமையாகவும் அடையாளமாகவும் வைப்போம்.

21 அப்பொழுது அவ்வழியே செல்பவர்களுக்கெல்லாம் அது ஒரு பழமொழியாய் இருக்கும். அவர்கள் அதைக் கண்டு வியந்து, 'ஆண்டவர் இந்நாட்டிற்கும் இவ்வாலயத்திற்கும் இவ்வாறு செய்தது ஏன்?' என்று வினவுவார்கள்.

22 அதற்கு மக்கள், 'தங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுக் கொணர்ந்த தம் முன்னோருடைய கடவுளாகிய ஆண்டவரை விட்டு விலகி அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி அவற்றை அவர்கள் வழிப்பட்டு வந்தார்கள்; அதன் பொருட்டே ஆண்டவர் இத்தீங்குகளை எல்லாம் அவர்கள்மேல் வரச் செய்தார்' என்று மறுமொழி சொல்லுவார்கள்" என்றருளினார்.

அதிகாரம் 08

1 சாலமோன் ஆண்டவரின் ஆலயத்தையும், தம் அரண்மனையையும் கட்டியபின் இருபது ஆண்டுகள் கடந்தன.

2 பின்னர் ஈராம் தமக்குக் கொடுத்திருந்த நகர்களைச் சாலமோன் திரும்பக் கட்டி அவற்றில் இஸ்ராயேல் மக்கள் குடியேறச் செய்தார்.

3 அவர் ஏமாத்சோபாவுக்குப் போய் அதைக் கைப்பற்றினார்.

4 பாலைவனத்தில் பல்மீர் நகரையும், ஏமாத் நாட்டிலுள்ள சிறந்த அரணுள்ள பற்பல நகர்களையும் கட்டினார்.

5 மேல் பெத்தரோனையும், கீழ் பெத்தரோனையும் மதில்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களும் கொண்ட அரணுள்ள நகர்களாக மாற்றினார்.

6 பாலாதையும் தமக்குச் சொந்தமான கோட்டை நகர்களையும், தேர்கள், குதிரை வீரர்கள் இருந்த எல்லா நகர்களையும் எழுப்பினார். பின்னர் யெருசலேமிலும் லீபானிலும் தமது நாடெங்கும் தாம் எண்ணித் திட்டமிட்டிருந்தவற்றை எல்லாம் கட்டி முடித்தார்.

7 இஸ்ராயேல் மக்கள் கொன்று போடாது விட்டு வைத்திருந்த இஸ்ராயேலரல்லாத ஏத்தையர், அமோறையர், பெரேசையர், ஏவையர்,

8 எபுசையர் ஆகியோரின் குலவழி வந்தோரைச் சாலமோன் தமக்குக் கப்பம் கட்டச் செய்தார். அவர்கள் இன்று வரை கப்பம் கட்டி வருகிறார்கள்.

9 தம் வேலைகளைச் செய்யுமாறு இஸ்ராயேலரில் ஒருவரைக்கூட சாலமோன் நியமிக்கவில்லை. அவர்கள் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், தேர்ப்படைக்கும் குதிரைப்படைக்கும் தளபதிகளாகவும் திகழ்ந்தனர்.

10 சாலமோன் அரசரின் படைத்தலைவர்களாக மொத்தம் இருநூற்றைம்பது பேர் இருந்தனர். அவர்களே மக்கள்மேல் அதிகாரம் செலுத்தி வந்தனர்.

11 அப்போது சாலமோன் தமக்குள் சிந்தனை செய்து, "ஆண்டவரது திருப்பேழை இருந்த இடமெல்லாம் புனிதமானது. எனவே இஸ்ராயேலின் அரசராகிய தாவீதின் அரண்மனையில் என் மனைவி வாழக்கூடாது" என்று சொல்லி, பாரவோனின் மகளைத் தாவீதின் நகரிலிருந்து வெளியேற்றி, தாம் அவளுக்காகக் கட்டியிருந்த மாளிகைக்கு அவளைக் கூட்டிச் சென்றார்.

12 பிறகு தாம் மண்டபத்துக்கு முன்பாகக் கட்டியிருந்த ஆண்டவரின் பலிபீடத்தின் மேல் சாலமோன் ஆண்டவருக்குத் தகனப்பலிகளைச் செலுத்தினார்.

13 மோயீசனின் சட்டப்படி அப்பலிபீடத்தில் ஓய்வு நாளிலும் அமாவாசை நாட்களிலும் ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத்திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்று திருவிழாக்களின் போதும், அந்தந்த நாளுக்குக் குறிப்பபிடப்பட்டிருந்தவாறு பலிகளைச் செலுத்திவந்தார்.

14 மேலும், சாலமோன் தம் தந்தை தாவீது செய்திருந்த திட்டத்தின்படியே திருப்பணி ஆற்றும் குருக்களின் பிரிவுகளையும், ஒவ்வொரு நாளின் சடங்கு முறைக்கேற்பப் புகழ்பாடி, குருக்களோடு சேர்ந்து லேவியர்கள் ஆற்ற வேண்டிய திருப்பணி ஒழுங்குகளையும், வாயில்களைக் காவல்புரிய வாயிற்காவலரின் பிரிவுகளையும் ஏற்படுத்தினார். ஏனெனில் கடவுளின் மனிதரான தாவீது இவ்வாறு செய்ய அவருக்குக் கட்டளையிட்டிருந்தார்.

15 கருவூலங்களைக் கண்காணிப்பது உட்பட எல்லாக் காரியங்களையுமே குருக்களும் லேவியரும் அரச கட்டளைப்படி செய்துவந்தனர்.

16 இவ்வாறு ஆண்டவரின் ஆலயத்துக்குச் சாலமோன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்த வேலை எல்லாம் முடிவுற்றது.

17 பின்பு சாலமோன் ஏதோம் நாட்டுக் கடற்கரை நகர்களான அசியோங்கபேருக்கும் ஏலோத்துக்கும் புறப்பட்டுப் போனார்.

18 ஈராம் கடற்பயணத்தில் கைதேர்ந்த மாலுமிகளையும் கப்பல்களையும் தம் ஊழியர் மூலம் அவருக்கு அனுப்பி வைத்தான். இவர்கள் சாலமோனின் ஊழியர்களோடு ஒப்பீருக்குப் போய் அங்கிருந்து நானூற்றைம்பது தாலந்து பொன்னை ஏற்றிச் சாலமோன் அரசரிடம் கொண்டு வந்தனர்.

அதிகாரம் 09

1 சாபாவின் அரசி சாலமோனின் புகழைக் கேள்விப்பட்டு, அவரைப் புதிரான வினாக்களால் சோதிக்கும்படி யெருசலேமுக்கு வந்தாள். நறுமணப் பொருட்கள், பொன், விலையேறப்பெற்ற இரத்தினங்கள் முதலிய திரளான செல்வங்களைச் சுமந்து வந்த ஒட்டகங்களோடு அவள் சாலமோனிடம் வந்து, தன் மனத்திலிருந்த எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துச் சொன்னாள்.

2 அப்பொழுது சாலமோன் அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தகுந்த பதில் சொன்னார். அவரால் விளக்கிக் கூறமுடியாதது ஒன்றுமே இல்லை.

3 சாலமோனின் ஞானத்தையும் அவர் கட்டியிருந்த அரண்மனையையும்,

4 அவர் பந்தியில் பரிமாறப்பட்ட உணவு வகைளையும் அவருடைய அலுவலர்களின் இருக்கைகளையும் ஊழியரின் ஒழுங்கையும், அவர்கள் ஆடைகளையும், பந்தி பரிமாறுவோரையும், அவர்கள் உடுத்தியிருந்த துணி வகைகளையும், ஆண்டவரின் ஆலயத்தில் அவர் செலுத்தி வந்த பலிகளையும் அவள் கண்ட போது பெரிதும் வியப்புற்றாள்.

5 பின் அரசரை நோக்கி, "உம் செயல்களையும், ஞானத்தையும் குறித்து என் நாட்டில் நான் கேள்விப் பட்டதெல்லாம் உண்மையே.

6 நான் இங்கு வந்து நேரில் காணுமுன், மக்கள் சொன்னதை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் அவர்கள் உமது ஞானத்தைப்ற்றிப் பாதி கூடச் சொல்லவில்லை என்று, இப்போது எனது சொந்த அனுபவத்தால் அறிந்து கொண்டேன். நான் கேள்விப்பட்டதை விட நீர் பெரியவராகவே இருக்கின்றீர்! உம் மனைவியர் பேறுபெற்றோர்.

7 எப்போதும் உமக்கு முன்பாக நின்று உமது ஞானத்தின் வார்த்தைகளைக் கேட்கிற உம் ஊழியர்களும் பேறுபெற்றோர்.

8 உம்மைத் தமது அரியணையில் ஏற்றித் தம் அரசராக ஏற்படுத்திய உம் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! ஏனெனில் இஸ்ராயேலருக்கு அவர் அன்பு செய்வதாலும், அவர்களை என்றென்றும் காக்க விரும்புவதாலுமே, அவர்களுக்கு நீதி வழங்குவதற்காக உம்மை அரசராக அவர் ஏற்படுத்தியுள்ளார்" என்று இயம்பினாள்.

9 மேலும் அவள் அரசருக்கு நூற்றிருபது தாலந்து நிறையுள்ள பொன்னையும் திரளான நறுமணப் பொருட்களையும் விலையுர்ந்த இரத்தினங்களையும் கொடுத்தாள். சாபாவின் அரசி சாலமோன் அரசருக்குக் கொடுத்த நறுமணப்பொருட்கள் என்றுமே கண்டிராதவை.

10 ஈராமின் வேலையாட்களும், சாலமோனின் வேலையாட்களும் ஒப்பீரிலிருந்து பொன்னையும் வாசனை மரங்களையும் விலையுர்ந்த இரத்தினங்களையும் கொண்டு வந்தனர்.

11 வாசனை மரங்களால் அரசர் ஆண்டவரின் ஆலயத்திற்கும் அரண்மனைக்கும் படிக்கட்டுகளையும், பாடகர்களுக்குச் சுரமண்டலம், தம்புரு முதலிய இசைக் கருவிகளையும் செய்தார். அதற்கு முன் இத்தகைய மரங்களை யூதேயா நாட்டினர் கண்டதில்லை.

12 சாபாவின் அரசி விரும்பியவற்றையும் கேட்டவற்றையும் சாலமோன் அவளுக்குத் கொடுத்தார். அவள் அரசருக்குக் கொடுத்ததை விட அதிகமாகவே பெற்றுக் கொண்டு தன் பரிவாரத்துடன் நாடு திரும்பினாள்.

13 ஆண்டுதோறும் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையுள்ள பொன் சாலமோனுக்கு வந்து கொண்டிருந்தது.

14 மேலும், பற்பல நாடுகளின் தூதுவர்களும் வணிகர்களும், அரேபியா நாட்டு அரசர்கள் அனைவரும், மாநில ஆளுநர்களும் சாலமோனுக்கு பொன்னும் வெள்ளியும் அளிப்பது வழக்கம்.

15 அரசர் சாலமோன் இருநூறு பொன் ஈட்டிகளைத் தமக்குச் செய்து கொண்டார். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் அறுநூறு சீக்கல் பொன் செலவானது.

16 முந்நூறு கேடயங்களையும் செய்து அவற்றிற்குப் பொன் முலாம் பூசினார். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் முந்நூறு சீக்கல் பொன் செலவானது. அக்கேடயங்களை அரசர் லீபானில் இருந்த 'வனபவனம்' என்ற அரச மாளிகையில் வைத்தார்.

17 அரசர் யானைத் தந்தத்தினால் பெரிய அரியணை ஒன்று செய்து அதைப் பசும்பொன் தகட்டால் வேய்ந்தார்.

18 அவ்வரியணைக்குப் பொன்னால் செய்யப்பட்ட ஆறு படிகளும் ஒரு பாதப்படியும், இரு பக்கத்திலும் கைதாங்கிகளும், ஒவ்வோரு கைதாங்கியின் அருகே இரண்டு சிங்கங்களும் இருந்தன.

19 அப்படிகள் மேல் வேறு பன்னிரு சிறிய பொற் சிங்கங்கள் இரு புறத்திலும் நின்றுகொண்டிருந்தன. எந்த நாட்டிலும் இத்தகைய அரியணை இருந்ததில்லை.

20 அரசருக்கு இருந்த எல்லா உணவுப் பாத்திரங்களும் லீபானில் இருந்த 'வனபவனம்' என்ற அரச மாளிகையின் எல்லாத் தட்டுமுட்டுகளும் பசும்பொன்னால் ஆனவையே. அக்காலத்தில் வெள்ளிக்கு மதிப்பே கிடையாது.

21 அரசரின் கப்பல்கள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை ஈராமின் ஆட்களுடன் தார்சீசுக்குப் போய் அங்கிருந்து பொன், வெள்ளி, யானைத்தந்தம், மனிதக் குரங்கு, மயில் முதலியவற்றைக் கொண்டு வரும்.

22 எனவே பூமியின் எல்லா அரசர்களையும் விடச் சாலமோன் செல்வத்திலும் புகழிலும் சிறந்து விளங்கினார்.

23 சாலமோனுக்குக் கடவுள் கொடுத்திருந்த ஞானத்தைக் கேட்பதற்காக மண்ணக அரசர் யாவரும் அவரைக் காண விரும்பினர்.

24 ஆண்டுதோறும் அவர்கள் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், நறுமணப் பொருட்களையும், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்து வந்தனர்.

25 சாலமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும் தேர்களும் இருந்தன. பன்னிரண்டாயிரம் குதிரை வீரரும் இருந்தனர். அவை தேர்கள் நிற்கும் நகர்களிலும், அரசர் இருந்து வந்த யெருசலேமிலும் இருந்தன.

26 யூப்ரட்டீஸ் நதி துவக்கி, பிலிஸ்தியர் நாடு வரைக்கும், எகிப்தின் எல்லை மட்டும் இருந்த அரசர்கள் அனைவரும் அவருக்கு அடிபணிந்து வந்தனர்.

27 யெருசலேமில் வெள்ளியானது கற்களைப்போலவும், கேதுரு மரங்கள் சமவெளிகளில் வளரும் அத்தி மரங்களைப் போலவும் மிகவும் சாதாரணமாய்க் கிடைக்கும்படி அவர் செய்தார்.

28 எகிப்திலும் மற்ற நாடுகளிலுமிருந்து குதிரைகள் அவருக்குக் கொண்டு வரப்படும்.

29 சாலமோனின் வரலாறு முழுவதும் இறை வாக்கினரான நாத்தானின் நூலிலும், சிலோனித்தரான அகியாவின் நூலிலும், நாபாத்தின் மகன் எரோபோவாமைப் பற்றி இத்தோ என்னும் திருக்காட்சியாளர் எழுதியுள்ள நூலிலும் காணக்கிடக்கிறது.

30 சாலமோன் யெருசலேமில் இஸ்ராயேலர் அனைவர்க்கும் அரசராக நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.

31 பின்பு அவர் தம் முன்னோரோடு துயில் கொண்டார். அவரைத் தாவீதின் நகரில் புதைத்தனர். அவருடைய மகன் ரொபோவாம் அவருக்கு பின் அரியணை ஏறினான்.

அதிகாரம் 10

1 ரொபோவாம் சிக்கேமுக்குப் போனான். ஏனெனில் இஸ்ராயேலர் எல்லாரும் அவனை அரசனாக்கும்படி அங்குக் கூடியிருந்தனர்.

2 சாலமோனுக்கு அஞ்சி எகிப்திற்குத் தப்பியோடியிருந்த நாபாத்தின் மகன் எரோபோவாம் அதைக் கேள்வியுற்று எகிப்திலிருந்து திரும்பி வந்தான்.

3 இஸ்ராயேலர் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார்கள். அவனும் இஸ்ராயேலர் அனைவரோடும் வந்தான். அவர்கள் ரொபோவாமை நோக்கி,

4 உம் தந்தை மிகப் பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தியுள்ளார். நீர் அப்பளுவான சுமையை இலகுவாக்கி எங்கள் சுமையின் பளுவைக் குறைக்க ஒத்துக் கொண்டால், நாங்கள் உமக்கு அடிபணிவோம்" என்றனர்.

5 அதற்கு ரொபோவாம், "நீங்கள் மூன்று நாள் பொறுத்து என்னிடம் திரும்பி வாருங்கள்" என்றான். மக்களும் அவ்வாறே மூன்று நாளுக்குப்பின் அவனிடம் சென்றனர்.

6 ரொபோவாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருந்த காலத்தில் அவருக்குப் பணி புரிந்து வந்த மூப்பரைக் கலந்துபேசி, நான் இம்மக்களுக்கு மறுமொழி கொடுக்க வேண்டுமே; நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள்?" என்று வினவினான்.

7 அவர்கள், "நீர் இம்மக்களிடம் அன்பாகப் பேசி நயமான வார்த்தைகளைச் சொல்லுவீரானால், என்றும் அவர்கள் உமக்கு அடிபணிவார்கள்" என்று மறுமொழி கூறினர்.

8 ரொபோவாம் மூப்பர் சொன்ன ஆலோசனையைத் தள்ளி விட்டுத் தன்னோடு எப்போதும் இருந்து தன் பந்தியில் அமர்ந்து உணவருந்தி வந்த இளைஞரிடம் ஆலோசனை கேட்டான்.

9 மக்கள் என்னிடம் வந்து: 'உம் தந்தை எம்மேல் வைத்த நுகத்தை நீர் இலகுவாக்க வேண்டும்' என்று விண்ணப்பம் செய்து கொண்டனர். அதற்கு நான் என்ன பதில் கூறவேண்டும்? உங்கள் ஆலோசனை என்ன?" என்று கேட்டான்.

10 அதற்கு அவனோடு இன்ப சுகமாக வளர்ந்து வந்திருந்த அந்த இளைஞர் அவனை நோக்கி, "உம்மைப் பார்த்து, 'உம் தந்தை என் நுகத்தை அதிகப் பளுவாக்கியுள்ளார்; நீர் அதை இலகுவாக்க வேண்டும்' என்று கேட்கும் மக்களுக்கு நீர் கூறவேண்டிய மறுமொழியாவது: 'என் தந்தையின் இருப்பை விட என் சுண்டு விரலே பெரிது.

11 ஆகையால், என் தந்தை பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார்; நானோ அதை இன்னும் பாரமாக்குவேன். என் தந்தை உங்களைத் மிலாறுகளால் அடித்தார்; நானோ உங்களைத் தேள்களைக் கொண்டு தண்டிப்பேன்' என்று சொல்லுவீராக" என்றனர்.

12 மூன்றாம்நாள் எரொபோவாமும் மக்களும் அரசரின் கட்டளைக்கிணங்க வந்தனர்.

13 ரொபோவாம் அரசன் மூப்பரது ஆலோசனையை அசட்டை செய்து, அவர்களிடம் முரட்டுத்தனமாகப் பேசினான்.

14 இளைஞர்களின் ஆலோசனைப்படி அவர்களை நோக்கி, "என் தந்தை உங்கள் மேல் பளுவான நுகத்தைச் சுமத்தினார். நானோ அதை அதிகப் பாரமாக்குவேன். என் தந்தை மிலாறுகளால் உங்களை அடித்தார். நானோ உங்களைத் தேள்களைக் கொண்டு தண்டிப்பேன்" என்றான்.

15 இவ்வாறு அரசன் மக்களின் விண்ணப்பத்திற்குச் செவி கொடுக்கவில்லை. இது கடவுளின் திருவுளப்படியே நடந்தது. அதனால் அவர் சிலோனித்தரான அகியாவின் மூலம் நாபாத்தின் மகன் எரொபோவாமுக்குச் சொல்லியிருந்த தமது வாக்கை நிறைவேற்றினார்.

16 அரசனின் முரட்டுத்தனமான பதிலைக் கேட்ட மக்கள் ரொபோவாமைப் பார்த்து, "தாவீதோடு எங்களுக்குப் பங்கு இல்லை; இசாயியின் மகனிடம் எங்களுக்கு உரிமைச் சொத்தும் இல்லை. இஸ்ராயேலே, உன் கூடாரங்களுக்குப் போ; தாவீதே, நீயே உன் சொந்தவீட்டுக் காரியங்களைப் பார்த்துக் கொள்" என்று சொல்லி, இஸ்ராயேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குச் சென்றனர்.

17 ஆயினும் யூதாவின் நகர்களிலே குடியிருந்த இஸ்ராயேல் மக்களின் அரசனாக ரொபோவாமே விளங்கி வந்தான்.

18 பின் அரசன் ரொபோவாம் வரி வசூல் செய்ய அதுராமை அனுப்பி வைத்தான். இஸ்ராயேல் மக்களோ அவனைக் கல்லால் எறிந்து கொன்று போட்டனர். அதைக் கேள்வியுற்ற ரொபோவாம் விரைவாய்த் தன் தேரின் மேல் ஏறி யெருசலேமுக்கு ஓடிப் போனான்.

19 இவ்வாறு இஸ்ராயேலர் தாவீதின் குலத்தினின்று இன்று வரை பிரிந்தே வாழ்கின்றனர்.

அதிகாரம் 11

1 ரொபோவாம் யெருசலேமுக்கு வந்தவுடனே இஸ்ராயேலரோடு போரிடவும், தனது அரசைத் திரும்பவும் கைப்பற்றிக் கொள்ளவும் கருதி, யூதா குலத்தாரையும் பென்யமீன் குலத்தாரையும் வரச் செய்து, அவர்களில் ஒரு லட்சத்து எண்பதினாயிரம் போர் வீரர்களைத் தேர்ந்து கொண்டான்.

2 அப்பொழுது கடவுளின் மனிதர் செமொசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்காவது:

3 நீ யூதாவின் அரசனும் சாலமோனின் மகனுமான ரொபோவாமையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ராயேலரையும் நோக்கி, 'கடவுளின் வார்த்தையைக் கேளுங்கள்:

4 நீங்கள் உங்கள் சகோதரரை எதிர்த்துப் போரிடச் செல்ல வேண்டாம். நம்மாலே இச்செயல் நடந்துற்றமையால், நீங்கள் வீட்டுக்குத் திரும்புங்கள் என்று சொல்லுகின்றார்' என்பாய்" என்பதாம். அவர்கள் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு எரொபோவாமுக்கு எதிராய்ப் போரிடுவதை நிறுத்திவிட்டுத் தங்கள் வீடு திரும்பினர்.

5 ரொபோவாம் யெருசலேமில் வாழ்ந்து வந்தான். யூதாவில் அரணுள்ள நகர்களைக் கட்டினான்.

6 அவன் பெத்லகேம், ஏத்தாம்,தேக்குவே,

7 பெத்சூர், சொக்கோ, ஒதொல்லாம்,

8 கேத், மரேசா, ஜுப்,

9 அதுராம், லாக்கீசு, அஜேக்கா,

10 சாராவா, ஐயலோன், எபிரோன் ஆகிய நகர்களைக் கட்டினான். இவை யூதாவிலும் பென்யமீனிலுமே உள்ளன.

11 ரொபோவாம் அந்த நகர்களைச் சுற்றி மதில் எழுப்பிய பின் அவற்றில் ஆளுநர்களை ஏற்படுத்தினான். உணவுப் பொருட்கள், எண்ணெய், திராட்சை இரசம் முதலியவற்றிற்கான பண்டகசாலைகளையும் அமைத்தான்.

12 ஒவ்வொரு நகரிலும் கேடயம், ஈட்டி கொண்ட ஆயுதக் கிடங்குகளையும் நிறுவி, நகர்களை மிக்க விவேகத்துடன் உறுதிப்படுத்தினான். இவ்வாறாக அவன் யூதாவையும், பென்யமீனையும் ஆண்டு வந்தான்.

13 இஸ்ராயேல் நாடு எங்கணும் இருந்த குருக்களும் லேவியர்களும் அவனிடம் கூடி வந்தனர்.

14 ஏனெனில் அவர்கள் ஆலயத்தில் திருப்பணி புரியாதவாறு எரொபோவாமும் அவன் புதல்வரும் அவர்களை விலக்கி வைத்திருந்ததால், அவர்கள் தங்கள் ஊர்களையும் உடைமைகளையும் விட்டுவிட்டு யூதா நாட்டுக்கும் யெருசலேமுக்கும் சென்றிருந்தனர்.

15 எரொபோவாம் தான் ஏற்படுத்திய மேடைகளுக்கென்றும் பேய்களுக்கென்றும் கன்றுக் குட்டிகளுக்கென்றும் குருக்களை நியமித்திருந்தான்.

16 இஸ்ராயேல் குலத்தாரில் தங்கள் கடவுளான ஆண்டவரையே முழு மனத்தோடும் பின்பற்ற மனதாயிருந்தவர்கள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த யெருசலேமுக்கு வந்து கொண்டிருந்தனர்.

17 இவ்வாறு மூன்றாண்டுகளாய் அவர்கள் யூதாவின் நாட்டைப் பலப்படுத்திச் சாலமோனின் மகன் ரொபோவாமின் ஆட்சியை உறுதிப்படுத்தினர். அவர்கள் தாவீதும் சாலமோனும் நடந்த வழியிலே மூன்று ஆண்டுகள் நடந்து வந்தனர்.

18 தாவீதின் மகன் எரிமோத்துக்கும், இசாயியின் மகனுக்குப் பிறந்த எலியாவின் புதல்வி அபிகாயிலுக்கும் பிறந்த மகலாத்தை ரொபோவாம் மணந்து கொண்டான்.

19 இவள்மூலம் ஜெகுஸ், சமொரியா, ஜொம் என்ற புதல்வர்கள் அவனுக்குப் பிறந்தனர்.

20 அவளுக்குப் பிறகு ரொபோவாம் அப்சலோமின் மகள் மாக்காளையும் மணந்தான். இவள் அவனுக்கு அபியா, ஏத்தாயி, ஜிஜா, சலொமித் என்பவர்களைப் பெற்றாள்.

21 ரொபோவாம் அப்சலோமின் மகளான இந்த மாக்காலைத் தன் எல்லா மனைவியரையும் வைப்பாட்டிகளையும் விட அதிகமாய் நேசித்து வந்தான். அவன் பதினெட்டு மனைவியரையும், அறுபது வைப்பாட்டிகளையும் மணந்து இருபத்தெட்டுப் புதல்வர்களையும் அறுபது புதல்வியரையும் பெற்றெடுத்தான்.

22 அவன் மாக்காளின் மகன் ஆபியாவை அவனுடைய சகோதரர்களுக்குள் தலைவனாக ஏற்படுத்தினான். ஏனெனில் இவனையே அரசனாக்க அவன் எண்ணம் கொண்டிருந்தான்.

23 காரணம், இவன் அறிவுக் கூர்மையுடையவனாய், யூதா, பென்யமீன் நாடுகள் எங்கணுமிருந்த அரணுள்ள எல்லா நகர்களிலும் தன் சகோதரரை விடப் பேரும் புகழும் பெற்றிருந்தான்; அவன் தன் சகோதரர்களுக்கு வேண்டிய உணவையும் கொடுத்து அவர்களுக்குப் பல மனைவியரையும் தேடிக் கொடுத்தான்.

அதிகாரம் 12

1 ரொபோவாம் தன் அரசை உறுதிப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திய பின்பு, அவனும் அவனோடு இஸ்ராயேல் மக்கள் அனைவரும் ஆண்டவரின் திருச்சட்டத்தை மீறி நடந்தனர்.

2 இவ்வாறு அவர்கள் ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் புரிந்தனர். எனவே, ரொபோவாம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில், எகிப்திய அரசன் சேசாக் யெருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்தான்.

3 அவனது படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதினாயிரம் குதிரை வீரரும் இருந்தனர். எண்ணற்ற லீபியரும், திரொகுலதித்தரும், எத்தியோப்பியரும் அவனோடு வந்திருந்தனர்.

4 அவன் யூதாவைச் சேர்ந்த அரணுள்ள நகர்களைப் பிடித்தான். பிறகு யெருசலேமுக்கு வந்தான்.

5 அப்பொழுது இறைவாக்கினர் செமெயாஸ், சேசாக் அரசனுக்குப் பயந்தோடிய ரொபோவாமிடமும் யெருசலெமில் கூடியிருந்த யூதாவின் மூப்பர்களிடமும் வந்து அவர்களை நோக்கி, "ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்: 'நீங்கள் நம்மை விட்டு அகன்றீர்கள். எனவே, நாமும் உங்களைக் கைவிட்டு உங்களைச் சேசாக்கிற்குக் கையளித்தோம்' என்கிறார்" என்று சொன்னார்.

6 இஸ்ராயேலின் மூப்பர்களும் மக்கள் தலைவர்களும் அரசனும் இதைக் கேட்டுத் தங்களைத் தாழ்த்தி, "ஆண்டவர் நீதியுள்ளவர்" என்றனர்.

7 அவர்கள் தங்களைத் தாழ்த்தினதை ஆண்டவர் கண்டு மீண்டும் செமெயாசை நோக்கி, "அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள். ஆகையால் நாம் அவர்களை அழிக்கமாட்டோம். விரைவில் அவர்களுக்கு விடுதலை அளிப்போம். நமது சீற்றம் சேசாக்கின் மூலமாய் யெருசலேமின் மேல் வராது.

8 ஆயினும் நமக்கு ஊழியம் செய்வதற்கும், உலக அரசர்களுக்கு ஊழியம் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை அடிமைகளாய் இருப்பார்கள்" என்றார்.

9 அவ்விதமே எகிப்திய அரசன் சேசாக் ஆண்டவரின் ஆலயத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களையும், சாலமோன் செய்து வைத்திருந்த பொற் கேடயங்களையும் கொள்ளையிட்டபின் யெருசலேமை விட்டு அகன்றான்.

10 அவற்றிற்குப் பதிலாக ரொபோவாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவற்றை அரண்மனை வாயிற் காவலரின் தலைவர்கள் வசம் ஒப்புவித்தான்.

11 அரசன் ஆண்டவரின் ஆலயத்துக்குள் நுழையும் போதெல்லாம் அவ்வாயிற் காவலர் அக்கேடயங்களை ஏந்தி நிற்பார்கள். பின்னர் அவற்றை ஆயுதக்கிடங்கில் திரும்ப வைப்பார்கள்.

12 அவர்கள் தங்களைத் தாழ்த்தினபடியாலும், யூதாவிலே இன்னும் சில நற்செயல்கள் இருந்து வந்தமையாலும் ஆண்டவரின் கோபம் அவர்களை விட்டு அகன்றது. எனவே அவர்கள் அடியோடு அழிக்கப் படவில்லை.

13 ஆதலால் அரசன் ரொபோவாம் யெருசலேமில் தன் அரசை உறுதிப்படுத்தி அங்கு அரசோச்சி வந்தான். அவன் அரசனான போது அவனுக்கு வயது நாற்பத்தொன்று. ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களினின்றும் தேர்ந்து கொண்ட யெருசலேம் மாநகரில் அவன் பதினேழு ஆண்டுகள் அரசோச்சினான். அவன் தாய் அம்மோனியா இனத்தைச் சேர்ந்தவள்; பெயர் நாவாமா.

14 அவனோ ஆண்டவரைப் பின்பற்ற மனதில்லாதவனாய்த் தீய வழியில் நடந்து வந்தான்.

15 ரொபோவாமின் வரலாறு முழுவதும் இறைவாக்கினரான செமெயாசின் நூலிலும், திருக்காட்சியாளர் இத்தோவின் நூலிலும் விரிவாய் வரையப்பட்டுள்ளது. ரொபோவாமும் எரொபோவாமும் தங்களுக்குள் எப்போதும் சண்டையிட்டு வந்தனர்.

16 இறுதியில் ரொபோவாம் தன் முன்னோரோடு கண்ணயர்ந்தான்; தாவீதின் நகரில் புதைக்கப்பட்டான். அவன் மகன் ஆபியா அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.

அதிகாரம் 13

1 அரசன் எரொபோவாமின் பதினெட்டாம் ஆட்சி ஆண்டில் ஆபியா யூதாவைத் தனக்கு அடிமைப் படுத்தினான்.

2 அவன் மூன்று ஆண்டுகள் யெருசலேமில் ஆட்சி செலுத்தினான். அவன் தாயின் பெயர் மிக்கா. இவள் காபாவா ஊரானான உரியலின் மகள். ஆபியாவுக்கும் எரொபோவாமுக்கும் இடையே போர் நடந்தது.

3 ஆபியா பொறுக்கி எடுக்கப்பட்ட நாற்பதினாயிரம் திறமை மிக்க வீரர்களுடன் போருக்கு வந்தான். எரொபோவாம் பொறுக்கி எடுக்கப்பட்ட எண்பதினாயிரம் திறமை மிக்க வீரர்களை அவனுக்கு எதிராகப் போருக்கு நிறுத்தினான்.

4 அப்பொழுது ஆபியா எப்பிராயீமிலுள்ள செமெரோன் மலையின் மேல் ஏறி நின்று, "எரொபோவாமே, இஸ்ராயேல் மக்களே, கேளுங்கள்.

5 இஸ்ராயேலின் அரசை என்றென்றும் தாவீதின் சந்ததியிலேயே நிலைநாட்டும் பொருட்டும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் செய்த உடன்படிக்கையை நீங்கள் அறிவீர்கள்!

6 ஆயினும் தாவீதின் மகன் சாலமோனின் ஊழியனாயிருந்த நாபாத்தின் மகன் எரொபோவாம் தன் தலைவருக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்துள்ளான்.

7 வீணரும் பெலியாலின் மக்களும் அவனோடு சேர்ந்துகொண்டு சாலமோனின் மகன் ரொபோவாமை வென்றனர். ஏனெனில் ரொபோவாம் அனுபவம் அற்றவனும் கோழையுமாயிருந்ததால் அவர்களை எதிர்த்து நிற்க அவனால் முடியவில்லை.

8 இப்போதோ தாவீதின் சந்ததிக்கு ஆண்டவர் கொடுத்துள்ள அரசை எதிர்த்து நிற்கலாம் என்று எண்ணுகிறீர்கள்; உங்களைப் பின்பற்றப் பலர் இருக்கின்றனர். எரொபோவாம் உங்களுக்குத் தெய்வங்களாகச் செய்து கொடுத்த பொன் கன்றுக்குட்டிகளும் உங்கள் கையில் இருக்கின்றன.

9 ஆரோனின் புதல்வர்களான ஆண்டவரின் குருக்களையும் லேவியர்களையும் தள்ளிவிட்டு, புறவினத்தாரைப் போன்று உங்களுக்குக் குருக்களை ஏற்படுத்திக் கொண்டீர்கள். ஓர் இளங்காளையையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஒப்புக்கொடுத்துத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் எவனும் பொய்த் தெய்வங்களின் குருவாகிறான்.

10 எங்களுக்கோ ஆண்டவர்தாம் கடவுள். நாங்கள் அவரை விட்டு அகலவே மாட்டோம். ஆரோனின் புதல்வரான குருக்களே ஆண்டவருக்குத் திருப்பணி புரிவர். ஆலயத்தைச் சேர்ந்த மற்ற பணிகளை லேவியர் மட்டுமே செய்வர்.

11 அவர்கள் நாள்தோறும் ஆண்டவருக்குத் தகனப்பலிகளைக் காலையும் மாலையும் ஒப்புக்கொடுப்பர். மேலும் திருச் சட்டப்படி சேர்க்கப்பட்ட நறுமண வகைகளைச் செலுத்திப் பரிசுத்தமான மேசையின் மீது காணிக்கை அப்பங்களை அடுக்கி வைப்பர். அதுவுமன்றி எங்களுக்குப் பொன் குத்து விளக்குத் தண்டு உண்டு. அதன் விளக்குகள் மாலை தோறும் ஏற்றப்படுகின்றன. நீங்கள் எங்கள் ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளை விட்டு விலகினீர்கள்; நாங்களோ அக்கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுகுகின்றோம்.

12 இதோ எங்கள் படைக்கு ஆண்டவரே தலைவர்; உங்களுக்கு எதிராய் எக்காளங்களைப் பேரொலியோடு முழங்குபவர்கள் ஆண்டவரின் குருக்களே. இஸ்ராயேலின் புதல்வர்களே, உங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் போரிட வேண்டாம்; அது உங்களுக்கு நல்லது அன்று" என்றான்.

13 ஆபியா அவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், எரொபோவாம் அவனுக்குப் பின்னால் பதிவிருக்கும் ஆட்களை அனுப்பி, யூதாவுக்குத் தெரியாமலே யூதாவின் படைகளைச் சுற்றி வளைத்திருந்தான்.

14 யூதா மக்கள் திரும்பிப் பார்த்த போது தங்களுக்கு முன்னும் பின்னும் எதிரிகள் நிற்கக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டனர். குருக்கள் எக்காளங்களை ஊதத் தொடங்கினர்.

15 யூதாவின் வீரர் அனைவரும் போர் முழக்கம் செய்ய ஆபியாவுக்கும் யூதாவுக்கும் எதிராகக் கிளம்பியிருந்த எரொபோவாமையும் இஸ்ராயேலர் அனைவரையும் கடவுள் முறியடித்தார்.

16 அப்போது இஸ்ராயேல் மக்கள் யூதா மக்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடினர். ஆண்டவர் அவர்களை யூதாவின் கையில் ஒப்புவித்தார்.

17 எனவே ஆபியாவும் அவனுடைய மக்களும் அவர்களை வெட்டி வீழ்த்தினர். இஸ்ராயேலில் ஆற்றல் மிக்க ஐந்து லட்சம் வீரர் காயம்பட்டு விழுந்தனர்.

18 அன்று இஸ்ராயேல் மக்கள் சிறுமையுற்றனர். யூதாவின் புதல்வர்களோ தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர் பால் நம்பிக்கை வைத்திருந்தபடியால் மேலும் வலுப்பெற்றனர்.

19 ஆபியா எரொபோவாமைப் பின்தொடர்ந்து அவனுக்குச் சொந்தமான நகர்களைப் பிடித்தான். அவை யாவன: பேத்தேலும் அதைச் சார்ந்த நகர்களும், ஏசானாவும் அதற்கடுத்த ஊர்களும், எப்பிரோனும் அதன் ஊர்களுமாம்.

20 அதுதொட்டு ஆபியாவின் வாழ்நாளெல்லாம் எரொபோவாமால் அவனை எதிர்த்து அடிக்க, அவனும் இறந்து பட்டான்.

21 ஆபியா மேலும் வலிமை அடைந்தான். பதினான்கு பெண்களை மணந்து கொண்டான். அவனுக்கு இருபத்திரண்டு புதல்வரும் பதினாறு புதல்வியரும் பிறந்தனர்.

22 ஆபியாவின் மற்றச் செயல்களும், அவனது நடத்தையும், அவன் ஆற்றிய உரைகளும் இறைவாக்கினர் இத்தோவின் நூலில் விரிவாய் எழுதப்பட்டிருக்கின்றன.

அதிகாரம் 14

1 ஆபியா தன் முன்னோரோடு கண் வளர்ந்த பின் தாவீதின் நகரில் புதைக்கப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆசா அரியணை ஏறினான். அவனது ஆட்சியின் போது நாடு பத்தாண்டு அமைதி பூண்டிருந்தது.

2 ஆசா ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து நல்லன புரிந்து வந்தான். அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அழித்தான்.

3 அவர்களின் சிலைகளை உடைத்துச் சிலைத்தோப்புகளைத் தரைமட்டமாக்கினான்.

4 தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைத் தேடவும் திருச்சட்டத்தைப் பின்பற்றி அதன்படி நடக்கவும் யூதா மக்களுக்குக் கட்டளையிட்டான்.

5 யூதாவின் எல்லா நகர்களிலுமிருந்தும் பீடங்களையும் கோவில்களையும் அகற்றினான். அமைதியில் அரசாண்டான்.

6 கடவுளின் அருளால் அவனது ஆட்சியில் போரின்றி நாடெங்கும் அமைதி நிலவியது. எனவே அவன் யூதாவில் அரணான நகர்களைக் கட்டினான்.

7 அவன் யூதாவை நோக்கி, "நம் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரை நாம் பின்பற்றி வந்ததால், அவர் நாடெங்கும் அமைதி நிலவச் செய்தார். சண்டையில்லாத இந்தக் காலத்தில் நாம் இந்நகர்களைக் கட்டவும், மதில்களையும் கோபுரங்களையும் எழுப்பி வாயில்களை அமைத்துத் தாழ்ப்பாள்களைப் போட்டுப் பலப்படுத்தவும் வேண்டும்" என்றான். அவ்விதமே மக்களும் செய்தனர். யாதொரு தடையுமின்றி வேலை நடந்தேறியது.

8 யூதா குலத்திலே கேடயம் தாங்கிப் போரிடும் மூன்று லட்சம் வேல் வீரரும், பென்யமீன் குலத்திலே கேடயம் தாங்கிப் போரிடும் இரண்டு லட்சத்து எண்பதினாயிரம் வில் வீரரும் இருந்தனர். மிக்க ஆற்றல் படைத்த இவர்கள் அனைவரும் ஆசாவின் படையைச் சேர்ந்தவர்கள்.

9 எத்தோப்பியனான ஜாரா பத்து லட்சம் போர் வீரரோடும் முந்நூறு தேர்களோடும் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்து மரேசா வரை வந்தான்.

10 அப்பொழுது ஆசா அவனை எதிர்த்துச் சென்று மரேசாவுக்கடுத்த செப்பத்தா என்ற பள்ளத்தாக்கில் போருக்கு அணிவகுத்தான்.

11 ஆசா தன் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு, "ஆண்டவரே, வலியோரை எதிர்த்து நிற்கும் எளியோரைக் காப்பவர் நீர் ஒருவரே! எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, எங்களுக்குத் துணையாக வாரும். ஏனெனில் உம்மிடத்திலும் உமது திருப்பெயரிலும் நாங்கள் நம்பிக்கை வைத்தே இப்பெரும் படையை எதிர்த்து வந்துள்ளோம். நீரே எங்கள் கடவுள். உம்மை எந்த மனிதனும் மேற்கொள்ள விடாதீர்" என்று மன்றாடினான்.

12 அப்பொழுது ஆண்டவர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறியடிக்கவே, அவர்கள் புறமுதுகு காட்டி ஓடினர்.

13 அவர்களை ஆசாவும் ஆசாவோடு இருந்த மக்களும் கேரார் வரை துரத்திச் சென்றனர். எத்தியோப்பியர் எல்லாரும் அடியோடு அழிந்தனர். ஏனெனில் ஆசா படை வீரர் கண்முன்பாக ஆண்டவர் அவர்களை வெட்டி வீழ்த்தினார். யூதாவின் வீரர் மிகுதியான பொருட்களைக் கொள்ளையடித்தார்கள்.

14 அதுவுமன்றி கேராரைச் சுற்றியிருந்த நகர்களையும் கைப்பற்றினார்கள். ஏனெனில் எல்லா மக்களையும் பேரச்சம் ஆட்கொண்டிருந்தது. யூதாவின் வீரர்கள் நகர்களைச் சூறையாடி மிகுதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றார்கள்.

15 மேலும் மிருகத் தொழுவங்களை அவர்கள் இடித்துப் போட்டுத் திரளான ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் பிடித்துக் கொண்டு யெருசலேமுக்குத் திரும்பினார்கள்.

அதிகாரம் 15

1 அப்பொழுது கடவுளின் ஆவி ஒதேதின் மகன் அசரியாசின் மேல் இறங்கியது.

2 உடனே அவர் ஆசாவிடம் சென்று அவனை நோக்கி, "ஆசாவே, யூதாவின் புதல்வரே, பென்யமீன் குலத்தினரே கேளுங்கள்: நீங்கள் ஆண்டவரோடு இருக்கும் வரை அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைப் புறக்கணித்தால், அவரும் உங்களைப் புறக்கணிப்பார்.

3 இஸ்ராயேல் நடுவே பல நாளாய் உண்மைக் கடவுள் இல்லை; போதிக்கக் குருக்களும் இல்லை; திருச்சட்டமும் இல்லை.

4 ஆனால் இஸ்ராயேலர் துன்பப் புயலில் அகப்பட்டுத் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மனம் திரும்பி அவரைத் தேடுவார்கள். அப்பொழுது அவர்கள் அவரைக் கண்டடைவர்.

5 அக்காலத்தில் யாரும் அமைதியில் நடமாட முடியாது. ஏனெனில் மண்ணக மக்கள் அனைவருக்குள்ளும் பயங்கரக் குழப்பம் ஏற்படும்.

6 நாடு நாட்டையும், நகர் நகரையும் எதிர்த்து எழும். கடவுள் அவர்களைப் பற்பல இடுக்கண்களாலும் துன்புறுத்துவார்.

7 நீங்கள் கலங்க வேண்டாம்; தைரியமாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு கிடைக்கும்" என்றார்.

8 ஒதேதின் மகனான இறைவாக்கினர் அசரியாசு உரைத்த இறைவாக்கைக் கேட்ட போது ஆசா வீறு கொண்டான்; யூதா நாட்டிலும் பென்யமீன் நாட்டிலும், தான் கைப்பற்றியிருந்த நகர்களிலும், எப்பிராயீம் மலை நாட்டிலும் அகப்பட்ட சிலைகளை அகற்றி, ஆண்டவரின் மண்டபத்திற்கு முன்பாக இருந்த ஆண்டவரின் பலிபீடத்தைப் புதுப்பித்தான்.

9 பிறகு யூதா மக்களையும் பென்யமீன் மக்களையும், அவர்களோடு எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமேயோனிலும் வாழ்ந்து வந்த புறவினத்தாரையும் ஒன்று திரட்டினான். கடவுளாகிய ஆண்டவர் ஆசாவோடு இருக்கிறதைக் கண்டு இவர்களில் பலரும் இஸ்ராயேலை விட்டு அவனிடம் தஞ்சம் அடைந்தனர்.

10 அவர்கள் எல்லாரும் அரசன் ஆசாவின் பதினைந்தாம் ஆண்டில் யெருசலேமில் கூடி வந்தனர்.

11 தங்கள் கொள்ளைப் பொருட்களில் எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் கடாக்களையும் அன்று ஆண்டவருக்குப் பலியிட்டனர்.

12 அவர்கள் முழு ஆன்மாவோடும் முழு மனதோடும் தங்கள் முன்னோர்களின் கடவுளாகிய ஆண்டவரை தேடுவோம் என்றும்,

13 சிறியோர் பெரியோர், ஆண் பெண் அனைவரிலும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை யார் யார் தேடாமல் இருக்கிறார்களோ அவர்கள் சாகக்கடவர் என்றும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.

14 பூரிகைகளும் எக்காளங்களும் ஒலிக்க, மிகுந்த ஆரவாரத்துடன் ஆண்டவரின் திருப் பெயரால் ஆணையிட்டார்கள்.

15 இதன் பொருட்டு யூதா மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். தங்கள் முழு இதயத்தோடும் ஆணையிட்டுத் தங்கள் முழுமனத்தோடும் அவரைத் தேடிக் கண்டடைந்தனர். ஆண்டவரும் அவர்களுக்கு அமைதி அளித்தார்.

16 ஒரு சிலைத்தோப்பிலே அரசனின் தாய் மாக்கா பரியப் என்ற அருவருப்பான ஒரு சிலையைச் செய்து வைத்திருந்தாள். அதைக் கேள்வியுற்ற ஆசா அவளை அரசியாய் இராதபடி விலக்கி வைத்தான். மேலும் அச்சிலையை உடைத்து நொறுக்கிக் கெதிரோன் பள்ளத்தாக்கிலே அதைச் சுட்டெரித்தான்.

17 மேடைகள் இன்னும் இஸ்ராயேலிலே ஒழிந்தபாடில்லை. ஆசாவோ தன் வாழ்நாள் முழுவதும் நேரிய வழியிலேயே நடந்து வந்தான்.

18 தன் தந்தையும் தானும் நேர்ந்து கொண்ட வெள்ளியையும் பொன்னையும் பலவிதத் தட்டுமுட்டுகளையும் ஆசா கடவுளின் ஆலயத்திற்குச் செலுத்தினான்.

19 ஆசாவினது ஆட்சியின் முப்பத்தைந்தாம் ஆண்டு வரை நாட்டில் போரே இல்லை.

அதிகாரம் 16

1 ஆசாவினது ஆட்சியின் முப்பத்தாறாம் ஆண்டில் இஸ்ராயேலில் அரசன் பாசா யூதா நாட்டிற்கு எதிராகப் படையெடுத்து வந்து ராமாவைச் சுற்றிலும் அரண் எழுப்பினான். இவ்வாறு ஆசாவின் நாட்டில் போக்கு வரத்தைத் தடை செய்ய அவன் எண்ணம் கொண்டிருந்தான்.

2 ஆகவே ஆசா ஆண்டவரின் ஆலயத்திலிருந்தும் அரச கருவூலத்திலிருந்தும் பொன், வெள்ளி முதலியவற்றை எடுத்துத் தமாஸ்குவில் வாழ்ந்து வந்த பெனாதாத் என்ற சீரியா அரசனுக்கு அனுப்பி வைத்தான்.

3 என் தந்தைக்கும் உம் தந்தைக்கும் இடையே உடன்படிக்கை இருந்து வந்தது போல், எனக்கும் உமக்கும் இடையேயும் உடன்படிக்கை இருந்து வருகிறது. எனவே வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பி வைக்கிறேன். இஸ்ராயேலின் அரசனாகிய பாசாவோடு நீர் செய்துள்ள உடன்படிக்கைகளை நீக்கி, அவன் என்னை விட்டு விலகும்படி செய்யும்" என்று சொல்லி அனுப்பினான்.

4 இதற்கு இணங்கிப் பெனாதாத் படைத்தலைவர்களை இஸ்ராயேலரின் நகர்கள் மீது படையெடுக்கும்படி அனுப்பி வைத்தான். அவர்கள் அயோனையும் தாணையும் ஆபல் மாயீமையும், நெப்தலி கோத்திரத்து அரணுள்ள நகர்கள் எல்லாவற்றையும் கைப்பற்றினர்.

5 இதைக் கேள்வியுற்ற பாசா, ராமாவின் மதிலைக் கட்டுகிறதை நிறுத்தினான்.

6 அப்பொழுது அரசன் ஆசா யூதமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ராமாவைக் கட்டும்படி பாசா எடுத்து வந்து காபாவையும் மஸ்பாவையும் கட்டினான்.

7 அக்காலத்தில் இறைவாக்கினர் அனானி ஆசாவிடம் வந்து அவனை நோக்கி, "உம் கடவுளாகிய ஆண்டவரை நீர் நம்பாமல், சீரியா அரசனை நம்பியதால், சீரியா நாட்டுப் படை உமது கைக்குத் தப்பிற்று.

8 எத்தியோப்பியருக்கும் லிபியருக்கும் இதைவிட மிகுதியான தேர்களும் குதிரை வீரரும் பெரும் படையும் இருக்கவில்லையா? அப்படியிருந்தும் நீர் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருந்ததினால் அவர் அவர்களை உமது கையில் ஒப்படைத்தாரல்லரோ?

9 ஆண்டவர் அவனி எங்கும் நடக்கும் அனைத்தையும அறிவார். தம்மை முழுமனதோடும் நம்பும் அனைவர்க்கும் அவர் ஆற்றல் அளிப்பார். நீரோ இதன் மட்டில் மதியீனமாய் நடந்து கொண்டுள்ளீர். எனவே இன்று முதல் எதிரிகள் உம்மைப் பலமுறை எதிர்த்து வருவர்" என்றார்.

10 இதைக் கேட்ட ஆசா இறைவாக்கினர் மேல் மிகவும் சினந்து அவரைச் சிறையிலிடக் கட்டளையிட்டான். மக்களுள் பலரையும் கொன்று குவித்தான்.

11 ஆசாவின் வரலாறு முழுவதும் யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.

12 ஆசாவினுடைய ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் அவனுக்குக் கால்களில் ஒரு கொடிய வியாதி கண்டது. ஆயினும் அவன் ஆண்டவரின் துணையை நாடாது, மருத்துவரின் திறமையிலேயே நம்பிக்கை வைத்தான்.

13 தன் ஆட்சியின் நாற்பத்தோராம் ஆண்டில் இறந்து தன் முன்னோரோடு துயில்கொண்டான்.

14 ஆசா தாவீதின் நகரில் தனக்கெனக் கட்டியிருந்த கல்லறையிலேயே அவனை அடக்கம் செய்தனர். கைதேர்ந்தோரால் செய்யப் பட்ட நறுமண எண்ணெயும் நறுமணப் பொருட்களும் நிறைந்த ஒரு படுக்கையின் மேல் அவனது சடலத்தைக் கிடத்தி, அவற்றைக் கொளுத்தினர்.

அதிகாரம் 17

1 ஆசாவின் மகன் யோசபாத் அவனுக்குப் பின் அரியணை ஏறி இஸ்ராயேலுக்கு எதிராகத் தன்னைப் பலப்படுத்திக் கொண்டான்.

2 அவன் யூதாவின் அரணான அனைத்து நகர்களிலும் படையையும், யூதா நாட்டிலும் அவனுடைய தந்தை ஆசா கைப்பற்றியிருந்த எப்பிராயீமின் நகர்களிலும் காவற்படைகளையும் நிறுவினான்.

3 கடவுள் யோசபாத்தோடு இருந்தார். அவன் பாவால்களின் மேல் நம்பிக்கை வைக்காமல்,

4 தன் தந்தை தாவீதின் வழியிலே நடந்து, தன் தந்தையின் கடவுளையே நம்பி வந்தான்; இஸ்ராயேலின் பாவ வழியில் நடவாது, அவருடைய கட்டளைகளின்படியே நடந்து வந்தான். ஆண்டவர் அவனது ஆட்சியை நிலைநிறுத்தினார்.

5 யூதா குலத்தார் அனைவரும் யோசபாத்துக்குப் பரிசுகளைக் கொடுத்து வந்தனர். அதனால் அவனது செல்வமும் புகழும் நாளுக்கு நாள் வளர்ந்தது.

6 மேலும் அவன் ஆண்டவரின் வழிகளில் உறுதியுடன் நடந்து யூதாவிலிருந்த மேடைகளையும் சிலைத்தோப்புகளையும் அழிக்கத் துணிந்தான்.

7 அவன் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் யூதா நகர்களில் போதிக்கும் பொருட்டு மூப்பர்களான பெனாயில், ஒப்தியாஸ், சக்கரியாஸ்,

8 நத்தானியாஸ், ஜபதியாஸ், அசாயேல், செமிரமோத், யோனத்தான், அதோனியாஸ் ஆகியோரையும், அவர்களோடு குருக்களான எலிசமாவையும் யோராமையும் அனுப்பி வைத்தான்.

9 இவர்கள் ஆண்டவரின் திருச்சட்ட நூலைக் கையிலேந்தி யூதாவின் எல்லா நகர்களுக்கும் சென்று மக்களுக்குப் போதித்து வந்தார்கள்.

10 யூதாவைச் சுற்றிலுமிருந்த நாட்டு மக்கள் ஆண்டவருக்கு அஞ்சினர். எனவே அவர்கள் யோசபாத்துக்கு எதிராய்ப் போரிடத் துணியவில்லை.

11 பிலிஸ்தியரும் யோசபாத்துக்குப் பரிசுகளைக் கொடுத்து வந்தார்கள். அரேபியரும் அவனுக்கு ஏழாயிரத்தெழுநூறு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொடுத்து வந்தார்கள்.

12 இவ்வாறு யோசபாத் நாளுக்கு நாள் பேரும் புகழும் அடைந்து வந்தான். அப்பொழுது அவன் யூதாவிலே கோட்டைகளையும் அரணான நகர்களையும் கட்டினான்.

13 மேலும் யூதாவின் நகர்களிலே வேறுபல வேலைகளையும் செய்வதற்கு அவன் முயன்றான். யெருசலேமில் ஆற்றல் படைத்தவரும் திறமை மிக்கவருமான வீரர் பலர் இருந்தனர்.

14 தங்கள் குலத்தின்படியும் குடும்பங்களின்படியும் அவர்களின் எண்ணிக்கையாவது: யூதாவில் ஆயிரவர் தலைவர்களும், படைத்தலைவன் அத்னாவும், அவனுக்குக் கீழ் ஆற்றல் மிக்க மூன்று லட்சம் வீரர்களும் இருந்தனர்.

15 அவனுக்கு அடுத்த நிலையில் யோகனான் இருந்தான். அவனுக்குக் கீழ் இரண்டு லட்சத்து எண்பதினாயிரம் வீரர் இருந்தனர்.

16 அவனுக்கு அடுத்த நிலையில் ஆண்டவருக்குத் தன்னையே அர்ப்பணித்திருந்த ஜெக்ரியின் மகன் அமாசியாஸ் இருந்தான்; அவனுக்குக் கீழ் இரண்டு லட்சம் வீரர்கள் இருந்தனர்.

17 அவனுக்கு அடுத்த நிலையில் போரில் வல்லவனான எலியாதா இருந்தான். கேடயம் தாங்கிய வில் வீரர் இரண்டு லட்சம் பேர் அவனுக்குக் கீழ் இருந்தனர்.

18 அவனுக்கு அடுத்த நிலையில் யோசபாத் இருந்தான். போரிடத் தயாராயிருந்த லட்சத்து எண்பதினாயிரம் பேர் அவனுக்குக் கீழ் இருந்தனர்.

19 இவர்கள் எல்லாரும் அரசனுக்கு ஏவல் புரிந்து வந்தனர். இவர்களைத் தவிர யூதாவின் அரண் சூழ்ந்த நகர்களிலும் போர்வீரர் பலர் இருந்தனர்.

அதிகாரம் 18

1 யோசபாத் மிகுந்த செல்வமும் புகழும் பெற்றான். மண ஒப்பந்தம் மூலம் ஆக்காபின் உறவையும் தேடிக் கொண்டான்.

2 சில ஆண்டுகளுக்குப் பின் அவன் ஆக்காபைப் பார்க்கச் சமாரியாவுக்குப் போனான். அப்பொழுது அவனுக்கும் அவனோடு இருந்த மக்களுக்கும் விருந்து செய்ய எண்ணிய ஆக்காப், பல ஆடு மாடுகளை அடித்துக் கலாத் நாட்டு இராமோத்துக்கு அவர்களை வரும்படி அழைத்தான்.

3 இஸ்ராயேலின் அரசன் ஆக்காப் யூதாவின் அரசன் யோசபாத்தை நோக்கி, "நான் கலாத் நாட்டு இராமோத்தைப் பிடிக்கப் போகிறேன். நீர் என்னோடு வருகிறீரா?" என்று கேட்டான். அதற்கு அவன், "நீரும் நானும் ஒன்று தான். என் மக்களும் உம் மக்களும் ஒன்று தான். எனவே நான் உம்மோடு போருக்கு வருவேன்" என்றான்.

4 மேலும் யோசபாத் இஸ்ராயேலின் அரசனை நோக்கி, "தயவு செய்து ஆண்டவரின் திருவுளத்தை இன்றே கேட்டறியும்" என்றான்.

5 அப்பொழுது இஸ்ராயேலின் அரசன் போலித் தீர்க்கதரிசிகள் நானூறு பேரைக் கூட்டி வரச்செய்தான். "நாங்கள் கலாத் நாட்டு இராமோத்துக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லாமா, கூடாதா?" என்று அவர்களைக் கேட்டான். அவர்களோ, "போங்கள்; கடவுள் அரசர் கையில் அதை ஒப்புவிப்பார்" என்று மறுமொழி சொன்னார்கள்.

6 பிறகு யோசபாத், "நாங்களும் கேட்டறிய விரும்புகின்றோம்; இங்கே ஆண்டவரின் இறைவாக்கினர் யாராவது உண்டோ?" எனக்கேட்டான்.

7 அதற்கு ஆக்காப், "ஆண்டவரின் திருவுளத்தைக் கேட்டு அறிவதற்கு மற்றொருவன் இருக்கிறான். ஆனால் அவன் எனக்குச் சாதகமாய் அன்று, பாதகமாகவே எப்போதும் இறைவாக்கு உரைக்கிறான். எனவே அவனை எனக்குப் பிடிக்காது. எம்லாவின் மகன் மிக்கேயாஸ் என்பவனே அவன்" என்றான். அதற்கு யோசபாத், "அரசே, நீர் அவ்விதமாய்ப் பேசவேண்டாம்" என்றான்.

8 உடனே இஸ்ராயேலின் அரசன் அண்ணகரில் ஒருவனை அழைத்து, "எம்லாவின் மகன் மிக்கேயாசை விரைவில் அழைத்து வா" என்று அவனுக்கு கட்டளை கொடுத்தான்.

9 அப்பொழுது இஸ்ராயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச உடைகளை அணிந்தவர்களாய்ச் சமாரியா நகர் வாயிலுக்கு அருகே இருந்த ஒரு வளாகத்தில் அமர்ந்திருந்தனர். போலித்தீர்க்கதரிசிகள் அனைவரும் அவர்கள் முன் தீர்க்கதரிசனம் உரைத்த வண்ணமாய் இருந்தனர்.

10 அவ்வேளையில் கனானாவின் மகன் செதேசியாஸ். இரும்புக் கொம்புகளைச் செய்து, "இவற்றால் நீர் சீரியரை நெருக்கி அழித்துப் போடுவீர் என்று ஆண்டவர் சொல்லுகிறார்" என்றான்.

11 எல்லாத் தீர்க்கதரிசிகளும் அவ்வாறே தீர்க்கதரிசனம் கூறி, "நீர் கலாத் நாட்டு இராமோத்துக்கும் போவீர், வெற்றியும் பெறுவீர். ஆண்டவர் அவர்களை அரசர் கையில் ஒப்புவிப்பார்" என்றனர்.

12 மிக்கேயாசை அழைக்கப் போன தூதுவனோ அவரை நோக்கி, "தீர்க்கதரிசிகள் சொல்வது அனைத்தும் அரசருக்குச் சாதகமாகவே இருக்கின்றன. எனவே நீரும் அவர்களைப் போல் அரசருக்குச் சாதகமாகவே பேச வேண்டும்" என்றான்.

13 அதற்கு மிக்கேயாஸ், "ஆண்டவர்மேல் ஆணை! என் கடவுள் எனக்கு என்ன சொல்லுவாரோ, அதையே நான் அவரிடம் சொல்லுவேன்" என்றார்.

14 அவர் அரசனிடம் வந்தவுடனே அரசன் அவரை நோக்கி, "மிக்கேயாஸ், நாங்கள் கலாத் நாட்டு இராமோத்துக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லலாமா, கூடாதா?" என்று கேட்டான். அதற்கு மிக்கேயாஸ், "போங்கள், எல்லாம் வெற்றிகரமாகவே முடியும்; எதிரிகள் உங்கள் கையில் ஒப்படைக்கப்படுவார்கள்" என்று சொன்னார்.

15 அரசன் அவரைப்பார்த்து, ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கேட்கிறேன்; பொய் பேச வேண்டாம்; உண்மையைச் சொல்" என்றான்.

16 அப்பொழுது மிக்கேயாஸ், "இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் மலைகளில் சிதறி இருக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர், 'இவர்களுக்குத் தலைவன் இல்லை. அவர்கள் தத்தம் வீட்டிற்கு அமைதியாய்த் திரும்பிப் போகட்டும்' என்கிறார்" என்று சொன்னார்.

17 அதைக்கேட்டு இஸ்ராயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, "இவன் எனக்குச் சாதமாக அன்று, பாதகமாகவே எப்போதும் இறைவாக்கு உரைப்பான் என்று நான் உமக்கு ஏற்கெனவே சொல்லவில்லையா?" என்றான்.

18 அப்பொழுது மிக்கேயாஸ், "ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்: ஆண்டவர் தம் அரியணையின் மேல் வீற்றிருக்கிறதையும், விண்ணகப் படையெல்லாம் அவரது வலப்புறத்திலும் இடப்பபுறத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

19 அந்நேரத்தில் ஆண்டவர், 'இஸ்ராயேலின் அரசனாக ஆக்காப் கலாத் நாட்டு இராமோத்திற்குப் போய் அங்கே வீழ்ச்சியடையும்படி அவனை வஞ்சிக்கப் போகிறவன் யார்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள் பலவாறு பதில் சொன்னார்கள்.

20 அப்பொழுது ஓர் அரூபி வந்து ஆண்டவருக்கு முன்பாக நின்று, 'நானே போய் அவனை வஞ்சிப்பேன்' என்றது. 'எவ்வாறு?' என்று ஆண்டவர் அதைத் கேட்டதற்கு,

21 அரூபி, 'நான் போய் அவனுடைய தீர்க்கதரிசிகள் அனைவரையும் பொய் சொல்ல வைப்பேன்' என்றது. அதற்கு ஆண்டவர், 'இவ்வாறு செய்தால் அவன் உன்னாலே ஏமாந்து போவது நிச்சயம். போய் அவ்வாறே செய்' என்றார்.

22 எனவே, இதோ பொய் சொல்லும்படி உம்முடைய தீர்க்கதரிசிகள் அனைவரையும் ஆண்டவர் தூண்டியுள்ளார்; அவர் உம்மைக் குறித்துத் தீமைகளையே கூறியிருக்கிறார்" என்றார்.

23 அந்நேரத்தில் கனானாவின் மகன் செதேசியாஸ் அருகில் வந்து மிக்கேயாசைக் கன்னத்தில் அறைந்து, "ஆண்டவரின் ஆவி எவ்வாறு என்னை விட்டு அகன்று உன்னிடம் வந்து பேசிற்று என்று சொல்" என்றான்.

24 அதற்கு மிக்கேயாஸ், "நீ அறைக்கு அறை சென்று ஒளிந்து கொள்ள முயலும் போது அதை அறிந்து கொள்வாய்" என்று பதில் கூறினார்.

25 அப்பொழுது இஸ்ராயேலின் அரசன், "நீங்கள் மிக்கேயாசைப் பிடித்து அவனை நகர்த் தலைவன் ஆமோனிடமும் அமெலேக்கின் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள். 'இம்மனிதனைக் காவலில் வையுங்கள்;

26 நான் போய்ச் சமாதானத்தோடு திரும்பி வரும் வரை இவனுக்குக் கொஞ்சம் அப்பமும் தண்ணீருமே கொடுங்கள்' என்று அரசர் கட்டளையிட்டுள்ளதாக அவர்களிடம் சொல்லுங்கள்" என்றான்.

27 அதற்கு மிக்கேயாஸ் அரசனை நோக்கி, "தாங்கள் சமாதானத்தோடு திரும்பி வந்தால், ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்று அறிந்து கொள்ளும். மக்களே, நீங்கள் எல்லாரும் இதை நன்றாய்க் கவனித்து கொள்ளுங்கள்" என்றார்.

28 பின்னர் இஸ்ராயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் புறப்பட்டுக் கலாத் நாட்டு இராமோத்தின் மேல் படையெடுத்துச் சென்றார்கள்.

29 இஸ்ராயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, "நான் மாறு வேடத்தில் போருக்குப் போவேன், நீரோ அரச உடைகளை அணிந்திரும்" என்று சொல்லி, இஸ்ராயேலின் அரசன் தன் அரச உடையைக் களைந்து மாறுவேடத்தில் போருக்குச் சென்றான்.

30 சீரியா அரசனோ தன் குதிரைப் படைத்தலைவர்களை நோக்கி, "நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் சண்டையிடாமல், இஸ்ராயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்" என்று கட்டளையிட்டிருந்தான்.

31 ஆதலால் குதிரைப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்ட போது, அவன் தான் இஸ்ராயேலின் அரசன் என்று கருதி அவனோடு போரிடும்படி அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்பொழுது யோசபாத் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டான். ஆண்டவரும் அவனுக்குத் துணையாக வந்து, எதிரிகள் அவனை விட்டு விலகும்படி செய்தார்.

32 ஏனெனில், குதிரைப் படைத் தலைவர்கள், இவன் இஸ்ராயேலின் அரசன் அல்லன் என்று கண்டு கொண்டு அவனை விட்டு அகன்று போனார்கள்.

33 ஆனால் ஒரு மனிதன் ஆத்திர அவசரமாய்த் தன் வில்லை நாணேற்றி அம்பை எய்தான். அது இஸ்ராயேல் அரசனின் கழுத்துக்கும் தோளுக்கும் இடையிலே பட்டது. அப்பொழுது ஆக்காப் தன் சாரதியைப் பார்த்து, "நீ தேரைத் திருப்பி என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ, காயமடைந்துள்ளேன்" என்றான்.

34 நாள் முழுவதும் போர் கடுமையாக நடந்தது. மாலை வரை இஸ்ராயேலின் அரசன் சீரியருக்கு எதிராகத் தன் தேரிலே நின்று கொண்டு போரிட்டான்; சூரியன் மறையும் வேளையிலே உயிர் நீத்தான்.

அதிகாரம் 19

1 யோசபாத் யெருசலேமிலுள்ள தன் வீட்டுக்குச் சமாதானமாய்த் திரும்பி வந்தான்.

2 அப்பொழுது அனானியின் மகன் ஏகு என்ற திருக்காட்சியாளர் அவனுக்கு எதிரே வந்து, "நீரோ தீயவனுக்குத் துணையாய் நின்று ஆண்டவரைப் பகைக்கிறவனோடு நட்புக் கொண்டீர். அதன் பொருட்டு ஆண்டவரின் கோபம் உம்மேல் வரவேண்டியதாயிருந்தது.

3 ஆயினும் நீர் சில நற்செயல்கள் புரிந்துள்ளீர்: அதாவது, சிலைத்தோப்புகளை யூதா நாட்டிலிருந்து அகற்றி, உம் முன்னோரின் கடவுளைப் பின்பற்றி வந்துள்ளீர்" என்றார்.

4 யோசபாத் யெருசலேமில் குடிபுகுந்த பிறகு தன் குடிமக்களைக் காணப் புறப்பட்டுப் பெர்சாபே முதல், எப்பிராயீம் மலை நாடு வரை வாழ்ந்து வந்த மக்களிடம் சென்று, அவர்களைத் தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரின் வழிபாட்டுக்குத் திருப்பினான்.

5 மேலும் யூதா நாடெங்குமுள்ள அரணுள்ள நகர் ஒவ்வொன்றிலும் நீதிபதிகளை ஏற்படுத்தினான்.

6 அவர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் கடமைகளைக் கவனமாய் நிறைவேற்றுங்கள். நீங்கள் மனிதரின் கட்டளையால் அன்று, ஆண்டவரின் திருப்பெயரை முன்னிட்டே நீதி வழங்க வேண்டும். ஏனெனில் நீதி வழங்க, இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் எந்தத் தீர்ப்பு இடுகிறீர்களோ அந்தத் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.

7 ஆண்டவருக்கு அஞ்சி நடங்கள். எல்லாவற்றையும் சிரத்தையோடு செய்யுங்கள். நம் கடவுளாகிய ஆண்டவரிடம் அநீதியுமில்லை, ஓரவஞ்சனையும் இல்லை; கையூட்டும் அவரிடம் செல்லாது" என்றான்.

8 மேலும், யோசபாத் சில லேவியர்களையும் குருக்களையும் இஸ்ராயேல் குலத்தலைவர்களையும் ஏற்படுத்தி, ஆண்டவருக்கடுத்த காரியங்களிலும், மற்ற வழக்குகளிலும் மக்களுக்கு அவர்கள் நீதி வழங்கக் கட்டளையிட்டான்.

9 அவர்களை பார்த்து, "நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேர்மையோடும் நடங்கள்.

10 தத்தம் ஊர்களில் குடியிருக்கும் உங்கள் சகோதரர் இரத்தப்பழி, சட்டங்கள், கட்டளைகள், சடங்கு முறைகள் முதலியவற்றிற்கு அடுத்த வழக்குகளை உங்களிடம் கொண்டு வரும் போது, அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாதபடியும், ஆண்டவரின் சீற்றம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் வராதபடியும் அவர்களுக்குப் புத்தி புகட்டுங்கள். இவ்வாறு செய்தால், நீங்கள் குற்றமற்றவராய் இருப்பீர்கள்.

11 ஆண்டவருக்கடுத்த எல்லா வழக்குகளிலும் தலைமைக் குரு அமரியாசும், அரசனுக்கடுத்த எல்லாக் காரியங்களிலும் யூதா குலத்தலைவனும் இஸ்ராயேலின் மகனுமான ஜபதியாசும் தலைவர்களாய் இருப்பார்கள். உங்கள் நடுவே இருக்கிற லேவியர்களும் உங்களுக்கு உதவியாய் இருப்பார்கள். நீங்கள் மனத் திடனோடு உங்கள் கடமைகளை ஆற்றுவதில் கவனமாய் இருங்கள். இவ்வாறு செய்வீர்களாகில் ஆண்டவர் உங்களுக்குத் துணையாய் இருப்பார்" என்றான்.

அதிகாரம் 20

1 பின்னர் மோவாபியரும் அம்மோனியரும், அவர்களோடு மெயூனியருள் சிலரும் சேர்ந்து கொண்டு யோசபாத்துக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர்.

2 சிலர் யோசபாத்திடம் வந்து, "ஏராளமான படை வீரர் கடலின் அக்கரையிலுள்ள சீரியாவிலிருந்து உம்மேல் படையெடுத்து வருகின்றனர். அவர்கள் இப்பொழுது எங்காதி என்ற அசாசோந்தமாரிலே இருக்கிறார்கள்" என்று அறிவித்தனர்.

3 அதைக்கேட்ட யோசபாத் அஞ்சி, ஆண்டவரை முழுமனத்தோடும் மன்றாடினான்; யூதா மக்கள் அனைவரும் நோன்பு காக்கக் கட்டளையிட்டான்.

4 அவ்வாறே யூதா மக்கள் தங்கள் நகர்களிலிருந்து வந்து ஒன்று கூடினார்கள்; ஆண்டவரின் உதவியைத் தேடி மன்றாடினார்கள்.

5 அப்பொழுது யோசபாத் ஆண்டவரின் ஆலயத்தில் புது வளாகத்தின் முன் நின்று கொண்டு, யூதா மக்களும் யெருசலேம் குடிகளும் பார்க்கக் கடவுளை நோக்கி,

6 எங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரே, விண்ணகக் கடவுள் நீரே! நாடுகளின் அரசுகளை எல்லாம் ஆளுகிறவரும் நீரே! வலிமையும் ஆற்றலும் வாய்ந்தவரும் நீரே! எனவே, உம்மை எதிர்த்து நிற்க ஒருவராலும் இயலாது.

7 எங்கள் கடவுளே, நீர் அன்றோ உம் மக்கள் இஸ்ராயேலுக்கு முன்பாக இந்நாட்டு மக்கள் அனைவரையும் கொன்றுபோட்டு, அந்நாட்டை உம் நண்பன் ஆபிரகாமின் வழித்தோன்றல்களுக்கு நிரந்தரமாகக் கொடுத்தவர்?

8 ஆகவே அவர்கள் இந்நாட்டில் குடியேறி இதில் உமது திருப்பெயர் விளங்கும்படி இத்திருவிடத்தைக் கட்டினார்கள்.

9 போர், கொள்ளைநோய், பஞ்சம் முதலிய எவ்விதத் தீங்கும் எங்கள் மேல் வந்துற்றால், உமது திருப்பெயருக்குப் புகழ்ச்சியாகக் கட்டப்பட்ட இவ்வாலயத்திற்கு நாங்கள் வந்து உம் திருமுன் நின்று, எங்கள் துன்பவேளையில் உம்மைப் பார்த்துக் கூப்பிடுவோம். நீரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளி, எங்களை மீட்பீர் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

10 இதோ! அம்மோனியரும் மோவாபியரும் செயீர் மலை நாட்டாரும் ஒன்று கூடி எங்கள் மேல் படையெடுத்து வருகிறார்கள். எகிப்து நாட்டிலிருந்து இஸ்ராயேலர் வந்த காலத்தில் இவர்களின் நாட்டின் வழியாகப் போக நீர் அவர்களை அனுமதிக்கவில்லை; எனவே, இஸ்ராயேலர் அவர்களை விட்டு விலகி, அவர்களை அழிக்காது விட்டு வைத்தார்கள்.

11 இப்பொழுதோ அவர்கள் நன்றி கொன்றவர்களாய் நீர் எமக்கு உடமையாக்கின இந்நாட்டிலிருந்து எங்களைத் துரத்திவிட முயலுகிறார்கள்.

12 எங்கள் கடவுளே, அவர்களுக்கு நீர் நீதி வழங்க மாட்டீரோ? எங்களுக்கு எதிராக வருகிற இப்பெரும் படையை எதிர்த்து நிற்க எங்களுக்கு வலுவில்லை என்பது உண்மையே. நாங்கள் செய்ய வேண்டியது எதுவெனத் தெரியவில்லை. ஆகையால் உம் உதவியை நாடுவதை விட, வேறு வழி அறியோம்" என்று மன்றாடினான்.

13 யூதா குலத்தார் அனைவரும் அவர்களின் குழந்தைகளும் மனைவியரும் புதல்வர்களும் ஆண்டவரின் திருமுன் நின்று கொண்டிருந்தனர்.

14 அந்நேரத்தில் ஆண்டவரின் ஆவி சபையார் நடுவிலே இருந்த யகாசியேலின் மேல் இறங்கியது. இவர் ஆசாப்பின் குலத்தில் உதித்த ஒரு லேவியர். இவருடைய தந்தை பெயர் சக்கரியாஸ்; இவனுடைய தந்தை பெயர் பனாயியாஸ்; இவன் தந்தை பெயர் ஏகியேல்; இவன் தந்தை பெயர் மத்தானியாஸ்.

15 யகாசியேல் எழுந்து மக்களை நோக்கி, "யூதாவின் மக்களே, யெருசலேமின் குடிகளே, அரசர் யோசபாத்தே, அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள். ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'நீங்கள் எதிரிகளின் பெரும் படையைக்கண்டு அஞ்சவும் வேண்டாம்; நிலை கலங்கவும் வேண்டாம். இப்போர் கடவுளின் போரேயன்றி உங்களது போரன்று.

16 நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லுங்கள்; அவர்கள் சீஸ் என்ற குன்று வழியாய் வருவார்கள்; நீங்கள் போய் எருவேல் பாலைவனத்திற்கு எதிரேயுள்ள ஆற்றின் கடைக்கோடியில் அவர்களைச் சந்திக்க வேண்டும்.

17 நீங்கள் போராட வேண்டியதே இல்லை. திடமனத்துடன் நின்றாலே போதும். யூதாவின் மனிதரே, யெருசலேமின் குடிகளை, உங்களுக்குத் துணையாக ஆண்டவர் எவ்விதமாய் எழுந்து வருவாரென்று உங்கள் கண்ணாலேயே காண்பீர்கள். அஞ்சாமலும் நிலை கலங்காமலும் இருங்கள். நாளைக்கு அவர்கள் மேல் படையெடுத்துச் செல்லுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்' என்பதே" என்றார்.

18 இதைக் கேட்டவுடன் யோசபாத்தும் யூதா குலத்தார் அனைவரும் யெருசலேமின் குடிகளும் நெடுங்கிடையாய் விழுந்து ஆண்டவரை ஆராதித்தனர்.

19 காகாத்தின் புதல்வர்களான லேவியர்களும் உரத்த குரலில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தத் தொடங்கினார்கள்.

20 அவர்கள் அதிகாலையில் எழுந்து தேக்குவா என்ற பாலைவனத்தின் வழியாய் நடந்து போயினர். அப்பொழுது யோசபாத் அவர்களின் நடுவே நின்று, "யூதாவின் மனிதரே, யெருசலேமின் குடிகளே, நீங்கள் அனைவரும் எனக்குச் செவி கொடுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர்பால் உங்கள் நம்பிக்கை வையுங்கள்; வைத்தால் உங்களுக்குத் தீங்கு ஒன்றும் வராது. அவருடைய இறைவாக்கினரின் சொல்லை நம்புங்கள்; நம்பினால் எல்லாம் உங்களுக்கு வெற்றிகரமாய் முடியும்" என்று சொன்னான்.

21 இவ்வாறு அவன் மக்களுக்குப் புத்திமதி கூறி, அவர்களுடைய அணிகளுக்கு முன்னே நடக்கவும் ஆண்டவரைத் துதிக்கவும், பாடகர்களைக் கூட்டம் கூட்டமாய் நிறுத்தி, "ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர்தம் இரக்கம் என்றென்றும் உள்ளது" என்று பாடவும் கட்டளையிட்டான்.

22 அவர்கள் அவ்வாறே பாடி ஆண்டவரைத் துதிக்கத் தொடங்கினர். உடனே யூதாவை எதிர்த்து வந்த பகைவர்களான அம்மோனியரும் மோவாபியரும் செயீர் மலைநாட்டாரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகி ஆண்டவரது வல்லமையினால் வெட்டுண்டு விழுந்தனர்.

23 அதாவது, அம்மோனியரும் மோவாபியரும் செயீர் மலை நாட்டாரைத் தாக்கி அவர்களைக் கொன்று போட்டனர். அவர்களைக் கொன்றழித்த பின்போ அவர்கள் தங்களுக்குள்ளே கைகலந்து ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர்.

24 யூதா மனிதர் பாலைவனத்தை நோக்கியிருந்த ஒரு மேட்டின் மேல் ஏறிச் சுற்றிலும் பார்த்தனர். அப்பொழுது எங்குப் பார்த்தாலும் ஒரே பிணங்களாகவே கிடந்தன. இதைக் கண்ணுற்ற அவர்கள் தங்கள் எதிரிகளில் ஒருவனாவது உயிர் தப்பவில்லை என்று அறிந்து கொண்டனர்.

25 உடனே யோசபாத்தும் அவனுடைய மக்களும் சென்று மடிந்தோரின் உடைமைகளைக் கொள்ளையிடத் தொடங்கினார்கள். பிணங்களின் அருகே ஏராளமான பொருட்களும் ஆடையணிகளும் விலையுர்ந்த பொருட்களும் கிடக்கக் கண்டு, மூன்று நாட்களாக அவற்றைக் கொள்ளையிட்டனர்.

26 நான்காம் நாள் புகழ்ச்சிப் பள்ளத்தாக்கிலே அவர்கள் ஒன்று கூடினர். அங்கே ஆண்டவரைப் புகழ்ந்து பாடினர். எனவே இன்று வரை அவ்விடம் 'புகழ்ச்சிப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்பட்டு வருகிறது.

27 அங்கிருந்து யூதாவின் மனிதர் யாவரும், யெருசலேம் நகர மக்கள் அனைவரும் யோசபாத்தைப் பின்பற்றி மகிழ்ச்சியோடு யெருசலேமுக்குத் திரும்பினர். ஏனெனில் ஆண்டவர் அவர்களுடைய பகைவர்களை முறியடித்ததன் மூலம் அவர்கள் மகிழ்வுறச் செய்திருந்தார்.

28 ஆகையால் அவர்கள் யெருசலேமுக்கு வந்து, தம்புருகளையும் ஒலித்து ஆண்டவரின் ஆலயத்திற்குள் நுழைந்தனர்.

29 ஆண்டவர் இஸ்ராயேலின் எதிரிகளோடு போரிட்டார் என்ற செய்தியை கேள்வியுற்ற எல்லா நாட்டினரும் ஆண்டவருக்கு அஞ்சினர்.

30 கடவுளின் அருளால் யோசபாத்தின் அரசு எங்கணும் அமைதி நிலவியது.

31 யோசபாத் யூதா நாட்டை ஆண்டு வந்தான். அவன் அரியணை ஏறின போது அவனுக்கு வயது முப்பத்தைந்து. இருபத்தைந்து ஆண்டுகள் அவன் யெருசலேமில் ஆட்சி புரிந்தான். அவன் தாய் சேலாகீயின் மகள் அஜுபா.

32 அவன் தன் தந்தை ஆசாவின் வழிகளை விட்டு விலகாது ஆண்டவர் திருமுன் நேர்மையாய் நடந்து வந்தான்.

33 ஆயினும் அவன் மேடைகளை அழித்துவிடவுமில்லை; மக்களும் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரிடம் இன்னும் மனம் திரும்பி வரவுமில்லை.

34 யோசபாத்தின் முழு வரலாற்றையும் இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் காணலாம். அனானியின் மகன் ஏகு அதை மேற்சொன்ன ஏட்டினிலே எழுதி வைத்தான்.

35 யூதாவின் அரசன் யோசபாத் இறுதியில் மிகவும் கெட்ட நடத்தையுள்ள ஒக்கோசியாஸ் என்ற இஸ்ராயேலின் அரசனோடு தோழமை கொண்டான்.

36 மேலும் தார்சீசுக்குப் போகும்படி கப்பல்களைக் கட்ட அவனோடு ஒப்பந்தமும் செய்து கொண்டான். அக்கப்பல்கள் அசியோங்கபேரில் கட்டப்பட்டன.

37 ஆனால் மரேசா ஊரானாகிய தோதாவின் மகன் எலியெசர் யோசபாத்தை நோக்கி, "நீர் ஒக்கோசியாசோடு தோழமை கொண்டமையால், கடவுளாகிய ஆண்டவர் உம் ஆக்கச் செயல்களைக் கெடுத்துவிடுவார்" என்று இறைவாக்கு உரைத்தார். அவர்களின் கப்பல்கள் உடைந்து போய்த் தார்சீசுக்குச் செல்ல முடியாது போயின.

அதிகாரம் 21

1 யோசபாத் தன் மூதாதையரோடு கண்வளர்ந்து தாவீதின் நகரில் தன் முன்னோர் அருகில் புதைக்கப்பட்டான். அவனுடைய மகன் யோராம் அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.

2 யூதாவின் அரசன் யோசபாத்துக்குப் பிறந்த புதல்வர்களாகிய ஆசரியாஸ், யாகியேல், சக்கரியாஸ், அசாரியாஸ், மிக்காயேல், சப்பத்தியா என்பவர்கள் அவனுடைய சகோதரராவர்.

3 அவர்களின் தந்தை அவர்களுக்குப் பொன்னையும் வெள்ளியையும் நன்கொடையாய்க் கொடுத்ததுமன்றி, விலையேறப்பெற்ற சொத்துகளையும் யூதாவில் அரணுள்ள நகர்களையும் அவர்களுக்கு விட்டுச் சென்றிருந்தான். யோராம் தலை மகனானதால் அவனுக்கு அரசையே கொடுத்திருந்தான்.

4 யோராம் தன் தந்தையின் அரியணையில் அமர்ந்து தன் அரசை நிலை நாட்டின பின், தன் சகோதரர் எல்லாரையும் தன் வாளுக்கு இரையாக்கினான்.

5 யோராம் அரசு கட்டில் ஏறின போது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவன் யெருசலேமில் எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.

6 அவன் இஸ்ராயேல் அரசர்களின் வழிகளிலே நடந்து ஆக்காபின் வீட்டார் செய்தது போல் தானும் செய்து வந்தான். ஆக்காபின் மகளே அவனுக்கு மனைவி. அவன் ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து வந்தான்.

7 ஆயினும் ஆண்டவர் தாவீதோடு உடன்படிக்கை செய்து, அவருக்கும் அவருடைய புதல்வருக்கும் என்றென்றும் ஒரு ஒளிவிளக்கைக் கொடுப்பதாக வாக்களித்திருந்தமையால் அவர் தாவீதின் குலத்தை அழித்துவிட மனமில்லாதிருந்தார்.

8 அக்காலத்தில் இதுமேயர் யூதா அரசனுக்கு அடிபணிய மறுத்து, தங்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்திக் கொண்டனர்.

9 யோராம் தன் படைத் தலைவர்களையும் குதிரை வீரர்களையும் அழைத்துக் கொண்டு இரவோடு இரவாய் முற்றுகையிட்டிருந்த இதுமேயர்களையும் அவர்களின் குதிரைப் படைத்தலைவர்களையும் முறியடித்தான்.

10 ஆயினும் இதுமேயர் முன் போல் யூதாவுக்கு அடங்காது இன்று வரை கலகம் செய்து கொண்டு தான் வருகிறார்கள் லெப்னா நாட்டாரும் கிளர்ச்சி செய்து அவனை விட்டுப் பிரிந்து போயினர். யோராம் தன் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்ததால் இவ்வாறு நடந்தது.

11 மேலும் யூதாவின் எல்லா நகரங்களிலும் மேடைகளை அமைத்து யெருசலேமின் குடிகள் விபசாரம், செய்யவும், யூதாவின் குடிகள் பாவம் புரியவும் அவன் காரணமாய் இருந்தான்.

12 அப்பொழுது இறைவாக்கினர் எலியாசிடமிருந்து கடிதம் ஒன்று அவனுக்கு வந்தது. அதில் எழுதியிருந்ததாவது: "உம் தந்தை தாவீதின் கடவுளான ஆண்டவர் கூறுகிறதாவது: 'நீ உன் தகப்பன் யோசபாத்தின் வழிகளிலும் நடவாமல்,

13 இஸ்ராயேல் அரசர்களின் வழியிலே நடந்து ஆக்காபின் வீட்டாரைப் போல் யூதாவையும் யெருசலேமின் குடிகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்தினாய்; உன்னிலும் நல்லவர்களாயிருந்த உன் தந்தை வீட்டாரான உன் சகோதரர்களையும் கொன்று குவித்தாய்.

14 எனவே, ஆண்டவராகிய நாம் உன்னையும் உன் குடிகளையும் உன் புதல்வர் மனைவியரையும் உன் உடைமைகள் அனைத்தையும் கொள்ளை நோயால் வாதிப்போம்.

15 நீயோ மிகக் கொடிய வயிற்று நோயால் வாட்டி வதைக்கப்படுவாய். அதன் பொருட்டு நாளுக்கு நாள் உன் குடல்கள் கொஞ்சமாக அழுகி அழிந்து போகும்' என்கிறார்" என்பதாம்.

16 அவ்வாறே ஆண்டவர் பிலிஸ்தியர்களையும் எத்தியோப்பியரின் அண்டை நாட்டினரான அரேபியர்களையும் யோராமுக்கு எதிராகத் தூண்டிவிட்டார்.

17 அவர்கள் யூதாவில் நுழைந்து நாட்டைப் பாழ்படுத்தினர்; அரசனின் அரண்மனையில் புகுந்து அகப்பட்ட எல்லாப் பொருட்களையும் சூறையாடினர்; அவனுடைய கடைசிப் பிள்ளையான யோவக்காசைத் தவிர மற்ற மக்களையும் மனைவியரையும் அவர்கள் கடத்திச் சென்றனர்.

18 இது தவிர, தீராத குடல் நோயால் ஆண்டவர் அவனை வாட்டி வதைத்தார்.

19 நாட்கள் நகர்ந்தன; இரண்டு ஆண்டுகளும் உருண்டோடின. இதற்குள் யோராமின் குடல்கள் அழுகிப்போயின. எனவே, அவன் உயிர் துறந்தான். அவன் இத்தகைய இழிவான நோய் கண்டு இறந்த காரணத்தால் மக்கள் அவனுடைய முன்னோர்களுக்குச் செய்து வந்த வழக்கப்படி நறுமணப்பொருள் ஒன்றும் கொளுத்தாமலே அவனை அடக்கம் செய்தார்கள்.

20 அவன் அரியணை ஏறியபோது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. யெருசலேமில் எட்டு ஆண்டுகள் அவன் அரசோச்சினான்; ஆனால் நேரிய வழியில் நடக்கவில்லை. தாவீதின் நகரில் அவனைப் புதைத்தனர். ஆயினும் அரசர்களின் கல்லறையில் அவனை அடக்கம் செய்யவில்லை.

அதிகாரம் 22

1 யெருசலேமின் குடிகள் யோராமுக்குப் பதிலாக அவனுடைய இளைய மகன் ஒக்கோசியாசை அரசனாக்கினார்கள். ஏனெனில் அரேபியரோடு பாளையத்திலே நுழைந்த கொள்ளைக் கூட்டத்தினர் மூத்த புதல்வர் அனைவரையும் கொன்று போட்டிருந்தனர். இவ்வாறு யூதாவின் அரசன் யோராமின் மகன் ஒக்கோசியாஸ் அரியணை ஏறினான்.

2 அவன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது அவனுக்கு வயது நாற்பத்திரண்டு. ஒரே ஆண்டு தான் யெருசலேமில் அவன் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் அத்தாலியா.

3 இவள் அம்ரியின் மகள். அவனும் ஆக்காப் வீட்டாரின் வழிகளிலே நடந்தான். அவன் தீய வழியில் நடப்பதற்கு அவனுடைய தாய் அவனுக்குக் கொடுத்திருந்த கெடுமதியே காரணம்.

4 ஆகையால் அவன் ஆக்காபின் குடும்பத்தாரைப் போல் ஆண்டவர் திருமுன் தீயன புரிந்தான். அவனுடைய தந்தை இறந்த பின் அவனுக்குக் கேடாக அந்தக் குடும்பத்தாரே அவனுக்கு ஆலோசகராயினர்.

5 அவர்களின் கெடுமதிகளைக் கேட்டு ஒக்கோசியாஸ் இஸ்ராயேலின் அரசன் யோராம் என்ற ஆக்காபின் மகனோடு கலாத் நாட்டு இராமோத்தின் மேல் படையெடுத்துச் சென்று சீரியா அரசன் அசாயேலை எதிர்த்துப் போரிட்டான். அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினர்.

6 யோராம் அப்போரில் பல காயங்களைப் பட்டுத் துன்புற்றமையால் நலம் பெறுவதற்காக எஸ்ராயேலுக்குச் சென்றான். அப்பொழுது நோய்வாய்ப்பட்டுக் கிடந்த யோராமைப் பார்ப்பதற்காக யூதாவின் அரசன் யோராமின் மகன் ஒக்கோசியாஸ் அங்குச் சென்றான்.

7 ஒக்கோசியாஸ் யோராமைப் பார்க்க வந்தது கடவுளின் திருவுளத்தினால் அவனுக்குக் கேடாக விளைந்தது. எப்படியெனில் அவன் எஸ்ராயேலுக்கு வந்ததும் யோராமோடு சேர்ந்து கொண்டு நம்சியின் மகன் ஏகுக்கு எதிராய்ப் போரிடப் புறப்பட்டான். ஏகுவோ ஆக்காபின் வீட்டாரைக் கொன்று குவிப்பதற்காகக் கடவுளால் அபிஷுகம் செய்யப்பட்டவன்.

8 ஏகு ஆக்காபின் குடும்பத்தாரைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த போது வழியில் ஒக்கோசியாசுக்கு அடிபணிந்து வந்த யூதாவின் தலைவர்களையும், ஒக்கோசியாசின் சகோதரரின் புதல்வர்களையும் கண்டு அவர்களையும் பிடித்துக் கொன்று போட்டான். பின்பு ஒக்கோசியாசைத் தேடினான்.

9 அவன் சமாரியாவில் ஒளிந்திருப்பதாகக் கேள்வியுற்று அவனைப் பிடித்து வரக் கட்டளையிட்டான். ஒக்கோசியாஸ் தன்னிடம் கொண்டுவரப் பட்டதும் ஏகு அவனைக் கொன்றான். இவன் ஆண்டவரை முழு இதயத்தோடும் பின்பற்றி வந்திருந்த யோசபாத்தின் மகன் என்பதற்காக மக்கள் இவனை அடக்கம் செய்தனர். இதனால் ஒக்கோசியாசின் குடும்பத்தாரில் யாரும் இனி அரியணை ஏற முடியாது போயிற்று.

10 ஒக்கோசியாசின் தாய் அத்தாலியா தன் மகன் இறந்ததை அறிந்ததும் யோராமின் குடும்பத்திலுள்ள அரச குலத்தார் அனைவரையும் கொன்று போட்டாள்.

11 ஆனால் அரசனின் மகள் யோசாபியாத் கொல்லப்படவிருந்த அரச புதல்வர்களுக்குள் ஒக்கோசியாசின் மகன் யோவாசை மறைவாய்த் தூக்கிக் கொண்டு போய் அவனையும் அவனுடைய செவிலித்தாயையும் படுக்கையறையிலே மறைத்து வைத்தாள். இந்த யோசாபியாத் யோராமின் மகளும் தலைமைக் குரு யோயியாதாவின் மனைவியும் ஒக்கோசியாசின் சகோதரியும் ஆவாள். எனவே, அத்தாலியா அவனைக் கொன்று போடவில்லை.

12 அத்தாலியா ஆறு ஆண்டுகள் நாட்டை ஆண்டு வந்தாள். அந்த ஆறு ஆண்டுகளும் அரச மகன் முன் சொல்லப் பட்டவர்களோடு கடவுளின் ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.

அதிகாரம் 23

1 அவளது ஆட்சியின் ஏழாம் ஆண்டில் யோயியாதா திடங்கொண்டு நூற்றுவர் தலைவரான எரோகாமின் மகன் அசாரியாசையும், யோகனானின் மகன் இஸ்மாயேலையும், ஒபேதின் மகன் அசாரியாசையும், அதயாசின் மகன் மகவாசியாசையும், ஜெக்ரியின் மகன் எலிசபாத்தையும் வரச்சொல்லி அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார்.

2 இவர்கள் யூதா நாடெங்கும் போய் யூதாவின் நகர்களிலெல்லாம் இருந்த லேவியர்களையும், இஸ்ராயேல் குலத் தலைவர்களையும் கூட்டிக் கொண்டு யெருசலேமுக்கு வந்தனர்.

3 இவர்கள் எல்லாரும் கடவுளின் ஆலயத்தில் அரசனோடு உடன்படிக்கை செய்து கொண்டனர். யோயியாதா அவர்களை நோக்கி, "இதோ அரசனின் மகனைப் பாருங்கள், தாவீதின் புதல்வரைக் குறித்து ஆண்டவர் சொன்னபடியே அவன் அரசாளப் போகிறான்.

4 நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில்:

5 ஓய்வு நாளில் வழக்கப்படி வரவேண்டிய உங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நகர வாயிலிலும், இரண்டாம் பகுதியினர் அரண்மனையிலும், மூன்றாவது பகுதியினர் அடிப்படை வாயிலிலும் இருக்க வேண்டும். எஞ்சிய மக்களெல்லாரும் ஆண்டவரின் ஆலய வளாகங்களில் இருக்க வேண்டும்.

6 குருக்களையும் திருப்பணி புரியும் லேவியர்களையும் தவிர ஒருவரும் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது. தூய்மையாக்கப்பட்ட இவர்கள் மட்டுமே நுழைய வேண்டும். ஏனைய மக்கள் அனைவரும் ஆண்டவரின் கட்டளைகளை அனுசரிக்கக்கடவார்கள்.

7 லேவியர்களோ ஆயுதம் தாங்கியோராய் அரசரைச் சுற்றிலும் நிற்கவேண்டும். ஆலயத்தில் நுழையும் மற்ற எவனும் கொல்லப் படுவான். அரசர் செல்லுமிடமெல்லாம் லேவியர் அவரைப் பின்செல்ல வேண்டும்" என்றார்.

8 குரு யோயியாதா கட்டளையிட்டவாறே லேவியர்களும் யூதா மக்கள் அனைவரும் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமான தத்தம் ஆட்களைக் கூட்டிவந்திருந்தனர். ஏனெனில் வாரந்தோறும் முறைப்படி வேலை செய்து முடித்த குழுக்கள் வீட்டுக்குப் போகுமாறு யோயியாதா அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை.

9 தாவீது அரசர் ஆண்டவரின் ஆலயத்திற்குக் காணிக்கையாகக் கொடுத்திருந்த ஈட்டிகளையும் கேடயங்களையும் பரிசைகளையும் குரு யோயியாதா நூற்றுவர் தலைவர்களிடம் கொடுத்தார்.

10 ஏனையோர் வாள் ஏந்தியவராய் யோயியாதாவின் கட்டளைப்படி ஆலயத்தின் வலப்பக்கமும் இடப்பக்கமும் பலிபீடத்திற்கு முன்னும் ஆலயத்திற்கு முன்னும் அரசனைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டனர்.

11 பின்பு அரச மகனை வெளியே கொண்டு வந்து அவனது தலை மேல் மகுடத்தை வைத்து, திருச்சட்ட நூலை அவனது கையில் கொடுத்து அவனை அரசனாக்கினார்கள். பின்பு பெரியகுரு யோயியாதாவும் அவர் புதல்வரும் அவனை அபிஷுகம் செய்து அவனுக்கு நல்லாசி கூறி, "அரசர் வாழ்க!" என்றனர்.

12 மக்கள் ஓடிவந்து அரசனைப் புகழும் பேரொலியைக் கேட்டவுடன், அத்தாலியா ஆண்டவரின் ஆலயத்தில் நுழைந்து மக்களிடம் பேச வந்தாள்.

13 ஆனால் வாயிற்படியின் மேல் அரசன் நிற்கிறதையும், தலைவர்கள் தங்கள் படைகளோடு அரசனைச் சூழ்ந்திருக்கிறதையும், நாட்டின் குடிகள் எல்லாரும் மன மகிழ்ந்து எக்காளம் ஊதிப் பற்பல இசைக் கருவிகளை வாசித்துப் பாட்டுப்பாடிப் புகழ்ந்து கொண்டாடுகிறதையும் கண்டவுடன் அத்தாலியா தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "சதி! சதி!" கத்தினாள்.

14 பெரிய குரு யோயியாதா படைத்தலைவர்களையும் நூற்றுவர் தலைவர்களையும் பார்க்க வெளியே போய், அவர்களை நோக்கி, "அவளைப் பிடித்துச் சுற்று மதிலுக்குப் புறம்பே கொண்டு போய் வாளால் வெட்டி வீழ்த்துங்கள். ஆண்டவரின் ஆலயத்தில் அவளைக் கொன்று போடக்கூடாது" என்று சொன்னார்.

15 அதன்படி அவர்கள் அவளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி அரண்மனையின் குதிரை வாயிலுக்குக் கொண்டு வந்து அங்கே அவளைக் கொன்று போட்டனர்.

16 பின்னர், யோயியாதா, "நாங்கள் இனி ஆண்டவரின் மக்களாய் இருப்போம்" என்று மக்கள் அனைவரும் அரசனும் தங்களுக்குள் உடன்படிக்கை செய்துகொள்ளச் செய்தார்.

17 அப்பொழுது எல்லா மக்களும் கூடிப் பாவாலின் கோவிலிலே நுழைந்து அக்கோயிலை இடித்துப் போட்டனர்; பலிபீடத்தையும் சிலைகளையும் தகர்த்துப் பாவாலின் குருவாயிருந்த மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாக கொன்று போட்டனர்.

18 தாவீது வகுத்திருந்த பிரிவுகளின்படி யோயியாதா ஆண்டவரின் ஆலயத்தைக் கண்காணிக்கும் அலுவலர்களை ஏற்படுத்திக் குருக்களின் அதிகாரத்தின் கீழும் லேவியரின் அதிகாரத்தின் கீழும் அவர்களை வைத்தார். தாவீதின் கட்டளைப்படியே, அவர்கள் பாடி மகிழ்ந்து மோயீசன் திருச்சட்டத்தில் எழுதியிருந்தபடி தகனப்பலிகளை ஆண்டவருக்குச் செலுத்தக் கட்டளையிட்டார்.

19 மேலும் எவ்வகையிலேனும் தீட்டுப்பட்டவர்கள் ஆண்டவரின் ஆலயத்தில் நுழையாதபடி அதன் வாயில்களுக்குக் காவலரை ஏற்படுத்தினார்.

20 பின் நூற்றுவர் தலைவர்களும் ஆற்றல் வய்ந்த வீரர்களும் மக்கள் தலைவர்களும் நாட்டு மக்கள் அனைவரும் புடைசூழ ஆண்டவரின் ஆலயத்திலிருந்து அரசனை உயர்ந்த வாயில் வழியாக அரண்மனைக்குள் அழைத்துச் சென்று, அங்கே அரியணையில் அவனை அமர்த்தினார்.

21 அப்பொழுது மக்கள் எல்லாரும் மகிழ்ந்தனர். நகரில் அமைதி நிலவிற்று. அத்தாலியாளோ வாளுக்கு இரையாகி மாண்டாள்.

அதிகாரம் 24

1 யோவாஸ் அரசானான போது அவன் ஏழு வயதுள்ளவனாக இருந்தான். அவன் யெருசலேமில் நாற்பது ஆண்டுகள் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் சேபியா. அவள் பெர்சபே என்ற ஊரில் பிறந்தவள்.

2 குரு யோயியாதாவின் வாழ்நாள் முழுவதும் யோவாஸ் ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்து வந்தான்.

3 யோயியாதா அவனுக்கு இரண்டு பெண்களை மணமுடித்துக் கொடுத்தார். அவர்களால் யோவாஸ் புதல்வர்களையும் புதல்வியரையும் பெற்றான்.

4 ஆண்டவரின் ஆலயத்தைச் செப்பனிட யோவாஸ் தீர்மானித்தான்.

5 எனவே, குருக்களையும் லேவியர்களையும் கூடிவரச்செய்து அவர்களைப் பார்த்து, "நீங்கள் புறப்பட்டு யூதா நகர்களுக்கெல்லாம் போய் உங்கள் ஆண்டவரின் ஆலயத்தை ஆண்டு தோறும் பழுதுபார்க்க இஸ்ராயேலெங்கும் பணம் சேகரியுங்கள்" என்றான். லேவியர்கள் இது மட்டில் அசட்டையாய் இருந்ததைக் கண்டு,

6 அரசன் பெரிய குரு யோயியாதாவை அழைத்து, "ஆண்டவரின் அடியானான மோயீசன் சாட்சியக் கூடாரத் திருப்பணிக்காக இஸ்ராயேல் மக்கள் எல்லாருமே வரி கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். லேவியரோ அவ்வரிப் பணத்தை யூதாவிலும் யெருசலேமிலும் வசூலிக்காது இருக்கின்றனர். இதை அறிந்தும் நீர் ஏன் அவர்களைக் கட்டாயப்படுத்தாது இருக்கிறீர்?

7 அந்தப் பழிகாரி அத்தாலியாவும் அவளுடைய புதல்வரும் கடவுளின் ஆலயத்தை அழித்து, ஆண்டவரின் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களையெல்லாம் கொள்ளையிட்டு அதைக் கொண்டு பாவாலின் கோவில்களை அழகுபடுத்தி விட்டனரே!" என்றான்.

8 அப்பொழுது அரசனின் கட்டளைப்படியே ஒரு பெட்டியைச் செய்து அதை ஆண்டவரது ஆலய வாயிலுக்கு வெளியே வைத்தனர்.

9 கடவுளின் அடியான் மோயீசன் பாலைவனத்தில் இஸ்ராயேலுக்குச் செலுத்த வேண்டும்" என்று யூதாவிலும் யெருசலேமிலும் பறையறைந்தனர்.

10 இதைக் கண்டு எல்லாத் தலைவர்களும் மக்களும் மகிழ்ச்சியுற்றனர். அவர்கள் வரிப்பணத்தை ஏராளமாகக் கொண்டு வந்ததனால் அப்பெட்டி நிறைந்து போயிற்று.

11 நிறையப் பணம் இருக்கிறதென்று கண்டால் லேவியர்கள் அப்பெட்டியை அரசனிடம் கையோடு கொண்டு வருவார்கள். அப்பொழுது அரசனின் செயலனும் பெரிய குருவால் நியமிக்கப்பட்ட அலுவலனும் வந்து, பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்த பின் அதைத் திரும்ப அதன் பழைய இடத்திலேயே வைத்து விட்டுப் போவார்கள். இவ்வாறு நாள்தோறும் செய்து ஏராளமான பணம் திரட்டினார்கள்.

12 அதை அரசனும் யோயியாதாவும் ஆண்டவரின் ஆலய வேலையைக் கவனித்து வந்த ஊழியரின் கையிலே கொடுத்தார்கள். அதைக்கொண்டு அவர்கள் ஆண்டவரின் ஆலயத்தைப் பழுதுபார்க்க கொத்தர்களையும் தச்சர்களையும் கூலிக்கு அமர்த்தினார்கள். இரும்பு, வெண்கல வேலையில் கைதேர்ந்த தட்டர்களும் ஆலய வேலைக்கென அமர்த்தப்பட்டனர்.

13 இவ்வாறு அவர்கள் தத்தம் வேலையைக் கவனமுடன் செய்து வந்தனர். சுவர்களைச் செப்பனிட்டுக் கடவுளின் ஆலயத்தைப் பலப்படுத்தி அதை பழைய நிலைக்குக் கொண்டு வந்தனர்.

14 வேலைகள் எல்லாம் முடிந்த பின் எஞ்சிய பணத்தை அரசனுக்கும் யோயியாதாவுக்கும் முன்பாகக் கொண்டு வந்தனர். அவர்கள் அதைக்கொண்டு ஆண்டவரின் ஆலயத்தில் செய்யப்படும் தகனப்பலி முதலிய வழிபாட்டுச் சடங்குகளுக்கு வேண்டிய தட்டுமுட்டுகளையும் கலயங்களையும், பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் செய்தனர். யோயியாதாவின் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரின் ஆலயத்தில் தகனப் பலிகள் செலுத்தப்பட்டு வந்தன.

15 யோயியாதா வயது முதிர்ந்த கிழவரானார். அவர் இறந்த போது அவருக்கு வயது நூற்று முப்பது.

16 அவர் இஸ்ராயேலுக்கும் அரண்மனைக்கும் நன்மை செய்திருந்ததனால் மக்கள் தாவீதின் நகரில் அரசர்களுக்கு அருகே அவரை அடக்கம் செய்தார்கள்.

17 யோயயியாதா இறந்தபின் யூதாவின் தலைவர்கள் வந்து அரசனுக்கு மரியாதை செலுத்தினர். அப்பொழுது அரசன் அவர்களின் உபசார மிகுதியினால் மயங்கி அவர்களது விருப்பப்படி நடக்கத் தொடங்கினான்.

18 யூதா மக்கள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரின் ஆலயத்தைப் புறக்கணித்து விட்டுச் சிலைத்தோப்புகளை அமைத்துச் சிலைகளையும் வழிபடத் தொடங்கினர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் யெருசலேமின் மேலும் கடவுள் கடுங்கோபம் கொண்டார்.

19 அவர்கள் மனந்திரும்பித் தம்மிடம் திரும்பவும் வரும்படியாக ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினரை அனுப்பினார். ஆயினும் மக்கள் இவர்களின் குரல்களுக்குச் செவிமடுக்கவே இல்லை.

20 ஆகவே ஆண்டவரின் ஆவி குரு யோயியாதாவின் மகன் சக்கரியாசின் மேல் இறங்கினது. இவர் மக்களுக்கு முன் நின்று அவர்களை நோக்கி, "கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'நீங்கள் ஆண்டவரின் கற்பனைகளை மீறுவது ஏன்? அதனால் உங்களுக்கு நன்மை ஒன்றும் வராது. நீங்கள் ஆண்டவரைப் புறக்கணித்ததால் ஆண்டவரும் உங்களைப் புறக்கணிப்பார்' என்பதாம்" என்றார்.

21 இதைக் கேட்டு மக்கள் அவருக்கு எதிராய்ச் சதிசெய்து அரசனின் கட்டளைப்படி ஆண்டவரின் ஆலய முற்றத்தில் அவரைக் கல்லால் எறிந்தனர்.

22 இவ்வாறு செய்நன்றி கொன்றவனாய் யோவாஸ் யோயியாதாவினுடைய மகனைக் கொலை செய்தான். இவர், "ஆண்டவர் இதைப் பார்க்கிறார்; அதற்குப் பழிவாங்குவார்" என்று சொல்லி கொண்டே உயிர்விட்டார்.

23 அடுத்த ஆண்டு சீரியர் அவனுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, யூதாவிலும் யெருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்று குவித்தனர்; கொள்ளையிட்ட அவர்களின் உடைமைகளை எல்லாம் தமாஸ்குவில் இருந்த தங்கள் அரசனுக்கு அனுப்பி வைத்தனர்.

24 சீரியர் படை சிறியதே எனினும் யூதா மக்கள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்திருந்ததால் ஆண்டவர் அவர்களது பெரும் படையைச் சீரியர் கையில் ஒப்படைத்தார்; யோவாசை கொடூரமாகத் தண்டித்தார்.

25 கடும் நோயுற்ற நிலையில் சீரியர் யோவாசை விட்டுச் சென்றனர். குரு யோயியாதாவின் மகனின் இரத்தப்பழியின் பொருட்டு அவனுடைய ஊழியர்கள் அவனுக்கு எதிராகச் சதி செய்து படுக்கையிலேயே அவனைக் கொன்று போட்டனர். யோவாஸ் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். ஆயினும் அரசர்களின் கல்லறையிலே அவன் வைக்கப்படவில்லை.

26 அவனுக்கு எதிராக சதி செய்தவர்கள் அம்மோனியனான செம்மாகாத்தின் மகன் ஜாபாத்தும், மோவாபியப் பெண் சேமரீத்தின் மகன் யோசபாத்துமேயாம்.

27 யோவாசின் புதல்வரைப் பற்றியும், அவன் திரட்டிய பணத்தொகையைப் பற்றியும், கடவுளின் ஆலயச் சீரமைப்புப் பற்றியும் அரசர்களின் வரலாற்றில் விரிவாய் எழுதப்பட்டிருக்கிறது. அவனுடைய மகன் அமாசியாஸ் அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.

அதிகாரம் 25

1 அமாசியாஸ் அரச பதவி ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அவனுடைய தாயின் பெயர் யோவாதானா. அவள் யெருசலேம் நகரில் பிறந்தவள்.

2 அமாசியாஸ் ஆண்டவர் திருமுன் நேர்மையாய் நடந்து வந்தான். ஆயினும் முழுமனத்தோடும் அவ்வாறு நடந்தானில்லை.

3 தன் அரசை நிலைநாட்டிய பின் தன் தந்தையான அரசனைக் கொன்ற ஊழியர்களைக் கொன்று குவித்தான்.

4 ஆனால் அவர்களின் பிள்ளைகளை உயிரோடு விட்டு வைத்தான். ஏனெனில் மோயீசனின் திருச்சட்ட நூலில், "பிள்ளைகளின் பொருட்டுத் தந்தையரும், தந்தையர் பொருட்டும் புதல்வர்களும் கொல்லப்படக் கூடாது; அவனவன் செய்த பாவத்தின் பொருட்டு அவனவனே சாக வேண்டும்" என்று ஆண்டவர் திருவுளம் பற்றியிருந்தார்.

5 பின்னர் அமாசியாஸ் யூதாமக்களை ஒன்று திரட்டி, யூதா பென்யமீன் நாடெங்கும் ஆயிரவர் தலைவர்களையும் நூற்றுவர் தலைவர்களையும் ஏற்படுத்தி. அவர்களுக்குக் கீழ் மக்களைக் குடும்ப வாரியாகப் பிரித்து வைத்தான். இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள இளைஞர்களைக் கணக்கிட்டான். கேடயம் தாங்கிப் போரிடத்தக்க வேல் வீரர் மூன்று லட்சம் பேரைப் பொறுக்கி எடுத்தான்.

6 இஸ்ராயேலிலும் ஒரு லட்சம் வீரர்களை நூறு தாலந்து வெள்ளிக்கு அமர்த்தினான்.

7 அப்பொழுது கடவுளின் மனிதர் ஒருவர் அவனிடம் வந்து, "அரசே, இஸ்ராயேலின் படை உம்மோடு வரக்கூடாது. ஏனெனில் ஆண்டவர் இஸ்ராயேல் புதல்வரோடும் எப்பிராயீம் புதல்வரோடும் இல்லை.

8 திரளான படை இருப்பதால் வெற்றி கிட்டும் என்று நீர் நம்புவீராகில் கடவுள் உம்மை எதிரிகள் முன் தோல்வியுறச் செய்வார். ஏனெனில் உதவி கொடுக்கவும் எதிரிகளை முறியடிக்கவும் கடவுளாலேயே முடியும்" என்றார்.

9 அப்பொழுது அமாசியாஸ் கடவுளின் மனிதரை நோக்கி, "அப்படியானால் இஸ்ராயேல் படைக்கு நான் கொடுத்த அந்த நூறு தாலந்தும் வீணாய்ப் போகுமே! இதற்கு என்ன சொல்லுகிறீர்?" என்றான். அதற்குக் கடவுளின் மனிதர் அவனைப் பார்த்து, "ஆண்டவரால் அதை விட அதிகமாய் உமக்குக் கொடுக்க முடியுமே" என்றார்.

10 அப்பொழுது அமாசியாஸ் எப்பிராயீமிலிருந்து வந்திருந்த வீரர்களைப் பிரித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் யூதாவின் மேல் கடும் கோபம் கொண்டவராய்த் தங்கள் நாடு திரும்பினர்.

11 பின்பு அமாசியாஸ் திடம் கொண்டு தன் படையை உப்புப் பள்ளத்தாக்குக்கு நடத்திச் சென்றான். அங்குச் செயீர் புதல்வரில் பதினாயிரம் பேரைக் கொன்று குவித்தான்.

12 இன்னும் பதினாயிரம் பேரை அவர்கள் பிடித்து ஒரு கற்பாறையின் உச்சிக்குக் கொண்டு போய் அங்கிருந்து அவர்களைக் கீழே தள்ளி விட்டார்கள். இவர்கள் எல்லாரும் நொறுங்கி மடிந்தனர்.

13 இதற்கிடையில் தன்னோடு போருக்கு வரக் கூடாதென்று சொல்லி அமாசியாஸ் அனுப்பி விட்டிருந்த போர்வீரர் சமாரியா முதல் பெத்தரோன் வரையுள்ள யூதா நகர்களைத் தாக்கி; மிகுதியான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

14 அமாசியாசோ ஏதோமியரை முறியடித்துச் செயீர் புதல்வர்களின் சிலைகளை யெருசலேமுக்குக் கொண்டு வந்தான். அவற்றைத் தனக்குத் தெய்வங்களாக வைத்து அவற்றிற்கு வழிபாடு செய்து தூபம் காட்டினான்.

15 எனவே ஆண்டவர் அமாசியாசின்மேல் சீற்றம் கொண்டு அவனிடம் ஓர் இறைவாக்கினரை அனுப்பினார். இவர் அவனை நோக்கி, "தம்மை நம்பியிருந்த மக்களையே உமது கையிலிருந்து காக்க முடியாத தெய்வங்களை நீர் வழிபடுவது ஏன்?" என்றார்.

16 அமாசியாஸ் தன்னோடு இவ்வாறு பேசின இறவாக்கினரை நோக்கி, "நீ அரசனின் ஆலோசகனோ? உன் வாயை மூடு. இன்றேல் நான் உன்னைக் கொன்று போடுவேன்" என்று மறுமொழி சொன்னான். இதைக்கேட்ட இறைவாக்கினர் அவனைப் பார்த்து, "நீர் எனது ஆலோசனையைக் கேளாது இவ்வாறு நடந்து கொண்டதால், கடவுள் உம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார் என்பதை நான் அறிவேன்" என்று சொல்லி வெளியே சென்றார்.

17 பின்பு யூதாவின் அரசன் அமாசியாஸ் தீயோரின் ஆலோசனையைக் கேட்டு, ஏகுவின் மகன் யோவக்காசுக்குப் பிறந்த யோவாஸ் என்ற இஸ்ராயேலின் அரசனுக்குத் தூதுவரை அனுப்பி, "வாரும், போர்க் களத்தில் சந்தித்துப் பார்ப்போம்" என்று சொல்லச் சொன்னான்.

18 அதற்கு இஸ்ராயேலின் அரசன் யோவாஸ் தன்னிடம் வந்த தூதுவர்களை அமாசியாசிடம் திரும்ப அனுப்பி, "லீபான் மலையிலிருந்த நெருஞ்சி முட்செடி ஒன்று அதே மலையிலுள்ள கேதுரு மரத்திடம் தூதனுப்பி, 'நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்துக் கொடு' என்று கேட்கச் சொன்னதாம். அதற்குள் லீபான் மலையிலுள்ள காட்டு மிருகங்கள் அவ்வழியே நடந்து போய் அம் முள் செடியைக் காலால் மிதித்து அழித்துப் போட்டனவாம்!

19 ஏதோமியரை முறியடித்ததனால் நீர் அகந்தை கொண்டு பெருமை பாரட்டுவது சரியன்று. உமது வீட்டிலேயே இரும். நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி நீர் தீங்கை வீணிலே தேடிக்கொள்ள வேண்டாம்" என்று மறுமொழி சொல்லச் சொன்னான்.

20 அமாசியாஸ் இதற்குச் செவிமடுக்கவில்லை. ஏனெனில் அவன் ஏதோமியரின் தெய்வங்களை வழிபட்டு வந்ததன் பொருட்டு அவனை அவன் எதிரிகளின் கையில் ஒப்புவிக்க ஆண்டவர் முடிவு செய்திருந்தார்.

21 ஆகவே இஸ்ராயேலின் அரசன் யோவாஸ் படையெடுத்துச் சென்றான். யூதாவிலுள்ள பெத்சமேசில் அவனும் யூதாவின் அரசன் அமாசியாசும் ஒருவரோடொருவர் போர் செய்தனர்.

22 யூதா மனிதர் இஸ்ராயேலரால் முறியடிக்கப்பட்டுத் தங்கள் கூடாரங்களை நோக்கி ஓடினர்.

23 யோவக்காசின் மகன் யோவாசுக்குப் பிறந்த அமாசியாஸ் என்ற யூதாவின் அரசனோ பெத்சாமேஸ் நகரில் இஸ்ராயேல் அரசன் யோவாசால் சிறைப்படுத்தப்பட்டு, யெருசலேமுக்குக் கொண்டு போகப்பட்டான். யோவாஸ் எப்பிராயீம் வாயில் துவக்கி மூலை வாயில் வரை நானூறு முழ நீளத்திற்கு யெருசலேம் மதிலை இடித்துத் தள்ளினான்.

24 மேலும் ஒபேதெதோமின் பொறுப்பிலே கடவுளின் ஆலயத்தில் இருந்த பொன், வெள்ளித் தட்டுமுட்டுகளையும் அரண்மனைக் கருவூலத்தில் இருந்தவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றான். பிணையாய் நிறுத்தப்பட்டவர்களின் புதல்வர்களையும் சிறைபிடித்துச் சமாரியா திரும்பினான்.

25 யோவாக்காசின் மகன் யோவாஸ் என்ற இஸ்ராயேலின் அரசன் இறந்த பின் யோவாசின் மகன் அமாசியாஸ் என்ற யூதாவின் அரசன் பதினைந்து ஆண்டுகள் உயிரோடு இருந்தான்.

26 அமாசியாசின் வரலாறு முழுவதும் யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.

27 அமாசியாஸ் ஆண்டவரைப் புறக்கணித்த காலம் முதல் யெருசலேம் மக்கள் அவனுக்கு எதிராகச் சதி செய்து அவனைக் கொல்ல முயன்றனர். அவன் லாக்கீசுக்குத் தப்பி ஓடினான். ஆனால் அவர்கள் அவனுக்குப் பிறகே ஆட்களை அனுப்பி அங்கே அவனைக் கொன்று போட்டனர்.

28 குதிரைகளின் மேல் அவனது பிணத்தை ஏற்றிகொண்டு வந்து, தாவீதின் நகரில் அவனுடைய முன்னோரின் அருகே அவனை அடக்கம் செய்தனர்.

அதிகாரம் 26

1 அப்பொழுது யூதா மக்கள் அனைவரும் மாசியாசின் மகனான ஒசியாசை அவனுடைய தந்தைக்குப் பதிலாக அரியணையில் ஏற்றினார்கள். அப்பொழுது அவனுக்கு வயது பதினாறு தான்.

2 அரசன் தன் முன்னோரோடு கண் வளர்ந்த பின் ஓசியாஸ் அயிலாத் நகரைப் புதிதாய்க் கட்டி அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக் கொண்டான்.

3 ஓசியாஸ் அரியணை ஏறிய போது அவனுக்கு வயது பதினாறு. ஐம்பத்திரண்டு ஆண்டுகள் யெருசலேமில் அவன் ஆட்சி செலுத்தினான். யெருசலேம் நகரத்தாளான அவனுடைய தாயின் பெயர் எக்கேலியா.

4 அவன் தன் தந்தை அமாசியாசைப் போன்றே ஆண்டவர் திருமுன் நேர்மையாய் நடந்து வந்தான்.

5 தெய்வ பயத்தை அவனுக்குப் போதித்து வந்த சக்கரியாசின் வாழ்நாள் முழுவதும் ஓசியாஸ் கடவுளைத் தேடிவந்தான். அவன் ஆண்டவரைத் தேடின காலமெல்லாம், அவர் எல்லாக்காரியங்களிலும் அவனுக்கு வெற்றி அளித்தார்.

6 பின்பு ஓசியாஸ் படையெடுத்துச் சென்று பிலிஸ்தியரோடு போரிட்டுக் கேத் என்ற நகரின் மதிலையும், யப்னி, ஆஜோத் நகர்களின் மதிலையும் தகர்த்தெறிந்தான். ஆஜோத் நாட்டிலும் பிலிஸ்தியரின் நாட்டிலும் நகர்களைக் கட்டினான்.

7 கடவுள் அவனுக்குத் துணையாய் இருந்ததனால் அவன் பிலிஸ்தியர்களையும், குர்பாலில் குடியிருந்த அரேபியர்களையும் அம்மோனியரையும் வென்றான்.

8 அம்மோனியர் ஓசியாசுக்குக் கப்பம் கட்டி வந்தனர். அவனது வெற்றியை முன்னிட்டு அவனது புகழ் எகிப்தின் எல்லை வரை எட்டினது.

9 ஓசியாஸ் யெருசலேமில் மூலை வாயிலின் மேலும் பள்ளத்தாக்கு வாயிலின் மேலும் மூலைகளிலும் கோபுரங்களைக் கட்டி அவற்றைப் பலப்படுத்தினான்.

10 அவன் பாலைவனத்திலும் கோபுரங்களைக் கட்டினான்; பல கிணறுகளையும் வெட்டினான். ஏனெனில் அவனுக்குப் பாலைவனத்திலும் சமவெளியிலும் ஆடு மாடுகள் ஏராளமாய் இருந்தன. மலைகளிலும் வயல் வெளிகளிலும் விவசாயிகளும் திராட்சை பயிரிடுவோரும் அவனுக்கு இருந்தனர். ஏனெனில் ஓசியாஸ் வேளாண்மையில் அதிக நாட்டம் காட்டி வந்தான்.

11 போர் தொடுக்கப் படை ஒன்றும் ஓசியாசுக்கு இருந்தது. அது செயலன் எகியேல், அறிஞன் மவாசியாஸ், அரச அலுவலருள் ஒருவனான அனானியாஸ் ஆகியோருக்குக் கீழ் முப்பிரிவுகளாக இயங்கி வந்தது.

12 பல வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்த இப்போர் வீரர்களின் தலைவர்கள் மொத்தம் இரண்டாயிரத்து அறுநூறு போர்.

13 இவர்களது அதிகாரத்தின் கீழ் இருந்த போர்வீரர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து ஏழாயிரத்தைந்நூறு. போரிடுவதில் திறமை வாய்ந்த இவர்கள் அனைவரும் அரசனின் சார்பில் எதிரிகளோடு போரிடுவர்.

14 அவர்களுக்குத் தேவையான கேடயம், ஈட்டி, தலைச்சீரா, மார்புக்கவசம், வில், கவண் முதலிய போர்க் கருவிகளை ஓசியாஸ் அவர்களுக்குத் தயாரித்துக் கொடுத்திருந்தான்.

15 கோபுரங்களிலிருந்தும், மதிலின் எல்லா மூலைகளினின்றும் அம்புகளையும் பெரிய கற்களையும் எறியக் கூடிய பலவித கருவிகளையும் ஓசியாஸ் செய்தான். ஆண்டவர் அவனுக்குத் துணை செய்து அவனைப் பலப்படுத்தியிருந்ததால் அவனது புகழ் எத்திக்கும் பரவிற்று.

16 இவ்வாறு ஓசியாசின் பலம் அதிகரிக்கவே, அவன் செருக்குற்றுத் தன் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்தான்; இதன் மூலம் தனக்கு அழிவைத் தேடிக் கொண்டான். அதாவது, அவன் ஆண்டவரின் ஆலயத்தில் நுழைந்து தூபப் பீடத்தின் மேல் தூபம் காட்ட துணிந்தான்.

17 அதைக் கேள்விப்பட்டுக் குரு அசாரியாசும், அவரோடு ஆண்டவரின் ஆற்றல் படைத்த குருக்கள் எண்பது பேரும் அவன் பிறகே சென்று, அரசனைத் தடுத்தனர்;

18 ஓசியாசே, ஆண்டவர் திருமுன் தூபம் காட்டுவது உம் வேலை அன்று; அது அபிஷுகம் பெற்ற ஆரோனின் புதல்வராகிய குருக்களுக்கே உரிய வேலை. இத்திருவிடத்தை விட்டு உடனே வெளியேறும். நீர் செய்வது பாவம். இதனால் ஆண்டவராகிய கடவுள் உம்மை மேன்மைப்படுத்தப் போவதில்லை" என்றனர்.

19 அதைக் கேட்ட ஓசியாஸ் கோபம் கொண்டான். அவன் தூபக் கலசத்தைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு குருக்களை மிரட்டினான். உடனே குருக்களின் முன்னிலையில் அங்கேயே அரசனின் நெற்றியில் தொழுநோய் கண்டது.

20 பெரிய குரு அசாரியாசும் ஏனைய குருக்களும் அவனது நெற்றியில் தொழுநோய் தென்படக் கண்டவுடன், அவனை அங்கிருந்து விரைவாய் வெளியேற்றினர். அந்நேரத்தில் ஓசியாஸ் தன்னை ஆண்டவர் தண்டித்தார் என்று உணர்ந்து பீதியுற்று வெளியே போக விரைந்தான்.

21 அரசன் ஓசியாஸ் தன் வாழ்நாள் எல்லாம் தொழுநோயாளனாகவே இருந்தான். அந்நோய் அவன் உடலெங்கும் பரவவே அவனை ஆண்டவரின் ஆலயத்திலிருந்து விலக்கி வைத்திருந்தனர். எனவே அவன் ஒரு தனித்த வீட்டிலே வாழ வேண்டியிருந்தது. அன்று முதல் அவனுடைய மகன் யோவாத்தாம் அரசனின் அரண்மனையில் தலைமை எற்று நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி வந்தான்.

22 ஓசியாசின் வரலாறு முழுவதையும் ஆமோசின் மகன் இசயாசு என்ற இறைவாக்கினர் எழுதி வைத்துள்ளார்.

23 ஓசியாஸ் தன் முன்னோரோடு துயிலுற்றான். அவன் தொழுநோயாளியாய் இருந்ததால் மக்கள் அவனுடைய முன்னோரின் கல்லறையில் அவனை அடக்கம் செய்யாது, அதற்கடுத்த நிலத்தில் அவனைப் புதைத்தனர். அவனுடைய மகன் யோவாத்தாம் அவனுக்குப்பின் ஆட்சி புரிந்தான்.

அதிகாரம் 27

1 யோவாத்தாம் அரசுகட்டில் ஏறின போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் பதினாறு ஆண்டுகள் அரசோச்சினான். சாதோகின் மகளான அவனுடைய தாயின் பெயர் எருசா.

2 தன் தந்தை ஓசியாசைப் போன்று அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையாய் நடந்து வந்தான். ஆனால் அவனைப் போல் இவன் ஆண்டவரின் ஆலயத்தில் நுழையவில்லை. மக்களோ இன்னும் தீய வழியிலேயே நடந்து வந்தார்கள்.

3 அவன் ஆண்டவரது ஆலயத்தின் பெரிய வாயிலைக் கட்டினதோடு ஓப்பேலின் மதில் மேல் பல கட்டடங்களையும் கட்டுவித்தான்.

4 மேலும் அவன் யூதாவின் மலைகளில் நகர்களையும், காடுகளில் கோட்டை கொத்தளங்களையும் கட்டினான்.

5 அம்மோனிய அரசனோடு போராடி அவர்களை வென்றான். ஆதலால் அம்மோனியர் அவனுக்கு அவ்வாண்டு நூறு தாலந்து வெள்ளியும், பதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், பதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும் திறையாகக் கொடுத்தனர். இரண்டாம் மூன்றாம் ஆண்டிலும் அவ்வாறே அவனுக்குச் செலுத்தினர்.

6 யோவாத்தாம் தன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நேரிய வழியில் நடந்து வந்ததால் ஆண்டவர் அவனைப் பலப்படுத்தினார்.

7 யோவாத்தாம் செய்த போர்களும், அவனுடைய மற்றச் செயல்களும், அவனைப் பற்றிய எல்லா விவரமும் இஸ்ராயேல், யூதா அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன.

8 அவன் அரியணை ஏறின போது அவனுக்கு வயது இருபத்தைந்து. பதினாறு ஆண்டுகள் அவன் யெருசலேமில் ஆட்சி செலுத்தினான்.

9 பிறகு யோவாத்தாம் தன் முன்னோரோடு துயிலுற்றுத் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் ஆக்காஸ் அவனுக்கு பின் அரியணை ஏறினான்.

அதிகாரம் 28

1 ஆக்காஸ் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற போது அவனுக்கு வயது இருபது. அவன் யெருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். தன் மூதாதையாகிய தாவீதைப் போல் அவன் ஆண்டவர் திருமுன் நேரிய வழியில் நடக்கவில்லை.

2 மாறாக இஸ்ராயேல் அரசர்களின் வழிகளைப் பின்பற்றிப் பாவாலுக்கு வார்ப்புச் சிலைகளைச் செய்தான்.

3 அவன் பென்னென்னோம் என்ற பள்ளத்தாக்கில் தூபம் காட்டவும், இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக ஆண்டவர் அழித்திருந்த புறவினத்தாரின் வழக்கத்தைப் பின்பற்றித் தன் பிள்ளைகளைத் தீயில் எரித்து விடவும் துணிந்தான்.

4 மேடைகளிலும் குன்றுகளிலும் அடர்ந்த தழையுள்ள மரங்களின் கீழும் அவன் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தான்.

5 அதன் பொருட்டு அவனுடைய கடவுளாகிய ஆண்டவர் சீரியா அரசன் கையில் அவனை ஒப்புவித்தார். இவன் படையெடுத்து வந்து ஆக்காசை முறியடித்து, அவனது நாட்டிலிருந்து ஏராளமான பொருட்களைக் கொள்ளையிட்டுத் தமாஸ்கு நகருக்குக் கொண்டு போனான். மேலும் ஆக்காஸ் இஸ்ராயேல் அரசனின் கையில் ஒப்படைக்கப்பட்டான். இவன் பலரைக் கொன்று அவர்கள் தோல்வியுறச் செய்தான்.

6 அதாவது, ருமேலியின் மகன் பாக்கே ஒரே நாளில் யூதா மனிதரில் நூற்றிருபதாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினான்; இவர்கள் அனைவரும் ஆற்றல் படைத்தவர்களே. எனினும் இவர்கள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்திருந்தனர்.

7 அன்றியும் எப்பிராயீமின் வலிமை மிக்க மனிதன் ஜெகீரி அரசனின் மகன் மவாசியாசையும் அரண்மனைத் தலைவனான எஜ;ரிகாவையும், அரசனுக்கு அடுத்த நிலையில் இருந்த எல்கனாவையும் கொன்று போட்டான்.

8 அது தவிர இஸ்ராயேல் மனிதர் தங்கள் சகோதரராகிய மக்களிலே இரண்டு லட்சம் பெண்களையும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் சிறைபிடித்தார்கள்; திரளான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சமாரியா நகருக்குக் கொண்டு போனார்கள்.

9 அக்காலத்தில் ஒதேத் என்ற ஓர் இறைவாக்கினர் அங்கு இருந்தார். அவர் சமாரியாவை நோக்கி வந்து கொண்டிருந்த படைக்கு எதிரே போய் அவர்களை நோக்கி, "இதோ உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய ஆண்டவர் யூதாவின் மேல் சினம் கொண்டு அவர்களை உங்கள் கைகளில் ஒப்புவித்தார். நீங்களோ அவர்களைக் கொடூரமாய்க் கொலை செய்தீர்கள். உங்களது கொடும் செயல் வானமட்டும் எட்டியது.

10 இப்பொழுதோ யூதாவின் மக்களை உங்களுக்கு வேலைக்காரர்களாகவும் வேலைக் காரிகளாகவும் அடிமைப்படுத்த வேண்டும் என்று கருதியுள்ளீர்கள். அது தகாது. இதைக் கருதியது கூட உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக பாவம்.

11 ஆதலால் என் வார்த்தையைக் கேளுங்கள். நீங்கள் சிறைப்படுத்தியுள்ள உங்கள் சகோதரர்களைத் தங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போகும்படி அனுப்பி விடுங்கள். இல்லாவிட்டால் ஆண்டவரின் கடும் கோபம் உங்கள்மேல் விழும்" என்றார்.

12 ஆகவே எப்பிராயீம் மக்கள் தலைவர்களான யோவனானின் மகன் அசாரியாசும், மோசொல்லாமோத்தின் மகன் பராக்கியாசும், செல்லுமின் மகன் எசெக்கியாசும், அத்லியின் மகன் அமாசாவும் போரிலிருந்து திரும்பி வந்தவர்களை எதிர் கொண்டு சென்றனர்.

13 அவர்களை நோக்கி, "நீங்கள் சிறைபிடித்த இவர்களை நம் ஊருக்குள் கொண்டு வரவே கூடாது; அது ஆண்டவருக்கு எதிரான குற்றமாகும். நமது சொந்தப் பாவங்களே ஏராளமாய் இருக்கின்றன. அப்படியிருக்க இன்னும் பாவம் செய்யத் துணிவது ஏன்? அதனால் இஸ்ராயேலின் மேல் ஆண்டவரின் கோபம் வருமன்றோ?" என்றனர்.

14 அதைக் கேட்டு அவ்வீரர்கள் தலைவர்களுக்கு முன்பாகவும் எல்லா மக்களுக்கு முன்பாகவும் சிறைப்பட்டோரை விடுதலை செய்தனர்; கொள்ளைப் பொருட்களையும் திருப்பிக் கொடுத்தனர்.

15 அப்பொழுது அத்தலைவர்கள் எழுந்து சிறைப்பட்டோர் அனைவரையும் அழைத்து அவர்களில் உடை அற்றிருந்தவர்களுக்குக் கொள்ளையடிக்கப்பட்ட ஆடைகளைக் கொடுத்தனர். அவர்களுக்கு உடுப்புகளையும் மிதியடிகளையும் அணிவித்து, சாப்பிடவும் குடிக்கவும், உடலில் பூச எண்ணெயும் கொடுத்து அவர்களது களைப்பைப் போக்கினர். பிறகு நடக்கச் சக்தியற்றவரையும் தளர்ச்சியுற்றவரையும் குதிரைகளின் மேல் ஏற்றி ஈந்து மரங்களின் நகரமான எரிக்கோவிலிருந்த அவர்களுடைய சகோதரரிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர்; பின்னர் சமாரியா திரும்பினர்.

16 அக்காலத்தில் ஆக்காஸ் என்ற அரசன் அசீரிய அரசனுக்குத் தூதுவரை அனுப்பித் தனக்குத் துணை செய்யும்படி மன்றாடினான்.

17 ஏதோமியர் வந்து யூதாவை முறியடித்து ஏராளமான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

18 பிலிஸ்தியர் யூதாவின் சமவெளிகளிலும் தென்னாட்டிலும் இருந்த நகர்களைத் தாக்கினர். பெத்சாமேசையும் சொக்கோவையும், தம்னாவையும் கம்சோவையும் அவற்றை அடுத்த ஊர்களையும் கைப்பற்றி அங்கே குடியேறினர்.

19 ஆண்டவர் யூதாவை இவ்வாறு சிறுமைப்படுத்தினதற்குக் காரணம், யூதாவின் அரசன் ஆக்காஸ் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணித்திருந்தது தான்.

20 மேலும், அசீரிய அரசன் தெல்காத்பல்னசார் அவனுக்கு எதிராகப் படையெடுத்து அவனை தோற்கடித்தான். அதுவுமன்றித் தன்னை எதிர்க்க யாரும் இல்லாததால் நாட்டைப் பாழாக்கினான்.

21 ஆக்காஸ் ஆண்டவரின் ஆலயத்திலும், அரசரின் அரண்மனையிலும், தலைவர்களின் வீடுகளிலுமிருந்த செல்வங்களை எல்லாம் எடுத்து அசீரிய அரசனுக்குப் பரிசாகக் கொடுத்தான். அவ்வாறு கொடுத்தும் அதனால் ஒரு பயனும் ஏற்படவில்லை.

22 அரசன் ஆக்காஸ் இவ்வளவு துன்புற்ற போதிலும் அவன் மேன் மேலும் ஆண்டவரைப் புறக்கணிக்கத் தொடங்கினான்.

23 அவன், "சீரியா நாட்டுத் தெய்வங்கள் சீரியருக்குத் துணையாய் இருக்கின்றன; ஆதலால் அவை எனக்கும் துணை செய்யும் பொருட்டு நான் அவற்றிற்குப் பலியிடுவேன்" என்று சொல்லி, தன்னைத் தோற்கடித்திருந்த தமாஸ்குவின் தெய்வங்களுக்குப் பலி செலுத்தினான். அதற்கு மாறாக அவை அவனுக்கும் இஸ்ராயேலருக்கும் அழிவையே தேடித் தந்தன.

24 ஆக்காஸ் கடவுளுடைய ஆலயத்தில் இருந்த தட்டுமுட்டுகளை எல்லாம் நொறுக்கி ஆலயத்தின் கதவுகளைப் பூட்டி விட்டு யெருசலேமில் மூலைக்கு மூலை பலி பீடங்களை அமைத்தான்.

25 மேலும் பொய்த் தெய்வங்களுக்குத் தூபம் காட்ட யூதாவின் ஒவ்வொரு நகரிலும் பலிபீடங்களை எழுப்பி, தன் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கடுஞ்சினம் மூட்டினான்.

26 அவனுடைய மற்றச் செயல்களும், அவனது வரலாறு முழுவதும் யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலற்றில் இடம் பெற்றுள்ளன.

27 ஆக்காஸ் தன் முன்னோரோடு துயிலுற்றான். அவன் யெருசலேம் நகரில் புதைக்கப்பட்டாலும், இஸ்ராயேலின் அரச கல்லறைக்குப் புறம்பே புதைக்கப்பட்டான். அவனுடைய மகன் எசெக்கியாஸ் அவனுக்கு பின் அரசனானான்.

அதிகாரம் 29

1 எசெக்கியாஸ் தன் இருபத்தைந்தாவது வயதில் அரியணை ஏறினான். யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். சக்கரியாசின் மகளான அவனுடைய தாயின் பெயர் ஆபியா.

2 அவன் தன் மூதாதையாகிய தாவீதைப் போன்று ஆண்டவர் திருமுன் நேரிய வழியில் நடந்து வந்தான்.

3 அவன் தன் ஆட்சியின் முதல் ஆண்டின் முதல் மாதத்தில் ஆண்டவரது ஆலயத்தின் கதவுகளைத் திறந்து அதைப் பழுது பார்த்தான்.

4 குருக்களையும் லேவியர்களையும் கிழக்கு வீதியில் ஒன்று கூட்டினான்.

5 அவர்களை நோக்கி, "லேவியரே கேளுங்கள். உங்களைத் தூய்மைப் படுத்தி உங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரின் ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள். திருவிடத்திலுள்ள குப்பைகளை வெளியேற்றுங்கள்.

6 நம் முன்னோர் பாவம் செய்து நம் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து அவரை விட்டு விலகினர்; அவர்கள் தங்கள் ஆண்டவரது திருவிடத்தை நாடாது அவரைப் புறக்கணித்தனர்.

7 அவர்கள் திருவிடத்தில் இஸ்ராயேலின் கடவுளுக்குத் தகனப்பலி செலுத்தாமலும் தூபம் காட்டாமலும் விளக்குகளை அணைத்துவிட்டு மண்டபக் கதவுகளைப் பூட்டிப் போட்டனர்.

8 அதன் காரணமாகவே ஆண்டவர் யூதாவின் மேலும் யெருசலேமின் மேலும் வெஞ்சினம் கொண்டார். ஆண்டவர் அவர்களைத் துயரத்திற்கும் அழிவிற்கும் ஏளனத்திற்கும் கையளித்தார். இதை நீங்களே அறிவீர்கள்.

9 நம் முன்னோர் வாளால் வெட்டுண்டு விழுந்ததற்கும், நம் புதல்வரும் புதல்வியரும் மனைவியரும் சிறைப்படுத்தப் பட்டதற்கும் அந்தப் பழிபாவமே காரணம்.

10 இப்போது எனக்குச் சிறந்ததெனத் தோன்றுவது என்னவெனில், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரோடு நாம் உடன்படிக்கை செய்ய வேண்டும்; அவ்வாறு செய்தால் தான் அவரது கடும் கோபம் நம்மை விட்டு விலகும்.

11 என் புதல்வர்களே, நீங்கள் வாளா இருக்க வேண்டாம், நீங்கள் ஆண்டவருக்கு முன்பாக நின்று திருப்பணி புரியவும் அவரை வழிபடவும் அவருக்குத் தூபம் காட்டவும் ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப் பட்டிருக்கிறீர்கள்" என்றார்.

12 அதைக் கேட்டு ககாத் புதல்வரில் அமசாயின் மகன் மகாத்தும், அசாரியாசின் மகன் யோவேலும், மேராரி புதல்வரில் அப்திக்கின் மகன் சீசும், யலலேயலின் மகன் அசாரியாசும், கெர்சோன் புதல்வரில் ஜெம்மாவின் மகன் யோவாவும், யோவாவின் மகன் ஏதனும்,

13 எலிசப்பான் புதல்வரில் சம்ரியும் யகியேலும், ஆசாப்பின் புதல்வரில் சக்கரியாசும் மத்தானியாசும்,

14 ஏமான் புதல்வரில் யகியேலும், செமேயீயும், இதித்தூன் புதல்வரில் செமேயாசும், ஓசியேலும் எழுந்தனர்.

15 தங்கள் சகோதரர்களை ஒன்றுசேர்த்துத் தங்களைத் தூய்மைப் படுத்திய பின்பு, அரச கட்டளைக்கும் ஆண்டவரின் கட்டளைக்கும் ஏற்ப ஆலயத்தைத் தூய்மைப் படுத்துவதற்காக அதனுள் நுழைந்தனர்.

16 குருக்களும் ஆண்டவரின் ஆலயத்தைத் தூய்மைப்படுத்த உள்ளே புகுந்தனர்; ஆண்டவரது ஆலயத்தில் காணப்பட்ட அசுத்தங்களை எல்லாம் வாரியெடுத்தனர். லேவியர் அவற்றை வெளியே கொண்டுபோய் கெதிரோன் ஆற்றில் கொட்டினர்.

17 முதல் மாதம் முதல் நாள் அவர்கள் தூய்மைப்படுத்தத் தொடங்கினர். அதே மாதத்தின் எட்டாம் நாளன்று ஆண்டவரின் ஆலய மண்டபத்தில் அவர்கள் நுழைந்தனர். எட்டு நாட்களாக ஆலயத்தைத் தூய்மைப்படுத்தினர். அதே மாதம் பதினாறாம் நாள் வேலையை முடித்தனர்.

18 பிறகு அவர்கள் எசெக்கியாஸ் அரசனிடம் போய் அவனைப் பார்த்து, "நாங்கள் ஆண்டவரது இல்லம் அனைத்தையும் தகனப் பலிபீடத்தையும், அதன் எல்லாத் தட்டுமுட்டுகளையும் காணிக்கை அப்பங்களை வைக்கும் மேசையையும், அதைச் சேர்ந்த எல்லாத் தட்டு முட்டுகளையும்,

19 ஆக்காஸ் தன் ஆட்சிகாலத்தில் ஆண்டவரைப் புறக்கணித்துத் தீட்டுப்படுத்தியிருந்த ஆலயத்தின் எல்லாத் தட்டுமுட்டுகளையும் தூய்மைப்படுத்தி ஆண்டவரின் பலிபீடத்திற்கு முன்பாக அவற்றை ஒழுங்கோடு வைத்திருக்கிறோம்" என்றார்.

20 அரசன் எசெக்கியாஸ் காலையில் எழுந்து நகர அலுவலர்கள் அனைவரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு ஆண்டவரின் ஆலயத்திற்குச் சென்றான்.

21 அப்பொழுது அவர்கள் எல்லாரும் ஒன்றுகூடிப் பாவப்பரிகாரத்திற்காகவும் நாட்டிற்காகவும் திருவிடத்திற்காகவும் யூதா நாட்டுக்காகவும் பலி செலுத்துமாறு, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டு வந்தனர். ஆரோனின் புதல்வரான குருக்களை நோக்கி, "இவற்றை ஆண்டவரின் பலிபீடத்தின் மேல் பலியிடுங்கள்" என்று கூறினர்.

22 குருக்கள் காளைகளை வெட்டி அவற்றின் குருதியை எடுத்துப் பலிபீடத்தின் மேல் ஊற்றினர். ஆட்டுக் கடாக்களை வெட்டி அவற்றின் குருதியையும் பீடத்தின் மேல் ஊற்றினர். இறுதியில் ஆட்டுக்குட்டிகளை அறுத்து அவற்றின் குருதியைப் பீடத்தின் மேல் தெளித்தனர்.

23 பாவப் பரிகாரத்திற்காக ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் அரசனுக்கும் மக்கள் அனைவர்க்கும் முன்பாகக் கொண்டு வந்து அவற்றின் மேல் தங்கள் கைகளை வைத்தனர்.

24 குருக்கள் அவற்றை அறுத்து இஸ்ராயேலர் அனைவரின் பாவத்திற்கும் பரிகாரமாக அவற்றின் குருதியைப் பீடத்திற்கும் பரிகாரமாகத் தகனப் பலியைச் செலுத்த வேண்டும் என்று அரசன் கட்டளையிட்டிருந்தான்.

25 மேலும் தாவீதின் கட்டளைப்படியும் காத் என்ற திருக்காட்சியாளரின் கட்டளைப்படியும் இறைவாக்கினர் நாத்தானுடைய கட்டளைப்படியும், எசெக்கியாஸ் ஆலயத்திலே கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் முதலியவற்றை இசைக்குமாறு லேவியர்களை ஏற்படுத்தினான். ஏனெனில் ஆண்டவரே அக்கட்டளையைத் தம் இறைவாக்கினர் வாயிலாகக் கொடுத்திருந்தார்.

26 அதன்படி லேவியர்கள் தாவீது கட்டளையிட்ட இசைக்கருவிகளை வாசிக்கவும், குருக்கள் எக்காளங்களை ஊதவும் தொடங்கினர்.

27 மீண்டும் எசெக்கியாஸ் தகனப்பலிகளைப் பலிபீடத்தின் மேல் செலுத்தக் கட்டளையிட்டான். அவ்வாறு பலிகள் செலுத்தப்படும் போது, இஸ்ராயேல் அரசர் தாவீது தயாரித்திருந்த எக்காளங்களை ஊதியும் பற்பல இசைக் கருவிகளை இயக்கியும் அவர்கள் ஆண்டவரைப் பாடிப் புகழ்ந்தனர்.

28 பாடகரும் எக்காளம் ஊதுவோரும் ஆண்டவருக்கு வழிபாடு செய்யும் மக்கள் அனைவரும் தகனப்பலி முடியும் வரை தத்தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வந்தனர்.

29 பலி முடிந்த பின் அரசனும் அவனோடு இருந்த அனைவரும் தலை வணங்கி வழிபடுவர்.

30 மேலும் எசெக்கியாசும் தலைவர்களும் லேவியர்களை நோக்கி, "தாவீதும் திருக்காட்சியாளர் ஆசாப்பும் பாடின பாடல்களை நீங்களும் பாடி ஆண்டவரைப் புகழுங்கள்" என்று கட்டளையிட்டனர். அவர்கள் அவ்வாறு செய்து மகா அக்களிப்போடு பாடவும், முழந்தாளிட்டு வழிபடவும் தொடங்கினர்.

31 அதன்பின் எசெக்கியாஸ் மக்களை நோக்கி, "நீங்கள் ஆண்டவருக்கென்று கை நிறையக் காணிக்கைகளைக் கொண்டு வந்ததால், அருகில் வந்து ஆண்டவரின் ஆலயத்தில் நுழைந்து, அவருக்குத் தோத்திரப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் தகனப் பலிகளையும் ஒப்புக்கொடுங்கள்" என்று அறிவுரை கூறினான். அதைக்கேட்டு எல்லா மக்களும் அவ்வாறு ஆண்டவருக்குத் தோத்திரப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் முழுமனத்துடன் ஒப்புக்கொடுக்கத் தொடங்கினர்.

32 எழுபது காளைகளையும் நூறு ஆட்டுக் கடாக்களையும் இருநூறு ஆட்டுக் குட்டிகளையும் மக்கள் தகனப் பலியாகக் செலுத்தினர்.

33 அதுவுமன்றி அவர்கள் அறுநூறு மாடுகளையும் மூவாயிரம் ஆடுகளையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்தனர்.

34 குருக்கள் சிலரே இருந்ததால், தகனப்பலி மிருகங்கள் எல்லாவற்றையும் தோலுரிக்க அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் அவ்வேலையை முடித்துத் தங்களைத் தூய்மைப் படுத்தும் வரை அவர்களின் சகோதரரான லேவியர் அவர்களுக்கு உதவி செய்தனர். ஏனெனில் தூய்மைப் படுத்திக் கொள்வதில் குருக்களை விட லேவியர் அதிக நேர்மையுடன் நடந்து கொண்டனர்.

35 தகனப்பலிகளும், சமாதானப் பலிகளின் கொழுப்பும், தகனப் பலிகளுக்கடுத்த பானப்பலிகளும் மிகுதியாகச் செலுத்தப்பட்டன. இவ்வாறு ஆண்டவரின் ஆலய வழிபாடு புதுப்பிக்கப் பெற்றது.

36 ஆலய வழிபாடு இவ்வளவு விரைவில் புதுப்பிக்கப் பெற்றதை எண்ணி, எசெக்கியாசும் மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.

அதிகாரம் 30

1 பின்பு இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக யெருசலேமிலுள்ள ஆண்டவரின் ஆலயத்திற்கு வரவேண்டும் என்று பறைசாற்றும்படி எசெக்கியாஸ் இஸ்ராயேல், யூதா நாடெங்கும் ஆட்களை அனுப்பினதுடன், எப்பிராயீம், மனாசே குலத்தாருக்குக் கடிதங்களையும் அனுப்பிவைத்தான்.

2 அரசனும் தலைவர்களும் மக்கள் யாவரும் கலந்து பேசினர். பாஸ்காத் திருவிழாவை இரண்டாம் மாதத்தில் கொண்டாடுவதென முடிவு செய்தனர்.

3 ஏனெனில் குறிக்கப்பட்ட காலத்தில் மக்கள் அத்திருவிழாவைக் கொண்டாட முடியாது போயிற்று. காரணம்: போதுமான குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை; மக்களும் யெருசலேமிற்கு இன்னும் வந்து சேரவில்லை.

4 இம்முடிவு அரசனுக்கும் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

5 மேலும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடும்படி மக்கள் யெருசலேமிற்கு வரவேண்டும் என்று பெர்சாபே முதல் தாண் வரையுள்ள இஸ்ராயேல் நாடெங்கும் விளம்பரம் செய்யத் தீர்மானித்தனர். ஏனெனில் மக்களுள் பலர் சட்டப்படி அதைக் கொண்டாடவில்லை.

6 அரசனும் தலைவர்களும் கொடுத்த கடிதங்களைத் தூதுவர் வாங்கிக்கொண்டு இஸ்ராயேல், யூதா நாடெங்கும் போய் அரச கட்டளையைப் பறைசாற்றினார்கள்: 'இஸ்ராயேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக், இஸ்ராயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவர்பால் மனம் திரும்புங்கள்; அப்படியாயின் அசீரிய அரசர்களின் கைக்குத் தப்பிப் பிழைத்த உங்களுக்கு அவர் துணையாக வருவார்.

7 உங்கள் முன்னோரும் உங்கள் சகோதரரும் தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்ததால் அன்றோ, அவர் அவர்களைச் சாவுக்குக் கையளித்தார்? அது உங்களுக்குத் தெரிந்ததே. எனவே நீங்கள் அவர்களைப் போல் நடவாதீர்கள்.

8 உங்கள் முன்னோரைப் போன்று நீங்களும் இறுமாப்புக் கொண்டவராய் இருக்க வேண்டாம். மாறாக ஆண்டவருக்குப் பணிந்து, அவர் என்றென்றும் பரிசுத்தமாக்கின அவருடைய திருவிடத்திற்குத் திரும்பி வந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவருக்குப் பணி புரியுங்கள். அவ்வாறாயின் ஆண்டவரின் சீற்றம் உங்களை விட்டு அகலும்.

9 ஆம், ஆண்டவர் பக்கம் நீங்கள் மனம் திரும்பினால், உங்கள் சகோதரரும் புதல்வரும், தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு போன தலைவரிடமிருந்து இரக்கம் பெறுவர்; இந்நாட்டிற்குத் திரும்பி வருவர். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அன்பும் இரக்கமும் உள்ளவர். நீங்கள் அவர் பக்கம் மனம் திரும்புவீர்களானால் அவரும் பாராமுகமாய் இரார்." இதுவே அந்த அரச கட்டளை.

10 தூதுவர் எப்பிராயீம் நாட்டிலும் மனாசே நாட்டிலும் சபுலோன் நாட்டிலும் ஊர் ஊராய் விரைந்து சென்றனர். அப்பொழுது அந்நாடுகளின் மக்கள் அவர்களைத் திட்டியும் ஏசியும் கேலி செய்தனர்.

11 ஆயினும் ஆசரிலும் மனாசேயிலும் சபுலோனிலும் இருந்த ஒரு சிலர் அவர்களது சொல்லைக் கேட்டு யெருசலேமுக்கு வந்தனர்.

12 யூதாவிலேயோ ஆண்டவரின் கரம் அவர்களுக்குத் துணை நின்றது. ஆகவே அவர்கள் ஒரு மனப்பட்டு ஆண்டவரது திருவுளத்திற்குப் பணிந்தவராய், அரசனும் தலைவர்களும் கட்டளையிட்டிருந்தபடியே செய்து வந்தனர்.

13 திரளான மக்கள் யெருசலேமுக்கு இரண்டாம் மாதத்தில் வந்து புளியாத அப்பத் திருவிழாவைக் கொண்டாடினர்.

14 பின்பு அவர்கள் யெருசலேமில் எஞ்சியிருந்த பலிபீடங்களையும், சிலைகளுக்குத் தூபம் காட்டும் பற்பல தூபக் கலசங்களையும் அழித்துக் கெதிரோன் ஆற்றில் எறிந்துவிட்டனர்.

15 இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் பாஸ்காச் செம்மறியைப் பலியிட்டனர். இதைக் கண்ணுற்ற குருக்களும் லேவியரும் வெட்கம் அடைந்தனர்; உடனே தங்களைத் தூய்மையாக்கிக் கொண்டு ஆண்டவரின் ஆலயத்திற்குள் தகனப் பலிகளைக் கொண்டு வந்தனர்.

16 அவர்கள் கடவுளின் மனிதர் மோயீசனின் திருச்சட்டத்திற்கு ஏற்றபடி தங்கள் முறையின்படியே தத்தம் கடமையைச் செய்தனர்.

17 மக்களுள் பலர் தீட்டுப்பட்டிருந்தனர். ஆகவே குருக்கள் லேவியரிடமிருந்து (பலிகளின்) இரத்தத்தை வாங்கித் தெளித்தனர். ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தப் போதிய தூய்மை இல்லாதவர்கள் சார்பாக லேவியர்கள் பாஸ்காப் பலியை ஒப்புக்கொடுத்தனர்.

18 உண்மையிலேயே ஏராளமான மக்கள், குறிப்பாக, எப்பிராயீம், மனாசே, இசாக்கார், சபுலோன் குலத்தாருள் பலர் தீட்டுப்பட்டிருந்த நிலையிலேயே திருச்சட்டத்திற்கு மாறாகப் பாஸ்காவை உண்டனர்; அதன் பொருட்டு எசெக்கியாஸ் அவர்களுக்காக ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டான்: "ஆண்டவர் நல்லவர்.

19 எனவே யார் யார் முழு மனத்தோடும் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைத் தேடுகிறார்களோ அவர்களுக்கு அவர் இரக்கம் காட்டுவார். அவர்கள் தூய்மையற்ற நிலையில் இருந்த போதிலும், அவர் அதைக் குற்றமாக எண்ணாது அவர்களை மன்னிப்பார்" என்று சொன்னான்.

20 ஆண்டவர் எசெக்கியாசின் மன்றாட்டை ஏற்று மக்களை மன்னித்தார்.

21 இவ்வாறு யெருசலேமில் இருந்த இஸ்ராயேல் மக்கள் புளியாத அப்பத் திருவிழாவை ஏழு நாட்களாகப் பெரு மகிழ்ச்சியோடு ஆடம்பரமாய்க் கொண்டாடினார்கள். லேவியர்களும் குருக்களும் இசைக்கருவிகளை வாசித்து நாள் தோறும் ஆண்டவருக்குப் புகழ்பாடி வந்தனர்.

22 ஆண்டவருக்குத் திறமையுடன் திருப்பணி புரிந்து வந்த லேவியர் அனைவரையும் எசெக்கியாஸ் உற்சாகப்படுத்தினான். எனவே அவர்கள் திருவிழாவின் ஏழு நாட்களும் உணவு உண்டு, சமாதானப் பலிகளைச் செலுத்தி, தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்து வந்தனர்.

23 பின்பு மக்கள் எல்லாரும் திருவிழாவை இன்னும் ஏழு நாள் கொண்டாடத் தீர்மானித்து, அவ்வாறே மகிழ்ச்சி கொண்டாடினர்.

24 ஏனெனில் யூதாவின் அரசன் எசெக்கியாஸ் மக்களுக்கு ஆயிரம் காளைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்திருந்தான். அதுவுமன்றி தலைவர்கள் மக்களுக்கு ஆயிரங் காளைகளையும் பத்தாயிரம் ஆடுகளையும் கொடுத்திருந்தனர். குருக்களில் பலரும் தங்களைத் தூய்மைப் படுத்தியிருந்தனர்.

25 யூதா மக்கள் அனைவரும் குருக்களும் லேவியரும், இஸ்ராயேலிலிருந்து வந்திருந்த மக்கள் அனைவரும், யூதாவிலும் இஸ்ராயேலிலும் குடியிருந்தவரும் யூத மறையைத் தழுவியிருந்தோருமான அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.

26 இவ்வாறு யெருசலேமில் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இஸ்ராயேலின் அரசர் தாவீதின் மகன் சாலமோனின் காலம் முதல் திருவிழா இவ்வளவு சிறப்புடன் நடந்ததில்லை.

27 கடைசியில் குருக்களும் லேவியர்களும் எழுந்து நின்று மக்கட்கூட்டத்தை ஆசீர்வதித்தனர். அவர்களது மன்றாட்டு கேட்டருளப்பட்டது. அவர்களது செபம் ஆண்டவரின் உறைவிடமான விண்ணகத்தை எட்டிற்று.

அதிகாரம் 31

1 இதன் பின்னர் யூதாவின் நகர்களில் குடியிருந்த இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப்போய் யூதா, பென்யமீன் நாடுகளில் மட்டுமன்றி எப்பிராயீம், மனாசே நாடுகளிலும் இருந்த சிலைகளை உடைத்து, சிலைத் தோப்புகளை அழித்து மேடைகளையும் பலிபீடங்களையும் தரைமட்டமாக்கினர். பிறகு இஸ்ராயேல் மக்கள் அனைவரும் தங்கள் வீடு திரும்பினர்.

2 எசெக்கியாஸ் குருக்கள், லேவியர்களை அவரவர் முறையின்படியும் அலுவலின் படியும் பல பிரிவுகளாகப் பிரித்து, தகனப்பலி, சமாதானப் பலி முதலியவற்றைச் செலுத்தவும், ஆண்டவரின் கூடார வாயில்களில் ஆண்டவருக்குப் புகழ்பாடவும், ஏனைய பணிவிடைகளைச் செய்யவும் அவர்களை நியமித்தான்.

3 மோயீசனின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டுள்ளபடி, காலை மாலைகளில் செலுத்த வேண்டிய தகனப் பலிகளுக்காகவும் மற்றத் திருநாட்களிலும் செலுத்த வேண்டிய தகனப்பலி, சமாதானப் பலிகளுக்காகவும், அரசன் தன் உடைமையில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்தான்.

4 குருக்களும் லேவியரும் ஆண்டவரின் திருச்சட்டத்தின் வழி நின்று ஒழுகுமாறு அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்கும்படி அரசன் யெருசலேமின் குடிகளுக்குக் கட்டளையிட்டான்.

5 இக் கட்டளை அறிவிக்கப்பட்டவுடன் இஸ்ராயேல் மக்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய், தேன் முதலியவற்றின் முதற் பலன்களை மிகுதியாகக் கொண்டு வந்தனர். மேலும் நிலத்தின் எல்லா விளைச்சல்களிலும் செலுத்த வேண்டிய பத்திலொரு பாகத்தையும் செலுத்தத் தொடங்கினர்.

6 அதுவுமன்றி யூதாவின் நகர்களிலே குடியிருந்த இஸ்ராயேல் மக்களும் யூதாவின் மக்களும் ஆடுமாடுகளிலும் தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அப்பணிக்கப்பட்டிருந்த நேர்ச்சைப் பொருட்களிலும் பத்திலொரு பாகத்தைக் குவியல் குவியலாகக் கொண்டு வந்து செலுத்தினர்.

7 மூன்றாம் மாதம் தொடங்கி ஏழாம் மாதம் வரை இவ்வாறு தொடர்ந்து நடந்தேறியது.

8 அரசனும் அவன் அலுவலர்களும் வந்து அக்குவியல்களைக் கண்டு ஆண்டவருக்குப் புகழ்பாடி இஸ்ராயேல் மக்களை ஆசீர்வதித்தனர்.

9 எசெக்கியாஸ் குருக்களையும் லேவியர்களையும் நோக்கி, "இத்துணை குவியல்கள் எவ்வாறு சேர்க்கப்பட்டன?" என்று வினவினான்.

10 அதற்குச் சாதோக் வழிவந்த அசாரியாஸ் என்ற தலைமைக் குரு அரசனைப் பார்த்து, "மக்கள் இந்த முதற்பலன்களை ஆண்டவரின் ஆலயத்துக்குக் கொண்டு வரத் தொடங்கின நாள் முதல் நாங்கள் திருப்தியாய் உண்டு வருகிறோம். எனினும் இன்னும் ஏராளம் எஞ்சியுள்ளது. ஏனெனில் ஆண்டவர் தம் மக்களை ஆசீர்வதித்துள்ளார். தாங்கள் காண்கிற இந்தக் குவியல்கள் மீதியாய் உள்ளவையே" என்று மறுமொழி சொன்னார்.

11 அப்பொழுது எசெக்கியாஸ் ஆண்டவரது ஆலயத்தில் அறைகளைத் தயாரிக்கக் கட்டளையிட்டான்.

12 அவை தயாரான போது அவற்றில் முதற் பலன்களையும் பத்திலொரு பாகத்தையும் நேர்ச்சைப் பொருட்களையும் பத்திரமாக வைத்தனர். அவற்றையெல்லாம் கண்காணிக்க லேவியனான சொனேனியாஸ் தலைவனாகவும் அவனுடைய சகோதரன் செமேயி அவனுக்குத் துணையாகவும்,

13 இவ்விருவருக்கும் கீழ் யேகியேல், அசசியாஸ், நாகாத், அசாயேல், எரிமோத், யோசபாத், எலியேல், எஸ்மாக்கியாஸ், மாகாத், பனாயியாஸ் முதலியோர் அலுவலராகவும் நியமனம் பெற்றனர். இவர்கள் அனைவரும், அரசன் எசெக்கியாசும் ஆலயத்தைக் கண்காணித்து வந்த பெரிய குரு அசாரியாசும் கட்டளையிட்டிருந்தவாறே நியமிக்கப்பட்டனர்.

14 கிழக்கு வாயிலைக் காவல் புரிந்து வந்த எம்னாவின் மகன் கொரே என்ற லேவியன் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளை மேற்பார்த்து வந்தான். ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் பரிசுத்த பொருட்களையும் பங்கிடுவது இவன் வேலை.

15 அவனது அதிகாரத்தின் கீழ் ஏதென், பென்யமீன், யோசுவா, செமேயாஸ், அமாரியாஸ், செக்கேனியாஸ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் குருக்களின் நகர்களில் தங்கி இவர்களின் சகோதரருள் பெரியோர் கொடுத்து வந்தனர்.

16 ஆனால் தலைமுறை அட்டவணையில் எழுதப்பட்ட மூன்று வயதும் அதற்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கும், தத்தம் பிரிவின்படி ஆண்டவரின் ஆலயத்தினுள் நாளும் திருப்பணி புரிந்து வந்த அனைவர்க்கும் பங்குகள் கொடுக்கப்படவில்லை.

17 குருக்களின் பெயர்கள் அவரவர் வம்ச முறைப்படியே தலைமுறை அட்டவணைகளில் எழுதப்பட்டன. இருபது வயதும் அதற்கும் மேற்பட்ட லேவியர்களின் பெயர்கள் அவரவர் அலுவலின்படியும் பிரிவின்படியும் தலைமுறை அட்டவணைகளில் எழுதப்பட்டன.

18 குருக்களோ தங்கள் குழந்தைகள், மனைவியர், புதல்வர், புதல்வியர் ஆகிய அனைவரோடும் பதிவு செய்யப்பட்டனர்; ஏனெனில் தங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் இவர்கள் கவனமாய் இருந்தார்கள்.

19 தங்கள் ஊர்களை அடுத்த வெளி நிலங்களில் வாழ்ந்து வந்த ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சேரவேண்டிய பங்குகளைக் கொடுக்கும்படி சிலர் ஊர்தோறும் நியமிக்கப் பெற்றனர். குருக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவருக்கும் லேவிய வம்சத்தாருள் யாவருக்குமே அவர்கள் பங்குகளைக் கொடுத்து வந்தனர்.

20 இவ்வாறு எசெக்கியாஸ் யூதா நாடெங்கும் செய்து தன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் உண்மை உள்ளவனாகவும் நடந்து வந்தான்.

21 கடவுளின் ஆலயத் திருப்பணிக்கடுத்த காரியங்களை எல்லாம் திருச் சட்டத்திற்கும் சடங்கு முறைகளுக்கும் ஏற்ற விதமாகவே செய்து, தன் முழு மனத்தோடும் ஆண்டவரை நாடினான். எனவே எல்லாவற்றிலும் அவன் வெற்றி கண்டான்.

அதிகாரம் 32

1 இவை ஒழுங்காய் நடந்தேறிய பின், அசீரிய அரசன் சென்னாக்கெரீப் யூதா மேல் படையெடுத்து வந்து அரணுள்ள நகர்களை முற்றுகையிட்டான்.

2 சென்னாக்கெரீப் யெருசலேம் மீது படையெடுத்து வரவிருந்ததை எசெக்கியாஸ் அறிய வந்தான்.

3 உடனே நகருக்கு வேளியே இருந்த நீரூற்றுகளைத் தூர்த்துப் போடுவது பற்றித் தன் அலுவலர்களோடும் ஆற்றல் படைத்த மனிதரோடும் ஆலோசனை செய்தான். அவர்களும் அதற்கு இணங்கினர்.

4 எனவே திரளான மக்களைக்கூட்டி, நாட்டின் நீரூற்றுகளையும் ஓடைகளையும் தூர்த்துப் போட்டான். அசீரியர் வரும்போது அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கக்கூடாது என்பதே அவன் எண்ணம்.

5 மேலும் எசெக்கியாஸ் முன்பு இடிந்திருந்த மதிலையெல்லாம் கவனமாய்ப் பழுது பார்த்து அதன் மேல் கொத்தளங்களையும், அதைச்சுற்றி மற்றொரு மதிலையும் எழுப்பினான். அதுவுமன்றி, தாவீதின் நகரில் மெல்லோ என்னும் கோட்டையையும் பழுது பார்த்துத் திரளான ஆயுதங்களையும் கேடயங்களையும் தயாரித்து வைத்தான்.

6 பின் படைவீரர்களுக்குத் தலைவர்களை நியமித்து அவர்களை நகரவாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் ஒன்று திரட்டினான்.

7 அவர்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்; மனத்தைரியமாய் இருங்கள். அசீரிய அரசனுக்கும் அவனது பெரும்படைக்கும் நீங்கள் அஞ்சவோ நிலை கலங்கவோ கூடாது. ஏனெனில் அவனது படையை விட நமது படையே பெரிது.

8 அதாவது, அவனுக்கு உதவியாயிருக்கிறது தசைத்தோள் மட்டுமே. நமக்கோ நம் கடவுளாகிய ஆண்டவரே துணை. அவரே நமக்காகப் போரிடுவார்" என்றான். மக்கள் யூதாவின் அரசன் எசெக்கியாஸ் சொன்னதைக் கேட்டுத் திடம் கொண்டனர்.

9 பிறகு, தன் முழுப் படையோடும் லாகீஸ் நகரை முற்றுகையிட்டிருந்த அசீரிய அரசன் சென்னாக்கெரீப், யூதாவின் அரசன் எசெக்கியாசிடமும், யெருசலேமிலுள்ள யூதா மக்கள் அனைவரிடமும் தன் ஊழியர்களில் சிலரை அனுப்பி வைத்தான்.

10 அசீரிய அரசன் சென்னாக்கெரீப் சொல்வதைக் கேளுங்கள்: எதன்மேல் நம்பிக்கை கொண்டு முற்றுகையிடப்பட்ட யெருசலேமில் நீங்கள் தங்கியிருக்கிறீர்கள்?

11 நீங்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்திச் சாகும் வண்ணம், 'நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை அசீரிய அரசனின் கைக்குத் தப்புவிப்பார்' என்று உங்களை ஏமாற்றியவன் அந்த எசெக்கியாஸ் அன்றோ?

12 அவருடைய மேடைகளையும் பலி பீடங்களைவும் அழித்து, 'நீங்கள் ஒரே பலிபீடத்திற்கு முன்பாக வழிபாடு நடத்தி, அதன்மேல் தூபம் காட்டக் கடவீர்கள்' என்று யூதாவுக்கும் யெருசலேமுக்கும் கட்டளையிட்டவனும் அதே எசெக்கியாஸ் அன்றோ?

13 நானும் என் முன்னோரும் உலகத்தின் எல்லா இனத்தாருக்கும் செய்ததை நீங்கள் அறியாதிருக்கிறீர்களோ? எந்நாட்டுத் தெய்வங்களாலாவது அந்நாட்டை என்னிடமிருந்து காக்க முடிந்ததா?

14 என் முன்னோர் அழித்துப் போட்ட அந்நாடுகளின் தெய்வங்களிலே யாராலாவது தன்னை வழிபட்டு வந்த மக்கள் என் கைக்குத் தப்புவிக்க முடிந்ததா? அப்படியிருக்க உங்கள் கடவுள் மட்டும் உங்களை என்னிடமிருந்து காத்துவிடுவாரோ?

15 ஆகையால் எசெக்கியாசின் வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். உங்களை வஞ்சிக்க அவனுக்கு இடம் கொடாதீர்கள்; அவனை நம்பாதீர்கள். ஏனெனில் எவ்வினத்தின் தெய்வமும், எந்நாட்டின் கடவுளும் தம் மக்களை என் கைக்கும் என் முன்னோரின் கைக்கும் இதுவரை தப்புவிக்கவில்லை. எனவே, உங்கள் கடவுளும் உங்களை என் கைக்குத் தப்புவிக்க முடியாது" என்று சொல்லச் சொன்னான்.

16 சென்னாக்கெரீப்பின் ஊழியர்கள் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவருடைய ஊழியன் எசெக்கியாசுக்கும் எதிராக இன்னும் பலவாறு பேசினார்கள்.

17 மேலும், சென்னாக்கெரீப் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நிந்தனை நிறைந்த கடிதங்களையும் அனுப்பினான். அவற்றில் அவன், "மற்ற நாடுகளின் தெய்வங்கள் தங்களை வழிபட்டுவரும் மக்களை என் கைக்குத் தப்புவிக்கத் திறனற்றவராய் இருக்கின்றனர். அதுபோல், எசெக்கியாசின் கடவுளும் தம் மக்களை என் கைக்குத் தப்புவிக்கப் போவதில்லை" என்று எழுதியிருந்தான்.

18 இதைச் சென்னாக்கெரீப்பின் ஊழியர்கள் யூத மொழியிலே உரக்கக் கூறி, யெருசலேம் மதிலின் மேல் இருந்த மக்களை அச்சுறுத்தி, அவர்கள் நிலை குலையச் செய்தனர். இவ்வாறு அவர்கள் நகரைக் கைப்பற்ற எண்ணியிருந்தனர்.

19 மனிதர்களின் கைவேலையான மண்ணுலக மக்களின் தெய்வங்களைப் பற்றிப் பேசினது போல் யெருசலேமின் கடவுளைப் பற்றியும் இழிவாகப் பேசத் துணிந்தனர்.

20 அதைக்கேட்டு எசெக்கியாசும் ஆமோசின் மகன் இசயாஸ் என்ற இறைவாக்கினரும் அந்தத் தெய்வ நிந்தனையின் பொருட்டு மன்றாடி விண்ணை நோக்கிக் கதறியழுதனர்.

21 அப்பொழுது ஆண்டவர் ஒரு வானவரை அனுப்பினார். அவர் அசீரியரின் பாசறையில் இருந்த ஆற்றல் படைத்த வீரர்களையும் படைத்தலைவர்களையும் கொன்று போட்டார். எனவே சென்னாக்கெரீப் மகா வெட்கத்துடன் தன் நாடு திரும்பினான். அங்கே அவன் தன் தேவனின் கோயிலினுள் இருந்த போது, அவனுடைய சொந்தப் புதல்வரே அவனை வாளால் வெட்டிக் கொன்றனர்.

22 இவ்வாறு ஆண்டவர் எசெக்கியாசையும் யெருசலேம் குடிகளையும் அசீரிய அரசன் சென்னாக்கெரீப்பின் கைக்கும், மற்ற எல்லாருடைய கைக்கும் தப்புவித்து மீட்டு, அவர்களது சுற்றுப் புறத்திலும் சமாதானத்தைத் தந்தருளினார்.

23 அப்போது பலர் ஆண்டவருக்கென்று பலியிட மிருகங்களை யெருசலேமுக்குக் கொண்டு வந்தனர். அத்தோடு யூதாவின் அரசன் எசெக்கியாசுக்குப் பரிசுகளை வழங்கினர். அதனால் எசெக்கியாசின் புகழ் நாடுகள் எங்கணும் பரவிற்று.

24 அக்காலத்தில் எசெக்கியாஸ் நோய்வாய்பட்டுச் சாகக்கிடந்தான். அப்பொழுது அவன் ஆண்டவர் அவன் மேல் இரங்கி அவனுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்.

25 ஆனால் எசெக்கியாஸ் தனக்கு அருளப்பட்ட உதவிகளுக்குத் தகுந்தபடி நன்றியுள்ளவனாய் நடந்துகொள்ள வில்லை. ஏனெனில் அவன் செருக்குக் கொண்டான். அதன் பொருட்டு அவன்மேலும் யூதாவின் மேலும் யெருசலேமின் மேலும் ஆண்டவர் கோபம் கொண்டார்.

26 பிறகு அவனும் யெருசலேமின் குடிகளும் தங்கள் செருக்கை முன்னிட்டுத் தம்மையே தாழ்த்தினதால், ஆண்டவரின் சீற்றம் எசெக்கியாசின் வாழ்நாள் முழுவதும் அவர்கள் மேல் வரவில்லை.

27 எசெக்கியாஸ் செல்வமும் செல்வாக்கும் உள்ளவனாயினான். பொன், வெள்ளி, இரத்தினம், நறுமண வகைகள், பலவித ஆயுதங்கள் விலையேறப் பெற்ற தட்டுமுட்டுகள் ஆகியவற்றைத் திரளாகச் சேகரித்துக் கொண்டான்.

28 அதுவுமன்றித் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றைச் சேமித்து வைக்கப் பற்பல பண்டசாலைகளையும், கால் நடைகளுக்குத் தொழுவங்களையும், ஆடுகளுக்குப் பட்டிகளையும் அமைத்தான்.

29 அவன் பல நகர்களையும், கட்டினான்; ஆடுமாடுகள் அவனுக்கு ஏராளமாயிருந்தன. ஆண்டவர் அவனுக்கு மிகுந்த செல்வம் கொடுத்திருந்தார்.

30 இதே எசெக்கியாஸ்தான் கியோன் ஆற்றின் மேல் ஊற்றை மறித்துத் தண்ணீரைத் தாவீதின் நகருக்கு மேற்குப்புறமாகத் திருப்பிவிட்டவன். எசெக்கியாஸ் தான் செய்ய நினைத்ததையெல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடித்தான்.

31 நாட்டில் நிகழ்ந்திருந்த அரும் பெரும் நிகழ்ச்சிகளைப் பற்றி விவரம் அறியும் பொருட்டுப் பபிலோனிலிருந்து சில தலைவர்கள் தூதுவர்களாக அவனிடம் வந்தனர். அவ்வேளையில் கடவுள் அவனைச் சோதிக்கிறதற்காகவும், அவன் இதயச் சிந்தனைகளை அறியும் பொருட்டும் அவனைக் கைவிட்டு விட்டார்.

32 எசெக்கியாசின் மற்ற வரலாறும் அவன் நற்செயல்களும் ஆமாசின் மகன் இசயாஸ் இறைவாக்கினரின் நூலிலும், யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளன.

33 எசெக்கியாஸ் தன் முன்னோரோடு கண்வளர்ந்து, தாவீது குடும்பத்தாரின் கல்லறைக்கு மேலுள்ள ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டான். யூதா நாட்டார் அனைவரும் யெருசலேமின் எல்லாக் குடிகளும் அவனைக் குறித்துத் துக்கம் கொண்டாடினர். அவனுடைய மகன் மனாசே அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.

அதிகாரம் 33

1 மனாசே அரசனான போது அவனுக்கு வயது பன்னிரண்டு.

2 அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் யெருசலேமில் அரசோச்சினான். ஆண்டவர் இஸ்ராயேல் புதல்வருக்கு முன்பாக அழித்துப் போட்டிருந்த புறவினத்தாரின் அருவருப்புக்குரிய பழக்க வழக்கங்களின்படி அவன் நடந்து, ஆண்டவர் திருமுன் தீயன புரிந்தான்.

3 ஏனெனில் அவன் தன் தந்தை எசெக்கியாஸ் தகர்த்துப் போட்டிருந்த மேடைகளைத் திரும்பவும் கட்டினான்; பாவால்களுக்குப் பலிபீடங்களையும் சிலைத்தோப்புகளையும் உண்டாக்கி, விண்ணகப் படையையெல்லாம் பணிந்து தொழுதான்.

4 ஆண்டவர், "நமது திருப்பெயர் யெருசலேமில் என்றென்றும் விளங்கும்" என்று சொல்லிக் குறித்திருந்த அதே கடவுளின் ஆலயத்திலே மனாசே அந்நிய தெய்வங்களுக்குப் பலிபீடங்களைக் கட்டத் துணிந்தான்.

5 ஆண்டவரின் ஆலயத்தின் இரண்டு முற்றங்களிலும் அவன் விண்ணகப் படைகளுக்கெல்லாம் பலிபீடங்களை ஏற்படுத்தி வந்தான்.

6 அதுவுமன்றி அவன் பெனன்னோம் என்ற பள்ளத்தாக்கிலே தன் புதல்வரை தீ மிதிக்கச் செய்தான். சகுனம் பார்த்துக் குறிகேட்டுப் பில்லி சூனியங்களை அனுசரித்து வந்தான். மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக் காரருக்கும் புகலிடம் கொடுத்து வந்தான். இவ்வாறு ஆண்டவர் திருமுன் தீயன பல புரிந்து அவருக்குக் கோபம் வருவித்தான்.

7 தாவீதையும் அவர் மகன் சாலமோனையும் பார்த்து, "இந்த ஆலயத்திலும், இஸ்ராயேல் குலத்தாரிலெல்லாம் நாம் தேர்ந்து கொண்ட யெருசலேமிலும் நமது திருப்பெயர் விளங்கச் செய்வோம்;

8 மோயீசன் மூலமாய் நாம் இஸ்ராயேலுக்குக் கொடுத்துள்ள எல்லாத் திருச்சட்டங்களுக்கும் சடங்கு முறைகளுக்கும் கட்டளைகளுக்கும் ஏற்ப இஸ்ராயேல் மக்கள் கவனமாய் ஒழுகிவந்தால், நாம் அவர்களின் முன்னோர்களுக்குக் கொடுத்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்ற மாட்டோம்" என்று சொல்லி முன்பு குறித்திருந்த கடவுளின் ஆலயத்திலேயே, மனாசே செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்க்கப்பட்ட ஒரு சிலையையும் அமைக்கத் துணிந்தான்.

9 மனாசேயால் தீய வழியிலே நடத்தப்பெற்ற யூதா நாட்டவரும் யெருசலேமின் குடிகளும், முன்னாளில் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக அழித்துப் போட்டிருந்த புறவினத்தாரை விட அதிகம் கெட்டுப் போனார்கள்.

10 அதைக்கண்டு கடவுள் அவனுக்கும் அவனுடைய குடிகளுக்கும் புத்திமதி சொன்னார்; அவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை.

11 ஆகவே ஆண்டவர் அசீரிய அரசனின் படைத் தலைவர்களை அவர்கள் மேல் ஏவி விட்டார். அவர்கள் மனாசேயைப் பிடித்து சங்கிலிகளால் கட்டிப் பபிலோனுக்குக் கொண்டு போயினர்.

12 இவ்வாறு அவன் துன்புற்ற போது கடவுளாகிய ஆண்டவரை நோக்கி மன்றாடித் தன் முன்னோர்களின் கடவுளுக்கு முன்பாகப் பெருந்தவம் புரிந்தான்.

13 மேன் மேலும் அவன் ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடினதால் ஆண்டவர் அவனுக்கு மனமிரங்கி அவனுடைய நாட்டிற்கும் யெருசலேமிற்கும் அவனைத் திரும்பக் கொணர்ந்தார். அப்பொழுது ஆண்டவரே கடவுள் என்று மனாசே அறிந்து கொண்டான்.

14 பின்பு அவன் தாவீதின் நகருக்கு வெளியே ஒரு மதிலைக் கட்டினான். அது சீயோனுக்கு மேற்கேயுள்ள பள்ளத்தாக்கிலே மீன் வாயில் தொடங்கி ஒப்பேல் வரை மிகவும் உயரமாகக் கட்டப்பட்டது. அதுவுமன்றி மனாசே அரணான எல்லா நகர்களிலும் படைத்தலைவர்களை நியமித்தான்.

15 ஆண்டவரின் ஆலயத்திலிருந்த அந்நிய தெய்வங்களையும் சிலைகளையும், ஆண்டவரின் ஆலயத்து மலை மேலும் யெருசலேமிலும் தான் கட்டியிருந்த பலிபீடங்களையும் அகற்றி நகருக்கு வெளியே எறிந்தான்.

16 மேலும் ஆண்டவரின் பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதன்மேல் சமாதானப் பலிகளையும் தோத்திரப் பலிகளையும் செலுத்தி, இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரை வழிபடுமாறு யூதாவுக்குக் கட்டளையிட்டான்.

17 ஆயினும் மக்கள் இன்னும் மேடைகளிலே தான் தாங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிட்டு வந்தனர்.

18 மனாசேயின் மற்ற வரலாறு, அவன் தன் கடவுளை நோக்கிச் செய்த மன்றாட்டும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரது திருப்பெயரால் அவனோடு பேசின திருக்காட்சியாளர்களின் வாக்குகளும் இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன.

19 மேலும் அவன் கடவுளை நோக்கிச் செய்த மன்றாட்டும், அவனுக்கு ஆண்டவர் காட்டின இரக்கமும், அவன் செய்த எல்லாப் பாவங்களும், அவன் கடவுளை இகழ்ந்து புறக்கணித்த விதமும், தவம் பண்ணினதற்கு முன் அவன் மேடைகளைக் கட்டித் தோப்புகளையும் சிலைகளையும் ஏற்படுத்தின இடங்களும் ஓசேயில் நூலில் இடம் பெற்றுள்ளன.

20 மனாசே தன் முன்னோரோடு துயிலுற்றுத் தன் வீட்டு நிலத்தில் புதைக்கப்பட்டான். அவனுடைய மகன் ஆமோன் அவனுக்குப் பின் ஆட்சிப் பீடம் ஏறினான்.

21 ஆமோன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்திரண்டு. அவன் ஈராண்டுகள் யெருசலேமில் அரசோச்சினான்.

22 தன் தந்தை மனாசே போன்றே அவனும் ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து வந்தான். மனாசே செய்து வைத்திருந்த சிலைகளுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு அவற்றை வழிபட்டு வந்தான்.

23 தன் தந்தை மனாசே போன்று ஆமோன் ஆண்டவர் திருமுன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாது, அவனை விடப் பெரும் பாவங்கள் செய்தான்.

24 அவனுடைய ஊழியர்கள் அவனுக்கு எதிராகச் சதிசெய்து அவனை அவனது அரண்மனையிலேயே கொன்றுபோட்டனர்.

25 மக்களோ ஆமோன் கொன்றவர்களை வெட்டி வீழ்த்தினர்; அவனுடைய மகன் யோசியாசை ஆட்சிப் பீடத்தில் ஏற்றி வைத்தனர்.

அதிகாரம் 34

1 யோசியாஸ் அரசாளத் தொடங்கின போது அவனுக்கு வயது எட்டு. அவன் யெருசலேமில் முப்பத்தோர் ஆண்டுகள் அரசாண்டான்.

2 ஆண்டவர் திருமுன் நோர்மையாக நடந்து வந்தான்; தன் மூதாதையாகிய தாவீதின் வழிகளில் நின்று வழுவாது ஒழுகி வந்தான்.

3 யோசியாஸ் தன் ஆட்சியின் எட்டாம் ஆண்டில், அவன் இன்னும் இளைஞனாயிருந்த போதே, தன் மூதாதையாகிய தாவீதின் கடவுளைத் தேடத் தொடங்கினான். தன் ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில் அவன் யூதாவிலும் யெருசலேமிலும் இருந்த மேடைகளையும் சிலைத்தோப்புகளையும், வார்க்கப்பட்ட சிலைகளையும், செதுக்கப்பட்ட சிலைகளையும் அகற்றினான்.

4 அவனது முன்னிலையில் பாவால்களின் பலிபீடங்கள் இடிக்கப்பட்டன. அவற்றின்மேல் வைக்கப்பட்டிருந்த வார்க்கப்பட்டனவும் செதுக்கப்பட்டனவுமான சிலைகள் துண்டு துண்டாக்கப் பட்டன; அவற்றிற்குப் பலியிட்டவர்களின் கல்லறைகளின் மேல் அவற்றின் இடிசல்கள் கொட்டப்பட்டன. சிலைத்தோப்புகளும் அழிக்கப்பட்டன.

5 மேலும் யோசியாஸ் பூசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பலிபீடங்களின் மேல் சுட்டெரித்து யூதாவையும் யெருசலேமையும் தூய்மைப்படுத்தினான்.

6 மனாசே, எப்பிராயீம், சிமையோன், நெப்தலி வரையுள்ள எல்லா நகர்களிலும் அவ்வாறே செய்தான்.

7 இஸ்ராயேல் நாடெங்கிலுமுள்ள பலிபீடங்களையும் சிலைத்தோப்புகளையும் செதுக்கப்பட்ட சிலைகளையும் கட்டப்பட்ட எல்லாக் கோவில்களையும் அவ்வாறே அழித்தான். பின்பு யோசியாஸ் யெருசலேமுக்குத் திரும்பினான்.

8 இவ்வாறு நாட்டையும் ஆலயத்தையும் சுத்தப்படுத்தின பின்பு தன் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் யோசியாஸ் எசெலியாவின் மகன் சாப்பானையும், நகரத் தலைவர்களுள் ஒருவனான மவாசியாசையும், பதிவு செய்பவனான யோவாக்காசின் மகன் யோகாவையும் தன் கடவுளான ஆண்டவரின் ஆலயத்தைப் பழுதுப் பார்க்கும்படி அனுப்பினான்.

9 அவர்கள் பெரிய குரு எல்கியாசிடம் வந்து, மனாசே, எப்பிராயீம், இஸ்ராயேலின் எஞ்சிய ஊர்கள், யூதா, பென்யமீன் நாடெங்குமுள்ள குடிகளிடமிருந்தும், யெருசலேமின் குடிகளிடமிருந்தும் லேவியர், வாயிற்காவலர் வசூலித்துக் கடவுளின் ஆலயத்தில் கொண்டு வந்து சேர்த்திருந்த பணத்தைப் பெற்றார்கள்.

10 அதை ஆண்டவரின் ஆலய மேற்பார்வையாளர் கையில் கொடுத்து ஆண்டவரின் ஆலயத்தைப் பழுது பார்த்துச் சீர்படுத்துவதற்குக் கொடுத்தனர்.

11 இவர்களோ கொத்தருக்கும் தச்சருக்கும் பணம் கொடுத்து, யூதா அரசர்களால் அழிக்கப்பட்ட கட்டடங்களுக்காக வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவு பலகைகளையும் வாங்கப் பணித்தனர்.

12 அம் மனிதர்கள் எல்லாவற்றையும் நேர்மையோடு செய்து வந்தனர். வேலையை விரைவாய் நடத்தி அதை மேற்பார்க்க மெராரி புதல்வரில் யாகாத்தும் அப்தியாசும், காத் புதல்வரில் சக்கரியாசும் மெசொல்லாமும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இசைக்கருவிகளை வாசிப்பதில் திறமை படைத்த லேவியர்கள்.

13 இவர்கள் சுமைகாரரையும், பற்பல வேலைகளைச் செய்துவந்த மற்ற எல்லாரையும் மேற்பார்த்து வந்தனர்; இன்னும் சிலர் எழுத்தரும் அலுவலரும் வாயிற் காவலருமாய்ப் பணியாற்றினர்.

14 ஆண்டவரின் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தை அவர்கள் வெளியே எடுத்தபோது, மோயீசன் எழுதியிருந்த ஆண்டவரின் திருச்சட்ட நூலைக் குரு எல்கியாஸ் கண்டெடுத்தார்.

15 அப்பொழுது அவர் செயலன் சாப்பானைப் பார்த்து, "நான் ஆண்டவரின் ஆலயத்தில் திருச்சட்ட நூலைக் கண்டெடுத்தேன்" என்று சொல்லி, அதை அவனது கையில் கொடுத்தார்.

16 சாப்பான் அதை வாங்கி அரசனிடம் கொண்டுபோய் அவனை நோக்கி, "உம் கட்டளை எல்லாம் உம் ஊழியர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.

17 ஆண்டவரின் ஆலயத்தில் காணப்பட்ட பணத்தை அவர்கள் எடுத்து, மேற்பார்வையாளருக்கும் வேலைக் காரர்களுக்கும் அதைக் கொடுத்துவிட்டார்கள்.

18 மேலும் குரு எல்கியாஸ் இந்நூலை என் கையில் கொடுத்தார்" என்று சொல்லி, அரசனுக்கு முன்பாக அதை படிக்க ஆரம்பித்தான்.

19 திருச்சட்டத்தின் வார்த்தைகளை அரசன் கேட்டவுடன் அவன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு,

20 எல்கியாசையும் செயலன் சாப்பானையும், இவனுடைய மகன் அயிக்காமையும், மிக்காவின் மகன் அப்தோனையும், அரசனின் ஊழியன் அசாவாசையும் பார்த்து,

21 கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் எழுதியுள்ளவாறு நீங்கள் போய் எனக்காகவும், இஸ்ராயேலிலும் யூதாவிலும் எஞ்சியிருப்போருக்காகவும் ஆண்டவரை வேண்டுங்கள். இந்நூலில் எழுதப்பட்டுள்ளவாறு நடந்திருக்க வேண்டிய நம் முன்னோர்கள் ஆண்டவரின் கட்டளையை மீறினதனால் அன்றோ ஆண்டவரின் கடுங்கோபம் நம் மேல் மூண்டது? என்றான்.

22 எல்கியாசும் அரசன் அவனோடு அனுப்பியிருந்த மற்றவர்களும் அரசனின் கட்டளைப்படியே ஒல்தாள் என்ற இறைவாக்கினளிடம் போனார்கள். இவள் அஸ்ராவிற்குப் பிறந்த தோக்காத்தின் மகனான செல்லும் என்னும் ஆடைக் கண்காணிப்பாளனின் மனைவி (இவள் யெருசலேமின் இரண்டாம் பகுதியில் வாழ்ந்து வந்தாள்). அவர்கள் அவளிடம் சென்று செய்தியை அறிவித்தனர்.

23 ஒல்தாள் அவர்களை நோக்கி, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'என்னிடம் உங்களை அனுப்பினவனுக்குச் சொல்லுங்கள்: ஆண்டவர் சொல்லுகிறதாவது:

24 இதோ யூதாவின் அரசனுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட அந்நூலில் எழுதப்பட்டுள்ள தீமைகளையும் எல்லாச் சாபங்களையும் நாம் இவ்விடத்தின் மேலும், இதன் குடிகளின் மேலும் வரச் செய்வோம்.

25 ஏனெனில், அவர்கள் நம்மைப் புறக்கணித்து, அந்நிய தெய்வங்களுக்குப் பலியிட்டு, தங்கள் தீய நடத்தையால் நமக்குக் கோபம் மூட்டியுள்ளனர். எனவே, நமது கடுங்கோபம் இவ்விடத்தின் மேல் மூண்டெழும். அக்கோபக்கனல் அவிந்து போகாது.'

26 ஆண்டவரை நோக்கி மன்றாட வேண்டும் என்று உங்களை அனுப்பின யூதாவின் அரசனிடம் நீங்கள் போய்ச் சொல்ல வேண்டியதாவது: இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உமக்குச் சொல்லுகிறதைக் கேளும்: 'நீ அந்நூலின் வார்த்தைகளைக் கேட்டவுடனே

27 உள்ளம் உருகி, இவ்விடத்திற்கும் யெருசலேம் குடிகளுக்கும் எதிரான வசனங்களைக்கேட்டு, நமக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, நமக்கு அஞ்சி, உன் ஆடைகளைக் கிழித்து, நமக்கு முன்பாகக் கண்ணீர்விட்டு அழுததால், இதோ நாம் உன் மன்றாட்டைக் கேட்டோம்.

28 நாம் சில நாட்களுக்குள் உன்னை உன் மூதாதையர் அருகே சேர்ப்போம். சமாதானத்துடன் நீ கல்லறைக்குப் போவாய். நாம் இந்நகரின் மேலும், அதன் குடிகளின் மேலும் வரச்செய்யும் எல்லாத் தீமைகளையும் நீ உன் கண்களால் காணப்போகிறதில்லை" என்றான். தூதர்களோ திரும்பி வந்து அவள் சொன்னதையெல்லாம் அரசனுக்கு அறிவித்தனர்.

29 அப்பொழுது அரசன் யூதாவிலும் யெருசலேமிலும் இருந்த பெரியோர் அனைவரையும் வரவழைத்தான்.

30 பின் ஆண்டவரின் ஆலயத்துக்குப் போனான். யூதாவின் எல்லா மனிதரும், யெருசலேமின் குடிகளும் குருக்களும் லேவியரும், பெரியோர் சிறியோர் அனைவரும் அவனோடு போனார்கள். அவர்கள் எல்லாரும் ஆண்டவரின் ஆலயத்தில் நுழைந்த போது, அரசன் நூல் முழுவதையும் அவர்களின் முன்பாக வாசித்தான்.

31 பிறகு அரசன் தன் மேடையின் மேல் நின்று கொண்டு தான் வாசித்த அந்நூலில் எழுதப்பட்டிருப்பது போல், தான் ஆண்டவரைப் பின்பற்றுவதாகவும், அவருடைய கட்டளைகளையும் நீதி முறைகளையும் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் பின்பற்றி நடப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தான்; ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்தான்.

32 பின்பு யெருசலேமிலும் பென்யமீனிலும் இருந்த யாவரையும் அதற்கு உட்படும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். எனவே யெருசலேமின் குடிகள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையின்படியே செய்தார்.

33 யோசியாஸ் இஸ்ராயேல் மக்களின் நாடெங்குமுள்ள அருவருப்பானவை அனைத்தையும் அகற்றினான்; இஸ்ராயேலில் எஞ்சியிருந்தோர் அனைவரும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையே வழிபடுமாறு செய்தான். அவன் வாழ்நாள் முழுவதும், அவர்கள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரை விட்டு அகன்றதேயில்லை.

அதிகாரம் 35

1 யோசியாஸ் யெருசலேமில் ஆண்டவரின் பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடினான். முதன் மாதம் பதினான்காம் நாள் பாஸ்கா பலியிடப்பட்டது.

2 அவன் குருக்களுக்கு அலுவல்களைப் பிரித்துக் கொடுத்து, அவர்கள் ஆண்டவரின் ஆலயத்தில் திருப்பணி புரியுமாறு அவர்களை ஊக்குவித்தான்.

3 மேலும் இஸ்ராயேலர் அனைவருக்கும் போதித்து வந்தவர்களும், ஆண்டவரின் பரிசுத்தர்களாய் விளங்கி வந்தவர்களுமான லேவியர்களைப் பார்த்து நற்புத்தி சொன்னான். "நீங்கள் உடன்படிக்கைப் பேழையை இஸ்ராயேல் அரசர் தாவீதின் மகன் சாலமோன் கட்டியுள்ள ஆலயத்தின் திருவிடத்தில் வையுங்கள். இனி அதை எடுத்துக்கொண்டு போக வேண்டியதில்லை; இப்போது நீங்கள் உங்கள் கடவுளான ஆண்டவருக்கும், அவருடைய மக்களான இஸ்ராயேலருக்கும் ஊழியம் செய்யுங்கள்.

4 இஸ்ராயேலின் அரசராகிய தாவீதும் அவருடைய மகன் சாலமோனும் எழுதிக் கொடுத்துள்ளவாறு வம்சம் வம்சமாகவும், பிரிவு பிரிவாகவும் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

5 நீங்கள் உங்கள் சகோதரராகிய மற்ற இஸ்ராயேலரின் வம்சப் பிரிவுகளுக்கு ஏற்றவாறு பிரிவுக்குப் பிரிவு திருவிடத்தில் நில்லுங்கள்.

6 பாஸ்காவைப் பிலியிட்டு உங்களைத் தூய்மைப்படுத்துங்கள்; மேலும் மோயீசன் வழியாக ஆண்டவர் சொல்லியருளியபடியே உங்கள் சகோதரர் செய்யும்படி அவர்களைத் தயார் செய்யுங்கள்" என்றான்.

7 பின்னர் அங்கு வந்திருந்த மக்கள் அனைவருக்கும் பாஸ்காப் பலிக்காக முப்பதினாயிரம் செம்மறிக் குட்டிகளையும் வெள்ளாட்டுக் குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும் அரசன் யோசியாஸ் தன் உடைமையிலிருந்து கொடுத்தான்.

8 அவனுடைய அலுவலரோ மக்களும் குருக்களும் லேவியர்களும் செலுத்த வேண்டிய காணிக்கைப் பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து உதவினர். எல்கியாஸ், சக்கரியாஸ், யாகியேல் என்ற ஆண்டவரின் ஆலய மேற்பார்வையாளர்கள் குருக்களுக்குப் பாஸ்காப் பலிக்கென இரண்டாயிரத்து அறுநூறு செம்மறியாட்டுக் குட்டிகளையும் வெள்ளாட்டுக் குட்டிகளையும் காளைகளையும் கொடுத்தனர்.

9 மேலும் கொனேனியாசும் செமேயாசும் நத்தானியேலும் இவனுடைய சகோதரர்களும், அசாபியாஸ், ஏகியேல், யோசபாத் என்ற லேவியர் தலைவர்களும் பாஸ்காப் பலிக்கென ஐயாயிரம் செம்மறியாட்டுக் குட்டிகளையும் வெள்ளாட்டுக் குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் லேவியருக்குக் கொடுத்தனர்.

10 இவ்வாறு வழிபாட்டிற்குத் தேவையான அனைத்தும் தயாராயின. அரசனின் கட்டளைப்படியே குருக்களும் லேவியரும் தத்தம் பிரிவுகளின்படி திருப்பணி புரிந்து வந்தனர்.

11 அவர்கள் பாஸ்காச் செம்மறியை அறுத்தனர். குருக்கள் தங்கள் கையாலேயே இரத்தத்தைத் தெளித்தனர். லேவியர்களோ தகனப்பலி மிருகங்களைத் தோலுரித்தனர்.

12 மோயீசனின் நூலில் எழுதப்பட்டிருக்கிறபடி மக்கள் ஆண்டவருக்குப் பலி செலுத்தும்படி, தகனப் பலிப் பொருளைப் பல பாகங்களாகப் பிரித்து அவற்றைக் குடும்ப வரிசைப்படி கொடுத்தனர். காளைகளையும் அவ்வாறே செய்தனர்.

13 பாஸ்காச் செம்மறி திருச்சட்ட நூலில் எழுதப்பட்டிருக்கிறபடி தீயில் பொரிக்கப்பட்டது. சமாதானப் பலி மிருகங்களையோ அவர்கள் கொப்பரைகளிலும் பானைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, மக்கள் அனைவருக்கும் விரைவாய் பரிமாறினார்கள்.

14 பின் தங்களுக்காகவும் குருக்களுக்காகவும் பாஸ்காவைத் தயார்ப்படுத்தினர். ஏனெனில், குருக்கள் தகனப் பலிகளையும் கொழுப்பையும் ஒப்புக்கொடுப்பதில் இரவு வரை ஈடுபட்டிருந்தனர். எனவே லேவியர் கடைசியில் தாங்களும், ஆரோனின் புதல்வரான குருக்களும் உண்ணும்படி பாஸ்காவைத் தயாரித்தனர்.

15 மேலும், தாவீதின் கட்டளைப்படியும், ஆசாப், ஏமான், இதித்தூன் என்ற அரசரின் இறைவாக்கினர்களின் கட்டளைப்படியும் ஆசாப்பின் புதல்வரான பாடகர்கள் தத்தம் பிரிவுப்படி நின்றனர். வாயிற்காவலர் ஒவ்வொரு வாயிலிலும் நின்று காவல்புரிந்தனர். இவர்கள் தங்கள் வேலையை விட்டுவர அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் அவர்களின் சகோதரரான லேவியர்கள் அவர்களுக்காகவும் பாஸ்காவைத் தயாரித்து வைத்திருந்தனர்.

16 இவ்வாறு அரசன் யோசியாஸ் கட்டளைப்படி, பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடவும், ஆண்டவரின் பலிபீடத்தில் தகனப்பலிகளைச் செலுத்தவும் வேண்டிய வழிபாட்டு முறைகள் அனைத்தும் ஒழுங்காக ஏற்பாடு செய்யப்படன.

17 ஆதலால் அங்கே வந்திருந்த இஸ்ராயேல் மக்கள் பாஸ்காத் திருவிழாவையும் புளியாத அப்பத் திருவிழாவையும் ஏழு நாள் வரை கொண்டாடினர்.

18 இறைவாக்கினர் சாமுவேல் காலம் முதல் இஸ்ராயேலில் இவ்வாறு பாஸ்காத் திருவிழா கொண்டாடப் பட்டதில்லை. மேலும் குருக்கள், லேவியர், யூதா மக்கள், இஸ்ராயேல் மக்கள், யெருசலேம் நகர மக்கள், ஆகிய அனைவரோடும் சேர்ந்து யோசியாஸ் கொண்டாடின இப்பாஸ்காவைப் போல் வேறு எந்த இஸ்ராயேல் அரசனும் இதற்கு முன் கொண்டாடியது இல்லை.

19 யோசியாசினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அப் பாஸ்காத் திருவிழா கொண்டாடப்பட்டது.

20 யோசியாஸ் கடவுளின் ஆலயத்தைச் செப்பனிட்ட பிறகு, எகிப்திய அரசன் நெக்காவோ யூப்ரட்டீஸ் நதி தீரத்திலிருந்த கர்கமீஸ் நகர் மேல் படையெடுத்து வந்தான். யோசியாஸ் அவனோடு போரிடப் புறப்பட்டான்.

21 அவனோ இவனிடம் தூதரை அனுப்பி, "யூதாவின் அரசே, உமக்கும் எனக்கும் பகை ஒன்றுமில்லை. நான் உம்மை எதிர்த்து வரவில்லை; வேறொருவனோடு போரிடவே வந்துள்ளேன். நான் உடனே செய்ய வேண்டும் என்பது கடவுளின் கட்டளை. கடவுள் என்னோடு இருப்பதால் நீர் அவரை எதிர்த்து நிற்க வேண்டாம். இல்லாவிடில், அவர் உம்மைக் கொன்று விடுவார்" என்று சொல்லச் சொன்னான்.

22 எனினும் யோசியாஸ் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. நெக்காவோ மூலம் கடவுள் உரைத்திருந்த வார்த்தைக்கு அவன் செவி கொடாது, அவனுடன் போரிட ஆயத்தம் செய்தான்; மக்கெதோ என்ற சமவெளியில் அவனோடு போரிட்டான்.

23 அப்போரில் அவன் வில் வீரரால் காயம் அடைந்தான். அப்பொழுது அவன் தன் ஊழியரைப் பார்த்து, "நான் பெரிதும் காயம் அடைந்துள்ளேன். எனவே என்னைப் போர்க்களத்திற்கு வெளியே கொண்டு போங்கள்" என்றான்.

24 அவர்கள் அவனை அவனுடைய தேரிலிருந்து இறக்கி மற்றொரு தேரின் மேல் ஏற்றி யெருசலேமுக்குக் கொண்டு போனார்கள். அவன் அங்கே இறந்து தன் மூதாதையரின் கல்லறையில் புதைக்கப்பட்டான். யூதாவிலும் யெருசலேமிலுமுள்ள யாவரும் அவனுக்காகத் துக்கம் கொண்டாடினர்.

25 எரெமியாஸ் யோசியாசின் மீது ஒரு புலம்பல் பாடினார். அப் புலம்பலையே இன்று வரை பாடகர் பாடகிகள் அனைவரும் பாடி வருகின்றனர். இது இஸ்ராயேலில் வழக்கமாகி விட்டது. இது (எரெமியாசின்) புலம்பல் என்ற நூலில் எழுதப்பட்டிருக்கிறது.

26 யோசியாசின் மற்றச் செயல்களும் ஆண்டவரின் திருச்சட்டத்திற்கு ஏற்ப அவன் செய்த நற்செயல்களும்,

27 அவனது வரலாறு முழுவதும் யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.

அதிகாரம் 36

1 அப்பொழுது நாட்டு மக்கள் யோசியாசின் மகன் யோவாக்காசை அழைத்து அவனை யெருசலேமில் அவனுடைய தந்தையின் அரியணையில் ஏற்றினார்கள்.

2 யோவாக்காஸ் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்து மூன்று. மூன்று மாதம் யெருசலேமில் அவன் அரசாண்டான்.

3 பின்னர் எகிப்திய அரசன் யெருசலேமுக்கு வந்து அவனை அரச பதவியின்று நீக்கி வைத்தான். மேலும் மக்கள் மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னும் தண்டனையாக விதித்தான்.

4 அவனுடைய சகோதரன் எலியாக்கீமை அவன் யூதாவுக்கும் யெருசலேமுக்கும் அரசனாக்கினான்; இவனது பெயரை மாற்றி யோவாக்கீம் என்று இவனை அழைத்தான். யோவாக்காசையோ தன்னோடு எகிப்திற்குக் கூட்டிச் சென்றான்.

5 அரச பதவி ஏற்ற போது யோக்கீமுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் பதினோர் ஆண்டுகள் அரசாண்டான். தன் கடவுளாகிய ஆண்டவர் திரு முன் அவன் தீமையையே செய்து வந்தான்.

6 கல்தேயரின் அரசன் நபுக்கோதனசார் அவனைத் தாக்கிச் சிறை பிடித்து, பபிலோனுக்குக் கொண்டு போனான்.

7 ஆண்டவரின் ஆலயத்தில் இருந்த தட்டுமுட்டுகளையும் பபிலோனுக்குக் கொண்டு சென்று அவற்றைத் தன் கோவிலிலே வைத்தான்.

8 யோவாக்கீமின் மற்றச் செயல்களும், அவன் செய்த அருவருப்பான தீச் செயல்களும், யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. அவன் மகன் யோவக்கீன் அவனுக்கு பின் அரியணை ஏறினான்.

9 யோவக்கீன் அரசனான போது, எட்டு வயதினனாயிருந்தான். அவன் யெருசலேமில் மூன்று மாதமும் பத்து நாளுமே அரசாண்டான். அவன் ஆண்டவர் திருமுன் தீமையையே செய்தான்.

10 மறு ஆண்டின் துவக்கத்தில் அரசன் நபுக்கோதனசார் அவனைச் சிறைபிடிக்கவும், கடவுளின் ஆலயத்திலிருந்த விலையேறப் பெற்ற தட்டு முட்டுகளைக் கொள்ளையிட்டுப் பபிலோனுக்குக் கொண்டு செல்லவும் தன் படையை அனுப்பி வைத்தான். மேலும் நபுக்கோதனசார் அவனுக்குப் பதிலாக அவனுடைய சிற்றப்பன் செதேசியாசை யூதாவுக்கும் யெருசலேமுக்கும் அரசனாக்கினான்.

11 செதேசியாஸ் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்தொன்று. இவன் யெருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.

12 தன் கடவுளாகிய ஆண்டவர் திரு முன் தீயன புரிந்து வந்தான். இறைவாக்கினர் எரெமியாஸ் கடவுளின் திருப்பெயரால் அவனுக்குப் புத்தி சொல்லி வந்தார். செதேசியாசோ அவருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தி அவருக்கு மரியாதை செய்யவில்லை.

13 கடவுளின் திருப்பெயரால் தன்னை ஆணையிடச் செய்த அரசன் நபுக்கோதனசாருக்கு எதிராக அவன் கிளர்ச்சி செய்தான். அன்றியும் அவன் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர்பால் மனம் திரும்பாதபடி இறுமாப்புக் கொண்டு தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டான்.

14 அவன் மட்டுமன்றி, குருக்களில் தலைமையானவர்களும் மக்களும் புறவினத்தாரைப் பின்பற்றிக் கெட்ட நடத்தையில் இறங்கினர். ஆண்டவர் தமக்கென யெருசலேமில் பரிசுத்தப்படுத்தியிருந்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினர்.

15 அவர்களுடைய முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்கள் மீதும் தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டவராய்த் தம் தூதுவர்களை நாளும் அதிகாலையில் அவர்களிடம் அனுப்பி, அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தார்.

16 அவர்களோ கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்கள் வார்த்தைகளை மதியாது, இறைவாக்கினரை நகைத்து நிந்தித்தனர். எனவே ஆண்டவரின் சீற்றம் மக்கள் மேல் மூண்டது. இனி உதவி எங்கிருந்து வரும்?

17 ஏனெனில் ஆண்டவர் கல்தேயரின் அரசனை அவர்கள் மேல் ஏவி விட்டார். அவன் வந்து கடவுள் ஆலயத்தின் திருவிடத்திலேயே அவர்களின் இளைஞர்களை வாளால் வெட்டினான். இளைஞர் கன்னியர் என்றும், முதியோர் கிழவர் என்று பாராது எல்லாரையும் ஆண்டவர் அவனது கையில் ஒப்புவித்தார்.

18 மேலும் அவன் கடவுளின் ஆலயத்தில் உள்ள சிறிதும் பெரிதுமான எல்லாத் தட்டுமுட்டுகளையும், ஆலயத்தின் கருவூலங்களையும், அரசனின் செல்வங்களையும், தலைவர்களின் சொத்துகளையும் கொள்ளையிட்டுப் பபிலோனுக்குக் கொண்டு போனான்.

19 எதிரிகள் கடவுளின் ஆலயத்தைத் தீக்கு இரையாக்கினர்; யெருசலேமின் மதிலை இடித்துக் கோபுரங்களை எல்லாம் அழித்து விட்டனர்.

20 வாளுக்கு இரையாகாது தப்பின ஏனையோர் சிறைப்படுத்தப்பட்டு பபிலோனுக்குக் கொண்டு போகப் பட்டனர். பாரசீக ஆட்சி ஏற்படும் வரை, அங்கே அரசனுக்கும் அவனுடைய புதல்வருக்கும் அடிமைகளாய் இருந்து வந்தனர்.

21 இவ்வாறு எரெமியாஸ் வாயிலாக ஆண்டவர் கூறியிருந்த வாக்கு நிறைவேறும் பொருட்டு, நாடு தான் ஓய்ந்திருக்க வேண்டிய ஆண்டுகளுக்கு ஈடாக ஓய்வை அனுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க் கிடந்த நாளெல்லாம் எழுபது ஆண்டுகளாக ஓய்ந்திருந்தது.

22 எரெமியாஸ் வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த வாக்கு நிறைவேறும்படி பாரசீக அரசன் சீருஸ் என்பவனின் முதலாம் ஆண்டிலே ஆண்டவர் அவனை ஏவி விட, சீருஸ் கடிதம் எழுதித் தனது நாடெங்கும் ஆட்களை அனுப்பினான்.

23 பாரசீக அரசன் சீருஸ் சொல்லுகிறதாவது: விண்ணகக் கடவுளாகிய ஆண்டவர் பூமியின் நாடுகளை எல்லாம் எனக்கு அடிமைப்படுத்தி, யூதாவிலுள்ள யெருசலேமில் தமக்கு ஓர் ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளார். எனவே உங்கள் நடுவே வாழ்ந்து வரும் அவருடைய மக்கள் அனைவரும் யெருசலேமுக்குப் போகட்டும். அவர்களின் கடவுளாகிய ஆண்டவர் அவர்களோடு இருப்பாராக!" என்று எங்கும் விளம்பரம் செய்தான்.