அதிகாரம் 01
1 ஆதாம், சேத், ஏனோஸ்;
2 காயினான், மலலெயேல், யாரேத்;
3 ஏனோக், மத்துசலா, லாமேக்;
4 நோவா, சேம், காம், யாப்பேத்.
5 யாப்பேத்தின் புதல்வர்கள்: கோமேர், மாகோக், மாதாய், யாவான், துபால், மொசோக், தீராஸ் ஆகியோராவர்.
6 கோமேரின் புதல்வர்கள்: அசெனெஸ், ரிப்பாத், தொகோர்மா ஆகியோராவர்.
7 யாவானின் புதல்வர்கள்: எலிசா, தார்சீஸ், சேத்திம், தொதானிம் ஆகியோராவர்.
8 காமுடைய புதல்வர்கள்: கூஸ், மெசுராயிம், புத், கானான் ஆகியோராவர்.
9 கூசுவினுடைய புதல்வர்கள்: சாபா, எவிலா, சபதா, ரெக்மா, சபதகா ஆகியோராவர். ரெக்மாவின் புதல்வர்களுக்கு, சாபா, தாதான் என்று பெயர்.
10 கூஸ் நெம்ரோதையும் பெற்றார். இவர் பூமியிலே ஆற்றலில் சிறந்து விளங்கினார்.
11 மெசுராயிமின் சந்ததியில் லூதிம், அனாமிம், லாவாபிம், நெப்துயிம், பெத்ரூசிம்,
12 கஸ்லுயிம் (இவர்களிடமிருந்தே பிலிஸ்தியர் தோன்றினர்), கப்தோரிம் ஆகியோர் தோன்றினர்.
13 கானான் என்பவர் தலைமகனாய் சிதோனையும், பின்பு ஏத்தையும் பெற்றார்.
14 மேலும், யெபுசெயரும், அமோறையரும், கெர்சேயரும்
15 ஏவையரும் அராசேயரும், சீனாயரும், அரதியரும்,
16 சமாரியரும், அமத்தையரும் அவருடைய வழித்தோன்றல்களே.
17 சேமின் சந்ததியில் எலாம், அஸ்சூர், அற்பக்சாத், நூத், ஆராம், ஊஸ், ஊல், கெதேர், மொசோக் ஆகியோர் பிறந்தனர்.
18 அற்பக்சாத் சாலேயைப் பெற்றார்; சாலே எபேரைப் பெற்றார்.
19 எபேருக்கு இரு புதல்வர்கள் பிறந்தனர். ஒருவர் பாலேக் என்று அழைக்கப்பட்டார் (ஏனெனில், இவரது காலத்தில் தான் நாடு பகுக்கப்பட்டது);
20 அவர் சகோதரரின் பெயர் யெக்தான். இவர் எல்மோதாத், சாலேப், ஆசர்மோத், யாரே ஆகியோருக்குத் தந்தை ஆனார்.
21 மேலும், அதோராம், ஊசால், தெக்ளா,
22 ஏபால், அபிமாயேல், சாபா, ஒப்பீர், ஏவிலா,
23 யோபாப் ஆகியோர் அனைவரும் யெக்தான் வழி வந்தவர்கள்.
24 சேமின் குலத்தில் அற்பக்சாத், சாலே,
25 எபேர், பாலேக்,
26 ராகாவு, சேருக், நாக்கோர், தாரே,
27 ஆபிரகாம் எனப்பட்ட ஆபிராம் ஆகியோர் தோன்றினர்.
28 ஆபிரகாம், ஈசாக், இஸ்மாயேல் என்ற இரு புதல்வரைப் பெற்றார்.
29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மாயேலின் மூத்த மகன் பெயர் நபயோத்; அவருக்குப் பின் கேதார், அத்பியேல்,
30 மப்சாம், மஸ்மா, தூமா, மஸ்சா, ஆதாத், தேமா,
31 யெதூர், நாபீஸ், கெத்மா ஆகியோர் பிறந்தனர்.
32 சமிரான், யெக்சான், மதான், மதியான், யெஸ்பொக், சூயே ஆகியோர் ஆபிரகாமுக்கு அவர் வைப்பாட்டி கெத்தூராளிடம் பிறந்தனர். யெக்சானின் புதல்வர் சாபா, தாதான் ஆகியோராவர். தாதானின் புதல்வர் அஸ்சூரிம், லத்தூசிம், லவோமிம், ஆகியோராவர்;
33 மதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், ஏனோக், அபிதா, எல்தா ஆகியோராவர். இவர்கள் எல்லாரும் கெத்தூராளுக்குப் பிறந்தவர்கள்.
34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார். ஈசாக்கு எசாயுவையும் இஸ்ராயேலையும் பெற்றார்.
35 எசாயுவுக்கு எலீப்பாஸ், ரகுயேல், ஏகூஸ், இகலோம், கோரே ஆகியோர் பிறந்தனர்.
36 எலீப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், செப்பி, காதான், கேனேஸ், தம்னா, அமலேக் என்பவர்கள்.
37 ரகுயேலுடைய புதல்வர்: நகாத், சாரா, சம்மா, மேசா என்பவர்கள்.
38 செயீருக்கு லோத்தான், சோபால், செபெயோன், அனா, திசோன், எசேர், திசான் ஆகியோர் பிறந்தனர்.
39 லோத்தான் ஓரியையும் ஒமாமையும் பெற்றார். லோத்தானுடைய சகோதரியின் பெயர் தம்னா.
40 அலியான், மனகாத், ஏபால், செப்பி, ஓனாம் ஆகியோருக்குச் சோபால் தந்தையானார். செபயோனின் புதல்வர் அயியா, அனா என்று அழைக்கப்பட்டனர். அனாவின் மகன் பெயர் திசோன்.
41 திசோனின் புதல்வர்: அம்ராம், எசெபான், யெதிரான், காரான் என்பவர்கள்.
42 எசேரின் புதல்வர்: பலான், சாவன், யக்கான் என்பவர்கள். திசானுக்கு ஊஸ், அரான் என்ற புதல்வர் பிறந்தனர்.
43 இஸ்ராயேல் புதல்வரை ஆள அரசர் தோன்று முன்பு, ஏதோம் நாட்டை ஆண்டுவந்த மன்னர்கள் வருமாறு: பெயோரின் மகன் பாலே தெனபாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார்.
44 பாலே இறந்த பின் பொஸ்ரா என்ற ஊரைச் சார்ந்த ஜாரேயின் மகன் யோபாப் அரியணை ஏறினார்.
45 யோபாப் இறந்த பின் தெமானியரின் நாட்டில் பிறந்த உசாம் அரசரானார்.
46 உசாம் இறந்த பின்பு பதாதின் மகன் ஆதாத் அரியணை ஏறினார். இவர் மோவாப் நாட்டிலே மதியானியரை முறியடித்தார். இவரது தலை நகரின் பெயர் ஆவித்.
47 ஆதாத் உயிர் நீத்த பின் மஸ்ரெக்காவைச் சார்ந்த செம்லா அரசரானார்.
48 செமலா மாண்டபிறகு ஆற்றோரத்தில் அமைந்திருக்கும் ரொகொபோத்தில் வாழ்ந்து வந்த சவுல் ஆட்சி செலுத்தினார்.
49 சவுல் மரித்த பின் அக்கோபோரின் மகன் பலனான் அரியணை ஏறினார். பலனானும் மாண்டார்.
50 இவருக்குப் பின் ஆதாத் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இவரது தலைநகரின் பெயர் பாவு. இவருடைய மனைவி பெயர் மெக்தாபேல். இவள் மெசாப் என்பவளின் மகள், மாத்தேத்தின் புதல்வி.
51 ஆதாத் இறந்தபின், அரசர்களுக்குப் பதிலாக ஏதோமில் மக்கள் தலைவர்கள் தோன்றினர்.
52 தம்னா, அல்வா, எத்தேத், ஒலிபாமா, ஏலா
53 பினோன், கேனேஸ், தேமான், மப்சார்,
54 மத்தியேல், ஈராம் ஆகியோரே அத்தலைவர்கள்.
அதிகாரம் 02
1 இஸ்ராயேலின் புதல்வர்கள்: ரூபன், சிமெயோன், லேவி, யூதா, இசாக்கார், சபுலோன்,
2 தாண், யோசேப், பென்யமீன், நெப்தலி, காத், ஆசேர் என்பவர்களாம்.
3 யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா ஆகிய மூவரும் சூயேயின் மகளாகிய கானானியப் பெண்ணிடம் அவருக்குப் பிறந்தனர். யூதாவின் மூத்த மகன் ஏர் ஆண்டவர் திருமுன் தீயவழியில் நடந்து வந்தார்; எனவே அவரைக் கொன்று போட்டார்.
4 தம் மருமகளாகிய தாமார் மூலம் யூதாவுக்கு பாரேஸ், ஜாரா என்பவர்கள் பிறந்தனர். ஆகவே யூதாவுக்கு மொத்தம் ஐந்து புதல்வர்.
5 பாரேசுக்கு எசுரோன், ஆமூல் என்ற இரு புதல்வர் பிறந்தனர்.
6 ஜாராவின் புதல்வர்: ஜம்ரி, எத்தான், ஏமான், கல்கால், தாரா என்ற ஐவர்.
7 கார்மியின் மகன் அக்கார் சாபத்துக்குரியவற்றைத் திருடிப் பாவம் புரிந்து இஸ்ராயேலில் குழப்பம் உண்டு பண்ணினார்.
8 எத்தானுடைய மகன் பெயர் அசாரியாசு.
9 எஸ்ரோனுக்கு எரமெயேல், இராம், கலுபி என்பவர்கள் பிறந்தனர்.
10 இராம் அமினதாபைப் பெற்றார். அமினதாப் யூதாவின் புதல்வருக்குத் தலைவரான நகசோனைப் பெற்றார்.
11 நகசோன் சல்மாவைப் பெற்றார். இவரிடமிருந்து போவாசு பிறந்தார்.
12 போவாசோ ஒபேதைப் பெற்றார். இவரோ இசாயியைப் பெற்றார்.
13 இசாயியோ தலைமகனாக எலியாபையும், இரண்டாவதாக அபினதாபையும், மூன்றாவதாக சிம்மாவையும்,
14 நான்காவதாக நத்தானியேலையும், ஐந்தாவதாக இரதையும்,
15 ஆறாவதாக அசோமையும், ஏழாவதாக தாவீதையும் பெற்றார்.
16 சார்வியா, அபிகாயில் என்பவர்கள் இவர்களுடைய சகோதரிகள். சார்வியாளுக்கு அபிசாயி, யோவாப், அசாயேல் என்ற மூன்று புதல்வர்கள்.
17 அபிகாயிலோ அமாசாவைப் பெற்றாள். இஸ்மாயேல் குலத்தைச் சார்ந்த ஏதரே இவருடைய தந்தை.
18 எஸ்ரோனின் மகன் காலேபோ அசுபாளை மணந்து எரியோத்தைப் பெற்றார். பிறகு அவருக்கு யாசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள் பிறந்தனர்.
19 அசூபா இறந்தபின், காலேப் எப்பிராத்தை மணமுடித்தார். அவளிடம் அவருக்குக் கூர் பிறந்தார்.
20 கூர் ஊரியைப் பெற்றார். ஊரியோ பெசெலெயேலைப் பெற்றார்.
21 பிறகு எஸ்ரோன் கலாதின் தந்தை மக்கீரின் மகளை மண முடித்தார். அப்போது அவருக்கு வயது அறுபது. அவள் அவருக்குச் சேகுபைப் பெற்றாள். சேகுப் ஐயீரைப் பெற்றார்.
22 அப்பொழுது கலாத் நாட்டிலே இருபத்து மூன்று நகர்களைச் சொந்தமாக்கிக் கொண்டார்.
23 கெசூர், ஆராம் என்போர் ஐயீரின் நகர்களையும், கனாத்தையும், அதைச் சேர்ந்த அறுபது நகர்களையும், இவற்றிற்கடுத்த ஊர்களையும் கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் கலாதின் தந்தை மக்கீரின் புதல்வர்கள்.
24 எஸ்ரோன் இறந்த பிறகு காலேப் தம் தந்தையின் மனைவியாகிய எப்பிராத்தாளோடு மண உறவு கொண்டார். இவள் அவருக்குத் தேக்குவாயின் தந்தையாகிய அசூரைப் பெற்றாள்.
25 எஸ்ரோனுடைய மூத்த மகன் பெயர் எரமெயேல். இவருடைய தலைமகன் பெயர் இராம். பிறகு புனா, ஆராம், அசாம், அக்கியா ஆகியோர் பிறந்தனர்.
26 எரமெயேல் அத்தாரா என்பவளையும் மணமுடித்தார்.
27 இவளே ஓனாமின் தாய். எரமெயேலின் தலைமகன் இராமுடைய புதல்வர்களின் பெயர்கள்: மொவோசு, யாமீன், ஆக்கார் என்பவனாம்.
28 ஓனாம் என்பவருக்கு செமேயி, யாதா, ஆகியோர் பிறந்தனர். செமேயியின் புதல்வரோ நதாப், அபிசூர் என்பவர்கள்.
29 அபிசூரின் மனைவியின் பெயர் அபிகாயில். இவள் அவருக்கு அகோபாளையும் மொலிதையும் பெற்றாள்.
30 நதாபின் புதல்வர் சலேத், அப்பைம் என்பவர்கள். சலேத்துக்கு மரணம் வரை மகப்பேறு இல்லை. அப்பைமின் மகன் பெயர் ஏசி.
31 இந்த ஏசி செசானைப் பெற்றார். செசானோ ஓகோலைப் பெற்றார்.
32 செமேயியுடைய சகோதரரான யாதாவின் புதல்வர் ஏத்தேர், யோனத்தான் என்று அழைக்கப் பெற்றனர். ஏத்தேரும் மகப்பேறின்றி இறந்தார்.
33 யோனத்தானோ பலேத்தையும் சீசாவையும் பெற்றார். இவர்கள் எரமெயேலின் புதல்வர்களாம்.
34 சேசானுக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வரில்லை. ஆனால் ஏரா என்ற பெயருள்ள எகிப்திய அடிமை ஒருவன் இருந்தான்.
35 சேசான் இவனுக்குத் தம் மகளை மணமுடித்துக் கொடுத்தார்.
36 இவள் ஏத்தையைப் பெற்றாள். ஏத்தேயோ நாத்தானைப் பெற்றார். நாத்தான் சாபாதைப் பெற்றார்.
37 சாபாத் ஒப்லாலைப் பெற்றார். ஒப்வால் ஒபேதைப் பெற்றார்.
38 ஒபேத் ஏகுவைப் பெற்றார். ஏகு அசாரியாசைப் பெற்றார்.
39 அசாரியாசு எல்லேசைப் பெற்றார். எல்லேசு எலாசாவைப் பெற்றார்.
40 எலாசா சிசமோயைப் பெற்றார். சிசமோய் செல்லுமைப் பெற்றார்.
41 செல்லும் இக்காமியாமைப் பெற்றார். இக்காமியாம் எலிசாமைப் பெற்றார்.
42 எரமெயேலுடைய சகோதரராகிய காலேபுடைய சந்ததியார்: சிப்பின் தந்தை மேசா என்னும் தலைமகனும்,
43 எபிரோனின் தந்தை மரேசாவின் புதல்வருமே. எபிரோனின் புதல்வர் பெயர்: கோரே, தப்புவா, ரேக்கேம், சம்மா என்பனவாம்.
44 சம்மாவோ யெர்க்காமுடைய தந்தை இரகாமைப் பெற்றார். ரேக்கேம் சம்மாயியைப் பெற்றார்.
45 சம்மாயியின் மகன் பெயர் மாவோன்; மாவோனோ பெத்சூரின் தந்தை.
46 காலேபுடைய வைப்பாட்டி எப்பா ஆரான், மோசா, கெசேசு என்பவர்களைப் பெற்றாள்.
47 ஆரான் கெசேசைப் பெற்றார். யகத்தாயியின் புதல்வர்கள் பெயர்: ரேகோம், யோவத்தான், கெசான், பாலெத், எப்பா, சாப் என்பன.
48 காலேபுடைய வைப்பாட்டி மாக்கா சாபேரையும், தாரனாவையும் பெற்றாள்.
49 அவளே மத்மேனாவின் தந்தையாகிய சாப்பையும் மக்பேனாவிற்கும் காப்பாவிற்கும் தந்தையான சுவேயையும் பெற்றாள். காலேபின் மகள் பெயர் அக்சா.
50 எப்பிராத்தா என்பவளின் தலைமகன் கூரின் புதல்வரோ: காரியாத்தியாரிமுடைய தந்தை சோபால்,
51 பெத்லெகேமின் தந்தை சல்மா, பெத்கதேரின் தந்தை ஆரிப் ஆகியவர்களாம்.
52 காரியாத்தியாரிமின் தந்தை சோபாலுக்குப் புதல்வர்கள் பிறந்தனர். ஆரோவேயும், மெனுகோத் சந்ததியில் பாதிப்பேருமே அவர்கள்.
53 எத்திரேயரும் அபுத்தேயரும் கெமத்தேயரும் மசெரேயரும் காரியாத்தியாரிமின் வழி வந்தோர்களாவர்; இவர்களிடமிருந்து சாரைத்தரும், எஸ்தாவோலித்தரும் தோன்றினர்.
54 பெத்லெகேம், நேத்தோபாத்தி, அதரோத்-பேத்-யோவாப் நகர மக்களும், மற்றும் மானக்தியரிலும் சோரியரிலும் பாதிப்பேரும் சல்மாவுடைய குலத்திலே உதித்தவர்கள்.
55 யாபேசில் குடியிருந்த மறைவல்லுநரின் குலவழியினர், கூடாரங்களில் தங்கியிருந்தனர். பாடியும் (இசைக் கருவிகள்) மீட்டியும் வந்தனர். இவர்களே ரெக்காபுடைய குலத்தந்தையான காலோர் வழிவந்த கினேயராவர்.
அதிகாரம் 03
1 தாவீது எபிரோனில் இருந்தபோது அவருக்குப் பல மக்கள் பிறந்தனர். அவருடைய மூத்த மகன் பெயர் அம்னோன். இவர் எஸ்ராயேல் ஊராளான அக்கினோவாமிடம் பிறந்தவர். தானியேல் என்பவர் அவருடைய இரண்டாவது மகன். இவர் கார்மேல் ஊராளாகிய அபிகாயிலிடம் பிறந்தவர்.
2 கெசூர் அரசரான தொல்மாயியின் மகன் மாக்காளின் மகன் அப்சலோம் மூன்றாவது மகன். அதோனியாசு நான்காவது மகன்.
3 இவரைப் பெற்றவள் ஆகீது. அபித்தாளிடம் பிறந்த சபாத்தியாசு ஐந்தாவது மகன். ஆறாவது மகன் பெயர் யெத்திராம். அவர் தாவீதின் மனைவி எகிலா மூலம் பிறந்தார்.
4 இந்த ஆறு புதல்வரும் அவர் எபிரோனில் இருந்த போது பிறந்தனர். அவர் அங்கே ஏழு ஆண்டுகளும் ஆறு மாதமும் ஆட்சி புரிந்தார். யெருசலேமிலோ முப்பத்திமூன்று ஆண்டுகள் அரசோச்சினார்.
5 அவர் யெருசலேமில் இருந்தபோது, சிம்மா, சோபாப், நாத்தான், சாலமோன் ஆகிய புதல்வர்கள் அவருக்குப் பிறந்தனர். இந்த நால்வரும் அம்மியேலின் மகள் பெத்சாபே மூலம் பிறந்தவர்கள்.
6 ஏபார், எலிசமா, எலிப்பலேத்,
7 நோகே, நேபேக், யபியா,
8 எலிசமா, எலியதா, எலிப்பேலேத் ஆகிய ஒன்பது பேரும்,
9 அவர்களின் சகோதரி தாமார் என்பவளும் தாவீதின் மக்களாவர். இவர்களைத் தவிர அவருக்கு வைப்பாட்டிகள் மூலம் மக்கள் இருந்தனர்.
10 சாலமோனின் மகன் பெயர் ரொபோவாம். ரொபோவமின் மகன் அபியா ஆசாவைப் பெற்றார். ஆசா யோசபாத்தைப் பெற்றார். யோசபாத்தின் மகன் பெயர் யோராம்;
11 யோராமின் மகன் பெயர் ஒக்கோசியாசு. ஒக்கோசியாசின் மகன் பெயர் யோவாசு.
12 யோவாசின் மகன் பெயர் அமாசியாசு. அமாசியாசு அசாரியாசைப் பெற்றார். அசாரியாசு யோவாத்தானைப் பெற்றார். யோவாத்தானின் மகன் பெயர் ஆக்காசு.
13 இந்த ஆக்காசு எசேக்கியாசைப் பெற்றார். எசேக்கியாசு மனாசேயைப் பெற்றார்.
14 மனாசே ஆமோனைப் பெற்றார். ஆமோன் யோசியாசைப் பெற்றார்.
15 யோசியாசின் மூத்த மகன் பெயர் யோகனான்; இரண்டாவது மகன் பெயர் யோவாக்கீம்; மூன்றாவது மகன் பெயர் செதேசியாசு; நான்காவது மகன் பெயர் செல்லும்.
16 யோவாக்கீமின் புதல்வர் எக்கோனியாசும், செதேசியாசுமாம். எக்கோனியாசின் புதல்வர்கள்:
17 அசீர், சலாத்தியேல்,
18 மெல்கீராம், பதாயியா, சென்னேசேர், எகேமியா, சாமா, நதாபியா ஆகியோராவர்.
19 பதாயியா என்பவருக்கு செரோபாபேல், செமேயி ஆகியோர் பிறந்தனர். செரோபாபேல் மொசொல்லாமையும், அனனியாசையும், அவர்களின் சகோதரி சலோமித்தையும்,
20 அசபான், ஒகோல், பராக்கியான், கசாதியாசு, யோசபெசேத் என்ற வேறு ஐவரையும் பெற்றார்.
21 அனனியாசின் மகனது பெயர் பல்தியாஸ். இவர் எசெயாசுவின் தந்தை. இந்த எசெயாசுவின் மகனது பெயர் ரப்பாயியா; ரப்பாயியாவின் மகனது பெயர் அர்னான்; அர்னானின் மகனது பெயர் ஒப்தியா; ஒப்தியாவின் மகனது பெயர் சேக்கேனியாசு.
22 சேக்கேனியாசின் மகனது பெயர் செமெயியா; செமெயியாவிற்கு அத்தூஸ், எகால், பாரியா, நாரியா, சாப்பாத் என்ற ஆறு புதல்வர்கள் இருந்தனர்.
23 நாரியாவிற்கு எலியோவெனாயி, எசேக்கியாசு, எசுரிகம் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர்.
24 எலியோவெனாயியிக்கு ஒதுயியா, எலியாசூப், பெலெயியா, ஆக்கூப், யொகனான், தலாயியா, அனானி என்ற ஏழு புதல்வர்கள் இருந்தனர்.
அதிகாரம் 04
1 யூதாவிற்கு பாரெஸ், எசுரோன், கார்மி, கூர், சோபால் என்ற புதல்வர்கள் இருந்தனர்.
2 சோபாலின் மகனான ராயியா யாகாத்தைப் பெற்றார். யாகாத் அகுமாயி, லாத் என்பவர்களைப் பெற்றார். சாராத்தியரின் வம்சங்கள் இவையே.
3 எத்தாமின் சந்ததியார், எஸ்ராகேல், எசெமா, எதெபோசு ஆகியோரே; இவர்களுடைய சகோதரியின் பெயர் அசலெல்புனி.
4 பானுவேல் கேதோரின் தந்தை. ஏசேர் ஓசாவின் தந்தை. இவர்கள் அனைவரும் பெத்லெகேமின் தந்தையான எப்பிராத்தாவுக்கு முதல் மகனாகப் பிறந்த கூருடைய புதல்வர்களாம்.
5 தேக்குவாவின் தந்தையாகிய அசூருக்கு ஆலா, நாரா என்ற இரு மனைவியர் இருந்தனர்.
6 நாரா அவருக்கு ஊசாம், ஏப்பேர், தேமனி, அகஸ்தரி என்பவர்களைப் பெற்றாள். இவர்களே நாராவின் புதல்வர்கள்.
7 ஆலாவின் புதல்வர், செரேத், இசார், எத்னான் ஆகியோராவர்.
8 கோஸ் என்பவர் அனோப், சொபொபா ஆகியோரையும், ஆருமின் மகனான அகரெகேலின் வழி வந்தோரையும் பெற்றார்.
9 யாபேசு தம் சகோதரரை விட அதிகப் புகழ் பெற்றவராய் விளங்கினார். அவருடைய தாய், "நான் துக்கத்தோடு அவனைப் பெற்றேன்" என்று சொல்லி அவருக்கு யாபேசு என்று பெயரிட்டிருந்தாள்.
10 யாபேசு இஸ்ராயேலின் கடவுளை நோக்கி, "நீர் என்னை இன்மொழி கூறி ஆசீர்வதித்தருளும்; என் நிலங்களின் எல்லைகளையும் விரிவுபடுத்தியருளும். உமது அருட்கரம் என்னோடு என்றும் இருக்கட்டும்; தீமை என்னை மேற்கொள்ளாதவாறு காத்தருளும்" என்று வேண்டிக்கொண்டார். அவர் கேட்டதைக் கடவுள் அருளினார்.
11 சுவாவின் சகோதரர் சலேப் மகீரைப் பெற்றார்.
12 இவர் எஸ்தோனைப் பெற்றார். எஸ்தோன் பெத்திராபாவையும் பெசேயையும், நாவாஸ் நகரத்துக்குத் தந்தையாகிய தெகின்னாவையும் பெற்றார். இவர்களே ரெக்கா என்ற ஊரில் வாழும் மனிதர்கள்.
13 கெனேசுவின் புதல்வர் ஒத்தோனியேல், சராயியா ஆகியோராவர். ஒத்தோனியேலுக்கு ஆத்தாத், மவொநதி என்ற மக்கள் இருந்தனர்.
14 மவொநதி ஒப்ராவைப் பெற்றார். சராயியா தொழிலாளி பள்ளத்தாக்கு என அழைக்கப்பெறும் இடத்தின் தலைவரான யோவாபைப் பெற்றார். ஏனெனில் அவ்விடத்தில் தொழிலாளர்கள் குடியிருந்தனர்.
15 எப்பொனேயின் மகன் கலேபின் புதல்வர்: ஈர், ஏலா, நகாம் ஆகியோராவர்; ஏலாவின் மகன் பெயர் கெனெசு.
16 யலெலேலுடைய புதல்வர்: சீப், சீப்பா, தீரியா, அஸ்ராயேல் என்பவர்கள்.
17 எஸ்றாவுடைய புதல்வர்: ஏத்தோர், மேரேத், எப்பேர், யலோன் என்பவர்கள். மறுபடியும் அவன் மரியாம், சம்மாயி என்பவர்களையும், எஸ்தமோவின் தந்தையாகிய எஸ்பாவையும் பெற்றார்.
18 மேலும் அவருடைய யூத மனைவி கேதோரின் தந்தையாகிய யரேதையும், செக்கோவின் தந்தையாகிய ஏபேரையும், சனோயேயின் தந்தையாகிய இக்குதியேலையும் பெற்றாள். இவர்களே மெரேத்தின் மனைவியும் பார்வோனின் மகளுமான பெத்தியாவின் புதல்வர்கள்.
19 கெயிலாவின் தந்தையாகிய நகாமின் சகோதரியும் ஒதியாவினுடைய மனைவியுமான ஒரு பெண்கார்மி, மக்காத்தியைச் சேர்ந்த எஸ்தாமோ ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.
20 சீமோனுடைய புதல்வர்: அம்னோன், ரின்னா, பெனானான், திலோன் என்பவர்கள். எசியுடைய புதல்வரோ சோகேது, பென்சோகேது என்பவர்கள்.
21 யூதாவின் மகன் சேலோவுடைய புதல்வர்: லெக்காவின் தந்தையாகிய ஏரும், மரெசாவின் தந்தையாகிய லாதாவும், பெத்தாஷ்பேயாவில் இருந்த சணற் புடவை நெய்யும் வீட்டைச் சேர்ந்த வம்சங்களும், யோவாக்கீமும்,
22 கோசேபா ஊரைச் சேர்ந்த மனிதர்களும், மோவாவை ஆண்டபின் லாகே ஊருக்குத் திரும்பியிருந்த யோவாசும் சாராபும் ஆகிய இவர்களேயாம்.
23 இவ்வரலாறுகள் மிகவும் பழமையானவை. இப்போது அவர்கள் நெதாயிம், கெதெரா என்ற இடங்களில் குயவர்களாய் வாழ்ந்து வருகின்றனர். அரசனின் வேலையைக் கவனித்து வரும் பொருட்டு அவர்கள், அங்கே குடியேறினர்.
24 சிமேயோனுடைய புதல்வர்: நமுவேல், யாமின், யாரிப், சாரா, சவுல் என்பவர்கள்.
25 இவருடைய மகன் பெயர் செல்லும்; இவருடைய மகன் பெயர் மப்சாம்; இவருடைய மகன் பெயர் மஸ்மா.
26 மஸ்மாவுடைய புதல்வரில் ஒருவர் பெயர் அமுயேல். இவர் சக்கூரைப் பெற்றார்; சக்கூர் செமேயியைப் பெற்றார்.
27 செமேயிக்குப் பதினேழு புதல்வரும், ஆறு புதல்வியரும் இருந்தனர். அவருடைய சகோதரர்களுக்கோ பிள்ளைகள் ஒரு சிலரே. அவர்களின் சந்ததி யூதாவின் புதல்வரைப் போலப் பெருகவில்லை.
28 இவர்கள் பெத்சபே, மொலதா, அசர்சுகால்,
29 பாலா, ஆசோம், தொலாத்,
30 பாதுயெல், ஒரமா, சிசெலேக்,
31 பெத்மற்காபொத், அசார்சுசிம், பெத்பெராயி, சாரிம் ஆகிய இடங்களில் குடியிருந்தனர். தாவீது அரசர் காலம் வரை இவையே அவர்களின் நகர்களாய் இருந்தன.
32 எத்தாம், அவேன், ரெம்மோன், தொக்கேன், ஆசான் என்ற ஐந்து ஊர்களும் அவர்களுக்குச் சொந்தமாய் இருந்தன.
33 அவற்றை அடுத்துப் பாகால் வரை இருந்த எல்லாச் சிற்றூர்களும் அவர்களுடையனவே. இவ்விடங்களில் தான் அவர்கள் வாழ்ந்து வாந்தார்கள். அவர்களுக்குரிய தலைமுறை அட்டவணையும் இருந்தது.
34 மேலும் மொசொபாப், எம்லெக் என்பவர்களும்,
35 அமாசியாவின் மகன் யோசா, யோவேல், அசியேலின் மகன் சரையாவின் புதல்வன் யோசபியாக்குப் பிறந்த ஏகு, எலியோவெனாயி,
36 யாக்கோபா, இசுகையா, அசையா, அதியேல், இஸ்மியேல், பனையா ஆகியோரும்,
37 சமையாவின் புதல்வன் செம்ரியுடைய மகன் இதையாவுக்குப் பிறந்த அல்லோனின் மகன் செப்பையுடைய புதல்வன் சிசா ஆகியோரும்,
38 தத்தம் குலங்களில் தலைவர்களாக விளங்கி வந்தனர். இவர்கள் குலவழி வந்தோர் பலுகிப் பெருகினர்.
39 அவர்கள் தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடிக் காதேரின் எல்லையான பள்ளத்தாக்கின் கீழ்புறம் வரை சென்றனர்.
40 மிகச் செழிப்பான மேய்ச்சல் நிலங்களைக் கண்டுபிடித்தனர். முன்னர் அங்கு தான் காமின் சந்ததியார் வாழ்ந்து வந்தனர். வளப்பமும் அமைதியும் உடைய பரந்த நாடு அது.
41 மேலே சொல்லப்பட்டவர்களோ யூதாவின் அரசர் எசேக்கியாசின் காலத்தில் அங்குச் சென்று அங்கே வாழ்ந்து வந்த மெயீனியரைக் கொன்று போட்டனர்; அவர்களுடைய கூடாரங்களை அழித்து இந்நாள் வரை அவர்களுள் எவரும் அங்கிராதவாறு அவர்களை ஒழித்து விட்டனர். தங்கள் ஆடுகளுக்குத் தேவையான மிகச் செழிப்பான மேய்ச்சல் நிலங்கள் அங்கு இருந்தமையால் அவர்கள் அங்கேயே குடியேறினார்கள்.
42 சிமேயோனின் புதல்வராகிய இவர்களில் ஐந்நூறு வீரர் ஏசியின் புதல்வர் பல்தியாஸ், நாரியாஸ், ரப்பையாஸ், ஓசியேல் என்பவர்களைத் தலைவர்களாக கொண்டு, செயீர் மலைக்குச் சென்றனர்.
43 அமலேக்கியரில் மீதியாய் எஞ்சி இருந்தவர்களைக் கொன்று விட்டு, அங்கே குடியேறினார்கள். அவர்கள் இன்று வரை அங்கேயே வாழ்ந்து வருகின்றார்கள்.
அதிகாரம் 05
1 இஸ்ராயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்களாவார்: இவரே இஸ்ராயேலின் தலைமகன். ஆயினும் இவர் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால், தமது பிறப்புரிமையை இழந்தார்; இதனால் தலைமுறை அட்டவணையிலும் அவர் தலைமகனாக எண்ணப்படவில்லை. மாறாக அவ்வுரிமை இஸ்ராயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
2 யூதா தம் சகோதரர்களுக்குள் ஆற்றல் படைத்தவராய் இருந்தார்; அரசர் அவரது குலத்திலேயே உதித்தார். இருந்த போதிலும் பிறப்புரிமை யோசேப்புக்கே கொடுக்கப்பட்டது.
3 ஏனோக், பெல்லு, எசுரோன், கார்மி என்பவர்களே இஸ்ராயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்கள்.
4 யோவேலின் புதல்வரில் ஒருவர் சமையா; இவருடைய மகன் பெயர் கோக்; கோக்கின் மகன் பெயர் செமெயி.
5 இவர் மிக்காவின் தந்தை; மிக்காவின் மகன் பெயர் ரெய்யா; செய்யா பால் என்ற மகனைப் பெற்றார்.
6 பாலின் மகன் பேரா என்று அழைக்கப்பட்டார். ரூபன் கோத்திரத்தின் தலைவராய் இருந்த பேராவை அசீரிய அரசன் தெல்காத்-பல்னசார் சிறைபிடித்துக் கொண்டு போனான்.
7 இவருடைய சகோரரும் இனத்தார் எல்லாரும் தத்தம் குடும்ப வரிசைப்படி கணக்கிடப்பட்டனர். அவர்களுக்கு எகியேல், சக்கரியாஸ் என்பவர்கள் தலைவர்களாய் இருந்தனர்.
8 யோவேலின் மகனான சம்மாவின் புதல்வன் ஆசாசுக்குப் பிறந்த பாலாவின் மக்கள் அரோவேர் முதல் நெபோ, பெல்மேயோன் என்ற நகர்கள் வரை வாழ்ந்து வந்தனர்.
9 மேலும் கிழக்கே யூப்ரட்டீஸ் நதி முதல் பாலைவனத்தின் எல்லை வரையிலும் வாழ்ந்து வந்தனர். ஏனெனில் கலாத் நாட்டிலே அவர்களுக்குக் கால்நடைகள் பல இருந்தன.
10 அவர்கள் சவுலின் ஆட்சிக் காலத்தில் ஆகாரியரோடு போரிட்டு அவர்களைக் கொன்று போட்டு, கலாத் நாட்டின் கிழக்குப் பகுதிகள் எங்கணும் அவர்கள் வாழ்ந்து வந்திருந்த கூடாரங்களில் குடியேறினார்கள்.
11 காத்தின் புதல்வரோ அவர்களுக்கு எதிரே பாசான் நாட்டில் செல்கா வரை வாழ்ந்து வந்தனர்.
12 அவர்களுக்கு யோவேல் தலைவராகவும், சாப்பான் துணைத் தலைவராகவும் பாசானில் விளங்கி வந்தார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் யானாயும் சாப்பாத்தும் இருந்தனர்.
13 அவர்களது குடும்ப வரிசைப்படி அவர்களுடைய சகோதரர் மிக்காயேல், மொசொல்லாம், சேபேயோராய், யாக்கான், சியே, எபேர் என்ற ஏழுபேர்.
14 இவர்கள் அபிகாயிலுடைய புதல்வர்கள். அபிகாயில் ஊரிக்குப் பிறந்தவர்; ஊரி யாராவுக்குப் பிறந்தவர்; யாரா கலாதுக்குப் பிறந்தவர்; இவர் மிக்காயேலுடைய மகன்; மிக்காயேல் எசேசியின் மகன்; இவர் ஏதோவின் மகன்; இவர் பூசுடைய மகன்.
15 மேலும் கூனியின் புதல்வரான அப்தியேலின் புதல்வர்கள் அவர்களுக்குச் சகோதரர்கள்; அப்தியேலின் புதல்வரோ தத்தம் குடும்பத்திற்குத் தலைவராய் இருந்தனர்.
16 அவர்கள் கலாதைச் சேர்ந்த பாசானிலும் பாசானுக்கு அடுத்த ஊர்களிலும், சாரோனைச் சேர்ந்த எல்லாப் புல்வெளிகளிலும் தங்கள் எல்லைகள் வரை வாழ்ந்து வந்தனர்.
17 யூதாவின் அரசர் யோவாத்தானின் ஆட்சிக்காலத்திலும், இஸ்ராயேல் அரசர் எரோபோவாமின் ஆட்சிக் காலத்திலும் இவர்கள் எல்லாரும் கணக்கிடப்பட்டனர்.
18 ரூபன் புதல்வரிலும் காத் சந்ததியாரிலும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிலும் வீரர்களின் தொகை நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று இருபது. இவர்கள் கேடயமும் வாளும் அணிந்து வில் ஏந்திப் போரிடப் பழகிப் படைக்குப் போகத் தக்கவர்களாய் இருந்தனர்.
19 அவர்கள் ஆகாரியரோடு போரிட்டனர். ஆனால் இத்துரேயரும் நாபீஸ், நொதாப் என்பவர்களும்,
20 ஆகாரியருக்குத் துணையாக வந்தனர். ஆயினும் ஆகாரியரும் அவர்களோடு இருந்த யாவரும் முன்சொல்லப்பட்ட இஸ்ராயேலர் கையில் ஒப்படைக்கப்பட்டனர். ஏனெனில் இஸ்ராயேலர் போர் செய்யும்போது கடவுளை மன்றாடினார்கள். அவரிடத்தில் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்ததால் கடவுள் அவர்களின் மன்றாட்டைக் கேட்டருளினார்.
21 அவர்கள் தங்கள் பகைவருக்குச் சொந்தமான ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், ஒரு லட்சத்து மனிதர்களையும் கைப்பற்றினர்.
22 பலர் காயம்பட்டு விழுந்து மடிந்தனர். ஏனெனில் ஆண்டவரே போரை நடத்திக் கொண்டிருந்தார். இஸ்ராயேலர் நாடு கடத்தப்படும் வரை அவர்கள் அங்கேயே வாழ்ந்து வந்தனர்.
23 மனாசேயின் பாதிக் கோத்திரத்து மக்களும் மிகப்பலராய் இருந்தமையால், பாசான் எல்லை முதல் பாகால் எர்மோன் வரை உள்ள நாட்டையும் சனிரையும் எர்மோன் மலையையும் தமது உரிமையாக்கிக் கொண்டனர்.
24 அவர்களுடைய குடும்பத்தலைவர்கள்: எப்பேர், ஏசி, ஏலியேல், எஸ்ரியேல், எரேமியா, ஒதொய்யா, எதியேல், ஆகியோரே. இவர்கள் ஆற்றல் மிக்கவராகவும் ஆண்மையுடையவராகவும் விளங்கினார்கள்.
25 ஆயினும் அவர்கள் தங்கள் முன்னோர் வழிபட்டு வந்த கடவுளை விட்டு அகன்று, அவர் தங்கள் முன்னிலையிலேயே அழித்துப்போட்டிருந்த புறவினத்தாரின் தெய்வங்களை வழிபட்டு முறைகெட்டுப் போயினர்.
26 எனவே இஸ்ராயேலின் கடவுள் அசீரியருடைய அரசன் பூலையும், தெல்காத்பல்னசாரையும் தூண்டி விட்டார். அவர்களோ ரூபனையும் காத்தையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தையும் நாடு கடத்தி, லகேலாவுக்கும் அபோருக்கும் ஆராவுக்கும் கோசான் நதிக்கும் கொண்டு போனார்கள். அங்கே அவர்கள் இன்றுவரை வாழ்ந்து வருகின்றார்கள்.
அதிகாரம் 06
1 லேவியின் புதல்வர்கள் கெர்சோன், காத், மெராரி ஆகியோர்.
2 காத்தின் புதல்வர் பெயர்கள் அம்ராம், இசா, எபுரோன், ஒசியேல் ஆகும்.
3 அம்ராமின் புதல்வர்கள் ஆரோன், மோயீசன், மரியாம் என்பவர்கள். ஆரோனின் புதல்வர்கள் நாதாப், ஆபியு, எலியெசார், ஈத்தமார் என்பவர்கள்.
4 எலியெசார் பினேசைப் பெற்றார்; பினேசு அபிசுவேயைப் பெற்றார்.
5 அபிசுவே பொக்சியைப் பெற்றார். பொக்சி ஓசியைப் பெற்றார்.
6 ஓசி சரையாசைப் பெற்றார்; சரையாசு மெரையோத்தைப் பெற்றார்.
7 மெரையோத் அமாரியாசைப் பெற்றார்; அமாரியாசு அக்கித்தோபைப் பெற்றார்.
8 அக்கித்தோப் சாதோக்கைப் பெற்றார்; சாதோக் அக்கிமாசைப் பெற்றார்.
9 அக்கிமாசு அசாரியாசைப் பெற்றார். அசாரியாசு யோகனானைப் பெற்றார்.
10 யோகனான் அசாரியாசைப் பெற்றார்; சாலமோன் யெருசலேமில் கட்டியிருந்த ஆலயத்தில் குருத்துவப்பணி புரிந்தவர் இவரே.
11 அசாரியாசு அமாரியாசைப் பெற்றார்; அமாரியாசு அக்கித்தோபைப் பெற்றார்.
12 அக்கித்தோப் சாதோக்கைப் பெற்றார்; சாதோக் செல்லுமைப் பெற்றார்.
13 செல்லும் எல்கியாசைப் பெற்றார்; எல்கியாசு அசாரியாசைப் பெற்றார்.
14 அசாரியாசு சரையாசைப் பெற்றார்; சரையாசு யொசெதேக்கைப் பெற்றார்.
15 ஆண்டவர் நபுக்கொதனசாரின் மூலம் யூதா மக்களையும் யெருசலேம் நகரத்தாரையும் நாடு கடத்திக் கொண்டு போன போது யொசெதேக்கும் சிறைப்படுத்தப்பட்டார்.
16 லேவியின் புதல்வர் கெர்சோன், காத், மெராரி என்பவர்களே.
17 கெர்சோனின் புதல்வர்களின் பெயர்கள் லொப்னி, செமேயி என்பவை.
18 காத்தின் புதல்வர்கள் அம்ராம், இசார், எபுரோன், ஒசியேல் என்பவர்கள்.
19 மெராரியின் புதல்வர்கள் மொகோலியும் மூசியுமாம். அவரவர் குடும்பத்தின்படி லேவியரின் தலைமுறை அட்டவணையாவது:
20 கெர்சோன், இவருடைய மகன் லொப்னி; லொப்னியின் மகன் யாகாத்; இவருடைய மகன் பெயர் சம்மா;
21 சம்மாவின் மகன் பெயர் யோவா; இவருடைய மகன் பெயர் அத்தோ; அத்தோவின் மகன் பெயர் ஜாரா; இவருடைய மகன் பெயர் எத்ராய்.
22 காத்தின் புதல்வர்களாவர்: காத்தின் மகன் அமினதாப்; இவருடைய மகன் பெயர் கோரே; இவருடைய மகன் பெயர் அசீர்;
23 அசீரின் மகன் பெயர் எல்கானா; எல்கானாவின் மகன் பெயர் அபிசாப்; அபிசாப்பின் மகன் பெயர் அசீர்.
24 இவருடைய மகன் பெயர் ஒசியாசு; ஒசியாசின் மகன் பெயர் சவுல்.
25 எல்கானாவின் புதல்வர் பெயர் வருமாறு: அமசாயி, அக்கிமோத், எல்கானா.
26 எல்கானாவின் புதல்வர்களாவர்: எல்கானாவின் மகன் பெயர் சொபாயி; இவருடைய மகன் பெயர் நாகாத்.
27 நாகாத்தின் மகன் பெயர் எலியாப்; இவருடைய மகன் பெயர் எரோகாம்; இவருடைய மகன் பெயர் எல்கானா.
28 சாமுவேலின் புதல்வர்களுள் மூத்தவர் பெயர் வசேனி; மற்றவர் பெயர் அபியா.
29 மெராரியின் புதல்வர்கள்: மொகோலி; இவருக்குப் பிறந்த மகன் பெயர் லொப்னி; இவருடைய மகன் பெயர் செமேயி; இவருடைய மகன் பெயர் ஓசா;
30 இவருடைய மகன் பெயர் சம்மா; இவருடைய மகன் பெயர் அக்சியா; இவருடைய மகன் பெயர் அசாயா.
31 திருப்பேழை ஆண்டவரின் ஆலயத்தில் நிறுவப்பட்ட போது ஆலயப்பாடல்களுக்குப் பொறுப்பாளராய் இவர்களையே தாவீது ஏற்படுத்தினார்.
32 சாலமோன் யெருசலேமில் ஆண்டவரின் ஆலயத்தைக் கட்டி முடிக்கும் வரை இவர்கள் சாட்சியக் கூடார வாயிலில் பாடிப் பணிபுரிந்து வந்தனர். அப்பணியைத் தத்தம் பிரிவுப்படி செய்து வந்தனர்.
33 தங்கள் மக்களோடு வேலை செய்தவர்கள்: காத்தின் மக்களில் எமான் என்ற இசைஞர் இருந்தார். இவர் யொவேலின் மகன்; இவர் சாமுவேலின் மகன்;
34 இவர் எல்கானாவின் மகன்; இவர் எரொகாமின் மகன்; இவர் எலியேலின் மகன்; இவர் தோகுவின் மகன்;
35 இவர் சூப்பின் மகன்; இவர் எல்கானாவின் மகன்; இவர் மகாத்தியின் மகன்; இவர் அமாசாவின் மகன்;
36 இவர் எல்கானாவின் மகன்; இவர் யொவேலின் மகன்; இவர் அசாரியாசின் மகன்; இவர் சொப்போனியாசின் மகன்;
37 இவர் தாகாத்தின் மகன்; இவர் அசீரின் மகன்; இவர் அபியசாப்பின் மகன்; இவர் கோரேயின் மகன்;
38 இவர் இசாரின் மகன்; இவர் காத்தின் மகன்; இவர் லேவியின் மகன்; இவர் இஸ்ராயேலின் மகன்;
39 அவருடைய சகோதரரான ஆசாப், அவரது வலப்பக்கத்தில் நிற்பார். ஆசாப் பாரக்கியாசின் மகன்; இவர் சம்மாவின் மகன்;
40 இவர் மிக்காயேலின் மகன்; இவர் பசையாசின் மகன்; இவர் மெல்கியாசின் மகன்;
41 இவர் அத்தனாயின் மகன்; இவர் சாராவின் மகன்; இவர் அதாயியாவின் மகன்;
42 இவர் எத்தானின் மகன்; இவர் சம்மாவின் மகன்; இவர் செமேயியின் மகன்;
43 இவர் ஏத்தின் மகன்; இவர் கெர்சோனின் மகன்; இவர் லேவியின் மகன்.
44 மெராரியின் புதல்வர்களான இவர்களுடைய சகோதரர்கள் இடப்பக்கத்தில் நிற்பார்கள். மெராரியின் புதல்வர்கள் வருமாறு: எத்தான், இவர் கூசியின் மகன்; இவர் ஆப்தியின் மகன்;
45 இவர் மலேக்கின் மகன்; இவர் அசபியாசின் மகன்; இவர் அமாசியாசின் மகன்;
46 இவர் எல்கியாசின் மகன்; இவர் அமாசாயின் மகன்; இவர் போனியின் மகன்; இவர் சொமேரின் மகன்;
47 இவர் மொகோலியின் மகன்; இவர் மூசியின் மகன்; இவர் மெராரியின் மகன்; இவர் லேவியின் மகன்;
48 அவர்களின் சகோதரரான லேவியர் ஆண்டவரின் ஆலயத்தில் இருந்த கூடாரத்தின் பணிகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
49 ஆண்டவரின் அடியாரான மோயீசன் கற்பித்திருந்த எல்லா வழிமுறைகளின்படியும், ஆரோனும் அவருடைய புதல்வர்களும் தகனப் பலி பீடத்தின் மேல் பலியிட்டு, தூபப்பீடத்தின் மேல் தூபம் காட்டி, உள் தூயகத்திலே எல்லாப் பணி விடைகளையும் செய்து, இஸ்ராயேல் மக்களுக்காக மன்றாடி வந்தார்கள்.
50 ஆரோன் குலத்தில் தோன்றியவர்கள்: அவருடைய மகன் எலியெசார்; இவருடைய மகன் பினேசு; இவருடைய மகன் அபிசுவே;
51 இவருடைய மகன் பொக்கி; இவருடைய மகன் ஓசி; இவருடைய மகன் சராகியா;
52 இவருடைய மகன் மெராயியொத்; இவருடைய மகன் அமாரியாசு; இவருடைய மகன் அக்கித்தோப்;
53 இவருடைய மகன் சாதோக்; இவருடைய மகன் அக்கிமாசு.
54 அவர்கள் பாளையமிறங்கின இடங்களின் படியே அவரவர் எல்லைகளுக்குள் வாழ்ந்து வந்தனர்.
55 சீட்டு விழுந்தபடி யூதா நாட்டு எபிரோனும் அதைச் சுற்றியிருந்த பேட்டைகளும் காத்திய வம்சத்தைச் சேர்ந்த ஆரோனின் மக்களுக்குக் கொடுக்கப்பட்டன.
56 ஆனால் அந்நகரத்து வயல்களும் அதைச் சேர்ந்த சிற்றூர்களும் எப்போனேயின் மகன் காலேபுக்கே கொடுக்கப்பட்டன.
57 ஆரோனின் புதல்வருக்கோ அடைக்கல நகர்களாகிய எபிரோனும், லொப்னாவும், அதன் பேட்டைகளும்,
58 ஏத்தேரும் எஸ்தேமோவும், இவற்றின் பேட்டைகளும், எலோனும் தபீரும், அவற்றையடுத்த பேட்டைகளும்,
59 அசானும், பெத்ரெமேசும், அவற்றின் பேட்டைகளும் கொடுக்கப்பட்டன.
60 இவை தவிர, பென்யமீன் குலத்திற்குச் சொந்தமான காபேயையும் அதன் பேட்டைகளையும், அல்மாத்தாவையும் அதன் பேட்டைகளையும், அனத்தோத்தையும் அதன் பேட்டைகளையும் அவர்கள் பெற்றனர். ஆக பதின்மூன்று நகர்கள் அவர்களது குடும்ப வரிசைப்படி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
61 மற்றக் காத்தியருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தைச் சேர்ந்த பத்து நகர்களைச் சொந்தமாய்க் கொடுத்தனர்.
62 கெர்சோனின் புதல்வருக்கோ, அவர்களுடைய குடும்பங்களின் கணக்கிற்கேற்ப இசாக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திருத்திலும் நெப்தலி கோத்திரத்திலும் பாசானிலே மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று நகர்கள் கொடுக்கப்பட்டன.
63 மெராரி புதல்வருக்கோ, அவாகளுடைய குடும்பங்களின் கணக்குக்கேற்ப ரூபன் கோத்திரத்தினின்றும் காத் கோத்திரத்தினின்றும் சபுலோன் கோத்திரத்தினின்றும் பன்னிரு நகர்களைச் சீட்டுப்போட்டுக் கொடுத்தனர்.
64 இவ்வாறு இஸ்ராயேலர் மேற்சொல்லிய நகர்களையும், அவற்றின் பேட்டைகளையும் லேவியருக்குக் கொடுத்தனர்.
65 அவர்கள் சீட்டுப்போட்டு யூதா கோத்திரத்திலும் சிமையோன் கோத்திரத்திலும் பென்யமீன் கோத்திரத்திலுமிருந்து முன் கூறப்பட்ட நகர்களைக் கொடுத்தனர்; அவற்றிற்குத் தத்தம் பெயரையே இட்டான்.
66 காத்தின் சந்ததியாருள் சிலர் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த நகர்களில் வாழ்ந்து வந்தனர்.
67 ஆகையால் அடைக்கல நகர்களாகிய எப்பிராயீம் மலைநாட்டுச் சிக்கேமையும் அதன் பேட்டைகளையும், காசேரையும் அதன் பேட்டைகளையும்,
68 எக்மானையும் அதன் பேட்டைகளையும், பெத்தொரோனையும்,
69 எலோனையும் அதன் பேட்டைகளையும், கெத்ரேமோனையும் அவர்களுக்குக் கொடுத்தனர்.
70 காத்தின் வம்சத்திலே இன்னும் எஞ்சியிருந்த குடும்பங்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தைச் சார்ந்த ஆனேரும் அதன் பேட்டைகளும், பாலாமும் அதன் பேட்டைகளும் கொடுக்கப்பட்டன.
71 கெர்சோமின் மக்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தைச் சார்ந்த கவுலோனையும் அதன் பேட்டைகளையும், அஸ்தரோத்தையும் அதன் பேட்டைகளையும்,
72 இசாக்கார் கோத்திரத்திற்குச் சொந்தமாய் இருந்த கேதேசையும் அதன் பேட்டைகளையும், தபரேத்தையும் அதன் பேட்டைகளையும்,
73 இராமோத்தையும் அதன் பேட்டைகளையும், ஆநேமையும் அதன் பேட்டைகளையும்,
74 ஆசேர் கோத்திரத்திலேயுள்ள மாசாலையும் அதன் பேட்டைகளையும்,
75 ஆப்தோனையும், குக்காக்கையும் ரோகோபையும் இவற்றையடுத்த பேட்டைகளையும்,
76 நெப்தலி கோத்திரத்திற்குச் சொந்தனான, கலிலேய நாட்டைச் சேர்ந்த கேதேசையும் அதன் பேட்டைகளையும், ஆமோனையும் கரியாத்தியாரீமையும் இவற்றையடுத்த பேட்டைகளையும் கொடுத்தார்கள்.
77 எஞ்சியிருந்த மெராரியின் மக்களுக்கு சாபுலோன் கோத்திரத்திற்குச் சொந்தமான ரெம்மோன்னோவும் அதன் பேட்டைகளும், தாபோரும் அதன் பேட்டைகளும்,
78 எரிக்கோவிற்கு அருகே யோர்தானுக்கு அக்கரையில் கிழக்கேயிருந்த ரூபனின் கோத்திரத்துப் பாலைவனத்திலுள்ள போசோரும் அதன் பேட்டைகளும்,
79 யாஸ்ஸாவும் அதன் பேட்டைகளும், காதேமோத்தும் அதன் பேட்டைகளும், மேப்பாத்தும் அதன் பேட்டைகளும்,
80 காத்தின் கோத்திரத்திலிருந்த கலாது நாட்டு இராமோத்தும் அதன் பேட்டைகளும், மனாயீமும் அதன் பேட்டைகளும்,
81 எசெபோனும் ஏசேரும் அவற்றின் பேட்டைகளும் கிடைத்தன.
அதிகாரம் 07
1 இசாக்காருக்கு தோலா, பூவா, யாசுப், சிமெரோன் என்ற நான்கு புதல்வர்கள் இருந்தனர்.
2 ஓசி, ரப்பாயியா, எரியேல், ஏமாயி, எப்சேம், சாமுவேல் என்ற தோலாவின் புதல்வர்கள் தங்கள் குடும்பங்களின் தலைவர்களாய் விளங்கினார்கள். தாவீதின் காலத்திலே தோலாவின் குலத்தில் இருபத்திரண்டாயிரத்து அறுநூறு ஆற்றல் மிக்க வீரர் இருந்தனர்.
3 ஓசியின் மகன் பெயர் இசுராயியா. இவருக்கு மிக்காயேல், ஒபாதியா, யொவேல், ஏசியா என்ற ஐவர் பிறந்தனர். இவர்கள் எல்லாரும் மக்கள் தலைவர்களாய் இருந்தார்கள்.
4 இவர்களோடு இவர்களின் குடும்பங்களிலும் மக்களிலும் போர் செய்யப் பயிற்சி பெற்றிருந்த வலிமை மிக்க வீரர் முப்பத்து ஆறாயிரம் பேர் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்குப் பல மனைவியரும் மக்களும் இருந்தனர்.
5 தவிர, இசாக்காரின் குடும்பம் முழுவதிலும் அவர்களுடைய சகோதரரில் போர் செய்யத் தக்க ஆற்றல் மிக்கவர் எண்பத்தேழாயிரம் பேர் இருந்தனர்.
6 பென்யமீன் புதல்வர் பேலா, பேக்கோர், யாதியேல் என்ற மூவர்.
7 பேலாவின் புதல்வரான எஸ்போன், ஓசி, ஓசியேல், எரிமோத், உராயி ஆகிய ஐவரும் குடும்பத்தலைவர்களும், போர் செய்யத்தக்க ஆற்றல் மிக்கவருமாவர். அவர்கள் மொத்தம் இருபத்திரண்டாயிரத்து முப்பத்து நான்குபேர்.
8 பேக்கோரின் புதல்வர் சமீரா, யோவாசு, எலியெசார், எலியோனாயி, அம்ரி, எரிமோத், அபியா, அனத்தோத், அல்மாத் எனப்படுவர். இவர்கள் எல்லாரும் பேக்கோரின் புதல்வர்.
9 குடும்பத்தலைவர்களும், ஆற்றல் வாய்ந்த போர் வீரர்களுமாய் இருந்த இவர்களின் தொகை இருபதினாயிரத்து இருநூறு.
10 யாதியேலின் மகன் பெயர் பாலான். பாலானின் புதல்வரோ ஏகூஸ், பென்யமீன், ஆயோத், கனானா, சேதான், தார்சீஸ், அகிசகார் எனப்படுவர்.
11 யாதியேலின் மக்களான இவர்கள் எல்லாரும் தத்தம் குடும்பங்களின் தலைவர்களும் ஆற்றல் மிக்கவருமாவர். இவர்களுள் போருக்குச் செல்ல வல்லவர்கள் பதினேழாயிரத்து இருநூறு பேர்.
12 செப்பாமும் அப்பாமும் ஈருவின் புதல்வர். ஆகேரின் மகன் பெயர் ஆசிம்.
13 நெப்தலியின் புதல்வர்கள் யாசியேல், கூனி, ஏசெர், செல்லும் ஆகியோர். இவர்கள் பாலாவின் வயிற்றில் பிறந்தவர்கள்.
14 மனாசேயின் மக்கள்: எஸ்ரியேல்; இவரை மனாசேயினுடைய வைப்பாட்டியான அரமேயப் பெண் பெற்றெடுத்தாள், கலாதின் தந்தை மக்கீரையும் அவள் பெற்றாள்.
15 மக்கீரோ தம் புதல்வர் ஆப்பீமுக்கும் சாப்பானுக்கும் பெண் கொண்டார். அவருக்கு மாக்கா என்ற சகோதரி இருந்தாள். மனாசேயின் இரண்டாவது புதல்வன் பெயர் சல்பாத். சல்பாத்துக்கும் புதல்வியர் பிறந்தனர்.
16 மக்கீரின் மனைவி மாக்கா ஒரு மகனைப் பெற்று அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிட்டாள். இவருடைய சகோதரரின் பெயர் சாரேஸ்; இவருடைய புதல்வர் ஊலாம், ரேக்கேன் ஆகியோர்.
17 ஊலாமுடைய மகன் பாதான். இவர்கள் மனாசேயின் மகனான மக்கீருக்குப் பிறந்த கலாதின் மக்கள்.
18 அவருடைய சகோதரியான அம்மேலெகேத் ஈஷ்கோதையும் அபியேசேரையும் மொகோலாவையும் பெற்றாள்.
19 செமிதாவின் புதல்வர் ஆகீன், சேக்கேம், லேகி, அனியாம் என்பவராம்.
20 எப்பிராயீமின் மகன் பெயர் சுத்தலா; இவருடைய மகன் பெயர் பாரேத்; இவருடைய மகன் பெயர் தகாத்; இவருடைய மகன் பெயர் எலதா; இவருடைய மகன் பெயர் தகாத்; இவருடைய மகன் பெயர் சாபாத்;
21 இவருடைய மகன் பெயர் சுத்தலா; இவருடைய புதல்வர் ஏசேர், எலாத் என்பவர்கள். ஆனால் இவர்களது உடைமையைக் கைப்பற்ற வேண்டி, கேத் நாட்டைச் சேர்ந்த மனிதர் வந்து அவர்களைக் கொலை செய்தனர்.
22 எனவே இவர்களின் தந்தை எப்பிராயீம் இவர்களைக் குறித்துப் பலநாள் துக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அவருடைய சகோதரர் அவரைத் தேற்ற வந்தனர்.
23 பிறகு அவர் தம் மனைவியுடன் மணவுறவு கொண்டார். அவளும் கருவுற்று ஒரு மகனைப் பெற்றாள். தம் வீட்டுக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் அப்பிள்ளை பிறந்தமையால், அவனுக்குப் பேரியா என்ற பெயர் வைத்தார்.
24 அவருடைய மகள் பெயர் சாரா; இவள் கீழ் பெத்தரோனையும் மேல்பெத்தரோனையும் ஒசெஞ்சாராவையும் கட்டி எழுப்பினாள்.
25 மேலும் அவருக்கு ராபா, ரெசேப், தாலே என்ற மக்களும் பிறந்தனர். தாலே தாவானைப் பெற்றார்; இவர் லாதனைப் பெற்றார்;
26 இவர் அமியுதைப் பெற்றார்; இவர் எலிசாமைப் பெற்றார்;
27 இவரிடமிருந்து நூன் பிறந்தார்; நூனின் மகன் பெயர் யோசுவா.
28 பேத்தேலும் அதன் சிற்றூர்களும், கிழக்கே நோரானும், மேற்கே காசேரும் அதன் சிற்றூர்களும், சிக்கேமும் அதன் சிற்றூர்களும், ஆசாவும் அதன் சிற்றூர்களுமே அவர்களுடைய உடைமைகளும் குடியிருப்புமாய் இருந்தன.
29 மேலும், மனாசேயின் புதல்வரை அடுத்து இருந்த பெத்சானும் அதன் சிற்றூர்களும், தானாக்கும் அதன் சிற்றூர்களும், மகெதோவும் அதன் சிற்றூர்களும், தோரும் அதன் சிற்றூர்களும் அவர்களுக்குச் சொந்தமாய் இருந்தன. அந்த இடங்களில் இஸ்ராயேலின் புதல்வன் யோசேப்பின் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
30 ஆசேரின் மக்கள்: எம்னா, ஏசுவா, எசுவி, பாரியா என்பவர்களும், அவர்களின் சகோதரி சாராள் என்பவளுமாம்.
31 பாரியாவின் புதல்வரோ: ஏபேர், மெல்கியேல் ஆகியோர். மெல்கியேல் பர்சாயித் என்பவரின் தந்தை.
32 எபேரோ எப்லாத், சோமேர், ஒத்தாம் என்பவர்களையும், இவர்களின் சகோதரி சுவாளையும் பெற்றார்.
33 எப்லாத்தின் புதல்வர் பெயர் பொசேக், காமால், ஆசோத் ஆகும்.
34 சோமேரின் புதல்வரோ ஆகி, ரொவாகா, ஆபா, ஆராம் என்பவர்கள்.
35 அவருடைய சகோதரரான ஏலேமின் புதல்வர்: சூப்பா, எம்னா, செல்லேஸ், ஆமால் ஆகியோர்.
36 சூப்பாவின் புதல்வர் பெயர் சுவே, அர்னப்பெர், சுவால், பேரி, யம்ரா,
37 போசோர், ஏத், சம்மா, சலூசா, ஏத்ரான், பேரா என்பனவாம்.
38 ஒத்தேருடைய புதல்வர் எப்போனே, வசுவா, ஆரா ஆகியோர்.
39 ஆரேயெ, ஆனியேல், ரேசியா ஆகியோர் ஒல்லாவுடைய புதல்வர்கள்.
40 ஆசேரின் குலத்திலே தோன்றிய இவர்கள் அனைவரும் தத்தம் குடும்பங்களுக்குத் தலைவராய் இருந்தனர். மேலும் படைத்தலைவர்களுக்கெல்லாம் தலைவர்களாகவும் விளங்கி வந்தார்கள். அவர்களிலே போர் செய்யத்தக்க வயதுடையவர்களின் எண்ணிக்கை இருபத்து ஆறாயிரம்.
அதிகாரம் 08
1 பென்யமீனின் தலைமகன் பெயர் பாலே. பின் ஆஸ்பேலையும், மூன்றாவதாக ஆகாராவையும், நான்காவதாக நொகாவையும்,
2 ஐந்தாவதாக ரப்பாவையும் பெற்றார்.
3 பாலேய்க்குப் பிறந்த புதல்வர்:
4 ஆதார், கேரா, ஆபியுத், அபிசுயே, நாமான், அகோவே,
5 கேரா, செப்புபான், உராம் ஆகியோர்.
6 நாமான், ஆக்கியா, கேரா ஆகியோர் ஆகோதின். புதல்வர்கள்.
7 குடும்பதலைவர்களாய் விளங்கி வந்த இவர்கள் காபாவிலிருந்து மனகாத்துக்கு நாடு கடத்தப் பட்டனர். இவர்களுள் எகிளாம் என்று அழைக்கப்பட்ட கேரா ஓசாவையும் அகியுதையும் பெற்றார்.
8 சகாராயீம் தம் மனைவியர் ஊசிம், பாரா என்பவர்களை அனுப்பிவிட்ட பிறகு, மோவாப் நாட்டில் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தன.
9 அதாவது, தம் மனைவி ஏதேசிடம் பொபாப்,
10 செயியா, மோசா, மொல்கோம், ஏகூஸ் செக்கியா, ஏகூஸ், செக்கியா, மார்மா என்பவர்களைப் பெற்றார். சகாராயீமின் புதல்வரான இவர்கள் குடும்பத் தலைவர்களாய் இருந்து வந்தார்கள்.
11 மெகூசிம் அபிதோப்பையும் எல்பாலையும் பெற்றார்.
12 எல்பாலின் புதல்வரோ: ஏபேர், மிசாம், ஓனோவையும் லோதையும் அவற்றின் சிற்றூர்களையும் தோற்றுவித்த சாமாத்,
13 காத்தின் குடிகளை முறியடித்து, ஆயியாலோனில் குடியிருந்த மக்களுக்குத் தலைவர்களாய் இருந்து வந்த பாரியா, சாமா, ஆகியோராவர்.
14 அகியோ, சேசாக், எரிமோத்,
15 சபதியா, ஆரோத்,
16 ஏதேர், மிக்காயேல், எஸ்பா, யொவா என்பவர்கள் பாரியாவின் புதல்வர்கள்.
17 சபாதியா, மொசொல்லாம், எசேசி,
18 ஏபேர், ஏசாமரி, எசுலியா, யோபாப் ஆகியோர் எல்பாலுக்குப் பிறந்த ஆண் மக்களாவர்.
19 யாசிம், செக்கிரி, சப்தி, எலியோவெனாய்,
20 செலேதாய், எலியேல், அதாபியா,
21 பறாயியா, சமராத் ஆகியோர் செமேயின் ஆண் மக்களாவர்.
22 எஸ்ப்பாம், ஏபேர், எலியேல்,
23 அப்தோன், செக்கிரி, ஆனான்,
24 ஆனானியா, ஏலாம், அனத்தோத்தியா,
25 எப்தையா, பானுவேல் என்போர் சேசாக்கின் புதல்வர்களாவர்.
26 சம்சரி, சொகோரியா, ஒத்தோலியா,
27 எர்சியா, எலியா, செக்கிரி ஆகியோர் எரொகாமின் புதல்வர்கள்.
28 இவர்கள் யெருசலேமில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் தத்தம் வம்ச முறைப்படி குலத்தலைவர்களாய் விளங்கி வந்தார்கள்.
29 காபாவோனில் அபிகபாவோன் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் மாக்கா.
30 அவருடைய மூத்த மகன் பெயர் அப்தோன்; இவருக்குப் பின் சூர்,
31 சீஸ், பால், நதாப், கேதோர், அகியோ, சாக்கேர், மசெலோத் ஆகியோர் பிறந்தனர்.
32 மசெலோத் சமாவைப் பெற்றார். இவர்கள் தங்கள் உறவினருடன் யெருசலேமில் அவர்களுக்கு அருகிலேயே வாழ்ந்து வந்தனர்.
33 நேர் என்பவர் சீசைப் பெற்றார்; சீஸ் சவுலைப் பெற்றார். சவுல் யோனதான், மெல்கிசுவா, அபினதாப், எஸ்பால் என்பவர்களைப் பெற்றார்.
34 யோனதானின் மகன் பெயர் மெரிபாவால்; மெரிபாவால் மிக்காவைப் பெற்றார்.
35 மிக்காவின் புதல்வர் பெயர்: பித்தோன், மெலேக், தரா, ஆகாசு என்பனவாம்.
36 ஆகாசு யோவதாவைப் பெற்றார்; யோவதா அலமாதையும் அசுமோத்தையும் சம்ரியையும் பெற்றார். சம்ரி மோசாவைப் பெற்றார்.
37 மோசா பானாவைப் பெற்றார்; இவருடைய மகன் பெயர் ராப்பா. இவருக்கு எலசா பிறந்தார். இவர் அசேலைப் பெற்றார்.
38 அசேலுக்கு ஆறு ஆண் மக்கள் இருந்தனர். இவர்களுக்கு எசுரிகாம், போக்ரூ, இஸ்மாயேல், சாரியா, ஒப்தியா, ஆனான் என்று பெயர்.
39 அசேலுடைய சகோதரர் எசேக்கின் மூத்த மகன் பெயர் உலாம்; இரண்டாவது மகன் பெயர் ஏகூஸ், மூன்றாவது மகன் பெயர் எலிப்பலெத்.
40 உலாமின் புதல்வர் ஆற்றல் மிக்கவரும் திறமை மிக்க வில் வீரராயும் விளங்கினர். அவர்களுக்குப் பல புதல்வரும், பேரப்புதல்வரும் இருந்தனர். சிலருக்கு நூற்றைம்பது புதல்வரும், பேரப்புதல்வரும் இருந்தனர். இவர்கள் எல்லாரும் பென்யமீன் வழிவந்தோர்.
அதிகாரம் 09
1 இவ்வாறு இஸ்ராயேலர் எல்லாரும் கணக்கிடப் பட்டனர். இத்தொகை இஸ்ராயேல், யூதா அரசர்களின் வரலாறுகளில் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் (தங்கள் கடவுளுக்குப்) பிரமாணிக்கமாய் இருக்கவில்லை. எனவே சிறைப்படுத்தப்பட்டுப் பபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
2 அங்கிருந்து திரும்பி வந்து தங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் நகர்களிலும் முதன் முதல் வந்து வாழத் தொடங்கியவர்கள்: இஸ்ராயேலரும் குருக்களும், லேவியரும் ஆலய ஊழியருமேயாவர்.
3 யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே ஆகிய குலங்களின் மக்களில் சிலர் யெருசலேமில் குடியிருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு:
4 யூதாவின் மகன் பாரேசின் சந்ததியில் பிறந்த ஒத்தே- இவர் அமீயூதின் மகன்; இவர் அம்ரியின் மகன்; இவர் ஒம்ராயிமின் மகன்; இவர் பொன்னியின் மகன்.
5 சிலோவியரில் மூத்தவர் அசாயியாவும், அவர் மக்களும்;
6 சாராவின் புதல்வர்களில் எகுயேலும், அவருடைய சகோதரர்களான அறுநூற்றுத் தொண்ணுறு பேருமாம்.
7 பென்யமீன் புதல்வரிலோ, அசனாவுக்குப் பிறந்த ஓதுயியாவின் மகன் மொசொல்லாமுக்குப் பிறந்த சலோவும், யெரோகாமின் மகன் யொபானியாவும், மொக்கோரியின் மகன் யொபானியாவும்,
8 மொக்கோரியுன் மகன் ஓசிக்குப் பிறந்த ஏலாவும், எபானியாசின் மகன் ரகுயேலின் புதல்வன் சப்பாத்தியாசுக்குப் பிறந்த மொசொல்லாமும்,
9 தத்தம் குடும்ப வரிசைப்படி அவர்களுடைய உறவினராயிருந்த தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு பேருமாம். இவர்கள் அனைவரும் தங்கள் வம்ச வரிசைப்படி குடும்பத் தலைவராய் இருந்தனர்.
10 குருக்களில் யெதாயிரா, யொயியாரிப், யாகீன்,
11 அக்கித்தோப்பின் மகன் மராயியோத்தின் புதல்வன் சாத்தோக்குக்குப் பிறந்த மொசொல்லாமின் மகன் எல்கியாசின் புதல்வனும் ஆண்டவரது ஆலயத்தின் பெரிய குருவுமான அசாரியாசுமாம்.
12 மெல்கியாசின் புதல்வன், பாசூரின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயியாசு, எம்மோரின் மகன் மொசொல்லாமித்தின் புதல்வன் மொசொல்லாமுக்குப் பிறந்த எஸ்ராவின் மகன் அதியேலுடைய புதல்வன் மாசாயி;
13 மேலும் தங்கள் குடும்பங்களில் தலைவர்களாயிருந்த அவர்களுடைய உறவினர் ஆயிரத்து எழுநூற்று அறுபது பேர். இவர்கள் ஆண்டவரின் ஆலயத்தில் பணிவிடை புரிதலில் திறமை மிக்கவர்களாவர்.
14 லேவியர்களில் மெராரியின் புதல்வரில் அசேபியாவின் மகன் எஸ்ரிகாமின் புதல்வன் அசூபுக்குப் பிறந்த செமையா,
15 தம்சனான பக்பக்கார், காலால், அசாப்பின் புதல்வன் செக்கிரியின் மகன் மிக்காவுக்குப் பிறந்த மத்தானியா,
16 யூதித்தனுக்குப் பிறந்த காலாலின் மகன் செமெயியாசுக்குப் பிறந்த ஒப்தியா, நெத்தோப்பாத்தியருடைய ஊர்களில் குடியிருந்த எல்கனாவின் மகன் ஆசாவுக்குப் பிறந்த பரக்கியா.
17 வாயிற்காவலர் பெயர்கள் வருமாறு: செல்லும், ஆக்கூப், தெல்மோன், அகிமாம் ஆகியோரும் அவர்களின் உறவினருமாம். செல்லுமே இவர்களுக்குத் தலைவராய் இருந்தார்.
18 லேவியருடைய கூடாரங்களில் வாழ்ந்து கொண்டு, கிழக்கே உள்ள அரச வாயிலை இந்நாள் வரை இவர்களே காவல் புரிந்து வருகின்றனர்.
19 கோரேயின் புதல்வன் அபியசாப்பின் மகன் கோரேக்குப் பிறந்த செல்லும் என்பவரும், அவருடைய சகோதரர்களும், அவருடைய தந்தை வீட்டாரும் உறவினருமான கோரியர்களும் கூடார வாயிலைக் காவல் புரிந்து வந்தனர். மேலும் அவர்களுடைய குடும்பத்தார் ஆண்டவரது பாளைய வாயிலைக் காத்து வந்தனர்.
20 எலியெசாருடைய மகன் பினேசு முன்பு அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். ஆண்டவரும் அவரோடு இருந்தார்.
21 மொசொல்லாமியாவின் மகன் சக்கரியாஸ் உடன்படிக்கைக் கூடார வாயிலைக் காவல் புரிந்து வந்தார்.
22 கதவுகள் தோறும் காவல் புரியத் தேர்ந்துகொள்ளப்பட்ட இவர்களின் எண்ணிக்கை இருநூற்றுப் பன்னிரண்டு. அவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலே தலைமுறை அட்டவணையில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள். தாவீதும் திருக்காட்சியாளர் சாமுவேலும் அவர்களை நம்பி அந்தந்த வேலைகளில் அமர்த்தினர்.
23 இவ்வாறு அவர்களும் அவர்களின் புதல்வர்களும் ஆண்டவரது வீடான கூடாரத்தின் வாயில்களைக் காவல் புரிய நியமிக்கப்பட்டனர்.
24 வாயிற் காவலர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் காவல் புரிந்தனர்.
25 அவர்களுடைய உறவினர்கள் தங்கள் ஊர்களிலிருந்து வந்து சிலசமயம் ஒருவாரத்திற்கு அவர்களோடு இருப்பர்.
26 ஏனெனில் தலைமைக் காவலரான அந்த நால்வரும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கியிருந்தார்கள். லேவியரான இவர்கள் ஆண்டவரது ஆலயத்தின் கருவூல அறைகளையும் பண்டசாலைகளையும் கண்காணித்து வந்தனர்.
27 அவர்கள் தாங்கள் காவல் புரியும் காலத்தில் ஆண்டவரின் ஆலயத்தைச் சுற்றிலும் இரவோடு இரவாய்க் காவல் புரிந்து காலையில் குறித்த நேரத்தில் கதவுகளைத் திறந்து விடுவார்கள்.
28 அவர்களுள் சிலர் திருவழிபாட்டிற்குத் தேவையான தட்டுமுட்டுகளைப் பாதுகாத்து வந்தனர். அவற்றை உள்ளே கொண்டு வருமுன்னும் வெளியே கொண்டு போகுமுன்னும் எண்ணிப் பார்ப்பது அவர்கள் கடமை.
29 அவர்களில் சிலர் திருவிடத்தின் ஏனைய தட்டு முட்டுகளையும் மிருதுவான மாவு, திராட்சை இரசம், எண்ணெய், தூபம், நறுமணப் பொருட்களையும் மேற்பார்த்து வந்தனர்.
30 குருக்களின் புதல்வர்களோ நறுமணப் பொருட்களைக் கொண்டு நறுமண எண்ணெய் தயாரிப்பார்கள்.
31 கோரியனான செல்லும் என்பவரின் தலைமகன் மத்தாத்தியாசு என்ற லேவியன் பொரிச்சட்டியில் பொரிக்கப்பட்டவற்றைக் கவனித்து வந்தார்.
32 அவர்களுடைய சகோதரரான காத்தின் புதல்வரில் சிலருக்குக் காணிக்கை அப்பங்களைக் கண்காணிக்கும் பணி கொடுக்கப் பட்டிருந்தது. அவர்கள் ஓய்வுநாள் தோறும் புது அப்பங்களைத் தயாரித்துக் கொண்டு வருவர்.
33 இவர்களிலே குடும்பத்தலைவர்களாய் இருந்து வந்த லேவியரான பாடகர் இரவும் பகலும் இடைவிடாது பணிபுரிய வேண்டியிருந்ததால் மற்ற வேலைகளினின்று விடுபட்டு ஆலய அறைகளிலேயே தங்கியிருந்தார்கள்.
34 லேவியர்களில் குடும்பத்தலைவர்களாய் இருந்தவர் தத்தம் தலைமுறைகளில் தலைவர்களாயும் இருந்தனர். இவர்கள் யெருசலேமில் குடியிருந்தார்கள்.
35 காபாவோனில் வாழ்ந்து வந்தவர்கள்: மாக்கா என்பவளின் கணவரான ஏகியேல்;
36 அவருடைய தலைமகன் அப்தோன்; பின் பிறந்தவர்கள் சூர், சீஸ், பால்,
37 நேர், நாதாப், கெதோர், அகியோசக்கரியாஸ், மசெல்லோத் ஆகியோர்.
38 மசெல்லோத் சமானைப் பெற்றார். இவர்கள் தங்கள் உறவினருக்கு அருகே யெருசலேமில் தங்கள் குடும்பத்தினரோடு குடியிருந்தனர்.
39 நேர் சீசைப் பெற்றார்; சீஸ் சவுலைப் பெற்றார்; சவுல் யோனத்தான், மெல்கிசுவா, அபினதாப், ஏசுபால் என்பவர்களைப் பெற்றார்.
40 யோனத்தானின் மகன் பெயர் மெரிபாவால். மெரிபாவால் மிக்காவைப் பெற்றார்.
41 மிக்காவின் புதல்வரோ பித்தோன், மெலேக், தராகா, ஆகாஸ் ஆகியோர்.
42 ஆகாஸ் யாராவைப் பெற்றார். யாரா அலமாத், அஸ்மோத், சம்ரி என்போரைப் பெற்றார். சம்ரி மோசாவைப் பெற்றார்.
43 மோசா பானாவைப் பெற்றார். இவரின் மகன் ரப்பாயியா ஏலாசாவைப் பெற்றார்.
44 ஏலாசா ஆசேலைப் பெற்றார். ஆசேலுக்கு எஸ்ரிகாம், பொக்ரு, இஸ்மாயேல், சாரியா, ஒப்தியா, ஆனான் ஆகிய மக்கள் அறுவர் இருந்தனர்.
அதிகாரம் 10
1 பிலிஸ்தியர் இஸ்ராயேலுக்கு எதிராய்ப் போர் செய்து கொண்டிருந்தனர். இஸ்ராயேல் மக்கள் பிலிஸ்தியருக்கு முன்பாகப் புறமுதுகு காட்டி ஓடினர்; கெல்போயே மலையில் காயம் பட்டு வீழ்ந்தனர்.
2 பிலிஸ்தியர் சவுலையும் அவருடைய புதல்வர்களையும் துரத்திச் சென்று நெருங்கி வந்து சவுலின் புதல்வர்களான யோனத்தாசு, அவினதாப், மெல்கிசுவா என்பவர்களை வெட்டி வீழ்த்தினர்.
3 சவுலுக்கு எதிராய் அவர்கள் கடும்போர் புரிந்தனர். வில் வீரர் நெருங்கி வந்து அம்புகளால் அவரைக் காயப்படுத்தினர்.
4 அப்போது சவுல் தம் பரிசையனை நோக்கி, "உனது வாளை உருவி என்னைக் கொன்றுவிடு; இல்லாவிட்டால் விருத்தசேதனம் செய்யப்படாத இவர்கள் வந்து என்னை ஏளனம் செய்வார்கள்" என்றார். அவருடைய பரிசையனோ அச்சமுற்று, "அவ்வாறு செய்யமாட்டேன்" என்றான். அப்பொழுது சவுல் தம் வாளை தரையில் நாட்டிவைத்து அதன் மேல் வீழ்ந்தார்.
5 சவுல் இறந்ததை அவருடைய பரிசையன் கண்டு தானும் தனது வாளின் மேல் விழுந்து மடிந்தான்.
6 இவ்வாறு சவுலும் அவருடைய மூன்று புதல்வரும் மடிந்தனர். அவரோடு அவரது குடும்பம் முழுவதும் அழிந்து போயிற்று.
7 பள்ளத்தாக்கிலே குடியிருந்த இஸ்ராயேல் மக்கள் அதைக்கண்டு தப்பியோடினர். சவுலும் அவருடைய புதல்வர்களும் மாண்டபின்பு, தங்கள் நகர்களை விட்டு இங்குமங்கும் சிதறிப் போயினர். எனவே பிலிஸ்தியர் வந்து அவற்றில் குடியேறினர்.
8 பிலிஸ்தியர் மடிந்தவர்களின் ஆடைகளை உரிந்து கொள்ள வந்த போது, சவுலும் அவருடைய மகனும் கெல்போயே மலையில் கிடப்பதைக் கண்டனர்.
9 அவருடைய ஆடைகளை உரிந்து கொண்டு, ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். பின் அவரது தலையை வெட்டி, தமது கோவில் சிலைகளுக்குப் படைக்கவும் மக்களுக்குக் காட்டவும், அதைத் தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
10 அவருடைய ஆயுதங்களை தங்கள் தெய்வத்தின் கோவில் காணிக்கையாக்கினர். அவரது தலையைக் தாகோன் கோவிலில் கட்டிக் தொங்கவிட்டனர்.
11 பிலிஸ்தியர் சவுலுக்குச் செய்ததையெல்லால் காலாத் நாட்டு யாபேஸ் நகர மக்கள் கேள்வியுற்றனர்.
12 அப்போது அவர்களுள் ஆற்றல்மிக்கவர் அனைவரும் புறப்பட்டு வந்து சவுலின் பிணத்தையும், அவர் புதல்வரின் பிணங்களையும் எடுத்து அவற்றை யாபேசுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவர்களின் எலும்புகளை அடக்கம் செய்து ஏழு நாள் நோன்பிருந்தனர்.
13 இவ்வாறு சவுல் ஆண்டவரது கட்டளையைக் கடைப்பிடிக்காமல் அவருக்கு பிரமாணிக்கமற்ற விதமாய் நடந்துகொண்டார். மேலும் அவர் மாய வித்தைக்காரரை நம்பி அவர்களிடம் ஆலோசனை கேட்டிருந்தார். இதன் பொருட்டே அவர் மாண்டார்.
14 ஆண்டவரில் நம்பிக்கை வைக்காததால் ஆண்டவர் அவரைச் சாகடித்து, அவரது அரசை இசாயி மகன் தாவீதுக்குக் கொடுத்தார்.
அதிகாரம் 11
1 எனவே, எபிரோனில் தங்கியிருந்த தாவீதிடம் இஸ்ராயேலர் எல்லாரும் கூடிவந்து, "இதோ நாங்கள் உமது எலும்பும் உமது சதையுமாய் இருக்கிறோம்.
2 கடந்த காலத்தில் சவுல் அரசராய் இருந்த போதும் எல்லாக் காரியங்களிலும் இஸ்ராயேலை முன்னின்று நடத்தி வந்தவர் நீரே. ஏனெனில், உம் கடவுளாகிய ஆண்டவர் உம்மை நோக்கியே, 'என் மக்களாகிய இஸ்ராயேலை நீ மேய்ப்பாய்; இஸ்ராயேலுக்கு நீ தலைவனாய் இருப்பாய்' என்று சொல்லியிருக்கிறார்" என்றனர்.
3 அவ்வாறே இஸ்ராயேலின் மூப்பர் எல்லாரும் எபிரோனில் தங்கியிருந்த தாவீது அரசரிடம் வந்த போது, அவர் ஆண்டவர் திருமுன் அவர்களுடன் உடன்படிக்கை செய்தார். ஆண்டவர் சாமுவேலின் மூலம் உரைத்ததன்படி இஸ்ராயேலின் அரசராக அவர் அபிஷுகம் பெற்றார்.
4 பின்பு தாவீதும் இஸ்ராயேலர் அனைவரும் யெருசலேம் நகருக்கு சென்றனர். அது அப்பொழுது எபூஸ் என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் எபுசேயர் அங்கே வாழ்ந்து வந்தனர்.
5 அந்த எபூஸ் நகரின் குடிகள் தாவீதை நோக்கி, "நீர் இதனுள் நுழையமாட்டீர்" என்றனர். எனினும் தாவீது சீயோனின் கோட்டையைப் பிடித்தார். அது தாவீதின் நகராயிற்று.
6 தாவீது, "எபுசேயரை முதலில் முறியடிப்பவன் எவனோ அவன் தலைவனும் தளபதியுமாய் இருப்பான்" என்று சொல்லியிருந்தார். எனவே சார்வியாவின் மகன் யோவாப் முதலில் சென்று போரிட்டுப் படைத்தலைவனானான்.
7 தாவீது அக்கோட்டையில் வாழ்ந்ததன் காரணமாக அது தாவீதின் நகர் என்று அழைக்கப்பட்டது.
8 அவர் மெல்லோ தொடங்கி நகர மதிலை எழுப்பினார். யோவாப் நகரின் ஏனைய இடங்களைப் பழுது பார்த்தார்.
9 தாவீதின் பேரும் புகழும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. சேனைகளின் ஆண்டவர் அவரோடு இருந்தார்.
10 ஆண்டவர் இஸ்ராயேலுக்கு மொழிந்திருந்த வாக்கின்படி இஸ்ராயேல் மக்கள் அனைவர்க்கும் அசராகும்படி தாவீதுக்கு ஆற்றல் மிக்க வீரர்களின் தலைவர்கள் உதவியாயிருந்தனர்.
11 தாவீதின் வீரர்களின் விபரம் வருமாறு: அக்கமோனியின் மகன் எஸ்பாம்- இவன் முப்பது பேருக்குத் தலைவன்; தன் ஈட்டியால் முந்நூறு பேரை ஒரே நேரத்தில் குத்திக் கொன்றவன்.
12 அவனை அடுத்து அவன் தந்தையின் சகோதரனுக்குப் பிறந்த அகோகித்தனாகிய எலியேசார். ஆற்றல் மிக்கவர் மூவருள் அவனும் ஒருவன்.
13 பிலிஸ்தியர் படை திரட்டி, பேஸ்தோமீம் என்ற இடத்தில் போரிட வந்த போது எலியெசார் தாவீதுடன் இருந்தான். அங்குள்ள ஒரு வயல் வாற்கோதுமையால் நிறைந்திருக்க, மக்களோ பிலிஸ்தியருக்குப் பயந்து தப்பியோடிவிட்டனர்.
14 அப்பொழுது இவர்கள் அவ்வயலின் நடுவே நின்றுகொண்டு, அதைக் காத்து, பிலிஸ்தியரை முறியடித்தனர். இங்ஙனம் ஆண்டவர் தம் மக்களுக்குப் பெரும் வெற்றியைத் தந்தருளினார்.
15 மீண்டும் பிலிஸ்தியர் ரப்பாயிம் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கியிருந்த போது முப்பது தலைவர்களில் மூன்றுபேர் தாவீது இருந்த அதொல்லாம் என்ற கற்குகைக்குச் சென்றனர்.
16 தாவீது அரணான இடத்தில் இருந்தார். பிலிஸ்தியரின் பாளையம் பெத்லெகேமில் இருந்தது.
17 ஒருநாள் தாவீது, "பெத்லெகேம் ஊர் வாயிலில் உள்ள கிணற்று நீரை யாராவது கொண்டு வந்து தரவேண்டும் என்று ஆசிக்கின்றேன்" என்று ஆவலுடன் கூறினார்.
18 அப்பொழுது அந்த மூவரும் பிலிஸ்தியரின் பாளையத்தின் நடுவே துணிந்து சென்று பெத்லெகேம் ஊர் வாயிலில் இருந்த கிணற்று நீரை மொண்டு தாவீதுக்குக் குடிக்கக் கொண்டு வந்தனர். அவரோ குடிக்க மனமின்றி அதை ஆண்டவருக்கென்று கீழே கொட்டி விட்டார்.
19 நான் இதைச் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! தங்கள் உயிரைத் துரும்பாக எண்ணிய இம்மனிதரின் இரத்தத்தை நான் குடியேன்; இவர்கள் தங்கள் உயிருக்கு வரவிருந்த ஆபத்தையும் பாராது, இத்தண்ணீரைக் கொண்டு வந்தனரே!" என்று கூறி அதைக் குடிக்க மறுத்து விட்டார். ஆற்றல் மிக்கவராயிருந்த அம் மூவரும் இத்தகு காரியங்களைச் செய்தனர்.
20 யோவாபின் சகோதரன் அபிசாயி முப்பது பேருக்குத் தலைவனாய் இருந்தான். இவனே தம் ஈட்டியால் முந்நூறு பேரைக் கொன்றவன். எனவே அம் முப்பது பேருள் இவன் அதிகப் பேரும் புகழும் பெற்று விளங்கினான்.
21 அவர்களுள் தலைசிறந்தவனாகவும் திகழ்ந்தான். அதன் பொருட்டே அவன் அவர்களுக்குத் தலைவனானான். ஆயினும் அம் மூவருக்கு அவன் இணையாகான்.
22 மிகத் திடமுள்ளவனான யோயியாதாவின் மகனும் கப்சேல் ஊரானுமாகிய பனாயாஸ் தீரச் செயல்கள் பல புரிந்தவன். மோவாபிய வீரர் இருவரைக் கொன்றவன். உறைபனி பெய்து கொண்டிருந்த பொழுது ஒருநாள் ஒரு கிடங்கினுள் இறங்கி ஒரு சிங்கத்தைக் கொன்றவனும் அவனே.
23 மேலும் அவன் ஐந்து முழ உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றான். அந்த எகிப்தியன் நெசவாளரின் படைமரத்தைப் போன்ற ஈட்டியைக் கையில் ஏந்தி வந்தான். எனினும் இவன் ஒரு தடியைக் கையிலேந்தி அவன் மீது பாய்ந்து, அவன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, தனது சொந்த ஈட்டியால் அவனைக் குத்திக் கொன்றான்.
24 இவ்விதத் தீரச் செயல்களை எல்லாம் யோயியாதாவின் மகன் பனாயாஸ் செய்ததால் முப்பது பேருள் அவன் பெரும் புகழ் பெற்றான்.
25 அம் முப்பது பேருக்குள் அவன் முதல்வனாயிருந்தாலும் முந்தின மூவருக்கு அவன் இணையானவன் அல்லன். அவனையே தாவீது தம் மெய்க்காவலர்க்குத் தலைவனாக நியமித்தார்.
26 மற்றப் படைவீரர்கள் வருமாறு: யோவாபின் சகோதரன் அசாயேல்; பெத்லெகேம் ஊரானாகிய அவன் தந்தையின் சகோதரனின் மகன் எல்கானான்;
27 அரோரியனான சம்மோத்; பலோனியனான எல்லேஸ்;
28 தேக்குவியனான ஆக்கேசின் மகன் ஈரா; அநத்தோத்தினயனான அபியெசேர்; உசாத்தியனான சொபோக்கை;
29 அகோகியனான இலாய்;
30 நெத்தோப்பாத்தியனான மகராயி; நெத்தோப்பாத்தியனாகிய பானாவின் மகன் எலேத்;
31 பென்யமீன் குலத்தவரில், கபாத்தியனான ரிபாயின் மகன் ஏத்தாயி; பரத்தோனியனான பனாயியா;
32 காஸ் ஆற்றுப்பகுதியைச் சேர்ந்த ஊராயி; அர்பாத்தியனான அபியேல்; பவுறமியனான அஸ்மோத்; சலபோனியனான எலியபா;
33 கெரோனியனான ஆசேமின் புதல்வரில் அராரியனான சகேயின் மகன் யோனத்தான்;
34 அராரியனான சக்காரின் மகன் அகியாம்;
35 ஊரின் மகன் எலீப்பால்;
36 மெக்ராத்தியனான ஏப்பேர்; பெலோனியனான ஆகியா;
37 கர்மேலியனான எர்சோ; அஸ்பையின் மகன் நாராயி;
38 நாத்தானின் சகோதரன் யோவேல்; அகராயின் மகன் மிபகார்.
39 அம்மோனியனான செலேக்; சார்வியாவின் மகனும் யோவாபின் பரிசையனும் பெரோத்தியனுமான நகராயி
40 எத்தேயனான ஈரா; எத்திரேயனான காரேப்;
41 எத்தேயனான உரியாஸ்; ஒகோலியின் மகன் சாபாத்;
42 ரூபன் குலத்தவனும் ரூபனியரின் தலைவனுமான சீசாவின் மகன் அதீனாவும், இவனோடு இருந்த முப்பதுபேரும்;
43 மாக்காவின் மகன் கானான்; மத்தானியனான யோசப்பாத்;
44 அஸ்தரோத்தியனான ஒசீயா; அரோரியனான ஒத்தாமின்
45 புதல்வர் சம்மா, எகியேல் என்பவர்கள்; சம்ரியின் மகன் எகியேல், அவனுடைய சகோதரனும்
46 தொசாயியனுமான யோகர்; மகூமியனான எலியேல்; எல்னயேமின் புதல்வர் யெரிபாயி, யோசாயியா ஆகியோர்; மோவாபியனான எத்மா, எலியேல், ஒபேத், மசோபியனான யசியேல் ஆகியோராம்.
அதிகாரம் 12
1 தாவீது சீசின் மகன் சவுலிடமிருந்து தப்பித் தலைமறைவாய் சிசெலேக் என்னுமிடத்தில் இருந்தபோது சிலர் அவரிடம் வந்தனர். அவர்கள் ஆற்றல் மிகக் கொண்டவரும் திறமை மிக்கவருமான படைவீரராவர்.
2 மேலும் அவர்கள் வில் வீரராயும், இரு கையாலும் கவணையும் அம்பையும் கையாள்வதில் திறமை படைத்தவராயும் இருந்தனர். அவர்கள் பென்யமீன் குலத்தினரான சவுலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
3 அவர்கள் வருமாறு: கபாத்தியனான சமாவின் புதல்வராகிய தலைவன் அகியேசர், யோவாசு; அஸ்மோத்தின் புதல்வரான யசியேல், பலத்து; அநத்தோத்தியரான பராக்கா, ஏகு;
4 முப்பது பேருக்குள் திறமை மிக்கவனும் அம் முப்பதின்மருக்குத் தலைவனுமான கபாவோனைச் சேர்ந்த சமையாசு; எரேமியாசு, எகேசியேல், எகனான்;
5 கெதேரோத்தியனான எசபாத்து, எலுசாயி, எரிமுத், பாலியா, சமாரியா; அருபியனான சப்பாத்தியா;
6 எல்கானா, யெசீயா, அசரேல் யோவெசேர்;
7 கரெகிமயனான எஸ்பா; கெதோசைச் சேர்ந்த யெரொகாமின் புதல்வர் யொவேலா, சாதியா ஆகியோருமாம்.
8 மேலும், காதி என்ற இடத்திலிருந்து ஆற்றல் மிக்கவரும் திறமைமிக்க போர்வீரர்களும், ஈட்டியும் கேடயமும் தாங்குவோரும், சிங்கம் போன்ற முகத்தை உடையவர்களும், மலைவாழ் மான்கள் போல வேகமாய் ஓடக்கூடியவர்களுமான சிலரும் பாலைவனத்தில் தலைமறைவாய் இருந்த தாவீதிடம் வந்தனர்.
9 அவர்கள் யாரெனில்: தலைவனான எசேர், இரண்டாவது ஒப்தியாஸ், மூன்றாவது எலியாப்,
10 நான்காவது மஸ்மானா, ஐந்தாவது எரேமியாசு,
11 ஆறாவது எத்தி, ஏழாவது எலியேல்,
12 எட்டாவது யொகனான், ஒன்பதாவது எல்சேபாத்,
13 பத்தாவது எரேமியாசு, பதினோராவது மக்பனாயி ஆகியோராம்.
14 இவர்கள் காத்தின் புதல்வர்களும் படைத்தலைவர்களுமாவர். அவர்களில் சிறியவன் நூறு பேருக்கும், பெரியவன் ஆயிரம் பேருக்கும் சமமாய் இருந்தனர்.
15 யோர்தான் நதி கரைபுரண்டு ஓடும் முதல் மாதத்தில் அதைக்கடந்து, மேற்கிலும் கிழக்கிலும் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வந்த யாவரையும் துரத்தியடித்தவர்கள் இவர்களே.
16 அவ்வாறே பென்யமீன் குலத்தவரிலும் யூதா குலத்தவரிலும் பலர் காவல் சூழ்ந்த இடத்தில் இருந்த தாவீதிடம் வந்து சேர்ந்தனர்.
17 தாவீது வெளிப்போந்து, அவர்களை எதிர்கொண்டு சென்று, "நீங்கள் எனக்கு உதவி செய்யும் பொருட்டு நண்பர்கள் என்ற முறையில் என்னிடம் வந்தீர்களேயாகில், நான் உங்களோடு சேர்ந்துகொள்ளத் தயார். மாறாக, குற்றம் புரிந்திராத என்னை என் எதிரிகள் கையில் ஒப்படைக்கும் பொருட்டு வந்திருப்பீர்களேயாகில், நம் முன்னோரின் கடவுள் அதைப்பார்த்துத் தீர்ப்புச் சொல்லட்டும்" என்றார்.
18 அப்போது முப்பதின்மருக்குத் தலைவனான அமசாயியை ஆவி ஆட்கொள்ள, அவன், "ஓ! தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள். இசாயியின் மகனே! நாங்கள் உம்மோடு இருப்போம். உமக்குச் சமாதானம், சமாதானம்! உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்! ஏனெனில் உம் கடவுள் உமக்குத் துணை நிற்கிறார்" என்றான். தாவீதும் அவர்களை வரவேற்றுத் தம் படைக்குத் தலைவர்களாக்கினார்.
19 தாவீது பிலிஸ்தியருடன் சேர்ந்துகொண்டு சவுலுக்கு எதிராகப் போரிடச் செல்கையில், மனாசேயைச் சேர்ந்த சிலரும் அவரிடம் வந்து சேர்ந்தனர். ஆனால் அவர் அவர்களோடு சேர்ந்து போரிடவில்லை. ஏனெனில் பிலிஸ்தியத் தலைவர்கள் சிந்தனை செய்து, "இவன் தன் தலைவன் சவுலிடம் திரும்பச் சேர்ந்து கொள்வானாகில் நமது உயிருக்குத்தான் ஆபத்து" என்று சொல்லி அவரை அனுப்பி விட்டனர்.
20 ஆகையால் தாவீது சிசெலேகுக்குத் திரும்பிச் சென்றார். அப்பொழுது மனாசேயில் ஆயிரவர்க்குத் தலைவர்களான எத்னாஸ், யோசபாத், எதியேல், மிக்காயேல், எத்னாஸ், யோசபாத், எலியு, சாலாத்தி ஆகியோர் மனாசேயினின்றும் அவருடன் வந்து சேர்ந்து கொண்டனர்.
21 இவர்கள் கள்வரை எதிர்த்து நின்று தாவீதுக்கு உதவி புரிந்தனர். ஏனெனில் எல்லாரும் ஆற்றல் மிக்க ஆடவராயும் படைத்தலைவர்களாயும் இருந்தனர்.
22 இங்ஙனம் தாவீதுக்கு உதவிபுரியப் பலர் ஒவ்வொரு நாளும் அவரிடம் வந்த வண்ணம் இருந்தனர். எனவே அவருடைய ஆதரவாளர்கள் மாபெரும் படையாகப் பெருகினர்.
23 ஆண்டவரின் வாக்குறுதிப்படி சவுலின் அரசைத் தாவீதிடம் கொடுக்கும் பொருட்டு எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்த படைத்தலைவரின் எண்ணிக்கையாவது:
24 கேடயமும் ஈட்டியும் தாங்கிப் போரிடத் தயாராக வந்த யூதா புதல்வர்கள் ஆறாயிரத்து எண்ணுறு பேர்;
25 சிமெயோன் புதல்வரில் போரிடவந்த ஆற்றல் மிக்க மனிதர் ஏழாயிரத்து நூறு பேர்;
26 லேவி புதல்வரில் நாலாயிரத்து அறுநூறுபேர்;
27 ஆரோன் வழிவந்தவருக்குத் தலைவரான யோயியாதாவும் அவனோடு மூவாயிரத்து எழுநூறு பேரும்;
28 ஆற்றல் மிக்க இளைஞனான சாதோக்கும், அவன் குடும்பத்தைச் சேர்ந்த இருபத்திரண்டு தலைவர்களும்;
29 பென்யமீன் புதல்வரில், சவுலின் உறவினர்கள் மூவாயிரம் பேர்; அவர்களில் பலர் அதுவரை சவுலின் குடும்பத்திற்குச் சார்பாய் இருந்து வந்தவர்கள்;
30 எப்பராயீம் புதல்வரில் தங்கள் குடும்பங்களில் புகழ்பெற்றவர்களும் ஆற்றல்மிக்க மனிதர்களும் இருபதினாயிரத்து எண்ணுறு பேர்.
31 மனாசேயின் பாதிக் கோத்திரத்தினின்று பதினெட்டாயிரம் பேர்: அவர்களில் ஒவ்வொருவரும் தத்தம் பெயர் வரிசைப்படி தாவீதை அரசராக்குவதற்கு வந்தனர்.
32 இசாக்கார் புதல்வர்களில், இஸ்ராயேலர் செய்ய வேண்டியதுபற்றிக் குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த ஆழ்ந்தறிவுள்ள இருநூறு குடும்பத்தலைவர்கள்: இவர்களது குலத்தின் மக்கள் அனைவரும் இவர்களது அறிவுரைக்குச் செவிமடுத்தனர்.
33 சபுலோனிலிருந்து போருக்குச் செல்பவர்களும், போர்க்கலங்களை அணிந்து அணிவகுத்து நின்றவர்களுமான ஐம்பதினாயிரம் பேர் இரட்டை மனமின்றி உதவிக்கு வந்தனர்.
34 நெப்தலி குலத்தைச் சேர்ந்த ஆயிரம் தலைவர்களும், அவர்களோடு கேடயமும் ஈட்டியும் தாங்கியவர்கள் முப்பத்தேழாயிரம் பேரும் வந்தனர்.
35 தாண் குலத்தினின்று போருக்குத் தயாராயிருந்த இருபத்தெட்டாயிரத்து அறுநூறு பேர்;
36 ஆசேரினின்று போருக்குச் செல்பவர்களும், மற்றவரைப் போருக்கு அழைக்கத் தக்கவர்களுமான நாற்பதினாயிரம் பேர்;
37 யோர்தானுக்கு அக்கரையிலுள்ள ரூபன், காத் என்பவர்களின் புதல்வரிலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிலுமாக போர்கலங்களை அணிந்தவர்கள் ஒரு லட்சத்து இருபதினாயிரம் பேர்.
38 போர் புரிய நன்கு தகைமை பெற்ற அந்த வீரர் அனைவரும் தாவீதை இஸ்ராயேல் அனைத்திற்கும் அரசராக ஏற்படுத்தக் கருதி முழு உள்ளத்தோடு எபிரோனுக்கு வந்தனர். மேலும் இஸ்ராயேலில் எஞ்சியிருந்த மக்கள் யாவரும் ஒரே மனதாய் தாவீதையே அரசராக்க விரும்பினர்.
39 அவர்கள் அங்கே தாவீதோடு உணவருந்தி மூன்று நாள் தங்கினார்கள். அவர்களின் உறவினரோ அவர்களுக்காக எல்லாவற்றையும் தயாரித்திருந்தனர்.
40 மேலும், இசாக்கார், சபுலோன், நெப்தலி எல்லைகள் வரை அவர்களுக்கு அருகே இருந்தவர்கள் கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும், கோவேறு கழுதைகள் மேலும், மாடுகள் மேலும், அவர்கள் உண்ணத்தக்க அப்பங்களையும் மாவையும், அத்திப்பழ அடைகளையும், வற்றலான திராட்சைப் பழங்களையும், திராட்சை இரசத்தையும், எண்ணெயையும், ஆடு மாடுகளையும் ஏராளமாகக் கொண்டு வந்திருந்தனர். இஸ்ராயேலில் மகிழ்ச்சி நிலவி வந்தது.
அதிகாரம் 13
1 தாவீது ஆயிரவர் தலைவரோடும் நூற்றுவர் தலைவரோடும், மற்ற தலைவர்கள் அனைவருடனும் கலந்தாலோசித்து,
2 கூடியிருந்த இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் நோக்கி, "நான் சொல்வது உங்களுக்குப் பிடித்திருந்தால், அது நம் ஆண்டவராகிய கடவுளிடமிருந்து வருகின்றதென்றால், இஸ்ராயேல் நாடெங்கும் வாழ்ந்து வரும் நம் ஏனைய சகோதரரிடமும், நகர்ப்புறங்களில் வாழ்ந்துவரும் குருக்கள் லேவியரிடமும் ஆள் அனுப்பி, அவர்கள் நம்மோடு வந்து சேரும்படி சொல்வோம்.
3 பின்னர், சவுலின் காலத்தில் நாம் தேடாது விட்டு விட்ட நம் கடவுளின் திருப்பேழையைத் திரும்பக் கொண்டு வருவோம்" என்றார்.
4 இது எல்லாருடைய மனத்திற்கும் பிடித்திருந்தது. எனவே கூடியிருந்தவர் எல்லாரும், "அப்படியே செய்யவேண்டும்" என்று பதிலுரைத்தனர்.
5 ஆகையால், தாவீது கடவுளின் திருப்பேழையைக் கரியாத்தியாரிமிலிருந்து கொண்டு வர எண்ணி, எகிப்தில் இருக்கும் சிகோர் முதல் ஏமாத் எல்லை வரை வாழ்ந்து வந்த இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார்.
6 பின்னர், கெருபீம்களின் மேல் வீற்றிருக்கும் ஆண்டவரான கடவுளின் திருப்பெயர் விளங்கும் அத் திருப்பேழையை, யூதாவிலுள்ள கரியாத்தியாரிம் என்ற குன்றிலிருந்து எடுத்துக் கொண்டு வரும்படி தாவீதும் இஸ்ராயேல் மனிதர் யாவரும் அவ்விடத்திற்கு ஏறிச் சென்றனர்.
7 அவர்கள் கடவுளின் திருப்பேழையை அபினதாப்பின் வீட்டிலிருந்து எடுத்துவந்து, ஒரு புதுத் தேரின் மேல் ஏற்றினார்கள். ஓசாவும் அவன் சகோதரனும் தேரை ஓட்டிவந்தனர்.
8 தாவீதும் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் தங்கள் ஆற்றலெல்லாம் சேர்ந்து கடவுளுக்கு முன்பாகச் சுரமண்டலங்களையும் யாழ்களையும் மத்தளங்களையும் வாசித்தனர்; கைத்தாளம் கொட்டி, எக்காளம் ஊதி ஆர்பரித்துப் பாடினர்.
9 அவர்கள் சீதோனின் களம் வந்தடைந்த போது மாடுகள் இடறவே திருப்பேழை சாய ஆரம்பித்தது. அதைத் தாங்கிப் பிடிக்கும்படி ஓசா உடனே தன் கையை நீட்டினான்.
10 நீட்டவே ஆண்டவர் ஓசாவின்மீது கோபமுற்று, அவன் திருப்பேழையைத் தொட்டதால் அவனைச் சாகடித்தார். அவன் அங்கேயே ஆண்டவர் திருமுன் இறந்து பட்டான்.
11 ஆண்டவர் ஓசாவை அழித்ததை முன்னிட்டுத் தாவீது மனவருத்தமுற்றார். அவ்விடத்திற்கு பேரேஸ்-ஊசா என்று பெயரிட்டார். அப்பெயர் இன்று வரை வழங்கி வருகிறது.
12 தாவீது, கடவுளுக்கு அஞ்சி, "கடவுளின் திருப்பேழையை எவ்வாறு நான் என் வீட்டிற்குக் கொண்டு போவது?" என்று சொன்னார்.
13 அதனால் அதைத் தமது வீட்டிற்கு, அதாவது தாவீதின் நகருக்குக் கொண்டுவராமல், கேத்தியனான ஒபேதெதோமின் வீட்டில் கொண்டு வந்து வைத்தார். கடவுளின் திருப்பேழை ஒபேதெதோமின் வீட்டில் மூன்று மாதம் இருந்தது. அம்மூன்று மாதமும் ஆண்டவர் அவனது வீட்டையும் அவன் உடைமைகள் யாவற்றையும் ஆசீர்வதித்தார்.
அதிகாரம் 14
1 தீரின் அரசன் ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவருக்கு ஓர் அரண்மனை கட்டுவதற்குப் போதுமான கேதுரு மரங்களையும் கொத்தர்களையும் தச்சர்களையும் அனுப்பி வைத்தான்.
2 ஆண்டவர் தம்மை இஸ்ராயேலின் மேல் அரசனாக உறுதிப்படுத்தியுள்ளார் என்றும், அவருடைய மக்களாகிய இஸ்ராயேலின் மேல் தம் அரசை மேன்மைப்படுத்தியுள்ளார் என்றும் இதனால் தாவீது அறிந்து கொண்டார்.
3 அவர் யெருசலேமில் இன்னும் பல பெண்களை மணமுடித்துப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்.
4 யெருசலேமில் அவருக்குப் பிறந்த புதல்வர்களின் பெயர்களாவன: சாமுவா, சோபாத், நாத்தான், சாலமோன்,
5 யெபகார், எலீசுவா, எலிப்பலேத், நோகா,
6 நாப்பேக், யாப்பியா,
7 எலீசமா, பாலியாதா, எலிப்பலேத்.
8 தாவீது இஸ்ராயேல் அனைத்தின் மேலும் அரசராக அபிஷுகம் செய்யப்பட்டிருக்கிறார் என்று கேள்விப் பட்ட பிலிஸ்தியர் எல்லாரும் அவரைப் பிடிக்க தேடிப் புறப்பட்டு வந்தனர். அதைத் தாவீது அறிந்து அவர்களுக்கு எதிராய்ப் படையுடன் சென்றார்.
9 பிலிஸ்தியரோ வந்து ரப்பாயீம் பள்ளத்தாக்கில் பரவியிருந்தார்கள்.
10 தாவீது ஆண்டவரை நோக்கி, "நான் பிலிஸ்தியரைத் தாக்கினால் நீர் அவர்களை என் கையில் ஒப்படைப்பீரா?" என்று கேட்டார். "போ; அவர்களை உன் கையில் ஒப்படைப்போம்" என்றார் ஆண்டவர்.
11 அவர்கள் பால்பரசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்தார். "வெள்ளம் அழிப்பது போல ஆண்டவர் என் எதிரிகளை என் கைவன்மையால் அழித்துவிட்டார்" என்றார். அதன் காரணமாகவே அவ்விடத்திற்குப் பால்பரசீம் என்று பெயரிட்டனர்.
12 அவர்கள் தங்கள் தெய்வங்களை அங்கே விட்டு விட்டுப் போயிருந்தார்கள். அவற்றை தாவீது தீக்கிரையாக்கக் கட்டளையிட்டார்.
13 இன்னொரு முறையும் பிலிஸ்தியர் திடீரென வந்து பள்ளத்தாக்கில் பரவியிருந்தார்கள்.
14 திரும்பவும் தாவீது கடவுளின் ஆலோசனையைக் கேட்டார். கடவுள், "நீ அவர்களை முன்னின்று தாக்காமல், அவர்களைச் சுற்றி வளைத்து பீர் மரங்களுக்கு எதிரே அவர்களைத் தாக்கு.
15 பீர் மரங்களின் உச்சியில் யாரோ நடந்துவரும் சத்தத்தை நீ கேட்பாய்; உடனே போருக்குப் புறப்படு; ஏனெனில் பிலிஸ்தியர் படையை முறியடிக்கும்படி கடவுள் உனக்குமுன் ஏறிச் செல்கிறார்" என்றார்.
16 கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே தாவீது செய்து, காபாவோன் முதல் காசேரா வரை பிலிஸ்தியர் படைகளை முறியடித்தார். இவ்வாறு தாவீதின் புகழ் எல்லா நாடுகளிலும் விளங்கிற்று.
17 ஆண்டவர் எல்லா நாடுகளும் அவருக்கு அஞ்சும்படி செய்தார்.
அதிகாரம் 15
1 அவர் தமக்குத் தாவீதின் நகரிலே அரண்மனைகளைக் கட்டினார். கடவுளின் திருப்பேழைக்கு என ஓர் இடத்தைத் தயார் செய்து ஒரு கூடாரத்தையும் அமைத்தார்.
2 பிறகு தாவீது, "கடவுளின் திருப்பேழையைச் சுமக்கவும், என்றென்றும் தமக்குத் திருப்பணி புரியவும் ஆண்டவர் தேர்ந்து கொண்ட லேவியரைத் தவிர வேறொருவரும் அப்பேழையைச் சுமந்து வரலாகாது" என்றுரைத்தார்.
3 கடவுளின் திருப்பேழைக்காகத் தாம் தயாரித்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் யெருசலேமில் ஒன்று திரட்டினார்.
4 பின் ஆரோனின் புதல்வரையும்,
5 லேவியராகிய காத்தின் புதல்வரில் தலைவனாகிய ஊரியேலையும், அவன் சகோதரரான நூற்றிருபது பேரையும்,
6 மெராரியின் புதல்வரில் தலைவனான அசாயியாவையும் அவன் சகோதரரான இருநூற்றிருபது பேரையும்,
7 கெர்சோம் புதல்வரில் தலைவனான யோவேலையும், அவன் சகோதரரான நூற்று முப்பது பேரையும்,
8 எலிசபான் புதல்வரில் செமாயியா என்ற தலைவனையும் அவன் சகோதரரான இருநூறு பேரையும்,
9 எபுரோன் புதல்வரில் எலியேல் என்ற தலைவனையும் அவன் சகோதரரான எண்பது பேரையும்,
10 ஒசியேல் புதல்வரில் அமினதாப் என்ற தலைவனையும் அவன் சகோதரரான நூற்றுப் பன்னிரண்டு பேரையும் வரச் செய்தார்.
11 பின் தாவீது குருக்களாகிய சாதோக்கையும் அபியதாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயியா, யோவேல், செமெயியா, எலியேல், அமினதாப் ஆகியோரையும் வரவழைத்தார்.
12 அவர்களை நோக்கி, 'லேவியர் குலத் தலைவர்களே உங்களையும் உங்கள் சகோதரர்களையும் தூய்மைப் படுத்திக் கொண்டு, இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரின் திருப்பேழையை அதற்காகத் தயாரிக்கப் பட்டுள்ள இடத்திற்குக் கொண்டு வாருங்கள்.
13 ஏனெனில், முன்னர் நீங்கள் அதைத் தூக்காததால் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு அழிவைக் கொணர்ந்தார். ஏனெனில் குறித்தவாறு முறையான வழியில் அதை நாம் தேடாது போனோம்" என்றார்.
14 அவ்வாறே குருக்களும் லேவியரும் இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரின் திருப் பேழையைச் சுமந்து வரவேண்டித் தங்களைத் தூய்மைப் படுத்திக் கொண்டனர்.
15 பின் லேவியர்கள் ஆண்டவரின் சொற்படி மோயீசன் கற்பித்தது போலக் கடவுளின் திருப் பேழையை அதன் தண்டுகளினால் தூக்கி, தங்கள் தோள்களின் மேல் வைத்துச் சுமந்து வந்தனர்.
16 தாவீது லேவியர் குலத் தலைவர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் சகோதரர்களுக்குள் பாடகரை நியமித்துக் கொள்ளுங்கள். தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் முதலிய இசைக் கருவிகள் முழங்க, மங்கள இசை ஒலிக்க, அவர்கள் தங்கள் குரலை உயர்த்திப் பாடவேண்டும்" என்றார்.
17 அவ்வாறே அவர்கள் யோவேலின் மகன் ஏமானையும், அவன் சகோதரரான பரக்கியாசின் மகன் ஆசாபையும், அவர் தம் சகோதரரான மெராரியின் புதல்வரில் கசாயியாவின் மகன் ஏத்தான் என்பவனையும்,
18 அவர்களோடு அவர்களின் சகோரர்களையும் அமர்த்தினார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக, வாயிற்காவலரான சக்கரியாஸ், பேன், யாசியேல், செமிரமொத், யாகியேல், ஆனி, எலியாப், பனாயியாஸ், மாசியாஸ், ஒபேதெதோம், ஏகியேல் ஆகியோரை நிறுத்தினார்கள்.
19 பாடகரான ஏமான், ஆசாப், ஏத்தான் ஆகியோர் வெண்கலக் கைத் தாளங்களை ஒலிப்பதற்காக நியமிக்கப்பட்டனர்.
20 சக்கரியாஸ், ஓசியேல், செமிரமரெத், யாகியேல், ஆனி, எலியாப், மாசியாஸ், பனாயியாஸ் என்பவர்களோ யாழ்களை மீட்டி வந்தனர்.
21 மத்தாத்தியாஸ், எலீப்பலு, மசேனியாஸ், ஒபேதெதோம், ஏகியேல், ஒசாசியு ஆகியோர் எண்ணரம்புள்ள வீணைகள் ஒலிக்க வெற்றிப் பாடலைப் பாடி வந்தனர்.
22 லேவியருக்குத் தலைவனான கொனேனியாசு பாடல்களைத் தொடங்கும் பாடகர்த் தலைவனாய் இருந்தான். ஏனெனில் அவன் மிகவும் திறமையுள்ளவன்.
23 பாக்கியாசும், எல்கானாவும் திருப்பேழையைக் காவல் புரிந்து வந்தனர்.
24 ஆனால் செபேனியாசு, யோசப்பாத், நாத்தானியேல், அமசாயி, சக்கரியாஸ், பனாயியாஸ், எலியெசார் ஆகிய குருக்கள் கடவுளின் திருப்பேழைக்கு முன் எக்காளம் ஊதிக்கொண்டு வந்தார்கள். ஒபேதெதோமும் ஏகியாசும் பேழையின் வாயிற்காவலராய் இருந்தனர்.
25 இவ்வாறாக, தாவீதும் இஸ்ராயேலில் பெரியவர் யாவரும், ஆயிரவர் தலைவர்களும் அதிபதிகளும், ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஒபேதெதோமின் வீட்டிலிருந்து எடுத்துவர மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.
26 ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்து வந்த லேவியருக்குக் கடவுள் உதவியதால், ஏழு காளைகளும், ஏழு செம்மறிக் கடாக்களும் பலியிடப்பட்டன.
27 தாவீதும் திருப் பேழையைச் சுமந்து வந்த எல்லா லேவியரும் பாடகரும் பாடல்களைத் தொடங்கும் பாடகர்த் தலைவனான கொனேனியாசும் மெல்லிய சணலாடை அணிந்திருந்தனர்.
28 இஸ்ராயேல் மக்கள் அனைவரும் அக்களிப்போடும் தாரைத் தொனியோடும் எக்காளங்களையும் கைத்தாளங்களையும் சுரமண்டலங்களையும் வீணைகளையும் ஒலித்துக் கொண்டு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை எடுத்து வந்தனர்.
29 ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை தாவீதின் நகரை அடைந்த போது, சவுலின் மகள் மிக்கோல் பலகணி வழியாய் உற்றுப் பார்த்தாள். அங்கே தாவீது அரசர் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவதைக் கண்டு அவரைப் பற்றித் தன்னுள் இழிவான எண்ணம் கொண்டாள்.
அதிகாரம் 16
1 இவ்வாறு கடவுளின் திருப் பேழையைக் கொணர்ந்து, தாவீது அதற்காக அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே அதை நிறுவினர். பின் கடவுளின் திருமுன் தகனப்பலிகளையும், சமாதானப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.
2 தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளையும் தாவீது ஒப்புக்கொடுத்து முடிந்தபின், ஆண்டவரின் திருப் பெயரால் மக்களை ஆசீர்வதித்தார்.
3 மேலும் ஆண், பெண் அனைவருக்கும் தனித்தனியே ஓர் அப்பத்தையும், ஒரு மாட்டிறைச்சித் துண்டையும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட மிருதுவான மாவையும் பங்கிட்டுக் கொடுத்தார்.
4 பின் ஆண்டவரின் திருப் பேழைக்கு முன் திருப்பணி புரியவும், அவருடைய செயல்களை நினைவுகூர்ந்து இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளை வாழ்த்திப் போற்றவும் லேவியரில் சிலரை நியமித்தார். அவர்களில் அசாயியைத் தலைவனாயும்;
5 அவனுக்கு அடுத்தபடியாக சக்கரியாசையும்; யாகியேல், செமிரமோத், யேகியேல், மத்தாத்தியாசு, எலியாப், பனாயியாசு, ஒபேதெதோம் ஆகியோரையும்; தம்புரு, சுரமண்டலக் கருவிகளை இசைக்க ஏகியேலையும்;
6 கைத்தாளம் கொட்ட ஆசாப்பையும்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளம் ஊதக் குருக்களாகிய பனாயியாசையும் யாசியேலையும் நியமித்தார்.
7 அன்று ஆண்டவரைப் புகழ்ந்து பாடும் பொருட்டுத் தாவீது தலைவன் ஆசாப்பிடமும், அவனுடைய சகோதரரிடமும் கொடுத்த பாடலாவது:
8 ஆண்டவரைப் புகழுங்கள்; அவரது திரப்பெயரைக் கூவி அழையுங்கள். அவர் தம் செயல்களை மக்களுக்குப் பறைசாற்றுங்கள்.
9 அவருக்குப் பாடல்பாடி, அவருக்கு வீணை மீட்டுங்கள். அவர்தம் வியத்தகு செயல்களை எல்லாம் எடுத்தியம்புங்கள்.
10 அவரது திருப்பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் உவகை கொள்வதாக.
11 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள். அவரை நாளும் நாடுங்கள்.
12 அவர் செய்த அதிசயங்களையும், அருங்குறிகளையும், அவர் தம் நீதித் தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
13 இஸ்ராயேல் குலமே! அவருடைய ஊழியரே! அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களே!
14 அவரே நம் ஆண்டவராகிய கடவுள். அவருடைய நீதித் தீர்ப்புகள் வையகம் எங்கும் விளங்குகின்றன.
15 அவர் செய்த உடன்படிக்கையையும் ஆயிரம் தலைமுறைகளுக்கென்று அவர் கட்டளையிட்டவற்றையும் என்றும் நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாமோடு அவர் செய்து கொண்ட உடன்படிக்கையும்,
16 ஈசாக்குக்கு அவர் இட்ட ஆணையையும் என்றென்றும் நினைவு கூருங்கள்.
17 அதை யாக்கோபுக்குக் சட்டமாகவும், இஸ்ராயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
18 'கானான் நாட்டை உங்களுக்குத் தருவோம்; அதுவே உங்கள் உரிமைச் சொத்து ஆகும்' என்றார்.
19 அப்பொழுது அவர்கள் அந்நியராய், சிறிய தொகையினராய், மிகச்சில குடிகளாய் இருந்தார்கள்.
20 அவர்கள் ஓர் இன மக்களை விட்டு மறு இனமக்களிடமும், ஒரு நாட்டை விட்டு மறு நாட்டிற்கும் சென்றார்கள்.
21 யாரும் அவர்களுக்குத் தீங்கு இழைக்க நீர் விட்டுவிடவில்லை. அவர்கள் பொருட்டு அரசர்களைக் கடிந்து கொண்டீர்.
22 'நாம் அபிஷுகம் செய்தவர்களைத் தொடாதீர்கள்; நாம் தேர்ந்துகொண்ட இறைவாக்கினர்களுக்குத் தீங்கு இழைக்காதீர்கள்' என்றார்.
23 அனைத்துலக மக்களே! ஆண்டவருக்குப் பண் இசைப்பீர். நாள்தோறும் அவரது மீட்பைப் பறைசாற்றுவீர்.
24 மக்களுக்கு அவரது மகிமையை எடுத்துரைப்பீர். எல்லா இனத்தாரிடமும் அவர்தம் வியத்தகு செயல்களை எடுத்தியம்புவீர்.
25 ஏனெனில் ஆண்டவர் பெரியவர்; உயர் புகழ்ச்சிக்கு உரியவர்; தெய்வங்கள் எல்லாவற்றையும் விட ஆண்டவருக்கே அதிகம் அஞ்ச வேண்டும்.
26 மக்களின் தெய்வங்களோ வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணைப் படைத்தவர்.
27 மகிமையும் புகழும் அவரது திருமுன் இருக்கின்றன. வல்லமையும் மகிழ்ச்சியும் அவரது இடத்தில் இருக்கின்றன.
28 மக்கள் குலங்களே, ஆண்டவரைப் புகழுங்கள். மகிமையும் வல்லமையும் அவருக்குச் செலுத்துங்கள்.
29 ஆண்டவரது திருப் பெயருக்குரிய மகிமையைச் செலுத்துங்கள். காணிக்கைகளோடு அவரது திரு முன் வாருங்கள். தூய திருக்கோலத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்.
30 மண்ணகம் முழுவதும் அவருக்கு முன் நடுங்கக்கடவது; ஏனெனில் பூமிக்கு அசையாத அடித்தளமிட்டவர் அவரே.
31 விண்ணகம் மகிழவும், மண்ணகம் அக்களிக்கவும் கடவன. ஆண்டவர் அரசாளுகிறார் என்று மக்களிடையே அவர்கள் உரைக்கட்டும்.
32 கடலும் அதில் வாழ் அனைத்தும் முழங்கட்டும்; வயல்களும் அவற்றில் உள்ள யாவும் களிகூரட்டும்.
33 அப்பொழுது காட்டின் மரங்கள் ஆண்டவர் திருமுன் புகழ் பாடும். ஏனெனில் அவர் உலகை நடுத்தீர்க்க வருவார்.
34 ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளது.
35 எம் மீட்பராகிய கடவுளே! எங்களைக் காப்பாற்றும்; புறவினத்தாரிடமிருந்து எங்களை விடுவித்தருளும்; ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உம் திருப் பெயருக்கு நன்றி கூறுவோம்; உம் திருப்புகழ் பாடி மகிழ்வோம்' என்று சொல்லுங்கள்.
36 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்றென்றும் புகழப்படுவாராக!" அதற்கு மக்கள் எல்லாரும், "ஆமென்" என்றுரைத்து ஆண்டவரைப் புகழ்ந்து பாடினர்.
37 பின் தாவீது ஆண்டவரின் திருப்பேழைக்கு முன்பாக ஆசாப்பையும் அவன் குடும்பத்தாரையும் அவர்கள் நாளும் முறைப்படி திருப்பேழைக்கு முன் இடைவிடாமல் திருப்பணி செய்யக் கட்டளையிட்டார்.
38 ஒபேதெதோமையும், அவன் குடும்பத்தவர் அறுபத்தெட்டுப் பேரையும், இதித்தூவின் மகன் ஒபேதெதோமையும் ஓசாவையும் வாயிற்காவலராக நியமித்தார்.
39 மேலும் காபாவோன் மேட்டில் பள்ளி கொண்ட ஆண்டவரின் உறைவிடத்திற்கு முன் சாதோக்கையும் அவர் சகோதரரையும் குருக்களாக நியமித்தார்.
40 இஸ்ராயேலுக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டவரின் திருச்சட்ட நூலில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் இடைவிடாமல் தகனப் பலி பீடத்தின் மேல் அவர்கள் தகனப் பலிகளை ஒப்புக் கொடுக்கக் கட்டளையிட்டார்.
41 அவர்களோடு ஏமானையும், இதித்தூனையும், பெயர் கூறித் தேர்ந்து கொள்ளப்பட்ட ஏனையோரையும், 'ஆண்டவரின் இரக்கம் என்றென்றும் உள்ளது' என்று சொல்லி அவரைத் துதிக்கப் பணித்தார்.
42 அத்துடன் ஏமான், இதித்தூன் ஆகியோரை, எக்காளங்களையும், கைத்தாளங்களையும், கடவுளைத் துதிப்பதற்குரிய எல்லாவித இசைக்கருவிகளையும் இசைக்கப் பணிந்தார். இதித்தூனின் புதல்வரை வாயிற் காவலராக ஏற்படுத்தினார்.
43 பின் எல்லா மக்களும் தத்தம் வீடு திரும்பினர். தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்கத் தம் இல்லம் ஏகினார்.
அதிகாரம் 17
1 தாவீது தம் அரண்மனையில் குடியேறிய பின்னர் இறைவாக்கினரான நாத்தானை நோக்கி, "இதோ நான் கேதுரு மரவீட்டில் வாழ்கிறேன். ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ தோல் திரைகளின் கீழ் இருக்கின்றதே!" என்றார்.
2 அதற்கு நாத்தான் தாவீதைப் பார்த்து, "நீர் விரும்புவதை எல்லாம் செய்யும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.
3 அன்றிரவே ஆண்டவரின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது.
4 நீ போய் என் ஊழியன் தாவீதிடம், 'ஆண்டவர் திருவுளம் பற்றுகிறதாவது: நாம் தங்கியிருக்க நீ நமக்கு ஒரு கோயிலைக் கட்டப் போவதில்லை.
5 ஏனெனில் நாம் இஸராயேலை (எகிப்தினின்றும்) வெளிக்கொணர்ந்த நாள் முதல் இன்று வரை கோவிலில் தங்கியதில்லை. ஆனால் கூடாரத்தில் வெவ்வேறு இடங்களில்,
6 இஸ்ராயேல் அனைத்தோடும் தங்கியிருந்தோம். நம் மக்களை மேய்க்கும்படி நாம் கட்டளையிட்ட இஸ்ராயேலின் நீதிபதிகளில் எவனையாவது நோக்கி, "நீங்கள் நமக்குக் கேதுரு மரத்தால் கோயில் கட்டாதிருப்பது ஏன்?" என்று நாம் கூறியதுண்டோ?
7 ஆகையால் இப்போது நீ நம் ஊழியன் தாவீதுக்குச் சொல்ல வேண்டியதாவது: நீ மேய்ச்சல் நிலங்களில் மந்ததையை நடத்தி வந்த போது நாம் உன்னை நம் மக்கள் இஸ்ராயேலுக்குத் தலைவனாகத் தேர்ந்து கொண்டோம்.
8 நீ சென்றவிடமெல்லாம் உன்னோடு இருந்தோம். உன் முன்னிலையில் உன் எதிரிகளைக் கொன்றோம். உலகம் புகழ்ந்து கொண்டாடும் ஆன்றோரின் திருப்பெயரை ஒத்த ஒரு பெயரையும் உனக்கு வழங்கினோம்.
9 நம் மக்களாகிய இஸ்ராயேலருக்கு நாம் ஓர் இடத்தைக் கொடுத்தோம். அதில் அவர்கள் நிலையாய் வாழ்வார்கள். இனி அவர்கள் அலைந்து திரியமாட்டார்கள். முன் நிகழ்ந்தது போல் இனி பாவிகளின் கையில் அவர்கள் சிறுமையுற மாட்டார்கள்.
10 நாம் நம் மக்களாகிய இஸ்ராயேலுக்கு நீதிபதிகளை ஏற்படுத்திய காலம் முதல் உன் எதிரிகளைத் தாழ்த்தி வந்தோம். ஆகையால் ஆண்டவர் உனக்காக ஒரு வீட்டைக் கட்டி எழுப்புவார் என்று உனக்கு அறிவிக்கின்றோம்.
11 உன் வாழ்நாளை முடித்து நீ உன் முன்னோரிடம் போக விருக்கும் போது, நாம் உனக்குப் பின் உன் புதல்வருக்குள் ஒருவனை உயர்த்தி அவனது அரசை நிலைநிறுத்துவோம்.
12 அவனே நமக்கு ஆலயத்தைக் கட்டுவான். நாமோ அவனது அரியணையை முடிவில்லாக் காலத்திற்கும் உறுதிப்படுத்துவோம்;
13 நாம் அவனுக்குத் தந்தையாய் இருப்போம். அவன் நமக்கு மகனாய் இருப்பான். உனக்கு முன்னிருந்தவனிடமிருந்து நமது இரக்கத்தை எடுத்துக் கொண்டதுபோல், அவனிடமிருந்து எடுத்து விடமாட்டோம்.
14 அவனை நமது வீட்டிலும், நமது அரசிலும் என்றென்றும் நிலைநாட்டுவோம். அவனது அரியணையும் என்றென்றும் மிகவும் உறுதிபூண்டு விளங்கும்' என்று சொல்" என்றார்.
15 நாத்தான் இந்த வாக்குகள் எல்லாவற்றையும், இந்தக் காட்சிகள் அனைத்தையும் தாவீதிடம் கூறினார்.
16 அப்போது, தாவீது அரசர் ஆண்டவர் திருமுன் சென்று அமர்ந்து கூறியதாவது:"ஆண்டவராகிய கடவுளே! நீர் இத்தகையை பேற்றை அடியேனுக்கு அளிக்க நான் யார்! என் வீடு எம்மாத்திரம்!
17 ஆயினும் அதுவும் உமது பார்வைக்குச் சிறிதாய்த் தோன்றிற்று; எனவே தான் அடியேனுடைய வீட்டைக் குறித்து வரவிருப்பதையும் சொல்லியருளினீர். என் கடவுளாகிய ஆண்டவரே, அடியேனை எல்லா மனிதர்களிலும் சிறந்தவனாக ஆக்கியருளினீர்!
18 நீர் இவ்வாறு தேர்ந்தெடுத்து என்னை மகிமைப்படுத்தியதற்கு ஈடாகத் தாவீது சொல்லக் கூடியது வேறு என்ன உளது?
19 ஆண்டவரே, உம் அடியான் பொருட்டு உமது திருவுளப்படி இத்தகைய மாண்பை எல்லாம் செய்ததுமன்றி உமது வியத்தகு செயல்களை மக்கள். அறியும்படியும் செய்தீர்.
20 ஆண்டவரே, நாங்கள் அறிந்த அனைவரிலும் உமக்கு இணையானவர் யாருமில்லை. உம்மைத் தவிர வேறு கடவுளும் இல்லை.
21 உண்மையில் உம் மக்கள் இஸ்ராயேலருக்கு இணையான வேறு மக்களும் உண்டோ? மண்ணில் இந்த இனத்தை மட்டும் கடவுளாகிய நீர் மீட்கவும், உம் மக்களாக்கவும்., எகிப்திலிருந்து மீட்டுவந்த அம்மக்களின் முகத்தே வேறு இனமக்களை உமது மகத்துவத்தினாலும் உம் மேல் கொண்ட அச்சத்தாலும் துரத்தவும் திருவுளமானீர்.
22 மேலும் உம் மக்களான இஸ்ராயேலரை என்றென்றும் உம் மக்களாகவே வைத்துக்கொண்டீர். ஆண்டவரே, நீரே அவர்களின் கடவுளானீர்.
23 ஆகையால், இப்போது, ஆண்டவரே, நீர் உம் அடியானையும், அவனது வீட்டையும் பற்றிக் கூறிய வாக்கு என்றென்றும் நிலைத்து நிற்கட்டும். நீர் கூறியபடியே செய்தருளும்.
24 உமது திருப்பெயர் என்றென்றும் நிலைநின்று மாண்பு பெறட்டும். சேனைகளின் ஆண்டவர் இஸ்ராயேலின் கடவுள் என்றும், அவருடைய ஊழியன் தாவீதின் வீடு அவர் திருமுன் எக்காலமும் நிலைநிற்கிறது என்றும் சொல்லப்படட்டும்.
25 என் ஆண்டவராகிய கடவுளே, 'நாம் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவோம்' என்று நீரே எனக்கு வெளிப்டுத்தினீர். எனவே உம் அடியானான நான் உமது திருமுன் வேண்டுதல் செய்யத் துணிவு பெற்றுள்ளேன்.
26 ஆண்டவரே, நீரே கடவுள்; நீர் இத்துணை நலன்களை உம் ஊழியனுக்குத் தருவதாய்க் கூறினீரே!
27 உம் ஊழியனது வீடு என்றென்றும் உமது திருமுன் நிலைநிற்கும்படி, அதற்கு உம் ஆசீரை வழங்கத் தொடங்கியுள்ளீர்; ஆண்டவராகிய உமது ஆசீரால் அது என்றென்றும் ஆசீர் பெறும்."
அதிகாரம் 18
1 பின்னர் தாவீது பிலிஸ்தியரை முறியடித்து அவர்களை வீழ்த்தி கேத்தையும் அதற்கடுத்த ஊர்களையும் பிலிஸ்தியரின் கையிலிருந்து கைப்பற்றினார்.
2 மோவாபியரையும் தோற்கடித்தார்; அவர்கள் தாவீதுக்கு அடி பணிந்து அவருக்குக் கப்பம் செலுத்தி வந்தனர்.
3 அக்காலத்தில் தாவீது தம் அரசை யூப்ரட்டீஸ் நதி வரை பரப்ப எண்ணி, ஏமாத் நாட்டைச் சேர்ந்த சோபாவின் அரசன் அதரேசரை வென்றார்.
4 தாவீது அவனிடமிருந்து ஆயிரம் தேர்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும் இருபதாயிரம் காலாட் படையினரையும் கைப்பற்றினார். தமக்கென்று நூறு தேர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றத் தேர்களின் குதிரைகளுக்கெல்லாம் கால் நரம்பை வெட்டிப் போட்டார்.
5 தமாஸ்கு நகர்வாழ் சீரியர்கள் சோபாவின் அரசன் அதரேசருக்கு உதவி செய்ய வந்தனர். தாவீது அவர்களில் இருபத்திரண்டாயிரம் வீரர்களை மாய்த்துப் போட்டார்.
6 சீரியர்களையும் தமக்குப் பணியவைக்கும் எண்ணத்தோடு தமாஸ்குவிலும் படைகளை நிறுத்தினார். சீரியரும் தாவீதுக்கு அடங்கிக் கப்பம் கட்டி வந்தனர். தாவீது சென்றவிடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.
7 மேலும் தாவீது, அதரேசரின் ஊழியர் வைத்திருந்த பொற்கேடயங்களை எடுத்து யெருசலேமுக்குக் கொண்டு வந்தார்.
8 அதரேசருக்குச் சொந்தமாயிருந்த தெபாத், கூன் என்ற நகர்களிலிருந்து ஏராளம் வெண்கலத்தையும் எடுத்து வந்தார். அதைக் கொண்டு தான் சாலமோன் வெண்கலக் கடல் தொட்டியையும், தூண்களையும், வெண்கலத் தட்டுமுட்டுகளையும் செய்வித்தார்.
9 தாவீது சோபாவின் அரசன் அதரேசரின் படை அனைத்தையும் வெட்டி வீழ்த்திய செய்தியை ஏமாத்தின் அரசன் தோவு கேள்விப்பட்டான்.
10 அதரேசரோடு போராடி அவனை முறியடித்து வென்றதற்காகத் தன் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தாவீது அரசருக்குத் தெரிவிக்கும் பொருட்டு, உடனே தன்மகன் அதோராமை அவரிடம் அனுப்பி வைத்தான். ஏனெனில் தோவு அதரேசருக்கு எதிரியாயிருந்தான். மேலும் பொன், வெள்ளி, வெண்கலத்தாலான எல்லாவிதத் தட்டுமுட்டுகளையும் அவருக்கு அனுப்பி வைத்தான்.
11 தாவீது அரசர் இவற்றையும் தாம் இதுமேயர், மோவாபியர், அம்மோனியர், பிலிஸ்தியர், அமலேக்கியர் முதலிய இனத்தாரிடமிருந்து கொண்டுவந்திருந்த பொன்னையும், வெள்ளியையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்.
12 சார்வியாவின் மகன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கில் பதினெட்டாயிரம் ஏதோமியரை முறியடித்தான்.
13 தாவீது ஏதோமில் காவல்படைகளை நிறுத்தினார். அதனால் இதுமேயர் அனைவரும் அவருக்கு அடிமைகளாயினர். தாவீது சென்றவிடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.
14 ஆகையால் தாவீது இஸ்ராயேல் அனைத்தின் மேலும் ஆட்சி செலுத்தித் தம் குடிகளுக்கெல்லாம் நீதி வழங்கி வந்தார்.
15 சார்வியாவின் மகன் யோவாபு படைத்தலைவனாய் இருந்தான். அகிலூதுவின் மகன் யோசபாத் பதிவாளனாய் அலுவல் புரிந்து வந்தான்.
16 அக்கிதோபின் மகன் சாதோக்கும், அபியாத்தாரின் மகன் அக்கிமலேக்கும் குருக்களாய் விளங்கினர். சூசா என்பவனோ எழுத்தனாயிருந்தான்.
17 யோயியாதாவின் மகன் பனாயியாசு, கெரேத்தியர் படைக்கும் பெலேத்தியர் படைக்கும், தலைவனாய் இருந்தான். தாவீதின் புதல்வர் அரசர் முன்னிலையில் முதலிடங்களை வகித்து வந்தனர்.
அதிகாரம் 19
1 சிறிது காலத்திற்குப் பின் அம்மோனிய அரசன் நாவாசு உயிர் நீத்தான். அவனுடைய மகன் அவனுக்குப் பின் அரசானானான்.
2 அப்போது, தாவீது, "நாவாசின் மகன் ஆனோனுக்குத் தயவு காட்டுவேன். ஏனெனில் அவனுடைய தந்தை எனக்குத் தயவு காட்டியிருக்கிறான்" என்று கூறி, அவன் தந்தையின் மரணத்தின் பொருட்டு அவனுக்கு ஆறுதல் கூறத் தூதவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் ஆனோனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியரின் நாட்டை வந்தடைந்தனர்.
3 அப்பொழுது அம்மோனியரின் தலைவர்கள் ஆனோனனை நோக்கி, "தாவீது உமக்கு அத்தூதுவர்களை அனுப்பியது உம் தந்தை மேல் அவருக்குள்ள மதிப்பால் என்று நீர் எண்ண வேண்டாம். உமது நாட்டை ஆராயவும் நன்கு அறிந்து உளவு பார்க்கவுமே அவர் ஊழியர் உம்மிடம் வந்துள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ளும்" என்று கூறினார்.
4 எனவே தாவீதின் ஊழியரை ஆனோன் பிடித்து மொட்டையடித்துத் தாடியைச் சிரைத்து தொடையிலிருந்து பாதம் வரை அவர்களின் உடைகளைக் கத்தரித்து விட்டு அவர்களை அனுப்பி வைத்தான்.
5 அவர்களுக்கு நேர்ந்தது பற்றித் தாவீதுக்கு உடனே செய்தி கொண்டு வரப்பட்டது. அவர்கள் மிகவும் கேவலமடைந்திருந்தது கண்டு தாவீது அவர்களைச் சந்திக்க ஆட்களை அனுப்பினார். தாடி வளரும் வரை அவர்கள் எரிக்கோவில் தங்கியிருக்கவும், அதன்பின் திரும்பிவரவும் செய்தார்.
6 தங்கள் இனத்தார் தாவீதின் பகையைத் தேடிக் கொண்டது கண்டு ஆனோனும் அம்மோனியரும் மெசபொத்தோமியாவிலிருந்தும், மாக்காவைச் சேர்ந்த சீரியா, சோபாவிலிருந்தும் தேர்களையும் குதிரை வீரர்களையும் கூலிக்கு அமர்த்தும்படி ஆயிரம் தாலந்து வெள்ளியை அனுப்பி வைத்தார்கள்.
7 அவ்வாறே முப்பத்திரண்டாயிரம் தேர்களையும், மாக்காவின் அரசனையும், அவன் குடிகளையும் அணிவகுத்து நடத்திச் சென்றனர்: அவர்கள் மேதபா பகுதிக்கு வந்து அங்கே பாளையம் இறங்கினார்கள். அம்மோனியரும் தங்கள் நகர்களிலிருந்து திரண்டு போருக்கு வந்தனர்.
8 தாவீது அதைக் கேள்வியுற்ற போது யோவாபையும், ஆற்றல் மிக்க வீரர்கள் அடங்கிய தம் படை முழுவதையும் அனுப்பினார்.
9 அம்மோனியர் புறப்பட்டு நகர வாயிலருகில் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்கு உதவியாக வந்திருந்த அரசர்களோ தனியாய்த் திறந்த வெளியில் நின்று கொண்டிருந்தனர்.
10 யோவாப் தனக்கு முன்னும் பின்னும் போர் மூளவிருப்பதை அறிந்த போது, இஸ்ராயேல் அனைத்திலுமிருந்து மிக்க ஆற்றல் படைத்த மனிதரைத் தேர்ந்து எடுத்து, அவர்களைச் சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.
11 மற்றப் படைவீரரை அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி அவர்களைத் தன் சகோதரன் அபிசாயியின் பொறுப்பில் விட்டுவிட்டான்.
12 யோவாப் தன் சகோதரனைப் பார்த்து, "சீரியர் என்னை விட வலிமை வாய்ந்தவர்களாய் இருந்தால் நீ எனக்கு உதவியாக வரவேண்டும். அம்மோனியர் உன்னை விட வலிமை வாய்ந்தவர்களாய் இருந்தாலோ நான் உனக்கு உதவியாக வருவேன். திடமாயிரு;
13 நம் மக்களுக்காகவும் நம் கடவுளின் நகர்களுக்காகவும் வீரத்துடன் போரிடுவோம். ஆண்டவர் திருவுளப்படியே எல்லாம் நடக்கட்டும்" என்றான்.
14 பின்பு யோவாபும் அவனோடிருந்த வீரரும் சீரியரோடு போரிட, அவர்கள் அவனுக்குப் புறமுதுகு காட்டி ஓடினர்.
15 சீரியர் தோற்று ஓடுவதை அம்மோனியர் கண்டு, அவர்களும் யோவாபின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாகச் சிதறி ஓடி நகருக்குள் நுழைந்து கொண்டார்கள். யோவாப் யெருசலேமுக்குத் திரும்பி வந்தான்.
16 தாங்கள் இஸ்ராயேலரால் முறியடிக்கப் பட்டதைக் கண்ட சீரியரோ, தூதுவர்களை அனுப்பி நதிக்கு அப்பால் இருந்த சீரியர்களை அழைத்து வந்தனர். ஆதரேசரின் படைத் தலைவன் சோபாக் அவர்களுக்குத் தலைவனாய் இருந்தான்.
17 அது தாவீதுக்கு அறிவிக்கப் பட்டதும், அவர் இஸ்ராயேலர் அனைவரையும் திரட்டிவந்து யோர்தானைக் கடந்து, அவர்களுக்கு அருகில் வந்து அவர்களுக்கு எதிராகத் தம் படையை அணிவகுத்து நிறுத்தினார்.
18 உடனே போர் ஆரம்பித்தது. சீரியர் இஸ்ராயேலருக்குப் புறமுதுகுகாட்டி ஓடினர். சீரியர் படையைச் சேர்ந்த ஏழாயிரம் குதிரைப் படையினரையும் நாற்பதாயிரம் காலாட் படையினரையும் படைத்தலைவன் சோபாக்கையும் தாவீது கொன்றார்.
19 ஆதரேசரின் ஊழியரோ, தாங்கள் இஸ்ராயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்டு அவருக்கு அடிபணிந்தனர்; தாவீதுடன் சமாதானம் செய்து கொண்டனர். அது முதல் அம்மோனியருக்கு உதவி செய்யச் சீரியர் என்றுமே துணிந்ததில்லை.
அதிகாரம் 20
1 ஓராண்டு உருண்டோடியது. அரசர்கள் போருக்குப் புறப்பட வழக்கமான காலத்தில் யோவாப் தன் படை பலத்தோடு, அம்மோனியரின் நாட்டை அழித்துப் போட்டான். பின் இராப்பாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான். யோவாப் இராப்பாவைத் தாக்கி அழித்த போது தாவீது யெருசலேமில் இருந்தார்.
2 தாவீது மெல்கோம் அணிந்திருந்த முடியை எடுத்துக் கொண்டார். அதில் ஒரு தாலந்து எடையுள்ள பொன் இருந்தது. விலையுயர்ந்த மணிகள் அதில் பதிக்கப்பட்டிருந்தன. தாவீது அதை அறிந்து, அதைக் கொண்டு தமக்கொரு முடியைச் செய்துகொண்டார். மேலும் நகரினின்றும் ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் கொண்டு சென்றார்.
3 பிறகு அங்குக் குடியிருந்த மக்களைச் சிறைப்படுத்தி, வாள், கடப்பாரை, கோடரி முதலியவற்றால் அவர்கள் வேலைசெய்ய வைத்தார். தாவீது அம்மோனியரின் எல்லா நகர்களுக்கும் இவ்விதமே செய்து தம் மக்களனைவருடனும் யெருசலேமுக்குத் திரும்பி வந்தார்.
4 பிறகு காசேரில் பிலிஸ்தியரோடு போர் நிகழ்ந்தது. அதில் குசாத்தி குலத்தவனான சபாக்காயி என்பவன் அரக்க இனத்தைச் சேர்ந்த சாப்பாயியைக் கொன்று போட்டான். அதனால் அவர்களுக்கு அவமானம் ஏற்பட்டது.
5 பிலிஸ்தியரோடு வேறொரு போரும் மூண்டது. அதில் யாயீரின் மகனான எல்கனான் கேத் நாட்டைச் சேர்ந்த கோலியாத்தின் சகோதரன் லாமியைக் கொன்றான். இவனது ஈட்டியின் பிடியானது நெசவாளரின் படைமரம் போலிருந்தது.
6 மேலும் கேத் என்ற ஊரிலே மற்றோரு போர் நடந்தது. அவ்வூரில் மிகவும் உயர்ந்த மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒவ்வோரு கையிலும் காலிலும் ஆறு ஆறு விரல்களாக இருபத்து நான்கு விரல்கள் இருந்தன. அவனும் ராப்பாவின் இனத்தைச் சேர்ந்தவனே.
7 அவன் இஸ்ராயேலைப் பழித்துரைத்தான். எனவே அவனைத் தாவீதின் சகோதரனான சாமாவின் மகன், யோனத்தான் கொன்று போட்டான். கேத்தில் இருந்த ராப்பாவின் புதல்வர்கள் தாவீதின் கையாலும், அவர் ஊழியர்களின் கையாலும் மடிந்தனர்.
அதிகாரம் 21
1 சாத்தான் இஸ்ராயேலுக்கு எதிராக எழுந்து இஸ்ராயேலரைக் கணக்கிடுமாறு தாவீதைத் தூண்டி விட்டது.
2 அவ்வாறே தாவீது யோவாபையும், படைத் தலைவர்களையும் நோக்கி, "நீங்கள் போய்ப் பெத்சபே முதல் தாண் வரை வாழ்ந்து வரும் இஸ்ராயேல் மக்களைக் கணக்கிட்டு, தொகையை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதை அறிய வேண்டும்" என்றார்.
3 அதற்கு யோவாப், "ஆண்டவர் தம் மக்களை இப்போது இருப்பதைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாய்ப் பெருகச் செய்வாராக. என் தலைவராகிய அரசே! எல்லாரும் உம் ஊழியரல்லரோ? பின் ஏன் தாங்கள் மக்களின் தொகைக் கணக்கு எடுக்க வேண்டும்? இதன் மூலம் ஏன் இஸ்ராயேலின் மேல் பாவம் வருவிக்க வேண்டும்?" என்றான்.
4 ஆனால் தம் கட்டளையை அரசர் யோவாப் மேல் திணித்தார். எனவே யோவாப் புறப்பட்டுச் சென்று இஸ்ராயேல் முழுவதும் சுற்றி விட்டு, யெருசலேமுக்குத் திரும்பி வந்தான்.
5 தான் கணக்கிட்ட மக்களின் தொகையைத் தாவீதிடம் கொடுத்தான். இஸ்ராயேலில் வாளேந்தும் வீரர் பதினொரு லட்சம் பேரும், யூதாவிலே போர்வீரர் நான்கு லட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தனர்.
6 ஆனால் அரசரின் கட்டளையை வேண்டா வெறுப்பாய் நிறைவேற்றினபடியால் லேவி, பென்யமீன் குலத்தினரை யோவாப் கணக்கிடவில்லை.
7 இக்கணக்கெடுப்பு கடவுளுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர் இஸ்ராயேலரைத் தண்டித்தார்.
8 தாவீது கடவுளை நோக்கி, "நான் இக்காரியத்தைச் செய்து மிகவும் பாவியானேன். மதிகெட்டே இதைச் செய்தேன். ஆகையால் அடியேனின் அக்கிரமத்தை அருள்கூர்ந்து மன்னித்தருள வேண்டும்" என்று வேண்டினார்.
9 அப்போது ஆண்டவர் தாவீதின் இறைவாக்கினரான காத் என்பவருடன் பேசி,
10 நீ தாவீதிடம் போய், 'ஆண்டவர் திருவுளம் பற்றுகிறதாவது: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறோம்; உன் விருப்பப்படி அவற்றில் ஒன்றைத் தேர்ந்துகொள், அதை நாம் உனக்குச் செய்வோம்' என்று சொல்" என்றார்.
11 காத் தாவீதிடம் வந்து அவரை நோக்கி,
12 ஆண்டவரின் திருவாக்கைக் கேளும்: மூன்றாண்டுகளுக்குப் பஞ்சம் வரும்; அல்லது உம் எதிரிகளை வெல்ல இயலாது, அவர்களுக்கு முன் மூன்று மாதம் புறமுதுகுகாட்டி ஓடுவாய்; அல்லது ஆண்டவரின் வாளாகக் கொள்ளை நோய் நாட்டில் மூன்று நாள் நிலவும்; இஸ்ராயேல் நாடெங்கணும் ஆண்டவரின் தூதர் மக்களைக் கொல்லுவார்: இம்மூன்றில் எதை நீர் தேர்ந்து கொள்ளுகிறீர்? என்னை அனுப்பினவருக்கு நான் பதில் சொல்லுமாறு அதைப்பற்றி எண்ணிப் பாரும்" என்றார்.
13 தாவீது காத்தை நோக்கி, "துன்பங்கள் என்னை நாற்புறத்திலுமே நெருக்குகின்றன. ஆனால் மனிதர் கையில் சரண் அடைவதை விட ஆண்டவரின் கைகளில் நான் சரண் அடைவதே மேல். ஏனெனில், அவர் மிகவும் இரக்கம் கொண்டவர்" என்றார்.
14 ஆகையால் ஆண்டவர் இஸ்ராயேலின் மேல் கொள்ளைநோயை அனுப்பினார். அதனால் இஸ்ராயேலருள் எழுபதினாயிரம்பேர் மடிந்தனர்.
15 யெருசலேமையும் தண்டிக்க ஆண்டவர் ஒரு தூதரை அனுப்பினார். அத்தூதுவர் நகரைத் தண்டித்த போது ஆண்டவர் அந்த மாபெருந் தீங்கைப் பார்த்து மனமிரங்கினார். எனவே உயிர்களைப் பறித்துக் கொண்டிருந்த தூதரை நோக்கி, "போதும்; இப்போது உன் கையை நிறுத்து" என்று கட்டளையிட்டார். ஆண்டவரின் தூதர் அப்பொழுது செபுசையனான ஒர்னானுடைய களத்தருகே நின்று கொண்டிருந்தார்.
16 தாவீது தம் கண்களை உயர்த்தி, விண்ணிற்கும் மண்ணிற்கும் நடுவே ஆண்டவரின் தூதர் நிற்பதையும், அவரது கையில் இருந்தவாள் யெருசலேமை நோக்கி நீட்டப்பட்டிருந்ததையும் கண்டார். அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் கோணியாடை உடுத்திக் கொண்டவர்களய்த் தரையில் நெடுந்தெண்டனிட்டு விழுந்தனர்.
17 அப்பொழுது தாவீது கடவுளை நோக்கி, "மக்கள் தொகையைக் கணக்கிடக் கட்டளையிட்டவன் நான் அல்லவா? நானே பாவம் செய்தவன், தீமை புரிந்தவனும் நானே. இந்த மந்தை என்ன குற்றம் செய்தது? என் ஆண்டவராகிய கடவுளே, உமது கரம் எனக்கும் என் தந்தை வீட்டாருக்கும் எதிராய்த் திரும்பட்டும். உம் மக்களைத் தண்டியாதேயும்" என்று மன்றாடினார்.
18 அப்பொழுது ஆண்டவரின் தூதர் காத்தை நோக்கி, "தாவீது செபுசையனான ஒர்னானுடைய களத்திற்குச் சென்று அங்கு ஆண்டவராகிய கடவுளுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டச்சொல்" என்றார்.
19 ஆண்டவர் திருப்பெயரால் காத் கூறியிருந்தபடியே தாவீதும் சென்றார்.
20 ஒர்னானும் அவனுடைய நான்கு புதல்வரும் அந்நேரத்தில் களத்தில் போரடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நிமிர்ந்து தூதரைக் கண்டவுடன் ஒளிந்து கொண்டனர்.
21 பின்னர் தாவீது தம்மிடம் வருகிறதைக் கண்டு ஒர்னான் களத்திலிருந்து அவருக்கு எதிர்கொண்டு போனான்; தரையில் விழுந்து அவரை வணங்கினான்.
22 தாவீது அவனை நோக்கி, "உனது களத்தை எனக்குக் கொடு, கொள்ளைநோய் மக்களை விட்டு நீங்கும்படி இக்களத்திலே நான் ஆண்டவருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும். அதன் விலையை உனக்குத் தந்து விடுகிறேன்" என்றார்.
23 ஒர்னான் தாவீதை நோக்கி, "அரசராகிய என் தலைவர் அதை வாங்கிகொண்டு தம் விருப்பப்டியெல்லாம் செய்வாராக. இதோ தகனப்பலிகளுக்கு மாடுகளையும் விறகுவண்டிகளையும், பலிக்குப் பயன்படும் கோதுமையையும், கொடுக்கிறேன். எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு தருகிறேன், எடுத்துக்கொள்ளும்" என்றான்.
24 அதற்கு தாவீது அரசர், "அப்படியன்று, நான் அதற்கு உள்ள விலையைத் தந்து விடுகிறேன். உன்னுடையதை நான் இலவசமாய்ப் பெற்றுக் கொண்டு செலவின்றி ஆண்டவருக்குத் தகனப்பலிகளைச் செலுத்தமாட்டேன்" என்றார்.
25 அவ்வாறே தாவீது அறுநூறு சீக்கல் நிறை பொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து, அந்நிலத்தை வாங்கினார்.
26 பின் அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பி, அதிலே தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளையும் ஒப்புக் கொடுத்து ஆண்டவரைத் தொழுதார். ஆண்டவர் வானிலிருந்து தகனப் பலிபீடத்தின் மேல் நெருப்பை இறங்கச்செய்து, அவரது மன்றாட்டைக் கேட்டருளினார்.
27 அப்பொழுது ஆண்டவரின் கட்டளைப்படி தூதர் தம் வாளை உறையில் போட்டார்.
28 செபுசையனான ஒர்னானின் களத்திலே ஆண்டவர்தம் மன்றாட்டைக் கேட்டருளினார் என்று தாவீது கண்டு அங்கே தாமே பலிகளைச் செலுத்தினார்.
29 பாலைவனத்தில் மோயீசன் கட்டியிருந்த ஆண்டவரின் திருக் கூடாரமும், தகனப் பலிகளின் பீடமும் அச்சமயம் கபாவோனின் மேட்டில் இருந்தன.
30 அங்கிருந்த ஆண்டவரின் பீடத்திற்குச் சென்று செபம் செய்யத் தாவீதால் கூடவில்லை. ஏனெனில் ஆண்டவரின் தூதர் தாங்கியிருந்த வாளைக் கண்டு பேரச்சம் கொண்டிருந்தார்.
அதிகாரம் 22
1 அப்பொழுது தாவீது, "கடவுளாகிய ஆண்டவருடைய ஆலயம் இதுவே; இஸ்ராயேல் மக்கள் பலியிட வேண்டிய தகனப் பலிபீடமும் இதுவே" என்றார்.
2 பின்பு தாவீது இஸ்ராயேல் நாட்டிலே வாழ்ந்து வந்த அந்நியரைக் கூடி வரச் செய்தார். கடவுளின் ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்களை வெட்டிப் பொளியுமாறு கல்வெட்டுவோரை அவர்களுள் தேர்ந்து கொண்டார்.
3 வாயில்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணி, கீல், முளை முதலியன தயாரிப்பதற்கு ஏராளமான இரும்பையும், அளவிட முடியாத வெண்கலத்தையும், எண்ணற்ற கேதுரு மரங்களையும் தயார் செய்தார் தாவீது.
4 சீதோனியரும் தீரியரும் தாவீதிடம் கொண்டுவந்த கேதுரு மரங்கள் எண்ணிலடங்கா.
5 என் மகன் சாலமோன் சிறுவன்; அனுபவம் இல்லாதவன். நான் ஆண்டவருக்குக் கட்ட விரும்புகின்ற ஆலயமோ எல்லா நாடுகளிலும் பேரும் புகழும் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். ஆகையால் அதற்கு வேண்டியவற்றை எல்லாம் நானே தயாரித்து வைப்பேன்" என்று கூறி, தாவீது சாகுமுன் ஆலயத்திற்குத் தேவையான அனைத்தையும் சேகரித்து வைத்தார்.
6 மேலும் தம் மகன் சாலமோனை அழைத்து, இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுமாறு அவனைப் பணிந்தார்.
7 தாவீது சாலமோனை நோக்கி, "என் மகனே, நான் என் கடவுளாகிய ஆண்டவரின் திருப் பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட எண்ணியிருந்தேன்.
8 ஆனால் ஆண்டவர் என்னுடன் பேசி, 'நீ அதிகமான குருதியைச் சிந்தியுள்ளாய். பற்பல போர்களைத் தொடுத்துள்ளாய். என் திருமுன் மிகுதியான இரத்தத்தைச் சிந்தியுள்ள நீ நமது திருப்பெயருக்கு ஆலயத்தைக் கட்டக்கூடாது.
9 இதோ உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் அமைதியின் அன்பனாய் இருப்பான். சுற்றிலுமுள்ள அவனுடைய பகைவரின் தொல்லைகளினின்று நாம் அவனை விடுவித்து, அவன் அமைதியாய் இருக்குமாறு செய்வோம். இதன் காரணமாக அவன் அமைதியின் அண்ணல் என அழைக்கப்படுவான். அவனது காலம் முழுவதும் இஸ்ராயேலுக்குச் சமாதானமும் அமைதியும் அருளுவோம்.
10 அவனே நமது திருப் பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் நமக்கு மகனாய் இருப்பான்; நாம் அவனுக்குத் தந்தையாயிருப்போம். இஸ்ராயேல் மீது அவனது ஆட்சியை என்றென்றும் நிலை நிறுத்துவோம்' என்றார்.
11 இப்போது, என் மகனே, ஆண்டவர் உன்னோடு இருப்பாராக! அதனால் ஆண்டவர் உன்னைப் பற்றிக் கூறியது போல நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுவதில் வெற்றி காண்பாய்.
12 நீ இஸ்ராயேலை ஆண்டு உன் கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டத்தின்படி ஒழுகுமாறு ஆண்டவர் உனக்கு ஞானத்தையும் விவேகத்தையும் கொடுத்தருளுவாராக.
13 ஏனெனில், ஆண்டவர் மோயீசன் மூலம் இஸ்ராயேலுக்குக் கொடுத்த கட்டளைகளையும் சட்டங்களையும் நீ கடைப்பிடித்து ஒழுகினால் உனக்கு வெற்றி கிட்டும். நெஞ்சுத் துணிவுடன் திடமாயிரு; அஞ்சாமலும் கலங்காமலும் இரு.
14 இதோ நான் என் ஏழ்மை நிலையில் ஆண்டவரின் ஆலயச் செலவுக்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியும், எராளமான வெண்கலமும் இரும்பும் சேகரித்து வைத்துள்ளேன். நீ இன்னும் அதிகம் சேகரிக்க வேண்டும்.
15 வேலை செய்ய ஆட்களும், கல்வெட்டுவோர், கொத்தர், தச்சர் ஆகியோரும் மற்றும் எல்லாவிதத் தொழிலிலும் திறமை வாய்ந்தவர்களும் உனக்கும் ஏராளமாய் இருக்கின்றனர்.
16 பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிற்கும் அளவே கிடையாது. எனவே தாமதியாமல் வேலையைத் தொடங்கு. ஆண்டவர் உன்னோடு இருப்பார்" என்று கூறினார்.
17 தம் மகன் சாலமோனுக்கு உதவி செய்யும்படி இஸ்ராயேலின் தலைவர்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டார்.
18 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருக்கிறார்; உங்களைச் சுற்றிலும் அமைதியைத் தந்திருக்கிறார்; உங்கள் எதிரிகள் அனைவரையும் உங்கள் கையில் ஒப்புவித்துள்ளார்; ஆண்டவர் முன்பாகவும் அவருடைய மக்களின் முன்பாகவும் நாடு அமைதியாய் இருந்து வருகிறது. இது கண்கூடு.
19 ஆகையால் உங்கள் கடவுளாகிய ஆண்டவரையே நாடும்படி உங்கள் இதயங்களையும் உங்கள் ஆன்மாக்களையும் தயாரியுங்கள். எனவே நீங்கள் எழுந்து, கடவுளாகிய ஆண்டவருக்குப் புனித இல்லத்தைக் கட்டுங்கள். ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டியையும், ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தட்டுமுட்டுகளையும், ஆண்டவரது திருப்பெயருக்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுவந்து வையுங்கள்" என்றார்.
அதிகாரம் 23
1 தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது தம் மகன் சாலமோனை இஸ்ராயேலுக்கு அரசனாக்கினார்.
2 இஸ்ராயேலின் எல்லாத் தலைவர்களையும் குருக்களையும் லேவியர்களையும் கூடி வரச்செய்தார்.
3 முப்பதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள லேவியர்களின் எண்ணிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் முப்பெத்தெட்டாயிரம் பேர் எனத் தெரிய வந்தது.
4 அவர்களில் இருபத்து நாலாயிரம் பேர் ஆண்டவரின் ஆலயத் திருப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆறாயிரம் பேர் அதிகாரிகளும் நடுவர்களுமாய் நியமிக்கப்பட்டனர்.
5 நாலாயிரம் பேர் வாயிற் காவலராகவும், இன்னும் நாலாயிரம் பேர் தாவீது அரசர் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளை மீட்டி ஆண்டவரைப் போற்றவும் நியமிக்கப்பட்டனர்.
6 தாவீது அவர்களை லேவிய மக்களான கெர்சோன், காத், மெராரி என்னும் குலவரிசைகளின்படி பிரித்தார்.
7 கெர்சோனின் புதல்வருள் லேதானும் செமேயியும்,
8 லேதானின் புதல்வர்களுள் தலைவனான யகியேல், சேத்தான், யோவேல் ஆகிய மூவர்.
9 சலோமித், ஓசியேல், ஆரான் ஆகிய மூவரும் செமேயியின் புதல்வர். இவர்கள் லேத்தான் குடும்பங்களின் தலைவராய் இருந்தனர்.
10 செமேயியின் புதல்வர்: லெகேத், சீசா, யாவுஸ், பாரியா ஆகியோர்.
11 இவர்களுள் லெகேத் மூத்தவன்; சீசா இரண்டாம் புதல்வன். ஆனால் யாவுஸ், பாரியா என்பவர்களுக்குப் பல பிள்ளைகள் இல்லாததால் ஒரே குடும்பமாகவும், ஒரே பிரிவாகவும் அவர்கள் கணக்கிடப்பட்டனர்.
12 காத்தின் புதல்வர் அம்ராம், ஈசார், எப்ரோன், ஓசியேல் என்னும் நால்வர்.
13 அம்ராமின் மக்கள் ஆரோனும் மோயீசனுமாவர். ஆரோனும் அவருடைய புதல்வர்களும் திருவிடத்தில் திருப்பணி புரிவதற்கும், என்றென்றும் ஆண்டவர் திருமுன் தத்தம் பிரிவுப்படி தூபம் காட்டவும், அவரது திருப் பெயரை என்றென்றும் போற்றிப் புகழவும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
14 கடவுளின் மனிதரான மோயீசனின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்தே கணக்கிடப்பட்டனர்.
15 மோயீசனுடைய புதல்வர் பெயர் கெர்சோம், எலியெசார் என்பனவாம்.
16 கெர்சோமின் மக்களில் மூத்தவன் பெயர் சுபுவேல்.
17 எலியெசாரின் மக்களில் மூத்தவன் பெயர் ரொகோபியா. எலியெசாருக்கு வேறு மக்கள் இல்லை. ரொகோபியாவிற்குப் பல புதல்வர்கள் இருந்தனர்.
18 இசாருடைய மக்களில் மூத்தவன் பெயர் சலோமித்.
19 எபிரோனின் மக்களில் எரீயா மூத்தவன். இரண்டாவது அமாரியாஸ், மூன்றாவது யகாசியேல், நான்காவது எக்மான்.
20 ஒசியேலின் புதல்வரில் மிக்கா மூத்தவன், அடுத்தவன் எசியா.
21 மெராரியின் புதல்வர்: மொகோலியும் மூசியும். மொகோலியின் புதல்வர் எலியெசாரும் சீசுமாம்.
22 எலியேசார் இறந்த போது அவனுக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் இல்லை. அவர்களின் சகோதரனாகிய சீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர்.
23 மூசியின் புதல்வர் மொகோலி, எதேர், எரிமோத் என்ற மூவர்.
24 தங்கள் உறவினர்களுக்கும் குடும்பங்களுக்கும் தலைவர்களும் லேவியின் புதல்வருமான இவர்கள் இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களாயிருந்தனர்; தங்கள் பெயர் வரிசைப்படி பதிவு செய்யப்பட்டு, ஆண்டவரின் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
25 ஏனெனில், "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அருளி, யெருசலேமில் என்றென்றும் குடியிருக்கின்றார்.
26 இனி லேவியர்கள் திருக் கூடாரத்தையும் அதன் பணிக்கடுத்த தட்டு முட்டுகளையும் சுமக்க வேண்டியதில்லை" என்று தாவீது சொன்னார்.
27 தாவீதின் இறுதிக் கட்டளையின்படி, லேவியருள் இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதினரே எண்ணப்பட்டனர்.
28 அவர்கள் ஆண்டவரின் ஆலயத் திருப்பணியில் ஆரோனின் புதல்வர்களுக்கு உதவி செய்ய நியமிக்கப் பெற்றார்கள்; மண்டபங்களையும் உள் அறைகளையும் கவனித்து வந்தார்கள்: புனித பணிமுட்டுகளைச் சுத்தம் செய்து வந்தார்கள்; இன்னும் ஆண்டவரின் வழிபாட்டுக்கடுத்த எல்லா வேலைகைளையும் செய்து வந்தார்கள்.
29 குருக்கள் காணிக்கை அப்பம், போசனப் பலிகளுக்கு வேண்டிய மிருதுவான மாவு, புளியாத அப்பம். சட்டிகளில் சுடப்பட்டது, பொரிக்கப்பட்டது ஆகிய அனைத்தையும் தயாரித்து வந்தார்கள்; அத்தோடு இவற்றின் அளவையும் நிறையையும் கவனித்து வந்தார்கள்.
30 லேவியர்களோ காலையிலும் மாலையிலும் ஆண்டவரைப் போற்றிப் புகழவேண்டும்.
31 அத்தோடு ஓய்வுநாள் திருநாட்களிலும், அமாவாசை நாட்களிலும், மற்றக் கொண்டாட்டங்களின் போதும், ஆண்டவருக்குத் தகனப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் போதும் குறிப்பிட்டவர்கள் தத்தம் பிரிவுப்படி ஆண்டவர் திருமுன் எப்பொழுதும் நின்று கொண்டிருக்க வேண்டும்.
32 இவ்வாறு அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தை அடுத்த ஒழுங்கு முறைகளையும், திருவிடத்தின் வழிபாட்டு முறைகளையும், கடைப்பிடித்து வந்தார்கள். மேலும் ஆண்டவரின் ஆலயத்திலே திருப்பணி புரிந்து வந்த தங்கள் சகோதரரான ஆரோனின் புதல்வருக்கும் அவர்களது திருப்பணியில் உதவி புரிந்து வந்தார்கள்.
அதிகாரம் 24
1 ஆரோன் புதல்வரின் பிரிவுகளாவன: ஆரோனின் புதல்வர், நதாப், அபியு, எலியெசார், ஈத்தமார், ஆகியோர்.
2 நாதாபும் அபியுவும் தங்கள் தந்தைக்கு முன்னரே பிள்ளைப் பேறின்றி இறந்து போயினர். எலியெசார், ஈத்தமார் ஆகியோர் குருக்களாகப் பணி புரிந்தனர்.
3 தாவீது, எலியெசாரின் மக்களில் ஒருவனான சாதோக்கினுடையவும், ஈத்தமாரின் மக்களில் ஒருவனான அக்கிமெலேக்கினுடையவும் உதவியால், அவர்களைப் பிரிந்து அவர்கள் செய்ய வேண்டிய பணிக்குத்தக அவர்களை வரிசைப்படி அமைத்தார்.
4 ஆனால் ஈத்தமாரின் மக்களை விட எலியெசாரின் மக்களுக்குள் பலர் தலைவர்களாய் இருந்தனர். எலியெசாரின் புதல்வரில் பதினாறு பேர் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், ஈத்தமாரின் புதல்வரில் எட்டுப் பேர் குடும்பத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
5 எலியெசார், ஈத்தமார் ஆகிய இருவரின் குடும்பங்களிலும் திருத்தலத்தைச் சார்ந்த தலைவர்களும் கடவுளின் திருப்பணியைச் சார்ந்த தலைவர்களும் இருந்தனர். எனவே இரு குடும்பங்களையும் சீட்டுப் போட்டே பிரித்தார்கள்.
6 நத்தானியேலின் மகனும் லேவியர்களின் எழுத்தனுமான செமேயியாஸ் என்பவன் அரசர், தலைவர்கள், சாதோக் என்னும் குரு, அபியதாரின் மகன் அக்கிமெலேக், குருக்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு முன்பாக, அவர்களைப் பதிவு செய்து கொண்டான். எலியெசாரின் குடும்பத்திற்கும் ஈத்தமாரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.
7 முதலாவது சீட்டு யோய்யரீப் என்பவனுக்கும், இரண்டாவது ஏதா என்பவனுக்கும், முன்றாவது ஆரீமுக்கும்,
8 நான்காவது சேயோரிமுக்கும்,
9 ஐந்தாவது மெல்கியாவுக்கும், ஆறாவது மைமானுக்கும்,
10 ஏழாவது அக்கோசுக்கும், எட்டாவது அபியாவுக்கும்,
11 ஒன்பதாவது ஏசுவாவுக்கும், பத்தாவது சேக்கேனியாவுக்கும்
12 பதினொராவது எலியாசிப்புக்கும், பன்னிரண்டாவது யாசிமுக்கும்,
13 பதின்மூன்றாவது ஒப்பாவுக்கும், பதினான்காவது இஸ்பாப்புக்கும்,
14 பதினைந்தாவது பெல்காவுக்கும், பதினாறாவது எம்மேருக்கும்,
15 பதினேழாவது ஏசீருக்கும், பதினெட்டாவது அப்சேசுக்கும், பத்தொன்பதாவது பெதேயியாவுக்கும்,
16 இருபதாவது எசேக்கியேலுக்கும்,
17 இருபத்தோராவது யாக்கீனுக்கும், இருபத்திரண்டாவது காமூலுக்கும்,
18 இருபத்து மூன்றாவது தலையோவுக்கும், இருபத்து நான்காவது மாசியோவுக்கும் விழுந்தது.
19 இஸ்ராயேலில் கடவுளாகிய ஆண்டவரால் அவர்கள் தந்தை ஆரோனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைப்படியே, ஆரோன் அவர்களுக்கென செயல்முறைகளை அமைத்தார். தங்கள் முறைப்படி அவர்கள் திருப்பணி செய்யும் பொருட்டு வகுக்கப்பட்ட பிரிவுகள் இவையே.
20 எஞ்சிய லேவியின் மக்களுக்குள், அம்ராமின் புதல்வர்களில் சுபாயேலும், சுபாயேலின் புதல்வர்களில் எசெதேயியாவும்,
21 ரொகோபியாவின் புதல்வர்களில் எசியாஸ் என்ற தலைவனும் இருந்தனர்.
22 இசாரியின் மகன் பெயர் சாலமோத். சாலமோத்தின் மகன் பெயர் யாகாத்.
23 இவனுடைய மூத்த மகன் பெயர் எரீயாப்; இரண்டாவது மகன் பெயர் அமாரியாஸ்; மூன்றாவது மகன் பெயர் யகாசியேஸ்; நான்காவது மகன் பெயர் ஏக்மான்.
24 ஓசியேலின் மகன் பெயர் மிக்கா; மிக்காவின் மகன் பெயர் சாமீர்.
25 மிக்காவின் சகோதரன் பெயர் ஏசியா; ஏசியாவின் மகன் பெயர் சக்கரிளாஸ்.
26 மெராரியின் புதல்வர் மொகோலி, மூசி ஆகியோர். ஒசியாவின் மகன் பெயர் பென்னோ.
27 மற்றும் ஒசியாவு, சோவாம், சக்கூர், எபீரி ஆகியோரும் மெராரியின் மக்களே.
28 மொகோலியின் மகன் பெயர் எலியெசார். இவனுக்கு மகப்பேறில்லை.
29 சீசுடைய மகன் பெயர் எராமேயல்.
30 மூசியுடைய புதல்வர்: மொகோலி, எதேர், எரிமோத் ஆகியோர். தங்கள் வம்ச வரிசைப்படி லேவியரின் புதல்வர்கள் இவர்களே.
31 இவர்களும் தங்கள் சகோதரராகிய ஆரோனின் புதல்வர் செய்தது போல, தாவீது அரசர், சாதோக், அக்கிமெலேக், குருக்கள், லேவியரின் குடும்பத் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில், பெரியோரும் சிறியோரும் சீட்டுப் போட்டுக் கொண்டனர். எல்லா வேலைகளும் சரிசமமாகப் பிரித்தளிக்கப்பட்டன.
அதிகாரம் 25
1 அப்போது தாவீதும் படைத்தலைவர்களும் ஆசாப், ஏமான், இதித்தூன் ஆகியோரின் மக்களுள் சிலரைத் திருப்பணிக்கென்று பிரித்தெடுத்தனர். அவர்கள் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் கைத்தாளங்களையும் ஒலித்து இறைவாக்குரைக்க நியமிக்கப்பட்டனர். பணி ஆற்றியோருடையவும் அவர் புரிந்த பணியினுடையவும் விபரம் வருமாறு:
2 ஆசாப்பின் மக்களில் சக்கூர், யோசேப், நத்தானியா, அசரேலா ஆகியோர். இவர்கள் ஆசாப்பின் அதிகாரத்திற்குட்பட்டு, அரசர் கட்டளைப்படி நின்று கொண்டு இறைவாக்குரைப்பார்.
3 இதித்தூன் குடும்பத்திலிருந்து அவன் மக்களான கொதோலியாஸ், சோரி, ஏசேயியாஸ், அசாபியாஸ், மத்தாத்தியாஸ் ஆகிய அறுவர்; தங்கள் தந்தை இதித்தூனின் அதிகாரத்திற்குட்பட்டு சுரமண்டலம் இசைத்து இறைவாக்குரைத்து ஆண்டவர் மகிமையை ஓதி வந்தனர்.
4 ஏமான் குடும்பத்திலிருந்து அவன் மக்களான பொக்சியாவு, மத்தானியாவு, ஓசியேல், சுபுவேல், எரிமோத், அனானியாஸ், அனானி, ஏலியத்தா, கெதெல்தி, ரொமேம்தியேசார், எஸ்பகாசா, மெல்லோத்தி, ஒதீர், மகசியோத் ஆகியோர்.
5 இவர்கள் அனைவரும் அரசரின் திருக்காட்சியாளரான ஏமானின் மக்களாவர். ஏமானை உயர்த்துவதாகக் கடவுள் கொடுத்திருந்த வாக்கின்படியே அவர் அவனுக்குப் பதினான்கு புதல்வர்களையும் மூன்று புதல்வியரையுங் கொடுத்திருந்தார்.
6 ஆசாப், இதித்தூன், ஏமான் ஆகியோரின் புதல்வர்களான இவர்கள் எல்லாரும் அரசரின் கட்டளைப்படி தத்தம் தந்தையின் அதிகாரத்திற்குட்பட்டு ஆண்டவரின் ஆலயத்திலே தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கவும், ஆலயத்திலே திருப்பணி செய்யவும் நியமிக்கப்பட்டார்கள்.
7 ஆண்டவரின் பாடல்களைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களான அவர்களும் அவர்களின் சகோதரர்களும் மொத்தம் இருநூற்றெண்பத்தெட்டுப் பேர்.
8 பெரியவனும் சிறியவனும், ஆசானும் மாணாக்கனும் சரிசமானமாய், தங்கள் முறைவரிசைக்காகச் சீட்டுப் போட்டனர்.
9 முதல் சீட்டு ஆசாபின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப் என்பவனுக்கு விழுந்தது. இரண்டாவது சீட்டு கொதோலியாசும் அவனுடைய மக்களும் சகோதரர்களுமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
10 மூன்றாவது சீட்டு சக்கூரும் அவனுடைய மக்களும் சகோதரர்களுமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
11 நான்காவது சீட்டு இசாரியும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
12 ஐந்தாவது சீட்டு நத்தானியாசும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
13 ஆறாவது சீட்டு பொக்சியாவும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
14 ஏழாவது சீட்டு இஸ்ரேலாவும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
15 எட்டாவது சீட்டு எசாயியாவும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
16 ஒன்பதாவது சீட்டு மத்தானியாசும், அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
17 பத்தாவது சீட்டு செமேயியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
18 பதினோராவது சீட்டு அசரேலும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
19 பன்னிரண்டாவது சீட்டு அசாபியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
20 பதின்மூன்றாவது சீட்டு சுபுவேலும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
21 பதினான்காவது சீட்டு மத்தாத்தியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
22 பதினைந்தாவது சீட்டு எரிமோத்தும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
23 பதினாறாவது சீட்டு அனானியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
24 பதினேழாவது சீட்டு எஸ்பக்காசாவும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
25 பதினெட்டாவது சீட்டு அனானியும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
26 பத்தொன்பதாவது சீட்டு மெல்லோத்தியும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
27 இருபதாவது சீட்டு எலியாதாவும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
28 இருபத்தோராவது சீட்டு ஒத்தீரும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
29 இருபத்திரண்டாவது சீட்டு கெதெல்தியும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
30 இருபத்து மூன்றாவது சீட்டு மகசியோத்தும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
31 இருபத்து நான்காவது சீட்டு ரொமேந்தியேசேரும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
அதிகாரம் 26
1 வாயிற்காவலரின் பிரிவுகளாவன: கொரேயர் குலத்தைச் சேர்ந்த ஆசாப்பின் மக்களில் கொரேயின் மகன் மெசெலேமியா,
2 மெசெலேமியாவின் புதல்வருள் மூத்தவன் பெயர் சக்கரியாஸ், இரண்டவாது யாதியேல், மூன்றாவது சபாதியாஸ், நான்காவது யாதனாயேல்,
3 ஐந்தாவது ஏலாம், ஆறாவது யொகனான், ஏழாவது எலியோவேனாயி,
4 ஒபெதெதோமின் புதல்வருள் மூத்தவன் பெயர் செமேயியாஸ், இரண்டாவது யோசபாத், மூன்றாவது யொவகா, நான்காவது சாகார், ஐந்தாவது நத்தானியேல்,
5 ஆறாவது அம்மியேல், ஏழாவது இசாக்கார், எட்டாவது பொல்லாத்தி; இவ்வாறு ஆண்டவர் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
6 அவனுடைய மகன் செமேயியிக்குப் பிறந்த புதல்வரோ தங்கள் குடும்பங்களின் தலைவர்களாய் இருந்தனர். ஏனெனில் அவர்கள் மிக்க ஆற்றல் படைத்தவர்கள்.
7 செமேயியின் புதல்வருள் ஒத்னி, ரபாயேல், ஒபேத், எல்சபாத் ஆகியோரும் இவர்களின் சகோதரர்களும்; இவர்கள் ஆற்றல் மிக்க மனிதராய் இருந்தனர். எலீயுவும் சமாக்கியாசும் மேற்சொல்லப்பட்டவர்களின் சகோதரர்கள்.
8 இவர்கள் எல்லாரும் ஒபெதெதோமின் மக்கள். இவர்களும் இவர்களின் புதல்வரும் சகோதரரும் அறுபத்திரண்டுபேர்; ஒபெதெதோமின் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தங்கள் பணியைத் திறமையோடு ஆற்றி வந்தனர்.
9 மெசெலேமியாவின் மக்களும் அவர்கள் சகோதரரும் திறமை மிக்கவர்கள்; இவர்கள் பதினெட்டுப் பேர்.
10 மெராரிக்குப் பிறந்த மக்களில் ஒருவனான ஓசாவின் மக்களின் விவரம் வருமாறு: தலைவனான செம்ரி, (இவன் தலைமகன் அல்லன்; எனினும் ஓசா அவனைத் தலைவனாக நியமித்திருந்தான்)
11 இரண்டாவது எல்சியாஸ், மூன்றாவது தபேலியாஸ், நான்காவது சக்கரியாஸ். ஓசாவின் புதல்வர்களும் சகோதரர்களும் மொத்தம் பதின்மூன்று பேர்.
12 இவ்வாறு வாயிற்காவலரின் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. தங்கள் சகோதரர்கள் ஆண்டவரின் ஆலயத்தில் திருப்பணி செய்து வந்தது போலவே, இப்பிரிவுகளின் தலைவர்களும் தங்கள் கடமையை ஆற்றி வந்தனர்.
13 ஆகையால் தங்கள் குடும்பங்களின்படி தாங்கள் காவல் புரிய வேண்டிய வாயிலை அறிந்து கொள்ளும் பொருட்டு, பெரியோர் சிறியோர் என்ற வேறுபாடின்றிச் சீட்டுப் போட்டனர்.
14 இவ்வாறு சீட்டுப் போட்ட போது கிழக்கு வாயிலுக்குச் சீட்டு செலேமியாசுக்கு விழுந்தது. வடக்கு வாயிலுக்குச் சீட்டு மிக்க விவேகமும் அறிவும் படைத்த சக்கரியாசுக்கு விழுந்தது.
15 ஒபெதெதோமுக்குத் தெற்கு வாயிலும் அவன் புதல்வருக்குப் பண்டசாலையும் கிடைத்தன.
16 செபீமுக்கும் ஓசாவுக்கும் மேற்கு வாயிலுக்கும் மலைக்குப் போகும் வழியில் இருந்த ஷல்லேகத் வாயிலுக்கும் சீட்டு விழுந்தது. அவர்கள் காவலிருக்க வேண்டிய இடங்கள் அடுத்தடுத்து இருந்தன.
17 கிழக்கே லேவியர் ஆறுபேரும் வடக்கே ஒரு நாளுக்கு நான்கு பேரும், தெற்கே ஒரு நாளுக்கு நான்கு பேரும் பண்டசாலையில் பக்கத்துக்கு இருவராக நால்வரும் நியமிக்கப் பட்டனர்.
18 மேற்கிலிருந்த காவலர் அறைகளினருகே அறைக்கு இருவரும் வழியிலே நால்வரும் நிறுத்துப்பட்டனர்.
19 கொரே, மெராரி, என்பவர்களின் புதல்வர்கள் இவ்வாறு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
20 மற்ற லேவியருள் ஆகியாஸ் கடவுளின் ஆலயக் கருவூலங்களுக்கும், கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகளைச் சேர்த்து வைத்திருந்த அறைகளுக்கும் பொறுப்பு ஏற்றிருந்தான்.
21 லேதானின் புதல்வர்கள்: லேதான் வழிவந்த கெர்சோனியர், கெர்சோனியனான லேதானின் வம்சத்தில் தலைவனான எகியேலியும்,
22 எகியேலியின் மக்களான சேத்தாமும் அவன் சகோதரரான யோவேலுமே. இவர்கள் ஆண்டவரின் ஆலயக் கருவூலங்களுக்குப் பொறுப்பாய் இருந்தனர்.
23 அம்ராம், இசார், எப்பிரோன், ஒசியேல் ஆகியோரின் குடும்பத்தவரிலும் சிலர் அவற்றை மேற்பார்த்து வந்தனர்.
24 மோயீசனுக்குப் பிறந்த கெர்சோமின் மகன் சுபுவேல் கருவூலத் தலைமைக் கண்காணிப்பாளனாய் இருந்தான்.
25 அவனுடைய சகோதரன் எலியேசரும் அதே அலுவலில் இருந்தான். எலியேசருக்கு ரகாபியா பிறந்தான். ரகாபியாவுக்கு இசயாஸ் பிறந்தான். இவனுக்கு யோராம் பிறந்தான். இவனுக்குச் செக்ரி பிறந்தான். இவனுக்குச் செலேமித் பிறந்தான்.
26 இந்தச் செலேமித்தும் அவன் சகோதரர்களும் காணிக்கைக் கருவூலத்தைக் கண்காணித்து வந்தனர். இந்தப் பொருட்களைத் தாவீது அரசரும், குடும்பத் தலைவர்களும், ஆயிரவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும் போர்க்களத்தினின்றும், கொள்ளைப் பொருட்களினின்றும் எடுத்து,
27 ஆண்டவரின் ஆலயத்தைப் பழுது பார்க்கவும் அதற்குத் தேவையான தட்டுமுட்டுகளைச் செய்வதற்கும் கோவிலுக்குக் காணிக்கையாக அர்ப்பணித்திருந்தனர்.
28 இவ்வாறே திருக்காட்சியாளர் சாமுவேலும் சீசின் மகன் சவுலும், நேரின் மகன் அப்நேரும், சார்வியாவின் மகன் யோவாபும் காணிக்கைகளை ஆண்டவருக்கு அர்ப்பணித்திருந்தனர். இக்காணிக்கைப் பொருட்கள் எல்லாம் செலேமித்தின் கவனிப்பிலும் அவன் சகோதரரின் கவனிப்பிலும் இருந்து வந்தன.
29 இஸ்ராயேலுக்குக் கல்வி புகட்டுவதும் நீதி வழங்குவதுமான வெளிவேலையைப் பார்த்து வந்தவர்கள் இசார் குலத்தினரே. கொனேனியாசும், அவன் புதல்வரும் அவர்களுக்கு மேல் அதிகாரிகளாய் இருந்தனர்.
30 எரிரோனியரில் அசாபியாசும் அவனுடைய சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறு ஆற்றல் மிக்க மனிதர்கள், யோர்தானுக்கு அக்கரையில் மேற்கே வாழ்ந்து வந்த இஸ்ராயேலின் மேல் ஆண்டவரின் எல்லாத் திருப்பணிக்கும் அரசனின் ஊழியத்திற்கும் அடுத்த காரியங்களில் அதிகாரிகளாய் இருந்தனர்.
31 எபிரோனியரின் தலைமுறைகளுக்கும் வம்சங்களுக்கும் ஏரியாவே தலைவனாய் இருந்தான். தாவீதுடைய ஆட்சியின் நாற்பதாம் ஆண்டில் அவர்களைப்பற்றிய கணக்கு எடுக்கப்பட்டது. அப்போது அவர்களுக்குள் கலாத் நாட்டு யாசேரில் சில ஆற்றல் படைத்த ஆடவர் இருப்பதாகத் தெரிய வந்தது.
32 வலிமை வாய்நதவர்களும் குடும்பத் தலைவர்களுமான அவனுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பேர் இருந்தனர். தாவீது அரசர் ஆண்டவரின் திருப்பணிக்கும் அரச அலுவலுக்கும் அடுத்த காரியங்களில் ரூபானியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் அவர்களைத் தலைவர்களாய் ஏற்படுத்தினார்.
அதிகாரம் 27
1 இஸ்ராயேல் மக்கள் தங்கள், குடும்பத்தலைவர்கள், ஆயிரவர் தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள் அவர்களுடைய அலுவலர்கள் உட்பட, அனைவரும் தத்தம் பிரிவுப்படி எல்லா அரச அலுவல்களையும் செய்து வந்தார்கள். மாதத்திற்கு ஒரு பிரிவாக அவர்கள் ஆண்டு முழுவதும் பணியாற்றி வந்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர். அப்பிரிவுகள் வருமாறு:
2 முதல் மாதத்தில் முதல் பிரிவுக்குத் தலைவனாய் இருந்தவன் சப்தியேலின் மகன் எஸ்போவா; அவனுக்கு அடியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
3 எஸ்போவா பாரேசின் வழிவந்தவன். முதல் மாதத்தில் அவன் எல்லாப் படைத்தலைவர்களுக்கும் தலைமை அதிகாரியாய் இருந்தான்.
4 அகோனியனான தூதியா இரண்டாம் மாதப் பிரிவுக்குத் தலைவனாய் இருந்தான். இவனுக்குக் கீழ் மசெல்லோத் என்ற பெயருடைய வேறொருவன் மேற்சொல்லப்பட்ட இருபத்து நாலாயிரம் பேர் உள்ள ஒரு பிரிவுக்குத் தலைவனாய் இருந்தான்.
5 மூன்றாவது மாதத்திற்கான மூன்றாவது பிரிவுக்குத் தலைவராய், யோயியாதாவின் மகன் பனாயியாஸ் என்ற குரு இருந்தார்; இவரது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
6 இந்தப் பனாயியாஸ் முப்பதின்மருக்குள் ஆற்றல் மிக்கவராகவும், அந்த முப்பதின்மருக்குத் தலைவராகவும் இருந்தார். அவருடைய பிரிவை அவர் மகன் அமிசாபாத் கண்காணித்து வந்தான்.
7 நான்காம் மாதத்திற்குரிய நான்காவது பிரிவுக்குத் தலைவன் யோவாபின் சகோதரனாகிய அசாயேல்; அவனுக்கு அடுத்த இடம் வகித்தவன் அவன் மகன் சபதியாஸ்; அவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
8 ஐந்தாம் மாதத்திற்கான ஐந்தாம் பிரிவின் தலைவன் ஏசேர் ஊரானான சமவோத் என்பவன்; இவனுடைய பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
9 ஆறாவது மாதத்திற்கான ஆறாம் பிரிவிற்குத் தேக்குவா ஊரானாகிய அக்கேசின் மகன் ஈரா தலைவனாய் இருந்தான்; அவனது பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
10 ஏழாம் மாதத்திற்கான ஏழாவது பிரிவிற்குத் தலைவன் எப்பிராயீம் குலத்தைச் சேர்ந்த பல்லோனியனான எல்லேஸ் என்பவன்; இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
11 எட்டாம் மாதத்திற்கான எட்டாவது பிரிவுக்குச் சாரகி வம்சத்து உசாத்தீத்தனான சொபொக்காயி தலைவனாய் இருந்தான்; இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
12 ஒன்பதாம் மாதத்திற்கான ஒன்பதாவது பிரிவுக்கு எமினியின் மக்களில் ஒருவனும் அனத்தோத்தியனுமான அபியேசேர் என்பவன் தலைவனாய் இருந்தான்; இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
13 பத்தாம் மாதத்திற்கான பத்தாவது பிரிவின் தலைவன் மாராயி என்பவன்; இவன் சாராயின் வழிவந்தவன்; நெத்தோப்பாத் ஊரில் வாழ்ந்து வந்தவன்; இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
14 பதினோராம் மாதத்திற்கான பதினோராவது பிரிவுக்கு எப்பிராயீம் குலத்தவனும் பரத்தோனியனுமான பனாயியாஸ் தலைமை வகித்தான். இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
15 பன்னிரண்டாவது மாதத்திற்கான பன்னிரண்டாவது பிரிவுக்குத் தலைவன் கொத்தோனியேலின் வழி வந்தவனும் நெத்தோப்பாத்தைச் சேர்ந்தவனுமான ஒல்தாய் என்பவன்; இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
16 இஸ்ராயேலில் குலத் தலைவர்களாய் விளங்கியவர்களின் பெயர்கள் வருமாறு: ரூபானியருக்குத் தலைவன் செக்ரியின் மகன் எலியசர், சிமெயோனியருக்குத் தலைவன் மாக்காவின் மகன் சப்பாசியாஸ்,
17 லேவியருக்குத் தலைவன் கேமுவேலின் மகன் அசாயியாஸ், ஆரோனியருக்குத் தலைவன் சாதோக்,
18 யூதாவுக்குத் தலைவன் தாவீதின் சகோதரன் எலீயு, இசாக்காருக்குத் தலைவன் மிக்காயேலின் மகன் அம்ரி,
19 சபுலோனியருக்குத் தலைவன் அப்தியாசின் மகன் எஸ்மாயியாஸ், நெப்தலியருக்குத் தலைவன் ஒஸ்ரியேலின் மகன் எரிமோத்,
20 எப்பிராயீம் குலத்தாருக்குத் தலைவன் ஒசாசின் மகன் ஓசே, மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குத் தலைவன் பதாயியாவின் மகன் யோவேல்,
21 காலாதிலுள்ள மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குத் தலைவன் சக்கரியாசின் மகன் யாதோ, பென்யமீன் மக்களுக்குத் தலைவன் அப்னேரின் மகன் யாசியேல்,
22 தாண் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு எரோகாமின் மகன் எஸ்ரியேல் தலைவனாய் இருந்தான். இஸ்ராயேலில் இவர்களே குலத் தலைவர்களாய் விளங்கி வந்தார்கள்.
23 இஸ்ராயேலை விண்மீன்களைப் போல் பெருகச் செய்வோம்" என்று ஆண்டவர் கூறியிருந்ததால் இருபது வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களைக் கணக்கிடத் தாவீது விரும்பவில்லை.
24 சார்வியாவின் மகன் யோவாப் மக்கள் தொகையைக் கணக்கிடத் தொடங்கினான்; ஆனால் அதை முடிக்கவில்லை. ஏனெனில் அதைப் பற்றிக் கடவுள் இஸ்ராயலின் மேல் கோபம் கொண்டிருந்தார். எனவே கணக்கிடப்பட்டவர்களின் தொகை தாவீது அரசரின் வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை.
25 அரசரது அரண்மனைக் கருவூலங்களை ஆதியேலின் மகன் அஸ்மோத் கண்காணித்து வந்தான். நகர்களிலும் ஊர்களிலும் கோட்டைகளிலுமிருந்த கருவூலங்களை ஓசியாசின் மகன் யோனத்தான் கண்காணித்து வந்தான்.
26 விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் கேலுப்பின் மகன் எஸ்ரி தலைவனாய் இருந்தான்.
27 மேலும் திராட்சை பயிரிடுவோருக்கு ரோமாத்தியனான செமெயியாசும், திராட்சை இரசம் விற்பவர்களுக்கு அப்போனியனான சாப்தியாசும்,
28 சமவெளிகளில் வளர்ந்த ஒலிவ மரங்களையும் அத்திமரச் சோலைகளையும் கேதரனான பலனானும், எண்ணைய் கிடங்குகளை யோவாசும் கண்காணித்து வந்தனர்.
29 சாரோனில் மேய்ந்து வந்த ஆட்டு மந்தைகளைச் சாரோனான சேத்திராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளை ஆத்லியின் மகன் சாப்பாத்தும் கண்காணித்து வந்தனர்.
30 ஒட்டகங்களுக்கு இஸ்மாயேல் குலத்தினனான ஊபிலும் கழுதைகளுக்கு மரோனாத்தியனான யாதியாசும் பொறுப்பாய் இருந்தனர்.
31 ஆடுகளைக் கண்காணித்து வந்தவன் அகாரியனான யாகீஸ். இவர்கள் எல்லாரும் தாவீது அரசரின் உடைமைகளைக் காண்காணித்து வந்தனர்.
32 தாவீதின் சிற்றப்பனும் அவருடைய ஆலோசகனுமான கல்வியறிவும் நுண்மதியும் கொண்ட யோனத்தானும் அக்கமோனியின் மகன் யாகியேலும் அரசரின் மக்களைக் கவனித்து வந்தனர்.
33 அக்கித்தோப்பேல், அரசரின் ஆலோசகனாய் இருந்தான். அராக்கியனான கூசாயி அரசரின் நண்பனாய் இருந்தான்.
34 அக்கித்தோப்பேலுக்குப் பின் பனாயியாசின் மகன் யோயியாதாவும், அபியத்தாரும் அவன் வகித்த பதவியை ஏற்றனர். யோவாபு அரசரின் படைக்குத் தலைவனாய் இருந்தான்.
அதிகாரம் 28
1 தாவீது இஸ்ராயேலின் தலைவர்களையும் குலத்தலைவர்களையும் அரசருக்கு ஏவல் புரிந்து வந்த பிரிவுகளின் தலைவர்களையும், ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களையும், அரசரின் உடைமைகளைக் கண்காணித்து வந்தவர்களையும், தம் புதல்வர்களையும், அண்ணகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும், ஆற்றல் மிக்க வீரர்கள் அனைவரையும் யெருசலேமில் கூடிவரக் கட்டளையிட்டார்.
2 அப்போது அரசர் எழுந்து நின்று கூறினதாவது: "என் சகோதரரே, என் மக்களே, நான் சொல்லுவதைக் கேளுங்கள். நம் கடவுளின் கால்மணையாகிய உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கு ஓர் ஆலயத்தைக் கட்ட நினைத்திருந்தேன். அதைக் கட்டுவதற்கு எல்லாவற்றையும் தயாரித்தும் விட்டேன்.
3 ஆண்டவரோ, 'நீ நமது திருப்பெயருக்கு ஆலயத்தைக் கட்டமாட்டாய். ஏனெனில் நீ அடிக்கடி போர் புரிந்து இரத்தத்தைச் சிந்தியுள்ளாய்' என்று அடியேனுக்குச் சொன்னார்.
4 ஆயினும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் என் குடும்பத்திலிருந்து என்னை என்றென்றும் இஸ்ராயேலின் அரசனாயிருக்கும்படி தேர்ந்து கொண்டார். தலைமை வகிக்குமாறு யூதா குலத்தைத் தேர்ந்து கொண்டார். அந்த யூதா குலத்தினின்றும் என் தந்தையின் குடும்பத்தையே தேர்ந்து கொண்டார். என் தந்தையின் புதல்வரிலும் அடியேனை இஸ்ராயேலர் அனைவருக்கும் அரசனாக்கத் திருவுளம் கொண்டார்.
5 ஆண்டவர் எனக்குப் பல மக்களைத் தந்துள்ளார். அவர்களில் அவர் என் மகன் சாலமோனை இஸ்ராயேலுக்கு அரசனாக ஆண்டவரின் அரியணையில் அமரும்படி தேர்ந்து கொண்டார்.
6 அவர் என்னை நோக்கி, 'உன் மகன் சாலமோனே நமது ஆலயத்தையும் நம் முற்றங்களையும் கட்டுவான். அவனை நமக்கு மகனாகத் தேர்ந்து கொண்டோம். நாம் அவனுக்குத் தந்தையாய் இருப்போம்.
7 மேலும், அவன் நம் கட்டளைகளையும் நீதி முறைமைகளையும் இன்று போல் என்றும் கடைப்பிடித்து வந்தால், அவனது அரசை என்றென்றும் நிலைநிறுத்துவோம்' என்றார்.
8 எனவே, ஆண்டவரின் சபையாகிய இஸ்ராயேலர் அனைவருக்கும் முன்பாகவும், நம் கடவுளின் செவி கேட்கவும் நான் உங்களுக்குச் சொல்லும் அறிவுரையாவது: நீங்கள் உங்கள் ஆண்டவராகிய கடவுளின் எல்லாக் கட்டளைகளையும் கைக்கொண்டு ஒழுகுவீர்களாக. அவ்வாறு செய்வீர்களாயின் இந் நன்னாடு உங்களுக்குச் சொந்தமாகவே இருக்கும்; உங்களுக்குப் பின்னரும் அது உங்கள் மக்கள் கையிலேயே என்றென்றும் இருக்கும்.
9 நீயோ, என் மகன் சாலமோனே, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு இதயத்தோடும் ஆர்வத்தோடும் அவருக்கு ஊழியம் செய். ஏனெனில் ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆராய்கிறார்; மனத்தின் எல்லா நினைவுகளையும் அறிகிறார். அவரை நீ தேடினால் கண்டடைவாய்; அவரை நீ புறக்கணித்தாலோ, அவர் என்றென்றும் உன்னைத் தள்ளி விடுவார்.
10 இப்போதோ திருவிடமாகிய ஆலயத்தைக் கட்டும்படி ஆண்டவர் உன்னையே தேர்ந்து கொண்டுள்ளார். எனவே மனவுறுதியோடு அதைச் செய்து முடி" என்றார்.
11 பின்னர், தாவீது தம் மகன் சாலமோனுக்கு ஆலயத்தின் முக மண்டபம், அதன் கருவூல அறைகள், ஆலயக் கட்டடங்கள், மேல் மாடிகள், உள்ளறைகள், இரக்கத்தின் இருக்கை அறை ஆகியவற்றின் மாதிரிகைகளைக் காட்டும் ஓவியம் ஒன்றைக் கொடுத்தார்.
12 மேலும், ஆண்டவரின் ஆலயமுற்றங்கள், சுற்றறைகள், கடவுளின் ஆலயக் கருவூலங்கள், காணிக்கைகளைச் சேர்த்து வைக்கும் அறைகள் முதலியவற்றின் அமைப்பைப் பற்றித் தாம் எண்ணியிருந்தவற்றைச் சாலமோனுக்கு எடுத்துரைத்தார்.
13 ஆண்டவரின் ஆலயத் திருப்பணிக்குத் தேவையான குருக்கள், லேவியரின் பிரிவுகள், ஆண்டவரின் ஆலய வழிபாட்டுக்குத் தேவையான தட்டுமுட்டுகள் ஆகியவை பற்றியும் தமது எண்ணத்தை அவருக்கு விவரமாக எடுத்துக் கூறினார்.
14 திருப்பணிக்குத் தேவையான பொன், வெள்ளிப் பாத்திரங்களைச் செய்வதற்குப் போதுமான பொன்னும் வெள்ளியும் நிறுத்துக் கொடுத்தார்.
15 பொன் விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் விளக்குகளுக்கும் தேவையான பொன்னையும், வெள்ளி விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் விளக்குகளுக்கும் தேவையான வெள்ளியையும் கொடுத்தார்.
16 காணிக்கை அப்பங்களை வைப்பதற்காக உபயோகிக்கப்பட்ட பொன், வெள்ளி மேசைகளுக்கு வேண்டிய பொன், வெள்ளியையும் கொடுத்தார்.
17 மேலும் முட்கரண்டிகளுக்கும் குப்பிகளுக்கும் பசும்பொன்னால் செய்யப்பட வேண்டிய தூபக்கலசங்களுக்கும் அவ்வவற்றின் பொன்னாலான சிறிய சிங்க உருவங்களுக்கும் வேண்டிய பொன்னைக் கொடுத்தார். வெள்ளிச் சிங்கங்களுக்குத் தேவையான வெள்ளியையும் கொடுத்தார்.
18 தூபப்பீடத்திற்காகவும், இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை மூடும் கெருபீம்களைக் கொண்ட தேரின் மாதிரியைச் செய்யவும் மிகவும் சுத்தமான தங்கத்தைக் கொடுத்தார்.
19 இந்த மாதிரியின்படி எல்லா வேலைகளையும் நான் அறிந்து கொள்ளும் பொருட்டு அவற்றை ஆண்டவரே தம் கரத்தால் வரைந்து எனக்குத் தெரியப்படுத்தினார் என்றும் கூறினார்.
20 தாவீது தம் மகன் சாலமோனைப் பார்த்து, "திடம்கொள், ஆண்மையுடன் செயலில் இறங்கு! அஞ்சாதே; மனம் தளராதே, ஏனெனில் என் கடவுளாகிய ஆண்டவர் உன்னுடன் இருப்பார். ஆண்டவரின் ஆலயத்தில் வழிபாடு செலுத்துவதற்கு வேண்டிய வேலைகளை எல்லாம் நீ செய்து முடிக்கும் வரை அவர் உன்னை விட்டு விலகவும் மாட்டார்; உன்னைக் கைவிடவும் மாட்டார்,
21 இதோ, கடவுளின் ஆலயத் திருப்பணிக்கென்று குருக்களின் பிரிவுகளும், லேவியரின் அணிகளும் உனக்கு முன் தயாராய் இருக்கின்றன. தலைவர்களும் மக்களும் உனக்குத் துணையாய் இருந்து உன் கட்டளைகளை எல்லாம் செய்யக் காத்திருக்கிறார்கள்" என்றார்.
அதிகாரம் 29
1 தாவீது அரசர் சபையார் எல்லாரையும் நோக்கி, "கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட என் மகன் சாலமோன் இன்னும் இளைஞனும் அனுபவமில்லதாவனுமாய் இருக்கிறான். செய்யவேண்டிய பணியோ மிகவும் பெரிது. கட்டப்படவிருக்கும் வீடு ஒரு மனிதனுக்காக அன்று, ஆண்டவராகிய கடவுளுக்காகவேயாம்.
2 நானோ என்னால் இயன்றவரை என் கடவுளின் ஆலயத்துக்கென்று பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு வேலைகளுக்குத் தேவையான பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு முதலியவற்றையும், மரவேலைகளுக்குத் தேவையான மரங்களையும், கோமேதகக் கற்களையும் வேலைப்பாடுகள் உள்ள கற்களையும், பல வர்ணக்கற்களையும், மாணிக்கக் கற்களையும், பாரோஸ் என்னும் சலவைக் கற்களையும் ஏராளமாகச் சேர்த்து வைத்துள்ளேன்.
3 அப்புனித ஆலயத்திற்கென்று நான் சேகரித்து வைத்துள்ள அவற்றையும் நான் கொடுத்த தானங்களையும் தவிர, என் கடவுளின் மாளிகைக்கு என் கையிலிருந்து பொன்னும் வெள்ளியும் இதோ தருகிறேன்.
4 ஆலயச் சுவர்களை மூடுவதற்காக மூவாயிரம் தாலந்து தூய்மையான வெள்ளியும் கொடுக்கிறேன்.
5 மற்றும் பொன், வெள்ளி வேலைகளுக்கு வேண்டிய பொன்னும் வெள்ளியும் தருகிறேன். இவ்வேலைகள் எல்லாம் திறமை பெற்ற தட்டார்களால் செய்யப்பட வேண்டும். எவனும் ஆண்டவருக்குக் காணிக்கை தர விரும்பினால், இன்றே அவன் தனக்கு விருப்பமானதைத் தன் கைநிறையக் கொணர்ந்து ஆண்டவருக்குச் செலுத்தக் கடவான்" என்றார்.
6 அப்பொழுது, குடும்பத்தலைவர்களும் இஸ்ராயேல் குலத்தலைவர்களும் ஆயிரவர், நூற்றுவர்தலைவர்களும் அரசரின் உடைமைகளைக் கண்காணித்து வந்த அதிகாரிகளும் காணிக்கைகளைக் கொண்டு வந்தனர்.
7 அதன்படி கடவுளின் ஆலய வேலைகளுக்காக ஐயாயிரம் தாலந்து பொன்னும், பதினாயிரம் பொற்காசுகளும், பதினாயிரம் தாலந்து வெள்ளியும் பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலமும், ஒரு லட்சம் தாலந்து இரும்பும் கொடுத்தனர்.
8 மாணிக்கக் கற்களை வைத்திருந்தவர்கள் எல்லாரும் அவற்றை ஆண்டவரின் ஆலயக் கருவூலத்துக்கென்று கெர்சோனியனாகிய யாகியேலின் கையில் ஒப்படைத்தனர்.
9 இவ்வாறு மனமுவந்து அளிப்பதில் மக்கள் மகிழ்வுற்றனர். ஏனெனில் முழு இதயத்தோடும் ஆண்டவருக்கு அவற்றை அவர்கள் ஒப்புக்கொடுத்தனர். தாவீது அரசரும் பெரிதும் மகிழ்ந்தார்.
10 அங்கிருந்த மக்கட் கூட்டத்தின் முன்பாக அவர் ஆண்டவரை வாழ்த்தி, "எங்கள் தந்தையாகிய இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப்பெறுவீர்.
11 ஆண்டவரே, பெருமையும் மகிமையும் வல்லமையும் வெற்றியும் உமக்கே உரியன. புகழும் உமக்கே உரியது. விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே. அரசும் உம்முடையதே. ஆண்டவரே, நீரே மன்னருக்கு மன்னர், செல்வமும் மகிமையும் உம்முடையன.
12 அனைத்தையும் நீரே ஆள்கின்றீர். உமது கரத்தில் ஆற்றலும் வல்லமையும் உண்டு. எல்லாப் பெருமையும் ஆற்றலும் உம் கரங்களிலே இருக்கின்றன.
13 ஆதலால், எங்கள் கடவுளே, உமக்கு நன்றி கூறி, உம் திருப்பெயரை வாழ்த்துகிறோம்.
14 இவற்றை எல்லாம் உமக்குக் கொடுக்க நான் யார்? என் குடிகளுக்கும் என்ன உரிமை இருக்கிறது? எல்லாம் உம்முடையன. உம் கைகளினின்று நாங்கள் பெற்றுக்கொண்டதையே உமக்குத் திரும்பக் கொடுத்துள்ளோம்.
15 உம் திருமுன் நாங்கள் எங்கள் முன்னோரைப் போலவே அந்நியரும் வழிப்போக்கருமாய் இருக்கிறோம். எங்கள் உலக வாழ்வு ஒரு நிழல் போன்றது, நிலையற்றது.
16 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உமது திருப்பெயருக்கு ஓர் ஆலயம் கட்டுவதற்கு நாங்கள் தயாரித்திருக்கும் இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்தினின்று வந்தவையே. எல்லாம் உம்முடையனவே.
17 என் கடவுளே, நீர் இதயச் சிந்தனைகளை அறிகிறவர் என்றும், நேர்மையை விரும்புகிறவர் என்றும் நான் அறிவேன். ஆகையால், இதய நேர்மையுடன் இவற்றை எல்லாம் மகிழ்வுடன் ஒப்புக்கொடுத்தேன். இங்கே கூடியிருக்கிற உம் மக்கள் உமக்குக் காணிக்கைகளை மனப் பூர்வமாய் ஒப்புகொடுக்கக் கண்டு மகிழ்ந்தேன்.
18 எங்கள் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக், இஸ்ராயேல் ஆகியோரின் கடவுளாகிய ஆண்டவரே! உம் மக்களின் இதயச் சிந்தனைகளை உம்மை நோக்கித் திருப்பியருளும்.
19 என் மகன் சாலமோன் உம் கட்டளைகளையும் சாட்சியங்களையும் வழிபாட்டு முறைகளையும் பின் பற்றி ஒழுகவும், ஆலயத்தைக் கட்டவும் அவனுக்கு உத்தம இதயத்தை அளித்தருளும். அந்த ஆலயத்தின் வேலைக்காகவே நான் இவற்றை எல்லாம் தயார் செய்துள்ளேன்" என்று வேண்டினார்.
20 பிறகு தாவீது சபை அனைத்தையும் நோக்கி, "நீங்கள் நம் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்" என்று கட்டளையிட்டார். உடனே அங்குக் கூடியிருந்த அனைவரும் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரை ஆராதித்தனர். அதன்பின் அரசரையும் வணங்கினர்.
21 ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் தகனப் பலிகளாக ஆயிரம் காளைகளையும் ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும் ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுத்தனர்; அவற்றோடு பானப்பலிகளையும் சடங்கு முறைப்படி இஸ்ராயேல் மக்கள் அனைவருக்காகவும் தாராள மனத்துடன் செலுத்தினர்.
22 அவர்கள் அன்று ஆண்டவர் திருமுன் உண்டு குடித்து மகிழ்ச்சி கொண்டாடினர். இரண்டாம் முறையாக மகன் சாலமோனை அரசராகவும், சாதோக்கைக் குருவாகவும் அபிஷுகம் செய்தனர்.
23 அவ்வாறே சாலமோன் தம் தந்தை தாவீதுக்குப் பதிலாய் ஆண்டவரின் அரியணையில் அரசராய் அமர்ந்தார். வெற்றியுடன் ஆட்சிபுரிந்து வந்தார். இஸ்ராயேல் மக்கள் அனைவரும் அவரை விரும்பி அவருக்குக் கீழ்ப்படிந்தனர்.
24 மக்கள் தலைவர்கள் அனைவரும், ஆற்றல் நிறை வீரர்களும், தாவீது அரசரின் புதல்வர்கள் எல்லாரும் சாலமோன் அரசருக்கு மனமுவந்து அடிபணிந்தனர்.
25 இவ்வாறு ஆண்டவர் சாலமோனை இஸ்ராயேலர் அனைவருக்கும் மேலாக உயர்த்தினார். அதற்குமுன் இருந்த இஸ்ராயேல் அரசர் எவருக்குமில்லாத அரச மகிமையை அவருக்குக் கொடுத்தார்.
26 இசாயியின் மகன் தாவீது இஸ்ராயேலர் அனைவரையும் ஆண்டு வந்தார்.
27 அவரது ஆட்சிகாலம் நாற்பது ஆண்டுகள். எபிரோனில் ஏழு ஆண்டுகளும், யெருசலேமில் முப்பத்து முன்று ஆண்டுகளும் அவர் அரசோச்சினார்.
28 பின் முதிர்ந்த வயதினராய், செல்வமும் புகழும் நிறைந்தவராய் உயிர் நீத்தார். அவருடைய மகன் சாலமோன் அவருக்குப் பின் அரியணை ஏறினார்.
29 தாவீது அரசரின் வரலாறு முழுவதும், அவர் ஆட்சிகாலத்தில் அவர்புரிந்த ஆற்றல் மிக்க செயல்களும், இஸ்ராயேலிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் நிகழ்ந்தன யாவும், திருக்காட்சியாளரான சாமுவேல், இறைவாக்கினரான நாத்தான், திருக்காட்சியாளரான காத் ஆகியோரின் நூல்களில் எழுதப்பட்டுள்ளன.