ஜனவரி 29

அர்ச். பிரான்சிஸ் சலேசியார் - மேற்., துதியர் (கி.பி. 1622).

இவர் உயர்ந்த கோத்திரத்திலுள்ள, பக்தியுள்ள தாய் தந்தையரிடமிருந்து பிறந்தார். இவர் பாரிஸ், பதுவா முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு, கல்வி சாஸ்திரங்களைத் திறமையுடன் கற்றறிந்தார். 

தம்மைப் போல பிரபு கோத்திரத்திலுள்ள ஒரு பெண்ணை தனது தந்தை தனக்கு மணமுடித்து வைக்க ஏற்பாடு செய்ததையறிந்து, அதற்குச் சம்மதியாமல் குருப்பட்டத்திற்கு படித்து, குருவாகி, ஊர் ஊராயும், கிராமம் கிராமமாயும் சுற்றித் திரிந்து அநேகரைத் தர்ம வழியில் திருப்பினார். 

இவருக்கு இயற்கையாகவே முன்கோபம் அதிகமாயிருந்ததால், அத்துர்குணத்தை தம் இடைவிடா முயற்சியால் முற்றிலும் ஜெயித்து சர்வ சாந்தமும், பொறுமையுமுள்ளவரானார். 

இவருடைய புண்ணியங்களினிமித்தம் அர்ச். பாப்பானவராலும் அரசர்களாலும் இவர் வெகுவாய் மதிக்கப்பட்டார். கல்வீன் பதிதர் இவரைப் பகைத்து இவர் உயிரை வாங்க பல முறை முயற்சித்தாலும், இவரோ அற்புதமாய்க் காப்பாற்றப் பட்டார். 

இவர் மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டபின், முன்னிலும் அதிக ஊக்கத்துடனும் பிரயாசையுடனும் சத்திய வேதத்திற்காக உழைத்து வந்தார். 

72000 பதிதரைச் சத்திய வேதத்தில் சேர்த்து கணக்கற்றப் பாவிகளை மனந்திருப்பினார். அர்ச். ஷாந்தாள் பிரான்சிஸ்கம்மாளோடு, தேவதாய் எலிசபெத் தம்மாளைச் சந்தித்த கன்னியாஸ்திரீ சபையை உண்டாக்கினார். 

கடைசியாய் இவர் புண்ணியங்களை ஒழுங்காய் அநுசரித்து 56-ம் வயதில் தமது ஆத்துமத்தை நமது கர்த்தர் கையில் ஒப்புவித்தார்.

யோசனை 

நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவரைப் பின்பற்றி பொறுமையுள்ளவர்களாக முயற்சிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். செவேருஸ், ம. 
அர்ச். ஜில்டாஸ், ம.
அர்ச். ஜில்டாஸ், து.