ஜனவரி 28

அர்ச். நொலஸ்கோ இராயப்பர் - துதியர் (கி.பி. 1258).

இவர் உத்தம குலத்தில் பிறந்து, சிறுவயதிலேயே ஏழைகள் மட்டில் இரக்கம் காட்டி, அவர்களுக்குத் தர்மம் கொடுப்பார். இராயப்பருக்குக் கலியாணம் செய்துவைக்க மற்றவர்கள் முயற்சிக்கையில், இவர் தமது கற்பை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, தனக்கிருந்த மிகுதியான செல்வத்தை தேவ தோத்திரத்திற்குரிய அலுவல்களுக்காகக் கையளித்தார். 

ஸ்பெயின் தேசத்தின் பெரும் பாகத்தையும், ஆப்பிரிக்காவையும் முகமதியர் கைப்பற்றிக்கொண்டு கிறீஸ்தவர்களைக் குரூரமாய் உபாதிப்பதை இராயப்பர் பார்க்க மனம் சகிக்காமல் அவர்களை மீட்கும்படி முயற்சிக்கையில், தேவதாயார் இராயப் பருக்கும், ரேயிமுந்தப்பருக்கும் அத்தேசத்து அரசனுக்கும் தோன்றி கிறீஸ்தவர்களை மீட்பதற்காக ஒரு சபையை உண்டாக்கும்படிக் கற்பித்தார்கள். 

இவ்வலுவலில் இராயப்பர் அதிக உற்சாகம் கொண்டு, பாப்பானவருடைய அனுமதியுடன் அச்சபையை ஸ்தாபித்தார். அரசரும் பிரஜைகளும் இதற்கு உதவினபடியால் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் மீட்கப்பட்டார்கள். 

இராயப்பர் இச்சபை அலுவலின் நிமித்தம் கடின பிரயாணங்களைச் செய்த காலத்தில், முகமதியர் இவரை நடுச் சமுத்திரத்தில் பாயில்லாத ஒரு தோணியில் ஏற்றி விட்டு ஓடிப்போனார்கள். அப்போது இவர் தமது போர்வையைக் கடலில் விரித்து, அதில் ஏறிக்கொண்டு பிரயாணம் செய்து சுகமாய் கரை வந்து சேர்ந்தார். 

இப்படியாய் இவர் அடிமைகளுக்காக துன்பங்கள், வேதனைகள் பட்டு சாகும்போது ஏராளமாய்க் கண்ணீர் சொரிந்து, அடிமைகளை மீட்கும்படி சபையோரை மன்றாடி உயிர் துறந்தார்.

யோசனை 

நாமும் ஜெபத்தாலும், நன்னடத்தையாலும், பொருளுதவியாலும் பிறரது ஆத்தும சரீரத்துக்கு உதவி புரிவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். திர்ஸுசும், துணைவரும் வே. 
அர்ச். அருளப்பர், ம. 
அர்ச். பவுலினுஸ், து. 
அர்ச். கிளாஸ்டியன், மே.து. 
முத். மார்க்ரெத், க. 
முத். மகா கார்லுஸ், சக்கரவர்த்தி.