அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 20

சாத்தான் ஆயிரம் வருஷமளவாகக் கட்டப்படுகிறது; அந்த ஆயிரம் வருஷமும் வேதசாட்சிகளாகிய ஆத்துமாக்கள் கிறீஸ்துநாதரோடுகூட அரசாளுகிறார்கள். அதன் பின் சாத்தான் அவிழ்த்து விடப்பட்டு, தன் தூதரோடு தேவ நகரத்தார்மேல் எதிர்த்து யுத்தம்பண்ணுகிறது; கடைசியாய் அக்கினி அவர்களைச் சுட்டெரிக்கிறது; மரித்தோர் தீர்வையிடப் படுகிறார்கள்.

1. பின்பு ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும், ஒரு பெரிய சங்கிலியையும் தன் கையில் பிடித்துக் கொண்டு, வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன்.

2. பசாசென்றும், சாத்தானென்றும் சொல்லப்பட்ட ஆதி சர்ப்பமாகிய பறவைநாகத்தை அவர் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவாகக் கட்டி வைத்து,

* 2. பறவைநாகமென்பது சாத்தான்; மிருகமென்பது அந்திக்கிறீஸ்து; கள்ளத் தீர்க்கதரிசி என்பது அவனுடைய மந்திரி.

3. அந்த ஆயிரம் வருஷமும் முடியும் வரைக்கும் அது ஜனங்களை மோசம் போக்காதபடிக்கு அதைப் பாதாளத் திலே தள்ளியடைத்து அதன்மேல் முத்திரையிட்டார். அதற்குப் பின் அது கொஞ்சக்காலத்துக்கு அவிழ்த்து விடப் பட வேண்டும்.

* 3. சாத்தான் ஆயிரம் வருஷம் வரைக்கும் கட்டுண்டு பாதாளத்தில் தள்ளப்பட்ட தெப்படியெனில், சுவாமி உலகத்தை மீட்டிரட்சிக்குமுன், சாத்தான் உலகத்தில் வெகு கெம்பீரமாய் அதிகாரஞ் செலுத்தி வந்திருக்க, சுவாமி உலகத்தை இரட்சித்தபின் அதன் கர்வத்தை வெகுவாய் அடக்கி, அது தன்னிஷ்டப்படி செய்யாமல் ஒடுக்கினாரென்று அர்த்தமாம். ஆயிரம் வருஷமென்பது பொதுப்பட அநேக யுகங்களையும் அல்லது உலக முடியும்வரையில் செல்லும் காலத்தையும் குறிக்கிறது. உலகமுடிவு நெருங்கிவரும்போது மனுஷருடைய விசுவாசம் குறைந்து, பாவாக்கிரமம் வளருமாகையால் சாத்தான் விடுதலை யானாற்போல் அதின் அதிகாரம் கெம்பீரமாகும்.

4. அன்றியும் நான் சிங்காசனங்களைக் கண்டேன். அவைகளின் மேல் (சிலர்) உட்கார்ந்திருந்தார்கள். நியாயத் தீர்ப்புச் செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. சேசுநாதருடைய சாட்சியத்தினிமித்தமும், சர்வேசுரனுடைய வாக்கியத்தினி மித்தமும் கொலையுண்டவர்களுடைய ஆத்துமங்களையும் மிருகத்தையாவது அதன் உருவத்தையாவது நமஸ்கரியா மலும், தங்கள் நெற்றியிலும், தங்கள் கையிலும் அதன் முத்திரையைத் தரித் துக்கொள்ளாமலும் இருந்தவர்களை யும் கண்டேன். அவர்கள் உயிரடைந்து கிறீஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். (மத். 19:28.)

* 4. கொலையுண்டவர்களுடைய ஆத்துமங்களையும் கண்டேன் என்பதினால் வேத சாட்சிகள் முதலிய சகல புண்ணியவான்களும் மரணத்தையடைந்தபின் அவர்களுடைய ஆத்துமங்கள் பொதுவான உத்தானகாலமட்டும் காத்திராமல், உடனே மோட்ச பாக்கியத்தை அடைந்து சேசுநாதரோடேகூட அரசாளுகின்றன என்று பிரசித்தமாகிறது.

5. மரித்த மற்றவர்கள் அந்த ஆயிரவருஷம் முடியுமளவும் உயிர் அடையவில்லை. இதுவே முதல் உத்தானம்.

* 5. மற்றவர்கள் உயிரடையவில்லை. வேதாகமத்தில் பரலோக பாக்கியத்தை நித்திய ஜீவியமென்றும் உயிரென்றும் சொல்லியிருப்பதினால், மரித்தவர்களில் மற்றவர்க ளாகிய பாவிகள் அந்தப் பேரின்பமாகிய உயிரை அடையாமல் நித்திய நிற்பாக்கியரா யிருப்பார்கள் என்று விளங்குகிறது.

6. முதல் உத்தானத்துக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான். இவர்கள்மேல் இரண்டாம் மரணத்துக்கு அதிகாரமில்லை. இவர்கள் சர்வேசுரனுக்கும் கிறீஸ்துவுக்கும் முன்பாக குருக்களாயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

7. அந்த ஆயிரம் வருஷம் முடிந்த பின், சாத்தான் தன் சிறையினின்று விடுதலையாகிப் புறப்பட்டு, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தேசத்தா ரையும், கோகு மாகோகு என்பவர் களையும் மயக்குவித்து, அவர்களை யுத்தத்துக்குத் திரட்டுவான். அவர்க ளுடைய தொகை கடற்கரை மணலத்த னையாயிருக்கும். (எசே. 38:14.)

* 7. தேவதிருவுளத்தால் குறிக்கப்பட்ட காலம் நிறைவேறி, உலகமுடிவு நெருங்கும் போது, சாத்தான் உலகத்தின் நாலாதிசைகளிலும் உள்ள ஜனங்களில் வெகுவெகு பேரை மயக்கிக் கெடுத்துத் தன் பாரிசமாய்ச் சேர்ப்பான். கிறீஸ்துவர்களுக்குள்ளே முதலாய் அநேகர் அவன் கைவசமாவார்கள். இதைப்பற்றியே அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் 18-ம் அதி. 8-ம் வசனத்தில் மனுமகன் திரும்பி வரும்போது உலகத்தில் விசுவாசத்தைக் காண்பது அரிது என்று சொல்லப்பட்டிருக்கிறது. கோகு மாகோகு என்பவர்கள் கிரேக்குத் தேசத்துக்கு வடகிழக்கே சீரிய நாட்டில் வசித்த நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள். இவர்கள் பூர்வீகத்தில் இஸ்ராயேல் ஜனங்களை ஜெயித்துத் துன்பப்படுத்தினவர்களாகையால், உலகத்தின் முடிவில் இவர்களைப்போலொத்த துஷ்டர்களைச் சாத்தான் தன் பாரிசமாக்கி, பரிசுத்தவான்களுடைய பாளையமும் நேசிக்கப்பட்ட நகரமுமாகிய திருச்சபையை எதிர்த்துத் துன்பப்படுத்துவான் என்றறிக.

8. அவர்கள் பூமியின் விஸ்தீரண மெல்லாம் பரவி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும் நேசிக்கப்பட்ட நகரத்தையும் வளைந்து கொண்டார்கள்.

9. வானத்திலிருந்து சர்வேசுரனால் அக்கினி இறங்கி, அவர்களைப் பட்சிக்கின்றது. அவர்களை மயக்கின பசாசு அக்கினியும் கெந்தகமுமுள்ள தடாகத் திலே தள்ளப்பட்டது. (எசே. 38:22; 39:6.)

10. அவ்விடத்தில் மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியும் இரவும் பகலும் என் றென்றைக்கும் உபாதிக்கப்படுவார்கள்.

11. பின்பு வெண்மையான ஒரு பெரிய சிங்காசனத்தையும், அதன்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன். அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் ஓழிந்து போயின. அவைகளுக்கு இடமும் அற்றுப் போயிற்று. (காட்சி. 4:2; இசை. 65:17.)

12. மரித்தோராகிய சிறியோரும், பெரியோரும் அந்தச் சிங்காசனத்தின் முன்பாக நிற்கக்கண்டேன். அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவிய புஸ்தகமாகிய வேறொரு புஸ்தக மும் திறக்கப்பட்டது. அந்தப் புஸ்தகங் களில் எழுதப்பட்டபடி மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்க தாக நியாயந்தீர்க்கப்பட்டார்கள்.

13. சமுத்திரம் தன்னிடத்திலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது. மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோ ரை ஒப்புவித்தன. ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் கிரியைகளின்படி தீர்வை யிடப்பட்டது.

14. அப்போது பாதாளமும் மரணமும் அக்கினித் தடாகத்தில் தள்ளப்பட்டன. இதுவே இரண்டாம் மரணம். (1 கொரி. 15:26, 54.)

15. ஜீவிய புஸ்தகத்தில் எழுதப்பட்டதாகக் காணப்படாதவன் அந்த அக்கினித் தடாகத்திலே தள்ளப்பட்டான்.