தேவமாதாவின் வணக்கமாதம் - மே 15

கர்த்தர் பிறப்பு!

கர்த்தர் பிறப்புக்கு அடுத்த விசேஷங்கள்.

பெத்லகேம் ஊரில் இருக்கும் அந்த எளிய கொட்டிலில் பிரவேசித்து அதில் நடக்கிற சம்பவங்களை பக்தியுடன் உற்று நோக்குவோம். அவ்விடத்தில் பரமநாயகி பிரவேசித்து சர்வேசுரன் மீது மட்டற்ற அன்பினாலும், தம்முடைய குமாரனை பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசையாலும் நிறைந்தவர்களாய் ஓர் அற்பக் கஸ்தி வருத்தப்படாமலும், தம்முடைய கன்னி மகிமை கெடாமலும், பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராஜாவான உலக மீட்பரை பெற்றார்கள். நாம் அந்தத் திருப்பாலன் முன்பாகத் தெண்டனிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து அவரை நம்மை படைத்தவராகவும், இரட்சகராகவும், பரம கர்த்தராகவும், மெய்யான தேவனாகவும் வணங்கி ஆராதிக்கக்கடவோம். ஆனால் அவருக்கு நம்முடைய விசுவாசம், பக்தி, சிநேகம், நன்றியறிந்த மனதின் உணர்ச்சிகளைச் செலுத்தின பின்பு அவருடைய திருத்தாயாரை நோக்கி அன்னைக்குக் கிடைத்த பாக்கியத்தைக் குறித்து கொண்டாடி மீட்பரின் தாயாராக வாழ்த்தி அன்னையிடம் நமது நம்பிக்கையை வைக்கக் கடவோம்.

கர்த்தர் பிறப்பின் சரித்திரம்.

அப்பொழுது அந்தப் பரம நாயகியின் உள்ளத்தைப் பூரிப்பித்த மகிழ்ச்சியும், பக்தியும், தேவவணக்கமும், எவராலும் சொல்லுந்தரமன்று, தம்முடைய திருமடியில் அத்திருப்பாலனை முதல் முறையாக வைத்து அவரைத் தம்முடைய கர்த்தராகப் பணிந்து வணங்கி தம்முடைய குமாரனாக மிகுந்த பட்சத்துடன் அணைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இரட்சகருடைய தரித்திரத்தைப் பாருங்கள். விண்ணுலகையும் அதை அலங்கரிக்கும் எண்ணிறந்த விண்மீன்களையும் உண்டாக்கியவர் தமக்கு ஓர் அற்ப வீடு முதலாய் இல்லாதிருக்கிறார். அரசர்களும் அரச பரம்பரையினரும் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது, அரசர்க்கெல்லாம் அரசராகிய இயேசுபாலன் வைக்கோலின் மீது படுத்திருக்கிறார். பொன், வைர, முத்துக்களை விளைவிக்கிறவர் கிழிசலான வஸ்திரங்களால் மூடப்பட்டிருக்கிறார். எந்நேரமும் விண்ணுலகில் எண்ணிக்கையில்லாத சம்மனசுக்கள் அவர் ஏவலுக்கு காத்துக்கொண்டிருந்த போதிலும் அவர் மிருகங்கள் நடுவில் பிறக்க திருவுளம் கொண்டார். நீங்கள் தங்களின் மீட்பர் அப்படியே எளிமையாய்ப் பிறந்ததைக் கண்டு உலக வாழ்வைப் புறக்கணித்துத் தள்ளாமல் இருக்கக்கூடுமோ? இப்பொழுது, இந்தத் திருப்பாலகன் உங்களை நோக்கி, மனத்தரித்திரர் பாக்கியவான்கள் என்று அறிவிப்பதைக் கவனியுங்கள்.

அப்பொழுது தேவமாதா, அர்ச்.சூசையப்பர் இவர்களிடம் உண்டான உணர்வுகள்.

தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் இயேசுக்கிறிஸ்துநாதர் பிறந்த மாட்டுக் கொட்டிலினருகில் தியானம் செய்கிறதைப் பார்க்கக்கடவோம். பூலோக செல்வ பாக்கியங்களை எல்லாம் சிறிதும் நினையாமல் அவதரித்த உலக மீட்பருடைய சுகிர்த குணங்களை அவர்கள் ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மோட்ச பாக்கியத்துக்கு நிகரான பாக்கியத்தை அடைந்து, சர்வேசுரன் வழங்கிய மேன்மையான வரங்களைக் கண்டு அவருக்கு மிகுந்த பக்தியோடு ஸ்தோத்திரம் சொல்லி தங்களை அவருக்கு நேச வாஞ்சையுடன், ஒப்புக் கொடுக்கின்றனர். மீளவும் அந்த எளிமைக் கோலத்தில் இறங்க திருவுளம் கொண்ட தேவ பாலனைக் கண்டு, அவர் காண்பித்த நன்மாதிரிகளை தங்களிடத்தில் பதியச் செய்து அதன்படி நடக்கின்றனர். ஓ! மரியாயே, அர்ச். சூசையப்பரே, நீங்கள் அச்சமயத்தில் கொண்டுள்ள உணர்ச்சிகளை நானும் எப்படியாகிலும் உணரும்படிக்குக் கிருபை செய்தருள வேண்டுமென்று உங்களை மன்றாடுகிறேன்.

செபம்.

என் ஆத்துமமே, சம்மனசுகளுக்கும் மனுமக்களுக்கும் மேலாக விளங்கும் தேவ திருப்பாலனைப் பார். இதோ உலகத்துக்கு இராக்கினி, எல்லா மக்களிலும் அதிக அழகு சோபனமுள்ள பாலனாக ஆராதனைக்குரிய இயேசுநாதரைத் தமது திருமடியில் வைத்து மிகுந்த பட்சத்துடன் அணைத்துக் கொள்கிறார்கள். எல்லாவித ஆனந்தமும் நிறைந்த தாயாரே! நான் உம்முடைய திருவடியில் என்னுடைய மீட்பரை காணுகின்ற பொழுது பயம் நீங்கி அவரையும் உம்மையும் மகா உருக்கத்துடன் சிநேகிக்கிறேன். பரிசுத்தர் எனக்காகச் சிறு பிள்ளையாய்ப் பிறந்து மாட்டுக் கொட்டிலில் இருக்கும் பொழுது என்னைத் தண்டிப்பாரென்று நான் பயப்படக்கூடுமோ? அவர் என் பாவங்களை நிவிர்த்திப்பதற்கு எத்தகைய துன்ப வாதனைகள் அனுபவிக்கும்பொழுது என்னைப் புறக்கணித்துத் தள்ளுவாரோ? நான் அவரை முழுமனதோடு அணைத்துக் கொண்டு நேசிப்பேனாகில் மீட்புப் பெறுவேன் என்பது குன்றாத சத்தியம். ஆனால் அவருடைய இஷ்டப்பிரசாதத்தை நான் இழந்து போகாதபடிக்கு உலகம், பசாசு சரீரம் என்ற மூன்று சத்துருக்களையும் நான் ஜெயிக்கும் பொருட்டு உதவி செய்தருளும் தாயே.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

நல்ல உபகாரியே, உமது பேரில் என் நம்பிக்கை எல்லாம் வைத்திருக்கிறேன்.

பதினைந்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

ஒவ்வொருவருடைய ஞானஸ்நானத்தின் வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிக்கிறது.

புதுமை!

போர்ச் சேவகன் ஒருவன் தேவமாதா அடைந்த சந்தோஷங்களையும் வியாகுலங்களையும் குறித்து ஏழு பரலோக செபமும், ஏழு அருள் நிறை செபமும் சிறு வயது முதல் ஒவ்வொரு நாளும் தவறாது வேண்டி வந்தான். ஒருநாளில் செபம் வேண்டிக்கொள்ளாமல் நித்திரை செய்தான். திரும்ப விழித்து வழக்கமான செபம் அன்று செய்யவில்லை என நினைத்தால், உடனே எழுந்திருந்து முழந்தாளிட்டு பின்பு செபங்களை வேண்டிக்கொள்வான். படையிலிருக்கும் பொழுது ஒருநாள் போருக்குப் போய் முதல் வரிசையில் இருந்ததால் பகைவர்களை எதிர்த்துப் போராடும் முன்னே தனக்குச் சாவு வருமென்று நினைத்து ஆத்தும சோதனை செய்தான். செய்தவிடத்தில் தேவமாதாவைக் குறித்து வழக்கமாய்ச் செய்கிற செபம் இன்றைக்குச் செய்யவில்லை எனக் கண்டான். சண்டை செய்யும் நாளில் தேவமாதாவை வேண்டிக் கொள்ளாமலிருக்கக் கூடாதென்று எண்ணி, கூடயிருந்த சேவகர் தான் வேண்டிக் கொள்ளுகிறதைப் பார்த்து ஒரு வேளை பரிகாசம் செய்வார்களோ என்று அவன் நினைத்தாலும் அதை ஒரு பொருட்டாய் எண்ணாமல், செபம் செய்யத் தொடங்கினான். அப்போது அருகில் நின்ற சேவகர் இவன் வேண்டிக்கொள்ளுகிறதைக் கண்டு நகைத்துப் பரிகாசம் செய்தார்கள். அவனோவென்றால், பக்தி கவனம் குறையாமல் தொடங்கின செபத்தை முடித்தவுடன், எதிரிகள் துப்பாக்கியால் சுட்டார்கள். அப்போது தேவமாதாவை வேண்டிக்கொள்கிறதினால் பயன் உண்டென்று அறிந்தான்.

அவனைப் பரிகாசம் செய்த சேவகர் அனைவரும் சுடப்பட்டுக் கீழே விழுந்துவிட்டனர். அவன் ஒருவனே காயப்படாமல் நின்றான். அவர்கள் செத்துக் கிடக்கிறதைக் கண்டு தேவ நீதியின் ஆக்கினை இதுவே என்று உணர்ந்து தன்னைக் காப்பாற்றின தேவமாதாவிற்கு நன்றியறிந்த மனதோடு தோத்திரம் செய்தான். பின்னர் அந்த சேவகன் வேறு இடங்களில் சண்டை செய்யும்பொழுதும் யாதொன்றுக்கும் பயப்படாமல் இருப்பான். தன் வீட்டுக்குப் போக உத்தரவு பெற்றதாலும் தேவமாதா தனக்குச் செய்த உபகாரங்களையும் தான் வைத்த பக்தியையும் எங்கும் பரப்பி தான் சாகும் வரையிலும் உத்தம கிறிஸ்தவனாக சீவித்தான்.

கிறிஸ்தவர்களே! நீங்களும் தேவமாதாவின்மீது கொண்ட பக்தியில் பின் வாங்காமல் அன்னைக்கு வழக்கமாய்ச் செய்கிற செபங்களை ஒருநாளாவது குறைக்கக்கூடாது.