ஜனவரி 15

அர்ச். சின்னப்பர் - முதல் வனவாசி (கி.பி.342). 

இவர் எஜிப்து தேசத்தில் பிறந்து, சிறுவராயிருக்கும்போதே இவருடைய தாய் தந்தையர் இறந்துபோனார்கள். 250-ம் வருடத்தில் நடந்த பெரும் வேதக் கலாபனையில் தேவ பக்தரான இவர் நாட்டைவிட்டு காட்டுக்குச் சென்று ஜெப தபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தார். 

இவர் தாம் வசித்த குகையின் அருகிலிருந்த ஒரு ஈச்ச மரத்தின் கனியைத் தின்று சுனை ஜலத்தைக் குடித்துவந்தார். மேலும் நாள்தோறும் ஒரு காகம் இவருக்குக் கொண்டுவந்த பாதி ரொட்டியைப் புசித்துவந்தார். 

அக்காலத்தில் வேறொரு காட்டில் தவஞ்செய்த அந்தோணியார், சின்னப்பருடைய சிறந்த புண்ணியங்களைப்பற்றி சர்வேசுரனால் அறிந்து, அவரைச் சந்திக்கும்படி சில நாட்கள் பிரயாணஞ் செய்து சின்னப்பர் இருந்த குகைக்குப் போய்ச் சேர்ந்தவுடனே, இவர்கள் ஒருவர் ஒருவரை அறியாதிருந்தும் ஒருவர் ஒருவரை அவருடைய பெயரால் அழைத்து மினவிக்கொண்டார்கள். 

அன்று இருவரும் மோட்சத்தைப் பற்றி சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், ஒரு காகம் ஒரு முழு ரொட்டியை தன் அலகினால் கொத்திக்கொண்டு வந்து அங்கே போட்டுவிட்டுப் போயிற்று. 

சின்னப்பர் அந்தோணியாரைப் பார்த்து, கடந்த 60 வருஷங்களாக சர்வேசுரன் இந்தக் காகம் மூலமாக அரை ரொட்டியை அனுப்பினார். இப்போது நீர் வந்து இருப்பதால் முழு ரொட்டியை அனுப்பச் சித்தமானார் என்று சொல்லி சர்வேசுரனுக்கு நன்றி கூறி, இருவரும் அதைப் புசித்தார்கள்.

பிறகு சின்னப்பர் அந்தோணியாரைப் பார்த்து, எனக்கு மரணம் கிட்டியிருக்கிறது. நீர் உமது மடத்துக்குப் போய் உமக்கு அர்ச். அத்தனாசியார் கொடுத்த போர்வையைக் கொண்டுவந்து அதனால் என்னைப் பொதிந்து அடக்கஞ் செய்வீராக என்றார். 

அவ்வாறே அந்தோணியார் போர்வையை எடுத்துக்கொண்டு வரும்போது, சின்னப்பருடைய ஆத்துமம் சம்மனசுக்களால் சூழப்பட்டு மோட்சத்திற்குப் போவதைக் கண்டு அதிசயித்து, குகைக்குச்சென்று பார்த்தார். 

அங்கு முழந்தாளிலிருந்து ஜெபஞ் செய்வதுபோல் காணப்பட்ட சின்னப்பருடைய பிரேதத்தை தாம் கொண்டுவந்த போர்வையால் பொதியுந் தருணத்தில், இரு சிங்கங்கள் காட்டிலிருந்து புறப்பட்டு வந்து, ஒரு குழியைத் தோண்டவே, அவர் அக்குழியில் அத்திருச் சடலத்தை அடக்கஞ் செய்தார். 

சின்னப்பர் தரித்திருந்த ஈச்சம் ஓலை ஆடையை தன்னுடன் எடுத்துச் சென்று, பெரும் திருநாட் காலங்களில் அதைத் தரித்துக்கொண்டு வந்தார்.

யோசனை

பாவச் சந்தர்ப்பத்திற்கு ஏதுவானவற்றை விட்டு விலகுவாயாக.