ஜனவரி 14

அர்ச். ஹிலாரியார் - மேற்றிராணியார் (கி.பி. 368). 

இவர் பிரான்சு தேசத்தில் உயர்ந்த கோத்திரத்தில் பிறந்தவர். இவர் புத்தி கூர்மையுள்ளவரானதால் பல தேசங்களுக்குச் சென்று, உயர்ந்த கலைகளைக் கற்று, சிறந்த அறிஞரானார். 

இவர் அஞ்ஞானியாயிருந்தும், வேதாகமங்களை வாசித்து கிறிஸ்தவ வேதமே சத்திய வேதமென்று நிச்சயித்துத் தன் குடும்பத்துடன் அதில் சேர்ந்தார். இவருடைய மேலான பக்தியையும் ஞானத்தையும் கண்டு பூவாசியர் என்னும் நகரத்தின் மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார். 

இவர் இந்த உந்த அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டதால் பிரான்சு தேசத்திற்கு மாத்திரமல்ல, திருச்சபை முழுமைக்கும் ஞானப் பிரயோசனமுண்டாயிற்று. 

சேசு கிறிஸ்துநாதருடைய தெய்வீகத்தை மறுத்த ஆரிய பதிதரை ஹிலாரி மேற்றிராணியார் தமது வாக்கு சாதுர்யத்தினாலும், தேர்ந்த ஞானத்தாலும் எப்படி எதிர்த்தாரெனில், அந்த துஷ்டர் அவருக்கு முன் நிற்க முதலாய்ப் பயந்து அஞ்சுவார்கள். 

இந்தக் கள்ளப் பதிதருடைய கபட தந்திரத்தால் வேத துரோகியான ஜூலியான் அர்ச். ஹிலாரியை நாடுகடத்திவிட்டான். அவ்விடத்தில் தமதிரித்துவத்தைப் பற்றி பல சிறந்த நூல்களை எழுதினார். 

ஜூலியானுடைய குமாரத்தி இல்லற வாழ்க்கை வாழ விரும்புவதைக் கேள்வியுற்ற இவர் அவளுக்கு கன்னிமையின் சிறப்பைப்பற்றி கடிதம் மூலமாய் அறிவித்ததின் பேரில், அவள் உலகத்தைத் துறந்து கன்னியாஸ்திரீயானாள். 

அர்ச். ஹிலாரியார் பரதேசத்திலிருந்து விடுதலையானபின் ஊர் ஊராய்த் திரிந்து பதித மதத்தாலுண்டான அலங்கோலங்களைச் சீர்படுத்தி பாக்கியமான மரணத்தையடைந்து நித்திய சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.

யோசனை

நாமும் அர்ச். ஹிலாரியாரைக் கண்டுபாவித்து, நாள்தோறும் ஏதாவது ஒரு ஞானப் புத்தகத்தை வாசிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். பெலிக்ஸ், கு.
அர்ச். இஸேயாசும் துணை., வே.
அர்ச். பார்பாஸெமினுசும் 16 குருக்களும், வே.