நவம்பர் 12

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது சர்வேசுரனுக்கு உகந்த புண்ணியமாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது.

தியானம்.

மனுஷனானவன் தேவ கிருபையினாலே செய்யக் கூடுமான புண்ணியங்களுக்குள்ளே தன்னுடைய ஜெப தப தர்மத்தினாலும் நற்கிரியையினாலும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களை மீட்டிரட்சித்து மோட்ச பேரின்பத்துக்குச் இணை த்துக்கொள்ளுகிறதே சர்வேசுரனுக்கு மிகவும் உகந்த பண்ணியமாமென்கிறதுக்குச் சற்றாகிலும் சந்தேகமில்லை. அதெப்படியென்றால், உண்டுபண்ணப்பட்ட சகலத்தையும். விசேஷமாய்ப் புத்தியுடைத்தான சமஸ்த வஸ்துக்களைத் தமக்காகப் படைத்தாரென்கிறதுக்கு அர்த்தமேதெனில், புத்தியுள்ள இந்த வஸ்துக்கள் யாவும் தம்மை இவ்வுலகத்தில் அறிந்து நேசித்துச் சேவித்து மகிமைப்படுத்தின.

பிற்பாடு தம்மை என்றென்றைக்கும் மோட்சத்தில் முகமுகமாய்க் கண்டு ஏகமாய் நேசித்து ஸ்துதித்துத் தம்மிடத்திலிருக்கவும் வாழவுமே சர்வேசுரன் புத்தியுள்ள வஸ்துக்களைப் படைத்தாரென்று அர்த்தமாகும். ஆனால் சர்வேசுரன் அவர்களுக்காக விரும்பித் தேடின இந்த மகிமையை மேற்சொன்ன புத்தியுள்ள வஸ்துக்கள் மோட்சத்தை அடைந்த பிற்பாடு மாத்திரமே சரிவரச் செலுத்துவார்கள் என்கிறதினாலே, அந்த ஆத்துமாக்கள் தேவ மகிமையில் சேராதிருக்கும் வரையில் அந்தத் தேவ மகிமைக்கு ஒரு குறைவுபோல் இருக்குமல்லவோ? அதனால் இன்னும் மோட்சத்தை அடையாத உத்தரிக்கிற ஆத்துமாக்களை கட்டு மோட்சத்துக்குச் சேர்ப்பிக்கிறதே சர்வேசுரனை உத்தம பிரகாரமாய் மகிமைப்படுத்துவதாய் இருக்கிறது. இந்தப் புண்ணியம் அவருக்கு மிகவும் உகந்த புண்ணியமா. இருக்கிறதென்பது தப்பாது.

உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இஷ்டப்பிரசாதத்தோடு இருக்கிறபடியினாலே சர்வேசுரனுக்கு அதிக பிரியமுள்ள ஆத்துமாக்களாம். அவர் அந்த ஆத்துமாக்களை விசேஷ பட்சத்துடனே நேசித்துக்கொண்டு வருகிறாரென்கிறதைப் பற்றி, அவர்கள் படும் வேதனைகள் சீக்கிரமாய் முடிவேணுமென்றும் விரும்பிக்கொண்டிருப்பாரல்லவோ?ஆனால் அந்த ஆத்துமாக்கள் நீதிக்கு பரிகாரம் செய்ய வேண்டி இருக்கிறதினால் இந்தப் பரிகாரம் முடியும் மட்டும் அவை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்க வேணும் . ஆயினும் மனுஷனானவன் சர்வேசுரன் நியமித்த வண்ணமே அந்த ஆத்துமாக்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை நிறைவேற்றினால் அவர்கள் உடனே மோட்சத்துக்கு சேருவார்கள் அல்லவோ ? அன்றியும் சர்வேசுரன் தமக்கு ஒரு உபகாரத்தைச் செய்தது போல எண்ணி ,அப்படிப் பண்ணின மனுஷனுக்கு வேண்டிய நன்மைகளைத் தந்தருள்வார் என்பது அங்கீகரிக்கத்தக்க சத்தியமாகும்.

கடவுளான சர்வேசுரன் எல்லா இலட்சணங்களைக் கொண்டிருந்தாலும் அவருடைய தயவு எல்லாவற்றிற்கும் மேற்பட்டதாய் இருக்கிறதென்கிறதினாலே, யாவருக்கும் நன்மையைச் செய்வது அவருடைய சுபாவக் குணமல்லாமல் தண்டனை யிடுகிறது அவருக்கு வருத்தம் போல் காணப்படுகிறது. அதனாலே பழைய தீர்க்கதரிசியான எசெக்கியேலென்பவருடைய வாயினாலே அவர் முறைப்படுகிறாற்போல, "நாம் பூமியைச் சிதைக்காதபடிக்கு நம்மை எதிர்த்துப்பேசித் தடுக்கும்படியாக ஒரு மனுஷனை நாம் தேடியிருந்தாலும், இந்த மனுஷன் அகப்படவில்லை" என்று சர்வேசுரன் தாமே திருவுளம்பற்றினார். அவ்வாறே சர்வேசுரன் தம்முடைய நீதியைச் செலுத்தி உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கடின வேதனைகளைக் கட்டளை பிட்டுக் கொண்டு வந்தாலும், தம்முடைய கோபத்தை அமர்த்தவும், தாம் இடுகிற தண்டனைகளைத் தடுத்து நிறுத்தவும், அந்த ஆத்துமாக்களை மீட்கவும், மனுஷர் பிரயாசைப்படவேணுமென்று மிகவும் ஆசையாயிருக்கிறார். அவருடைய ஆசை அப்படியிருக்க, நாம் முடிந்தவரை உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப் படாதிருக்கக்கூடுமோ?

மேலும், யாதொரு பாவி பாவ வழியை விட்டு நன்னெறிக்குத் திரும்பினால் அதனால் மோட்சத்தில் வெகு சந்தோஷம் உண்டாகுமென்று சேசு கிறிஸ்துநாதர் சுவாமிதாமே திருவுளம் பற்றினார். மனந்திருந்தியபின் இந்தப் பாவியானவன் இன்னும் பூமியிலே இருக்கிறதினாலே மறுபடி கெட்டுப்போவானே, புண்ணியத்திலே நிலையாய் நிற்பானோவென்று சந்தேகமிருந்தாலும், அவனைக் குறித்து மோட்சத்தில் அவ்வளவு கொண்டாட்டம் இருக்கிறபோது, இஷ்டப்பிரசாதத்தில் நிலைக்கொண்ட உத்தரிக்கிற ஸ்தலத்தின் யாதோர் ஆத்துமம் உங்களாலே மீட்கப்பட்டுப் பரமகதியைச் சேர்ந்தால், சர்வேசுரனுக்கும் மோட்சவாசி களுக்கும் சம்மனசுகளுக்கும் எவ்வளவு அதிக சந்தோஷம் இருக்குமென்று சொல்லத்தகும் தன்மையல்ல.

பிதாப்பிதாவாகிற அபிரகாமென்பவர் தம்முடைய குமாரனான ஈசாக்கைச் சர்வேசுரனுக்குப் பலியாக வெட்டப்போகிற சமயத்திலேதானே ஒரு சம்மனசு வந்து "நில், நில், உன் பிள்ளையை மோசஞ்செய்யாதே"Dஎன்று தடுக்கிறபோது தகப்பனான அபிரகாமுக்கு எம்மாத்திரம் சந்தோஷம் உண்டானதென்று சொல்லக்கூடுமோ? அதைப்போல சர்வேசுரன் தம்முடைய நீதியின்படியே தாம் நேசிக்கிற ஆத்துமாக்களை உத்தரிப்பு ஸ்தலத்து வேதனைகளால் தண்டிக்கையில் மனுஷர் வந்து அவரைக் கெஞ்சி இரந்து அந்த ஆத்துமாக்களுக்காகப் பரிகாரத்தை ஒப்புக்கொடுத்து, "ஆண்டவரே நில்லும், நில்லும், இனி அந்த ஆத்துமாக்களின் பேரில் கோபமாயிராதேயும். தாமதமின்றி அவர்களை உம்மிடத்தில் சேர்த்தருளும் சுவாமி, சுவாமீ" என்று சொன்னால், சர்வேசுரனுக்கு மனோவாக்குக்கெட்டாத சந்தோஷம் உண்டாகுமல்லவோ?

மேலும் தகப்பனொருவன் தான் மிகவும் நேசிக்கிற தன்னுடைய ஏக குமாரனை ஒரு குற்றத்தைப்பற்றித் தண்டிக்கிறபோது தாயானவள் வந்து 'பொறுத்துக் கொள்ளும், பொறுத்துக்கொள்ளும், உம்முடைய மகனை அடிக்காதேயும்' என்று அவனுடைய கையை நிறுத்தினால் தகப்பனுக்கு சந்தோஷமாய் இருக்குமல்லவா? சர்வேசுரன் உத்தரிக்கிற ஆத்துமாக்களை எந்தத் தகப்பனும் தன் பிள்ளைகளை நேசிக்கிறதைவிட மிகவும் அதிகமாய் நேசிக்கிறாரென்கிறதுக்குச் சந்தேகமில்லையே. ஆனதினாலே அவர் நீதியின்படியே அந்த ஆத்துமாக்களுக்கு ஆக்கினை இடுகிறபோது, நாம் அவருடைய பாதத்திலே விழுந்து "பொறுத்துக்கொள்ளும், ஆண்டவரே பொறுத்துக் கொள்ளும், கோபமாய்த் தண்டிக்காதேயும் சுவாமீ, சுவாமி "என்று நாம் பிரார்த்தித்துக்கொண்டால், அவருக்கு அந்த ஆத்துமாக்களின்பேரில் இரக்கம் வருகிறதுமல்லாமல் நமது பேரில் சந்தோஷப்படுவார்.

இவ்விஷயத்தில் சொல்லத்தகும் இன்னும் அநேக நியாயங்களிருந்தாலும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருத்தல் சர்வேசுரனுக்கு உகந்த புண்ணியமென்றும், உத்தம தேவ சிநேகமென்றும் தெளிவாய்க் காண்பிக்கிறதுக்காக இப்போது விவரித்தது போதுமென்றெண்ணுகிறோம்.

உங்களுக்குக் கதியும், சகல நன்மையுமாயிருக்கிற சர்வேசுரனுடைய மகிமையைப் பிரபலியப்படுத்த விரும்புகிற புண்ணியாத்துமாக்களே! உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருப்பதே அதற்கு உத்தம வழியென்று அறிந்து, அந்த ஆத்துமாக்களை மீட்க நீங்கள் செய்யும் தவ தான தர்மமெல்லாவற்றையும் ஒப்புக்கொடுப்பீர்களாக.

அனந்த தயைச் சுருபியுமாய் உங்களுக்கு உயிரை முதலாய்த் தந்தருளினவருமாய் உங்களை மட்டற்ற அன்போடு நேசிக்கிறவருமாயிருக்கிற சர்வேசுரனுக்கு உங்களுடைய பட்சாதாபத்தைக் காண்பிக்க விரும்புகிற புண்ணியாத்துமாக்களே , உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்கிறதே அதற்கு உத்தம வழியென்று அறிந்து, அந்த ஆத்துமாக்களுக்காக வேண்டி உங்களாலே முடிந்த மட்டும் பிரயாசைப்படுவீர்களாக. ஞான சத்துருக்களுக்குள்ளே கிடந்து இந்தக் கண்ணீர் கனவாயிலே நின்று பிரலாபித்து உங்கள் பேரிலே தேவ உதவியும் தேவாநுக்கிரகமும் வர வேணுமென்கிற புண்ணியாத்துமாக்களே , உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்கிறதே அதற்கு உத்தம வழியென்று அறிந்து, உங்களுடைய நாக்கு பேச்சில்லாமற்போனாலும், உங்களுடைய கை அசைவில்லாமற்போனாலும், வேதனைப் படுகிற அந்த ஆத்துமாக்களை ஒருபோதும் மறவாமல் இருப்பீர்களாக.

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் 

சேசுவின் திவ்விய இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

ஆண்டவரான சர்வேசுரா சகலமான மரித்தோர்களுக்கு உம்முடைய இராச்சியத்தின் நித்திய இளைப்பாற்றியைக் கொடுத்தருளும். இந்த மரித்தோர்கள் உம்முடைய திரு நாமத்தை விசுவ சித்து நேசித்து நம்பியிருக்கிறதினாலே, மனுஷனுடைய கண் காணாததுமாய், அவனுடைய செவி கேளாததுமாய், அவனுடைய மனம் அறியாததுமாய் இருக்கிற பேரின்ப வீட்டின் நன்மைகளை அவர்களுக்குக் கிருபையாய்க் கொடுத்தருள வேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறோம் சுவாமீ. ஆமென்.

பன்னிரண்டாந்தேதியில் செய்யவேண்டிய நற்கிரியை 

உத்திரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு தவக்கிரியையைச் செய்கிறது.

புதுமை 

ஸ்பெய்ன் இராச்சியத்தில் உயர்ந்த செல்வந்தர்களான தாய் தகப்பனிடத்திலிருந்து பிறந்த கோர்தோனென்ற அர்ச்.கத்திரினம்மாள் மகிமையான பேரை அடைந்து வாழ்ந்துகொண்டிருந்தாள். மற்ற சிறு பிள்ளைகள் விளையாட்டுக்களை மாத்திரமே தேடுகிற வயதில் அவள் புண் ணியத்தின் பேரில் அதிக கவலையைாயிருந்த படியினாலே அவளைச் சம்மனசு என்பார்கள். அவளுக்கு எட்டுப் பிராயமாகிறபோது அவளுடைய தகப்பன் இறந்துபோனான்.

சில நாட்களுக்குப் பிற்பாடு அவனுடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்புக்குள்ளே கொடிதாய் உபாதைப்படுகிறாற்போல அவளுக்குக் காண்பித்துச் சொன்னதாவது என் பிரியமுள்ள மகளே! நீ என் ஆத்துமத்துக்காக வேண்டிய தபசைப் பண்ணு  மட்டும் இந்த அகோர நெருப்பிலே கிடப்பேன் என்றது. இதைக்கேட்டு அவளுடைய இருதயம் அம்பினால் ஊடுருவப்பட்டாற்போலே அவள் அதிக துக்கப்பட்டதுமல்லாமல், கொஞ்ச வயசுள்ளவளாயிருந்தாலும், மெல்லிய சரீரமுள்ளவளாய் இருந்தாலும், அப்போதுதானே பெரிய தபோதனர்கள் முதலாய்ச் செய்யாத தவக்கிரியைகளைச் செய்யத் தொடங்கினாள். கசை முள்ளொட்டியானம் அவள் கையில் இல்லாததினாலே குதிரைச் சவுக்கைக் கொண்டு தன்னை அடித்துக்குதிரை முள்ளைக்கொண்டு தன்னுடைய உடலைக் கீறி இரத்தம் ஏராளமாய் ஒடப்பண்ணுவாள். அவள் சொரிந்த கண்ணிரினாலும் பொழிந்த ஜெபங்களினாலும் சிந்தின இரத்தத்தினாலும் அவளுடைய தகப்பன் தேவ நீதிக்குச் செலுத்தவேண்டிய பரிகாரக்கடன் தீர்ந்து தேவ கோபமும் அமர்ந்தது.

அப்போது தகப்பனானவன் மோட்ச வாசிகளுடைய மகிமையால் சூழப்பட்டுத் தன் மகளுக்குத் தரிசனையாகி, என் மகளே! சர்வேசுரன் உன்னுடைய தவத்தைக் கிருபையாய் ஏற்றுக்கொண்டார். அதனாலே உத்தரிக்கிற ஸ்தலத்தைவிட்டு நான் மோட்ச பேரின்ப வீட்டுக்குப் போகிறேன். உன்னுடைய தவமானது சேசு கிறிஸ்து நாதருக்கு மிகவும் பிரியமுள்ளதானதினாலே அவர் உன்னைத் தமக்கு நேசமுள்ள மகளாகத் தெரிந்து கொண்டார். நீ உன்னை ஆத்துமாக்களுக்குப் பலியாய் ஒப்புக்கொடுத்து அப்படியே நீ சாகுமளவும் தபசுப் பண்ணுவது தேவ சித்தம் என்று சொல்லி மறைந்துப் போனான். மிக்க தைரியமுள்ள இந்தக் கன்னியாஸ்திரியானவள் அது தேவசித்தமென்று அறிந்து, தன்னுடைய ஆயுசுக் காலமெல்லாம் ஆத்துமாக்களைக் குறித்துப் பயங்கரமான தவத்தைச் செய்துக்கொண்டுவந்தாள்.

அத்துவான வனாந்தரத்திலே வனவாசியாய் ஒரு கெபியிலே வசித்து முள்ளொட்டி யானத்தைத் தரித்து, அவ்விடத்தில் விளையும் கீரைகளைச் சாப்பிட்டுத் தினந்தினம் ஒரு சந்தியாய் இருப்பாள். சில வருஷத்திற்குப்பிற்பாடு ஒர் அலுவலைப்பற்றி அர்ச். தெரெசம்மா உண்டுபண்ணின தொல்லேது நகரத்துக் கர்மேல் மடத்துக்கு வந்த சமயத்தில், தன்னை ஒருநாள் மூன்று மனநேரம் கசையால் அகோரமாய் அடித்துக்கொண்டாள். அதையும் அவள் பண்ணின மற்றத் தவங்களையும் அம்மடத்துக் கன்னியாஸ்திரிகள் கண்டு அப்படிச் செய்வது மகாக் கொடுமையாகையால், இந்த அருந்தவத்தைக் குறைக்கவேணுமென்று அவளை மன்றாடினார்கள்.

​அதற்கு அதிசயமான இந்தக் கன்னியாஸ்திரியானவள் "அவியாதெரியும் நரகில் பாவிகள் உபாதிக்கப் படுகிறதையும், அகோரமாய் எரியும் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் ஆத்துமாக்கள் தண்டிக்கப்படுகிறதையும் கண்டேனே. இவையெல்லாம் கண்ட பிற்பாடு, பாவிகள் நரகத்திலே விழாதபடிக்கு அவர்களை நிறுத்தவும், ஆத்து மாக்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கவும்    என்னாலான தவமெல்லாம் செய்யாதிருக்கக் கூடுமோ ? அதற்காகவே தேவ நீதிக்கு என்னைப் பலியாக ஒப்புக் கொடுத்தேன் ' என்றாள்.

கிறிஸ்துவர்களே! இந்தச் சுகிர்த புதுமையைக் கேட்டபிற்பாடு அதிசயப்படவேண்டியதுமல்லாமல், உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து நீங்கள் செய்கிற தவக்கிரியைகள் மிகவும் கொஞ்மென்று அறிந்து, இனிமேல் என்னத்தைச் செய்யப்போகிறீர்களென்று ஆராய்ந்து பார்க்கக் கடவீர்களாக.

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.