நவம்பர் 11

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி பண்ண வேணுமென்கிற காரணங்களைக் காண்பிக்கிற பொது விளக்கமாவது.

தியானம்.

முன் சொன்ன தியானங்களில் உத்தரிக்கிறஸ்தலம் உண்டென்றும், அதில் எண்ணிக்கையில்லாத ஆத்துமாக்கள் மனோவாக்குக்கெட்டாத வருத்தங்களை அநுபவிக்கிறார் களென்றும் எடுத்துக்காட்டினோம். இப்போது அந்த ஆத்துமாக்களுக்கு உதவி ஒத்தாசை பண்னவேணுமென்கிற விசேஷ காரணங்களை விவரித்துச் சொல்லுவோம். ஆயினும் முதலில் நாம் எந்தப்பிரகாரமாய் இந்த உதவி ஒத்தாசை செய்யலாமென்று கொஞ்ச நேரம்  ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம் மனுஷனானவன்  இரு வகை திரவியங்களைச் சம்பாதித்துக் கொள்ளலாம் . அதாவது , ஆத்துமத்தைச் சேர்ந்த திரவியங்களும் சரீரத்துக்கடுத்த திரவியங்களுமாம் . பணம் ,காசு, உடமை, காணி ,வீடு, வாசல், இது முதலானவைகள் சரீரத்துக்கடுத்த ஆஸ்தி திரவியங்கள் தான். ஜெபத்தினாலும் தபத்தினாலும் தர்மத்தினாலும் மற்ற எந்தப் புண்ணியங்களினாலும் வரும் பேறுபலன்களாகிய மோட்சத்துக்குச் சுதந்திரமும் மற்ற ஞான வரங்களும், ஆத்துமத்தைச் சேர்ந்த ஞான திரவியங்களாம்.

இப்போது சொன்ன உலக திரவியங்கள் மனுஷனுக்குச் சொந்தமாயிருக்கிற படியினாலே, அவன் அவைகளைத் தன் மனதின்படியே செலவழிக்கச் சுதந்திரவானாயிருகிறானென்று யாரும் சொல்லுவார்களல்லவோ ?அதைப்போல அவன் அடைந்த ஞானத் திரவியங்கள் அவனுக்குச் சொந்த ஆஸ்தியாயிருந்தாலும் அவைகளைச் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு  கீழ்படிந்து செலவழிக்க  சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறானென்று சொல்லவேனுமல்லவோ? இவ்வுலக ஆஸ்தியுள்ளவன் தன்னுடைய திரவியங்களைத் தன் சொந்த அவசரங்களுக்குச் செலவு பண்ணலாமென்றிருக்கிற பிரகாரமே, அவைகளைப் புறத்தியாருடைய அவசரங்களுக்காகவும் செலவழிக்கலாமல்லவோ?

அப்படித்தானே ஞானத் திரவியங்களுக்கு உடையவன் அவைகளையெல்லாம் தனக்கு வைத்துக்கொள்ளலாமென்கிறதுபோலே, அவைகளைச் சர்வேசுரன் கட்டளையிட்ட பிரகாரமாய் மற்றவர்களுக்கும் கொடுக்கலாமன்றோ?

அதெப்படியென்றால், இராஜாவுக்கு ஒரு மனுஷன் ஒரு பெரிய சகாயத்தைச் செய்தான் .அதனாலே அவன் பேரில் இராஜா சந்தோசப்பட்டு அவனுக்கு யாதோர் பெரிய வெகுமதி கொடுக்கப் போகிற சமயத்தில் இந்த மனுஷன் இராஜாவைப் பார்த்து  நான் பெற்றுக் கொண்ட இந்த வெகுமதியை எனக்குக் கொடுக்காமல் எனது சிநேகிதனான இன்னானுக்கு அளிக்க வேண்டுமென்று மன்றாடுகிறேன் என்றால் அவனுடைய மன்றாட்டுக்கு இராஜா இரங்கி அவன் கேட்டது போல செய்வான் அன்றோ ? அப்படியே ஜெப தான தர்மங்களினாலும் மற்ற புண்ணியங்களினாலும் மனுஷன் சுதந்தரித்த ஞான திரவியங்களை சர்வேசுரனை மன்றாடி உயிரோடு இருக்கிறவர்களுக்காவது செத்தவர்க களுக்காவது வரப்பண்ணக்கூடுமென்கிறதற்குச் சந்தேகமில்லை.

இவ்விஷயத்தில் ஒரு நியாயம் அறியவேண்டியது. அதாவது: எந்தப் புண்ணியத்திலும் மூன்று காரியம் அடங்கியிருக்கிறதாய் வேத சாஸ்திரிகள் நிச்சயிக்கிறார்கள். அதேதென்றால், பேறுபலனும், மன்றாட்டுப் பலனும் பரிகாரப்பலனும் ஆகிய இம்மூன்றுமாம். புண்ணியத்தைச் செய்தவன் பேறுபலனால் சர்வேசுரனுக்குப் பிரியப்படுகிறான்.

மன்றாட்டுப்பலனால் தனக்காவது மற்றவனுக்காவது யாதோர் சகாயத்தைப் பெற்றுக்கொள்ளுகிறான், பரிகாரப்பலனால் தன் பாவங்களுக்காவது தான் குறிக்கிற வேறு மனுஷனுடைய பாவங்களுக்காவது பரிகாரம் பண்ணுவான். அதெப்படி ஆகுமென்று ஓர் உவமையினால் காண்பிக்கலாம். அதேதெனில், ஒருவன் சுத்தக் கருத்தோடு ஒருசந்தியாய் இருக்கிறான். அது புண்ணியமும் தவமுமாய் இருக்கிறதினாலே தனக்கு வருகிற பேறுபலனால் சர்வேசுரனுக்குப் பிரியப்பட்டு வெகுமதி அடைவான். இந்த ஒரு சந்தியினிமித்தம் தன்னுடைய வியாதியாவது தன் சினேகிதனுடைய வியாதியாவது நீங்கவேணுமென்று கேட்டால், இந்த மன்றாட்டுப் பலனால் அது பெற்றுக் கொள்ளத்தக்கதாயிருக்கும்.

ஒருசந்தியாயிருக்கிறது கடினமும் வருத்தமுமாய் இருக்கிறபடியினாலே இந்த வருத்தத்தைத் தன் பாவங்களுக்காவது புறத்தியாருடைய பாவங்களுக் காவது ஒப்புக்கொடுத்தால் அது பரிகாரப் பலனால் பரிகாரமாகும். இதிப்படியாயினும் பேறுபலன் மனுஷனுக்கு: சுய தீர்மானமாயிருக்கிற படியினாலே, அவனுக்கு செல்லுமேயல்லாமல் மற்ற யாருக்கும் கொடுக்கப்படுகிற தில்லை என்பது மெய்தான். ஆனால் மன்றாட்டுப் பலனையும் பரிகாரப் பலனையும் யாருக்கும் கொடுக்கலாமென்கிறதினாலே, அவைகளை உத்தரிக்கிற ஆத்துமாக் களுக்கு ஒப்புக்கொடுத்தால், சர்வேசுரனுடைய மட்டற்ற கிருபையினாலே அந்த ஆத்துமாக்கள் செய்ய வேண்டிய பரிகாரமும் படவேண்டிய உத்தரிப்பு வேதனையும் குறையுமென்கிறது குன்றாத சத்தியமாம். இதெல்லாம் அதிக தெளிவாகும்படிக்கு இன்னும் ஓர் உவமையினால் வெளியாக்குவோம்.

அதென்ன வென்றால் ஒரு மனுஷன் வெகு கடன்பட்டு அடைக்க வகையில்லாமல் நடுவனால் சிறையில் வைக்கப்பட்டு அதிக வருத்தப்படுகிறான் . அதில் வேலை செய்யக்கூடாததினாலும் , பிச்சை  இரக்கக்  கூடாததினாலும் ஒன்றும் சம்பாதிக்கமாட்டாமல் தனக்கு விதித்த காலமுடியுமட்டும் இந்த நிர்ப்பாக்கியத்தில் இருப்பானல்லவோ? அவனுடைய அவதியை அறிந்த தர்மிஷ்டனொருவன் கொடுக்கவேண்டிய கடனை செலுத்தி அவனைச் சிறையிலிருந்து மீட்டிரட்சிக்கிறான். உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமாக்கள் மட்டிலும் அப்படித்தான் ஆகிறதென்று யாவருக்கும் புலப்படும். முன் சொன்னபிரகாரமாய் நாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி ஒத்தாசை பண்ணக்கூடும் என்கிறதே சர்வேசுரனு டைய பெரிய கிருபையும் மட்டற்ற சகாயமுமாய் இருக்கிறதல்லாமல் மற்றபடியல்ல.

இப்போது காண்பித்த வண்ணமே கிறிஸ்தவர்கள் சர்வேசுரனை மன்றாடி உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு சகாயம் பண்ணக் கூடுமென்பது சத்திய விசுவாசமாகையால் அப்படிச் செய்வது எவ்வளவு நல்லதென்றும் அவசரமுள்ளதென்றும் இனி சொல்லப் போகிற தியானங்களில் தேவ கிருபையைக் கொண்டு காண்பிக்க முற்படுவோம். கிறிஸ்துவர்களே! நீங்கள் ஆத்துமாக்களைக் குறித்துச் செய்யும் ஜெபங்களினாலும் தர்மங்களினாலும் ஆத்துமாக்கள் படுகிற வேதனைகள் முடியும் அல்லது குறையும் என்று அர்ச் அகுஸ்தீனூஸ் நிச்சயமாய் வசனித்தார் அதனாலே நீங்கள் தக்க பிரகாரமாய் ஆத்துமங்களுக்குச் செய்கிறதெல்லாம் வீணாய்ப் போகாமல் பலிக்குமென்கிறதைப் பற்றி மகா சுறுசுறுப்போடே ஆத்துமாக்களுக்கு உதவி பண்ண முன்வரக்கடவீர்கள்.

மேலும் இராஜாவுக்குத் துரோகியாய் இருக்கிறவன், தான் அவனிடத்தில் கேட்கும் மன்றாட்டை அடைவானோவென்ன ? சொல்லுங்கள். அவனடையமாட்டானென்றால் நீங்கள் ஆத்துமாக்களைக் குறித்து வேண்டிக் கொள்ளும்போது பாவத்தால் உங்கள் ஆண்டவருக்குத் துரோகிகளே இல்லையோவென்று பார்க்கவேண்டாமோ? சாவான பாவத்தோடு இருப்பீர்களானால் முதலாவதாக உத்தம மனஸ்தாபப்படவேண்டும்.

கடைசியிலே மனுஷர் செய்யும் புண்ணியங்களில் கருத்தும் கவனமும் பக்தியும் இல்லாததினாலே அந்தப் புண்ணயங்களுக்குச் செல்லும் பலன்களை அடையாமல் போகிறார்களாம். அதனாலே நீங்கள் ஆத்துமாக்களுக்கு செய்யும் செபங்களையும் தர்மங்களையும் வேண்டிய கருத்தோடும் பக்தியோடும் செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக,

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் 

சேசுவின் திவ்விய இருதயமே ! எங்கள் பேரில்  இரக்கமாயிரும்.

செபம்

நித்திய ஜீவியமுள்ள கடவுளின் குமாரனாகிய சேசுக்கிறிஸ்துநாதரே சுவாமீ, தேவரீர் உலகத்தின் இரட்சணியத்துக்காக மத்தியான வேளையில் சிலுவை பரத்தில் அறையுண்டு உயர்த்தப்பட்டு எங்கள் பாவங்களுக்கு விமோசனமாக உம்முடைய விலைமதியா திரு இரத்தத்தைச் சிந்தினீரே, அடியோர்கள் மோட்ச இராச்சியத்தில் பிரவேசித்து நித்திய ஆனந்த மகிமைப் பிரதாபத்தை அடையத்தக்கதாக அநுக்கிரகம் செய்தருள வேணுமென்று தேவாரைத் தாழ்ச்சி வணக்கத்துடனே மன்றாடுகிறோம் சுவாமீ, ஆமென்.

பதினோராம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:

 உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துச் சிலுவை பாதை செபிக்கிறது. கூடாதுபோனால் சேசுக்கிறிஸ்து நாதருடைய திருப்பாடுகளைக் குறித்து 14-பரமன்_ மந்திரமும் 14-பிரியதத்த மந்திரமும் வேண்டிக்கொள்ளுகிறது.

புதுமை.

 கர்த்தூசியான் சபையில் உட்பட்ட பெரிய சாஸ்திரியான  சூரியூஸ் என்பவர் அர்ச் கிறிஸ்தீனம்மாளுடைய சரித்திரத்தை எழுதினார். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் இந்த அர்ச்சியசிஷ்டவள் மிகவும் பக்தியாய் இருந்ததினாலே  ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாக, சொல்லிலும் நினைவிலும் அடங்காத தவக்கிரியைகளை நடத்திக்கொண்டு வருவாள். ஒருநாள் ஒர் அதிசயமான காட்சியைக் கண்டாள். அதாவது: அவளுடைய ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிந்து
சம்மனசுக்களால் தூக்கப்பட்டு உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போய் அதில் ஆத்துமாக்கள் அநுபவிக்கும் கொடிதான வேதனைகளைப் பற்றும்பற்றாய்த் தரிசித்துக் கண்டாள்.

 அதிலிருந்து மோட்ச பேரின்ப விட்டுக்குப்போய் அப்பரம இராச்சியத்தில் மோட்சவாசிகளுக்கு உண்டான மனோ வாக்குக்கெட்டாத சந்தோஷங்களையும் மகிமைகளையும் தெளிவாய்ப்பார்த்து அறிந்தாள். இதெல்லாவற்றையும் தரிசித்த பிறகு சர்வேசுரன் அவளுக்குச் சொன்னதாவது கிறிஸ்தீனம்மாளே. இப்போது முடியாத பாக்கிமுள்ள பரம ஸ்தலத்துக்கு வந்தாய். இதிலே தங்கியிருக்க வேனுமோ அல்லது திரும்பப் பூமியிலே இறங்கி உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வேண்டிப் பேறு பலன்களை அடையவும் அருந்தவத்தைச் செய்யவும் போகவும் வேண்டுமோ ? இவ்விரண்டில் எது உனக்கு அதிக விருப்பமாக இருக்கிறதென்று சொல்லுவாயாக என்றார் . அதற்கு அவள் விடையாக  நிர்பாக்கியமான ஆத்துமாக்களுக்காக வருத்தப்படவும் தகனப்பலியாகவும் இருக்கத்தக்கதாக உம்முடைய சித்தமிருந்தால் திரும்பப் பூமியிலே இருக்கத் தெரிந்து கொள்ளுகிறேன் " என்றாள்

இந்தக் காட்சி யைத் கண்ட பிற்பாடு அர்ச். கிறிஸ்தீனம்மாள் ஆத்துமாக்களைக் குறித்து முன்னிலும் நூறுபங்கு அதிக அருந்தவக்கிரியைகளைச் செய்துகொண்டு வருவாள். அநேக நாள் யாதோர் ஆகாரம் புசிக்காமலிருப் பாள், தன்னுடைய மிருதுவான சரீரத்தை இரத்தம் திரளாய் ஒடுமட்டும் அகோரமாய் அடிப்பாள், கூர்மையான முட்செடிகளுக்குள்ளே புரளுவாள் . எவ்வகையிலும் தன்னை உபாதிக்கத் தேடுவாள் . அவள் தன்னைப் படுத்துகிற கொடிய வேதனைகளைக் கண்டு மற்றவர்கள் அதிசயப்பட்டு கிரிஸ்தீனம்மாள் இப்படி உயிர் பிழைக்கிறது பெரிய புதுமை என்பார்கள் . அப்படி அவள் யாதொன்றையும் அநேக வருஷம் குறையாமல் அருந்தவத்தைச் செய்து வந்ததினால் திரளான ஆத்துமாக்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்து மீட்டு மோட்ச பேரின்பத்துக்குச் சேர்த்தாள் என்பது அதிசயமல்ல . அவள் அப்படி மீட்டு இரட்சித்த ஆத்துமாக்கள் அவளுக்குக் காணப்பட்டு அவளை வாழ்த்தி தோத்திரம் பண்ணுவார்கள் . கடைசியிலே அவளும் அந்த எண்ணிக்கையில்லா ஆத்துமாக்களால் சூழப்பட்டு பாக்கியமாய் மரித்து மோட்ச பேரின்பத்திலே சேர்ந்தாள்

கிறிஸ்தவர்களே ! உயர்ந்த கோத்திரத்தில் பிறந்தவளுமாய் மெல்லிய சரீரமுள்ளவளுமாய் இருந்த கிரிஸ்தீனம்மாள் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக அவ்வளவு அருந்தவக் கிருத்திரியங்களை நடப்பித்தாள் என்று கண்டு , நீங்கள் இந்த ஆத்துமங்களைக் குறித்து ஒன்றும் செய்யாமல் இருக்கக் கூடுமோ ? எல்லா நன்மைகளும் நிறைந்த மோட்சத்தை அடைவதற்கு உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் பக்தியாய் இருக்கிறது நல்ல வழி என்று அறியக் கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.