ஜனவரி 11

அர்ச். எயுஜினுஸ் - பாப்பரசர், வேதசாட்சி (கி.பி.139).

எயுஜினுஸ் என்பவர் அர்ச். இராயப்பர் சிம்மாசனத்தில் வீற்றிருந்து திருச்சபையை நான்கு வருடங்கள் ஆண்டு வந்தார். அக்காலங்களில் வேத கலகம் நடக்காமலிருந்தாலும் சில பதிதரால் திருச்சபையில் குழப்பம் உண்டாயிற்று. 

அதெப்படியெனில், செத்ரோ என்பவன் ஆட்டுத்தோலை அணிந்துகொண்ட ஓநாயைப்போல் உரோமையில் பிரவேசித்து, கடவுள் இருவர் என்றும், சேசுநாதர் தேவமாதாவிடத்தினின்று பிறந்த மெய்யான மனிதனாயிராமல் ஓர் நிழலைப்போல் காணப்பட்டவரென்றும் தப்பறையான போதனைகளைப் போதித்துவந்தான். 

இதையறிந்த பாப்பாண்டவர் எயுஜினுஸ் அந்த பதிதனைச் சபித்தார். அந்த கள்ளப் பதிதன், தன் தப்பறைக்காக மனஸ்தாபப்படுவதாக பாசாங்கு காட்டினதின்பேரில் சாபத்தினின்று நீக்கப்பட்டான். மறுபடியும் அவன் மேற்கூரிய பதித போதனைகளைப் போதித்தபடியால், இரண்டாம் முறையும் திருச்சபை சாபத்துக்குள்ளானான். 

வலந்தீன் என்னும் வேறொருவன், தான் விரும்பிய மேற்றிராணியார் பட்டம் தனக்கு மறுக்கப்பட்டதினால் கோபமும் அகந்தையும் கொண்டு, உரோமைக்குச் சென்று தப்பறையான பல பதிதப் படிப்பினைகளைப் போதிக்க முயற்சித்தபோது, மிகவும் சாந்தகுணமுள்ள இந்தப் பாப்பரசர் அவனுக்கு சாபமிட்டுத் தண்டியாமல் அவனுக்கு அன்பு காட்டி புத்தி சொல்லி, அவனை மனந்திருப்ப முயற்சிக்குங் காலத்தில் அவர் மரணமானார். 

இவர் வேதசாட்சியாகக் கொல்லப்படாவிடினும் பலமுறை வேதத்தினிமித்தம் உபாதிக்கப்பட்டபடியால் வேதசாட்சி என்றும் அழைக்கப்படுகிறார்.

யோசனை

தொத்து வியாதிக்காரருடன் பழகுகிறவர்களுக்கு நோய் தொத்துவது போல், குருக்கள், மேற்றிராணியார் முதலிய ஞானப் போதகர்களை இகழ்ந்து பேசும் கிறிஸ்தவர்களுடைய கூட்டத்தைவிட்டு நாம் விலகாவிட்டால் நமது ஆத்துமத்திற்கு சேதமுண்டாகும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். தெயதோசியுஸ், ம. 
அர்ச். எக்வின், மே. 
அர்ச். சால்வியுஸ், மே.