ஜனவரி 10

அர்ச். வில்லியம் - மடாதிபதி, மேற்றிராணியார் (கி.பி. 1209).

இவர் பிரான்சு தேசத்தில் உத்தம கோத்திரத்தில் பிறந்து புண்ணியவாளரான ஒரு குருவானவரிடத்தில் கல்விப் பயின்றார். 

இவர் சிறு வயதிலேயே பெயர் பெருமையையும், சுக செல்வத்தையும் புறக்கணித்துத் தள்ளிவிட்டு, குருப்பட்டம் பெற்றபின் தமக்கு அளிக்கப்பட்ட மேலான அலுவலுக்குச் சம்மதியாமல் சன்னியாச மடத்தில் சேர்ந்து வெகு உருக்கத்துடன் நெடு நேரம் ஜெபம் செய்துவருவார். 

ஐம்புலன்களையும், உணர்ச்சிகளையும் அடக்கி ஒறுத்து, கடின தபஞ்செய்து இடைவிடாமல் மரணத்தைப்பற்றி தியானிப்பார். இவருடை புண்ணியங்களைக் கண்ட அரசரும் பிரபுக்களும் அதிசயித்து அவருக்கு மரியாதை செலுத்திவந்தார்கள். 

மேலும் இரண்டு மடங்களுக்கு சிரேஷ்டராகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அவைகளைத் திறமையுடன் நடத்தி வந்தார். இவர் பூர்ஜெஸ் நகரின் மேற்றிராணியாராகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அர்ச். பாப்பானவருடைய கட்டாயத்தின்பேரில் அதற்குச் சம்மதித்து, மேற்றிராணியார் அபிஷேகம் பெற்றபின் முன்னிலும் அரும்பெரும் புண்ணியங்களைச் செய்துவந்தார். 

மயிர்ச்சட்டையைத் தரித்துக்கொண்டு, மாமிசத்தை அறவே வெறுத்து, கடுந்தவம் செய்து தமது மேற்றிராசனக் கிறீஸ்தவர்களை வெகு அன்புடனும், தயவுடனும் நடத்தி, தமது புத்தி ஆலோசனையால் கணக்கற்ற பாவிகளை மனந்திருப்பி, அநேக பதிதரை வேதத்தில் சேர்த்துவந்தார். 

தமக்கு மரணம் கிட்டியிருப்பதை அறிந்து, வெகு பக்தி விசுவாசத்துடன் கடைசி தேவதிரவிய அநுமானங்களைப் பெற்று, சாம்பல் மேல் படுத்துக்கொண்டே அர்ச்சியசிஷ்டவராக உயிர் விட்டார்.

யோசனை 

நாம் புண்ணிய வழியில் வாழ வேண்டுமானால் அகத்திலும் புறத்திலும் ஒறுத்தலை அனுசரித்து நமது அந்திய காலத்தைப்பற்றி யோசிக்கக்கடவோம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஆகாத்தோ , பா. 
அர்ச். மார்ஸியான், கு.