அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 08

ஏழாம் முத்திரை உடைக்கப்பட்டதும், ஏழு தூதர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டதும், நாலுபேர் எக்காளம் ஊதுவதும் வருமாறு.

1. அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, ஏறக்குறைய அரைமணி நேரமளவும் பரலோகத்தில் அமைதல் உண்டாயிற்று.

* 1. இந்த அதிகாரத்தில் சொல்லப்படுகிற காட்சியில் அர்ச். அருளப்பர் பொதுத் தீர்வையைக் காண்கிறார்.

2. அப்போது தேவசமுகத்தில் நிற்கிற ஏழு தூதர்களையும் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.

3. பின்பு வேறொரு தூதன் வந்து, பொன் தூபக்கலசத்தைக் கையில் ஏந்திக்கொண்டு பலிபீடத்துக்கு முன்பாக நின்றார். அப்போது சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற பொற்பீடத்தின்மேல் சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய ஜெப காணிக்கையை ஒப்புக்கொடுக்கும்படி மிகுந்த தூபவர்க்கங்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. (சங். 140:2.)

4. ஆகையால் அர்ச்சியசிஷ்டவர்களுடைய ஜெபங்களிலிருந்து கொடுக்கப்பட்ட தூபவர்க்கப் புகையானது தூதன் கையிலிருந்து சர்வேசுரனுக்கு முன்பாக எழும்பிற்று.

5. பின்பு தூதன் அந்தத் தூபக்கலசத்தை எடுத்து, அதைப் பீடத்தின் நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினார். உடனே இடிகளும் முழக்கங்களும் மின்னல்களும் பலத்த பூமியதிர்ச்சியும் உண்டாயின.

6. அப்போது ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்களும் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தம் பண்ணினார்கள்.

7. அப்படியே முதல் தூதன் எக்காளம் ஊதினான். அப்போது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகிப் பூமியின்மேல் கொட்டப்பட்டது. அதனாலே பூமியின் மூன்றி லொரு பங்கு எரிந்துபோய், மரங்க ளின் மூன்றிலொரு பங்கும் தீய்ந்து, பசும் புல்லெல்லாம் வெந்துபோயிற்று.

8. பின்பு இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்போது பெரிய எரிமலை போன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. உடனே சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாய்ப்போக,

9. சமுத்திரத்திலுள்ள ஜீவஜெந்துக் களில் மூன்றிலொருபங்கு மடிந்து, கப்பல்களிலும் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

10. மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்போது ஒரு பெரிய நட்சத்திரம் தீவர்த்தியைப்போல் எரிந்து வானத்தினின்று விழுந்தது. அது ஆறு களில் மூன்றிலொருபங்கின் மேலும் நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.

* 10. இதில் சொல்லப்பட்ட நட்சத்திரம் தேவநீதிக்கோபத்தை நிறைவேற்றுவதற்குக் குறிக்கப்பட்ட ஒரு சம்மனசாயிருக்கலாம், அல்லது உருவகமான ஒரு எரிநட்சத்திரமா யிருக்கலாம். (கிராம்போன்.)

11. அந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர். ஆகையால் தண்ணீரில் மூன்றிலொருபாகம் எட்டியைப்போல் கசப்பாயிற்று. அப்படிக் கசப்பான தண்ணீரினால் மனிதரில் அநேகர் மாண்டுபோனார்கள்.

* 11. தண்ணீர் கசப்பாயிற்று என்பது தண்ணீர் கெட்டு, கொள்ளைநோய்க்கு ஏதுவாயிற்றென்று அர்த்தமாம். (கிராம்போன்.)

12. நான்காம் தூதன் எக்காளம் ஊதினான். அப்போது சூரியனில் மூன்றி லொருபங்கும், சந்திரனில் மூன்றிலொரு பங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கும் அடிபட்டு, அததுகளில் மூன்றி லொருபங்கு இருளடைந்தது. பகலிலே மூன்றிலொரு பங்கும் இரவிலே மூன்றி லொருபங்கும் ஒளியற்றுப்போயிற்று.

13. பின்பு வானத்தின் மத்தியில் ஒரு கழுகு பறந்துவரக் கண்டேன். அது பேரொலியிட்டு: எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களுடைய எக்காள சத்தங்களினால்: பூமியில் குடியிருக்கிறவர்களுக்குக் கேடு, ஐயோ! ஐயோ! ஐயோ! என்று சொல்லக் கேட்டேன்.

* 13. இதில் சொல்லப்பட்ட கழுகு தேவதூதனுக்கு அடையாளமாகும். சில கிரேக்கப் பிரதிகளில் கழுகு என்பதற்குப் பதிலாய் தேவதூதன் என்றே சொல்லியிருக்கிறது.