கலாத்தியருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 05

விசுவாசிகளுக்குரிய சுயாதீனத்தில் நிலை நிற்கும்படி புத்திசொல்லி, மாம்சத்தினாலும், இஸ்பிரீத்துவினாலும் விளைகிற பலன்கள் என்னவென்று காட்டுகிறார்.

1. நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குக் கீழ்ப்படாமல் நிலைநில்லுங்கள்.

2. இதோ, நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொள்வீர்களாகில், கிறீஸ்து நாதரால் உங்களுக்கு ஒரு பிரயோசனமு மிராதென்று சின்னப்பனாகிய நானே உங்களுக்குச் சொல்லுகிறேன். (அப். 15:1.)

* 2. சேசுநாதர் பாடுபட்டு நம்மை இரட்சித்த நாள் தொடங்கி, விருத்தசேதனம் யூதர்களுக்கும் அஞ்ஞானிகளுக்கும் அவசரமில்லாத காரியமென்பது மெய்யே. ஆகிலும் யூதர்களுக்குள்ளே விருத்தசேதனமானது ஜாதி முறைமைபோலிருந்ததினாலே அவர் களுக்கு அது விலக்கப்படவில்லை. அதைப்பற்றித்தான் நடபடி ஆகமம் 16-ம் அதி. 2-ம் வசனத்தில் சொல்லியவண்ணம் அர்ச். சின்னப்பரின் சீஷனாகிய தீமோத்தேயு என்பவருடைய தாயார் யூதகுலத்தாளானதினால், அர்ச். சின்னப்பர் அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஆனால் கலாத்தியர் அப்படியில்லாமல் அஞ்ஞானத்திலிருந்து ஞானஸ்நானம் பெற்றவர்களானபடியால் அவர்கள் விருத்தசேதனத்தைப் பெறும்போது ஜாதி முறைமையைப்போலல்ல, கரையேற்றத்துக்கு அவசியமான முறைமையைப்போல் அதைப் பெறுவார்கள். கள்ளப்போதகர்களும் அப்படியே அவர்களுக்குப் போதித்திருந்தார்கள். ஆனால் கரையேற்றத்துக்கு விருத்தசேதனம் அவசரமென்று விசுவசிக்கிறது சேசுநாதரைப் பற்றும் விசுவாசத்துக்கு முழுவதும் விரோதமாயிருக்கிறபடியினாலே, அப்படி விசுவசிக்கிறவர்கள் சேசுநாதரால் உண்டாகிற இரட்சண்யெத்தை இழந்துபோகிறார்களென்றும், சேசுநாதரால் அவர்களுக்குப் பிரயோசனமில்லாமல் போகிறதென்றும் அர்ச். சின்னப்பர் சொல்லுகிறார்.

3. மேலும் விருத்தசேதனம் பெறுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாண முழுவதையும் அநுசரிக்கக் கடனாளியா யிருக்கிறானென்று அவனுக்கு மறுபடி யும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

4. நியாயப்பிரமாணத்தினாலே நீதிமான்களாகத் தேடுகிற நீங்கள் கிறீஸ்து நாதரை இழந்து, இஷ்டப்பிரசாதத்தி னின்று தவறிவிழுந்தீர்கள்.

5. நாங்களோ நீதியை அடைவோமென்று இஸ்பிரீத்துவின் மூலமாய் விசுவாசத்தினால் நம்பிக் காத்திருக்கிறோம்.

6. ஏனெனில் கிறீஸ்து சேசுநாதரிடத்தில் சிநேகத்தினால் கிரியைகளைச் செய்யும் விசுவாசமேயன்றி, விருத்தசேதனமும் விருத்தசேதனமில் லாமையும் பிரயோசனப்படாது. (1 கொரி. 7:19; கலாத். 6:15.)

7. நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்துக்குக் கீழ்ப்படியாதபடிக்கு உங்களைத் தடுத்தவன் யார்?

8. இந்தப் போதனை உங்களை அழைக்கிறவரிடத்திலிருந்து உண்டானதல்ல.

9. கொஞ்சம் புளிக்காரம் பிசைந்த மாவு முழுமையும் கெடுத்துப்போடுகிறது. (1 கொரி. 5:6.)

10. நீங்கள் வேறுவிதமாய் எண்ணமாட்டீர்களென்று நான் உங்களைக் குறித்துக் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். உங்களைக் கலகப்படுத்துகிறவன் எப்படிப்பட்டவனானாலும் ஆக்கினைத் தீர்ப்பையடைவான்.

11. சகோதரரே, விருத்தசேதனத் தை நான் இன்னும் பிரசங்கிக்கிறே னாகில், ஏன் இன்னும் உபாதிக்கப் படுகிறேன்? அப்படியானால் சிலுவை யைப்பற்றிய இடறல் ஒழிந்து போயி ருக்குமே. (1 கொரி. 1:23.)

12. உங்களைக் கலகப்படுத்துகிறவர்கள் வெட்டுண்டுபோனாலும் நலமா யிருக்குமே.

* 12. உங்களைக் கலகப்படுத்துகிறவர்கள் வெட்டுண்டுபோனாலும் நலமாயிருக்குமே யென்று அர்ச். சின்னப்பர் சொல்லுகிறார். ஆனால் எவ்விதமாய் வெட்டுண்டு போவதைக் குறித்து சொல்லுகிறாரென்று விளங்குகிறதில்லை. வேதபாரகரில் சிலர் திருச்சபையிலிருந்து வெட்டுண்டு அதாவது சபிக்கப்பட்டுப் பிரிக்கப்பட்டால் நலம் என்கிறாரென்றும், வேறு சிலர் அவர்கள் சரீரம் முதலாய் வெட்டுண்டு பிளந்துபோனாலும் நலம் என்கிறாரென்றும் சொல்லுகிறார்கள். வாசிக்கிறவன் தெரிந்துகொள்ளக்கடவான்.

13. சகோதரரே, நீங்கள் சுயாதீனத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆயினும் இந்தச் சுயாதீனத்தைச் சரீர இச்சைகளுக்கு ஏதுவாக்காமல், சிநேகத்தினால் ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்யுங்கள்.

14. எப்படியெனில் உன்னைச் சிநேகிக்குமாப்போல, உன் பிறனையும் சிநேகிப்பாயாக என்கிற இந்த ஒரே வாக்கியத்தில் நியாயப்பிரமாணம் முழுமையும் நிறைவேறுகிறது. (லேவி. 19:18; மத். 22:39; உரோ. 13:8.)

15. நீங்கள் ஒருவரொருவரைக் கடித்துப் பட்சித்தீர்களோ, எச்சரிக்கை; ஒருவர் ஒருவரால் சிதைந்துபோவீர்கள்.

16. ஆகையால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: இஸ்பிரீத்துவுக்கு ஏற்றபிரகாரம் நடந்துகொள்ளுங்கள். அப்போது மாம்ச இச்சைகளை நிறை வேற்றமாட்டீர்கள். (1 இரா. 2:11.)

17. எப்படியெனில் மாம்சம் இஸ்பிரீத்துவுக்கு விரோதமாயும், இஸ்பிரீத்து மாம்சத்துக்கு விரோதமாயும் இச்சிக்கிறது. உங்களுக்கு இஷ்டப்பட்டவைகள் எவைகளோ, அவைகளை நீங்கள் செய்யாதபடி இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கின்றன.

18. இஸ்பிரீத்துவினால் நடத்தப்படுகிறீர்களாகில், நீங்கள் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டவர்களல்ல.

19. மாம்சத்தின் கிரியைகள் பிரத்தியட்சமாயிருக்கின்றன; அவைகளாவன: விபசாரம், வேசித்தனம், அசுசி, காமவிகாரம்,

20. விக்கிரக ஆராதனை, பில்லி சூனியம், பகைகள், வாக்குவாதம், கோபங்கள், சண்டைகள், வைராக்கியங் கள், பிரிவினைகள், பதிதத்தனங்கள்,

21. காய்மகாரங்கள், கொலைகள், குடிவெறிகள், களியாட்டங்கள் இவை முதலியவைகளாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் சர்வேசுரனுடைய இராச்சியத்தைச் சுதந்தரித் துக்கொள்ளமாட்டார்கள் என்று முன் சொன்னதுபோல் இப்போதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். (1கொரி. 6:9.)

22. இஸ்பிரீத்துவின் கனிகள் ஏதென்றால்: பரம அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயாளம், நன்மைத்தனம், சகிப்பு,

23. சாந்தம், விசுவாசம், அடக்க வொடுக்கம், இச்சையடக்கம், நிறைகற்பு இவைகளாம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணமில்லை.

24. கிறீஸ்துநாதருடையவர்கள் தங்கள் மாம்சத்தை அதின் துர்க்குணங்களோடும், இச்சைகளோடும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

25. நாம் இஸ்பிரீத்துவினால் ஜீவிக்கிறோமாகில், இஸ்பிரீத்துவுக்கேற்றபடி நடக்கவுங்கடவோம்.

26. வீண் மகிமையை விரும்பாமலும், ஒருவருக்கொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேலொருவர் பொ றாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.