அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 04

புனித சூசையப்பர் தச்சுத்தொழில் செய்ததை தியானிப்போம்.

தியானம்.

தாவீது அரசரின் குலத்தில் தோன்றிய பெற்றோருக்கு மகனாக பிறந்தவர் புனித சூசையப்பர். ஆனால் அவர்கள் இவ்வுலக செல்வமின்றி இருந்ததால் புனித சூசையப்பர் ஏழையாக இருந்தார். ஆவா அரசகுலத்தில் தோன்றிய மரியன்னையைத் திருமணம் செய்து கொண்டபிறகு செல்வம் வந்தது என எண்ணவேண்டாம். மோட்சத்தின் அரசியாகிய மரியன்னை செல்வமிக்கவள் அல்ல. இயேசுகிறிஸ்து ஏழை குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாழ வேண்டும் என்பதற்காக அவருடைய வளர்ப்புப் பெற்றோர் ஏழைகளாக இருந்தனர். அதனால் புனித சூசையப்பர் வாழ்நாளெல்லாம் வறுமையில் வாழ்ந்ததோடு தச்சு வேலை செய்து இயேசுவையும் மரியன்னையையும் காப்பாற்றினார். அவர் கலப்பைகளையும் நுகத்தடிகளையும் செய்து வந்தார் என்பதால் ஆதி திருச்சபை இவற்றுக்கு மரியாதை அளித்தனர் என மறை சாட்சியான யுஸ்தினுஸ் எழுதி வைத்துள்ளார்.

இவர் அனைத்து புனிதர்களைவிடவும் மேலானவர் என்பதற்கு கரணங்கள் உண்டு.

முதலில் புனித சூசையப்பர் கடவுளின் திருச் தித்தத்திற்கு இயைந்து செல்வங்களை விரும்பாது எளிய ஏழையாக இருந்தார். மனிதனுக்கும் இறைவனுக்கும் ஏற்புடைய செயல்களை செய்து வந்தார். அக்கால அரசர்களும் செல்வந்தர்களும் இருந்ததை விட இவர் உயர்வானவராகவே இருந்தார்.

இரண்டாவது, புனித சூசையப்பர் தன்னுடைய வாழ்நாளில் பிரபலமான செயல்களையோ, புகழ்ப்பெறத்தக்க செயல்களையோ செய்தவரில்லை. மறைநூல்கள் அவர் "நீதிமானாக இருந்தார்" என்பதை மட்டுமே குறிப்பிடுகின்றன. இறைவனிடமும் இறைமக்களிடமும் அவர் நீதியுடன் தன் கடமைகளை செவ்வனே செய்துவந்தார். அதனால் தூய ஆவியால் அவர் நீதிமான் என அழைக்கப்பட்டார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் அறிந்திருக்க வேண்டியது. இவ்வுலகில் செல்வந்தர்களும், வேலை செய்யாமல் சாப்பிடுகிறவர்களும் மிக சிலரே. மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உண்பவர்களும் ஏழைகளுமே மிக அதிகம். செல்வந்தர்களை பேறுபெற்றவர்கள், ஏழைகள் அபாக்கியசாலிகள் என்பது தவறு. இயேசுகிறிஸ்துவும், புனித சூசையப்பரும் தெரிந்து கொண்டது ஏழ்மையே. அதனால் ஏழைகளே பேறுபெற்றவர்கள். செல்வந்தர்கள் விண்ணகத்தை அடைவதைவிட ஏழை எளியோர் இறையாட்சியில் அடைவது எளிது. இவர்கள் இறைவனின் இறைச்சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, பொறாமைப்படாமல் தங்களுக்கு கிடைத்த அந்தஸ்தை நினைத்து சந்தோஷமடைய வேண்டும். இறைச்சித்தத்திற்கு கீழ்ப்படியாமல் இருந்தால் அவர்கள் பட்ட துன்பங்களுக்கு எந்தவித பலனும் இருக்காது. அதனால் பூவுலகில் எவ்வளவு குறைவான நிலையில் இருந்தாலும், வறுமையில் வாடினாலும் வான் வீட்டின் மகிமையை அடையலாம்.

புனித சூசையப்பர் தான் வாழ்ந்த காலத்தில் அருஞ்செயல்கள் செய்யாமலும், உயர்வான வழியில் நடக்காமலும் இருந்த தன் தொழிலை குறைவின்றி செய்து பெரிய புனிதரானார். புனிதராவதற்கு கடின தவமும், அடிக்கடி ஒருவேளை நோன்பும், அதிக நேரம் செபத்திலும் இருக்க வேண்டும் என நாம் நினைப்பதுண்டு. இவை அனைத்தும் நன்றே இருப்பினும் இவைகளைக் கடைப்பிடிக்காமலும் புனிதராகலாம். ஒருவர் தம் கடமைகளை இறைவனுக்கு ஏற்புடையதாக தூய சிந்தனையுடன் செய்துவந்தால் புனித சூசையப்பரைப்போல் புனிதராகலாம்.

புனித இசிதோருஸ் என்ற தொழிலதிபதியும், புனித ஒமோபோனுஸ் என்ற வியாபாரியும், புனித எலிஜியுஸ் பொற்கொல்லர் தொழிலாளியும், அவ்வாறே புனிதர்களானவர்கள். முத்திப்பேறு பட்டம் பெற்ற லாபெர் பிச்சைக்காரனாகவும், புனித சீத்தம்மாள் எளிய வேலைக்காரியாக இருந்தும் தூயவர்களானவர்கள். புனித ஜெர்மானம்மாள் ஆடு மேய்ப்பதிலும் தூய தன்மையைக் கடைப்பிடித்து புனிதையானாள். அதனால் நாமும் நமக்குரிய பணியை கண்ணியமாக செய்து புனிதர்களாகலாம்.

மேலும், தூய ஆவியால் புனித சூசையப்பர் "நீதிமான்" என அழைக்கப்பட்டார். நாமும் எல்லாவற்றிலும் நீதிமான்களாக நடக்கிறோமா என நம்மையே கேட்டுப் பார்ப்போம். திருட்டு, பொய், பித்தலாட்டங்கள் கிறிஸ்தவர்களுக்குள்ளே இருப்பதால் பிற மதத்தினர் நம்மை இகழ்ந்து பேசுவார்கள். அதனால் மனம் மாறாமலும் இருப்பார்கள். இதற்கு காரணம் நமது செயல்பாடுகளில் நம்மையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். புனித சூசையப்பர் பெயரில் நம்முடைய பக்தியை அதிகரித்து புனிதர்களாவதற்கு நம்முடைய பாவங்களை விலக்கி நீதி தவறாமல் நடப்போம்.

புதுமை

இஸ்பானியா நாட்டில் ஒரு அரசர் புனித சூசையப்பரிடம் மிகவும் பத்தி கொண்டிருந்தார். வருடந்தோறும் இவரது விழாவினை மிகச் சிறப்பாகத் கொண்டாடுவார். அந்த அரசருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர். ஒரு வருடம் புனித சூசையப்பர் திருநாளன்று மூத்த மகன் இறந்தான். இரண்டாம்   வருடம் அதேநாளில் இரண்டாவது மகன் இறந்தான். மூன்றாம் திருநாளைத் கொண்டாடினால் தனது மூன்றாவது மகனும் இறப்பான் என மனம் கலங்கி நாட்டைவிட்டு காடுகளில் சுற்றித்திரிந்தார். காட்டில் இரு மரங்களில் இரு வாலியர்கள் தூக்கிலிடப்பட்டு இறந்து இருந்ததைக் கண்டார். இருவரும் கொலையாளிகள் என்பதால் அவர்களும் கொலைச் செய்யப்பட்டிருந்தனர். -

அப்போது இவர் மனத்துயரத்துடன் இரு இறந்த வாலியர்களையும் பார்த்துக்கொண்டிருக்கும்போது வானதூதர் அவர் முன் தோன்றினார். உமது இரு மகன்களும் உயிரோடிருந்தால் இவர்களைப்போல் இறந்திருப்பார்கள் என தெரிந்துக்கொள்ளும் என வானதூதர் கூறினார். நீர் புனித சூசையப்பர்மேல் வைத்த பக்தியினால் அவர்கள் அப்படி இறவாமலும், உமக்கு அவமானம் ஏற்படாமலும், அவர்களுக்கு நரகத் தண்டனைக் கிடைக்காமலும் உதவியது புனித சூசையப்பரே, எனவே, அவருக்கு திருவிழா கொண்டாட தயங்க வேண்டாம். உமது மூன்றாவது மகன் நலமாயிருப்பான். அவன் நாளடைவில் ஆயராகி பல புண்ணியங்களை செய்து முதிர்ந்த வயதுவரை வாழ்வான் என்று கூறி வானதூதர் மறைந்தார்.

சிந்தனை:

அரசன் மனம் தெளிவுற்று முன்பைவிட அதிக பக்தியோடு திருவிழாவைக் கொண்டாடினார். வானதூதர் கூறியதுபோல் அவர் மகன் ஆயரானார். நாமும் நமது வாழ்வில் வரும் துன்பங்களை நன்மைக்காக வருகிறதென்று ஏற்றுக்கொள்வோம். (3 பர, அரு, பிதா)

செபம்

வறுமையோடு எளிமையாக வேலை செய்து துன்பப்பட்ட தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்கிறோம். இப்பூவுலகில் வறுமைப்படுகிறவர்களுக்கும், தாழ்ந்த நிலையில் பிறந்தவர்களுக்கும் கடினப்பட்டு உழைக்கிறவர்களுக்கும் நீர் மகிமையும், ஆறுதலும், முன் மாதிரிகையாக இருக்கிறீரே! இப்படி துன்பப்படுகிறவர்கள் அனைவரும் உம்மைப் பின்பற்றி துன்பங்களை பொறுமையோடு அனுபவிக்க அருள்தாரும். உமது எளிமையையும் துன்பத்தையும் பார்த்து உமது பக்தர்களாகிய நாங்கள் இவ்வுலக நன்மைகளுக்கு ஆசைப்படாமல் ஏழைகளாக விண்ணக இன்பத்தை அடைய உதவிசெய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

ஏழைகளுக்கு ஆதரவாக இருக்கிற புனித சூசையப்பரே! உமக்கு புகழ். கடின வேலைகளை செய்பவர்களுக்கு முன்மாதிரிகையாக இருக்கின்ற புனித சூசையப்பரே! உமக்கு புகழ். தாழ்மையான தொழிலைச் செய்பவர்களுக்கு மகிமையான புனித சூசையப்பரே! உமக்கு புகழ்.

செய்ய வேண்டிய நற்செயல்

துன்பப்படுவோருக்கு அன்பாய் இருந்து ஆறுதல் கூறுதல்.