அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 03

புனித சூசையப்பருக்கு பெயரிட்டதை தியானிப்போம்.

தியானம்.

புனித சூசையப்பர் பிறந்த எட்டாம் நாளில் அக்கால வழக்கப்படி சூசை என்று பெயர் சூட்டினார்கள். சூசையப்பர் என்ற பெயருக்கு முழுமையானவன், அதிகரிக்கிறவன், பெருவிக்கிறவன் என்ற பொருள் உண்டு. புனித தாமஸ் அருளப்பர் எழுதியதுபோல் சூசையப்பர் என்ற பெயர் அவரது புகழையும், நற்செயல்களையும் குறிக்கிறது. சகல மனிதர்களையும் மீட்க வந்த இயேசுகிறிஸ்து புனித சூசையப்பரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். உலகில் உள்ள அனைவராலும் போற்றப்படும் மரியன்னை இவருக்கு கீழ்ப்படிந்து வந்தார்.

சூசையப்பரோ மரியன்னையின் கணவராகவும் பாதுகாவலராகவும் இருந்ததால் இறைவன் தன் மகனையே அவருடைய கைகளில் தவழ செய்தார். அதைவிட வேறு பெரிய மகிமை எதுவுமில்லை. பெயருக்குரிய தன்மையோடு வாழாவிட்டால் அப்பெயருக்கே அவமானம். புனித சூசையப்பரோ தன்னுடைய பெயருக்கு களங்கம் வராதபடி தன்னுடைய புண்ணிய செயல்களினாலும், தான தர்மங்களினாலும் மேலும் அப் பெயருக்கு பெருமை சேர்த்தார். நாளுக்குநாள் தாழ்ச்சி, பொறுமை, விசுவாசம், பிறர் அன்பு போன்ற புண்ணியங்களிலே திளைத்து வேறு புனிதர்களை விடவும் பெரிய தூயவரானார்.

அவர் விண்ணகத்தில் சகல புனிதர்களுக்கும் மேலாக மரியன்னையை அடுத்து இருக்கிறார். நாம் எப்போதும் புண்ணியத்திலே வளர முயற்சி செய்ய வேண்டும். நாம் அவ்வாறு செபித்து நடக்கும் போது மேலும் நாம் இறைபக்தியில் வளர அவர் பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்வார். அவர் தன் மகன்மீது எவ்வளவு பாசமாக இருந்தாரோ அதே அளவு திருச்சபை மக்கள் மீதும் அக்கறை காட்டுகிறார். அதனால்தான் அவரை திருச்சபையின் சிறப்பு பாதுகாவலராக வணங்குகிறோம். அவர் தன் பெயருக்கேற்ற விதத்தில் விளங்கினார். தாய் திருச்சபையானது இவரின் புண்ணிய நலன்களை கருத்தில் கொண்டு இயேசு, மரி என்ற உன்னத நாமங்களுடன் சேர்த்து இயேசு, மரி, சூசை என்று மக்கள் அனைவரும் வணங்கும்படிச் செய்தது. ஆகவே, நல்ல கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு, மரி, சூசை என்று அடிக்கடி சொல்லி தங்களுக்கு வரும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் காக்கப்பட்டு நல்மரணத்தை அடைவோம் என நம்பிக்கையோடு வணங்குகிறார்கள்.

இப்படிப்பட்ட புனிதரின் புகழை அறிந்து கொண்ட நாம் சந்தோசப்படுவது சரியே. தந்தைக்குரிய புகழ் மக்களைச் சாரும். ஆனால் நாமும் நம்முடைய ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டும். மகிமையுடைய பெயரை அவருக்கு சூட்டினார்கள், அவரும் அப்பெயருக்கேற்ப வாழ்ந்தார். நாமும் திருமுழுக்குப் பெற்றபோது ஒரு புனிதரின் பெயரை சூட்டினார்கள். அவ்வாறு சூட்டப்பட்டது வெறும் பெயர் என்று எண்ண வேண்டாம். நமது பெயர் கொண்ட புனிதரிடம் பத்தியோடு வேண்டிக்கொள்வதோடு மட்டுமில்லாமல் அவர் செய்த நற்செயல்களை நம் வாழ்வில் கடைப்பிடிக்க முயலவேண்டும். நற்செயல்களினால் அப்புனிதரின் பெயரை பெருமைப்படுத்த வேண்டும். எத்தனையோபேர் தங்களுடைய பாவ செயல்களால் தங்கள் பெயர் கொண்ட புனிதரை துன்பத்துக்குள்ளாக்குகிறார்கள். -

புனித சூசையப்பர் நாளுக்கு நாள் புண்ணிய வாழ்வு வாழ தனனை வருத்திக்கொண்டார். நாமும் அவ்வாறு செய்யவேண்டும். ஊதாரித்தனமானவன் அழியக்கூடிய செல்வத்தைச் சேர்க்க எவ்வளவு பாடுபடுகிறானோ அதுபோன்று அழியாத ஞானத்தை அதிகரிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். இதுபற்றியே புனித கிரகோரி என்ற திருத்தந்தை, "நீங்கள் செல்வந்தனாக இருக்க விரும்பினால் உண்மையான செல்வத்தைத் தேடுங்கள், உயர்வான பதவிக்கு ஆசைப்பட்டால்வான்வீட்டை அடைய முயலுங்கள். சகல செல்வங்களை விரும்பினால் என்றென்றும் வான்வீட்டில் இருக்க விரும்ப வேண்டும்" என்று எழுதினார். உண்மையிலுமே முயற்சிக்கு தக்க பலன் உண்டு.

நாம் இவ்வுலகில் இருக்கும் காலத்தில் இறைவாழ்வு வாழ எவ்வளவு வருந்தி உழைப்பீர்களோ அவ்வளவுக்கு வான்விட்டில் மகிமை அடைவீர்கள். புனித சூசையப்பர் தமது பேரில் பக்தியுள்ள ஆத்மாக்கள் இறைவாழ்வு வாழவும், புனிதத் திருச்சபை எங்கும் பரவவும் விரும்புகிறார். அவருடைய திருப்பெயர் நமக்கு வெற்றிக்கொடி. எனவே, கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ வாழ்வு வாழவும் பிறமதத்தினர் சத்திய வேதத்தை கண்டடையவும் தேவையான அருட்பணியாளர்களை அனுப்ப வேண்டுமென்று நாம் இறைவனிடம் மன்றாட கடமைப்பட்டிருக்கிறோம். நாம் தீய சக்திகளிடம் போராடும் சூழ்நிலை வந்தாலும், ஆபத்து வேளைகளிலும் இயேசு, மரி, சூசை என விசுவாசத்தோடு அழைத்தால் நமக்கு உதவியும் ஆறுதலும் கிடைக்கும்.

புதுமை

நோயாபொலி என்ற நாட்டில் வெசுவியூஸ் என்ற நெருப்பு மலை இருக்கிறது. அதன் உச்சியில் அகன்ற பிளவு பாதாளம்போல் இருக்கிறது. இந்த பிளவிலிருந்து புகையும், தீப்பொறிகளும், அக்கினி பிழம்பும் வெளிப்படும். அப்போது அக்கினியின் உருதிய கற்கள், தந்தகம், இரும்பு போன்ற உலோகங்கள் வெள்ளப் பெருக்குப் போன்று புறப்பட்டு பயிர்களையும், ஊர்களையும் அழித்து நகருக்குள் நுழையும். 1637 -ஆம் ஆண்டு அதுபோல நெருப்பு ஆறு புறப்பட்டு துலுக்கர் கொத்தாளம் என்ற நகரத்தை அழிப்பதுபோல் வந்தது. அப்போது அந்நகரத்தில் புனித சூசையப்பரின்மேல் அதிக பக்தியுள்ள கமீ என்ற பெண்மணி இருந்தாள். அவள் அந்த நெருப்பு ஆற்றைக் கண்டு சூசை என்ற தனது மருமகனைத் தூக்கி கொண்டு கடற்கரையைத் தேற விரைந்து ஓடினாள். அவள் சென்ற வழியில் நெருப்பு ஆறு பாய்ந்தோடியது. அதனால் கடற்கரைக்குச் செல்ல இயலவில்லை. அருகில் இருந்த 20 அடி பாறையில் குழந்தையை வைத்து விட்டு பாறையில் நின்று கடற்கரைக்குக் குதித்தார். பின்னர் மருமகனை நினைத்து வேதனையோடு சூசை சூசை என அழைத்து புனித சூசையப்பரிடம் மிகவும் பக்தியோடு வேண்டிக்கொண்டாள். அப்போது புனித சூசையப்பர் அக்குழந்தையைத் தூக்கிச்சென்று அப்பெண்ணிடம் ஒப்படைத்தார். அப்பெண்மணி பூரிப்படைந்து புனித சூசையப்பருக்கு நன்றி கூறினாள். நமக்கு துன்பங்கள் வரும்போது நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் மன்றாடினால் அவர் நம்மை கைவிடமாட்டார். (3 பர, அரு, பிதா)

செபம்

மகிமை நிறைந்த பெயர் கொண்ட பிதாப்பிதாவாகிய புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். உம்முடைய புண்ணியங்களாலும் தான தர்மங்களாலும் உம் திருப்பெயரை மகிமைப்படுத்தினிரே, உமது சக்தி வாய்ந்த திருப்பெயரைப் பார்த்து, உமது பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு எங்கள் பாவத்தால் அவமானம் வருவிக்காமல், எங்கள் பக்தி விசுவாசத்தால் அனைவருக்கும்முன் அப்பெயரை மேன்மைப்படுத்த அருள் செய்யும். திருச்சபையானது தனது எதிரிகளை அழித்து எங்கும் அதன் புகழ் பரப்பி திருச்சபைக்கு ஆதரவாயிருக்கிற நீர் உதவவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

இயேசு மரி சூசையே! எனது இதயத்தையும் ஆன்மாவையும் உமக்கு காணிக்கையாக்குகிறேன். இயேசு மரி சூசையே! என் மரணநேரத்தில் எனக்கு உதவியாக இருங்கள். இயேசு மரி சூசையே! நான் இறந்த பிறகு என் ஆன்மா வான் வீட்டில் உங்களோடு எப்போதும் இருக்கும்படி உதவி செய்யும்.

செய்ய வேண்டிய நற்செயல்

ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்