எபேசியருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 04

அந்நியோந்நிய பிறர்சிநேகமாயிருக்கவும், புது மனிதனை அணிந்துகொண்டு, பழைய மனிதனாகிய துர்க்குணங்களை நீக்கவும் புத்திசொல்லுகிறார்.

1. ஆகையால் ஆண்டவரைக் குறித்துக் கட்டுண்டவனாகிய நான் உங்களைக் கேட்டுக்கொள்வதேதெனில்: நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிற அழைப்புக்கு யோக்கியமாய் நடந்து, (1 கொரி. 6:20; பிலிப். 1:17.)

2. எவ்வித தாழ்ச்சியோடும், சாந்தத்தோடும், பொறுமையோடும், ஒருவ ரொருவரைப் பரம அன்போடு தாங்கிக் கொண்டு,

3. சமாதான பந்தனத்தில் மன ஒற்றுமையை ஜாக்கிரதையாய்க் காப்பாற்றிக்கொள்ளுங்கள். (உரோ. 12:10.)

4. உங்களுக்கு உண்டான அழைப்பினால் ஒரே நம்பிக்கைக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறதுபோல, உங்களுக்கு ஒரே சரீரமும், ஒரே ஆத்துமமும் உண்டு.

5. ஒரே ஆண்டவரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் உண்டு.

6. சகலருக்கும் தேவனும் பிதாவுமானவர் ஒருவரே. அவரே எல்லாருக்கும் மேலாய், எல்லாவற்றிலும், நம்மெல்லோ ருக்குள்ளும் இருக்கிறவர். (மலாக். 2:10.)

7. கிறீஸ்துநாதருடைய ஈகையின் அளவுக்குத்தக்கதாக நம்மில் ஒவ்வொரு வருக்கும் வரப்பிரசாதங் கொடுக்கப் பட்டிருக்கிறது. (1 கொரி. 12:11; 2 கொரி. 10:13; உரோ. 12:3, 6.))

8. ஆகையால் அவர் உன்னதத்திற்கு ஏறினபோது சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களைக் கொடுத்தாரென்று சொல்லி யிருக்கிறது. (சங். 67:16.)

9. ஏறினார் என்பதற்கு அவர் முந்திப் பூமியின் பாதாள ஸ்தலத்திலே இறங்கினார் என்பதேயன்றி, வேறு அர்த்தமென்ன?

10. இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக எல்லா வான மண்டலங்களுக்கும் மேலாக ஏறினவர்.

11. அவரே சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகர்களாகவும் கொடுத்திருக்கிறார். (1 கொரி. 12:28.)

12. ஏதுக்கெனில் அர்ச்சிக்கப்பட்டவர்கள் உத்தமதனத்தை அடையும் பொருட்டுச் சுவிசேஷத்தின் வேலைக்காகவும், கிறீஸ்துவினுடைய சரீரமாகிய சபையைக் கட்டி எழுப்புவதற்காகவும்,

13. தேவகுமாரனைப் பற்றும் விசுவாசத்திலும், அறிவிலும் நாம் ஒற்றுமைப்பட்டுப் பூரண மனுஷராக கிறீஸ்து நாதருடைய நிறைவான வயதின் அளவுக்குத்தக்கது சேருமட்டும் இவர் கள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

* 11-13. இந்த இரண்டு வசனங்களால் நமது ஆண்டவரே தமது திருச்சபையை ஒன்றிப்பிலும் உண்மையிலும் காப்பாற்றும்படி அதில் மேய்ப்பர்களும் போதகர்களும் எந்நாளும் நீடித்துத் தொடர்ந்து வரும்படி செய்திருக்கிறாரென்று தெளிவாய்த் துலங்குகிறது.

14. ஆகையால் நாம் இனி அலைக்கழிக்கப்படுகிற குழந்தைகளாயிராமல், மனிதருடைய அக்கிரமத்தினாலும், தப்பறைக்குள் வஞ்சகமாய் இழுக்கும் சூதுவாதினாலும் உண்டாகும் எவ்வித போதகக் காற்றில் சுழன்று திரியாமலும்,

15. பரம அன்பில் உண்மையோடு நடந்து, தலைமையாயிருக்கிற கிறீஸ்துநாதரிடத்தில் எல்லாவற்றிலும் வளருவோமாக.

16. அவராலே சரீரமுழுவதும், அதற்கு உதவியான சகல கணுக்களினாலும் பொருத்தி இசைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன் தன் அளவுக்குத்தக்கது கிரியையைச் செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்தி விருத்திக்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது.

17. ஆகையால் நான் உங்களுக்கு ஆண்டவருக்குள் சாட்சியமாய் அறிவித் துச் சொல்லுவதேதெனில்: புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தனைகளின்படி நடக்கிறதுபோல, இதுமுதல் நீங்கள் நடவாதிருங்கள். (உரோ. 1:21.)

18. அவர்கள் அந்தகாரத்தால் இரு ளடைந்த புத்தியையுடையவர்களாய், தங்கள் இருதயக் குருட்டாட்டத்தின் நிமித்தம் தங்களிலுள்ள அறியாமையி னாலே தேவ ஜீவனுக்கு அன்னியரா யிருந்து, 

19. நம்பிக்கையிழந்தவர்களாய், எல்லா அசுத்த கிரியைகளையும் தீராத ஆவலோடே நிறைவேற்றும்படி காம விகாரத்துக்குத் தங்களைக் கையளித்திருக்கிறார்கள்.

20. நீங்களோ கிறீஸ்துநாதரை இவ்விதமாய்க் கற்றுக்கொள்ளவில்லையே.

21. சேசுநாதரிடத்திலுள்ள சத்தியத்தின்படியே நீங்கள் அவருக்குக் காது கொடுத்து, அவரால் போதிக்கப்பட் டிருக்கிறீர்களேயாகில்,

22. உங்கள் முந்தின நடக்கையின்படி மோசம்போக்குவதற்கு ஏதுவான இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனிதனை உரிந்துபோடுங்கள். (கொலோ. 3:9; உரோ. 8:13.)

23. உங்கள் மனதில் புதிதான ஞானமுடையவர்களாகி, (உரோ. 6:4.)

24. நீதியிலும், உண்மையான பரிசுத்ததனத்திலும் சர்வேசுரனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதுமனிதனைத் தரித்துக்கொள்ளுங்கள். (கொலோ. 3:12.)

25. அன்றியும் நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைத் தள்ளி, உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் பிறனோடு உண்மையைப் பேசுவீர்களாக. (சக். 8:16; 1 இரா. 2:1; கொலோ. 3:9.)

26. (கோபிப்பதில்) பாவம் வராமல் கோபியுங்கள். உங்கள் கோபத்தின்மேல் சூரியன் அஸ்தமிக்காதிருக்கக்கடவது. (சங். 4:5.)

27. பசாசுக்கு இடங்கொடாதிருங்கள். (இயா. 4:7.)

28. திருடிவந்தவன் இனித் திருடாதிருப்பானாக; இக்கட்டுப்படுகிறவனுக்குக் கொடுக்க வகையுள்ளவனாயிருக்கும்படி அவன் தன் கைகளினாலே நலமான வேலை செய்து, பிரயாசப்படுகிறதே நலம்.

* 28. நலமான வேலை என்பதன் அர்த்தம் என்னவெனில், ஆத்துமத்துக்குக் கெடுதலில்லாத தொழிலைச் செய்வதென்றர்த்தமாம். ஏனென்றால் ஆத்துமத்துக்குக் கெடுதலான அநேக தொழில்களுண்டு. அப்படிப்பட்ட தொழிலைச் செய்து பணம் சம்பாதித்துத் தர்மம் செய்தாலும் அந்தத் தர்மம் தர்மமல்ல என்றறிக.

29. கெட்ட பேச்சு ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம். விசுவாசத்தின் நல்விருத்திக் கேதுவான பேச்சு உண்டானால், கேட்கிறவர்களுக்குப் பக்தியை வருவிக்கும்படி அதைப் பேசுங்கள்.

30. அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்காகச் சர்வேசுரனுடைய இஸ்பிரீத்துசாந்துவினால் முத்திரையிடப் பட்டிருக்கக்கொள்ள, அவரை மனநோகப் பண்ணாதேயுங்கள்.

31. சகலவித கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், தூஷணமும், இதுமுதலான எவ்வித துர்க்குணமும் உங்களை விட்டு விலகக்கடவது.

32. ஆனால் ஒருவருக்கொருவர் தயவாயும், இரக்கமாயுமிருந்து, கிறீஸ்துநாதரில் சர்வேசுரன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னித்துக்கொள்ளுங்கள். (கொலோ. 3:12, 13; மத். 6:14.)