எபேசியருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 03

தேவ வாக்குத்தத்தங்களுக்குப் புறஜாதியாரும் பங்காளிகளா யிருக்கிறார்கள் என்று காண்பிக்கிறார்.

1. இதனிமித்தமாகச் சின்னப்பனாகிய நான் புறஜாதியாராகிய உங்களுக்காகக் கிறீஸ்து சேசுநாதரைப்பற்றிக் கட்டுண்டவனாயிருக்கிறேன். (அப். 28:16; பிலிப். 1:7,13; கொலோ. 1:24.))

* 1. இது உரோமாபுரியில் அர்ச்.சின்னப்பர் (61-63-ம் வருஷம்) காவலில் இருந்த வருஷங்களைக் குறிக்கிறது.

2. ஏனெனில் உங்களைக் குறித்து எனக்கு அருளப்பட்ட தேவ கிருபையின் உத்தியோகத்தைப்பற்றிக் கேள்விப்பட் டிருப்பீர்களே.

3. அதாவது, நான் முன்னே சுருக்கமாய் எழுதினதுபோல ஒரு பரம இரகசியம் எனக்குக் காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது.

4. அதை நீங்கள் வாசிக்கும்போது கிறீஸ்துநாதருடைய பரம இரகசியத்தில் எனக்குள்ள அந்த அறிவை அறிந்துகொள்ளலாம்.

5. இந்தப் பரமரகசியம் இப்போது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் இஸ்பி ரீத்துவினால் வெளிப்படுத்தப்பட்டிருக் கிறதுபோல, முந்தின காலங்களில் மனு மக்களுக்கு வெளியாக்கப்பட்டதில்லை.

6. அதாவது, புறஜாதியார் சுவிசேஷத்தின் வழியாய்க் கிறீஸ்துநாதருக்குள் உடன் சுதந்திரராகவும், உடன் அங்கத்தாராகவும், அவருடைய வாக்குத் தத்தத்துக்கு உடன் பங்காளிகளாகவும் இருக்கிறார்கள் என்பதே (இந்தப் பரம இரகசியமாம்).

7. சர்வேசுரனுடைய வல்லப செயலின்படி எனக்கு அளிக்கப்பட்ட நன்கொடையாகிய வரப்பிரசாதத்தினாலே நான் அந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியனானேன்.

8. அர்ச்சிக்கப்பட்டவர்கள் அனைவரிலும் அற்பனாகிய எனக்கு அருளப் பட்ட இந்த வரப்பிரசாதம் எதுக் கெனில், கிறீஸ்துவின் அளவறுக்கப் படாத ஐசுவரியங்களை நான் புறஜாதி யாருக்குள் சுவிசேஷமாய்ப் பிரசங் கிக்கவும், (1 கொரி. 15:9; கலாத். 1:16.)

9. சகலத்தையும் சிருஷ்டித்த சர்வேசுரனிடத்தில் ஆதிமுதல் மறைந்திருந்த இரகசியங்களின் நியமம் இன்னதென்று சகலருக்கும் பிரத்தியட்சமாக்கவும், (உரோ. 16:25.)

10-11. இவ்விதமாய்ச் சர்வேசுரன் அநவரதகாலமாய் நம்முடைய கர்த்தராகிய கிறீஸ்து சேசுநாதருக்குள் செய்திருந்த தீர்மானத்தின்படியே அவருடைய நானாவித ஞானமானது திருச்சபை மூலமாய் உன்னதங்களிலுள்ள பிராதமிகர்களுக்கும், பலவத்தர்களுக்கும் தெரியப்படும்படியாகவும், (இந்த வரப்பிரசாதம் எனக்கு அளிக்கப்பட்டது).

12. அவரிடத்திலே நமக்கு நம்பிக்கையும், அவரைப்பற்றும் விசுவாசத்தினாலே (சர்வேசுரனிடத்தில்) தைரியமாய் அண்டிப்போவதற்கான வரமு முண்டாயிருக்கிறது.

13. ஆகையால் உங்கள் நிமித்தம் நான் பட்டனுபவிக்கிற துன்ப உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்து போகாதிருக்கும்படி உங்களை மன்றாடுகிறேன். அவைகள் உங்களுக்கு மகிமை யாயிருக்கின்றது.

14. இதுகாரியத்தின் நிமித்தம் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பிதாவின் முன்பாக நான் முழந்தாட்படியிட்டு,

15. பரலோகத்திலும், பூலோகத்திலுமுள்ள எவ்வித பிதாத்துவ நாம கரணத்துக்கும் ஊற்றாகிய அவரிடம் பிரார்த்திக்கிறதாவது:

* 15. பிதாத்துவம்: கடவுளே சம்மனசுகளுக்கும் மனுஷர்களுக்கும் பிதாவாயிருக்கிறார். பிதா என்று அழைக்கப்படும் யாவரும் அவரிடமிருந்து அந்தப் பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்களேயொழிய மற்றப்படியல்ல.

16. நீங்கள் அவருடைய இஸ்பிரீத்துவினால் உள்ளரங்க மனிதனாக வல்லமையால் பலப்படவும்,

17. விசுவாசத்தினாலே கிறீஸ்துநாதர் உங்கள் இருதயங்களில் வாசம் பண்ண வும், நீங்கள் பரம அன்பில் வேரூன்றி நிலைபெற்று, (கொலோ. 2:7.)

18. (அந்த அன்பின்) விசாலம், நீளம், உயரம், ஆழம் இன்னதென்று சகல அர்ச்சிக்கப்பட்டவர்களோடுங்கூட நீங்களும் அளாவி உணரவும்,

19. அறிவுக்கெட்டாததாகிய கிறீஸ்து வினுடைய அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், கடவுளுடைய சர்வ சம்பூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தம்முடைய மகிமையின் திரவியங்களுக் குத் தக்கபடி உங்களுக்கு அளித்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

20. நமக்குள் முயற்சியாயிருக்கிற தமது வல்லபத்தைக்கொண்டு, நாம் கேட்பதற்கும், எண்ணுவதற்கும் மிகவும் அதிகமாய்ச் சகலத்தையும் செய்ய வல்லமையுள்ளவராகிய அவருக்குத், 

21. திருச்சபையில் கிறீஸ்துநாதர் மூலமாய்த் தலைமுறை தலைமுறைகளாகச் சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது. ஆமென்.