அர்ச். இராயப்பர் திருச்சபைக்கு எழுதிய பொது நிருபம் - அதிகாரம் 03

ஸ்திரீ புருஷர்களுடைய கடமைகளையும், நானாவித சுகிர்த புத்திமதிகளையும் சொல்லுகிறார்.

1. இந்தப்பிரகாரமாய் ஸ்திரீகள் தங்கள் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந் திருக்கக்கடவார்கள். அப்பொழுது அவர் களில் யாராவது தேவ வாக்கியத்தை விசுவசியாதிருந்தால், (எபே. 5:22.)

2. பயத்தோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையைக்கண்டு, அவர்கள் போதனையின்றியே மனைவிகளுடைய நன்னடக்கையினாலே ஆதாயமாக்கிக் கொள்ளப்படுவார்கள்.

3. உங்களுடைய அலங்கரிப்பு கூந்தலைப் பின்னுவதும், பொன்னாபரணங்களை அணிவதும், அல்லது உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்வதுமாகிய வெளி அலங்கரிப்பாயிராமல், (1 தீமோ. 2:9; இசை. 3:18-24.)

4. இருதய உள்ளரங்க மனுஷத்துவமானது சாந்தமும் அமரிக்கையுமான மனத்தூய்மையினாலே அலங்கரிக்கப்படவேண்டியது. இதுவே சர்வேசுரனுடைய சமுகத்தில் விலையேறப்பெற்றது.

5. இவ்வண்ணமே பூர்வீகத்தில் சர்வேசுரன்பேரில் நம்பிக்கை வைத்த பரிசுத்த ஸ்திரீகள் தங்கள் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து, தங்களை அலங்கரித்தார்கள்.

6. அந்தப்படியே சாராள் அபிரகாமை ஆண்டவனென்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள். நீங்களும் நன்மையைச் செய்து, எவ்வித ஆபத்துக்கும் அஞ்சாதிருந்தால், அவளுக்குக் குமாரத்திகளாயிருப்பீர்கள். (ஆதி. 18:12.)

7. அப்படியே புருஷர்களே, மனைவியானவள் பலவீன பாத்திரமாயிருக்கிறதினாலே, உங்கள் ஜெபங்களுக்குத் தடையுண்டாகாதபடிக்கு நீங்கள் விவேகத்தோடு அவர்களுடன் வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் (நித்திய) ஜீவியத்தின் வரப்பிரசாதத்தைச் சுதந் தரித்துக்கொள்ளுகிறவர்களானபடி யினாலே அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள். (1 கொரி. 7:3; எபே. 5:25.)

8. கடைசியாய் நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், அந்நியோந்நிய இரக்கமுள்ளவர்களும், சகோதர நேசமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், சாந்தமும் தாழ்ச்சியுள்ளவர் களுமாயிருங்கள்.

9. நீங்கள் தின்மைக்குத் தின்மை செய்யாமலும், சாபத்துக்குச் சாபமிடா மலும் இருப்பதுந்தவிர, அதற்குப் பதி லாக நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்த ரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்ட வர்களாகையால், ஆசீர்வதியுங்கள். (பழ. 17:13; உரோ. 12:17; 1 தெச. 5:15.)

10. ஏனெனில், ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணும்படி ஆசிக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடமான பேச்சுகளுக்குத் தன் உதடுகளையும் அடக்கி, (சங். 33:13, 14.)

11. தின்மைக்கு விலகி, நன்மையைச் செய்து, சமாதானத்தை நாடி அதைப் பின்பற்றுவானாக. (இசை. 1:16.)

12. ஏனெனில், ஆண்டவருடைய கண்கள் நீதிமான்கள்மேலும், அவருடைய செவிகள் அவர்களுடைய ஜெபத்தின்மேலும் நோக்கமாயிருக் கின்றன. ஆனால் தின்மையைச் செய் கிறவர்கள்மேல் ஆண்டவர் கோப முக மாயிருக்கிறார்.

13. நீங்கள் நன்மையை நாடிச்சென்றால், உங்களுக்குத் தீங்குசெய்பவன் யார்?

14. ஆகிலும் நீங்கள் நீதியினிமித்தம் ஏதேனும் பாடுபட்டால் பாக்கியவான்கள். ஆதலால் அவர்கள் மிரட்டலுக்குப் பயப்படாமலும், கலங்காமலு மிருங்கள். (மத். 5:10.)

15. ஆண்டவராகிய கிறீஸ்துநாதரை உங்கள் இருதயங்களில் அர்ச்சியுங்கள். உங்களிலுள்ள நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும், வணக்கத்தோடும் தகுந்த பதில் சொல்லும்படி எப்போதும் ஆயத்தமாயிருங்கள்.

16. ஆயினும் கிறீஸ்துநாதருக்கு ஏற்கையான உங்கள் நன்னடக்கையைத் தூஷணிக்கிறவர்கள் உங்கள் மேல் அவதூறு சொல்லும் விஷயத்தில் அவர்களே வெட்கிப்போகும்படி நல்மனச்சாட்சியுடையவர்களாய் இருங்கள். (1 இரா. 2:12.)

17. தின்மையைச் செய்து துக்கத்தை அநுபவிப்பதிலும், சர்வேசுரனுக்குச் சித்தமானால், நன்மையைச் செய்து, துக்கத்தை அநுபவிப்பது நலமாமே.

18. ஏனெனில், கிறீஸ்துநாதரும் நம்மைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கும்படி நம்முடைய பாவங்களுக்காக ஒருதரம் மரித்தார். அநீதருக்காக நீதிமானாகிய அவர் மரித்தார். அவர் மாம்சத்தில் கொலையுண்டு, ஆத்துமத்தில் உயிர்ப்பிக்கப்பட்டவராய், (உரோ. 5:6; எபி. 9:28.)

19. அந்த ஆத்துமத்தில் அவர் போய், சிறையிலிருந்த ஆத்துமங்களுக்குப் பிரசங்கித்தார்.

20. அந்த ஆத்துமங்கள் பூர்வத்திலே நோவேயுனுடைய நாட்களில் அவன் பேழையைச் செய்யும்போது, சர்வே சுரனுடைய நீடிய பொறுமையை எதிர்பார்த்துக்கொண்டு அவிசுவாசி களாயிருந்தவர்கள். அந்தப் பேழை யில் சொற்பப்பேராகிய எட்டுப்பேர் மாத்திரம் ஜலத்தினின்று இரட்சிக் கப்பட்டார்கள். (ஆதி. 7:7; மத். 24:37.)

* 19-20. அப்போஸ்தலர்களால் உண்டாக்கப்பட்ட விசுவாச மந்திரத்தில் சொல்லியிருப்பதுபோல், சேசுநாதர் மரித்தவுடனே அவருடைய திரு ஆத்துமம் பாதாளங்களிலே, அதாவது, பிதாப்பிதாக்கள் ஸ்தலத்திலே இறங்கினது. அங்கிருந்த ஆத்துமாக்கள் யாரெனில், சேசுநாதருடைய திரு மரணத்துக்கு முன்னிருந்தவர்களில் மெய்யான சர்வேசுரனையும், வர இருந்த இரட்சகரையும் விசுவசித்துச் சாவான பாவமில்லாமல் மரித்தவர்களுடைய ஆத்துமங்களாம். அந்தச் சகல ஆத்துமங்களுக்கும் சேசுநாதர்சுவாமி தம்முடைய மரணத்தால் அடைந்த இரட்சணியமாகிய நல்ல செய்தியை, அதாவது, சுவிசேஷத்தை அறிவிக்கப்போனார். அந்த ஆத்துமங்களுக்குள்ளே நோவேயின் காலத்தில் ஜலப்பிரளயத்தில் அமிழ்ந்து மடிந்த அநேக ஆத்துமங்களும் இருந்தன. எப்படியெனில், அப்பொழுது ஏறக்குறைய எல்லோரும் பாவிகளாயிருந்தாலும், அவர்களுக்குள் ஒருவனும் அஞ்ஞானியாயிருந்ததில்லை. ஏனெனில் ஜலப்பிரளயத்துக்குப்பின் பாஷை வேறுபட்டு, ஜனங்கள் பற்பல பிரிவுகளாய்ப் பிரிந்துபோனபிறகு அஞ்ஞான மார்க்கங்கள் உண்டானதேயொழிய அதற்குமுன் சகலரும் மெய்யான சர்வேசுரனை ஆராதித்து, இரட்சகர் வருவாரென்று எதிர்பார்த்திருந்தார்கள். ஜலப்பிரளயம் வரப்போகிறதென்று நோவே அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லும்போது, அவர்கள் நம்பாமல் சர்வேசுரன் நீண்டகாலம் பொறுமையாயிருப்பாரென்று சொல்லி, மனந்திரும்பாதிருந்தார்கள். ஆயினும் ஜலப்பிரளயம் துவக்கினவுடனே அவருடைய வார்த்தைகள் உண்மையென்று நம்பி அவர்களில் அநேகர் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பினார்களென்று எண்ணுவதற்கு இடமுண்டு.

21. அதற்கொத்த ஒப்பனையான ஞானஸ்நானமானது சரீர அழுக்கை நீக்குவதாயிராமல், சர்வேசுரன்மட்டில் நல்ல மனச்சாட்சி உண்டாவென்று அத்தாட்சியாயிருந்து,சேசுக் கிறீஸ்து நாதருடைய உத்தானத்தைக் கொண்டு நம்மை இரட்சிக்கிறது.

22. நாம் நித்திய ஜீவியத்துக்குச் சுதந்தரராகும்படி அவர் மரணத்தைச் சுகித்தபின் பரலோகத்துக்கு எழுந்தருளி, சர்வேசுரனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார். தூதர்களும், பலவத்தரும், சத்துவகரும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். (எபே. 1:21.)