கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம் - அதிகாரம் 03

சின்னப்பர் தமக்கு யாதொரு சிபாரிசும் வேண்டியதில்லையென்றும், கொரிந்தியரே தமக்குச் சிபாரிசுக் காகிதம் போலிருக்கிறார்களென்றும், பழைய ஏற்பாட்டின் ஊழியத்தைவிடப் புதிய ஏற்பாட்டின் ஊழியம் மேன்மையானதென்றும் காண்பிக்கிறார்.

1. நாங்களே எங்களை மறுபடியும் புகழ்ந்துகொள்ளத் துவக்குகிறோமா? அல்லது சிலருக்கு வேண்டியதுபோல சிபாரிசு நிருபங்களை உங்களிடத்தில் கொண்டுவரவென்கிலும் உங்களிடத் தில் பெற்றுக்கொள்ளவாகிலும் எங்க ளுக்கு அவசரமா?

2. எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டதும், எல்லா மனிதர்களாலும் அறிந்து வாசிக்கப்படுகிறதுமாகிய எங்கள் நிருபம் நீங்கள்தானே.

3. ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் எழுதப்பட்ட கிறீஸ்துவின் நிருபமென்று வெளியரங்கமாயிருக் கின்றது. இது மையினாலல்ல, ஜீவிய ராகிற சர்வேசுரனுடைய இஸ்பிரீத்து வினாலும், கற்பலகைகளிலல்ல, உங்கள் இருதயங்களாகிய சதைப் பலகை களிலும் எழுதப்பட்டிருக்கிறது.

4. நாங்கள் சர்வேசுரன் முன்பாகக் கிறீஸ்துநாதர் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.

5. ஆகிலும் ஏதேனும் எங்களால் உற்பத்தியாவதுபோல நாங்கள் ஒரு காரியத்தை நினைப்பதற்குத் தகுதியானவர்களல்ல. ஆனால் எங்கள் தகுதி சர்வேசுரனால் உண்டாயிருக்கிறது.

6. அவரே எங்களைப் புதிய ஏற்பாட் டுக்குத் தகுதியான ஊழியராயிருக்கும் படி செய்தார். அதுவும் எழுத்தினா லல்ல, இஸ்பிரீத்துவினாலேதான். ஏனெ னில் எழுத்தானது கொல்லுகிறது: இஸ் பிரீத்துவோ உயிர்தருகிறது. (உரோ.8:2.) 

* 6. சர்வேசுரன் எங்களைத் தெரிந்துகொண்டு புதிய ஏற்பாட்டிற்குத் தகுதியான ஊழியர்களாக்கினார். இந்தப் புதிய ஏற்பாடு மோயீசன் கையில் கொடுக்கப்பட்ட பிரமாணத்தைப்போல எழுத்தின் பிரமாணமாயிராமல், இஸ்பிரீத்துசாந்துவைப் பயக்கும் இஷ்டப்பிரசாத பிரமாணமாயிருக்கிறது. எழுத்துப் பிரமாணம் இஸ்பிரீத்துசாந்துவைப் பயக்காமல், மீறுதலினிமித்தம் மரணத்தை உண்டாக்கினது. (உரோ. 17-ம் அதி. 7-ம் வசன துவக்கி 16-ம் வசனவரைக்குங் காண்க.) இஸ்பிரீத்துசாந்துவோ இருதயத்திலே இஷ்டப்பிரசாதமாகிய ஞான உயிரைப் பயக்கிறார்.

7. எழுத்துகளால் கற்களில் வரையப்பட்ட, மரணத்தைக் கொண்டுவந்த (வரிவேத) ஊழியமானது மோயீசனை ஒளிவுள்ளவனாக்கினதால், அவன் முகத் தின் ஒளியினிமித்தம் இஸ்ராயேல் புத்திரர் அவனுடைய முகத்தை ஏறெ டுத்துப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. ஆயினும் அது ஒழிந்துபோகிற மகிமைக் குரியதாயிருந்தது. (யாத். 34:29.)

8. அப்படியானால், இஸ்பிரீத்துசாந்துவைப் பெறுவிக்கிற ஊழியம் எவ்வ ளவோ அதிக மகிமைக்குரியதாயிராது?

9. ஏனெனில் ஆக்கினைத் தீர்ப்பைப் போதிக்கும் ஊழியம் மகிமையுள்ளதானால், நீதியைப் பெறுவிக்கும் ஊழியம் எவ்வளவோ அதிமிக மகிமையுள்ளதாயிருக்கும்!

10. இன்னமும் இந்த விஷயத்தில் முன் மகிமைப்படுத்தப்பட்ட அந்த ஊழியம் இந்த ஊழியத்தின் சிறந்த மகிமைக்கு முன்பாக மகிமைப்பட்டதல்ல.

11. ஏனெனில் ஒழிந்துபோகிற காரியமே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைநிற்கிற காரியம் அதிமிக மகிமை யுள்ளதாயிருக்குமே.

12. இவ்வித நம்பிக்கை எங்களுக்கு உண்டாயிருப்பதினாலே நாங்கள் மிகுந்த தெம்பு காட்டுகிறோம்.

13. மோயீசன் ஒழிந்துபோகிற தனது முகக் காந்தியை இஸ்ராயேல் புத்திரர் பாராவண்ணம், தன் முகத்தை முக்காட் டால் மறைத்துக்கொண்டது போல நாங்கள் செய்வதில்லை. (யாத். 34:33.)

14. ஆயினும் அவர்களுடைய புலன்கள் மழுங்கிப்போயிற்று. இந்நாள் வரையிலும் அவர்கள் பழைய ஏற்பாட் டை வாசிக்கையில் அந்தக் திரையா னது எடுபடாமல் அவர்களை மூடிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அது கிறீஸ்துநாதர் வழியாய் எடுபடும்.

15. இந்நாள்வரைக்கும் அவர்கள் மோயீசன் ஆகமங்களை வாசிக்கும்போது, அவர்கள் இருதயத்தின்மேல் திரை போடப்பட்டிருக்கிறது.

16. ஆகிலும் அவர்கள் ஆண்டவரிடத்தில் மனந்திரும்புங்காலத்தில் அந்தத் திரைச்சீலை எடுபட்டுப்போம்.

17. ஆண்டவரோ இஸ்பிரீத்துவாயிருக்கிறார்; ஆண்டவருடைய இஸ்பிரீத்து எங்கே உண்டோ, அங்கே சுயாதீனமுமுண்டு. (அரு. 4:24.)

18. நாங்களெல்லோரும் ஆண்டவருடைய பிரதாப மகிமையைத் திறந்த முகமாய்த் தரிசித்து ஆண்டவ ருடைய இஸ்பிரீத்துவின் செயலால் ஒளிக்குமேல் ஒளிபெற்று, அந்தச் சாயலாக மறுரூபமாகிறோம்.

* 18. 12-ம் வசனமுதல் கடைசிமட்டுமுள்ள வசனங்களின் அர்த்தமாவது: புதிய ஏற்பாட் டின் ஊழியருக்குண்டாயிருக்கிற நிகரற்ற மகிமையை நாங்கள் உத்தேசித்து மோயீசன் இஸ்ராயேல் பிரஜைகளோடு பேசும்போது தன் முகத்தை மூடினதுபோல் நாங்கள் மூடாமலும் கூச்சப்படாமலும் சுவிசேஷத்தை மிகுந்த தைரியத்தோடே பிரசங்கிக்கிறோம். மோயீசன் முகத்தின்மேல் போடப்பட்ட முக்காடு இஸ்ராயேல் பிரஜைகளின் இருதயக் கடினத்துக்கும் குருட்டாட்டத்துக்கும் அடையாளமாயிருந்தபடியால், அவர்கள் மோயீசன் ஆகமங்களை வாசிக்கும்போதெல்லாம் அந்த முக்காடு அவர்கள் இருதயங்களின்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிறாப்போலே மோயீசன் ஆகமங்களில் கிறீஸ்துநாதரைக்குறித்துச் சொல்லியிருக்கிற சாட்சியை அவர்கள் கண்டுபிடியாமல், அவரை இந்நாள்வரைக்கும் விசுவசியாதிருக்கிறார்கள். அவரை அவர்கள் விசுவசிக்கும்போது அந்த முக்காடு எடுபடும். அதுவும் சேசுக்கிறீஸ்துநாதரால்தான் ஆகவேண்டும். எங்கள் இருதயமோ அப்படிப்பட்ட முக்காட்டினால் மூடப்படாமல், இஸ்பிரீத்துசாந்துவின் வரப்பிரசாதமாகிய ஞான வெளிச்சத்தைக்கொண்டு ஞானப்பிரகாசத்தை நாளுக்குநாள் அதிகமதிகமாய் அடைந்து அந்தப் பிரகாசத்தினால் ஆண்டவருடைய மகிமையைத் தரிசிக்கிறாப்போல் இவ்வுலகத் திலே தரிசித்து மறுவுலகத்திலே அதற்கு ஒப்பானவர்களாவோம் என்று அர்த்தமாம்.