அர்ச். இராயப்பர் திருச்சபைக்கு எழுதிய இரண்டாம் நிருபம் - அதிகாரம் 01

தங்கள் ஈடேற்றத்தை நிச்சயப்படுத்தும் பொருட்டு விசுவாசத்தோடுகூடிய சகல புண்ணிய முயற்சிகளையும் அநுசரிக்க வேண்டுமென்று புத்திசொல்லுகிறார்.

1. சேசுக்கிறீஸ்துநாதருடைய ஊழியனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் இராயப்பன், நம்முடைய தேவனும் இரட்சகருமாகிய சேசுக்கிறீஸ்துநாத ருடைய நீதியில் எங்களோடு சரியொத்த விசுவாசத்தைக் கைக்கொண்டவர்களுக்கு எழுதுவது:

2. சர்வேசுரனையும் நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு இஷ்டப்பிரசாதமும் சமாதானமும் சம்பூரணமாய் உண்டாவதாக. (யூதா. 2.)

3. தம்முடைய சுய மகிமையாலும் கருணையாலும் நம்மை அழைத்தவரை அறியும் அறிவினால் ஜீவியத்துக்கும் தேவபக்திக்கும் வேண்டியவைகள் யாவும் அவருடைய தெய்வீக வல்லமை யால் நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. (1 இரா. 2:9; 2 கொரி. 4:6.)

4. அவர் வழியாக (சர்வேசுரன்) நமக்கு மகா மேன்மையும் விலையேறப் பெற்றதுமான வாக்குத்தத்தங்களைக் கொடுத்து, அவைகளால் நாம் உலகத்தி லுள்ள துர் இச்சைகளின் கேட்டுக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்துக்குப் பங்காளி களாகும்படி செய்கிறார். (எபே. 4:22.)

5. அப்படியிருக்க, நீங்களும் உங்களாலான முயற்சியெல்லாஞ் செய்து உங்கள் விசுவாசத்தோடு புண்ணியத்தையும், (கலாத். 5:22.)

6. புண்ணியத்தோடு விவேகத்தையும், விவேகத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறு மையையும், பொறுமையோடு பக்தி யையும்,

7. பக்தியோடு சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடு தேவ சிநேகத்தையும் சேர்த்து அநுசரியுங்கள்.

8. இவைகள் உங்களிடத்தில் இருந்து பெருகுமானால், நம்முடைய ஆண்டவ ராகிய சேசுக்கிறீஸ்துவை அறியும் அறிவில் உங்களை வெறுமையானவர்களும் பலனற்றவர்களுமாய் இருக்க வொட்டாது. (கலாத். 7:10.)

9. இவைகள் எவனிடத்தில் இல்லையோ, அவன் குருடனும், கையால் தடவுகிறவனுமாயிருப்பதுமன்றி, தன் பழைய பாவங்களினின்று சுத்தமானதையும் மறந்தவனாகிறான். (1 அரு. 2:9.)

10. ஆதலால் சகோதரரே, உங்கள் அழைத்தலையும் தெரிந்துகொள்ளுதலையும் உங்கள் நற்கிரியைகளால் நிச்சயப்படுத்திக்கொள்ளும்படி அதிகம் அதிகமாய்ப் பிரயாசப்படுங்கள். இப்படிச் செய்தால், ஒருபோதும் பாவத்தில் விழமாட்டீர்கள்.

11. இவ்விதமாய் நம்முடைய ஆண்ட வரும், இரட்சகருமாகிய சேசுக்கிறீஸ்து வின் நித்திய இராச்சியத்தில் பிரவே சிக்கும் பாக்கியம் உங்களுக்குத் தாராள மாய் அளிக்கப்படும்.

12. ஆகையால் நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லுகிற சத்தியத்தை நீங்கள் அறிந்து, இதில் உறுதிப்பட்டவர்களாயிருந்தாலும், இவைகளைப்பற்றி உங்களை எப்போழுதும் எச்சரித்துக்கொண்டே வருவேன்.

13-14. நம்முடைய கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துநாதர் எனக்கு அறிவித் தபடியே, நான் இந்தச் சரீரக்கூட்டை விட்டுப் பிரியுங்காலம் விரைந்து வருகிற தென்று எனக்கு நிச்சயமாயிருப்பதால், நான் இந்தச் சரீரக்கூட்டிலிருக்குமள வும் உங்களை எச்சரித்துத் தூண்டு வது நியாயமென்று எண்ணுகிறேன். (அரு. 21:19.)

15. அல்லாமலும் என் மரணத்துக்குப்பின்னும் நீங்கள் இவைகளை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்ளுவதற்கு ஏதுவுண்டாகும்படி வழிபண்ணுவேன்.

16. ஏனெனில் நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளை அநுசரிக்கிறவர்க ளைப்போல் அல்ல; நம்முடைய கர்த்த ராகிய சேசுக்கிறீஸ்துவின் மகத்து வத்தைக் கண்ணால் கண்டவர்களா கவே அவருடைய வல்லமையையும் வருகையையும் உங்களுக்குத் தெரியப் படுத்தினோம். (1 கொரி. 1:17.)

17. எப்படியெனில், மகத்துவம் பொருந்திய மகிமையினின்று ஓர் குரல் சப்தித்து, அவரை நோக்கி: இவர் என் நேச குமாரன், இவர்பேரில் பிரியமாயிருக்கிறேன்; இவருக்குச் செவிகொடுங்கள் என்ற போது, அவர் பிதாவாகிய சர்வேசுரனிடத்தினின்று மகிமையையும் பெருமையையும் பெற்றுக்கொண்டார். (மத். 17:5; சங். 2:7.).)

18. நாங்களும் பரிசுத்த மலையில் அவருடனே இருக்கையில் வானத்தினின்று உண்டான இந்தச் சப்தத்தைக் கேட்டோம்.

19. இவ்விதமாய்த் தீர்க்கதரிசன வாக்கியமும் நமக்கு அதிக உறுதியாயிற்று. பொழுது விடிந்து, விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதயமாகுமளவும், இருண்ட ஸ்தலத்தில் எரிகிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தை நீங்கள் கவனித்துவந்தால், நன்மையாயிருக்கும்.

20. ஆகிலும் வேதப்பிரமாணத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனத்துக்கும் அவனவன் தானே வியாக்கியானஞ் செய்யத்தக்கதல்லவென்று முந்த முந்த அறிந்து கொள்ளக்கடவீர்கள். (2 தீமோ. 3:16.)

21. ஏனெனில், தீர்க்கதரிசனமானது எக்காலத்திலாவது மனுஷருடைய மனதினால் உண்டானதல்ல. சர்வே சுரனுடைய பரிசுத்த மனுஷர்கள் இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டுப் பேசினார்கள்.

* 20-21. கிறீஸ்துவர்கள் பரலோக மகிமைப்பிரதாப ஒளியில் சேருந்தனையும் இவ்வுலக அந்தகாரத்தில் நடக்கிறதினாலே, எப்போதும் தேவ வாக்கியத்தைத் திருவிளக்காகக் கையிலேந்தி அதின் ஒளியில் நடக்கவேண்டுமென்று அர்ச். இராயப்பர் படிப்பிக்கிறார். இத்தோடு இன்னொரு விசேஷத்தையும் கவனிக்கவேண்டுமென்று அவர் படிப்பிக்கிறார். என்னவெனில்: பரிசுத்த தீர்க்கதரிசிகள் தங்கள் சுயமனதாய் ஒருபோதும் பேசாமல், இஸ்பிரீத்துசாந்துவானவர் தங்களுக்கு ஏவினபடியே பேசின படியால் அந்த ஏவலின்படி அவர்கள் பேசினவைகளுக்கும், எழுதினவைகளுக்கும், எவனும் தன் சுயமனதின்படி அர்த்தமாவது வியாக்கியானமாவது செய்யலாகாதென்று கட்டளையிடுகிறார். இஸ்பிரீத்துசாந்துவினால் நடத்தப்படுகிற சத்திய திருச்சபை மாத்திரம் அவைகளுக்கு மெய்யான அர்த்தத்தையும் வியாக்கியானத்தையுஞ் சொல்லக்கூடும். இதனிமித்திம் உரோமான் கத்தோலிக்கு திருச்சபையிலுள்ள வேதபாரகரெல்லாரும் வேதவாக்கியங்களுக்கு வியாக்கியானஞ் செய்யும்போது, தங்கள் இஷ்டப்படி செய்யாமல், திருச்சபையின் படிப்பினையையும் நோக்கத்தையுமுன்னிட்டு வியாக்கியானம் செய்கிறார்கள். அன்றியும் அவர்கள் வேதசம்பந்தமாய் எழுதியதெல்லாவற்றையும், திருச்சபையானது பரிசோதித்து ஆராயும்படிக்கு அதற்கு ஒப்புக்கொடுத்து, திருச்சபையால் செய்யப்படும் திருத்தங்களையும், அங்கீகரிப்பையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.