பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 01

சின்னப்பர் தாம் பிலிப்பியருடைய நன்மையை உத்தேசியாதேபோனால், மரித்து, கிறீஸ்துநாதரோடிருக்க ஆசித்திருப்பதாகச் சொல்லுகிறார்.

1.சேசுக்கிறீஸ்துநாதருடைய ஊழியர்களாகிய சின்னப்பனும், தீமோத்தேயும், பிலிப்பிப் பட்டணத்தில் கிறீஸ்து சேசுநாதருக்குள்ளான அர்ச்சிக்கப்பட்ட சகலருக்கும், மேற்றிராணி மார்களுக்கும், தியாக்கோன்மார்களுக்கும் எழுதுவது:

* 1. அர்ச்சிக்கப்பட்டவர்கள் என்பது கிறீஸ்தவர்களாம்; அப்போஸ்தலர் நடபடி 6-ம் அதிகாரத்தில்சொல்லியிருப்பதுபோல தியாக்கோன்மார் என்பவர்கள் மேற்றிராணிமார் களுக்கும் குருமார்களுக்கும் ஒத்தாசையாயிருந்து, விசுவாசிகளுக்குத் தேவநற்கருணையையும், தரித்திரர்களுக்குக் கோவில் தர்மப் பணங்களையும் பகிர்ந்துகொடுக்கும்படிக்கு அப்போஸ்தலர்களாலே ஏற்படுத்தப்பட்ட திருப்பணிவிடைப் பட்டத்தைப் பெற்றவர்களாம்.

2. நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனாலும், ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்து வினாலும் உங்களுக்கு இஷ்டப்பிர சாதமும், சமாதானமும் உண்டாவதாக.

3. நான் உங்களை நினைவுகூரும் போதெல்லாம் என் கடவுளுக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரஞ் செய்கிறேன்.

4-5. நீங்கள் முதல்நாள் தொடங்கி, இதுவரையில் கிறீஸ்துநாதருடைய சுவிசேஷத்துக்கு உடந்தையாயிருக்கிறதைப்பற்றி எப்போதும் என் சகல ஜெபங்களிலும் உங்களெல்லாருக்காகவும் சந்தோஷத்தோடு பிரார்த்தித்து வருகிறேன்.

* 5. முதல்நாள் தொடங்கி என்பது நீங்கள் கிறீஸ்துநாதரை விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றநாள் தொடங்கி என்றர்த்தமாம்.

6. உங்களுக்குள் அந்த நற்கிரியையைத் துவக்கினவர் சேசுக்கிறீஸ்துவின் நாள்வரையில் அதை முற்றுமுடிய நடத்துவாரென்று நம்புகிறேன்.

* 6. சேசுக்கிறீஸ்துவின் நாள் என்பது தீர்வைநாள்.

7. உங்கள் எல்லாரையுங் குறித்து நான் இப்படிப் பற்றுதலாயிருப்பது நியாயமாயிருக்கின்றது. ஏனெனில் என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்துக்காக உத்திரவாதஞ்சொல்லி அதை உறுதிப்படுத்துவதிலும், நீங்கள் எல்லோ ரும் என் சந்தோஷத்துக்குப் பங்காளி களாயிருக்கிறீர்களென்று உங்களை என் இருதயத்தில் வைத்திருக்கிறேன்.

8. அப்படியே சேசுக்கிறீஸ்துநாதருடைய உள்ளத்தில் நான் உங்கள் எல் லோர்பேரிலும் எவ்வளவோ வாஞ்சை யாயிருக்கிறேனென்பதற்குச் சர்வே சுரனே எனக்குச் சாட்சியாயிருக்கிறார்.

9. ஆகையால் உங்கள் அன்பானது அறிவிலும், எல்லா உணர்விலும் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்,

10. இவ்விதமாய் நீங்கள் அதிக நலமானவைகளைப் பகுத்தறிந்துகொள் ளவும், கிறீஸ்துநாதருடைய நாள் வரைக்கும் ஓர் குற்றமுமின்றி நேர்மை யுள்ளவர்களாயிருக்கவும்,

11. சர்வேசுரனுக்கு மகிமையும், ஸ்தோத்திரமும் உண்டாகும்படிக்கு நீங்கள் சேசுக்கிறீஸ்துவின் மூலமாய் நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாயிருக்கவும் வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

12. சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷத்தின் விருத்திக் காகவே சம்பவித்ததென்று நீங்கள் அறிய விரும்புகிறேன்.

13. அப்படியே, நான் கட்டப்பட் டிருக்கிற கட்டுகள் கிறீஸ்துநாதரைப் பற்றியவைகளென்று அரண்மனை யடங்கலிலும், மற்ற எல்லா இடங்களிலும் பிரபல்யமாகி,

* 13. இங்கே சொல்லப்பட்ட அரண்மனை அப்போது உரோமாபுரி இராயனாயிருந்த நீரோ என்பவனுடைய அரண்மனையாம். கிறீஸ்தவர்களுக்கு விரோதமாய் வேத கலகம் பண்ணின உரோமாபுரி இராயர்களுக்குள்ளே இந்த நீரோ என்பவன் அதிகக் கொடூரமுள்ளவனாயிருந்தான். அப்படியிருந்தாலும் அவனுடைய அரண்மனையிலே முதலாய் அநேகர் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள்.

14. சகோதரரில் அநேகர் என்கட்டுகளால் கர்த்தருக்குள் தைரியங்கொண்டு, அச்சமின்றி தேவ வாக்கியத்தைப் பேசுவதற்கு அதிகமாய்த் துணிவுகொண்டிருக்கிறார்கள்.

15. ஆகிலும் சிலர் காய்மகாரத்தினாலும், விரோதக்குணத்தினாலும், வேறு சிலர் நல்ல மனதினாலும் கிறீஸ்துநாதரைப் பிரசங்கிக்கிறார்கள்.

16. சிலர் நான் சுவிசேஷத்துக்கு உத்தரவாதஞ்சொல்ல ஏற்படுத்தப் பட்டிருக்கிறேனென்று அறிந்து, அன்பினாலே பிரசங்கிக்கிறார்கள்.

17. வேறு சிலரோ, என் கட்டுகளை அதிகமாய் இறுக்கவேண்டுமென்று எண்ணி, நேர்மையான மனதோடுகிறீஸ்துநாதரைப் பிரசங்கியாமல் விரோதத்தினாலே பிரசங்கிக்கிறார்கள்.

* 14-17. அர்ச். சின்னப்பர் சிறைப்பட்டிருக்கிறாரென்று அறிந்து, உரோமாபுரியிலுள்ள கிறீஸ்தவர்கள் உரோசங்கொண்டு சுவிசேஷத்தை அஞ்ஞானிகளுக்குள்ளே பிரசங்கிக்கும்படி அதிகமாய்த் துணிந்தார்கள். ஆகிலும் எல்லாரும் நல்ல கருத்தோடு பிரசங்கியாமல், சிலர் மற்றவர்கள்பேரில் காய்மகாரத்தினாலும், தங்களுக்குக் கீர்த்தியுண்டாக வேணுமென்கிற ஆசையினாலும், வேறே சிலர் ஆண்டவருடைய ஸ்தோத்திரம் அதிகரிக்கவேண்டுமென்கிற நல்ல கருத்தினாலும், இன்னுஞ் சிலர் அர்ச். சின்னப்பர் வெளியே வந்து, பிரசங்கிக்கக்கூடாதவராயிருக்கிறாரென்று கண்டு, அவர்பேரில் தாங்கள் வைத்த பிரியத்தினாலும், மற்றும் சிலர் அர்ச். சின்னப்பர்பேரில் காய்மகாரத்தினால் அவரை இராயர் முன்னிலையில் அதிகக் குற்றப்படுத்தும்பொருட்டும் பிரசங்கித்தார்களென்று அர்த்தமாம்.

18. இதனாலென்ன? ஒப்புக்கானாலும், நேர்மையாகவென்கிலும், எவ்விதமும் கிறீஸ்துநாதர் பிரசங்கிக்கப்படுகிறா ரே; அதனாலே நான் சந்தோஷப்படுகி றேன், இன்னமும் சந்தோஷப்படுவேன். 

19. ஏனெனில் உங்கள் வேண்டுதலினாலும், சேசுக்கிறீஸ்துநாதருடைய இஸ்பிரீத்துவின் உதவியினாலும், இது எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிந்திருக்கிறேன்.

20. நான் நம்பி, எதிர்பார்த்திருக்கிற படி ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போக மாட்டேன். ஆனால் எப்பொழுதும் போல் இப்பொழுதும் நான் பிழைத் தாலுஞ்சரி, செத்தாலுஞ்சரி, கிறீஸ்து நாதர் என் சரீரத்தில் மகிமைப்படுவா ரென்று முழு நிச்சயமாய் அறிந்திருக் கிறேன்.

21. ஏனெனில் கிறீஸ்துநாதர் எனக்கு ஜீவன்; மரணம், எனக்கு ஆதாயம்.

22. ஆகிலும், சரீரத்தில் பிழைத்திருப்பதினால் என் கிரியைக்குப் பலனுண்டாகுமானால் எதைத் தெரிந்து கொள்ளுகிறதோ, அறியேன்.

* 22. என் கிரியைக்குப் பலன். இந்த வசனத்திலே அப்போஸ்தலர் தாம் உடனே கிறீஸ்துநாதருக்காக உயிரைக் கொடுத்து நித்திய பாக்கியத்தை அடைவது தமக்கு ஆதாயமென்றாலும், தாம் இன்னும் கொஞ்சகாலம் உயிரோடிருப்பது கிறீஸ்துவர்களுடைய ஆத்துமத்துக்கும் அதிக பிரயோசனமாயிருக்குமென்பதால், தாம் சாகவோ அல்லது உயிரோடிருக்கவோ, எதை ஆசிக்கவேண்டுமென்று தமக்குத் தெரியவில்லை என்கிறார்.

23. ஆகையால் இருபக்கத்திலும் நெருக்கப்படுகிறேன். என் தேகக் கட் டவிழ்ந்து, கிறீஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு. இதுவும் அதிமிக நன்மைதான்.

24. ஆனால் இன்னும் சரீரத்தில் நிலைத்திருக்கிறது உங்களைப்பற்றி அவசியமாயிருக்கின்றது.

25. உங்கள் நல்விர்த்திக்காகவும், விசுவாசத்தில் உங்கள் சந்தோஷத்துக் காகவும் நான் பிழைத்திருந்து, உங் கள் அனைவரோடும் தங்கியிருப்பே னென்று நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

26. அதனாலே நான் மறுபடியும் உங்களிடத்தில் வரும்போது, என்னைக் குறித்துக் கிறீஸ்துநாதரிடத்தில் உங்கள் மகிழ்ச்சி பெருகும்படியாகும்.

27. ஆகையால் நான் வந்து, உங்களைக் கண்டாலுஞ்சரி, வராதிருந்தாலுஞ் சரி, நீங்கள் ஒரே இஸ்பிரீத்துவில் மன ஒற்றுமையாயிருந்து, சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காக உடன் பிரயாசப்படுகிறீர்களென்று நான் கேள்விப்படும்படிக்குக் கிறீஸ்துநாத ருடைய சுவிசேஷத்திற்கு எவ்விதத் திலும் தகுதியானவர்களாகமாத்திரம் நடந்து கொள்ளுங்கள். (எபே. 4:1; கொலோ. 1:10.)

28. எதிரிகளைப்பற்றி ஒன்றுக்கும் பயப்படாதிருங்கள். அது அவர்களுக்குக் கேட்டுக்குக் காரணமாகவும், உங்க ளுக்கு இரட்சணியத்துக்குக் காரண மாகவும் இருக்கின்றது. இதுவும் சர்வேசுரனுடைய செயலே.

* 28. வேதத்தைப்பற்றி உங்களைத் துன்பப்படுத்துகிற அஞ்ஞானிகளுக்குப் பயப்படாதேயுங்கள். அவர்கள் உங்களுக்குச் செய்கிற துன்பங்கள் அவர்களுக்கே கெடுதலல்லாது, உங்களுக்குக் கெடுதலல்ல. அது உங்களுக்கு நன்மையாயிருப்பதைப்பற்றியே சர்வேசுரன் அப்படிப்பட்ட துன்பங்களைத் தடுக்காதிருக்கிறாரென்று அர்த்தமாம்.

29. ஏனெனில் நீங்கள் கிறீஸ்துநாதரை விசுவசிப்பதற்குமாத்திரமல்ல, அவருக்காகப் பாடுபடுவதற்கும் உங்க ளுக்கு வரங் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

30. என்னிடத்தில் முன்னே நீங்கள் கண்டதும், இப்பொழுது எனக்குண்டென்று கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.