மகா பரிசுத்த கன்னிகையின் அமல உற்பவம்

பரிசுத்த வேதாகமச் சான்றுகள்

திவ்விய கன்னிகையின் பரிசுத்த அமல உற்பவத்தை எண்பிக்கிற வேதாகமச் சான்றுகளைப் பார்க்குமுன் ஜென்மப் பாவம் என்றால் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முயல்வோம். 

நம் ஆதித் தகப்பனாகிய ஆதாமை ஆண்டவராகிய கடவுள் படைத்தபின் அவனை நோக்கி: “நீ சிங்கார வனத்திலுள்ள சகல வித மரங்களின் கனிகளையும் புசிக்கலாம். ஆனால் நன்மையும் தின்மையும் அறிவிக்கும் மரத்தின் கனியை உண்ணாதிருப்பாயாக. ஏனென்றால் அதை நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று கற்பித்தார்.

உபமான முறையில் கனி என்று இங்கே கூறப்பட்டுள்ளது உண்மையில் சரீர இச்சையே ஆகும். 

நாம் ஏற்கனவே பார்த்துள்ளது போல, பெண்கள் கன்னியராயிருந்து கொண்டே கடவுளின் வல்லமையுள்ள அருட்செயலால் சுபாவத்துக்கு மேலான முறையில் கருத்தரித்து, தங்கள் கன்னிமைக்குப் பங்கமில்லாமலே குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதே சர்வேசுரனுடைய ஆதித் திட்டமாக இருந்தது. 

எனினும் இந்தத் திட்டத்தை அவர் ஒரு கட்டளையாக மனிதர்களுக்குத் தரவில்லை. மாறாக, தேவ வல்லமையால் கருத்தரித்தல் என்னும் நன்மையையும், ஆணின் இச்சையால் கருத்தரித்தல் என்னும் தின்மையையும் அவர் மனிதனுக்கு முன்பாக வைத்தார். 

ஏனெனில் நன்மையானதை மட்டும் கடவுள் மனிதனுக்கு முன்பாக வைத்திருப்பார் என்றால், மனிதன் தன் சொந்த சுயாதீன சித்தத்தைப் பயன்படுத்திப் பாவம் செய்ய இயலாதவனாக இருந்திருப்பான். வேறு வழியின்றி கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டியவனாக இருந்திருப்பான். 

ஆனால் தின்மை செய்ய வழியிருந்தும், கடவுளின் மீது கொள்ளும் நேசத்திற்காக அதை அருவருத்துத் தள்ளிவிட்டு, கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருப்பதை மனிதன் தேர்ந்து கொள்வான் என்றால், அவன் கடவுளுக்குப் பெரும் மகிமை செலுத்துபவனாக இருந்திருப்பான். அதன் மூலம் அவர் தரவிருந்த பரலோக மகிமைக்குத் தகுதியுள்ளவனாகவும் ஆகியிருப்பான் 

ஆண்டவர் மனிதனுக்குத் தாம் வழங்கிய சுயாதீன சித்தத்தை மதிப்பவராக இருந்தார். நன்மையை மட்டுமே மனிதன் முன் வைத்து, அதை மட்டுமே அவன் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிற சர்வாதிகாரியாக அவர் இருக்க விரும்பவில்லை. மாறாக, அவன் அதே சுயாதீன சித்தத்தைப் பயன்படுத்தி, நன்மையை மட்டும் தேர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். 

அதாவது, பரிசுத்த கன்னிமையை இழந்து, சரீர இச்சையைத் திருப்தி செய்துகொள்வதன் மூலம் பாவ அசுத்தத்தில் சாபத்திற்குரிய குழந்தைகளை ஈன்றெடுப்பதை மனிதன் தேர்ந்து கொள்வதற்குப் பதிலாக, தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருப்பதன் மூலம் சர்வேசுரனுடைய வல்லமையுள்ள வரப்பிரசாதச் செயல் முறையின் வழியாக. ஆணின் துணையின்றி, பெண்கள் தங்கள் கன்னிமைக்குப் பங்கம் வராமலே மாசற்ற குழந்தைகளை ஈன்றெடுப்பதைத் தேர்ந்துகொள்ள வேண்டும் என்று சர்வேசுரன் விரும்பினார். 

இதுவே நன்மை தின்மை அறிவிக்கும் மரம் என்று உபமானமாகக் கூறப்படுகிறது. சரீர இச்சையே அதன் கனியாக இருந்தது. இந்தக் கனியை உண்ணாதிருக்கும்படியாகத்தான் சர்வேசுரன் மனிதனுக்குக் கட்டளையிட்டார்.

பசாசு பாம்பின் உருவத்தில் வந்து, ஏவாளின் கண்களுக்கும், அவள் வழியாக ஆதாமின் கண்களுக்கும் சரீர இச்சையை அறிமுகப்படுத்தி, சரீர இச்சையின் பாவத்தைச் செய்யும்படி பெண்ணைத் தூண்டும் வரையிலும் ஆதிப் பெற்றோரின் கண்கள் தின்மைக்கு மூடியவையாகவே இருந்தன. 

அவர்கள் மாசற்றவர்களாக இருந்தார்கள். இச்சை என்னும் தின்மை அவர்களை  இன்னும் தொடாதிருந்தது. எனவே அவர்கள் கள்ளங்கபடற்றவர்களாக, தாங்கள் நிர்வாணமாயிருந்தும் அதை அறியாதவர்களாக, மாசற்ற குழந்தைகளாக இருந்தார்கள். 

எனவே கடவுளின் கண்களுக்கு அவர்கள் மிகப் பிரியமானவர்களாகவும், அவருடைய அளவற்ற சிநேகத்திற்குத் தகுதியுள்ளவர்களாகவும் இருந்தார்கள்.

சாத்தானோ வஞ்சகம் மிக்கவனாயிருந்தான். தான் இழந்துபோன பரலோக பாக்கியத்தை எந்த வகையிலும் மனிதன் அடையாதபடி செய்துவிட. அவனுடைய கொடிய காய்மகாரம் எப்போதும் அவனைத் தூண்டிக்கொண்டே இருந்தது. 

ஆதாம் ஏவாளின் மகா பரிசுத்த மாசற்றதனமும், சிங்கார வனத்தில் அவர்கள் அனுபவித்து வந்த சர்வேசுரனுடைய நேசமும், சகல பாக்கியங்களும், மாசற்ற இன்பங்களும் அவனுடைய பொறாமைக்கு எண்ணெயாக இருந்து, அதைப் பெரும் சூளையாகப் பற்றியயரியச் செய்தன.

எனவே, கடவுள் தங்களுக்கு விலக்கியிருந்த அந்தத் தீமையைப் பற்றித் தெரிந்துகொள்ள ஏவாள் கொண்டிருந்த வினோதப் பிரியத்தை அவன் பயன்படுத்திக்கொண்டான். 

அவள் சரீர இச்சையைப் பயன்படுத்தியும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இவ்வாறு தேவ வல்லமையாலன்றி, அவர்களே தங்களுக்கென சந்ததியை உருவாக்கிக்கொள்ள முடியும் என்றும், இவ்வாறு அவர்கள் தேவர்கள் போலாகி, நன்மையை மட்டுமின்றி, தின்மையையும் அறிந்து கொள்வார்கள் என்றும் கூறி, அவன் ஏவாளை ஏமாற்றினான். 

அத்தோடு ஏவாளிடம் அது வரை இல்லாதிருந்த இச்சையை அவன் அவளுடைய கண்களுக்கு அறிமுகப்படுத்தினான். இப்போது, அவளுடைய கண்களுக்கு முன்னாலிருந்த மாசற்றதனத்தின் திரை சிறிது சிறிதாக விலகிக் கொள்ள, முதன் முதலாக அவள் சரீர இச்சையின் மீது தாகம் கொண்டாள். 

அது ""புசிப்பதற்கு நல்லதென்றும் பார்வைக்கு நேர்த்தியானதென்றும், அதை நோக்கினால் கண்குளிருமென்றும் கண்டுணர்ந்ததினாலே''  (ஆதி.3:6) அவள் அந்த உணர்வைத் தன் கணவனுக்கும் தந்தாள். இருவரும் முதன்முதலாக சரீர இச்சையைத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். தேவ கட்டளையை மீறியதால் பாவத்தைக் கட்டிக்கொண்டார்கள்.

மாசற்றதனத்தின் திரை விலகியதால் ""உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. தாங்கள் நிர்வாணமாயிருந்ததைக் கண்டறிந்தார்கள்'' (ஆதி.3:5). 

குழந்தைகளுக்குரிய அவர்களுடைய மாசற்றதனம் இப்போது விலகி விட்டது. கடவுளின் மக்களாக, அவருடைய தெய்வீக உறவில், சகல பாக்கியங்களையும் முழுமையாக அனுபவித்து வந்த தங்கள் உன்னதமான அந்தஸ்திலிருந்து அவர்கள் விழுந்து போனார்கள். 

"அழியாமையும், தேவசிநேகமும் துன்புற இயலாமையுமாகிய'' கடவுளின் மகா பரிசுத்த சாயல் அவர்களிடமிருந்து விலகிக் கொண்டது. அதன் இடத்தைப் பாவமும், சாபமும் பிடித்துக் கொண்டன. அவர்களுடைய ஆத்துமம் நித்திய அழிவுக்குரியதாக, அதாவது, நரகத்தில் நித்தியத்திற்கும் தண்டிக்கப்படத்தக்கதாக மாற, அவர்களுடைய சரீரம் நோய்களுக்கும், துன்பங்களுக்கும், உழைப்பு, களைப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக மரணம் ஆகிய அனைத்து தீமைகளுக்கும் இலக்காகிப் போனது.

கடவுளால் நல்லதெனக் காணப்பட்ட அவருடைய சிருஷ்டிப்பு இவ்வாறு அழுக்கடைந்து போனது. அது அவருடைய மாசற்ற திருவிழிகளுக்கு அருவருப்பாகிப் போனது. மனிதன் தன் சரீரத்தையே தின்மையின் கருவியாக்கிப் பாவம் செய்ததால், சரீரமும் முக்கியமான விதத்தில் தண்டிக்கப்படுவதை நாம் காண்கிறோம். 

ஆண்டவராகிய கடவுள் ஏவாளைப் பார்த்து, ""உனக்குத் துன்பங்களையுங் கர்ப்ப வேதனைகளையும் அதிகப்படுத்துவோம், வேதனையோடு பிள்ளைகளைப் பெறுவாய், புரு­ன் அதிகாரத்தின்கீழ் இருப்பாய், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்'' என்றார். 

அதன்பின் அவர் ஆதாமை நோக்கி, ""நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவி கொடுத்துப் புசிக்க வேண்டாமென்று நாம் விலக்கியிருந்த மரத்தின் (கனியைப்) புசித்ததினாலே பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்.  நீ உன் வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட்டு அதின் பலன்களைச் சாப்பிடுவாய். அது உனக்கு முட்களையும் குருக்குகளையும் முளைப்பிக்கும்.  நீ பூமியின் புல் பூண்டுகளை உண்பாய்; உன் முகத்தின் வேர்வை (நிலத்திலே  விழ) நீ ஆகாரம் புசிப்பாய். கடைசியில் நீ எந்தப் பூமியினின்று எடுக்கப்பட்டாயோ அந்தப் பூமிக்குத் திரும்பிப் போவாய்; ஏனெனில் நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்'' என்றார் (காண்க. ஆதி.3:16-19).

சரீரத்தைக் கொண்டு பாவம் செய்ததால், அவர்களுடைய சரீரங்கள் துன்புறும் விதமான தண்டனைகள் அவர்களுக்குத் தரப்படுவதைப் பாருங்கள். 

பாவத்திற்குப் பின்பே ஏவாள் வேதனையோடு பிள்ளை பெற வேண்டியவளானாள். அப்படியானால், அதற்கு முன்பு அவள் மகா பரிசுத்த திவ்ய கன்னிகையைப் போல, குழந்தை பாரத்தையோ, பிரசவ வேதனையையோ அனுபவிக்காமல் மகிழ்ச்சியோடு குழந்தைகள் பெற வேண்டியவளாகவே இருந்தாள் என்பது தெளிவாகிறது. 

கடவுளின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்திருந்தால், ஆத்துமத்தின் அந்தக் கீழ்ப்படிதலின் பலனை சரீரமும் அனுபவித்திருக்கும். ஆதாம் உழைக்க வேண்டிய அவசியமற்றவனாய் தேவ சமூகத்தில் ஒரு குழந்தையாக ஆடிப்பாடி விளையாடிக் களித்திருக்க, ஏவாள் தேவ வல்லமையின் குழந்தைகளைச் சுமப்பதையும், அவர்களைப் பெற்றெடுப்பதையும் தன் பெரும் மகிழ்ச்சியாகக் கொண்டிருந் திருப்பாள். 

ஆனால் இப்போது சரீரத்தின் பாவத்திற்காக, அந்த சரீரம் தண்டிக்கப்பட்டதை நாம் காண்கிறோம். இறுதியாக அந்த சரீரம் மரித்து, மண்ணோடு மண்ணாகிப் போகும்படியாகவும் சபிக்கப்படுகிறது.

ஆதாம் ஏவாளின் மாசற்றதனத்தைப் பறித்து, சகல தேவ தண்டனைகளுக்கும், நித்திய நரகத்திற்குமே அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கிய இந்த முதல் சரீர இச்சையின் பாவத்தையே நாம் ஜென்மப் பாவம் என்கிறோம். 

இந்தப் பாவம் ஆதிப் பெற்றோரை மட்டுமின்றி, அவர்களுடைய சந்ததியாரான மனுக்குலத்தார் அனைவரையும் தீண்டுவதாக இருக்கிறது. ஏனெனில் ஒருவேளை ஆதாமும் ஏவாளும் இந்தப் பாவத்தைச் செய்யாமல் இருந்திருந்தால், அவர்களுடைய எல்லா பாக்கியங்களுக்கும் வாரிசுகளாக அவர்களுடைய சந்ததியார் இருந்திருப்பார்கள்; அதே முறையில், இப்போது, அவர்களுடைய பாவத்திலும் அவர்கள் பங்கடைந்து, தங்கள் உற்பவத்தின் போது, இந்த அசுத்தப் பாவத்தால் தீண்டப்பட்டு, தங்கள் ஆத்துமத்தின் தெய்வீகத் தொடக்கத்தின் பேரழகை யயல்லாம் இழந்து, பசாசுக்கு அடிமையாகிப் போகிறார்கள்.

தேவதூதர்கள் தேவ கட்டளையை மீறிப் பாவம் செய்தபோது, சர்வேசுரன் சற்றும் தாமதிக்காமல் நரகத்தை உண்டாக்கி, அவர்களை அதில் தள்ளிக் கடுமையாகத் தண்டித்தார். 

ஒருவேளை மனிதனையும் அவர் அவ்வாறே தண்டித்திருப்பார் என்றால், மனிதன் இரட்சிக்கப்பட வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். 

ஆயினும் இந்த மிகப் பரிதாபத்திற்குரிய நிலையில் மனிதனைக் கைவிட்டுவிட அவர் விரும்பாமல், அவனை மீட்டு இரட்சிக்கும்படியாக, சிங்காரவனத்திலிருந்து அவனைத் துரத்துமுன், ஓர் இரட்சணியத் திட்டத்தை அவனுக்கு வாக்களிக்கிறார். தொடர்ந்து வரும் கட்டுரையில் அதை விரிவாகக் காண்போம்.