திவ்ய கன்னிகையின் அமல உற்பவமின்றி, மனித இரட்சணியமில்லை!

ஆகையால் தேவ சுதனானவர்தான் மனிதனாய்ப் பிறக்க வேண்டும். மனிதனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக, அவருடைய திருச்;சரீரமும், திரு இரத்;தமும்தான் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும். 

(1) அவை சர்வேசுரனுடைய திருச்சரீரமாகவும் இரத்தமாகவும், (2) சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டிய திருச்சரீரமாகவும் இரத்தமாகவும் இருக்க வேண்டியுள்ளதால், அவை பாவ மாசற்றவையும், மகா உத்தம பரிசுத்ததனமுள்ளவையுமாக இருக்க வேண்டும்.

மனிதாவதாரத்தைப் பற்றிய தேவ திட்டப்படி, தேவ-மனிதரைப் பெற்றெடுக்க வேண்டிய “பாக்கியவதி” தேவ வல்லமையாலேயே தன்னுடைய தெய்வீக-மனிதனாகிய திருப்பாலனைக்; கருத்தாங்குவார்கள். 

இவ்வாறு “சகல மனிதர்களும் கன்னித் தாய்மாரிடமிருந்து தேவ வல்லமையால் உற்பவித்துப் பிறக்க வேண்டும்” என்ற சர்வேசுரனுடைய ஆதித் திட்டத்தை அச்சுப் பிசகாமல் தன்; தெய்வீகத் தாய்மையில் நிறைவேறச் செய்து, பசாசின் மீது சர்வேசுரனுடைய பழிதீர்த்தலாக, பழிவாங்குதலாக இந்த “தேவ மாதாவே” இருப்பார்கள். 

எனவே ஆணின் ஒத்துழைப்பின்றி, தெய்வீக வல்லமையால் தேவ-மனிதர் கருத்தரிக்கப்படுவார்; என்பதால் தந்தை வழி ஜென்மப் பாவம் அவருடைய ஆத்துமத்தைத் தீண்டவோ, சரீரத்தைக் கறைப்படுத்தவோ சாத்தியமேயில்லை.

அதே சமயம் ஆதாமின் குலத்தில் உதிக்கவிருக்கும் மகா உன்னத லீலி மலராகிய “தேவமாதா” தன் உற்பவத்தில் ஜென்மப் பாவத்தால் தீண்டப்படுவார்கள் என்றால் (சுவாமி இரட்சிக்க!), சர்வேசுரனுக்குத் தாயாராக இருக்கத் தகுதியற்றவர்களாகவும், சர்வேசுரனுக்கு ஒரு மாசற்ற திருச்சரீரத்தைத் தர இயலாதவர்களாகவும் அவர்கள் இருந்திருப்பார்கள்! 

கடவுள் இதை அனுமதித்திருப்பார் என்றால், மனிதாவதாரம் நிகழவும், அதனால் தகுதியுள்ள தேவ ஆராதனை, மனித இரட்சணியம் என்னும் இரு மாபெரும் தேவ திட்டங்கள் நிறைவேறவும் சாத்தியமே இல்லாமல் போயிருக்கும். 

எனவே, தம்மை ஈன்றெடுக்க இருக்கிற அந்த மகா பரிசுத்த கன்னிகையை ஜென்மப் பாவக் கறையிலிருந்து காப்பாற்ற சர்வேசுரன் கடமைப்பட்டவர் ஆனார்!! 

ஆ, மனித சிந்தைக்கெட்டாத அதிசயத்திற்குரிய பரம இரகசியமே! தமக்குத் தகுதியுள்ள ஆராதனை, மகிமையைப் பெற்றுக்கொள்ளவும், மனிதனை அவனுடைய பாவத்தினின்று மீட்டு இரட்சிக்கவும் கடவுள்; இந்தச் சிறு கன்னிகையைச் சார்ந்திருக்க வேண்டியவர் ஆனார்! 

ஏனெனில், தமக்குத் தாயாக இருக்கப் போகிறவர்களும், ஆதி சர்ப்பமாகிய பசாசின் தலையை மிதித்து நசுக்க வேண்டியவர்களுமான இந்தத் தெய்வீகக் கன்னிகை ஒரே ஒரு வினாடி முதலாய் ஜென்மப் பாவத்தால் பசாசுக்கு அடிமைப் பட்டிருக்கக் கடவுள் அனுமதித்திருந்தார் என்றால்,

(1) அவருடைய அளவற்ற மகத்துவப் பிரதாபத்திற்கு அது ஒரு மிகப் பெரிய அவமானமாக இருந்திருக்கும்.

(2) கடவுளுக்குத் தகுதியுள்ள ஆராதனையும், மகிமையும் செலுத்தும்படியாக, தேவ திருச்சுதன் மனிதனாக அவதரிக்க முடியாமல் போயிருக்கும்.

(3) அதன் காரணமாக, மனித இரட்சணியம் சாத்தியமற்றுப் போய், சகல மனிதர்களுக்கும் நரகமே அடைக்கலம் தந்திருக்கும்!

இந்த அமல உற்பவக் கன்னிகை சர்வேசுரன் மனுக்குலத்திற்குத் தந்த எப்பேர்ப்பட்ட பெரும் பாக்கியமாக இருக்கிறார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் தொடர்ந்து தியானிப்போம்.