வேத விளக்கம் - பாயிரம்.

பராபர வஸ்து தயைபுரிந்து அருளிச்செய்த வாக்கியம் நற்கதி அடையும் வழி என்னும் வேதமாமே. அவர் அளவிறந்த ஞானம் உடையாராகையில் அறியாமல் தப்பி விபரீதங்களைச் சொல்லவுமாட்டார். அவர் அளவிறந்த நீதியுடையாராகையில் அறிந்து பொய்யைச் சொல்லவுமாட்டார். ஆகையால் பராபர வஸ்துவாகிய சர்வேசுரன் அருளிச்செய்த மெய்யான வேதம் வேறுபடாமலும், விபரீதப்படாமலும், எக்காலத்தும் எவ்விடத்தும் ஒன்றாய்நிற்கும் வேதமென்பது சத்தியந்தானே. இந்நாள்வரைக்கும் ஒன்றாய் நின்று நிகரில்லாத சர்வேசுரன் வேதம் வேறுபடாமல் ஒன்றாய் இந்நாட்டிலேயும் வழங்கினபின்பு, பசாசு தந்திரத்தால் அதனை வேறுபடுத்த மற்றொரு பொய்ச் சமயத் தானுஞ் சர்வேசுரன் வேதமென்று வேஷமும், பெயரும் எடுத்துக்கொண்டு எல்லாருக்குங் கேடாக இங்கே நுழையத் துவக்கினதாம்.

வச்சிரமணியும், வளையலோடும் ஒன்றிற்கொன்றை எதிர்ப்பட வைத்துப்பார்த்த அளவில், சொல்வாருமின்றி வேற்றுமை தோன்றுமென்றாலும், பிரித்துத் தனியே பார்க்குமிடத்துச் சிலர் மயங்குவாரென்று அஞ்சி மெய்யான வேதக் குணமும் முறையும் விளங்கச் சிறிது நியாயங்களை இங்கே சொல்லிக் காட்டுவோம் என்றமையால், இதற்கு 'வேத விளக்கம்' என்னும் பெயர் வழங்கினது முறையே .

வானில் விளங்கின சூரியன் தன் ஒளி முகத்தைக் காட்டாமல் சுற்றி வந்தாற்போல, நம்முடைய திவ்விய கர்த்தராகிய சேசுநாதசுவாமி பன்னிரு சீஷருள் ஒருவராகிய அர்ச். தோமையாருமன்றி, அற்புதங்களைப் பரப்பி விளங்கின அர்ச். சவேரியாரும் இந்நாட்டிற் புகாமல் சுற்றி வந்து சத்தியவேதத்தைப் போதித்துத் திரிந்ததனால் இந்நாட்டு இருள் விடியாமல் நெடுங்காலம் இருந்ததல்லோ. கடைசியில் உதய நேரத்துச் சூரியன் முகத்துப் புறப்பட வீசின கதிர்கள், எங்கும் மொய்த்த இரவின் இருளைத் துடைத்து நீக்கி விளக்குவது போல, அக்கியானம் மூடியிருந்த இந் நாட்டின் மேல் ஆண்டவர் தன் திருக் கண்களைத் திருப்பித் தயை புரிந்து உயிர்களை விளக்க நூற்றிருபத்திரண்டு வருஷத்துக்கு முந்தி இங்கே வேதநெறியில் பிறழாமொழிக் குருக்களை அனுப்பத் திருவுளமானார்.

மாறாத தவமும், பொய்யாத நூலும், குறையாத அறங்களும் வடிவாகக்கொண்டு தோன்றித் தத்துவபோதக சுவாமி யாவருக்கு முன்னே ஆண்டவரால் அனுப்பப்பட்டு, விடியற்காலத்து ஒளிபோல் இங்கே நெடுநாள் விளங்கி, வேத நூலாகக் கதிரால் எழுதப்பட்ட தன்மையால் அவரே எழுதிவைத்த காண்ட முதற் பலவும் மங்கா ஒளியோடு இன்னம் அஸ்தமியாத சூரியனாக வழங்குந் தன்மையல்லோ.

தொடர்பு விடாத மலையாக அந்நாள் முதற்கொண்டு இந்நாள் மட்டும் எண்ணப்படாத காரணக் குருக்கள் தம் முட் பின்தொடர்ந்து, ஓயாமல் வந்து, பிறந்த நாடும், காட்டின உருவும், கொண்ட குணமும், தம்முள் வேறு வேறாகியும், தாம் எல்லாரும் போதித்த வேதநெறி ஒன்றா கித் திவ்விய திருவிளக்காகச் சத்திய வேதத்தைக் கையில் ஏந்தித் திரிந்தார்கள் என்றதனால், எண்ணப்படாத சனங் களுந் தெளிந்து ஒரு திருச்சபையாக நன்னெறி வழுவாமல் நடந்து வருவதைக் கண்டோம்.

புண்ணிய நெறியில் ஒழுகினவரைப் பறித்துக் கொல் லுங் கள்ளராக ஓரோர் இடத்துப் பசாசுகள் கிறீஸ்துவர் களைக் கெடுக்கப் பலவிதத்தில் பிரயாசைப்பட்டுக் கடலைக் கலக்கின பெருங் காற்றுப்போலப் பல கலகங்களையுங் கிளப்பிக் குருக்களும், சீஷரும் நிந்தைப்பட, அடிபட, சிறைப்படப் பொருளும் இழந்து, இரத்தமுஞ் சிந்தி, ஓரோர் இடத்து உயிருந் தந்து வேதசாட்சியாகப் பாடுபட் டது உள்ளது தானே.

ஆகிலும், உலையில் போட்ட செம்பொன் நெருப்பு சுடச்சுடச் சுடரும்போது, பொன்னோடு கலந்திருந்த கன் மஷங்களே வெந்து அழியும் என்றது போல, சொன்ன பல கலகங்களிலே விசுவாசமில்லாதவன் கெட்டானொழிய மற்றத் திருச்சபை வளர்ந்து விளங்கின தல்லோ. சர்வேசுர னைக் கைவிடச் சொல்லி இந்நாள் வரைக்கும் பகையைச் செய்த பசாசுகள், அதைக்கொண்டு செயங்கொள்வது அரிதென்று எண்ணி, இப்போது வேஷ மாறித் காமுஞ் சர்வேசுரன் பேரைச் சொல்லிப் பெரும் பகை நினைத்து நாடெல்லாங் கெடுக்க நுழையும் வழி பார்த்துக்கொண்டு திரிவதாமே.

உருவின வாளை ஏந்தித் தன்மேல் எதிர்த்தவன் பகை யை விலகிக் காத்தல் எளிதே. உறவினைக் காட்டித் தழுவின தன்மையால் குத்த வந்தவன் பகையோவென்றால் அறிய வும் விலகவும் அரிதாம். ஆகையால், புருஷன் சத்தமாறிக் கற்புடையாளைக் கெடுக்க வந்தவனைப்போல, கீழ்த்திசையி னின்று சர்வேசுரனுடைய திருநாமத்தைச் சொல்லிச் சர்வேசுரனைப் பகைத்துச் சனங்களைக் கெடுக்கச் சிலரே வருவதைக் கண்டு, நல்லவர் கேடுபடா தபடிக்குச் சில விசேஷங்களை அறிவிக்கத் துணிந்தோம்.

'ஆட்டுக் குட்டிகளைக் கொன்று விழுங்க ஓநாயும் ஆட் டுத் தோலைப் போர்த்துக்கொண்டு வரும்'' என்று நம்மு டைய கர்ததராகிய சேசுநாதர் திருவுளம்பற்றி அதற்கு உபாயமாக, மேற்போர்த்தத் தோலைப் பாராமல் உள்ளே மூடியிருந்த உருவத்தை நோக்கி, ஆட்டு ரூபமாக வந்த ஓநாயை அறிந்து துரத்தினதுபோல, சொன்ன வார்த்தையும், காட்டின வேஷமும் பாராமல் உள் நடக் கையைப் பார்க்கக் கட்டளையிட்டருளினார். அவ்வண்ணமே இப்போது சர்வேசுரன் அருளிச்செய்த வேதமே வேஷ மாகக் கொண்டுவருஞ் சத்துருக்கள் அண்டவொட்டாமல் துரத்தும்படிக்கு, அவர்கள் மேற்போட்ட வேஷத்தை நாமே பிடுங்கி எறிந்து, அவர்கள் ஆண்டவருடைய மந்தை ஆடுகளோ , ஆடுகளை விழுங்க வந்த ஓநாய்களோ வென்று வெளியாக்க உள்ளே மூடியிருக்கிறதைக் காட்டித் தருவோம்.

அதன்பின்பு வேத முறைமைக்கு அடுத்த சில சந்தேகங்களைத் தீர்த்து, மெய்யான வேதம் இன்னதென்று விளங்கச் சில நியாயங்களை வெளிப்படுத்துவோம். மீளவும் வேண்டும் பொழுதில் இதிலே வைத்த பொருளைத் தடவாமல் எடுத்துக்கொள்ளும்படிக்குப் பதினெட்டு அதிகாரமாக முடித்த நூலை நூற்று நாற்பது பிரிவாக வகுத்து இலக்க முமிட்டு அவ்விலக்கப் பிரிவுகளைப்பற்றிப் பொருள் அட்ட வணை முடிவில் எழுதித் தருவோம்.

பாயிரம் முற்றிற்று.