வேத விளக்கம் - முகவுரை

அநாதிநம:

இப்பிரபந்தத்தைப் பிரசித்தப்படுத்தியவரால் முகவுரை.

இவ்வுத்தம பிரபந்தத்தை முக்கியப்படுத்துதற்கு நெடும் புகழ் கூறவேண்டுவதில்லை. பழுதிலாக் கல்வி நலமும், வழுவிலாத் தவ நிலையும், புகரிலாச் சுகிர்த வரங்களும், நிகரிலாப் புலமைத் திறமும் இவை முதலிய நல் வரமும் நிறைந்த சொல்லரும் மாட்சிமைத் தத்துவங்களால் அலங்கரிக்கப்பட்டவராய், இந்நாட்டில் தேவ கிருபையால் அனுப்பப்பட்டுச் சத்திய மறையின் மங்கா ஒளி வீசும் பல கிரந்தங்களை உண்டாக்கி அஸ்தமியாத சூரியனாய் விளங்கிய வீரமாமுனிவர் தாமே இதனைச் செய்தாரென்பதே எல்லாப் புகழினும் மேன்மையாமன்றோ.

எவருக்கும் இன்பமும் ஈடேற்றமும் உண்டாகும் பொருட்டு அவர் தமது அதிசயப் புலமைத் திறத்தினால் சத்திய மறையின் அற்புதங்களையும், பரம உணர்ச்சிகளையும், தேவ ஸ்துதிகளையுந் தேனினும் இனிய தீஞ்சுவைப் பொருந்துஞ் செந்தமிழ்ச் செய்யுட்களில் கற்பனை அலங்காரத்துடன் புனைந்து பாடிப் பெருங் காப்பியமென்னுந் தேம்பாவணி முதலிய இலக்கிய நூல்களும், மற்ற இலக்கண நூல்களுஞ் செய்துகொண்டு வருகையில் தாம், நல்ல ஆயனாய் அன்புடன் காத்து நடத்துகின்ற மந்தை ஆடுகளைச் சிதறடித்து விழுங்கும் பொருட்டு, வேதத்தில் ஓநாய்கள் என்னப்பட்ட பதிதர் மாறின வேஷத்தோடு தோன்றிப் பல தந்திரங்களைச் செய்து, தேவ வாக்கியங்களைப் புரட்டி, வேத விசுவாசத்தைக் கெடுக்க வருகிறார்களென்று அறிந்து, இனிய கவிப்புனைதலை விட்டு வேத வாக்கியங்களையும், சத்தியத்தின் பலத்த நியாயங்களையும் ஆயுதமாக ஏந்தி வந்த சத்துருக்களை வெல்லுவதற்கு வேத விளக்கத்தைச் செய்து தந்தார்.

சர்ப்பம் பசும்புல்லில் ஒளிந்து, பல வழிச் சுற்றி நுழைந்து இரகசியமாய்த் தன் விஷத்தால் உயிரைக் கொல்லுவது போலப் பதிதரும் பலர் தந்திரமாய்த் தங்கள் விஷமுள்ள போதனைகளை மறைத்து, உபாயத்தினால் அவைகளை நுழைப்பித்து வருதலால், அவர்கள் உபாய தந்திரமெல்லாம் வீரமாமுனிவர் வெளிப்படுத்தி, அவர்கள் போதகத்தில் ஒளிந்த விஷமுள்ள அபத்தங்களைப் பிரசித்தமாய்க் காண்பிக்கின்றார். அவர் உச்சிப் பகலினுந் தெளிந்த நியாயங்களால் அவர்கள் பொய்களை மறுத்து, அவைகளைச் சொல்லித் திரிகின்றவர்களும் நாணும்படிச் செய்கிறார்.

அவர் கையில் வேத வாக்கியங்களும், சத்தியத்தின் நியாயங்களும், சத்துருக்களை ஊடுருவி வெல்லுங் கூர்ந்த அம்பு வாளாகவும், உண்மை விரும்புகின்றவர்களுக்கு ஞானச் சுடர் விளக்காகவும், தவறினவர்களுக்கு வழிகாட்டியாகவும், நல்லோரைச் சுகிர்த சத்தியநிலையில் நிறுத்தும் உறுதியாகவும், யாவருக்கும் ஆத்தும சஞ்சீவியாகவும் இருக்கின்றன. உதித்த சூரியன் முகத்து முன் இருள் நிற்கமாட்டாது நீங்கி ஒழிவது போலப் பதிதர் அபத்தங்களும், வீரமாமுனிவர் செய்தருளிய இப்பிரபந்த முகத்து முன் நிற்க மாட்டாது அழிகின்றமையால், சத்தியத்தை அறியவேண்டி இதை வாசிப்பவர் எல்லாருந் தெளிந்து சத்திய நெறியில் தேறி ஞான மகிழ்ச்சியை அடைவார்கள் என்பதற்கு ஐயமில்லை .

பொய்க்கு அஞ்சாமையும், தாம் உணர்ந்த சத்தியத்தைப் பகைத்து எதிர்த்தலும் பதிதருக்கு இயல்பாகையால், இவர்கள் வீரமாமுனிவர் சத்தியப் பொருளாய்த் தந்த ஞானக் கதிர் வீசும் வேத விளக்கத்திலுள்ள பலத்த நியாயங்களுக்கு அடங்காது, லுசித்தான் பாஷையில் பிரசித்தப்பட்ட பொய் நிறைந்த ஓர் சிறு சுவடியைக் கீழ்மொழிக் கொடுந் தமிழாகத் திருப்பித் திருச்சபைப் போதகமென்னும் பெயர் தந்து துணிவுடன் வெளிப்படுத்தினார்கள். 

அதில் அடங்கிய அபத்தங்களெல்லாம் யாவருக்கும் விளங்கும் பொருட்டு வீரமாமுனிவரானவர் அவர்கள் எழுதிய அந்தந் தப்பேதகத்தை எடுத்துக் காட்டி, தனித்தனியே நியாயத்தைக்கொண்டு மறுத்துப் பதின்மூன்று ஏடுள்ள அவர்களுடைய அச்சிறு சுவடியில் எழுபத்தெட்டுப் பொய்களைத் தெளிவுறக் காட்டும் பேதக மறுத்தலையுஞ் செய்து தந்தார். அதற்கு வீரமாமுனிவர் பொருள் அட்டவணை எழுதாமையால் அதில் அடங்கிய பொருளை யாவரும் வேண்டும் பொழுதில் தடவாமல் எடுத்துக்கொள்ளும்படிக்கு, அப்பிரபந்தத்துள் வகுத்த இருபத்து நான்கு பேதக மறுத்தலில் ஒவ்வொன்றற்குள்ள பொருளைக் காட்டும் அட்டவணை அதன் முடிவிலே தந்திருக்கின்றோம்.

மீளவும் வீரமாமுனிவருக்குப் பிரியனான குளுந் தமிழ்ச் சாத்தான், ஒருவற்குக் கீழ்த்திசையினின்று ஒருவன் வந்து மேற்கதி தருந் தமிழ்ப்பயன் இதென்று பொன்பொறிச் சிறப்போடு கட்டிய பதிதர் புத்தகம் ஒன்றைத் தந்தான். சொன்ன செந்தமிழ்ப் புலவன் அதிற் கீழிழிந்து இடறிய கொடுமொழித் தமிழ் வசனங்களைப் பார்த்து வெகுண்டு, அதை எறிந்து அப்படிக்கொத்த புத்தகத்தை உண்டாக்கின லுத்தேரானிகள் யாவரென்று அறிய வீரமாமுனிவருக்கு ஓலை எழுதி விண்ணப்பஞ்செய்து கொண்டான். அதற்கு வீரமாமுனிவர் மறுவுத்தாரமாக: அர்ச். அருளப்பர் தாங் கண்டெழுதிய அரிய காட்சியில், வான்மேல் நின்று விழுந்து நரகக் குழிவாய் திறக்குங் கோலை வாங்கின ஒளிமீனாக லுத்தேர் குறிக்கப்பட்டதாகவும், ஆண்முகம், பெண்கூந்தல், தேட் கொடுக்கு, சிங்கப்பல்லு முதலிய விகார உருவோடு நரகப் புகையில் நின்று மொய்த்த விட்டிற் பறவைகளாக லுத்தேரானிகள் குறிக்கப்பட்டதாகவும், மிகுந்த சாமர்த்தியத்துடனே காட்டும் லுத்தேரினத்தியல்பையுஞ் செய்து தந்தார்.

பதிதர் சமயங்களால் பரவின இருளை நீக்கிச் சத்திய வேத ஒளியை விளங்கச் செய்யும் இவ்வுத்தம பிரபந்தங்கள், இதுவரைக்கும் அச்சிற் பதிக்கப்படாமையாலே நாள் வட்டத்தில் பலமுறை பிரதிகளைப் பெயர்த்து எழுதினவர்களின் அறியாமையினால் அவைகளில் எழுத்துப்பிழை, சொற்பிழை, வசன விகற்பம், பொருள் மாற்ற முதலிய குற்றங்கள் மிகுந்து ஒன்றற்கொன்று ஒவ்வாதிருந்ததைப்பற்றி அக்கறையெலாந் துடைத்து இப்பிரபந்தங்களின் முன் சிறப்பான வடிவு விளங்கச் செலவுக்கும், பிரயாசத்துக்கும் அஞ்சாது, நானா திசையினின்று ஓலையினும், கடுதாசியினும் எழுதப்பட்ட பழம் பிரதிகளை அழைப்பித்து அவைகளை எல்லாம் மிகுந்த கவனத்துடன் ஆராய்ச்சி செய்து, சுத்தப் பிரதியாக்கித் தகுந்த இலக்ஷணத்துடன் அச்சிற் பதிப்பித்துத் தருகின்றோம். தேவ கிருபாகடாட்சத்தினால் இம்முயற்சி தொடங்கி நிறைவேறப்பட்ட தன்மை சத்தியத்தை விரும்புகின்ற யாவருக்கும் அகமகிழ்ச்சியும், ஞானப் பிரயோசனமுமாய இருக்குமென்று நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்.