138. தங்கள் பிள்ளைகள்மட்டில் பெற்றோருக்குரிய கடமைகள் எவை?
1-வது--தங்கள் பிள்ளைகளுக்கு வேண்டிய அன்ன வஸ்திரம் கொடுத்து ஆதரித்துக் காப்பாற்றி, அவர்களுக்குத் தங்கள் நிலைமைக்குத் தக்க இலெளகீக சாஸ்திரங்களைப் படிப்பிப்பதும்,
2-வது--வேதசத்தியங்களைப் படிப்பித்து தேவபயத்தில் அவர் களை வளர்ப்பதும்,
3-வது--அவர்களுடைய குற்றங்குறைகளை நியாயமாயும், அன்போடும் தண்டித்துத் திருத்துவதும்,
4-வது--எந்தக் காரியத்திலும் அவர்களுக்கு நல்ல முன்மாதிரிகை காண்பித்து நடப்பதுமேயாம்.
1. சர்வேசுரனுக்குப் பிள்ளைகளைப் பற்றி தாய் தகப்பன்மார் கணக்குக் கொடுக்க வேண்டுமோ?
பிள்ளைகள் எல்லாம் சர்வேசுரனால் கொடுக்கப்பட்ட பொக்கிஷமென்றும், அவர்களைப் பற்றி சர்வேசுரன் கண்டிப்பான கணக்குக் கேட்பாரென்றும் பெற்றோர்கள் எண்ணி நடக்கக் கடவார்கள்.
2. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எப்படிச் சிநேகிக்க வேண்டும்?
பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சிநேகிக்க வேண்டுமென்று சொல்லத் தேவையில்லை. ஆனால் இந்தச் சிநேகம் மிதமிஞ்சின விதமாயும், பாரபட்சமுள்ளதாயுமிராமல், கிரமமுள்ளதாயும், சுபாவத்துக்கு மேலானதாயுமிருக்கும்படி அவர்கள் பிரயாசப்பட வேண்டும்.
3. தாய் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளின் சரீர நன்மையைப் பற்றி அனுசரிக்க வேண்டிய கடமைகள் எவை?
தாய் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளின் சரீர செளக்கியத் தைப் பற்றி, விசேஷமாய்ச் சிறு வயதிலேயே கவலையெடுத்துக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய உணவும், உடையும் கொடுப்பது மல்லாமல், வளர்ந்தபின் அவரவர் அந்தஸ்துக்கு தகுந்த ஓர் அலுவல் பார்ப்பதற்கு ஏதுவாக முன்னதாகவே பிள்ளைகளைத் தக்க பிரகாரம் படிப்பிக்க வேண்டும்.
4. தங்கள் பிள்ளைகளை வேதமுறையாய் வளர்க்கிறதெப்படி?
(1) குழந்தை பிறந்தபின் கூடிய சீக்கிரத்தில் ஞானஸ்நானம் கொடுப்பித்து, அது பேசத் துவக்கும்போதே பிரதான மந்திரங் களையும் வேதசத்தியங்களையும் கற்பிக்கவேண்டும். மந்திரம் படித்துக் கொடுப்பது உபதேசியார், குருமாருடைய வேலையென்று சொல்லி, பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே மந்திரம் கற்றுக் கொடாத பெற்றோர் தப்பிதத்துக்குள்ளாகிறார்கள்.
(2) ஆத்துமத்துக்கு அபாயமும் மோசமும் வருவிக்கக் கூடிய பள்ளிக்கூடங்களுக்கு அவர்களை அனுப்பாமல் ஞானோபதேசம் கற்றுக்கொடுக்கிற பள்ளிக்கூடங்களுக்கு மாத்திரம் அனுப்ப வேண்டும். மேற்றிராணியார் உத்தரவு வாங்காமல், பதிதர் பள்ளிக் கூடங் களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிற பெற்றோர் கனமான பாவங்கட்டிக் கொள்ளுகிறார்கள் (தி.ச. 1374).
(3) அவர்கள் நன்னடத்தையில் மூழ்கி, காலை மாலை செபம் செய்யவும், ஞாயிற்றுக்கிழமைகளில் பூசை காணவும், புத்தி விவரம் அடைந்தவுடனே புதுநன்மை வாங்க முயற்சி செய்து அவ்வப்போதாவது பாவசங்கீர்த்தனத்துக்குப் போகவும் தேவநற் கருணை வாங்கவும் பழக்கப்படுத்த வேண்டும்.
(4) அவர்களுடைய நடத்தையையும், அவர்கள் பழகுகிற ஆட்களையும், நண்பர்களையும் போகிற வீடுகளையும், வாசிக்கிற புத்தகங்களையும் விழிப்பாயிருந்து கவனிக்க வேண்டும். பிள்ளைகள் முழுதும் தங்கள் அதிகாரத்துக்குட்பட்டிருக்கையில், அவர்கள் சர்வேசுரன் திருச்சபைக் கற்பனையை முறைப்படி அனுசரித்துப் பாவமின்றி நடக்கிறார்களா என்று தாய் தகப்பன் கவனியாதிருந்தால், பிள்ளைகள் கட்டிக் கொள்ளும் பாவங்களுக்கு அவர்களும் பங்காளிகளாயிருப்பார்கள்.
5. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தேவ பயத்தில் வளர்க்க வேண்டும் என்பதற்கு அர்த்தம் என்ன?
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தெய்வீக மகிமை சமுகத்தில் தக்க வணக்கத்தோடு நடப்பித்து, அவர்கள் பாவத்தினால் சர்வேசுர னுடைய நேசத்தை இழந்துபோகாதபடியும், அவருடைய மனதைப் புண்படுத்தாமல் அஞ்சி நடக்கவும், அவர்களைத் தூண்டுவது என்று அர்த்தமாகும்.
சரித்திரம்
பிரான்சு தேசத்து அரசரான அர்ச். ஞானப்பிரகாசியாருடைய தாயானவள் பெரிய புண்ணியவதி. அவர் சிறு வயதிலிருக்கும் போது அவள் அவருக்கு அடிக்கடி சொன்னதாவது: “என் மகனே, நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேனென்று உனக்குத் தெரியுமே. ஆனாலும், நீ எப்போதாவது ஒரே ஒரு சாவான பாவத்தைக் கட்டிக் கொள்ளுவாய் என்று நமக்கு முன் தெரிய வந்தால், அதைச் செய்வதை விட இப்பொழுதே நீ என்னுடைய பாதங்களுக்கு முன்பாக விழுந்து, உயிர் விடுவது உத்தமம் என்று எண்ணுவேன்.” அர்ச். ஞானப்பிரகாசியார் தமது நல்ல தாயார் சொன்ன புத்திமதிகளை அனுசரித்து, சாவான பாவத்துக்கு வெகுவாய்ப் பயப்பட்டு அதை ஒருபோதும் கட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தார் (அவர் சரித்திரம்).
6. பிள்ளைகள் சீவிய அந்தஸ்தைத் தெரிந்துகொள்ளும்போது தாய் தந்தையர் செய்ய வேண்டியதென்ன?
சர்வேசுரன் பிள்ளைகளை எந்த அந்தஸ்துக்கு அழைக்கிறா ரென்று அறிய அவர்கள் உதவி செய்யக்கடவார்கள். கலியாண மானது தாய் தகப்பனைவிடப் பிள்ளையை அதிகமாகச் சார்ந்திருக் கிறபடியால், பிள்ளையைக் கேட்காமல் பெற்றோர் தீர்மானங்கள் பண்ணலாகாது. தங்கள் பிள்ளைகளுக்குக் குருவானவர், சந்நியாசி அல்லது கன்னியாஸ்திரியாகும்படி தேவ அழைப்பு இருப்பதாக அறிந்தபின், அதற்குத் தடை செய்து அவர்களைத் தடுக்கக் கூடாது. தக்க காரணமின்றித் தடுக்கிற தாய் தகப்பன்மார் சாவான பாவம் கட்டிக் கொள்கிறார்கள்.
7. பிள்ளைகள் குற்றம் செய்தால் பெற்றோருக்குரிய கடமை என்ன?
பிள்ளைகள் செபம் செய்யாமல் போனாலோ, ஞாயிற்றுக் கிழமை பூசை காணாமல் போனாலோ, கெட்ட வார்த்தை சொன் னாலோ, திருடினாலோ, வேலைகளைச் சரியாய் நிறைவேற்றாமல் போனாலோ, கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனாலோ, வேறு எந்தக் குற்றங்களைக் கட்டிக் கொண்டாலோ, அவர்களைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் தாய் தகப்பனுக்குக் கண்டிப்பான கடமையுண்டு. “சிறுவனைக் கண்டிக்க மறக்காதே. அவனை நீ பிரம்பால் அடித்தாலும், சாக மாட்டான். நீ அவனைப் பிரம்பால் அடிப்பாய், அவன் ஆன்மாவையும் நரகத்தினின்று இரட்சிப்பாய்” (பழ. 23:13,14). “சிறுவனின் இருதயத்தில் மதியீனம் கட்டப்பட்டிருக்கிறது; அவனை அடி; மூடத்தனம் அவனை விட்டு அகலும்” (பழ. 22:15). “தன் குமாரனை நேசிக் கிறவன்... அவனை அடிக்கடி தண்டிக்கக் கடவான்” (சர். பிர. 30:1). “தன் மனம்போல் விடப்படுகிற பையனோவெனில், தன் தாய்க்கு வெட்கத்தைக் கொண்டு வருவான்” (பழ. 29:15).
8. பிள்ளைகளைத் தண்டிக்கும் விதம் எப்படி?
அவர்களைக் கோபாவேசம் கொண்டு மூர்க்கத்துடன் தண்டிக் காமலும், அவர்களை மிருகத்தைப்போல் நிஷ்டூரமாய் அடிக் காமலும், அவர்களைத் திருத்தவேண்டுமென்கிற நோக்கத்தோடும், விமரிசையோடும், விவேகத்துடனும், அமைதியோடும் தண்டிக்க வேண்டும். “தகப்பன்மார்களே, உங்கள் பிள்ளைகள் மனத் தைரிய மற்றுப் போகாதபடிக்கு, அவர்களுக்கு எரிச்சலையுண்டாக்கா தீர்கள்” என்று அர்ச். சின்னப்பர் வசனித்தார் (கொலோ. 3:21).
9. பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தண்டித்து அவர்களுக்கு நல்ல புத்திமதிகளைச் சொன்னால், அதுபோதும் என்று நினைக்கலாமா?
இன்னமும் அவர்களுக்கு நன்மாதிரிகை காட்ட வேண்டும். ஏனெனில், தாய் தகப்பன்மார் தேவ ஆசாரப்படி நடவாமல், தங்களுக்குள் சண்டைபோட்டால், கெட்ட வார்த்தைகள் பேசினால், சுவாமி கட்டளையை மீறி துஷ்டர்களாய் நடந்தால், பிள்ளைகள் அந்தத் துர்க்குணங்களுக்கு எப்படித் தப்பித்துக் கொள்வார்கள்? ஆகையினாலே, பெற்றோர் வாக்காலே மாத்திர மல்ல, கிரிகையாலும் அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்பிப்பது முழுதும் அவசியம்.
10. பிள்ளைகளுக்கு நன்மாதிரிகை காட்டுவதெப்படி?
தாயும் தகப்பனும் தங்களுடைய கடமைகளைச் ஒழுங்காய் நிறைவேற்றினால், அதாவது காலை மாலை செபம் தவறாமல் செய்து, பூசை கண்டு, அடிக்கடி தேவத்திரவிய அனுமானங்களைப் பெற்று, வாக்காலும், கிரிகையாலும் பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்பித்து, நல்ல கிறீஸ்தவர்களாய் நடந்தால், அவர்களுக்கு நன்மாதிரிகை காட்டுவார்கள். இதைத் தவிர பிள்ளைகளுக்கு முன்பாக கோள், புறணி, தேவதூஷணம், கெட்ட வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும்.
சரித்திரம்
ஒருவன் தன் மகனுக்கு தர்ம வழியைக் காட்டாமலும், நன் மாதிரிகை கொடாமலும், அவனை ஞான உபதேசத்துக்கு அனுப்பாமலும் உணவும், உடையும் கொடுத்து வேலையை மாத்திரம் அவனுக்குக் கற்பித்துவந்தான். சிறுவனுக்கு வாலிப வயது வந்த பின், தன் தகப்பனைத் திட்டிக் கோபித்து, அவமரியாதையுடன் நடத்தினதுடன், ஒருநாள் தன் தகப்பன்மட்டில் அதிகக் கோபம் கொண்டு அவனைக் கீழே விழத்தாட்டி அவன் கையைப் பிடித்துப் தரதரவென்று வெளியே இழுத்துக் கொண்டுபோகும் வேளையில், அந்த நிர்ப்பாக்கிய தகப்பன் கோவென்று அழுது, “அடே மகனே! போதும் நிறுத்து; நான் என் தகப்பனை இதற்கு அப்பால் இழுத்துக் கொண்டு போகவில்லை” என்று சொன்னான். (னி.மூ.னி. V. ஹிலி. 335.)