கீழ்ப்பட்டவர்களுடைய கடமைகள்

1. சிரேஷ்டர் என்றால் யார்?

நம்மேல் அதிகாரம் செலுத்துபவரேயாம்.


2. எத்தனை வகை அதிகாரிகள் உண்டு?

ஞான அதிகாரிகள், உலக அதிகாரிகள் ஆகிய இரண்டு வகை அதிகாரிகள் உண்டு.


3. நமது ஞான அதிகாரிகள் யார்?

அர்ச். பாப்பானவரும், நமது சொந்த மேற்றிராணியாரும், நமது பேரில் ஞான அதிகாரம் பெற்றிருக்கும் வேறெந்தக் குருக் களும், பங்கைச் சேர்ந்த விஷயங்களில் நமது பங்கு விசாரணைக் குருவானவருமாம்.


4. உலக அதிகாரிகள் என்றால் யார்?

அரசன், அவனது பிரதிநிதிகள், அரசாங்க உத்தியோகஸ்தர், நம்முடைய எஜமானர்கள், ஆசிரியர் முதலிய பெரியோர்களாம்.


5. ஞான அதிகாரிகள்மட்டில் நமக்குள்ள கடமைகள் எவை?

(1) அவர்களைச் சங்கிக்கவும்,

(2) சிநேகிக்கவும்,

(3) அவர்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும்,

(4) அவர்களுடைய தேவைகளையெல்லாம் நிறைவேற்றி அவர்களைப் பராமரிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.


6. ஏன் அவர்களைச் சங்கிக்க வேண்டும்?

(1) அது தேவ கட்டளை.  “அவருடைய குருக்களுக்குச் சங்கை செய்” (சர். பிர. 7:31).

(2) அவர்கள் “கிறீஸ்துநாதரின் ஸ்தானாதிபதிகள்” (2 கொரி. 5:20); “சர்வேசுரனுடைய உதவியாட்கள்,” (1 கொரி. 3:9), “அவருடைய ஊழியர்,” (1 கொரி. 3:5) “சர்வேசுரனுடைய பரம இரகசியங்களைப் பகிர்ந்து கொடுக்கிறவர்கள்” (1 கொரி. 4:1) என்று அர்ச். சின்னப்பர் வசனித்திருக்கிறார்.

(3) “உங்களைப் புறக்கணிக்கிறவன் என்னைப் புறக்கணிக் கிறான்” என்று நமதாண்டவர் திருவுளம்பற்றினார் (லூக். 10:16).  ஆகையால், அநேக சமயத்தில் தம் ஊழியர்களைப் புறக்கணித்து நிந்திக்கிறவர்களைச் சர்வேசுரன் பயங்கரமாகத் தண்டித்தார்.  “எலிசே” என்னும் தீர்க்கதரிசியைக் கேலி பண்ணின நாற்பத்திரண்டு பிள்ளைகளை இரண்டு கரடிகள் வந்து பிடித்துக் கொன்று தின்றன என்று வேதாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம் (4 அரசர். 2:23-24).


7. ஏன் அவர்களைச் சிநேகிக்கவேண்டும்?

அவர்கள் நமக்கு மோட்ச வழியைக் காட்டி, நம்முடைய ஆத்தும நன்மைக்காக உழைத்து வருவதைப் பற்றி நாம் அவர்களை நேசிக்க வேண்டும்.


8. ஏன் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

(1) அவர்கள் சர்வேசுரனுக்குப் பதிலாயிருக்கிறார்கள். “உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான்” என்றார் சேசுநாதர் (லூக். 10:16).

(2) “உங்கள் ஞானவழிகாட்டிகளுக்குப் பணிந்து அடங்கி நடங்கள்” என்று  அர்ச். சின்னப்பர் எழுதியிருக்கிறார் (எபி. 13:17).


9.  எவ்விஷயத்தில் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

வேத விசுவாச விஷயத்திலும், நல்லொழுக்கத்திலும், திருச் சபையின் ஒழுங்குக்கிரமங்களிலும், இன்னும் ஆத்தும இரட்சணியத் திற்குச் சம்பந்தப்பட்ட சகலத்திலும் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.


10. ஏன் அவர்களுடைய பிழைப்புக்குத் தேவையானவற்றை அவர்களுக்குச் செய்ய வேண்டும்?

சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்கள், சுவிசேஷத்தால் பிழைக்கும்படி ஆண்டவர் ஏற்பாடு செய்திருக்கிறார் (1 கொரி. 9:14).


11. குருக்களுக்கு விரோதமாய்க் கேலி பண்ணுகிறவர்களும், பேசுகிறவர்களும், எழுதுகிறவர்களும், கனமான பாவம் கட்டிக் கொள்கிறார்களா?

குருக்களின் மகிமைக்கும், அதிகாரத்துக்கும் விரோதமாய்ப் பேசி, எழுதி, அல்லது அவர்கள்மேல் குற்றம் கூறி, அவர்கள் ஆத்தும இரட்சணியத்துக்காகப் படும் பிரயாசைக்குத் தடங்கலாயிருப்பவர்கள் கனமான பாவம் கட்டிக் கொள்ளுகிறார்கள்.


சரித்திரம்

அர்ச். யாகப்பர் என்பவர் மேற்றிராணியார் பட்டம் பெறுவதற்கு முன், பாரசீக தேசத்தில் பங்கு விசாரணை செய்யும்படி வழி நடந்துபோகும்போது, வழிக்கு அருகாமையில் இருந்த ஒரு அருவியில் சில பெண்கள் துணி துவைத்துக் கொண்டு இருந்தார்கள். வழி நடந்துபோகும் குருவானவரைப் பெண்கள் பார்த்துப் பழிக்கத் தொடங்கினார்கள். உடனே அர்ச்சியசிஷ்டவர் கண்ணை மேலே உயர்த்தி செபித்த கணமே அந்த ஊற்று அற்புதமாய் வற்றிப்போய் விட்டது.  அதன்பின் நம்மை அவமரியாதையாய்ப் பழித்த பெண்களை அவர் சபித்த மாத்திரத்தில் அவர்களுடைய தலைமயிர் நரைமயிராகி, அவர்கள் சாகுமட்டும் அந்த நிறம் மாறவில்லை (னி.மூ.னி. V. ஹிலி. 339.)


12. உலக அதிகாரிகள் மட்டில் நமக்குள்ள கடமைகள் எவை?

(1) அவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும்;

(2) அவர்கள் பாவமில்லாத காரியங்களைக் கற்பிக்கும் போதெல்லாம் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.


13. ஏன் அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்?

ஏனெனில்,

(1) இவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை வணக்கமெல்லாம் சர்வேசுரனுக்குச் செய்கிறோம்.

(2) “அதிகாரிகள் உன் நன்மைக்காகவே, தேவ ஊழியரா யிருக்கிறார்கள்” என்று அர்ச். சின்னப்பர் எழுதியிருக்கிறார் (உரோ. 13:4).

(3) “இராஜாவுக்குச் சங்கை செய்யுங்கள்” என்று அர்ச். இராயப்பர் கற்பிக்கிறார் (1 இரா. 2:17).


14.  ஏன் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

“எந்த மனிதனும் மேலான அதிகாரங்களுக்குப் பணிந்து நடக்கக்கடவான். ஏனெனில், சர்வேசுரனாலே உண்டாயிராத அதிகாரமில்லை... அப்படியிருக்க அதிகாரத்தை எதிர்த்து நிற்பவன் சர்வேசுரன் ஸ்தாபித்த ஏற்பாட்டை எதிர்த்து நிற்கிறான்” என்று அர்ச். சின்னப்பர் எழுதியிருக்கிறார் (உரோ. 13:1,2).


16. அதிகாரிகளுக்கு விரோமாய்க் குழப்பம் செய்யலாமா?

ஒழுங்காய் நடக்கிற அதிகாரிகளுக்கு விரோதமாய்க் குழப்பம் செய்யக் கூடாது. ஏனெனில், சர்வேசுரனால் அது விலக்கப் பட்டிருக்கிறதுமல்லாமல், கலகமும், குழப்பமும் மக்களின் பொது நன்மைக்குப் பலத்த கேடுகளை வருவிக்கின்றன.


16. அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்கலாமா?

அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றாதிருக்கும்படி அவர்களுக்கு ஒருபோதும் லஞ்சம் கொடுக்கக்கூடாது.


17. தங்கள் கடமைகளை நிறைவேற்றாதபடி என்று சொல்வானேன்?

ஏனெனில், அரசு ஊழியர்கள் நமக்கு விரோதமும், அநியாய மும், தீமையும் செய்யாமல், நீதியின் பிரகாரம் நடக்கும்படி அவர்களுக்குக் கைக்கூலி கொடுக்கத் தடையில்லை.


18. ஆசிரியர்மட்டில் மாணவருக்குரிய கடமைகள் எவை?

மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்திக் கீழ்ப்படிந்து, அவர்கள் கற்றுக் கொடுப்பவைகளைக் கவனமாய்க் கேட்டுக் கற்றறிய வேண்டியது.


19. ஏன் அவர்களுக்கு வணக்கம் காட்டிக் கீழ்ப்படிய வேண்டும்?

ஆசிரியர் தாய் தகப்பன்மார்களுக்குப் பதிலாளிகளாயிருக் கிறார்கள்.  ஆகையால், மாணவர்கள் தங்கள் தாய் தகப்பனைச் சங்கித்து அவர்களுக்குக் கீழ்ப்படிவதுபோலவே, தங்கள் ஆசிரியர் களுக்கும் வணக்கம் செலுத்திப் பணிந்து நடக்கக் கடவார்கள்.


20. தங்கள் எஜமான்கள் மட்டில் தொழிலாளிகளுக்குரிய கடமைகள் எவை?

(1) வேலைக்காரர் தங்கள் எஜமான்களைச் சங்கிக்க வேண்டும்;

(2) அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்;

(3) தங்கள் வேலையைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி, தங்கள் கையில் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கு நஷ்டம் உண்டாக் காமலும், தங்கள் எசமான்களை ஏமாற்றாமலும், அவைகள்மேல் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்;

(4) தங்களுக்குரிய நியாயமான சுதந்தரங்களைக் கேட்கும் போது பலவந்தத்தை விலக்க வேண்டும்.

(5) கெட்ட எண்ணமுள்ள துஷ்டர்களோடு சேராமல் விலக வேண்டும். “மனிதர்களுக்கு என்றாற்போலல்ல, ஆண்டவருக் கென்றே நல்ல மனதோடு ஊழியம் செய்யுங்கள்” (எபே. 6:7).

21. ஏன் அவர்களை சங்கிக்க வேண்டும்?

அவர்களுக்கு வேலைசெய்யும்போது, வேலைக்காரர் கிறீஸ்து நாதருக்கு ஊழியம் செய்கிறார்கள் என்று அர்ச். சின்னப்பர் வசனித்தார் (கொலோ. 3:24).


22. பொதுவுடமை என்னும் கட்சியில் தொழிலாளர் தங்கள் பெயர் களைக் கொடுக்கலாமா?

சத்திய வேதத்துக்கு விரோதமாயிருக்கிற அந்தக் கட்சியில் மனம் பொருந்தி சேர்ந்தவர்களை, அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் திருச்சபைக்குப் புறம்பே தள்ளியிருக்கிறபடியால், கிறீஸ்தவ தொழிலாளர் அதில் சேரவே கூடாது.


23. ஏன் வேலைக்காரர் தங்கள் எசமான்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

“ஊழியர்களே, உங்கள் எசமான்களுக்கு எவ்வித அச்சத் தோடும் கீழ்ப்படிந்திருங்கள்” (1 இரா. 2:18).  “ஊழியர்களே, சரீரத்தின்படி உங்கள் எசமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலும் கீழ்ப்படிந்து, மனிதர்களுக்குப் பிரியப்படுகிறவர் களைப் போல் பார்வைக்கு மாத்திரம் ஊழியம் செய்யாமல், சர்வேசுரனுக்குப் பயந்தவர்களாய் நேர்மையான இருதயத்தோடு அவர்களுக்கே ஊழியம் செய்யுங்கள்” (கொலோ. 3:22).


24.  ஊழியர்கள் தங்கள் வேலையை ஏன் பிரமாணிக்கமாய் நிறைவேற்ற வேண்டும்?

அது நீதிக்கடுத்த கடமையானபடியால்தான்.  ஊழியர்கள் “தங்கள் எசமான்களுடன் எதிர்த்துப் பேசாமலும், திருடாமலும், சகலத்திலும் தங்களைப் பூரண பிரமாணிக்கமுள்ளவர்களாய்க் காண்பிக்கவும், இவ்விதமாய் அவர்கள் நமது இரட்சகராகிய சர்வேசுரனுடைய உபதேசத்தை எவ்விதத்திலும் அலங்கரிக்கும்படி புத்தி சொல்லும்” என்று தம்முடைய சீடனாகிய தீத்து என்பவருக்கு அர்ச். சின்னப்பர் எழுதி வைத்தார் (தீத்து. 2:10).


137. தாய், தகப்பன், எஜமான் முதலிய பெரியோர்கள் பாவகரமான காரியம் செய்யக் கற்பித்தால் செய்யலாமோ?

கண்டிப்பாக செய்யக்கூடாது. ஏனெனில், சர்வேசுரனுடைய கற்பனைக்கு விரோதமான காரியங்களைக் கற்பிக்க அவர்களுக்கு அதிகாரமில்லை.


1. வேதாகமம் இவ்விஷயத்தைப் பற்றி என்ன சொல்லுகிறது?

“மனிதர்களுக்குக் கீழ்ப்படிகிறதை விடச் சர்வேசுரனுக்கல்லோ முக்கியமாய்க் கீழ்ப்படிய வேண்டும்” (அப். நட. 5:29).  ஆகையால், அவர்கள் பாவகரமான காரியம் செய்யக் கற்பிக்கும்போது, முடியா தென்று சொல்ல வேண்டும்.


2. இன்னும் எந்த விஷயத்தில் நாம் நமது பெற்றோர்களுக்காவது, மற்ற மேலதிகாரிகளுக்காவது கீழ்ப்படியாதிருக்கலாம்?

தங்கள் அதிகாரத்துக்கு மேற்பட்ட எதையும் அவர்கள் கற்பித்தால், அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியதில்லை. உதாரணமாக அதிக சாங்கோபாங்கமான அந்தஸ்தில் உட்பட்டு, குருவானவராய் அல்லது சந்நியாசியாய் அல்லது கன்னியாஸ்திரீயாய்ப் போகும்படி மெய்யாகவே நமக்குத் தேவ அழைப்பிருக்கும் போது, அதற்கு விரோதமாகச் சரியான காரணமின்றிப் பெற்றோர் கட்டளையிட்டால், நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற கடமையில்லை. அப்பேர்ப்பட்ட சமயங்களிலே, ஆத்தும குருவானவ ருடைய ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.   இன்னும் கலியாண விஷயத்தில், பெற்றோரின் ஆலோசனையைக் கேட்கக் கடமைப்பட்டிருந்தாலும், அவர்கள் தங்களுக்குப் பார்த் திருக்கும் பெண்ணை அல்லது மாப்பிள்ளையைக் கட்டிக் கொள்ள விருப்பமில்லாதிருந்தால், பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதிருக்கலாம்.