பொது வியாக்கியானம்

1. ஆறாம் கற்பனையைச் சொல்லு.

“மோக பாவம் செய்யாதிருப்பாயாக.”


2. மோகம் என்பதற்கு அர்த்தமென்ன?

காமத்துக்கடுத்த தீய செயல் என்று அர்த்தமாகும். 


3. ஒன்பதாம் கற்பனையைச் சொல்லு.

“பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.” 


4. பிறர் தாரம் என்றால் என்ன? 

பிறனுடைய மனைவி என்று அர்த்தமாம். 


144. ஆறாம் ஒன்பதாம் கற்பனைகளால் சர்வேசுரன் விலக்குகிறதென்ன? 

மோகத்துக்கு அடுத்த நினைவு, ஆசை, கெட்ட பேச்சு, சிற்றின்பப் பாட்டு, ஆகாத பார்வை, கெட்ட சேஷ்டை, துர்க்கிரியை, விபசாரக் குற்றம் முதலியவைகளை விலக்குகிறார். 


1. ஆறாம் கற்பனைக்கும் ஒன்பதாம் கற்பனைக்குமுள்ள வித்தியாசமென்ன? 

ஆறாம் கற்பனை கற்புக்கு விரோதமான கெட்டவார்த்தைகள், கெட்ட கிரியைகள் முதலிய எவ்வித வெளியரங்கமான பாவங் களையும் விசேஷமாய் விலக்குகிறது. ஒன்பதாம் கற்பனையோ, கற்புக்கு விரோதமான ஆசை, நினைவு முதலிய எவ்வித உள் பாவங்களையும் விலக்குகிறது.


2. துர் ஆசையையும், நினைவையும் விலக்க சர்வேசுரன் ஒரு விசேஷ கற்பனையைக் கொடுப்பானேன்?

வெளியரங்கமாய் நடக்கிற பாவங்களை எல்லோரும் பாவமாக எண்ணுவார்கள்; உள்ளரங்கத்திலே நடக்கிற துர் ஆசைகளையும் நினைவுகளையுமோ, அநேகர் பாவமாக எண்ணமாட்டார்கள். இவைகளும் பாவமென்று காண்பிக்கவே சர்வேசுரன் இது காரியத்தில் ஒரு விசேஷ கற்பனையைக் கொடுக்க சித்தமானார்.


3. கற்புக்கு விரோதமான பாவம் அக்கிரமமானதா?

மகா பெரிய அக்கிரமம்தான். ஏனெனில், 

(1) இப்படிப்பட்ட பாவம் செய்கிறவன் சேசுநாதரின் ஞான அவயவமும் (1 கொரி. 6:15)  இஸ்பிரீத்துசாந்துவின் ஆலயமுமாகிற தன் சரீரத்தையும், ஆத்துமத்தையும் (1 கொரி. 3:16) அசுத்தப்படுத்துகிறான்.

(2)  இந்தப் பாவமானது மற்றப் பாவங்களைவிட அதிகமாய் நமது ஆத்துமத்திலுள்ள தேவசாயலை அழித்து, நம்மை மிருகங்களுக்கு சமானமாக்குகிறது.

(3) “எவ்வித விபசாரக்காரனும், அசுத்தனும் ... சர்வேசுரனுடைய இராச்சியத்திலே பங்கு சுதந்தரம் அடைய மாட்டான் ” என்று அர்ச். சின்னப்பர் வசனித்தார். (எபே. 5:5)


4. கற்புக்கு விரோதமான பாவம்  எப்படிப்பட்டது?

செயலால் செய்தபோதிலும் சரி, நினைவு ஆசையினால் வருகிற கெட்ட சந்தோஷத்துக்கு சம்மதித்தபோதிலும் சரி, மோக பாவம் எப்போதும் சாவான பாவம்தான். 


5. சில சமயங்களிலே சர்வேசுரன் மோக பாவத்தைக் கண்டிப்பாய் இவ்வுலகத்தில் தண்டித்தாரா? 

பழைய ஏற்பாட்டின் காலத்தில் இவ்வகையான பாவங்களுக்குச் சர்வேசுரன் மிகவும் பயங்கரமான தண்டனை விதித்து வந்தார். 

(1) மோக பாவத்தின் தண்டனையாக வெள்ளப் பெருக்கை அனுப்பினார். அச்சமயத்தில் நோவேயும், அவருடைய குடும்பத்தாரும் தவிர மற்ற சகல சனங்களும் தண்ணீரில் அமிழ்ந்திச் செத்தார்கள்.  ( ஆதி. 8).

(2) மோகச் சேற்றில் புரண்டுவந்த சோதோம் கோமோரா என்கிற பட்டணங்களில் சர்வேசுரன் அக்கினியும், கெந்தகமும் பொழியச் செய்து அவைகளை நிர்மூலமாக்கினார். அச்சமயத்திலே நீதிமானான லோத் என்பவரும், அவருடைய குடும்பத்தாரும் மாத்திரம் இந்தப் பயங்கரமான தண்டனையினின்று தப்பித்தார்கள்.  (ஆதி. 19:24).

(3) இஸ்ராயேலர் மோவாபியருடைய ஸ்திரீகளோடு வேசித்தனம் பண்ணினபடியால், கர்த்தர் கட்டளைப்படி, இருபத்து நாலாயிரம் பேர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ( எண். 25) 


6. மோக பாவத்தால் சாதாரணமாய் விளையும் கேடுகள் எவை? 

மோக பாவத்தில் விழும் வழக்கமுள்ளவன் சாதாரணமாய்ப்  புத்திமயங்கிப், சரீரம் கொஞ்சங்கொஞ்சமாகக் கெட்டு சித்தந் தளர்ந்து, இருதயம் கடினப்பட்டு, இருள் அடைந்து, ஞானக் காரியங்களின்பேரிலும், புண்ணிய முயற்சியின் பேரிலும் அரோ சிகங்கொண்டு விசுவாசத்தை இழந்து, மனந்திரும்பாமல் செத்து நித்திய கேட்டுக்குள்ளாகிறான். 


சரித்திரம் 

கிறிசோ ஆரியுஸ் என்னும் திரவியவானான ஒரு இளைஞன் இருந்தான். இவன் சிறுவயதிலே கற்புக்கு விரோதமான பாவத்தைக் கட்டிக்கொண்டு வந்ததினால், பிராயம் அதிகரிக்க பன்றியைப் போல் அந்த அசுத்த சேற்றில் புரண்டு வந்தான். குருமாருடைய புத்திக்கும், உறவினர்களுடைய அழுகைக்கும் காது கொடுக்கவில்லை. தேவ கோபம் அவன் தலைமேல் விழவே, பயங்கரத்துக்குரிய உருவங்களைக் கண்டு, பயந்து நடுங்கி, ஊளையிட்டு, அழுது புலம்பி உருண்டு புரண்டு “ஐயையோ ஐயையோ,” என்று கதறி நிர்ப்பாக்கியனாய்ச் செத்துப்போனான். (னி. மூ. னி. V. ஹிலி. 350).