திருப்பலி என்பது பாவப் பரிகாரப் பலி!

இஸ்ரயேல் வழிபாட்டு முறையிலே பாவப் பரிகாரப் பலி முக்கிய இடம் பெற்று இருந்தது. குருக்களுக்காக, மக்களுக்காக, அரசர்களுக்காக என பல தரப்பட்டவர்களுக்காக (வேலி 4:1-35), பல்வேறு விதங்களில் பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டன. உதாரணமாக எரிபலி, பாவப் பரிகாரப்பலி, சமாதானப் பலி, என வகைப்படுத்தலாம்.

இதில் பலியாக்கப்பட்ட விலங்கின் இரத்தம் தெளிக்கும் சடங்கு மிக முக்கியமாகும். பழைய ஏற்பாட்டின் படி இரத்தம் வாழ்வைக் கொண்டதாகவும், பாவங்களைபோக்க வல்லமை உடையதாகவும் கருதப்பட்டது (வேலியர் 17:11). மேலும் விலங்கின் இரத்தம் பீடத்தின் மேல் தெளிக்கப்பட்டது. மக்கள் மேலும் தெளிக்கப்பட்டது (விப 29:19-21).

இதன் பயனாக பலியாதல், இரத்தம் சிந்துதல், புனிதமடைதல், சுத்தமாக்கிக் கொள்ளுதல், ஏற்புடையவராதல், அனைத்தும் பலியினால், இரத்தம் சிந்துதலினால் நடக்கும் என ஏற்கப்பட்டது.

புதிய ஏற்பாடனது, கிறிஸ்துவின் மரணத்தை, உன்னத பாவம் போக்கும் பலியாக காட்டுகின்றது. 'இதோ கடவுளின் ஆட்டுக் குட்டி; ஆட்டுக் குட்டியாம்
இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" (யோவா 1:29). 'சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும், விண்ணுலகிலுள்ளவை, மண்ணுலகிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" (கொரி 1:20).

'அவர் பலியாகப் படைத்த இரத்தமும் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக் குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கச் செய்தார்..... ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகின்றது.

ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாக கொடுத்தவர் அவரே" (எபி 9:12-14). தொடர்ந்து எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலே ஆசிரியர், கிறிஸ்துவின் பலி,சீனாய் உடன்படிக்கையைவிட மேலானது என்பதைக் காட்டுகின்றார். பின்வரும் பகுதியிலே (எபி 8:7-13) சீனாய் உடன்படிக்கை பழையது, குறைவானது.

கிறிஸ்துவின் கல்வாரிப் பலி புதியது, நிறைவானது. தொடர்ந்து புதிய உடன்படிக்கையில் கிறிஸ்துவே நமக்காக பரிந்து பேசுபவர். கிறிஸ்துவினுடைய பலியினால் சட்டங்கள் மனிதர்களுடைய இதயத்தில் பதிக்கப்படும், கற்களில் அல்ல என்று எரேமியா இறைவாக்கினரை மேற்கோள் காட்டுகின்றார் ஆசிரியர் (எரே 31:33-34). இயேசுக் கிறிஸ்து எல்லா பலிகளின் நிறைவாக, முக்காலத்திற்குமான ஒரே பலியாக தன்னை மனமுவந்து கையளித்தார். இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்திற்கு கழுவாயாகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார் (உரே 3:25).

இறுதி இராவுணவின் போது கிறிஸ்து இரசம் நிறைந்த பாத்திரத்தை எடுத்து 'இது புதிய உடன்படிக்கைக்காக என் இரத்தம்" (மத் 26:28, மாற் 14:24, லூக் 22:20, 1கொரி 11:25) என்றார். இயேசு சிந்திய 'புதிய உடன்படிக்கைக்காக இரத்தம்" என்பதை நாம் பழைய உடன்படிக்கையான சீனாய் உடன்படிக்கையினைக் கொண்டு விளங்கிக் கொள்ள முடியும்.

சீனாய் உடன்படிக்கையில் விலங்கின் இரத்தம் பலிப்பீடத்தின் மேலும், மக்கள் மேலும் தெளிக்கப்பட்டது (விப 24:6-8). புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. விலங்கின் இரத்தத்தினால் அல்ல, மாறாக கடவுளின் மகனாகிய இயேசுக் கிறிஸ்துவின் இரத்தத்தினால் இயேசுக் கிறிஸ்து தன்னுடைய இரத்தம் சிந்துதலினால் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதை முக்காலத்திற்கும் உரிய ஒரு உன்னத, நிறைவான பலியாக ஏற்படுத்தி விட்டார்.

இதுவே கல்வாரிப்பலியின் சிறப்பு. கிறிஸ்து தம்மையே 'தற்கொடையாக" நமக்கு தந்து விட்டார். ஆகவே இந்தக் கல்வாரிப்பலியை நாம் மீண்டும், மீண்டும் நிகழ்த்திக் காட்ட முடியாது. ஒருமுறைதான் நடந்தேறியது. திருப்பலியில் நாம் பங்கெடுக்கும் போதெல்லம் அந்த கல்வாரிப்பலியை நினைவு கூர்கின்றோம்.

இயேசுவின் இப்பலி பாவ மன்னிப்புக்கு அவசியம். வாழ்வடைய இயேசுவின் இரத்தத்தை, உடலை உண்டு, பருக வேண்டும் (யோவா6:53). கடவுளின் இரத்தத்தால், நாம் அவர்க்கு ஏற்புடையவர்களாக அவரோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் (உரே5:9-10) இயேசுவின் இரத்தத்தினால் தூய்மை அடைகின்றோம் (1பேதுரு 1:2). நம்மை விடுவிக்க கொடுக்கப்பட்ட விலை மாசுமறுவின்றி இயேசு கிறிஸ்துவின் உயர் விலையேற்றப்பட்ட இரத்தமாகும் (1பேதுரு 1:18-19).

ஒவ்வொரு திருப்பலியிலும் பங்கேற்கும் போது மேற்சொன்ன உண்மைகளை புரிந்து கொண்டு பங்கேற்கும்போது, அதன் மகத்துவத்தை மென்மேலும் அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். இத்தகைய அன்பின் தகனப்பலியில் நாம் இணைந்து கொண்டால் கடவுள் தரும் மீட்பை நமதாக்கிக் கொள்ள முடியும்.