தேவநற்கருணை வாங்க மகா ஆசையாயிருந்த புண்ணியவதிக்கு நடந்த புதுமை!

   செவில் என்ற பட்டணத்தில் புனித தெரேசம்மாள் சபையைச் சேர்ந்த கத்தரீன் என்னும் ஒரு கன்னியாஸ்திரி தேவநற்கருணையின்பேரில் பக்தியாயிருந்ததினால் அதன் மூலமாக அவளிடத்தில் இயேசுநாதர் சில புதுமைகளைச் செய்தார் . அவள் ஒருநாள் பாவசங்கீர்த்தனம் செய்தவுடன் நல்ல ஆயத்தத்தோடு நன்மை வாங்கும் நோக்கத்துடன் அதன் பேரில் தியானம் செய்தாள் .

இவள் நீண்ட நேரம் தியானத்தில் மூழ்கியிருக்கையில் பரவசமாய்ப் போனாள் . இதற்குள்ளே கோவிலில் பூசையும் முடிந்தது . அனைவருமே வெளியே சென்றுவிட்டார்கள் . பிறகு அவள் தியானம் முடிந்து பார்க்கிறபோது கோவிலில் ஒருவரும் இல்லாமலும் கோவில் கதவு மூடப்பட்டு நண்பகல் ஆகிவிட்டதையும் , இன்று நன்மை வாங்க முடியாமல் போனதே என்று மிகவும் வருத்தமாயிருந்தாள் . இந்த கவலையினால் அழுது கொண்டு தன்னுடைய ஆசையின்படியே தேவநற்கருணை வாங்க ஆண்டவர் உதவி செய்ய வேண்டிக் கொண்டாள் .

   தேவநற்கருணையின்பேரில் அந்த புண்ணியவதிக்கு உண்டான ஆவலைக் குறித்துத் திவ்ய நற்கருணையில் இருக்கிற இயேசுநாதர் ஒரு புதுமை செய்தார் . அங்கே ஒரு குருவானவர் தோன்றி கோவில் கதவைத் திறந்து தேவநற்கருணை இருக்கும் பீடத்தின் அருகில் போய்த் தேவநற்கருணையை எடுத்து அந்த புண்ணியவதிக்குக் கொடுத்தார் . அவள் நன்மை வாங்கும் போது மிகுந்த சந்தோஷப்பட்டாள். அவள் தேவநற்கருணை வாங்கித் தியானம் செய்யும் போது கர்த்தர் அவளுக்கு சொன்னதாவது : " இப்போது உனக்கு தேவநற்கருணை கொடுத்தது குருவானவரல்ல , ஒரு சம்மனசுதான் . ஏனெனில் , தேவநற்கருணை வாங்க உனக்கு உண்டான ஆசையைக் குறித்துதான் அந்த சம்மனசை அனுப்பினோம் " .

இந்தப் புண்ணியவதி இன்னொரு சமயம் தேவநற்கருணை வாங்கின பீடத்தின் முன் தியானத்தில் இருக்கும்போது தன்னுடைய இதயத்தில் எழுந்தருளியிக்கிற கர்த்தரைப் பார்த்து " என் இயேசுவே ! உமது திருத்தலையில் இருக்கிற முள்முடியால் தேவரீர் மிகுந்த வேதனை அனுபவித்தீர் . என்னுடைய தலைக்கு வலியில்லாதிருக்கிறது நியாயமல்ல . உம்முடைய திருத்தலையின் வேதனையில் கொஞ்ச வேதனையாவது எனக்குத் தரவேண்டும்" என்று பக்தியோடு வேண்டிக்கொண்டாள் .

   இப்படி அவள் வேண்டிக் கொண்டவுடன் பீடத்தின் மேலிருந்த பாடுபட்ட சுருபம் புதுமையாகத் தன் கையினாலே தன் தலைமேல் இருக்கிற முள்முடியை எடுத்து அந்த புண்ணியவதிக்கு கொடுத்தது . அவள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மிகுந்த பக்தியோடு அதை வாங்கி அன்புடன் அந்த முடியை பலமுறை முத்தம் செய்து தன் தலைமேல் வைத்துக் கொண்டு அதை மற்றவர்கள் காணமுடியாதவாறு துணியால் மூடிக்கொண்டாள் . இப்படி அவள் சாகுமட்டும் இருபத்து மூன்று வருடங்கள் தன் தலைமேல் வைத்துக் கொண்டாள் . அதனால் வந்த வேதனையை பொறுமையோடும் , சந்தோஷத்துடனம் இயேசுநாதரைக் குறித்து அனுபவித்தாள் .

   எனதருமை நண்பர்களே ! இந்த புதுமையின்படியே நீங்களும் தேவநற்கருணையின்பேரில் பக்தியாயிருந்து நன்மை வாங்குமுன் தேவநற்கருணை வழியாக உங்கள் இருதயத்தில் வருகிற கர்த்தருடைய மகிமையையும், உங்களுடைய நீசத்தனத்தையும் கொஞ்ச நேரமாகிலும் நீங்கள் தியானிக்க வேண்டும் . நீங்கள் இயேசுநாதருடைய வழியில் நடப்பதற்கு இறைமகன் இயேசுவை மன்றாடுங்கள் .