குருட்டுப் பக்தி

1. குருட்டுப் பக்தி என்னும் பாவத்தை நாம் எப்படிக் கட்டிக் கொள் கிறோம்? 

சர்வேசுரனுக்குத் தகாததும், பொருந்தாததுமான பக்தியை அவருக்குச் செலுத்துவதினாலோ அல்லது சர்வேசுரனுக்கு மாத்திரம் செலுத்த வேண்டிய ஆராதனையைச் சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துக் களுக்குச் செய்வதினாலோ குருட்டுப் பக்தி என்னும் பாவங் கட்டிக் கொள்ளுகிறோம்.


2.  சர்வேசுரனுக்குப் பொருந்தாத பக்தியை அவருக்கு எப்படிச் செலுத்தக் கூடும்?

பொய்யான ஆராதனை, அயோக்கியமான ஆராதனை, மிதமிஞ்சின ஆராதனை ஆகிய இவைகளால் சர்வேசுரனுக்குப் பொருந்தாத பக்தியைச் செலுத்தக் கூடும்.


3. “பொய்யான ஆராதனை செலுத்துகிறவர்கள் யார்?

(1)  பதித அல்லது யூத வேதத்தை அனுசரிக்கிறவர்கள்;

(2) பொய்யான மார்க்கங்களுக்குரிய சில சடங்குகளை அனுசரிக்கிறவர்கள்;

(3)  பொய்யான புதுமைகளையும், காட்சிகளையும் பிரசித்தப் படுத்துகிறவர்கள் முதலானவர்களாம்.


4.  அயோக்கியமான ஆராதனை செலுத்துகிறவர்கள் யார்?

(1)  சர்வேசுரனை மகிமைப்படுத்த விரும்பி சினிமாவிலும், நாடகங்களிலும், காதல் சிற்றின்பப் பாட்டுகளுக்கு உபயோகிக்கும் இசைகளைக் கொண்டு தேவகீர்த்தனைகளைப் பாடுகிறவர்களும், 

(2)  திருட்டுப் பொருளைக் காணிக்கையாக ஒப்புக்கொடுக் கிறவர்களும்,

(3)  பாவமான காரியம் அனுகூலம் ஆகும்படி வார்த்தைப்பாடு கொடுக்கிறவர்களுமாம்.


5. மிதமிஞ்சின ஆராதனை செலுத்துகிறவர்கள் யார்?

(1)  அதிக மேலானதென்று நினைத்து, ஞாயிற்றுக்கிழமையில் முதலாய் ஒருசந்தி பிடிக்கிறவர்கள்;

(2) (பாவத்தோடு வாழ்ந்தாலும்) காயம்படாதிருக்கும் பொருட்டு சுரூபம் அல்லது திருப்பண்டம் தரித்து வருகிறவர்கள்;

(3)  (பாவத்தோடு வாழ்ந்தாலும்) சில விசேஷ செபங்களைப் பண்ணுவதினால் நிச்சயமாய் இரட்சணியம் அடைவோம், அல்லது சடுதியான மரணத்துக்குத் தப்பித்துக் கொள்ளுவோம் என்று அவைகளைச் சொல்லுகிறவர்கள் முதலானவர்களாம்.


6. குருட்டுப் பக்தியைச் சேர்ந்த முக்கியமான பாவங்கள் எவை?

(1) விக்கிரக ஆராதனை, 
(2) வீண் சாஸ்திரம், 
(3) சகுன சாஸ்திரம், 
(4) மாயம், 
(5) பில்லிசூனியம் இவைகளாம்.