பூசையால் மனந்திருப்பப்பட்ட ஒரு ப்ரொட்டஸ்டான்ட் சபை உறுப்பினர்

இங்கிலாந்திலிருந்து சுற்றுலா வந்திருந்த ப்ரொட்டஸ்டாண்ட் சபையினரின் குழு ஒன்று, ஃப்ளோரன்ஸ் மேற்றிராசனக் கோவிலில் திவ்விய பலிபூசை நடந்த போது அங்கிருந்தது. பூசை நிறைவேற்றிய குரு மிக ஆழ்ந்த பக்தியோடு பூசை நிறைவேற்றினார். ஆனால் அந்நியர் குழு ஒன்று தாம் செய்வதையெல்லாம் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணரவில்லை. அந்தக் குழுவில் உள்ள சிலர், தங்கள் வினோதப் பிரியத்தைத் தீர்த்துக் கொண்டவர்களாக, பீடத்தின் அருகில் தாங்கள் இருந்த இடங்களிலிருந்து நகர்ந்து, இந்தக் கோவிலின் அழகிய அம்சங்களைக் காணப் போய்விட்டார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தாம் இருந்த இடத்திலேயே அசையாமல் இருந்து, பூசை முடியும் வரை குருவானவரின் ஒவ்வொரு அசை வையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டேயிருந்தார்.

பீடத்திலிருந்து சாக்றிஸ்திக்குச் சென்ற குருவானவரின் முகத்தில் வெளிப்பட்ட விசுவாச உணர்வும், வெளிப் படையான மகிழ்ச்சியும் இந்தப் பிரிவினை சபைக்காரரை மிக ஆழ்ந்த விதமாகப் பாதித்தது, அவருடைய மனதை சத்தியத்தைக் கொண்டு தாக்கியது. இங்கிலாந்துக்குத் திரும்பி வந்தவுடன் இந்த மனிதர் ஒரு கத்தோலிக்க குருவைத் தேடிச் சென்று, அடிப்படை ஞான உபதேசத்தை ஆர்வத்தோடு முழுமையாகக் கற்றுக் கொண்ட பின், ஞான ஸ்நானம் பெற்று, பக்தியார்வமிக்க கத்தோலிக்கராக மாறினார்.

பக்தியோடு செய்யப்படும் பூசைகளில் ப்ரொட்டஸ்டாண்ட்கள், அல்லது அவிசுவாசிகள் கலந்து கொள்ள நேரும்போதெல்லாம், நாம் இப்போது குறிப்பிட்ட ஆங்கிலேயரைப் போலவே, அவர்கள் எந்த அளவுக்கு மிக ஆழமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்களில் பலர் மனந்திரும்பி, சத்தியத் திருச்சபையில் உட்படு கிறார்கள், இது மிக அடிக்கடி நிகழ்கிறது என்று எந்த தயக்கமுமின்றி நான் சொல்கிறேன்.

அவசரமாகவும், பக்தியும், வணக்கமும் இன்றியும் செய்யப்படும் பூசைகள்

அவசர அவசரமாகவும், உரிய பக்தியும், வணக்கமும் இல்லாமலும் செய்யப்படும் பூசைகளில் பங்கு பெறுவோர் மனங்களில் இந்தப் பூசைகள் விளைவிக்கிற மோசமான பாதிப்புகள் இதற்கு முன் சொல்லப்பட்ட நற்பாதிப்பு களிலிருந்து மிகவும் வேறுபட்டவையாக இருக்கின்றன.