உலகத்தின் படைப்பில் தேவ மனம் கொண்டிருந்த திட்டம்

கடவுள் அளவற்றவராகவும், எதையும் சாராதவராகவும், தமக்குத் தாமே போதுமானவராகவும் இருக்கிறார். அவர் யுகங்களுக்கு முன்பே இருந்தார். ஐக்கியமும், பிறப்பிக்கும் வளமும், தனித்துவமும் அவரது இருத்தலின் விதிகளாக இருக்கின்றன.

யாரிடமிருந்தும், எதனிடமிருந்தும் பிறவாதவரும், பிறப்பிக்கப்படாதவருமாகிய பிதாவாகிய சர்வேசுரன், தமது சுபாவமான சந்ததியாகிய வார்த்தையானவரை ஜெனிப்பிக்கிறார். பிதாவும் சுதனும் நித்தியமாக ஒருவரையொருவர் நேசித்து, அந்த நேசத்தின் வெளிப்பாடாகிய இஸ்பிரீத்துசாந்துவானவரை (பரிசுத்த ஆவியானவரை) சுவாசமாக வெளியிடுகிறார்கள். 

பிதா தமது சுபாவப்படியும், சாராம்சப்படியும் கருத்தரிக்கிறவராக இருக்கிறார். சுதன் அவரிடமிருந்து ஜெனிக்கிறவராக இருக்கிறார். இவர்கள் இருவரும் இஸ்பிரீத்துசாந்துவானவரின் புறப்பாட்டின் காரணமாக இருக்கிறார்கள். இஸ்பிரீத்துசாந்துவானவர் இவர்கள் இருவருடைய சுவாசமாகவும் இருக்கிறார். 

பிதா சுதன் இஸ்பிரீத்துசாந்துவாகிய திரியேகக் கடவுள் (திரி என்றால் மூன்று, ஏகம் என்றால் ஒன்று. திரியேகக் கடவுள் என்ற வார்த்தை மூன்று ஆட்களில் ஒரே சர்வேசுரனாக இருக்கிற தமத்திரித்துவரைக் குறிக்கிறது.) தாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு யாரையும் சார்ந்திருக்கத் தேவையின்றி, தனியானவராக இல்லாதிருக்கிறார். அவர் ஓர் உள்ளரங்க, சாராம்சமுள்ள வாழ்வை வாழ்கிறார்.  அவர் தமக்குள் ஓர் உண்மையான, தெய்வீக சமூகத்தை உருவாக்குகிறார். திரியேகமான தேவசிநேகத்தின் உரையாடலிலும், அரவணைப்பிலும் அவர் நித்தியமாகத் தங்கியிருக்கிறார். பரிபூரணப் பேரின்பத்தை அனுபவிக்கிறார்.

இஸ்பிரீத்துசாந்துவானவர் நேசமாக இருக்கிறார். பிதாவுடையவும் சுதனுடையவும் சிநேகமாகப் புறப்பட்டு வருபவர் அவரே. நேசம் பரவக் கூடியது. பொங்கி வழியக் கூடியது. பிதா சுதனை ஜெனிப்பிப்பதிலும், இஸ்பிரீத்துசாந்துவைப் புறப்படச் செய்வதிலும் தமது பிறப்பிக்கும் வளமையைச் செயல்படுத்துகிறார். அவ்வாறே, சுதனானவரும் தமது பிதாவோடு இணைந்து, மாசற்ற, தெய்வீக, அமல உற்பவமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவை உற்பவிப்பதில் தமது பிறப்பிக்கும் வளமையைச் செயல் படுத்துகிறார். 

ஆனால் இவ்வாறு நேசப் பொருண்மையாகவே இருக்கிற மூன்றாம் ஆளாகிய இஸ்பிரீத்து சாந்துவானவர் தம்முடைய பிறப்பிக்கும் வளமையைச் செயல்படுத்த இயலாதவராகவும், கடவுளின் அக வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாதவராகவும் இருக்கிறார். ஏனெனில் அர்ச். லூயி த மோன்ஃபோர் சொல்வது போல, சர்வேசுரனுடைய அந்தரங்கத்தினுள் நான்காவதான ஒரு தேவ ஆளை அவர் பிறப்பிக்க இயலாதவராக இருக்கிறார். என்றாலும் கடவுளின் அக வாழ்வுக்கு வெளியே நேசத்தின் எண்ணிலடங்காத விளைவுகளை உருவாக்க அவர் வல்லவராக இருக்கிறார். 

ஏனெனில், அர்ச். பொனவெந்தூர் கூறுவது போல, பிறப்பித்தல், ஜீவ ஆவியை ஊதுதல் மற்றும் படைத்தல் ஆகிய மூன்று வெவ்வேறு வழிகளில் தன்னையே வெளியில் ஊற்றுவது தேவ நன்மைத்தனமாயிருக்கிற இஸ்பிரீத்து சாந்துவுக்குப் பொருத்தமான செயலாக இருக்கிறது.

இவற்றில் பிறப்பித்தல் தனிப்பட்ட முறையில் பிதாவுக்குரியது. இரண்டாவதாகிய ஜீவ ஆவியை ஊதுதல் பிதாவுக்கும் சுதனுக்கும் உரியது. மூன்றாவதாகிய படைத்தல் அல்லது சிருஷ்டித்தல், மூன்று தேவ ஆட்களுக்கும் உரியது. ஆனால் அது தனிப்பட்ட முறையில் இஸ்பிரீத்துசாந்துவானவரின் ஆள்தன்மைக்கே உரிய குணாதிசயத்தின் காரணமாக, அவருக்கு உரியதாகக் காட்டப்படுகிறது. அதுவே அவருடைய வெளியரங்க பிறப்பிக்கும் வல்லமையை உருவாக்குகிறது. 

பிதா அனைத்திற்கும் மூலாதாரமும் தொடக்கமுமாக இருக்கிறார். பிதாவின் உத்தம மாதிரி, அச்சு என்ற முறையில் அனைத்தினுடையவும் உன்னத அழகும், அவற்றிற்கேயுரிய உருவாக்கமுமாக இருப்பது சுதனுக்குரியதாக இருக்கிறது. அனைத்தினுடையவும் உன்னத நன்மைத்தனமாக இருப்பது இஸ்பிரீத்துசாந்துவுக்கு உரியதாக இருக்கிறது.

இந்த தெய்வீக நன்மைத்தனமானவர் இயல்பாகவும், தமது சாராம்சத்திலும், பரவும் தன்மை உள்ளவராக இருக்கிறார். அவர் தமக்கு வெளியே தம்மையே பொழியவும், காணக்கூடிய விதமாகத் தம்மை வெளிப்படுத்தவும் விரும்புகிறார். இவ்வாறு தமது நேசம் மற்றும் நன்மைத்தனத்தின் காரணமாக, தமத்திரித்துவக் குடும்பத்திற்கு வெளியே அவர் சிருஷ்டிகளைப் படைக்கிறார். 

இவ்வாறு சிருஷ்டிகள் கடவுளின் நன்மைத்தனத்திலிருந்து இருத்தலைப் பெற்றுக் கொள்கின்றன. கடவுள் இவற்றைப் படைத்ததில் ஒரு மாபெரும் நோக்கம் இருந்தது. இந்த சிருஷ்டிகள் தெய்வீக நன்மைத்தனத்திற்கு உரிய ஆராதனையை அவருக்குச் செலுத்தி, அவரை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே படைக்கப்படுகின்றன. அவற்றிடமிருந்து, கடவுளின் அளவற்ற மகத்துவத்தை எடுத்துரைத்து, அவரைப் போற்றித் துதிக்கும் விதமாக, அவருக்கு வெளியே ஒரு புதிய துதிப்பாடல் அவரை நோக்கி எழுப்பப்பட வேண்டும் என்பது தேவ சித்தமாக இருந்தது.

கடவுளின் உள்ளரங்க, தெய்வீக சாராம்சமுள்ள மகிமை எந்த விதத்திலும் அதிகரிக்கப்படவோ, இனி பூரணப்படவோ இயலாது என்பது ஓர் அடிப்படை சத்தியம். ஏனெனில் கடவுள் பரிபூரணராகவும், அதிகரிக்கவோ, குறையவோ இயலாதவராகவும் இருக்கிறார்.

இனி, சிருஷ்டிப்பு என்பது ஒன்றுமில்லாமையிலிருந்து உயிருள்ளவையும், உயிரற்றவையுமான வஸ்துக்களைப் படைக்கும் செயல் என்ற கண்டிப்பான அர்த்தத்தின்படி, படைப்பின் வழியாக அன்றி வேறு எந்த வழியிலும் தெய்வீக நன்மைத்தனம் வெளிப்படுத்தப்படவோ, தந்தருளப்படவோ இயலாது. ஆகவே, ஒரு நோக்கத்தை அடைய இன்றியமையாத வழியாக, சிருஷ்டித்தல் கடவுளின் திட்டத்தில் நுழைகிறது. இதுவே தெய்வீக நன்மைத்தனத்தின் முதல் புற வெளிப்பாடாகவும், அது வெளியில் தரப்படும் செயலாகவும் இருக்கிறது. பிறப்பிக்கும் வளமை, ஐக்கியம் ஆகியவை அதை நிர்வகிக்கும் தெய்வீக சட்டங்களாக இருக்கின்றன. 

மனிதன் சடப்பொருளாகிய சரீரம் உள்ளவனாக இருக்கிறான். அதன் மூலம் அவன் கீழான உலகத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறான். அவன ஓர்; ஆத்துமத்;தையும் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறான். அதன் மூலம் தேவ இஸ்பிரீத்துவிலும் அவன் பங்குபெறுகிறான். அதனால் அவன் மேலுலகத்தோடும் இணைக்கப்பட்டிருக்கிறான். 

இவ்வாறு அவன் ஒரே சமயத்தில் சரீரமும் ஆத்துமமும் உள்ளவனாக இருக்கிறான். இவற்றில் ஒன்று மற்றொன்றின் மீது செயலாற்றுகிறது. இவை ஒரே இருத்தலின் சங்கிலியால் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. அவன் தனது பிரிக்கப்படாத ஆள்தன்மையில் ஆத்துமம் கடவுளிடமிருந்து பெறக்கூடிய சகல கொடைகளையும், பருப்பொருளாகிய சரீரம் கொண்டிருக்கக் கூடிய சகல சக்திகளையும் தன்னில் ஒன்றாகக் கொண்டிருக்கிறான். 

கடவுள் இவ்வாறு புத்தியுள்ள சிருஷ்டிகளான தேவதூதர்களையும், மனிதர்களையும் படைத்ததன் முதன்மையான நோக்கம் பின்வருமாறு:

1. மூன்று தேவ ஆட்களும் எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் சரிசமமாயிருப்பதால், அவர்கள் ஒருவரையொருவர் ஆராதிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் செலுத்தும் மகிமை சர்வேசுரன் தமக்குத் தாமே தருகிற மகிமையாக இருக்கிறது. அது “வெளியிலிருந்து,” அதாவது சிருஷ்டிகளிடமிருந்து வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

2. நேசமும் அப்படியே. தமது நன்மைத்தனத்தின் பரவுதலாகிய சிருஷ்டிப்பினால் வெளியிலிருந்தும் தாம் நேசிக்கப்பட வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.

3.  தேவ ஆட்கள் சமமானவர்களாக இருப்பதால் ஒருவருக்கொருவர் கீழ்ப்படியவும், அதன் மூலம் ஒருவரையொருவர் மகிமைப்படுத்தவும் எந்த வாய்ப்பும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

எனவே சர்வேசுரனுக்குரிய ஆராதனையையும், நேசத்தையும், மகிமையையும் அவருக்குச் செலுத்துவது சிருஷ்டிகளின் முழு முதற்கடமையாக இருக்கிறது. ஆனால் இதிலும் ஒரு மிகப் பெரும் குறையை, ஒரு சாத்தியமின்மையைக் கடவுள் காண்கிறார்.

ஆம்! கடவுளுக்குத் தகுதியுள்ள முறையில் அவரை மகிமைப்படுத்த தேவதூதர்களாலும், மனிதர்களாலும் நிச்சயமாக முடியாது! மனிதன் இயற்கையாக இருக்கிற சகல படைப்புகளினுடையவும் மத்தியஸ்தன் என்ற முறையில் தனக்காகவும், தனக்குக் கீழான படைப்புகளுக்காகவும் கடவுளை ஆராதிக்கவும், நேசிக்கவும், கீழ்ப்படிதலின் மூலம் அவருக்கு மகிமை செலுத்தவும் வேண்டியவனாக இருக்கிறான். 

இதற்காகவே புத்தி, அறிவு, சித்தம் என்னும் ஆத்தும சத்துவங்கள் அவனுக்குத் தரப் பட்டிருக்கின்றன. ஆனால் மனிதனிடமிருந்து வரும் ஆராதனையும், நேசமும், மகிமையும் கடவுளுக்குத் தகுதியானவையாக இருக்க முடியுமா? முடியவே முடியாது! ஏனெனில் கடவுள் அளவற்றவர். மனிதனோ அளவுக்கு உட்பட்டவன். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தூரம் சகலமுமாக இருக்கும் காரியத்திற்கும், தன்னிலே ஏறக்குறைய ஒன்றுமில்லாமையாக இருக்கிற காரியத்திற்கும் இடையிலுள்ள தூரமாக இருக்கிறது. 

னவே, என்னதான் முதன்மையான சிருஷ்டியாக இருந்தாலும், மனிதன் கடவுளை நோக்கி எழுப்பும் கீதம் அவருக்குத் தகுதியுள்ளதாக இருக்க முடியாது. எனவே மீண்டும் நாம் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிற்கிறோம். கடவுள் மட்டுமே தமக்குத் தகுதியுள்ள மகிமையைத் தமக்குத் தர முடியும்! ஏனெனில் அவர் தம்மை விடக் கீழான எந்த ஒரு படைப்பின் ஆராதனைக்கும், நேசத்திற்கும் அளவற்ற விதமாக மேற்பட்ட தகுதியுள்ளவராக இருக்கிறார்.

எனவே ஆராதிக்கவும், நேசிக்கவும் முழுத் தகுதியைக் கொண்டுள்ளவராகக் கடவுள் காணும் ஒரு ஜீவியரை உண்டாக்க கடவுள் தூண்டப்படுகிறார். இந்த ஜீவியர் ஒரே சமயத்தில் கடவுளை விட ஒரு படி தாழ்ந்த நிலையில் இருந்து அவருக்கு ஆராதனையையும், வழிபாட்டையும், நேசத்தையும் செலுத்த வேண்டும். அதே சமயம் தம்முடைய ஆராதனையும், வழிபாடும், நேசமும் கடவுளுக்குத் தகுதியுள்ளவையாக இருக்கும்படி அவர் எல்லாவற்றிலும் கடவுளுக்குச் சமமானவராகவும் இருக்க வேண்டும். 

ஆகவே கீழ்நிலையில் உள்ள ஒருவரின் ஆராதனையையும், மகிமையையும,; வழிபாட்டையும் மேல்நிலையில் உள்ள ஒருவருக்குத் தகுதியானதாக ஆக்குவதிலும், ஆராதிக்கப்படுபவரோடு சமநிலையைக் கொண்டுள்ள ஒரு தேவ ஆராதனையாளரை உருவாக்குவதிலும் கடவுள் தமது தேவ நன்மைத்தனத்தின் முழுத் திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை உருவாயிற்று.

ஆனால் கடவுள் ஒரே சமயத்தில் தமக்குத் தாமே சமமானவராகவும், தமக்குத் தாமே கீழ்ப்பட்டவராகவும் இருக்க முடியுமா? அவர் தம்மையே ஆராதிக்கும்படி தமக்குத் தாமே கீழ்ப்பட்டவராக இருக்க முடியுமா? அதே வேளையில் அளவற்ற விதமாகவும், தகுதியுள்ள முறையிலும் தம்மைத் தாமே ஆராதிக்கும் அளவுக்கு அவர் தமக்குத் தாமே சமமானவராக இருக்க முடியுமா? இவ்வளவு சிக்கலான ஒரு பிரச்சினைக்குப் பரிபூரண ஞானமுள்ளவராகிய சர்வேசுரன் கண்ட தீர்வு என்ன என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.