பிரச்சினைக்குத் தீர்வு – மனிதாவதாரம்!

கடவுள் கடவுளாக மட்டுமே இருக்கும்போது, அல்லது சிருஷ்டி சிருஷ்டியாக மட்டுமே இருக்கும்போது, நாம் முந்தின கட்டுரையில் கூறியுள்ள பிரச்சினைக்கு நாம் ஒருபோதும் தீர்வு காண முடியாது. கடவுளை ஆராதிப்பவராக இருப்பவரிடம் இருக்க வேண்டிய, இன்றியமையாத முதல் அம்சம் அவர் கடவுளை விடத் தாழ்ந்திருப்பதாகும். 

ஒரு பேச்சு வகைக்கு, கடவுள் தமக்குள்ளேயே தம்மை வைத்துக் கொள்ளும்போது, அவர் எந்த விதமான தாழ்நிலையையும் கொண்டிருக்க முடியாது. சிருஷ்டி தனிமைப்பட்டதாகவும், தன்னிலேயே கருத்தூன்றியிருப்பதாகவும் இருக்கும் வரையிலும் அதுவும் தகுதியுள்ள முறையில் கடவுளை ஆராதித்து, மகிமைப்படுத்த முடியாததாகவே இருக்கும். 

மனித சுபாவத்தில் ஆராதனைக்குத் தேவையான தாழ்ந்த நிலை என்னும் முதல் அம்சம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதனிடம் உத்தமதனம், உத்தம சாங்கோபாங்கம், அதாவது, கடவுளுக்குச் சமமாயிருக்கும் நிலை இல்லை. ஆராதனையின் முக்கிய அம்சமாகிய உத்தமதனம் கடவுளிடம் இருக்கிறது. அதாவது, அவர் ஆராதிக்கப்படுபவரோடு சமநிலை கொண்டிருக்கிறார். ஆனால் அவரிடம் தாழ்ந்த நிலையாகிய முதல் அம்சம் இல்லை. 

எனவே, கடவுளுக்குச் சமமாயிருக்கும் நிலை சிருஷ்டிக்குத் தரப்பட வேண்டும்;. கடவுள் ஒரு சிருஷ்டியாகவும் மாற வேண்டும். இந்த கற்பனைக்கெட்டாத, பிரமாண்டமான, தேவ மனதாலும் வல்லமையாலும் மட்டுமே சாத்தியமாகிற பரம இரகசியத்தில்தான் கடவுளைத் தகுதியுள்ள முறையில் எப்படி மகிமைப்படுத்துவது என்பதற்கான முழுப் பதிலும் அடங்கியிருக்கிறது. இதிலிருந்துதான் அளவற்ற விதமாய் உயர்த்தப்படுதல் என்னும் மகிமையான நிலையை உத்தம சிருஷ்டிகளும் பெற்றுக்கொள்ள முடியும். எப்படி என்பதைப் பிறகு விவரிப்போம்.

பொருண்மை ரீதியாக கடவுளோடு சிருஷ்டியை ஒன்றுகலப்பது, அல்லது சிருஷ்டியைக் கடவுளாக மாற்றுவது, கடவுளை சிருஷ்டியாக மாற்றுவது - இவற்றின் மூலம் இக்காரியத்தைச் செய்ய முடியாது. இரண்டு எதிரெதிர் துருவங்கள் தனித்துவமுள்ளவையாகவே நிலைத்திருக்க வேண்டும். ஆனால் பிரிந்திருக்கக் கூடாது. அவற்றின் ஐக்கியத்தில் இருந்துதான் ஒரு வகையில் கடவுளுக்குத் தாழ்ந்தவரும், மற்றொரு விதத்தில் அவருக்கு முற்றிலும் சமமானவருமாகிய ஒரு புதிய ஜீவியர் தோன்றுவார்.

இப்படிப்பட்ட ஓர் ஐக்கியமே இந்த இரண்டு எதிரெதிர் துருவங்களுக்கு இடையிலான, பொருண்மை சார்ந்த தனித்தன்மையை மறைக்கும் அளவுக்கு அந்நியோந்நியமான ஐக்கிய நிலைக்குத் தேவைப் படுகிறது. இந்த இரண்டில், ஒவ்வொரு சுபாவத்திலிருந்தும் புறப்பட்டு வரும் செயல்களை அளவற்றவராகிய சர்வேசுரனுக்குத் தகுதியுள்ளதாக இந்த ஐக்கியம் மாற்றுகிறது. 

இந்த ஐக்கியத்தில் சிருஷ்டி தனிமைப் படுத்தப்பட்டதாகவும், தேவ சாராம்சத்தைத் தன் மையமாகக் கொள்ளாததாகவும் இருக்குமானால், அதன் ஆராதனைச் செயல் அளவுக்குட்பட்டதாகவும், அதனால் கடவுளுக்குத் தகுதியற்றதாகவுமே இருக்கும். அது ஒருபோதும் அளவற்ற விதமாக சிருஷ்டிகரை மகிமைப்படுத்த முடியாது. 

ஆகவே, இந்த ஐக்கியத்தின் பலனாக, சிருஷ்டிக்கப்படாத அடிப்படைத் தத்துவமாகிய தேவ சுபாவமானது, சிருஷ்டிக்கப்பட்டதாகிய மனித சுபாவத்தைத் தன் ஆளுகைக்குள் அடக்கி வைத்திருப்பது அவசியமாக இருக்கிறது. அப்போதுதான் சிருஷ்டிக்கப்பட்டவனாகிய மனிதனின் சுபாவமான, இயல்பான சத்துவங்கள் (வல்லமைகள்), சிருஷ்டிக்கப் படாத அடிப்படைத் தத்துவமாகிய தெய்வீகத்தால் உயர்த்தப்பட்டு, தெய்வீகமானவையாக ஆக்கப்பட முடியும். 

அப்போதுதான் இந்த இரண்டில் இருந்தும் பிறக்கும் செயல்கள் இந்த இரு தத்துவங்களின் குணங்களையும் தங்களில் கொண்டிருக்கும். அந்தச் செயல்கள் முற்றிலுமாக கடவுளின் செயல்களாக மட்டுமோ, அல்லது மனிதனின் செயல்களாக மட்டுமோ இருக்காது. மாறாக, அவை இரண்டு சுபாவங்களின் ஐக்கியத்தின் விளைவாக, தேவ-மனிதச் செயல்களாக இருக்கும்.

இத்தகைய ஐக்கியம் சாத்தியமா? கடவுள் தம் சொந்தக் கைவேலையாகிய மனிதனைத் தமது சொந்த தெய்வீகத்தின் மகத்துவத்திற்கு உயர்த்துவதற்காக, மனிதனின் மட்டத்திற்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்வது அவருடைய தெய்வீக மகத்துவத்திற்கு எதிரானதாக இல்லையா? நிச்சயமாக இல்லை! மாறாக. இது அதற்கு நேர்மாறானதாகத்தான் இருக்கிறது. 

அர்ச். பொனவெந்தூர் சொல்வது போல, அது கடவுளின் மகத்துவ மேன்மையையும், உத்தமதனத்தையும், அதைவிட மேலாக அவருடைய அளவில்லாத நேசத்தையும் வெளிப்படுத்துகிறது. ஏனெனில் நித்திய நல்லவராக இருக்கிற கடவுள், சிருஷ்டியானது நன்மைத்தனத்தில் தமக்கு அளவற்ற விதமாய்த் தாழ்ந்ததாக இருந்தாலும், கால நிறைவில் அந்த சிருஷ்டிக்குத் தம் நன்மைத்தனத்தைத் தருவதில் தமது மகத்துவத்திலிருந்து எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. இதன் மூலம் அவரிடம் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. 

கடவுள் மாறாதவராகவே நிலைத்திருக்கிறார். மனிதனுக்கு அவர் காட்டும் அளவற்ற நன்மைத்தனத்தின் காரணமாக, அவருக்கு மனிதன் செலுத்தும் நன்றியறிதல், நேசம் மற்றும் மகிமையின் மூலம், ஒரு பேச்சு வகைக்கு, அவருடைய மகத்துவக் கடலில் ஒரு துளி அதிகரிக்குமே தவிர, அது குறைய வாய்ப்பேயில்லை. அவர் மாறாதவராக இருந்துகொண்டேதான் மனிதனைத் தம் தெய்வீகத்துக்கு உயர்த்துகிறார். 

இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு காரியத்தை நாம் சிந்திக்க வேண்டும். இன்னும் மனிதன் படைக்கப்படவில்லை என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். இங்கே ஒரே சமயத்தில், கடவுளை ஆராதிக்க வல்ல சிருஷ்டியாகவும், கடவுளுக்கு அளவற்ற, தகுதியுள்ள ஆராதனை செலுத்த வல்ல சிருஷ்டிகராகவும் இருக்கிற ஒரு தேவ-மனித ஆளை உருவாக்குவது பற்றிய கடவுளின் திட்டமிடுதலைப் பற்றித்தான் நாம் தியானித்துக்கொண்டிருக்கிறோம். 

இந்த தேவ-மனித ஆள்தான் கடவுளின் முதல் சிருஷ்டியாகப் படைக்கப்பட இருக்கிறார். அவர் கடவுளும் மனிதனுமாக உலகில் வந்து பிறப்பதற்காகவே மனித இனம் படைக்கப்பட இருக்கிறது. இந்த தேவ ஆளின் தெய்வீகத்திற்கு உயர்த்தப்பட வேண்டியதாக இருக்கிற மனித சுபாவத்தைப் பொறுத்த வரை, அது கடவுளோடு ஒன்றித்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய வகையான சிருஷ்டியாக இருக்க முடியாது. 

அதாவது, இந்த முதல் சிருஷ்டியாகிய தேவ-மனிதருக்குள் ஒரு தேவ ஆளும், ஒரு மனித ஆளும் இருக்க முடியாது. அப்படி இருந்தால், அந்த முதல் சிருஷ்டி உண்மையில் தெய்வீகத்துடனான ஐக்கியத்திற்கு அந்நியமானவராக, அதற்கு வெளியே இருப்பவராக, ஆகிவிடுவார். இதன் காரணமாக, அவர் கடவுளுக்கு ஓர் அளவற்ற மகிமையைத் தர இயலாதவராகவும், தெய்வீக நன்மைத்தனத்தின் முழுமையில் பங்குபெற இயலாதவராகவும், அதனால் கடவுளுக்கு ஓர் அளவற்ற மகிமையைத் தர இயலாதவராகவும் ஆகிவிடுவார். 

ஆகவே, சிருஷ்டிகருக்கு ஆராதனையும் துதியும் நன்றியறிந்த தோத்திரமும், நேசமும் செலுத்துவதற்கு உரியதும், சிருஷ்டியை அதன் இயல்பான, திறனற்ற நிலையிலிருந்து காப்பாற்றுவதற்குமான ஒரே வழி, பகுத்தறிவுள்ள சிருஷ்டி போன்ற, சிருஷ்டிப்பின் ஒரு மேலான வகையினின்று பெறப்பட வேண்டும். சம்மனசுக்களும், மனிதர்களும் இந்தப் பகுத்தறிவுள்ள சிருஷ்டிகளாக இருக்கிறார்கள் என்றாலும், இந்த ஐக்கியம் சம்மனசுக்களின் சுபாவத்தில் அல்லாமல், மனிதர்களின் சுபாவத்தில் செய்யப்பட வேண்டும். 

இல்லாவிடில்,  உயர்த்தப்படுதலும், தெய்வீகமாக்கப்படுதலும் அரூபிகளின் சுபாவத்தோடு நின்று விடும். அப்போது மனிதன் உட்பட சடப்பொருளாகிய உடலோடு சேர்ந்து, தாழ்நிலையிலுள்ள எல்லா சிருஷ்டிகளும் இந்த ஐக்கியத்திலிருந்து தவிர்க்கப்பட்டு, இந்த ஐக்கியத்திற்கு வெளியேயே தங்கிவிடும். இதனால் அவை தங்கள் சிருஷ்டிகரை மகிமைப்படுத்துவதில் பங்கெடுக்க இயலாதவையாக ஆகிவிடும்.

யாரோடு இந்த ஐக்கியம் செய்யப்பட வேண்டியிருந்ததோ, அந்த தேவ ஆளைப் பொறுத்த வரை, சிருஷ்டிப்பின் இயல்பான மத்தியஸ்தராக இருக்கிற தேவ சுதனாகிய வார்த்தையானவரைத் தவிர அந்த நிலைக்கு அதிகப் பொருத்தமானவர் வேறு யாருமில்லை. பிதாவின் வல்லமையுள்ள உத்தம மாதிரி என்ற முறையில் அவர் வழியாகவே அனைத்தும் உண்டாக்கப்பட்டன.

வார்த்தையானவர் ஒரு மனித ஆளைத் தம்மோடு சேர்த்துக்கொள்ள முடியாதவராக இருந்தார். அவர் ஒரு சரீரத்தையும், ஓர் ஆத்துமத்தையும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவ சித்தத்தைப் போலவே, ஒரு மனித சித்தத்தையும் அவர் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும். 

ஆனால் மனித ஆள்தன்மை ஒன்றை அவர் எடுத்துக்கொள்ள முடியாது. அப்படிச் செய்தால், அது ஒரு முழுமையான, நிறைவான, தெய்வீகச் சார்பற்ற செயலாக ஆகிவிடும். அது ஆராதிப்பவரின் ஐக்கிய நிலையை அழித்து விடும். ஏனெனில் அந்நிலையில் வார்த்தையானவர் ஒரு மனித சுபாவத்தை முழுவதும் தனிப்பட்டவராகிய ஓர் ஆளில் கொண்டிருப்பார். அந்த மனித ஆளோ, தம்மிடம் தெய்வீகம் இல்லாததால், கடவுளைத் தகுதியுள்ள முறையில் ஆராதிக்க இயலாதவராக இருந்திருப்பார். 

இந்நிலையில் கிறீஸ்துநாதரிடம் ஒரு தேவ ஆளும், ஒரு மனித ஆளும், தனித்தனியாக இருந்திருப்பார்கள். இரண்டு தனித்தனி ஜீவியர்களை, இரண்டு ஆட்களை நாம் கொண்டிருந்திருப்போம். ஆனால் ஒரே ஆள்தன்மையில் இரண்டு சுபாவங்களைக் கொண்டிருக்கிற தேவனும் மனிதனுமானவரை நாம் கொண்டிருந்திருக்க மாட்டோம். மனிதனின் செயல்களைத் தெய்வீகமாக்குவதாகிய சுய ஐக்கியம் அங்கே இருந்திருக்காது. அளவற்ற ஆராதனைக்கும் வாய்ப்பில்லாமல் போயிருக்கும். 

ஒரே வார்;த்தையில் கூறுவதானால், வார்த்தையானவர் மெய்யங்கடவுளிடம் இருந்து மெய்யங்கடவுளாக ஜெனிக்கிறவராக இருப்பது போலவே, மெய்யான மனிதனிடம் இருந்து மெய்யான ஒரு மனிதப் பெண்ணிடமிருந்து மெய்யான மனிதனாக ஆகும்படி தம்மையே தாழ்த்திக் கொள்வதும், அவரது மனித சுபாவம் தனக்குச் சொந்தமான ஒரு புதிய ஆள்தன்மையைக் கொண்டிராமல், வார்த்தையானவரின் ஆள்தன்மையில் அடங்கியிருக்கும் சுபாவமாக இருப்பதும் மனிதாவதாரத் திட்டத்திற்கு அவசியமாக இருந்தது.

இப்படி தேவ சுதனாகிய வார்த்தையானவரின் தெய்வீக ஆள்தன்மையில் உள்ள தேவ சுபாவத்திற்கு, ஒரு மனிதப் பெண்ணிடமிருந்து அவர் பெற்றுக்கொள்ளும் மனித சுபாவம் அடங்கியிருப்பதையும், இணைந்திருப்பதையுமே நாம் வார்த்தையானவருடைய மனிதாவதாரம் என்று அழைக்கிறோம். இந்த மனிதாவதாரத்தின் நோக்கங்கள்:

1. கடவுளுக்குத் தகுதியுள்ள ஆராதனை செலுத்தும்படியாக, தேவ சுபாவத்தையும்;, கடவுளுக்கு ஆராதனை செலுத்தக் கூடியதாக இருக்கும்படி மனித சுபாவத்தையும் தம்முள் இணைத்துக் கொண்டுள்ள ஒரு தேவ-மனிதன் படைக்கப்படுவது.

2. அந்த தேவ மனிதரோடு ஒன்றிக்கப்படும் ஒவ்வொரு மனிதனுடையவும் ஆராதனையும், துதியும், நன்றியறிந்த தோத்திரமும், நேசமும் அவர் வழியாகக் கடவுளுக்குத் தகுதியுள்ளவையாக ஆக்கப்படுவது. இந்த முறையில் மனிதர்கள் ஒவ்வொருவரும் அந்த தேவ மனிதர் வழியாக தெய்வீகத்திற்கு உயர்த்தப்படுவது. 

இந்த தேவ-மனித ஒன்றிப்பாகிய மனிதாவதாரத்தின் அற்புத விளைவுகளை அடுத்த கட்டுரையில் காண்போம்.