பரிசுத்த கைகள்

உன் சரீரம் இஸ்பிரீத்து சாந்துவின் ஆலயம். அதன் எல்லா அவயவங்களும் பரிசுத்தமானவை. சர்வேசுரனுக்கு மகிமை செலுத்தப் படைக்கப்பட்டவை. ஆனால் எல்லா வற்றையும்விட உன் கைகளே ஆண்டவரை மகிமைப்படுத்த முன் நிற்க வேண்டும்.

சர்வேசுரனின் ஊழியத்தில் அவைகளை உபயோகி; அவருக்காக உழைக்கப் பிரயாசைப்படு. அவருக்குப் பிரியமான செய்கைகளை மட்டுமே செய்து ஓயாமல் அவரைப் புகழ வேண்டும். ஆகையால் உன் கைகள் பாவத்தால் கறைபடாமல், மாசின்றி பரிசுத்தமாய் சர்வேசுரனுக்கு உகந்தவையாக இருக்கட்டும்.

தேவ ஆராதனையில் கைகள் விசேஷவிதமாய்ப் பங்கெடுக்கின்றன. ஜெபிக்கும் போதும், நற்கருணை வாங் கும் போதும், ஆண்டவரை ஆராதிக்க உன் கைகளை ஒன்று சேர்க்கிறாய். எப்போதும் அந்த ஆராதனையில் உன் கைகள் ஒன்றித்திருப்பதாக. அதாவது கைகள் செய்யும் கிரிகைகள் எல்லாம் சர்வேசுரனுக்குப் பிரியமாயிருக்கட்டும்.

நன்மை வாங்கின பிறகு உன் இருதயத்தருகே கைகளைக் கட்டிக்கொண்டு சேசுவை அரவணைக்கிறாய். இதே கைகள் ஆண்டவரை அணைக்கும் கைகள், பாவம் செய்து அவரை அடிக்கப் போகுமா?

அர்ச். தோமையாரை அனுமதித்தது போல் மோட் சத்தில் சேசு தம்மைத் தொடும்படி உன்னையும் அனுமதிப் பார். காயப்பட்ட கைகளையும், கால்களையும், ஈட்டியால் திறக்கப்பட்ட விலாவையும், திரு இருதயத்தையும் கூடத் தொடும்படி உன்னை விட்டுவிடுவார். ஆ ஆண்டவரின் திரு இருதயத்தைத் தொட வேண்டுமானால், நமது கைகள் எவ்வளவோ பரிசுத்தமாயிருக்க வேண்டும்.

சேவகர்கள் சேசுவைச் சிலுவையில் கிடத்தி, அவரது வலது கையில் இருப்பாணியை வைத்து, கொடூரமாய் சுத்தியலால் அடித்து, சிலுவையில் அறைந்தார்கள். அந்த ஆணி சேசுவின் கையின் தோலையும் சதையையும் கிழித்து ஊடுருவினது. என்ன வேதனை! பிறகு அதே கொடுமை யோடு இடது கையையும் அறைந்தார்கள்.

"சேசுவே உமது கைகள் ஏன் இவ்வளவு கொடூரமாய் அறையப்பட்டன?'' சேசு பதிலளிக்கிறார்: ''உன் கைகளால் கட்டிக் கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக.'' இப்பதில், நீ பாவங் கட்டிக்கொள்ளாதபடி உன்னைத் தடுக்க வேண்டும்.

உன் மனதில் பாவ நினைவு வந்தால், சிலுவை அருகில் சென்று இரத்தம் வடியும் சேசுவின் கைகளை முத்தி செய்து அவரிடம் சொல்: "திரும்பவும் என் பாவத்தால் உமது கைகளை சிலுவையில் அறைய மாட்டேன்'' என்று.

சேசுவே, சிலுவையில் அறையப்பட்ட உமது கைகளின் வேதனையால் என் கைகளைப் பரிசுத்தமாக்கும். ஜெபத்தில் எப்போதும் அவைகள் ஒன்றித்திருக்கும்படி செய்தருளும்; அவற்றின் சகல செய்கைகளும் புனிதமாயும் பரிசுத்தமாயும் இருக்கக் கடவன.