மனிதனுடைய சரீரம்

1. மனிதர்கள் தாமாகவே உண்டானார்களோ? 

இல்லை; சர்வேசுரன் அவர்களை உண்டுபண்ணினார்.


2. முதன்முதல் சர்வேசுரன் எத்தனை மனிதரை உண்டு பண்ணினார்? 

ஒரே ஒரு மனிதனை உண்டுபண்ணினார்.


3. எத்தனை வருஷத்துக்கு முன் முதல் மனிதனைச் சர்வேசுரன் படைத்தார்? 

பொதுவாய்ப் பலர் எண்ணுவதுபோல், சுமார் ஆறாயிரம் வருஷத்துக்கு முன் படைத்தார்.


4. அவனை எப்படி உண்டாக்கினார்? 

சர்வேசுரன் ஓர் சரீரத்தை மண்ணால் உருவாக்கி, அதன் மேல் தமது தேவ ஆவியை விட்டு, தமது சாயலான ஓர் ஆத்துமத்தை உண்டாக்கி, அதைச் சரீரத்தோடு ஒன்றித்து முதல் மனிதனைச் சிருஷ்டித்தார் (ஆதி. 2:7).


5. மண்ணான அவனுடைய சரீரம் எவ்வாறு மாற்றப்பட்டது?

மாம்சம், இரத்தம், நரம்பு, எலும்பு முதலியவற்றை உடைய சுதந்தரமான ஒரு மனிதனாக மாற்றப்பட்டது.


6. ஒன்றுமில்லாமையிலிருந்து ஒரு வஸ்துவை உண்டாக்குவது படைப்பு என்று சொல்லப்படும்.  இதிப்படியிருக்க, சர்வேசுரன் முதல் மனிதனை மண்ணாலே உண்டாக்கினதினாலே அவனைச்  சிருஷ்டித்தாரென்று எப்படிச் சொல்லலாம்?

சர்வேசுரன் தம்மாலே முன்னேயே ஒன்றுமில்லாமை யிலிருந்து படைக்கப்பட்டிருந்த மண்ணைக் கொண்டு முதல் மனிதனைப் படைத்தபடியினாலே, அவனைச் சிருஷ்டித்தாரென்று சொல்லுகிறது முழு நியாயமே.


7. மனிதனைச் சர்வேசுரன் மண்ணால் உண்டுபண்ணியது ஏன்?

மனிதன் புத்தியுள்ளவனும், நன்மை தின்மை அறியக் கூடிய சிறந்த வஸ்துவாயுமிருப்பதினால், அவன் ஆங்காரம் கொண்டு கெடாதபடிக்கு மண்ணால் அவனை உண்டாக்கினார்.


8. சர்வேசுரன் ஆதிமனிதனுக்கு இட்ட பெயர் என்ன?

ஆதாம்.


9. முதன்முதலில் சர்வேசுரன் எத்தனை மனுஷிகளை உண்டாக்கினார்?

ஒரே ஒரு மனுஷியை உண்டாக்கினார்.


10. அவளையும் மண்ணால் உண்டாக்கினாரோ?

இல்லை. ஆதாமுக்கு நித்திரை வருவித்து, அவனுடைய விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து, அதை மனுஷி உருவாகச் செய்து, அதோடு ஒரு ஆத்துமத்தை ஒன்றித்து முதல் மனுஷியைச் சிருஷ்டித்தார் (ஆதி.11:21).


11. சர்வேசுரன் முதல் மனுஷியை முதல் மனிதனுடைய விலா எலும்பிலிருந்து உண்டுபண்ணுவதற்குக் காரணம் என்ன?

கணவன், மனைவியாகிய இருவரும், உயிரும் உடம்பும் போல் ஒன்றித்திருக்க வேணுமென்றும், கணவன் தன் மனைவியை ஒரு அடிமை போல் நடத்தாமல், சகலத்திலும் தனக்குச் சமமானவளாகப் பாவித்து, பட்ச அன்புடன் நேசித்து நடக்க வேண்டு மென்றும், பெண்சாதி புருஷனுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டு மென்றும் தெரியப்படுத்தும்படி, மனிதனுடைய விலாவினின்று மனுஷியைச் சர்வேசுரன் உண்டுபண்ணச் சித்தமானார்.


12. முதல் மனுஷியின் பெயர் என்ன? 

ஏவாள்.


13. ஏவாள் என்கிற பதத்துக்கு அர்த்தமென்ன? 

எபிரேய பாஷையில் உயிர் கொடுப்பவள் என்று அர்த்தம்.


14. முதல் பெண்ணுக்கு ஏவாள் என்கிற பெயர் இட்டவன் யார்? 

ஆதாம்.  “பிறகு ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனெனில், அவள் உயிருள்ளோருக்கெல்லாம் தாயானவள்” (ஆதி. 3:20).


15. சர்வேசுரனால் உண்டாக்கப்பட்ட முதல் மனிதனையும்  முதல் மனுஷியையும் நாம் எப்படி அழைக்கிறோம்?

இவர்களை நமது ஆதித்தாய், ஆதித்தகப்பன் என்று அழைக்கிறோம்.


16. இவர்களை ஏன் நமது ஆதித்தாய், ஆதித் தகப்பனென்று அழைக்க வேண்டும்?

ஏனென்றால், எல்லா மனிதர்களும் இவ்விருவர்களுடைய சந்ததியாயிருக்கிறார்கள்.


17. இப்போது பிறக்கிற மனிதரைச் சர்வேசுரன் படைக்கிறாரா?

இப்போது பிறக்கிற மனிதருடைய சரீரத்தைச் சர்வேசுரன் படைக்கிறதில்லை. தாய் தகப்பன் அவரிடத்திலிருந்து பெற்றிருக் கிற சக்தியினால் குழந்தையின் சரீரம் உருவாகிறது.  இது உற்பவித்த கணத்தில், சர்வேசுரன் ஆதாமின் ஆத்துமத்தை உண்டுபண்ணினது போலவே, குழந்தையின் ஆத்துமத்தைச் சிருஷ்டித்து, இந்தச் சரீரத்தோடு சேர்த்து, மனிதனை உண்டாக்குகிறார்.


18. மனிதனுடைய சரீரம் மண்ணினின்றும், அவனுடைய ஆத்துமம் சுவாமி ஆவியினின்றும் உண்டாக்கப்பட்டிருக்க, நாம் என்ன தீர்மானிக்க வேண்டும்?

சரீரத்தை விட நமது ஆத்துமத்தை மேலாக மதித்து, சரீரத்தைப் பார்க்கிலும் அதைக் காப்பாற்றி, சரீர ஆபத்தை விட ஆத்துமத்தின் நஷ்டத்திற்கு அதிகமாய்ப் பயப்பட வேண்டியது.


சரித்திரம்

அர்ச். பிரான்சிஸ் சவேரியார் வாலிப வயதில்  பாரீஸ் பட்டணத்தில் பல்கலைக்கழகத்தில் படித்து, அதில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். சவேரியாருடைய புத்திக் கூர்மையும் ஞானமும் சிறந்ததாயிருந்தபடியால் அநேக சீ­ர்கள் அவருடைய படிப்பினை யைப் பின்சென்றார்கள். ஆகையால் அவர் மேலான உத்தி யோகங்கள், புகழ்ச்சிகள், மேன்மை இவைகளை அடைய வேண்டு மென்று ஆசித்துக் கொண்டிருந்தார். அவர் இவ்வாறிருக்கையில், அப்பட்டணத்தில் கல்வி சாஸ்திரங்களைப் படித்துக் கொண்டிருந்த அர்ச். இஞ்ஞாசியார் அவருக்கு அறிமுகமானார்.  அவர் சவேரியா ரிடம் விளங்கின பக்தியையும், சிறந்த குணங்களையும், பரிசுத்த தனத்தையும் கண்டு, அவரைச் சர்வேசுரனுடைய ஊழியத்துக்குக் கொண்டுவர தீர்மானித்தார்.  அதற்காக அவர் சவேரியாருக்கு விசே­ பிரசங்கம் செய்யவில்லை;  ஆனால் அவரைப் பார்க்கும் போதெல்லாம்: “மெய்யாகவே மனிதன் உலகமெல்லாம் தன் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமத்தை இழந்து போனால் அவனுக்குப் பிரயோசனமென்ன?” என்று சொல்வது வழக்கம்.  நமதாண்டவர் சொன்ன அந்த யோசனை (மத். 16:26) சவேரியாருடைய மனதில் ஆழமாய்ப் பதிந்ததினால், அவர் வரப் பிரசாதத்தின் ஏவுதலுக்கு இணங்கி, மனந்திரும்பி, இவ்வுலகத்தைத் துறந்து, சேசு சபையில் சேர்ந்து இந்தியாவின் அப்போஸ்தலரும், பெரிய அர்ச்சியசிஷ்டவருமானார் (இவர் சரித்திரம்).