மனிதனுடைய ஆத்துமம்

36. மனித ஆத்துமம் என்பதென்ன?

மனித சரீரத்தோடு இணைக்கப்படும்படி அரூபி யாகவும் தேவ சாயலாகவும் உண்டாக்கப்பட்டு, புத்தியும், அறிவும், மனச் சுதந்திரமுமுள்ள ஓர் அழியாத வஸ்துவாம்.


1. இந்தப் பதிலில் எத்தனை விசேஷங்கள் குறிக்கப்பட்டிருக் கின்றன?

ஆறு.  ஆத்துமமானது:

(1) ஒரு அரூபியான வஸ்து,

(2) அழியாத வஸ்து,

(3) புத்தியும் அறிவும் மனச்சுதந்திரமுமுள்ளது,

(4) சர்வேசுரனால் உண்டாக்கப்பட்டது,

(5) தேவசாயலாகப் படைக்கப்பட்டது,

(6) சரீரத்தோடு ஒன்றித்திருக்கும்படியாக சிருஷ்டிக்கப்பட்ட வஸ்து.


2.  ஆத்துமமானது அரூபியாயிருக்கிறது என்பதன் அர்த்தம் என்ன?

ஆத்துமம் சரீரமில்லாமலும், பங்கு பாகமில்லாமலும், புத்தி மனமுடையதாயிருக்கிறதென்று அர்த்தமாகும்.


3. அரூபியாயிருக்கிற சம்மனசானவருக்கும் மனித ஆத்துமத்திற்குமுள்ள வித்தியாசம் என்ன? 

சம்மனசானவர் ஒரு சரீரத்தோடு சேர்ந்து ஒரே சுபாவமாய் ஒன்றிக்க முடியாது.  அவர் சுத்த அரூபியாயிருக்கிறார். ஆத்துமமோ ஒரு சரீரத்தோடு ஒன்றித்திருக்கும்படி சிருஷ்டிக்கப்பட்டதே. ஆகையால் அது அரூபியாயிருக்கிறதாகச் சொன்னாலும், சுத்த அரூபியல்ல. 


4. ஆத்துமம் அழியாத வஸ்து என்பதற்கு அர்த்தம் என்ன?

சரீரம் அழிவதுபோல், ஆத்துமம் ஒருபோதும் அழியாது, அது சரீரத்தைவிட்டுப் பிரிந்த பிற்பாடும் சீவிக்கும்.


5. ஆத்துமம் ஒரு அழியாத வஸ்து என்று எப்படி நமக்குத் தெரியும்? 

(1) ஆத்துமம் சரீரமில்லாததும், பங்குபாகமில்லாததுமான ஞான வஸ்து ஆனதினால், அழிந்துபோகக் கூடாததாயிருக்கின்றது.

(2) நம்முள்ளத்தில் உண்மையையும், பாக்கியத்தையும் தேடும் ஓர் தீராத ஆசையைச் சர்வேசுரன் வைத்திருக்கிறார். இவ்வுலகத்திலுள்ள எப்பொருளும் அந்த ஆசையைத் தணிக்க முடியாது.  ஆதலால், மறுலோகத்தில்தான் அதற்குத் தகுந்த பொருள் கிடைக்க வேண்டும். ஆத்துமம் அழியும் வஸ்துவாயிருந்தால், சுவாமி இந்த ஆசையைக் கொடுத்து நம்மை ஏமாற்றினாரென்று சொல்ல வேண்டியிருக்கும்.

(3) இவ்வுலகத்தில் புண்ணியவான்களுக்குத் தகுந்த சம்பாவனை கிடைப்பதைக் காண முடியவில்லை. ஆத்துமம் நித்தியமாயில்லாவிட்டால், சர்வேசுரன் புண்ணியவான்களுக்குத் தகுந்த நீதி செலுத்தவில்லையயன்று சொல்ல வேண்டியிருக்கும்.


6. ஆத்துமம் அழியாத வஸ்துவாயிருக்க, அதின் சாவைப் பற்றி ஏன் பேச வேண்டும்?

ஏனென்றால், ஆத்துமத்துக்குச் சுபாவ உயிரைத் தவிர தேவ இஷ்டப்பிரசாதமாகிய ஞான உயிர் இருக்கின்றது.  சாவான பாவத்தால் தேவ இஷ்டப்பிரசாதம் போக்கடிக்கப்படும்போது, நமது ஆத்துமம் அந்த ஞான உயிரை இழந்துபோய் ஒரு பிரேதம் போல் இருக்கின்றது.


7. சர்வேசுரன் ஆத்துமத்தை நிர்மூலமாக்க முடியுமா?

முடியும்.  ஆனால் அவர் ஒருக்காலும் அதை அழிக்க மாட்டார்.  ஏனெனில், அவரே அந்த அழியாத சுபாவத்தை அதற்குக் கொடுத்திருக்கிறதுமன்றி, முன் சொன்னபடி முடிவில் லாத பாக்கியத்தின் பேரிலும் அதற்கு ஆசையை மூட்டி, நீதிமான்களுக்கு நித்திய சம்பாவனையும், பாவிகளுக்கு நித்திய ஆக்கினை யையும் அளித்தருளுவோம் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.


8. ஆத்தும சத்துவங்கள் எத்தனை?

மூன்று.  அவைகளாவன:  புத்தி அறிவு, மனச் சுதந்திரம், ஞாபகமாம்.


9. புத்தி அறிவு என்றால் என்ன?

அறியக்கூடியது எல்லாவற்றையும் உணர்ந்து, கண்டு பிடிக்கச் செய்யும் சக்தியாம்.


10. மனச்சுதந்திரம் என்றால் என்ன?

தன் இஷ்டப்படி ஒரு காரியத்தைச் செய்யவும், செய்யாமலிருக்கவும், ஒன்றை விரும்பவும், விரும்பாலிருக்கவும் செய்யும் சக்தியே மனச்சுதந்திரமாம். ஆனதினால்  இரண்டு காரியங் களில் ஒன்றைத் தெரிந்து கொள்ள நம்மால் முடியும்.


11. ஞாபகம் என்றால் என்ன? 

அறிந்து கொண்டவைகளையும், நடந்த எண்ணங் களையும், காரியங்களையும் புத்தியில் வைத்துக் காப்பாற்றி மறுபடியும் நினைவுகூறச் செய்யும் சக்தியாம்.


12. ஆத்துமம் தானாயிருக்கிறதா? 

இல்லை.  அது சர்வேசுரனால் உண்டாக்கப்படுகிறது.


13. சர்வேசுரன் மனித ஆத்துமத்தை எப்போது உண்டு பண்ணுகிறார்? 

சரீரத்துக்கு முன் ஆத்துமமிருக்கிறதில்லை.  ஆதித்  தாய் தகப்பனை சிருஷ்டிக்கும் சமயத்தில், சர்வேசுரன் அவர் களுடைய ஆத்துமத்தை உண்டாக்கினார்.  இப்போது குழந்தை எப்போது உற்பவிக்குமோ, அப்போதே சர்வேசுரன் அதன் ஆத்து மத்தை யாதொரு பொருளின் உதவியில்லாமல் ஒன்றுமில்லாமை யிலிருந்து தமது தேவ சித்தத்தினால் சிருஷ்டித்து, அதைச் சரீரத்தோடு சேர்த்து ஒன்றிக்கிறாரென்பது சத்தியம்.


14. நமது ஆத்துமம் யாருடைய சாயலாக உண்டாக்கப்பட்டிருக் கிறது? 

சர்வேசுரனுடைய சாயலாக உண்டாக்கப்பட்டிருக்கிறது.


15. எப்படி நமது ஆத்துமம் சர்வேசுரனுடைய சாயலாயிருக்கிறது?

(1) மனித ஆத்துமம் சர்வேசுரனைப் போல் அரூபியும், அறிவுள்ளதும், சுயாதீனமுள்ளதும், சாக முடியாததுமான வஸ்து.

(2) சர்வேசுரன் சுபாவ வகையில் ஒருவராயிருந்த போதிலும், ஆள்வகையில் மூவராயிருக்கிறார்; அதுபோலவே ஆத்துமம் ஒரு பொருளாயிருந்தாலும், புத்தி, மனது, ஞாபகமாகிய மூன்று தத்துவங்களைக் கொண்டிருக்கிறது.

(3) சுபாவத்துக்கு மேலான நிலையில் ஆத்துமத்தை உயர்த்தி, அதைத் தேவ சீவியத்துக்குப் பங்காளியாக்குகிற தேவ இஷ்டப் பிரசாதம்தான் விசே­மாய் அதற்குத் தேவ சாயலைக் கொடுக்கிறது.


16. சர்வேசுரன் ஏன் ஆத்துமத்தை உண்டாக்குகிறார்? 

சரீரத்தோடு ஒன்றித்திருக்கும்படி சர்வேசுரன் ஆத்துமத்தை உண்டாக்குகிறார். ஆகையினாலே ஆத்துமமும் சரீரமும் ஒன்றாய்க் கூடிய மனித சுபாவம் உண்டாகிறது.