அர்ச். அவிலா தெரேசம்மாள் இறந்தவுடன் நடந்த அற்புதங்கள்!

திவ்விய ஆண்டவருக்குப் பிரபலமான முறையில் ஊழியம் செய்தவர்களில் யாராவது ஒருவர் பூலோகத் திருச்சபையை விட்டு எடுக்கப்படப்போகும் தருணத்தில், இந்தச் சம்பவத்தை முன்னுணரச் செய்வதும், சில முன்னடையாளங்களால் அறிவிப்பதும் அவருக்கும் வழக்கம்தான். இந்தப் புனிதையின் மரணம் நிகழுமுன், கோவிலின் மேலே மிகுந்த சுடர் வீசும் பெரிய நட்சத்திரம் ஒன்றை அவள் நிறுவிய ஆல்பா மடத்துக் கன்னியர் பல தடவைகள் பார்த்தார்கள். பளிங்குக்கு ஒப்பான மிகுந்த பிரகாசமும், அழகும் உள்ள ஒளிக்கதிர் ஒன்று புனிதை உயிர்விட இருந்த அறையின் ஜன்னலுக்கு எதிரே நகர்ந்து செல்வதை ஒரு நாள் காலையில் எட்டு, ஒன்பது மணிகளுக்கு இடையில் மற்றொரு கன்னிகை கண்டாள். அந்த அறையின் சன்னலில் இரண்டு தீப்பந்தங்கள் மிகுந்த வெளிச்சத்தோடு எரிவதை மற்றொரு கன்னிகை கண்டாள். புனிதை மரணமடைந்த வருடத்தில், கன்னியர் நடுச்சாம செபம் செய்யும்போதும், தியானத்தில் இருக்கும்போது, பல முறை செபக் கூடத்தில் ஒரு விதப் பிரகாசத்தைக் கண்டார்கள்.  தெரேசா தாயார் ஆல்பாவுக்கு வருமுன், கோடை காலத்தின்போது கன்னியர் தியானத்தில் இருந்த சமயத்தில், மெதுவானதாயினும் மிக இனிய இசை போன்ற பெருமூச்சு ஒன்று அவர்களுக்கு அருகில் கேட்டது. தாயார் உயிர்விட்டபோது எழுந்த கடைசி மூச்சின் இனிய ஒலியை அவர்கள் கேட்டபோது, முன்பு தியானத்தின்போது தாங்கள் கேட்ட மூச்சு அதுவே என்னும் ஞாபகம் அவர்களுக்கு வந்தது. 

வெளிப்படையான புண்ணியவதியாக இருந்த ஒரு கன்னிகை நோயாளிகளைப் பராமரிக்கிற பணியில் இருந்தாள். அவள் புனிதையின் சிற்றறையில்,  அடைபட்ட இடத்துக்கு எதிரேயிருந்த சன்னலுக்கு அருகாமையில் உட்கார்ந்திருந்தபோது, பெரிய கூட்டமான மனிதர்கள் அக்களிப்போடு நடந்து வந்தது போன்ற பெரும் சத்தத்தைக் காதால் கேட்டதுமன்றி, வெண்ணாடை அணிந்து ஒளிவீசிய பலர் அடைபட்ட பகுதியின் வழியாகப் போவதையும் கண்டாள். அவர்கள் மோட்சப் பேரின்பம் சுடர்வீசும் முகங்களோடு அதில் நுழைந்தார்கள். அவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக இருந்ததெனில் அங்கே கூடியிருந்த கன்னியர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போயிற்று. அவர்கள் புனிதை படுத்திருந்த கட்டிலின் அருகில் வரவும், அதே கணத்தில் அவளுடைய உயிர் பிரியவும் சரியாக இருந்தது என்பதால், அவர்களே அவளுக்கு எதிர்கொண்டு வந்து, அவளை மோட்சத்திற்குக் கூட்டிச் சென்றார்கள் என்பது விளங்குகிறது. 

புனிதை உயிர்விட்டபோது, அவளுடைய வாயினின்று வெண்மையான மாடப்புறாவின் உருவம் புறப்பட்டதை வேறொரு கன்னிகை பார்த்தாள் என்பதால், தெய்வீக மணவாளர் அவ்விடத்தில் பிரசன்னமாயிருந்து: ""என் காதலியே, என் மாடப்புறாவே, முற்றும் அழகு செளந்தரியமுள்ளவளே, எழுந்து தீவிரித்து வருவாயாக'' என்னும் (உன்னத சங்கீத) வாக்கியங்களைக் கூறியதாகத் தோன்றுகிறது. பளிங்குக்கு ஒப்பான ஒரு பெரும் பிரகாசத்தை அந்த அறையின் சன்னலுக்கு அருகில் மற்றொரு கன்னிகை கண்டாள். 

அர்ச். ஜெர்த்ரூத் மரணமடைந்தபோது, நமது ஆண்டவர் தமது வலது பக்கத்தில் தமது மிகப் பரிசுத்த மாதாவோடும், இடது பக்கத்தில் அப்போஸ்தலரும் சுவிசே­கருமான அர்ச். அருளப்பரோடும் எழுந்தருளி வந்தார் என்றும்,  அவர்களுக்குப் பின்னால் ஆணும் பெண்ணுமான திரளான புனிதர்களும், குறிப்பாக வெண்ணாடை அணிந்த கன்னியர் சேனையும் வந்து மடத்தில் கன்னியருக்கு நடுவில் அன்று முழுவதும் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகையால், வெண்ணாடை அணிந்து நமது புனிதையின் அறையில் நுழைந்த பரலோகவாசிகள் பரிசுத்ததனத்தில் சிறந்த கன்னிகையும், பல கன்னிப்பெண்களுக்குத் தாயாருமாயிருந்த அவளைக் கூட்டிக்கொண்டு போக வந்த கன்னியரின் சேனைதான் என்று நம்ப நாம் விரும்புகிறோம். 

இன்னொரு நிகழ்ச்சியையும் நாம் கூற வேண்டும்: பத்தாயிரம் வேதசாட்சிகளின் மீது தான் கொண்டிருந்த பக்தியோடு, புனிதை அவர்களுடைய திருநாளைக் கொண்டாடிய ஒரு நாளன்று, அவர்கள் அவளுக்குக் காட்சி தந்து, அவளுடைய மரண வேளையில் வந்து உதவி செய்யவும், மோட்சத்தில் தாங்கள் அனுபவிக்கும் அவ்வளவு மகிமையை அவளும் அனுபவிக்கும்படி அவளைக் கூட்டிக்கொண்டு போகவும் வருவதாக அவளுக்கு வாக்களித்தார்கள். இப்போது நாம் விளக்கிக் கூறிய காரியத்தால், அந்தப் பத்தாயிரம் வேதசாட்சிகளே நமது புனிதையைச் சந்திக்க வந்தார்கள் என்று தோன்றுகிறது. 

இப்படிப்பட்ட காட்சிகள் புனிதர்களின் வரலாறுகளில் ஏராளம் உண்டு. வேதசாட்சியான அர்ச். ஏர்மெனேஜில்தின் சரீரத்திற்கு அருகில் பரலோக கீத வாத்தியங்களின் முழக்கம் இரவில் கேட்கப்பட்டதுமின்றித் தீப்பந்தங்களும் எரியக் கண்டார்கள். ஸ்பேஸ் என்ற மடாதிபதி உயிர்விட்டபோது, அவருடைய வாயினின்று ஒரு மாடப்புறா கிளம்பி மேற்கூரை வழியாகக் கடந்து வானத்தில் ஏறியதைக் கூட இருந்தவர்கள் பார்த்தார்கள். ஊர்சினுஸ் என்னும் குருவானவர் மரித்தபோது, அவருடைய ஆன்மாவை மோட்சத்திற்குக் கூட்டிப்போக அப்போஸ்தலர்களான அர்ச். இராயப்பரும் சின்னப்பரும் வந்தார்கள். புரோபுஸ் என்ற மேற்றிராணியார் உயிர்விடும்போது வெண்ணாடை அணிந்து ஜோதிப் பிரகாசத்தால் சூழப்பட்டிருந்த அர்ச். எலத்தேரும், ஜூவெனாலும் அவருடைய ஆன்மாவைப் பரலோகத்திற்கு அழைத்துப் போக வந்ததைக் கண்டார்கள். செர்வுலூஸ் என்பவர் கடைசி மூச்சு விடப்போகும் தறுவாயில், வானத்தில் பெரும் கீத முழக்கத்தைக் கேட்டு மரணமடைந்தவுடனே, அவருடைய சரீரத்திற்கு அருகில் மிக இன்பமான நறுமணம் வீசியது. உரோமுலா என்னும் ஒரு புண்ணியவதி அவஸ்தையாயிருந்தபோது, அவளுடைய அறையில் பெரிய வெளிச்சம் காணப்பட்டுத் திரளான மக்கள் கூட்டம் ஒன்று உள்ளே நுழைந்தது போலப் பெரும் இரைச்சல் கேட்கப்பட்டு, அக்கணமே மிக இன்பமான பரிமள வாசம் வீசி மூன்று நாட்கள் வரை நீடித்திருந்தது. நான்காம் நாள் இரவில் சம்மனசுக்கள் அவளுடைய அடக்கத்திற்கான ஏற்பாடு செய்யும் சத்தம் கேட்கப்பட்டது. அச்சமயத்தில்தான் அவள் உயிர்விட்டாள். அர்ச். கிரகோரியாருக்கு நெருங்கிய உறவினளான தார்சிலா சாகும் தருணத்தில் சேசுகிறீஸ்துநாதர் அவளுடைய ஆத்துமத்தை ஏற்றுக்கொள்ள எழுந்தருளி வந்தார். அப்போது மிக இனிமையான நறுமணம் வீசியதை அங்கே இருந்தவர்கள் அனுபவித்தார்கள். இந்த வரலாறுகள் எல்லாம் அர்ச். கிரகோரியாரே எழுதிய உரையாடல்கள் என்னும் புத்தகத்தின் மூன்றாம் பிரிவில் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

அர்ச். ஆசீர்வாதப்பர் சபைக் கன்னிகையான அர்ச். பத்தீல்தின் மரண வேளையில், மேற்றிராணியாரான அர்ச். ஜெனிசியுஸும், இன்னும் சில புனிதர்களும் அவளுடைய ஆத்துமத்தை மோட்சத்திற்குக் கூட்டிச் சென்றதையும், சம்மனசுக்கள் கீதம் பாடி அந்த ஆன்மாவைத் தங்கள் சிறகுகளின் மேல் வைத்துக்கொண்டு போனதையும் கன்னியர் அனைவரும் பார்த்தார்கள். அர்ச். இசபெல்லின் மரணத்தறுவாயில், அது வரையில் அறியப்படாத பறவைகள் கோவிலின்மேல் உட்கார்ந்து மிக அதிசயமான இன்னிசையைப் பாடிக்கொண்டிருக்கக் கண்டார்கள். 

அர்ச். அவிலா தெரேசம்மாள் சேசுவின் அர்ச். தெரேசம்மாள் என்றும் அர்ச். பெரிய தெரேசம்மாள் என்றும் அழைக்கப்படுகிறாள். 1582, அக்டோபர் 4‡ம் நாளன்று அவள் உயிர் விட்டவுடன் அவளுடைய முகம் வழக்கமாக இருந்ததை விட அதிக அழகுள்ளதாக மாறியது. அவளுக்கு முதிர்ந்த வயதால் முன்பு உண்டாயிருந்த சுருக்கங்கள் மாறிப் போயின. அவளுடைய திருச்சரீரம் மிக வெண்மையானதாக மாறியது. தசை சிறு குழந்தைகளின் தசைக்கு ஒப்பாக மிருதுவாயிற்று.  அவளுடைய உறுப்புகள் சிறு குழந்தையின் அவயவங்கள் போல மென்மையும் இணக்கமும் உள்ளவையாக இருந்தன. அவை புதுமையான அழகு பெற்று, மாசற்றதனத்துடையவும், அர்ச்சியசிஷ்டதனத்துடையவும் வெளிப்படையான அடையாளங்களைப் பெற்றுக்கொண்டன. 

வேறு எந்த சுபாவமான வாசனையோடும் ஒப்பிடப்பட முடியாத மிக இன்பமான நறுமணம் அவளுடைய உடல் முழுவதிலுமிருந்து புறப்பட்டது. இந்த நறுமணத்தின் இனிமையின் அடர்த்தி நேரத்திற்கு நேரம் கூடிக்கொண்டே போனதால், மற்றவர்கள் அதைத் தாங்கிக் கொள்வதற்காக அவளுடைய சரீரம் கிடத்தியிருந்த அறையின் சன்னலைத் திறக்க வேண்டியதாயிற்று. அது தாழ்ந்த அறைகளில் ஒன்றாயிருந்தாலும், அந்தக் கட்டடத்தின் மாடிப் பகுதிகளிலும் நறுமணம் ஏறியது.  அவளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சகல பாத்திரங்கள், அவளுடைய ஆடைகள், அவளுடைய கை தொட்ட பொருட்கள் ஆகிய எல்லாவற்றிலுமிருந்து நறுமணம் புறப்பட்டு, அன்று இரவும் மறுநாளும் மடம் முழுவதும் நறுமணத்தால் நிரம்பியிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு அந்த வாசனை சமையற்கூடத்தில் வீசவே, தாயார் நோயாயிருந்தபோது, அவள் தன் கையால் தொட்ட உப்புப் பாத்திரத்திலிருந்து அது வந்ததென்று ஒரு சகோதரி கண்டுபிடித்தாள். புனிதை பயன்படுத்திய பாத்திரங்களிலும், அவற்றைக் கழுவிய தண்ணீரிலும் அந்த வாசனை தங்கியிருந்தது. மடத்தின் மூலை முடுக்குகளில் போடப்பட்டிருந்த அழுக்கான ஆடைகளில் அவளுடைய பரிசுத்த சரீரத்தில் பட்ட ஏதேனும் இருக்குமானால், அதிலிருந்தும் வாசனை எழுந்ததால், அது அவளால் பயன்படுத்தப் பட்டது என்று கன்னியர் கண்டுபிடித்தார்கள். அவளை அடக்கம் செய்த பிறகு, அவளுடைய உடலைத் தொட்டிருந்த ஒரு சகோதரி தன் கைகளைக் கழுவியபோது அதிலிருந்து இனிய வாசம் எவ்வளவு அதிகமாக வீசியது என்றால், இதற்கு நிகரான எதையும் அவள் முகர்ந்திராததால், அது பரலோகத்திலிருந்து வந்ததாக அவளுக்குத் தோன்றியது. 

இந்த அர்ச்சியசிஷ்டவள் உயிரோடு இருந்த காலத்தில் நோயாயிருந்தபோதும், அவளுடைய கற்புள்ள சரீரத்திலிருந்து இப்படிப்பட்ட நறுமணம் பல முறை எழுந்ததுண்டு என்பதால், அவளுடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கடவுள் வெளிப்படுத்தத் தொடங்கச் சித்தமான தருணத்தில் எழுந்த இந்தப் பரலோக வாசனை நமக்கு ஆச்சரியமுள்ளதாகத் தோன்றவில்லை. அவள் பரவச நிலையில் இருந்தபோதும், சாதாரண நிலையில் இருந்தபோதும், இந்தப் புதுமைக்குரிய சுகந்தத்தை மடத்தாரும், வெளிமனிதர்களும் உணர்ந்தார்கள் என்பது உண்மைதான். அவளுக்குத் தன் வீட்டில் தங்க இடம் கொடுத்த ஒரு பெருமாட்டி அவளருகில் தான் போனபோதெல்லாம் இந்த நறுமணத்தை உணர்ந்தாள் என்றும், தன் மகனை அவள் ஆசீர்வதிக்கும்படியாகக் காண்பித்தபோது அவன்: ""அம்மா! இந்தப் புனிதையின் கைகள் எவ்வளவு நறுமணம் வீசுகின்றன!'' என்று சொன்னான் என்றும் சாட்சியம் கூறியிருக்கிறாள். அவள் நோயாயிருந்தபோது, அவளைத் தூக்குவதும், உடுத்துவதுமாக இருந்த  புனித பர்த்தலோமேயுவின் அன்னா என்னும் சகோதரியும் இந்த நறுமணத்தின் இன்பத்தை அனுபவித்தாள்.

நீண்ட காலமாக இஸ்பிரீத்துசாந்துவின் தேவாலயமாகவும், புனிதையின் மிகப் பரிசுத்தமான ஆன்மாவுக்குத் துணையாகவும் இருந்த பரிசுத்த சரீரத்தைக் கன்னியர் சூழ்ந்திருந்து, அதன் கை கால்களை அடிக்கடி முத்தமிட்டுக்கொண்டு அன்றிரவையும், மறுநாளையும் செலவிட்டார்கள். அவர்களுக்குள் மணத்தை முகரும் சக்தியை இழந்த ஒரு சகோதரி இருந்தாள். மற்றவர்கள் அனுபவித்த இன்பமான நறுமணத்தைத் தன்னால் அனுபவிக்க முடியவில்லை என்று அவள் வேதனைப்பட்டு, புனிதையின் சரீரத்திற்கு அருகில் வந்து, அதன் கால்களை முத்தமிட்டவுடன், அந்த முகரும் சக்தியை அவள் மீண்டும் பெற்று, மற்றவர்களைப் போல அந்த வாசனையை உணர்ந்தாள். பல நாட்கள் வரை அந்த நறுமணம் அவளை எங்கும் தொடர்ந்து, அவளுடைய கைகளிலிருந்து வீசிக்கொண்டிருந்தது. அடிக்கடி அவள் கைகளைக் கழுவியும் அது போகவில்லை. 

கண்களில் கடின வலி கொண்ட வேறொரு கன்னிகை, கண்களைக் கையால் பொத்தாமல் நடந்தால் சகிக்க முடியாத வேதனையை அனுபவித்ததோடு, நான்கு வருட காலமாக கடுமையான தலைவலியாலும் வருந்திக்கொண்டிருந்தாள். புனிதை உயிர்விட்டபின் அந்தக் கன்னிகை அவளுடைய கரத்தைத் தூக்கித் தன் கண்களிலும், சிரசிலும் ஒற்றவே, வேறு மருந்தின்றி உடனே குணமடைந்தாள்.

மேற்சொல்லப்பட்டபடி அக்டோபர் மாதம் 15ம் தேதியான மறுநாள் வெள்ளிக்கிழமை புனிதையின் திருச்சரீரத்தைத் திறவாமலும், பரிமளத் தைலம் எதுவும் பூசாமலும், துறவற உடை உடுத்தி, மரப்பெட்டியில் வைத்தார்கள். அவள் பல வருடங்களுக்கு முன் தன் தகப்பன் வீட்டில் நான்கு நாட்கள் உயிரற்ற பிணம் போலிருந்தபோது காட்சியில் கண்டவண்ணம், பொற்சரிகை வேலை செய்யப்பட்ட மேற்போர்வையை அவளுடைய சரீரத்திற்கு மரியாதையாகப் போர்த்தினார்கள். பூசை முடிந்தபிறகு, கீழ்க் கட்டடத்தில் கன்னியரின் செபக்கூடத்திற்கு இட்டிருந்த இரு கிராதிகளுக்கு நடுவில், கோவிலுக்கு எதிரே அவளை அடக்கம் செய்தார்கள். மடத்தில் வாழ்பவர்களும் வெளிமனிதர்களும் அவளுடைய கல்லறையைப் பார்க்க இயலும்படி, அந்த இடத்தில் அவளை அடக்கம் செய்தார்கள். ஆல்பா என்னும் சிற்றூரில் எவ்வளவு ஆடம்பரம் செய்ய முடிந்ததோ அவ்வளவு சிறப்பாக நிறைவேற்றப்பட்ட அந்தச் சடங்குக்கு ஊரார் அனைவரும் வந்திருந்தார்கள். 

கிறீஸ்துநாதருக்காகவே வாழ்ந்து, அவரது ஊழியத்தில் தன் வாழ்வு முழுவதையும் செலவிட்ட இந்த அர்ச்சியசிஷ்டவளை அவர் இவ்வாறு மகிமைப்படுத்தியது மிகச் சரியானதும், பொருத்தமானதுமான காரியமே என்பதில் ஐயமில்லை.