கிறீஸ்துவின் மறையுடலாகிய கத்தோலிக்கத் திருச்சபை - முன்னுரை

கிறீஸ்தவ வேதம் மனதைக் கவரும் மிக உன்னத சத்தியம். அதை நன்கு வாழ்க்கையில் கடைப்பிடித்தால், அது ஒரு தெய்வீக வாழ்வாகும். கிறீஸ்துவில் சகல விசுவாசி களும் ஒரே சரீரமாக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கிறிஸ்துவே அச் சரீரத்தின் தலை ; விசுவாசிகள் அச்சரீரத்தின் உறுப்புகள் ஆவர்.

இந்த அமைப்பையே கிறிஸ்துவின் ஞான சரீரம் என்கிறோம். நித்திய வாழ்வில், நமக்குக் கிடைக்க இருக்கும் பேரின்பத்தின் முன் சுவை, கிறிஸ்துவின் ஞான சரீரத்தில் நமக்குக் கிடைக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக, கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் இந்த உயரிய உண்மையை அறியாது, அதற் கேற்றபடி வாழாது இருக்கின்றனர். இப்படிப்பினையை இந்நாட்களில் மக்களுக்கு உணர்த்திய பெருமை, நம் நினைவில் நீங்கா இடம் பெற்றுள்ள பரிசுத்த தந்தை பன்னிரண்டாம் பத்திநாதரைச் சார்ந்தது.

நம் பரிசுத்த வேதத்தின் பெரும்பாலான விசுவாச சத்தியங்களைத் திரிதெந்தின் பொதுச்சங்கம் அழகாக வரை யறுத்துக் கூறியுள்ளது. ஆனால் கிறிஸ்துவின் ஞான சரீரத் தைப்பற்றிய மேலான சத்தியங்களை அச்சங்கம் வரையறுத்துக் கூறவில்லை. ஏன்?

புலன்களுக்கு எட்டாத திருச்சபையின் குணங்களை மிகைப்படுத்திக் கூறிய பதிதர்கள் கூற்றைக் கண்டித்துத் திருத்துவதில் ஈடுபட்டிருந்த பொதுச்சங்கம், புலன்களுக்கு எட்டும் (திருச்சபையின்) குணங்களைப் பற்றி அழுத்தம் திருத்தமாகப் படிப்பித்தது. அதன்படி திருச்சபை நம் கண்களுக்குத் தெரியக் கூடிய ஒரு நிறுவனம், சட்டதிட்டங்களைக் கொண்ட ஓர் ஆட்சி என எடுத்துக் காட்டியது. இவ்வாறு திருச்சபையின் புற வாழ்வினைப் பற்றி அதிகம் எடுத்துக் கூற வேண்டியிருந்ததால், திருச்சபையின் உள் வாழ்வு பற்றிப் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாது போயிற்று. எனவே திருச்சபை கிறீஸ்துநாதரின் ஞான சரீரம் என்பதைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

திருச்சபையின் இத்தனி அம்சத்தை, சிரசாகிய கிறீஸ்துநாதருடன் ஒரே சரீரமாக்கப்பட்டிருக்கும் நம் நிலையை, விசுவாசிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். புத்துயிர் அளிக்கும் இந்த சத்தியங்கள் அவர்கள் மனதில் நிலையான இடம் பெறச் செய்ய வேண்டும். சமுதாயத்தின் தற்காலத் தேவைகளைத் தீர்க்க வல்லவை இந்த சத்தியங்கள்.

எனவே, இப்பொருள் பற்றி, கோர்வையாகப் பல உரைகள் எழுதி, நம் விசுவாசிகளுக்கு இக்கருத்துக்களை எளிய முறையில் பரிமாறியுள்ள ஆசிரியரைப் பாராட்டு கிறோம். இச்சிறு நூலை வரவேற்று வாசிப்பவர்கள் அனை வரும், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதில் அடங்கியுள்ள மேன்மையை மென்மேலும் உணர்வார்கள் என்பது உறுதி.

1 ஜூன் 1960
* எல். மத்தியாஸ்
சென்னை - மயிலை அதிமேற்றிராணியார்.

குறிப்பு: சில பத்திகளின் முடிவுகளில் காணும் எண்கள் 12 - ம் பத்திநாதர் "ஞான சரீரம்' பற்றி எழுதிய நிருபத்தின் ஆங்கில மொழியாக்கத்தில் உள்ள எண்களைக் குறிக்கும்.